மத்திய அரசு Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE) என்பதனை 2009-ல் சட்டமாக இயற்றியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் தமக்கெனத் தனி விதிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகம் 2010-ல் விதிகளை உருவாக்கினாலும் 2011-ல்தான் அதனை அரசிதழில் வெளியிட்டது. இடையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சில குழுக்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. சென்ற வாரம்தான் உச்ச நீதிமன்றம் இதில் 2-1 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது.
அதன்படி, அரசின் சட்டம் செல்லும்... ஒரே ஓர் இடத்தைத் தவிர. அரசின் நிதியுதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளில் தவிர.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக யாரும் உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள் என்று நான் கருதவில்லை. எனவே, இந்தச் சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும் என்று பார்ப்போம்.
1. சிறுபான்மையினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகள் - அப்பள்ளிகள் அரசிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன என்றால்.
2. சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் தனியார் பள்ளிகள் (அரசிடம் நிதியுதவி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி)
உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப் பள்ளி ஒரு கிறிஸ்தவ சிறுபான்மைப் பள்ளி. ஆனால் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளி. (அரசின் நிதிமூலம்தான் ஆசிரியர்களுக்கான சம்பளம் தரப்படுகிறது.) இந்தப் பள்ளியில் RTE செல்லும். ஆனால், நம் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா கல்வி கற்ற சர்ச் பார்க் பள்ளிக்கு இந்தச் சட்டம் செல்லாது. அதுவும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிதான். ஆனால் அரசின் நிதியுதவியைப் பெறவில்லை.
மாறாக, பத்மா சேஷாத்ரி பள்ளிகள், பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளி (என் மகள் படிக்கும் பள்ளி), வித்யா மந்திர் போன்ற பள்ளிகள் எவையும் அரசின் நிதி உதவியைப் பெறுவதில்லை என்றாலும் RTE இங்கெல்லாம் செல்லுபடியாகும்.
ஒருசில பள்ளிகள் சிறுபான்மைப் பள்ளிகளா என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. உதாரணம்: சென்னையில் பஞ்சாபி சமூகத்தினரால் நடத்தப்படும் கில் ஆதர்ஷ், மலையாளி சமூகத்தினரால் நடத்தப்படும் ஆசான் மெமோரியல் போன்றவை. இவை மொழிச் சிறுபான்மையினர் பள்ளிகள் என்றால் இங்கும் RTE செல்லுபடியாகாது.
ராமகிருஷ்ண மடத்தின் பள்ளிகள், ஆரிய சமாஜத்தினர் நடத்தும் டி.ஏ.வி பள்ளிகள் ஆகியவை சிறுபான்மையில் சேரா.
கல்வி உரிமைச் சட்டம் என்பதை வெறுமனே தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்பதாகக் குறுக்கக்கூடாது. ஆனால் அதுதான் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. அது தாண்டி அந்தச் சட்டத்தில் வேறு பலவும் உள்ளன. இச்சட்டம், அரசின் பிற சட்டங்களைப் போலவே முழுமையாகச் சிந்தித்து, ஓட்டைகள் எல்லாவற்றையும் அடைத்து, அழகான முறையில் உருவாக்கப்பட்டதல்லதான். ஆனால் இந்த ஓட்டைகளையெல்லாம் தாண்டி, அதன் அடிப்படையைப் புரிந்துகொள்வது நல்லது.
முதலில் அரசு மக்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி, அதுவும் அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில். அருகில் என்றால் என்ன என்பதையும் சட்டம் தெளிவாக்குகிறது. 1-5 வகுப்பு என்றால், மக்கள் இருப்பதற்கு 1 கிமீ தூரத்துக்கு உள்ளாக. 6-8 என்றால் 3 கிமீ தூரத்துக்கு உள்ளாக. அப்படி ஒரு பள்ளி இல்லை என்றால் மக்கள் நீதிமன்றம் சென்று அரசின்மீது வழக்கு தொடுக்கலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும் எம்மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும், அதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு பரப்பளவு வேண்டும், அதில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதிகள் என்னென்ன என்று பலவற்றை இந்தச் சட்டம் நிர்ணயிக்கிறது. இந்த வரைமுறைக்குள் வராத பள்ளிகளுக்கான அனுமதியை ஓர் அரசு நீக்கலாம்.
அடுத்து, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் வரும் அனைத்துத் தனியார் பள்ளிகளும் தம் ஆரம்ப வகுப்பில் 25% இடங்களை அரசு தீர்மானிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். இந்தக் குழந்தைகள் எந்த பொருளாதார மட்டத்தில், எந்தச் சமூக மட்டத்தில் இருப்பார்கள் என்பதற்கான விதிகளை ஒவ்வொரு மாநிலமும் தமக்கென வரையறுத்துக்கொள்ளலாம். பல பத்திரிகைகள் எழுதுவதுபோல, இம்மக்கள் எல்லாம் “ஏழைகள்” அல்லர். குறிப்பிட்ட பலர் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும், பிறர் மட்டும் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருந்தும் இருப்பார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது தொடர்பான ஆவணம் எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை.
இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அது தவிர, அவர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் இத்தனை என்று ஏற்கெனவே செலவு செய்துவரும் கட்டணம் அல்லது அந்தக் கல்விக் கூடத்தின் கட்டணம் இரண்டில் எது குறைவோ அதுதான் ஒரு குழந்தைக்கு என்று செலுத்தப்படும். இந்தக் கட்டணத்தை அரசே ஆண்டுக்கு இரு முறை (செப்டெம்பர், ஜனவரி) நேரடியாக பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும். எந்தப் பள்ளியும் இந்தச் சிறார்களை இரண்டாம் பட்சமாக நடத்தக்கூடாது என்று விதி தெளிவாகச் சொல்கிறது.
இது ஏழைகளுக்கு/பிற்படுத்தப்பட்டோருக்கு மாபெரும் வாய்ப்பு என்று சிலரும், இதனால் பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்று சிலரும் சொல்கிறார்கள். இரண்டிலும் உண்மை உள்ளது.
முதலில், சிறுபான்மைப் பள்ளிகளுக்கான விலக்கு என்பதை மத்திய அரசு கொண்டுவரவில்லை. அவர்களுடைய சட்டம் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்குவதாகத்தான் இருந்தது. ஆனால், அப்பள்ளிகள்தாம் உச்ச நீதிமன்றம் சென்று விலக்கு கேட்டு வழக்கில் வென்றுள்ளன. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பின்மூலம் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு ஒருவித சிறப்புச் சலுகை கிடைத்துள்ளதாகவே கருதவேண்டும். டி.ஏ.வி கோபாலபுரம் அல்லது சர்ச் பார்க் கோபாலபுரம் பள்ளியில் தன் மகளைச் சேர்க்க விரும்பும் ஓர் உயர் வகுப்புப் பெற்றோர், ‘கண்ட கண்ட’ குழந்தைகளுடன் தன் குழந்தை வளரக்கூடாது என்று நினைப்பாரேயானால் இனி டி.ஏ.வி பள்ளியைக் கருத்தில் கொள்ளமாட்டார். மாறாக சர்ச் பார்க் போன்ற கிறிஸ்தவப் பள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்வார்.
கல்வி வசதிகளை அளிப்பதில் டி.ஏ.வி போன்ற பள்ளிகள் உடனடியாக அதிகக் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் பெறப்போகும் கட்டணம் குறையும். உதாரணமாக, டி.ஏ.வி ஆண்டுக் கட்டணம் ரூ. 25,000 என்றும் ஆண்டுக்கு 200 புதிய மாணவர்களை எடுத்துக்கொள்வார்கள் என்றும் வைத்துக்கொண்டால் வரும் ஆண்டில் 150 மாணவர்களைத்தான் அப்படி எடுத்துக்கொள்ளலாம். மீதம் 50 மாணவர்கள் அரசின் ஒட ஒதுக்கீட்டில் வருபவர்கள். அவர்களுக்காக அரசு ஆண்டுக்கு ரூ. 8,000 மட்டுமே தரும். எனவே வருமான இழப்பு என்பது 50*(25,000 - 8,000) = ரூ. 8.5 லட்சம். இந்தப் பள்ளி நியாயமாக ‘லாப நோக்கு’ இல்லாமல் நடக்கிறது என்றால், இந்தப் பணத்தை எங்கிருந்தாவது பெற்றாகவேண்டும். அதனை மீண்டும் பிற 150 மாணவர்கள்மீதுதான் போடவேண்டியிருக்கும். அப்படியானால் அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,666 அதிகம் தரவேண்டியிருக்கும். அதாவது 25,000 ரூபாய் என்பதற்கு பதிலாக 30,666 ரூபாய் தரவேண்டியிருக்கும். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு அந்தக் கவலை ஏதும் கிடையாது.
அரசு அதிகாரிகளிடமிருந்து டி.ஏ.வி போன்ற பள்ளிகள் இன்ஸ்பெக்ஷன் என்ற வகையில் வீண் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு இந்தத் தொல்லை இருக்காது.
தம்மை மைனாரிட்டி பள்ளிகளுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் பார்த்தால், தனியார் பள்ளிகளுக்குக் கீழ்க்கண்ட பிரச்னைகள் உள்ளன:
1. ஆண்டு வருமானத்தில் வரும் குறைபாடு. அதனை எப்படிச் சரிக்கட்டுவது என்ற தெளிவின்மை.
2. மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் அரசின் தலையீடு.
3. இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களைப் பிற மாணவர்களோடு சேர்த்துப் படிக்க வைப்பதில் இருக்கும் பிரச்னைகள். இதனை மிகப் பெரியதாகப் பல பள்ளிகளும் பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் என் கருத்தில், இங்குள்ள பிரச்னை என்பது நம் கல்வித்துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளான ஆங்கில மீடியம் மற்றும் கல்வியை ஆசிரியர்கள் தாம் கற்றுத்தராமல் பெற்றோர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வது ஆகியவையே.
இதில் கடைசி விஷயத்தை மட்டும் பார்ப்போம். இன்று அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுமே ஆங்கில மீடியத்தில் கல்வி கற்பிப்பவை. அதுதான் சிறப்பான கல்வி என்று அவர்களும் சொல்லி நம் மக்களும் நம்பி, அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஆங்கில மீடியத்தில் இன்று படிக்கும் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகளுக்கு ஒன்றுமே புரிவதில்லை. எங்கெல்லாம் பெற்றோர்களே நல்ல ஆங்கிலம் பேசக்கூடிய நிலையில் இருக்கிறார்களோ அந்தக் குழந்தைகள் மட்டுமே ஆங்கிலக் கல்வியின் உண்மையான பயனை அடைகிறார்கள். மீது எல்லோருமே அரைகுறைக் கல்விதான் பெறுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வி இருந்துவருகிறது. அதில் சேர உள்ள பல பிள்ளைகள் இப்போது தனியார் கல்விக்கூடங்களில் ஆங்கில வழிக் கல்விக்குச் செல்வார்கள். அவர்கள் அனைவரது வாழ்க்கையும் மொத்தமாகப் பாழாகப் போகிறது என்பதில் எனக்குத் துளிக்கூடச் சந்தேகம் இல்லை.
அடுத்து, கல்வியைப் பெற்றோர்களுக்கு அவுட்சோர்சிங் செய்வது. இன்று என் பெண் படிக்கும் பள்ளி முதற்கொண்டு எனக்குத் தெரிந்த அனைத்து “உயர்தர” கல்வி நிறுவனமும் சார்ட், ப்ராஜெக்ட், கட்டுரை எழுதுவது என்று பலவற்றையும் பலவந்தமாகக் குழந்தைகள்மீது திணிக்கிறார்கள். அவை அனைத்தையும் இந்தக் குழந்தைகளால் தாமாகவே செய்யமுடியாது என்று அனைவருக்குமே தெரியும். கொஞ்சம்கூடக் கூசாமல், இவற்றையெல்லாம் செய்து தருவது பெற்றோர்கள்தாம். இணையத்தில் படங்களைத் தேடி, அவற்றை வண்ணத்தாளில் அச்சிட்டு, கீழே விளக்கங்களை (ஆங்கிலத்தில்) எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். கட்டுரைகளை எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். அவற்றைப் பார்த்து காப்பியடித்து எழுதிச் செல்வது மட்டும்தான் பிள்ளைகள்.
அது தவிர வீட்டுப்பாடம் செய்வதற்கும் பெற்றோர்களின் உதவி தேவைப்படுகிறது. இவற்றில் ஈடுபட முடியாத பெற்றோர், டியூஷன் வைக்கவேண்டியிருக்கும். அப்படி டியூஷன் வைத்தும், தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாததால் சிறு பிள்ளைகள் தடுமாறுவார்கள். அதன் விளைவாக விரக்தி அடையும் ஆசிரியர்கள், வகுப்பில் இப்பிள்ளைகள்மீது கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.
இப்பிள்ளைகள் தம்மீது வேண்டுமென்றே திணிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் ஏற்பட்டால், இப்பிள்ளைகள் என்ன பாடு படுவார்களோ என்று அச்சமாக உள்ளது.
***
அனைவருக்கும் தரமான கல்வி என்ற நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அடுத்த சில வருடங்களில் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் என்பது என் கருத்து.