Tuesday, May 31, 2005

சத்யம் ஏவ ஜயதே

முன்னெல்லாம் நம் நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவருமே தமது கருத்தை மேடைகளில் பேசுவது மட்டுமல்லாமல், பத்திரிகைகளிலும் ஆணித்தரமாக எழுதிவந்தார்கள். இந்த வழக்கம் இன்று அழிந்துபோயுள்ளது. இன்று கருணாநிதியைத் தவிர பிற தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் எழுதுவதேயில்லை. ஜெயலலிதா தனது அரசியல் கருத்துகளை நமது எம்.ஜி.ஆரில் கூட எழுதுவதில்லை. வைகோ ஏதவது கட்சிப் பத்திரிகையில் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. வீரமணி தொடர்ச்சியாக திராவிடர் கழகப் பிரசுரங்களில் எழுது வருகிறார். திருமாவளவன் இந்தியா டுடே தமிழில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். ஆனால் பிறர் கொடுத்த நெருக்கடிகளால் இந்தியா டுடே திருமாவளவன் பத்தியை நிறுத்திவிட்டது என்கிறார் தலித் சிந்தனையாளர் ரவிக்குமார்.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி, லால் கிருஷ்ண அத்வானி, வாஜ்பாய் - இவர்கள் யாராவது தொடர்ச்சியாக எங்காவது பத்தி எழுதுகிறார்களா? சென்ற வருடம் ப.சிதம்பரம் கல்கியில் தொடர் கட்டுரைகள் எழுதினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எழுத்தை நிறுத்தி விட்டார்.

காந்தி, நேரு, ராஜாஜி போன்ற பலரும் தமது எண்ணங்களை எழுத்தில் வடித்தவண்ணம் இருந்தனர். காந்தி, நேரு எழுதியவை இப்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தித் திருமகன் போன்றவை தவிர வேறு எதுவும் கடைகளில் கிடைக்கவில்லை - போனவாரம் வரையில்.

ராஜாஜி ஸ்வராஜ்யா மற்றும் பிற இதழ்களில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரைகள் தொகுப்புகளாக 1960களில் வெளிவந்தது. 1956-61 வரையிலானவை 1962-ல் இரண்டு தொகுதிகளாகவும், 1962-66 வரையிலானவை மற்றும் இரண்டு தொகுதிகளாகவும் வெளியாயின. அதற்குப்பின்னும் ராஜாஜி தன் இறுதி நாள் வரை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவை இன்று வரை தொகுக்கப்படவில்லை. வெளியான நான்கு தொகுதிகளுமே மறுபதிப்பு காணாமல் இருந்துவந்தது.

இப்பொழுது சென்னையைச் சேர்ந்த உந்துனர் அறக்கட்டளை இந்த நான்கு தொகுதிகளையும் "சத்யம் ஏவ ஜயதே" என்ற பெயரில் மறு பதிப்பாகக் கொண்டுவந்துள்ளது (மலிவு விலையில்). முந்தைய பதிப்பிலிருந்து ஒரு மாறுதல் : ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்டுரைகள் காலவரிசைப்படி இல்லாமல் எடுத்தாளப்படும் விஷயங்களின் அடிப்படையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகம் வெளியிடும் விழா சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்றது. (கல்யாணத்தின் பேச்சை முடித்துக்கொண்டு நேராக அங்குதான் சென்றேன்.)

ஆந்திராவின் முன்னாள் ஆளுனர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் C.ரங்கராஜன் (ஆங்கிலத்தில்) சிறப்புரையாற்றினார். அந்த உரையில் ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசினார். ரங்கராஜன் புத்தகங்களை வெளியிட ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் என்பவர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். கேசவன் Rajiv Gandhi National Trust of Youth Development என்னும் அமைப்பின் Vice President என்று அறிமுகம் செய்தார்கள். இப்படி ஓர் அமைப்பு இருக்கிறதா, என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியாது. இது காங்கிரஸ் கட்சி சார்ந்த அமைப்பா இல்லையா என்று தெரியவில்லை. கூகிளில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை. கேசவன் ஆங்கிலத்தில்தான் பேசினார். ஆனால் நடுநடுவே தமிழிலும் கொஞ்சம் பேசினார். நன்கு சரளமாகப் பேசுகிறார். அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து அரசியலிலும், சமூக சேவையிலும் ஈடுபடுவதாகச் சொன்னார். ராஜ்மோகன் காந்தி (ராஜாஜி, காந்தியின் பேரன்) எழுதிய ராஜாஜி வாழ்க்கை வரலாற்றைப் படித்ததும், அதனால் தூண்டப்பட்டு இந்தியா வந்ததாகச் சொன்னார். தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளைக் கதர்ச்சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். (படத்தைக் கீழே கடைசியில் இருக்கும் தி ஹிந்து செய்தியில் பார்த்துக்கொள்ளவும்.)

காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டதற்குப் பிறகு ராஜாஜி வேதாரண்யம் உப்பு யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது அந்த யாத்திரையில் கலந்துகொண்ட நூறு பேரில் ஒருவரான G.K.சுந்தரம் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இவர் கோவை லக்ஷ்மி குழும நிறுவனங்களின் தலைவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இந்தப் புத்தகங்கள் வெளிவருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த சிவநேசன் (முன்னாள் இ.ஆ.ப) பேசும்போது தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் படிக்குமாறு ராஜாஜியின் குறிப்பிட்ட சில கட்டுரைகளையாவது தமிழில் பெயர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விழாவின் கடைசியில் ராஜாஜி பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் எடுத்த படம். முழுக்க முழுக்க ராஜாஜியைப் புகழ்ந்து மட்டுமே எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. படம் முழுவதிலும் பெரியார் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை. கடைசியில் ஒரேயொரு காட்சியில் பெரியார், ராஜாஜி இருவரும் கைகுலுக்குவது போல வந்தது. குலக்கல்வித் திட்டம், ஹிந்தித் திணிப்பு, பின் ராஜாஜியே திமுகவுடன் சேர்ந்து ஹிந்தித் திணிப்பை எதிர்த்தது, எதையெடுத்தாலும் சுர்ரென்று கோபம் கொண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவது, தேர்தலில் நிற்க மறுத்தது, ராஜாஜிக்கும் பிற தமிழக காங்கிரஸ்காரர்களுக்குமான உறவு, பகை போன்ற எந்த விஷயங்களுமே இந்த ஆவணப்படத்தில் இல்லை.

ராஜாஜியின் வாழ்க்கை பற்றிய கறாரான வரலாறு ஒன்று வேண்டும். ராஜ்மோகன் காந்தியின் புத்தகம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாலும் அதைப்பற்றி எந்த விமரிசனத்தையும் வைப்பதில்லை.

ராஜாஜியை இன்று அன்போடு நினைவுகூர்பவர்கள் தமிழகத்தில் உள்ள வயதான பார்ப்பனர்கள் மட்டுமே என்று தோன்றுகிறது. அதேபோல பிறர் அனைவருமே ராஜாஜியை ஏனென்று சொல்லாமல் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராஜாஜி என்ற பெயரே தங்கள் கட்சி வரலாற்றில் இல்லை என்பது போல நடந்துகொள்கிறார்கள். சுதந்தரா என்றொரு கட்சி இருந்தது என்பதற்கான எந்த அடையாளங்களும் இன்று இல்லை. Liberal Party of India என்றோர் அமைப்பு சில காலமாக மீண்டும் தழைக்க முற்படுகிறது.

ராஜாஜியின் இந்த நான்கு தொகுதிகளையும் இன்னமும் நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்ததில் அப்படி ஒரேயடியாக மறுதலித்துவிட முடியாதவராகவே உள்ளார் ராஜாஜி என்றே தோன்றுகிறது. ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கைகள், அயலுறவுக் கொள்கைகள், பாகிஸ்தான், சீனா தொடர்பான கருத்துகள், மொழி தொடர்பான கருத்துகள், சோஷியலிஸம், பிற இஸங்கள் தொடர்பான கருத்துகள், நேரு-காங்கிரஸ் செல்லும் வழியின் தவறுகள் ஆகியவற்றுடன் அவரது மதம் சம்பந்தமான கொள்கைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.

புத்தகங்களை வாங்கிப் படித்து இந்திய வரலாற்றில் ராஜாஜியின் இடம் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Satyam Eva Jayate, Vol 1-4, Collected works of Rajaji from 1956-66, The Catalyst Trust, 2005. All four volumes together for Rs. 500, each volume Rs. 125

இது பற்றிய தி ஹிந்து செய்தி

Sunday, May 29, 2005

ராசி (இல்லாத?) மையங்கள்

தமிழக அரசு, ராசி மையங்கள் என்னும் அமைப்புகளின் மூலம் கிராமப்புற மக்களுக்கு அரசுச் சேவைகளை வழங்க முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக செயல்படுத்திக்கொண்டு வருகிறது.

ராசி - RASI - Rural Access to Services through the Internet - என்பதால் வந்த பெயர்.

உண்மையில் ராசி மையங்கள் எப்படி இயங்குகின்றன, இதில் என்ன பிரச்னைகள் என்பதை அறிய நேற்று எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ராசி மையங்களை நடத்த விரும்புவோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல இடங்களின் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 51 ராசி மையங்கள் இருக்கின்றனவாம். அதில் ஒன்றை நடத்துபவரை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கத்தில் நேற்று சந்தித்தேன்.

தமிழக அரசு ராசி மையத்தை நடத்த இருப்பவருக்கு வங்கிகளிலிருந்து ரூ. 60,000 கடன் வாங்கித் தருகிறது. இந்தக் கடனில் அரசு கைகாட்டும் ஒருவரிடமிருந்து கணினி, பிரிண்டர் வாங்கவேண்டும். இந்த மையத்தை நடத்துபவர் கடனை மாதாமாதம் வங்கியில் கட்டிவிட வேண்டும். கடனை முழுவதும் கட்டியபின் அரசு அவர்களுக்கு மான்யமாக ரூ. 30,000 தரும்.

ராசி மையம் இருக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு அரசுச் சான்றிதழ் தேவைப்பட்டால் (ஜாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், பட்டா, பிற வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள்) அதற்கு நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவேண்டியதில்லை. ராசி மையத்தில் வந்து விண்ணப்பிக்கலாம். ஆனால் இங்குதான் கூத்து ஆரம்பிக்கிறது. விண்ணப்பம், தக்க சான்றுகள் ஆகியவற்றைக் கொடுத்ததும் ராசி மையத்தவர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அவ்வளவே! அதற்குத்தான் ரூ. 60,000 பெறுமானமுள்ள கணினியும், இணைய இணைப்பும்! பின் அவர் கால்நடையாக (அல்லது பேருந்தில் ஏறி) விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். அங்கு சான்றிதழ்கள் கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு அவர் தன் கிராமத்துக்குத் திரும்பி வந்து யார் விண்ணப்பித்திருந்தாரோ அவருக்கு சான்றிதழைக் கொடுப்பார்.

இப்படியான சேவையைச் செய்யும் ராசி மையத்தார் பெற்றுக்கொள்ள வேண்டிய கூலியை அரசே நிர்ணயித்துவிட்டது. ரூ. 30க்கு மேல் வாங்கக் கூடாது. ஆனால் கொட்டிவாக்கத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று திரும்ப ஆகும் பேருந்துக் கட்டணம்? ரூ. 30க்கு மேல் ஆகிவிடும்!

கொட்டிவாக்கம் மீனவர் குப்பத்தில் ரூ. 60,000 பெறுமானமுள்ள காம்பாக் கணினி, எச்.பி பிரிண்டர், ஸ்கேனர், பேக்ஸ் கருவி! ஆனால் இப்பொழுது ராசி மையத்தைப் பயன்படுத்த யாரும் இன்றி தேவையின்றிக் கிடக்கிறது. ஆனால் இந்தப் பெண்மணி மாதாமாதம் ரூ. 1,500 இந்தியன் வங்கிக்குச் செலுத்த வேண்டியதாக உள்ளது. இதே நிலையில்தான் பிறர் பலரும் உள்ளனர் என்கிறார் இந்தப் பெண்மணி.

மேலும் ராசி மையத்துக்கென வாங்கிய கணினியை பிற வேலைகளுக்கு உபயோகிக்கக் கூடாது என்று அரசு சொல்கிறதாம். தனியாக அனுமதி வாங்கினால்தான் பிற "உபயோகமான" வேலைகளுக்கு இந்தக் கணினியைப் பயன்படுத்தலாம்.

இதைப்பற்றிய என் கேள்விகள்:

1. ஒரு கணினியும், பிரிண்டரும் வேண்டுமென்றால் அதற்கு எதற்கு ரூ. 60,000? வெறும் ரூ. 20,000த்தில் வாங்கலாமே? அதுவும் வெறும் மின்னஞ்சல் மட்டும்தான் செய்கிறார்கள்!

2. ஏன் காம்பாக், எச்.பி போன்றவர்களுக்கு இந்த ஒப்பந்தம் சென்றுள்ளது? இதில் யார் எவ்வளவு ஊழல் செய்துள்ளனர்? குறைந்த விலையில் கணினிகளைக் கொடுக்க இந்தியாவிலேயே பல நிறுவனங்கள் உள்ளனவே?

3. அரசு வருமானம் செய்துகொடுக்கிறேன் பேர்வழி என்று ஏன் ஏழை மக்களைக் கடனாளிகளாக ஆக்கியுள்ளது? இப்பொழுது மாத வருமானம் அதிகமின்றி மாதம் ரூ. 1,500 வங்கிக்குக் கட்டும் பலர் இருக்கிறார்கள்.

4. வெறும் மின்னஞ்சல் செய்துவிட்டு பின் நேரடியாக வந்து நிற்கவேண்டுமென்றால் இந்தக் கணினி எதற்கு? அதற்கு பேசாமல் கணினியைத் தூக்கிப்போட்டுவிட்டு வந்து நிற்கலாமே?

மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல திட்டம் போலத் தோன்றுவது மோசமான செயல்முறையால் யாருக்கு நன்மை செய்யவேண்டுமென்று கொண்டுவரப்பட்டதோ அவர்களுக்கே தீங்கு செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் குன்னவாக்கம் என்ற கிராமத்தில் ராசி மையம் வைத்திருக்கும் முரளி என்பவர் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார். இந்த மாதத்தில் இரண்டு பதிவுகள் இதுவரையில். ராசி மையம் காஞ்சிபுரம் சேவைகளுக்கான ஓர் இணையத்தளம் உள்ளது. http://rasikanchi.tn.nic.in/ என்ற சுட்டி, ஆனால் இன்று வேலை செய்யவில்லை.

When I ask for a barber, I expect him to bring his tools

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு ஒரு மாதம் முன் வங்காளம் கடுமையான மதப் பூசல்களில் மாட்டிக்கொண்டிருந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வங்காளத்தின் பிரதமர் சுஹ்ராவார்தி. காந்தி கொல்கொத்தா சென்று முகாமிட்டார். முஸ்லிம் பெண்மணி ஒருவரது வீட்டில் போய்த் தங்கினார். சுஹ்ராவார்தியையும் தன்னுடனேயே தங்குமாறு வற்புறுத்தியிருந்தார்.

காந்தியின் அப்பொழுதைய காரியதரிசி வி.கல்யாணம். இளம் வயதினர். அனுபவம் குறைந்தவர். அவருக்கு எப்பொழுதுமே வேலை செய்துகொண்டே இருப்பதுதான் பிடிக்குமாம். ஆனால் கொல்கொத்தா வந்த தினத்திலிருந்து ஒரு வேலையும் இல்லை. காந்தி எழுதச் சொல்லும் கடிதங்களை எழுதுவது கல்யாணத்தின் ஒரு வேலை. ஆனால் தினமுமோ இந்துக்களும் முஸ்லிம்களும் மாறி மாறி காந்தியைச் சந்தித்து புகார் செய்து கொண்டிருந்தனர். சில நாள்கள் பொறுத்துப் பார்த்த கல்யாணம் காந்தியைச் சந்தித்து தனக்கு செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை, அதனால் மீண்டும் ஆஸ்ரமத்துக்கே சென்றுவிட அனுமதி தரவேண்டும் என்று கேட்க நினைத்தார். ஆனால் காந்தியைச் சந்திக்கக்கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

கடைசியாக காந்தி மலம் கழிக்கப் போகும் நேரத்தைத் தேர்ந்தெடுத்தார். சரி, மலம் கழித்து முடித்து வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தார். காந்தி வேலையை முடித்துத் திரும்பி வரும்போது அவரிடம் சென்று தனக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னார்.

"வேலைதானே வேண்டும்? இப்பொழுதுதான் மலம் கழித்து விட்டு வந்திருக்கிறேன். போய் அதைச் சுத்தம் செய்."

சரி... என்று சொல்லிவிட்டு உடனடியாக அந்த வேலையை செய்திருக்கிறார் கல்யாணம்.

-*-

எண்பத்து நான்கு வயதான கல்யாணம் இப்பொழுது சென்னையில் வசிக்கிறார். நன்றாக நடக்கிறார், பேசுகிறார், எழுதுகிறார். மெல்லிய தேகம். கூர்மையான கண்கள். பிரகாசமான முகம். காந்தியிடம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காரியதரிசியாக இருந்திருக்கிறார். காந்தி கோட்சேயால் சுடப்பட்டபோது காந்தியின் அருகில் நின்று கொண்டிருந்தார் கல்யாணம். அதற்கு மூன்று நாள்கள் முன்னதாகத்தான் காந்தி அவருக்கு ரூ. 35க்கு ஒரு காசோலை கொடுத்திருக்கிறார். அதனை முதல் நாள்தான் வங்கியில் கொடுத்துள்ளார் கல்யாணம். காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளே உடனடியாக வங்கிக்கு ஓடிச்சென்று அந்தக் காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வந்துவிட்டாராம். ரூ. 35 பெரிதா, காந்தி கடைசியாகக் கையெழுத்திட்டுத் தந்த காசோலை பெரிதா என்ற கேள்விக்கு விடைகாண அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

இன்றும் சென்னையில் தான் வசிக்கும் தெருவினைச் சுத்தமாகக் கூட்டிப் பெருக்குகிறார் கல்யாணம். ஒரு நாள் விடாமல்.

கல்யாணம் காந்தியிடம் காரியதரிசியாக விரும்பிப்போய்ச் சேரவில்லை. அவருக்கு அப்பொழுது வீட்டுவேலைகள் செய்வது, சமையல் செய்வது, கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்வது போன்றவற்றில்தான் விருப்பம். ஆனால் காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது சிறைப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது காரியதரிசியாக இருந்த மஹாதேவ் தேசாய் இறந்துவிட்டார். எனவே சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு காரியதரிசியைத் தேடிக்கொண்டிருந்த காந்தி, அப்பொழுது வார்தா ஆஸ்ரமத்தில் இருந்த கல்யாணத்தையே அந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

காந்தியின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

காலையில் 3.30க்கு எழுந்திருப்பார். உடனே (குளிக்காமல்) வழிபாடு (Prayer).

பின் ஒரு பளிங்கு டம்ளரில் கொதிக்கக் கொதிக்க வென்னீர், அதில் ஒரு எலுமிச்சை பிழிந்து, இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்த பானத்தைக் குடிப்பாராம்.

பின் காலை நடை. கிட்டத்தட்ட 4.30 மணிக்கு நடக்க ஆரம்பித்தால் 8.00 மணி வரை நடந்துவிட்டு ஆஸ்ரமம் வந்து சேர்வாராம். அந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்திப்பார். அதாவது நடந்துகொண்டே செல்லும்போது யார் அவருடன் பேச விரும்புகிறார்களோ அவர்கள் முன்னதாகவே சொல்லி வைத்துக்கொண்டு பேச வருவார்கள்.

ஆஸ்ரமம் திரும்பியதும் கடுகு எண்ணெயில் எலுமிச்சை பிழிந்து, அதை உடலில் தேய்த்துக்கொண்டு குளியல். சோப் கிடையாது. எப்பொழுதும், கடுமையான கோடை காலத்திலும், வென்னீரில்தான் குளிப்பாராம். குளிக்கும் நேரத்திலும் சந்திப்புகள் தொடரும்.

சாப்பாடு: நெருப்பில் வாட்டிய கோதுமை ரொட்டி. அத்துடன் தொட்டுக்கொள்ள பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்வடியும் காய்கறிகளால் ஆன கூட்டு. கிழங்குகள் கிடையாது. இதுதான் ஆஸ்ரமத்தில் உள்ள அனைவருக்குமான உணவு. ஆனால் காந்தி மட்டும் இதில் உப்பே சேர்த்துக்கொள்ளாமல் சாப்பிடுவாராம். தண்டி யாத்திரைக்குப் பின்னர் தான் உணவில் உப்பே சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தாராம். அரிசிச்சோறு சாப்பிடுவதில்லை (ஏனெனில் தூக்கம் வரும் என்று நினைத்தார்.) ஆனால் கல்யாணத்தில் தூண்டுதலில்பேரில் அவ்வப்போது (உப்பு சேர்க்காத) இட்லி சாப்பிடுவார். அதுவும் திங்கள் அன்று. அதைத்தவிர ஆட்டுப்பால், வேர்க்கடலை.

ஒவ்வொரு திங்களும் மவுன விரதம்.

மதியம் முதல் இரவு வரை படிப்பது, எழுதுவது, மக்களைப் பார்ப்பது, பேசுவது.

கல்யாணத்தின் வேலை என்ன?

தொடக்கத்தில், கல்யாணம் தன்னை காந்தியின் காரியதரிசியாகவே கருதவில்லை என்று பார்த்தோமல்லவா? அப்பொழுது காந்தியுடன் கல்யாணமும் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். காந்தி கல்யாணத்தை ஒரு கடிதம் தட்டச்சு செய்து எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். கல்யாணம் தன்னிடம் தட்டச்சு இயந்திரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு காந்தி, "When I ask for a barber, I expect him to bring his tools" என்று சற்று கடினமாகவே பேசியிருக்கிறார். இதனால் கல்யாணம் கோபம் கொண்டு ஆஸ்ரமத்தில் இருக்கும் தன் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பின் தொடர்ந்து காந்தியின் காரியதரிசி பொறுப்பை ஏற்று வந்துள்ளார்.

காந்திக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிப்பது. அதில் அவசியமான கடிதங்களை மட்டும் காந்தியிடம் காண்பிப்பது. அதற்கு காந்தி பதில் சொன்னால் அதனை எழுதிக்கொள்வது. காந்தி குஜராத்தி, ஹிந்தியில் தானெ எழுதிக்கொள்வாராம். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பதில் அவர் பேச, கல்யாணம் அதனை எழுதிக்கொள்வார்.

காந்தியின் ஆட்டோகிராஃப் கேட்டுவரும் கடிதங்களை கல்யாணம் தானே கவனித்துக்கொள்வார். ஒரு கையெழுத்துக்கு ரூ. 5 என்று கணக்கு வைத்து அதிலிருந்து வரும் பணத்தை ஹரிஜன் நல நிதியில் சேர்த்து விடுவார்கள். காந்தி சற்று ஓய்வாக இருக்கும் நேரம் பார்த்து அவரிடமிருந்து துண்டுத் தாள்களில் நிறையக் கையெழுத்துகளை வாங்கி வைத்துக்கொண்டு, ரூ. 5 கொடுப்பவர்களுக்கு அந்தக் கையெழுத்திட்ட தாள்களை கல்யாணம் கடிதமாக அனுப்பி வைப்பார்.

ஹரிஜன் பத்திரிகை அஹமதாபாத் நவஜீவன் கார்யலாயாவிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது. காந்தி எங்கிருந்தாலும் அதற்குக் கட்டுரைகள் எழுதி அனுப்புவார். இந்தப் பத்திரிகை ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் (?) ஆகிய மொழிகளில் வந்தது. ஆங்கில எடிஷனில் வரவேண்டிய கட்டுரைகளை காந்தி சொல்லச்சொல்ல, கல்யாணம் எழுதிக்கொண்டு, பின்னர் அதைத் தட்டச்சு செய்துவைத்துக்கொள்வார். ஒவ்வொரு வாரமும் மொத்தமாக அனைத்தையும் அஹமதாபாத் அனுப்ப வேண்டும்.

-*-

இப்படியாக காந்தி இறக்கும் நாள் வரையில் கல்யாணம் அவர் அருகிலேயே இருந்தார். காந்தியின் இறப்புக்குப் பின் கல்யாணம் நேருவிடம் உதவியாளராகச் சேர்ந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகே அவரிடமிருந்து கிளம்பி வந்துவிட்டார். அப்பொழுது நேரு பிரதம மந்திரி. அவரிடம் M.O.மதாய் என்பவர் பிரதம உதவியாளராக இருந்தார். மதாய்க்கு குடி, குட்டி போன்ற பல கெட்ட பழக்கங்கள் இருந்தன என்றும் நேரு இல்லாதபோது நேருவின் வீட்டிலேயே மதாய் கூத்தடித்ததாகவும் அதனைத் தான் நேருவின் பார்வைக்குக் கொண்டுவந்தபோது நேரு கண்டுகொள்ளாததால் தான் நேருவிடமிருந்து விலகி வந்துவிட்டதாகவும் சொல்கிறார் கல்யாணம்.

சில நாள்கள் ராஜாஜியின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் கல்யாணம்.

-*-

கல்யாணத்தின் அரசியல் பற்றிய கருத்துகள் முதிர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளது. காந்தியுடன் நெருங்கிப் பழகியிருந்தாலும் ஏன் காந்தி சுதந்தரத்துக்காகப் பாடுபட்டார் என்பதை இன்றுவரையில் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார் கல்யாணம். மீண்டும் மீண்டும் - தன் பேச்சின்போது - வெள்ளைக்காரன் இருந்தால் நாடு இன்னமும் சுபிட்சமாக இருக்கும் என்பதனையே சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயம் மிகவும் உறுத்தியது.

இன்று நாட்டில் ஊழல் பல இடங்களிலும் தலைவிரித்தாடினாலும் 1947டன் ஒப்பிட்டால் நாம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறோம். காலனியாதிக்கத்தின் நோக்கங்கள் என்ன, அதனால் எத்தனை பேருக்கு நன்மை இருந்தது, எத்தனை பேர் திண்டாடினார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் கல்யாணம் இதுவரையில் அறிந்துகொண்டாரில்லை.

-*-

வெள்ளி, 27 மே 2005 மாலை சுமார் 4.30 மணி அளவில் பாரத் சேவக் சமாஜ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் கல்யாணம் இதையெல்லாம் பேசினார். நேருவைப் பற்றிப் பேசுவதாக இருந்தது, ஆனால் நேருவுடன் அதிக நாள்கள் இல்லாததால் பேச்சு காந்தியிடமே போய் முடிந்தது.

நேருவுக்கும், காந்திக்கும் கோபம் வருமா என்று கேள்வி கேட்டார் ஒருவர்.

ஒருமுறை நேருவிடம் ஒருவர் வந்து புகார் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம். அதனால் மிகவும் கோபமடைந்த நேரு "யே அதாலத் நஹி ஹை, ஜூட் மத் போல்னா!" (இது நீதிமன்றம் இல்லை, பொய் பேசாதே!) என்றாராம்.

முதலில் பேச்சு எங்கெங்கேயோ போய் உருப்படியில்லாமல் முடிய இருந்ததை தெய்வாதீனமாகக் காப்பாற்றியவர் ராணிமைந்தன். இவர் ஒரு நல்ல பத்திரிகையாளர். அதனால் இடையில் குறுக்கிட்டு சில கேள்விகளைக் கேட்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக கல்யாணம் பல சுவாரசியமாக விஷயங்களைச் சொன்னார்.

இந்தப் பேச்சைத் தொகுத்து ஒலிவடிவில் கொடுத்திருக்கிறேன், விண்டோஸ் மீடியா பிளேயர் கோப்பாக. (6.37 MB, 53.04 நிமிடங்கள்.)

Friday, May 27, 2005

தமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்

நாளை சனிக்கிழமை, 28 மே 2005 அன்று, மாலை 6.00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலைக்கு அருகே தமிழ் மென்பொருள் ஆர்வலர் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. [ராதாகிருஷ்ணன் சாலை கடற்கரைச் சாலையுடன் இணையும் இடம். காவல்துறை அலுவலகத்துக்கு எதிர்ப்புறம்.]

நோக்கம்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் (விண் 98, விண் எக்ஸ்பி) தமிழில் படிக்க, எழுத, ஒரு எழுத்துருவிலிருந்து மற்ற எழுத்துருக்களுக்கு மாற்ற, விண் 98ல் முடிந்தவரையில் யூனிகோடுக்கான வசதிகளைச் செய்துதர, அடிப்படைத் தேவையான தமிழ் இடைமுகத்தால் ஆன உலாவி, மின்னஞ்சல், மெஸஞ்சர், ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள்கள் ஆகிய அனைத்தையும் நிறுவ என்று ஒரு மென்பொருளை உருவாக்குவது. முடிந்தவரையில் திறமூல மென்பொருள்களைப் பயன்படுத்த எண்ணம்.

மிக எளிதாக நிறுவப்படக் கூடிய, தானே நிறுவும் வகையிலான ஒரு மென்பொருளை உருவாக்குவது, எந்த வகையிலும் கணினி அறிவு இல்லாதவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த நிறுவு மென்பொருளை உருவாக்குவது ஆகியவை பற்றி விவாதிப்போம்.

பிற விஷயங்கள்: தமிழ் லினக்ஸ் தற்போதைய நிலை. புதிதாக வரத்தொடங்கும் கணினி போன்ற கருவிகளுக்கு (AMD's PIC, Mobilis etc. from Simputer, Novatium's thin clients etc.) தேவையான தமிழ் ஆதரவு.

கலந்துகொள்பவர்கள்: முகுந்த், நாராயண், பத்ரி.

சென்னையில் இருக்கும், விருப்பமுள்ள தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

Wednesday, May 25, 2005

திறந்த புத்தகங்களுடன் தேர்வு

இன்றைய தி ஹிந்துவில் பெரிதாகக் கட்டம் கட்டி வந்த செய்தியில் கிண்டி பொறியியல் கல்லூரி பட்டமேற்படிப்பில் சில பாடங்களில் திறந்த புத்தகத் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மிகவும் புரட்சிகரமானதொரு புதிய திட்டம் (radical new proposal) என்கிறது தி ஹிந்து.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 'புரட்சி' என்னும் சொல்லுக்குப் பொருள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று ஆளாளுக்கு சகட்டுமேனிக்குப் பெயர்களை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த முறை எந்த வகையிலும் புதிதானல்ல. புரட்சிகரமானதும் அல்ல. இந்தியாவில் கூட ஐஐடிக்களில் சில முதுநிலைப் பாடங்களில் இந்த முறை புழக்கத்தில் உள்ளது. பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இது உள்ளது என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவும் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புக்கே இந்தத் திறந்த புத்தகத் தேர்வுகள் நடக்கின்றன. நான் கார்னல் பல்கலைக்கழகத்தில் துணைவராக (Teaching Assistant) வேலை செய்த ஓர் இளநிலை வகுப்பில் கூட இதுபோன்ற தேர்வை எழுத வைத்திருக்கிறோம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எனக்குத் தெரிந்து கீழ்க்கண்ட முறைகளில் 'எழுதும் தேர்வுகள்' நடத்தப்படுகின்றன:
  1. எந்தத் துணைக் கருவியும், புத்தகங்களும் இல்லாமல் வகுப்பில் எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - closed book, in the classroom, time limited.
  2. எந்தத் துணைக் கருவி, புத்தகங்களும் இல்லாமல் வீடு சென்று எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - closed book, take home exams, time limited
  3. எந்தத் துணைக் கருவி, புத்தகங்களும் இல்லாமல் வீடு சென்று எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு கிடையாது - closed book, take home exams, unlimited time. பொதுவாக ஒரு வாரம் அல்லது மூன்று நாள்கள் வரை தேர்வை எழுதிவிட்டு விடைத்தாளைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும்.
  4. திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வகுப்பில் எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - open book, in the classroom, time limited.
  5. திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வீட்டில் எழுதும் தேர்வு. நேரக் கணக்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாருடனும் கலந்து ஆலோசிக்கக் கூடாது. Take home, open book exam, time may be limited or not. Cannot discuss with anybody.
  6. திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வீட்டில் எழுதும் தேர்வு. நேரக் கணக்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். பிறருடன் கலந்து ஆலோசிக்கலாம். ஆனால் பதிலை முழுமையாக அவருடன் சேர்ந்து பேசி எழுதக் கூடாது. Take home, open book exam, time may be limited or not. Can discuss with others, but cannot work together with the other person to write the answer.
இப்படியே இதில் மேற்கொண்டு சிற்சில மாறுதல்களைச் செய்யலாம். எந்தெந்தப் புத்தகங்களைக் கலந்தாலோசிக்கலாம், எதைக் கலந்து ஆலோசிக்கக் கூடாது என்றும் கூடக் குறிப்பிடலாம்.

இதன் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. (1) எந்த விதிகளை அமைத்தாலும் அதை மாணவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒழுங்காக, நேர்மையாகக் கடைப்பிடிப்பார்கள் என்னும் நம்பிக்கை. (2) இதுபோன்ற விதிகளை அமைக்கும் ஆசிரியரால் சரியான வகையில், இந்த விதிகளுக்கு ஏற்றதுபோல வினாத்தாளைத் தயாரிக்க முடியும் என்னும் நம்பிக்கை.

தேர்வுகளின் நோக்கமே ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களை மதிப்பிட்டு, இந்தப் பாடத்தில் யார் எத்தனை தகுதி வாய்ந்தவர் என்பதைக் கண்டறிவதே. சில பாடங்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுதான் சரியான தேர்வாக இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் கணினி மென்பொருள் மொழிகள் மீதான சில தேர்வுகள் திறந்த புத்தகங்களுடனும், சில தேர்வுகள் மூடிய புத்தகங்களுடனும் நடைபெறுவதே சரியான வழி. அதைப்போன்றே அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற பல பாடங்களுக்குமான தேர்வுகளும்.

-*-

ஆனால் விடைத்தாள்கள் மோசடி நிகழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மேற்படி முறையைப் பார்த்து பலரும் அதிசயிக்கக் கூடும். அதனால்தான் தி ஹிந்து இந்தச் செய்தியைக் கட்டம் கட்டி முதல் பக்கத்தில் போட்டிருக்கிறது. அப்படிப் பெரிதாக அதிசயிக்க இதில் ஒன்றும் இல்லை. நிகழ்வில் இருக்கும் ஒரு விஷயம்தான் இது.

Tuesday, May 24, 2005

"நானும் நேருவும்" - சொற்பொழிவு

பாரத் சேவக் சமாஜ், இராமமூர்த்தி கல்வி மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு 27.5.2005 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "நானும் நேருவும்" என்ற தலைப்பில் V.கல்யாணம் பேசுவார். இடம்: பாரத் சேவக் சமாஜ், இராசாசி மண்டபம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை 2.

V.கல்யாணம், மகாத்மா காந்தியின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். இவருக்கு வயது 90க்கு மேல் ஆகிறது.

Monday, May 23, 2005

தமிழ் மொழிப்போர் வெறியர்கள்

தமது அரசியல் தளத்தை விரிவுபடுத்தவேண்டி புதுவகைப் போராட்டம் நடத்தும் ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகிய மூவரையும் அவர்களது ஆதரவாளர்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை நான் வெகுவாக ஆதரிப்பவன். அதே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் பெயர்ப்பலகைகள் வைப்பதையும் ஆதரிப்பவன். இன்று ராமதாஸ் தலைமையில் மேற்படி மூவர் கூட்டணி, தம் ஆதரவாளர்களோடு, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பெயர்ப்பலகை வைத்த பாரத ஸ்டேட் வங்கியின் போர்டில், ஆங்கில எழுத்துக்கள் மீது மட்டும் கரி பூசிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என்றா இவர்கள் எதிர்பார்க்கின்றனர்? பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை என்று கண்டிப்பது வேறு, தமிழில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு.

முதலாவது எனக்கு நியாயமானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தோன்றுகிறது. இரண்டாவது அபத்தமாகவும், வன்மையாகக் கண்டிக்கக்கூடியதாகவும் தோன்றுகிறது. இதுதான் மூன்றாவது மொழிப்போர் என்றால் அதற்கு எனது ஆதரவு முற்றிலுமாக இல்லை.

[இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களை இத்துடன் நிறுத்தி வைத்துள்ளேன். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி.]

எழுத்துப் பயிற்சி முகாம்

சென்னை தக்‌ஷிணசித்ராவில் கடந்த மூன்று தினங்களாக நடந்த எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள்:



கலந்துரையாடிய ஆசிரியர்கள்:



(இடமிருந்து வலமாக: முதல் வரிசை - அசோகமித்திரன், ஜ.ரா.சுந்தரேசன், இந்திரா பார்த்தசாரதி, மாலன், இரா.முருகன். இரண்டாவது வரிசை - சுதாங்கன், சோம.வள்ளியப்பன், இயக்குனர் வஸந்த், ஆர்.வெங்கடேஷ், பாஸ்கர் சக்தி.)

ஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா?

இந்த வார நட்சத்திரப் பதிவான கிச்சுவின் எண்ண அலைகளில் சில பாடங்களையாவது ஆங்கிலத்தில் பயிற்றுவிப்பது அவசியமோ என்றதொரு கேள்வியை முன்வைக்கிறார் கிச்சு.

தான் கிராமத்தில் உள்ள ஒரு பையனின் தமிழ்வழி அறிவியல் புத்தகத்தில் கண்டதைச் சொல்கிறார் கிச்சு.
லூயிஸ் டிபிராக்ளேயின் பொருண்மையின் ஈரியல்புத் தன்மையைப் பற்றிய ஆய்வானது எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் கட்டமைப்புக்கும், எலெக்ட்ரான் விளிம்பு வளைவின் மூலம் திண்மங்களின் பரப்பின் அமைப்பைப் பற்றி அறிவதற்கும் உதவுகிறது. அவருடைய ஆய்வானது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் போன்ற சிறிய துகள்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
இதைப் படித்தபின், தான் அந்த மாணவனை விளக்கிச் சொல்லக் கேட்டதாகவும், அவனால் முடியவில்லை என்றும், அதனால் இதுபோன்ற பாடங்களை ஏன் ஆங்கிலத்தில் வைக்கக்கூடாது என்றும் கேட்கிறார் கிச்சு.

இந்த மேற்கோளின் ஆங்கில மூலம் இப்படியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
Louis de Broglie's research in duality of objects resulted in the development of electron microscope and through electron edge deviation helped understanding the structure of the surface of objects. His research is applicable to even atoms and sub-atomic particles.
இப்படி ஆங்கிலத்தில் படித்திருந்தால் மட்டும் அந்த மாணவன் கிச்சுவுக்கு இதன் பொருளை விளக்கியிருப்பானா?

கிராமங்களை விட்டுவிடுவோம். சென்னையை எடுத்துக்கொள்வோம். இன்றும் பல பள்ளிகளில் தமிழில் மட்டும்தான் பாடம் நடத்தப்படுகிறது. எனது அலுவலகத்தில் ஒருவர் வேலை செய்கிறார். பத்தாவது தேர்வில் தோல்வியுற்றவர். ஆங்கிலத்தில் 34 மதிப்பெண்கள் பெற்றதால் தோல்வியுற்றார். பின் மீண்டும் தேர்வு எழுதினாராம். இம்முறை 33 பெற்றார். மீண்டும் தோல்வி. முதல்முறை தேர்வெழுதும்போதே அறிவியலில் 50க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர். தமிழில் 60க்கும் மேல் மதிப்பெண்கள். அவரது வகுப்பில் மொத்தம் 65 பேர் இருந்தனர். பத்தாவது அரசுத்தேர்வில், இந்த 65-ல் 45 பேர் ஃபெயில்! அனைவரும் ஆங்கிலத்தில் ஃபெயில்! ஒவ்வொருவரும் அறிவியலில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஆங்கிலத்தில் அறிவியல் பரீட்சையையும் நடத்தினால் அதிலும் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஃபெயில் ஆகியிருப்பர்.

இதைத்தானா நாம் விரும்புகிறோம்?

"இத்தனைக்கும் எங்கள் எச்.எம்மே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார்" என்று வருத்தத்துடன் சொன்னார் என் அலுவலகத் தோழர்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் பத்தாவது தேர்வு முடிவுகள் வரும். அதில் 35% பேர் தோல்வி அடைந்திருப்பர். அதில் 80% பேர் ஆங்கிலப் பாடத்தில்தான் தோல்வியுற்றிருப்பர்.

என்னைக்கேட்டால் ஆங்கிலம் என்னும் பாடம் பத்தாவது வரையில் ஒரு விருப்பப்பாடமாக இருக்கட்டும். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லையென்றால் அதற்காக பத்தாவது ஃபெயில் என்று சொல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களை மேற்படிப்புக்கு எடுத்துக்கொள்ளும்போது வேண்டுமானால் ஆங்கிலத்தில் தேர்ச்சி இல்லை என்று சேர்த்துக்கொள்ளாமல் போகட்டும். திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலம் அவர்கள் தத்தம் மொழியில் மேற்படிப்புப் படித்து பிழைத்துக்கொள்ளலாம்.

எவனோ ஒருவனது மொழியைப் படித்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், கடைசியில் தேர்ச்சி பெறாமல் மனமுடைந்து போவது எவ்வளவு கொடுமை? இதெல்லாம் பலருக்கும் புரிவதில்லை.

Saturday, May 21, 2005

இலவசப் பாடப்புத்தகங்கள்

தமிழக அரசு 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு (அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்) இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதாக இன்று செய்தி வந்துள்ளது.

இது வரவேற்கப்படவேண்டிய செய்தி. ஏற்கெனவே 1-10 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இப்பொழுது 1-12 வகுப்புகளுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்குவதற்கு ஆண்டுக்கு ஆகும் செலவு ரூ. 83.7 கோடிகள். இந்தச் செலவு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகும்.

கிரீஸ் போன்ற நாடுகளில் எல்லா மாணவர்களுக்கும் கல்லூரி வரையில் பாடப்புத்தகங்கள் இலவசம் என்று கிரீஸிலிருந்து வந்த (கார்னல் பல்கலைக்கழகத்தில் வேலை செய்த) என் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

இப்பொழுது மாநில அரசுகளால் இதைச் செய்யமுடியாவிட்டாலும், குறைந்தது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காவது இப்படிச் செய்வது நல்லதுதான்.

இந்தியா போன்ற நாடுகளில் படிப்பறிவை அதிகமாக்க, பள்ளிகளில் அனைவரும் வந்து படிக்க
  • இன்னமும் பல அரசுப் பள்ளிகளைக் கட்டவேண்டும், அல்லது தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்யவேண்டும்
  • இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.
  • பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படவேண்டும்.
  • ஆண்டிறுதித் தேர்வுகள் எழுத என்று மட்டும் கட்டணம் வசூலித்தால் போதும்.
  • தேவையான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவேண்டும்.
ஆனால் இதைப்போன்ற எதையும் கல்லூரி அளவில் செய்யவேண்டியதில்லை. தேவையான மாணவர்களுக்கு கடனுதவி, நிதியுதவி செய்தால் மட்டும் போதும். அரசு தன்னிடமிருக்கும் பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக்கல்வியில் செலவழிக்கிறதோ அவ்வளக்கு அவ்வளவு நல்லது.

Thursday, May 19, 2005

விடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி

இன்றைய 'தி ஹிந்து'வில் விடுதலைப் புலிகள் விமானங்களைப் பெற்றிருப்பது பற்றியும் அதனால் இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றியும் R.ஹரிஹரன் என்பவர் எழுதியுள்ளார்.

Dangers of the LTTE's air capability

-*-

இந்த வாரம் தெஹெல்காவில் V.K.சஷிகுமார் விடுதலைப் புலிகளின் வங்கி முறை பற்றியும் அதன்மூலம் ட்சுனாமி நிவாரணப் பணிகளைச் செய்ய விரும்புவது பற்றியும் எழுதியிருக்கிறார். இணையத்தில் மேலோட்டமாகப் பார்த்ததில் சுட்டி கிடைக்கவில்லை. எனவே இங்கு சில குறிப்புகள் (என்னுடைய தமிழாக்கத்தில்).

* ஈழம் வங்கியில் இப்பொழுது இருப்பது அயலகத் தமிழர்களிடம் பெற்ற US$100 மில்லியன் மற்றும் ஈழத்தில் இருக்கும் தமிழர்களின் வைப்புத் தொகையான இலங்கை ரூபாய் 1,000 மில்லியன்.

* ட்சுனாமி நிவாரணத்துக்காக வரும் சர்வதேச நிதியை வைத்து வழங்க ஈழம் வங்கியைத்தான் விடுதலைப் புலிகள் பயன்படுத்த இருக்கிறார்கள்.

* இந்த ட்சுனாமி நிவாரண வங்கிக் கணக்கை சர்வதேசப் பார்வையாளர் குழு கண்காணிப்புக்கு ஆளாக்கவும் விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

* ஈழம் வங்கி 1994-ல் தொடங்கப்பட்டது. இப்பொழுது வன்னியில் பத்து கிளைகள் உள்ளன. வைப்புத் தொகைகளுக்கு இலங்கை வங்கிகளைவிட குறைந்தது 1% வட்டியாவது அதிகமாகத் தரப்படுகிறது. வங்கியில் இப்பொழுதைக்கு கிட்டத்தட்ட 50,000 பேர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

* வீடுகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை வாங்கக் கடன் தரப்படுகிறது. மின்சாரம்தான் இப்பொழுதைக்கு ஈழத்தில் அதிகத்தேவை. அதைத்தவிர வியாபாரிகள் நுகர்பொருள்களை வாங்கி விற்கக் கடன் கொடுக்கப்படுகிறது.

* தமிழர் புணர்வாழ்வு அமைப்பு (TRO) மீது இலங்கை அரசுக்கு நம்பிக்கை இல்லாததால் ஈழம் வங்கி வழியாக ட்சுனாமி நிவாரண நிதியைப் பட்டுவாடா செய்ய விடுதலைப் புலிகள் சம்மதித்துள்ளனர்.

* பல நாடுகளிலிருந்து தமிழர் அமைப்புகள் வன்னி வந்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். சமீபத்தில் மலேசியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில்துறைத் தலைவர்கள் அடங்கிய குழு வன்னி வந்திருந்தது. தொடர்ந்து அவர்கள் மலேசிய அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை செய்வது பற்றிய ஓர் அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்.

* தென்கிழக்காசியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து படித்த, பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த தமிழர்கள் ஈழம் வந்து அங்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். கனடாவின் தமிழ் விஷன் இன்க். (TVI) செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்பவர் ஈழத்தில் 'புலிகளின் குரல்' ஊடகத்தாருக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். விரைவில் 'புலிகளின் குரல்' தொலைக்காட்சி இந்தியா மற்றும் பிற நாடுகளில் தனது ஒளிபரப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CDAC விளம்பரம்

இன்று பல செய்தித்தாள்களிலும் CDAC விளம்பரம் செய்து, தனது மொழிவளர்ச்சிக்கான மென்பொருள் தயாரிப்பில் பங்குபெற ஆள் தேடுகிறது. இது ஒரு டெண்டர் அல்ல. [பக்கத்தில் உள்ள படத்தை சுட்டியால் தட்டி, பெரிதான விளம்பரத்தைப் பார்க்கலாம்.]

ஆனால் இதுபோன்ற எந்த விளம்பரமும் தமிழ் குறுந்தட்டு வெளியாவதற்கு முன்னர் வரவில்லை. மேலும் இந்த விளம்பரத்தில் எங்குமே தமிழில் ஒரு குறுந்தட்டு வெளியான விவரம் சொல்லப்படவில்லை. வரும் வாரங்களில் ஹிந்தியில்தான் முதன்முதலில் ஏதோ வெளியிட இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் 22 அதிகாரபூர்வ இந்திய மொழிகளிலும் மென்பொருள் தயாரிப்போர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்கிறார்கள். இன்னமும் தமிழில் ஏதேனும் செய்ய மென்பொருள் நிறுவனங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.

எதுவானாலும், இப்பொழுது பொதுமக்களுடன் பேசவாவது விரும்புகிறார்களே, அதுவே பெரிய விஷயம்தான். நான் இவர்களுக்கு ஒரு கடிதம் எழுதப்போகிறேன். எழுதியவுடன் அந்தக் கடிதத்தின் நகலை என் பதிவில் சேர்க்கிறேன்.

ஆனந்த விகடன் பற்றி

சென்ற திங்கள் கிழமை Madras Musings-ல் S.முத்தையா ஆனந்த விகடன் No. 1 பற்றி எழுதியிருந்தார். அப்பொழுதே அதற்கு சுட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்.

Back in the lead

* 1925-ல் ஆனந்த விகடன் என்னும் மாதப்பத்திரிகை பூதூர் வைத்யநாத அய்யர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது ஏற்கெனவே ஆனந்த போதினி என்னும் ஒரு பத்திரிகை (1915-ல் தொடங்கப்பட்டது) வந்துகொண்டிருந்தது. இரண்டுமே இன்றைய பத்திரிகைகள் போலக் கிடையாது. அவர்களின் நோக்கம் மெயில் ஆர்டர் - அஞ்சல் வழியாகப் பொருள்களை விற்பனை செய்வது. அதற்கான பொருள் பட்டியலை வெளியிடுவதற்குத்தான் இந்த பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்கள்.

* 1926-ல் வைத்யநாத அய்யர் ஆனந்த விகடனை S.S.வாசனுக்கு விற்றார். வாசனும் மெயில் ஆர்டர் வியாபாரம்தான் செய்து வந்தார்.

* நடுவில் மாதம் இருமுறையாகவும், பின் 1933-ல் வாரம் ஒருமுறையாகவும் ஆனந்த விகடன் வர ஆரம்பித்தது. இந்த முறையைத்தான் இன்று (வணிக) தமிழ் இதழ்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இந்த நேரத்தில்தான் கல்கி ஆசிரியராகச் சேர்கிறார். மாலி, மார்கபந்து ஆகியோர் படங்கள் வரையவும், கல்கி எழுதவும் தொடங்குகின்றனர். சதாசிவம் விளம்பரப் பிரிவில் சேர்கிறார். இதன்பின் கல்கி, சதாசிவம் இருவரும் விலகி கல்கி பத்திரிகை தொடங்கும் வரையில் விகடன் பெருவளர்ச்சி அடைகிறது. பிறகு தொடர்ந்தும் தேவன் ஆசிரியராக இருக்கும்போது வளர்ச்சிதான்!

-*-

தமிழ் இதழியல் ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஒரு நல்ல வரலாற்று நூலைக் கொண்டுவரவேண்டும். விகடன், குமுதம், கல்கி, கலைமகள், சாவி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, அவை கொண்டுவந்த மாற்றங்கள், பின் வீழ்ச்சி என்று அனைத்தையும் எழுதவேண்டும்.

Emergency Tsunami Reconstruction Project

தமிழக அரசு ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்கள் பதிமூன்றிலும் மறுசீரமைப்புப் பணிக்காக உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. தமிழகத்தில் இந்தக் கடன் வழியாக நடக்கும் மறுசீரமைப்புப் பணிகள் பற்றிய முழு விவரங்கள் இந்த இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

Wednesday, May 18, 2005

விடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்

முந்தைய பதிவு

இன்றைய சன் நியூஸ் செய்தியிலிருந்து:

* சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் பெயில் கேட்டுச் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

* குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாணவர்களுக்கு பத்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் சொல்கின்றனராம்.

முழுப்பேத்தலாக இருக்கிறது. எத்தனையோ மோசமான குற்றங்களுக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனைக்கு மேல் செல்வதில்லை. இந்த விஷயத்துக்குப் போய் பத்து வருடம் என்பது முழு முட்டாள்தனம். இரண்டாவது... இது பெயில் கூடத் தரமுடியாத அளவுக்கு அப்படி என்ன மோசமான குற்றம் என்று புரியவில்லை.

சென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா

மே 2005 'குடிமக்கள் முரசு' இதழிலிருந்து:
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் 1919 சென்னை மாநகராட்சி சட்டத்தைத் திருத்த ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திருத்தத்துக்கு மசோதாவில் சொல்லப்பட்ட காரணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் நிலைக்குழுக்களின் அதிகாரங்கள் திருத்தப்பட்ட பிறகு, மாதம் ஒருமுறை மாநகராட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டுவதன் அவசியம் குறைந்து விட்டது என்பதாகும். ஆனால் சட்டசபையில் விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் உண்மையான காரணத்தைக் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.

"சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு ஆக்கபூர்வமாக இருப்பதற்குப் பதிலாக, அடித்துக் கொள்வது, பிடித்துக் கொள்வது, நாற்காலிகளை வீசுவது என்று உள்ளது. தலைநகரில் இப்படி கேவலமான சம்பவம் நடைபெறுவது கேவலமாக உள்ளது. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றால் போதும்." (தினமணி, 14 ஏப்ரல் 2005)
முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மாநகராட்சியின் கூட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அஇஅதிமுகவின் குண்டர்களும்தான். உதாரணத்துக்கு இன்றைய விஷயத்தை எடுத்துக் கொள்வோம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 110, 131 வார்டுகளின் அஇஅதிமுக உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்ள வந்தபோது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். சும்மா இல்லை. வாய்க்கு வந்தபடி திட்டிக் குரல் எழுப்பிவிட்டுத்தான். பதவி ஏற்பு முடிந்ததும் மீண்டும் உள்ளே வந்த திமுக உறுப்பினர்களுக்குக் கோபம் வரும் வகையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் ஸ்டாலினைத் திட்டி ஏதோ சொல்லியுள்ளனர். உடனே கைகலப்பு. அடிதடி. சேர்கள் பறந்தன. திமுக பெண் உறுப்பினர் ஒருவருக்கு அடிபட்டது என்று சன் நியூஸ் தகவல்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறினர். இதைத்தான் அஇஅதிமுக எதிர்பார்த்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மாநகராட்சிக் கூட்டங்களில் இப்படியே ஏதோ காரணங்களால் அடிதடி, வன்முறை.

ஆனால் இதையே காரணம் காட்டி மாநகராட்சிக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்று வைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா? அப்பொழுதும் அஇஅதிமுக, திமுக இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருப்பார்கள். பின் அதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டங்களே வேண்டாம் என்று முடிவுசெய்துவிடுவோமா?

எனவே மேற்படி சட்டத்திருத்தத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

அத்துடன் உள்ளாட்சித் தேர்தல்களிலாவது முடிந்தவரை சுயேச்சைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கழகக் குண்டர்கள் எண்ணிக்கை குறைவது குடியாட்சியைப் பலப்படுத்தும்.

Monday, May 16, 2005

சென்னையில் எழுத்துப்பயிற்சிக் கூடம்

இந்த வார இறுதியில் - வெள்ளி, சனி, ஞாயிறு, 20, 21, 22 மே 2005 - சென்னையில் கிழக்கு பதிப்பகமும், மைலாப்பூர் டைம்ஸ் இதழும் இணைந்து ஒரு (தமிழ்) எழுத்துப்பயிற்சிக் கூடத்தை நடத்தவுள்ளது.

கிட்டத்தட்ட முப்பது கல்லூரி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். (ஏற்கெனவே மாணவர்களைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. எனவே இனி யாரும் சேர்ந்துகொள்ளமுடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.) பாடங்கள், போகவரச் செலவு, தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் இலவசம். சென்னைக்கு வெளியேயிருந்து வருபவர்களுக்கு சென்னையில் தங்க இடவசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.

இந்த மூன்று நாள் முகாம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தக்ஷிணசித்ராவில், இயற்கைச்சூழலில், நடைபெறும்.

முதலிரண்டு நாள்கள், ஒரு நாளைக்கு நான்கு அமர்வுகள் வீதம் மொத்தம் எட்டு அமர்வுகள். ஒவ்வொரு அமர்விலும் சிறப்புப் பேச்சாளர் சுமார் அரை மணிநேரம் பேசுவார். பின் முக்கால் மணி நேரம் மாணவர்களுடன் கலந்துரையாடல். ஒவ்வொரு அமர்வுக்கும் இடையில் அரை மணிநேரமாவது இடைவெளி இருக்கும்.

வெள்ளி, 20 மே 2005

1. இந்திரா பார்த்தசாரதி (நாடகம்)
2. பாஸ்கர் சக்தி (கதை வசனம்)
3. அசோகமித்திரன் (சிறுகதை)
4. சுதாங்கன் (பத்திரிகை எழுத்து)

சனி, 21 மே 2005

1. ஜ.ரா.சுந்தரேசன் (நகைச்சுவை)
2. இரா.முருகன் (நாவல்)
3. சோம.வள்ளியப்பன் (நேர நிர்வாகம், திட்டமிடுதல்)
4. இயக்குநர் வஸந்த். [வெள்ளியன்றே தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமியின் சிறுகதையும், வஸந்த்தின் திரைக்கதை, வசனமும் புத்தக வடிவில் அனைவருக்கும் கொடுக்கப்படும். சனியன்று கடைசி அமர்வில் இந்தப் படம் காண்பிக்கப்படும். அதன்பிறகு வஸந்த்துடன் கலந்துரையாடல்.]

ஞாயிறு, 22 மே 2005

எழுத்துப்பயிற்சி. பங்கேற்கும் அனைவரும் மாலன், ஆர்.வெங்கடேஷ் கண்காணிப்பில் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குப் பிடித்தவற்றை எழுதுவார்கள். அவற்றைச் சேர்த்து ஓர் இதழ் தயாரிக்கப்படும்.


ஒருங்கிணைப்பாளர்கள்: பா.ராகவன், பத்ரி சேஷாத்ரி

-*-*-

மூன்று நாள்களும் நடப்பவற்றை விடியோப் படங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் சிடியைப் பெற்றுக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா?

இப்பொழுதிருக்கும் கூட்டணி அரசு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா (National Rural Employment Guarantee Bill) ஒன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறது.

வேலைவாய்ப்பு என்பதைக் குடிமகனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வைக்கமுடியுமா? ஓர் அரசு ஒருவனுக்கு வேலை தருகிறேன் என்று உத்தரவாதம் தரமுடியுமா? என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு, விவசாயம் ஒன்றை மட்டுமே நம்பி வாழ்பவர்களுக்கு, ஏதேனும் பாதுகாப்பு தேவை.

மதுரையில் சில மாதங்களுக்கு முன் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் பற்றி நடந்த ஒருநாள் கருத்தரங்கத்துக்குச் சென்றுவிட்டு வந்து அதுபற்றி சிறிது எழுதியிருந்தேன். [ஒன்று | இரண்டு]

இரண்டு நாள்களுக்கு முன்னர் தி ஹிந்துவில் வந்த செய்தி இது. இப்பொழுது இந்த உத்தரவாத மசோதா பாராளுமன்ற நிலைக்குழு முன்னால் உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் பாஜகவின் கல்யாண் சிங் என்றும் அவர்தான் ஏதோ நேரம் கடத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு. இது முக்கியமான மசோதா என்றால் ஏன் கல்யாண் சிங்கைத் தலைவராக்கி அந்தக் குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்? இந்த மசோதாவைப் பரிசீலிக்கும் குழுவுக்கு சோனியா காந்தியையே தலைவராக ஆக்கியிருக்கலாமே?

இந்த மசோதா சரியாக இயற்றப்படவில்லை, இதன் உட்கருத்தே குழுப்பம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த மசோதாவைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு கிராமப்புற சமூகப் பாதுகாப்பு மசோதா என்று ஒரு வரைவினை உருவாக்கலாம். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு உதவித்தொகையை மாதாமாதம் வழங்கவேண்டும். இந்தத் தொகையைப் பணமாக இல்லாமல் ரேஷன் கடைப் பொருளாக வழங்கலாம். இப்படிச் செய்வது வேலை, உத்தரவாதம், உரிமை போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

வி.பி.சிங் போன்றவர்கள் இந்த மசோதாவை கிராமங்களுக்கு என்று மட்டும் வைக்காமல் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உத்தரவாதமாக வேலை தருவதாக வைக்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் அபத்தமான கருத்து.

ஒவ்வொரு இந்தியனுக்கும் வேலை பிறப்புரிமை என்று ஆக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான வேலை? அந்த வேலைக்கான தகுதிகள் என்ன? ஒரு குடிமகன் அந்தத் தகுதிகளைப் பெறவில்லையென்றால் என்ன ஆகும்? தகுதியுடைய பலர் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வேலையை யாருக்குத் தருவது என்பதை எப்படித் தீர்மானிப்பது? வேண்டிய அளவுக்கு வேலைகளை உருவாக்குவது ஓர் அரசின் வேலையா? ஓர் அரசால் இதை எப்படிச் செய்யமுடியும்?

இதற்குப்பதில், வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவித்தொகை தருமாறு செய்யலாம். குழப்பமே இல்லாத இதுபோன்ற சட்டங்கள்தான் நாட்டுக்குத் தேவை. இதுபோன்ற சட்டங்கள், நடைமுறைகள் பல நாடுகளில் உள்ளன. Social security system என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உண்டு. அதே பாணியில்தான் இந்தியாவும் சட்டங்களை இயற்ற வேண்டும்.

அங்கயற்கண்ணி

பத்மப்ரியா

Saturday, May 14, 2005

திருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் - இருநூற்றாண்டு வரலாறு, அருணன், வைகை வெளியீட்டகம், 1999 புத்தகத்திலிருந்து:

1930களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வாங்கித்தரப் போராடிய பி.ராமமூர்த்தி என்னும் கம்யூனிஸ்ட் தலைவர் சொன்னதாக:

பி.ராமமூர்த்தி"அப்ப நான் ஹரிஜன் சேவா சங்கத்தில் ஒர்க் பண்ணிகிட்டிருந்தேன். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருவாய்மொழி - ஆழ்வார் பாசுரம் சொல்லிக் கொடுத்தேன். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று சந்தத்தோடு பாடி பஜனை செய்ய கத்துக் கொடுத்தேன். அவர்கள் எல்லோரும் வைஷ்ணவர்கள். நாமம் போடுகிறவர்கள். அவர்களுக்கு இப்படி பாசுரம் சொல்லிக்கொடுத்து மார்கழி முழுவதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றிவரச் செய்தேன். இதனாலே அங்கே இருக்கக்கூடிய அய்யங்கார்களுக்கெல்லாம் என்மேலே ரொம்பக் கோபம்.

சம்பகேச அய்யங்கார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் என்னுடைய இன்னொரு காலை உடைச்சிடுவேன்னு பயமுறுத்தினார். (பி.ஆருக்கு ஏற்கெனவே ஒரு கால் ஊனம்.) அப்ப பார்த்தசாரதி கோவிலுக்கு தர்மகர்த்தா தேர்தல் நடக்கவிருந்தது. வோட்டர்கள் யாருன்னா 18 வயதுக்கு மேற்பட்டவங்க, ஆண் பிள்ளைங்க, அந்தக் கோவிலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்துல வசிக்கிறவங்க, நாலணா சந்தா கட்டியிருக்கறவங்க. இப்படித்தான் இருந்தது. தேர்தலில் போட்டியிடனுமுன்னா இத்தோட கவர்ன்மெண்டுக்கு இன்கம்டாக்ஸ் கட்டுறவங்களாவும் இருக்கணும். ஹரிஜனங்கள்ல இன்கம்டாக்ஸ் கட்டுறவங்க கிடைக்கலை.
திருவல்லிக்கேணியில் சார்ஜண்ட் குவார்ட்டர்ஸ் இருக்கில்ல. அதுக்குப் பக்கத்தில செருப்புத் தைக்கும் தொழிலாளர்களான சக்கிலியர்கள் அதிகமா இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நாமம் போட்டேன். தென்கலை நாமம் போட்டேன். அவங்களுக்கெல்லாம் நாலணா கொடுத்து மெம்பர் ஆக்கி ஓட்டுப்போட அழைச்சிட்டு வந்தேன். கோவிலுக்குள்ள ஓட்டுப்போட விட மாட்டோம்னுட்டாங்க. மெட்ராஸ் தலைமை சிவில் கோர்ட்டுக்குப் போய் தேர்தலுக்கு தடை உத்தரவு வாங்கிட்டேன்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கோபுரம்அப்புறம் வழக்கு நடந்தது. இவங்களுக்கு ஓட்டுரிமை இருக்கா இல்லையா என்பது வழக்கு. வெங்கட்ராம சாஸ்திரியை எங்கள் தரப்பு வழக்கறிஞராக அமர்த்திக் கொண்டேன். அவருக்கு உதவுவதற்காக வைணவ கிரந்தங்களை எல்லாம் படிச்சேன். அப்புறம் அந்த ஹரிஜனங்களுக்கு தோள் பட்டையில் சங்கு சக்கர சூடு போட்டுவிட்டேன். அது வைணவர்களுக்கான அடையாளம். பிராமணரல்லாத வைணவர்களுக்கு புரோகிதம் பண்ணுகிறவர்களுக்கு பெயர் சாத்தாணி. இவர்களுக்கும் சாத்தாணி உண்டு என்று ஒருத்தரை ஏற்பாடு செய்தேன். அப்படியே சாட்சி சொல்லவும் செய்தேன்.

வைணவர்களில் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பதை நிலைநாட்டுவதற்காக பல ஸ்லோகங்களை எங்கள் வக்கீலுக்கு எடுத்துக் கொடுத்தேன். அதிலேயொரு ஸ்லோகம் இன்னும் ஞாபகம் இருக்கு. ஒரு வைஷ்ணவனைப் பார்த்து உன்னுடைய ஜாதி எது என்று கேட்பது தாயோடு உடலுறவு கொள்வதற்குச் சமம் என்பது அந்த ஸ்லோகம். கீழ்க்கோர்ட்டிலே எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்லிட்டாங்க. ஆனால் வழக்கு அப்பீலுக்குப் போச்சு. முதல் அப்பீலில் எங்களுக்கு தோத்துப்போச்சு. அடுத்த அப்பீலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தீர்ப்பைப் பாராட்டி காந்திஜி 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதினார்."

Thursday, May 12, 2005

தகவல் அறியும் உரிமை மசோதா

பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவை தாண்டி, பின் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றதும், நீங்களும் நானும் நம் அரசிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

[தகவல் அறியும் உரிமை மசோதா, 2004 pdf கோப்பாக. இந்த மசோதாவில் கிட்டத்தட்ட 150 மாற்றங்கள் செய்யப்பட்டுதான் நிறைவேற்றியுள்ளனர். இந்த மாற்றங்கள் என்ன என்பது இனிதான் தெரியவரும்! மேலதிகத் தகவல்களுக்கு Centre for Civil Society இணையத்தளம்.]

உதாரணத்துக்கு, C-DAC கொடுக்கும் குறுந்தட்டில் உள்ள மென்பொருள்களை வழங்கியுள்ளது யார், அவர்கள் எத்தனை பணம் வாங்கிக்கொண்டு இந்த மென்பொருள்களைக் கொடுத்துள்ளனர் என்ற தகவலை நம்மால் பெறமுடியும். 'தி ஹிந்து' செய்தியின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தகவல்களைப் பெற எந்தக் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. எனவே பிறர் ஏதோ கட்டணம் செலுத்தவேண்டும் என்று தெரிகிறது. என்.ஆர்.ஐ களுக்குத் தகவல்களைப் பெறும் உரிமை உண்டா எனத் தெரியவில்லை. மேல் விவரங்கள் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தகவல் அறியும் உரிமை சட்டமாக முதலில் இயற்றப்பட்டது தமிழகத்தில்தானாம். ஏப்ரல் 1996-ல், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இது நடந்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் முழுமையாக மக்களுக்குப் பயன்படவில்லை என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்தச் சட்டத்தில் பல முக்கியமான தகவல்கள் விலக்கப்பட்ட பட்டியலில் உள்ளனவாம். தொடர்ந்து கோவா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்று கேள்வி.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தில்லி, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களும் இதைப்போன்ற சட்டங்களை இயற்ற விரும்பி, அந்த முயற்சி பல்வேறு நிலைகளில் உள்ளன.

இப்பொழுது மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிற மாநில அரசுகளையும் இதைப்போன்ற சட்டங்களை இயற்றத் தூண்டலாம்.

அதன்பிறகு நாம் கையைப் பிசைந்துகொண்டு சும்மா இருக்கவேண்டியதில்லை. ஏதாவது சந்தேகம் என்றால் உடனடியாக அரசுக்கு ஒரு மனு கொடுக்க வேண்டியதுதான். கட்டவேண்டிய பணத்தைக் கட்டினால் தகவல் நமக்கு வந்துசேரவேண்டும்! ஏன் குறிப்பிட்ட ஒருவருக்கு ஒரு காண்டிராக்ட் சென்றுள்ளது, ஒரு குறிப்பிட்ட அமைச்சரகம் குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட வேலையைச் செய்ய இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளது, டெண்டரில் யார் வென்றார்கள், என்ன செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்கள் என்று சகல விஷயங்களும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இன்னமும் மூன்று மாதங்கள் கழித்துப் பார்ப்போம், இந்தச் சட்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை!

Wednesday, May 11, 2005

Verbal Diarrhea

ஒருநாள் மாலை நேரம் நான் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு. அதைப்பற்றிக்கூட நான் பதிவு செய்திருக்கிறேன்.

இங்கு அதல்ல விஷயம். என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். பின் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அதன்பின் எனக்குத் தமிழில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்ததும் தானும் ஒரு கவிஞர்தான் என்றார். நான் அப்பொழுதே அந்த இடத்தை விட்டு ஓடியிருக்கவேண்டும். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவேண்டும். அதனால் நான் ஓடுவதற்கு முன்னால் தன் பையிலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

நானும் வீட்டுக்கு வந்து சும்மா இருந்திருக்கலாம். ஆனால் ஆங்காங்கு படித்தேன். நான் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர் இரண்டு புத்தகங்களைத் தமிழிலும், ஒன்றை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். மரியாதை கருதி அவரது பெயர், அவரது புத்தகங்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை. இங்கு அவரது ஆங்கிலக் கவிதைகளிலிருந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

***

Adam and Eve

Adam and Eve, my research in the Eden Garden

O! My dream, no game, no gambler in any port
To agree with submarine, the depth of the sea to report

Thunder reverberated two clouds two sounds, mere a fiction
O! my soggy soil, the solecism, the phillipic an erotic diction.

No event, no evidence, a salient feature
Necromantic sex, eye brows to guard by nature.

The republic, the reality never fails
The necessity not to negotiate in trail.

The virtuous vibration not to confuse, just a new story
The vociferous eliminator ever with energy, O! my glory.

To confirm my name, see a new flame with fame
My imprint with internet, a stuff in golden home.

The ridiculous, the anatomy burst to retaliate
Let the doldrums be negative, I want to negotiate.

One is a company, two the crowd, no conflict in one act play
My pantomime an old replica, I like it in any way.

O! my mobile soil, a new tale to missile
Poor petals in flexible, the fragrance in puzzle.

Earmarked heritage, Adam and Eve an old track
A trade fair with feast, no nerve in trick.

O! my running rumour, roots to deal
Silky worms die, milky breast to feel.

Never at lip service, my label knows maximum
O! Adam and Eve, beat the drums anti clock-wise
Let the pendulum, never be in pandemonium.

விடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்

கடந்த சில நாள்களாக சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சிலரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளில் இந்த மாணவர்கள் கல்லூரி ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து விடைத்தாள்களை மாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்கள் செய்தது தவறுதான். ஆனால் அவர்கள் கைது செய்து ஜெயிலுக்குள் தள்ளுமாறு என்ன தவறு செய்துவிட்டார்கள் என்று புரியவில்லை. அவர்களைக் கல்விக்கூடங்களை விட்டு நீக்கலாம். இனி தமிழக அரசின் கல்விக்கூடங்கள் எதிலும் படிக்க அனுமதிக்கப்போவதில்லை எனலாம். அரசு, தன் தொடர்பான எந்த வேலைக்கும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை எனலாம்.

ஆனால் கைது செய்து ஏன் ஜெயிலில் அடைக்கவேண்டும்? எந்தச் சட்டங்களை அவர்கள் மீறினார்கள்? அவர்களால் நேரடியாக சமுதாயத்தில் யாருக்காவது தீங்கு வரப்போகிறதா?

கல்லூரி ஊழியர்கள் மீதாவது அலுவலக விதிமுறைகளை மீறினார்கள் என்று வேலை நீக்கமும், ஊழல், ஏமாற்று, லஞ்சம் போன்றவை தொடர்பாக கிரிமினல் வழக்கும் தொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் மாணவர்களைச் சிறையில் அடைப்பது முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது.

Tuesday, May 10, 2005

வன்முறை வாழ்க்கை

நேற்று கவிஞர் புஹாரியின் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு அரங்கம் இருந்தது. அதனால் அலுவலகத்திலிருந்து நடந்து அந்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டு அப்படியே நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தேன்.

இரவு 8.45க்கு வீடு நோக்கி நடக்கும்போது, கவுடியா மடத்தெருவில் ஒரு வீட்டின் வாசலில் சண்டை. அந்த வீட்டின் வயதான வாட்ச்மேன் கையில் தடிக்கம்பு ஒன்றை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தார். அவரை எதிர்த்து இளைஞன் ஒருவன் ஏதோ திட்டிக்கொண்டிருந்தான்.

பக்கத்தில் நடைபாதையில் ஒரு சைக்கிள் ரிப்பேர்க் கடை இருந்தது. அந்த இளைஞன் சைக்கிள் கடையில் கிடந்த ஒரு பெரிய ஸ்பானரைக் கையில் தூக்கிக்கொண்டு வாட்ச்மேனை எதிர்த்தான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தவாறு சிலர் அருகில் நின்றுகொண்டிருந்தனர். திடீரென வாட்ச்மேன் கையில் இருந்த கம்பால் அந்த இளைஞன் மண்டையில் ஓங்கி அடித்தார். அவனது மண்டையின் இடதுபுறம் காதுக்கருகில் பலமாக அடிபட்டிருக்கும். ஒரு விநாடி சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞன் தன் கையில் இருந்த இரும்பு ஸ்பானரால் அந்தக் கிழவரை ஓங்கித் தாக்கினான். அவரைக் கீழே தள்ளினான். கால்களால் அவரது வயிற்றை மிதித்தான். தொடைகளுக்கிடையில் மர்மஸ்தானத்தை ஓங்கி உதைத்தான்.

சுற்றி இருந்தவர்கள் முதலில் இருவரையும் விலக்கிவிட முயற்சி செய்யவில்லை. பின் சற்று தாமதமாக அந்த இளைஞனைப் பிடித்து இழுத்தனர். இதற்குள் எழுந்திருந்த கிழவர் கீழே நழுவியிருந்த கம்பைக் கையிலெடுத்து மீண்டும் அந்த இளைஞனைத் தாக்கினார். நல்ல வேளையாக மற்றொருவர் அந்த இளைஞனைக் கையோடு பிடித்து அந்த இடத்தை விட்டு இழுத்துச் சென்றார். அந்த இளைஞன் அங்கிருந்து தலையைக் கையால் பிடித்துக்கொண்டு சிறிது தூரம்தான் சென்றிருப்பான். அவனது முகத்தில் அடிபட்ட அவமானம் தெரிந்தது. தலை வலித்ததைவிட சுயம் வலித்திருக்கவேண்டும். திடீரென, தன்னை இழுத்துச்செல்பவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் அந்த வாட்ச்மேன் இருக்குமிடம் நோக்கி ஓடினான்.

இதற்குள் சுற்றியிருப்பவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். நான் சாலையின் மறுபக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்த வாட்ச்மேன் வீட்டின் வாசலில் இருந்த கேட்டை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். இளைஞன் நடு வாசலில் நின்றுகொண்டு தன் வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருந்தான்.

தெருவில் வண்டிகள் எந்தச் சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருந்தன.

Monday, May 09, 2005

மாரியம்மன் காவடி, தேர்

மாரியம்மன் திருவிழாவில் நான்கு தனித்தனி விஷயங்கள் இருக்கும். ஒன்று பகல்நேரக் காவடி. இரண்டாவது இரவு நேர மின்சாரக் காவடி. மூன்றாவது தேர், நான்காவது செடில்.

[ஒலித்துண்டு: செடிலின்போது அடிக்கப்படும் பம்பை, உடுக்கையின் சத்தம் (இன்னபிற சத்தங்களுடன் கலந்து). கிட்டத்தட்ட இதேமாதிரியான சத்தம்தான் காவடியுடனும் இருக்கும்.]

செடிலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தாயிற்று. இம்முறை இரவு நேரங்களின் வரும் மின்சாரக் காவடியைப் பார்ப்பதற்கு நான் இருக்கவில்லை. மின்சாரக் காவடி என்பது பிரம்புகளால் ஆன மாபெரும் முப்பரிமாண வடிவம். துக்கிணியூண்டு பால் குடம் ஒரு கோடியில் இருக்கும். காவடிக் கட்டமைப்பைச் சுற்றி மின்விளக்குச் சரங்கள் (ஜீரோ வாட் பல்புகள்) அலங்கரிக்கும். இந்த விளக்குகளுக்கு மின்சாரத்தைத் தருவது பின்னால் ஒரு தள்ளுவண்டியில் வரும் டீசல் ஜெனரேட்டர். இந்தக் காவடியை ஒருவரால் தூக்கிக்கொண்டு எடுத்துவரமுடியாது. சம்பிரதாயமாக நேர்ந்துகொண்டவர் அதன் நடுவில் வர, சுற்றி பத்து இருபது பேர் காவடியைச் சுமந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகவும், கலை நேர்த்தியுடனும் (அதாவது ஜக ஜகாவென்று ராமராஜன் சட்டை மாதிரி டாலடிக்க வேண்டும்!) காவடி இருக்கிறது என்பது முக்கியம்.

பால் காவடி இந்தமுறை மின்சாரக் காவடிகள் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரியான காவடியைச் சுமப்பது அக்கறைப்பேட்டை போன்ற ட்சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள்.

பகல் நேரத்தில் வரும் காவடிகள் மிகவும் எளிமையானவை. ஒரு பித்தளைச் சொம்பில் பால். ஆனால் இப்பொழுதெல்லாம் எவர்சில்வர் சொம்பில்தான் பால் காவடி. மஞ்சளாடை அணிந்து, தோளில் மாலையணிந்து - இந்த மாலை மணமாகும்போது போடுவது போல நேராக இருக்கலாம் அல்லது குறுக்காக, பூணூல் அணிவது போல ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களும் குறுக்காக அணியலாம் - தலையில் வேப்பிலைக்கொத்தும், அதன்மேல் பால் குடமும் (அல்லது சொம்பும்). கோயிலிலிருந்து கிளம்பி, நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் கோயிலை அடைய வேண்டும். ஏற்கெனவே காவடிக்கென சீட்டு வாங்கியிருக்க வேண்டும். பூசாரி காவடிச்சீட்டையும் பால் குடத்தையும் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மீதம் சிறிது பாலை சொம்பில் விட்டுத் திருப்பித் தருவார்.

வேப்பிலைக் காவடிகாவடி எடுப்பவர் கூடவே உதவி செய்யவென்று சிலர் வருவர். பல நேரங்களில் காவடி எடுப்போர் மயங்கி சாமியாடும் நிலை ஏற்படும். சிலர் திமிறிக் கூழே விழுந்துவிடலாம்.

காவடி என்பதே தோளில் சுமக்கப்படும் மரச்சட்டக அமைப்பு (பார்க்க: படம்) ஒன்றின் பெயராக இருக்குமோ என்று நினைக்கிறேன். இங்கிருந்து தொடங்கி மற்ற பலவுக்கும் இதே பெயர் நிலைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தோளில் சுமக்கும் இந்தக் காவடி ஒரு மரத்துண்டின் மேல் அரை வட்டமாக வளைந்த மரம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இடையில், இந்தச் சட்டங்கள் நிலையாக இருப்பதற்காக சில குறுக்குச் சட்டங்கள் இருக்கும். கீழ் மரத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு சொம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். காவடியைச் சுற்றி வேப்பிலையாலும் பூவாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தக் காவடியைத் தோளில் சுமந்துசெல்வார்கள்.

இந்தக் காவடி சுமப்பவர்கள் வேண்டுதலைப் பொருத்து, நாக்கில் அலகு குத்திக்கொள்வார்கள். (அப்படிப்பட்ட படங்களை நான் எடுக்கவில்லை. சிறுவர்கள் பலர் நாக்கில் அலகு குத்தியிருப்பதைப் பார்த்து பயப்படுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போயிருக்கிறேன்.) இன்னமும் சிலர் முதுகுத் தசையில் இரும்புக் கொக்கிகளை மாட்டி அதிலிருந்து காவடியைத் தூக்குவார்கள். இப்படி உடலை வருத்திக்கொள்வதன்மூலம் தமது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

[இன்று சன் நியூஸில் போடிநாயக்கனூரில் கருப்பசாமிக்கு நேர்ந்துகொண்டு சாட்டையால் உடலில் அடித்துக்கொள்ளும் விழாவைப் பற்றிய துண்டுப்படம் காட்டப்பட்டது. வேண்டுதலைப் பூர்த்தி செய்ய சாட்டையால உடலை அடித்துக்கொள்கிறார்கள். எரியும் சூடத்தை அப்படியே விழுங்குகிறார்கள்.]

காவடி எடுப்பவர்கள் ஞாயிறு காலை முதலே தொடங்கிவிடுவர். தொடர்ந்து அடுத்த நான்கைந்து ஞாயிறுகளிலும் நாகையில் காவடி உண்டு.

-*-

முன்னர் தேர் காலை 6.30க்குள் நிலையிலிருந்து கிளம்பிவிடும். இம்முறை 8.00க்குப் பிறகுதான் ஆரம்பித்தது.

பிள்ளையார் தேர்
பிள்ளையார் தேர்

மொத்தம் மூன்று தேர்கள். விநாயகர் தேர், எல்லையம்மன் தேர், பின் கடைசியாக மாரியம்மன் தேர். முதலிரண்டும் மிகச்சிறிய, எடை குறைவான தேர்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து தள்ளினால் போதுமானது. ஆனால் மாரியம்மன் தேர் மிகப்பெரியது. இழுக்க 200 பேருக்கு மேல் தேவைப்படும். இரண்டு பக்கமும் இழுப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். கொஞ்சம் பெண்கள் தேர் வடத்தில் கோடியில் இருப்பார்கள்.

எல்லையம்மன் தேர்
எல்லையம்மன் தேர்

தேரிழுப்பது சாதாரண விஷயமல்ல. சம்பிரதாயமான தேருக்கு ஸ்டியரிங் வீல் கிடையாது. பிரேக் கிடையாது. சாலைகளில் சற்றி அங்கும் இங்குமாக நகர்த்தி ஓட்டவேண்டும். ஆங்காங்கு நிறுத்த வேண்டும். பின் மீண்டும் சக்கரங்களை நகர்த்த வேண்டும். இதற்குத்தான் முட்டுக்கட்டை, உந்துகட்டை என்று சிலவற்றைப் பயன்படுத்துகிறார்கள். முட்டுக்கட்டை (பார்க்க: படம்) தேர் சக்கரங்களை சற்றே திசை திருப்பவும், முழுவதுமாக நிறுத்தவும் பயனாகிறது. தேரின் வெளிப்பக்கத்திலிருந்தும், உள்பக்கத்திலிருந்தும் முட்டுக்கட்டை போடுவார்கள். உள்ளிருந்து முட்டுக்கட்டை போடுபவரின் பணி மிகவும் சிரமமானது. சிறிது தவறானாலும் சக்கரத்தின் அடியில் கை நசுங்கிப் போகலாம். பெரிய தேராக இருந்தால் ஆளே நசுங்கிப் போகலாம்.

மாரியம்மன் தேர்
மாரியம்மன் தேர்

நின்றுகொண்டிருக்கும் தேரை வெறுமனே பிடித்து இழுத்து நகர்த்துவது கடினம். அதற்காக பின்பக்கமாக ratchet போன்ற நீண்ட கட்டைகளை தேர் சக்கரத்தின் அடியில் கொடுத்து அந்தக் கட்டையின் மீது சிலர் ஏறி நின்று கீழ்நோக்கி அழுத்துவார்கள். அப்பொழுது சக்கரம் முன்நோக்கி உருளும். அதற்குப் பின்னர் மனிதர்கள் இழுக்கும் இழுவையில் தேர் ஓடும். முட்டுக்கட்டை மூலம் திசையை சற்று இடமும் வலமுமாகத் திருப்புவார்கள். தேரை நிப்பாட்டவேண்டுமென்றால் முட்டுக்கட்டையை நேராக முன்னிரு சக்கரங்களின் முன்பக்கம் சொருக வேண்டியதுதான்.

முட்டுக்கட்டைதேருக்கு மொத்தம் ஆறு சக்கரங்கள். முன்னே இரு சக்கரங்களும், பின்னே இரு சக்கரங்களுமாக நான்கு பக்கமும் நான்கு. நடுவில், முன், பின் சக்கர வரிசைகளுக்கு இடையில் உள்ளடங்கி இரண்டு.

தேர் ஆங்காங்கே வீதியில் ஏதாவது ஓரிடத்தில் நிற்கும். அப்பொழுது பலரும் அங்கு வந்து அர்ச்சனை செய்வார்கள். பல அர்ச்சனைகளுக்குப் பிறகு தேர் மீண்டும் புறப்படும். இப்படியாக மதியம், வெய்யில் கொளுத்தும்போது இழுப்பவர்களால் தாங்கமுடியாது. வெய்யில் தார்ச்சாலையைக் கொதிக்கும் குழம்பாக மாற்றியிருக்கும். கால்களில் செருப்பு போடாமல் தேர் இழுப்பார்கள் என்பதை நினைவில் வைக்க. ஆங்காங்கே விதியில் உள்ள வீடுகளிலிருந்து தெருவில் குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டுவார்கள். ஆனால் இதுவும் கூட உபயோகமற்றுப்போயிருக்கும். சாலையில் கொட்டிய தண்ணீர் கொதிநீராக ஆகியிருக்கும். உச்சி வெய்யிலில் தேர் மேல வீதியில் நிறுத்தப்படும். அனைவரும் இளைப்பாறச் சென்றுவிடுவர். மீண்டும் வெய்யில் தாழ்ந்ததும் மாலை 3.00 மணிக்கு மேல் மீண்டும் தேரை இழுத்துக்கொண்டு வந்து நிலையில் சேர்ப்பர்.

தேர் இழுப்பவர்களுக்கென அம்மனுக்குப் படையலிட்ட பானகம், நீர்மோர் (இம்முறை பெப்ஸி கூடக் கிடைத்தது!), எலுமிச்சை சர்பத், குளிர்நீர் ஆங்காங்கே கொடுப்பார்கள். தேர் சாலையை முழுவதுமாக ஆக்கரமித்திருக்கும். வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலே குறுக்காகச் செல்லும் மின்சாரக் கம்பிகளை பிரித்து, தேர் சென்றதும் மீண்டும் இணைக்க மின்வாரிய ஊழியர்கள் தேர் கூடவே வருவார்கள்.

திருவிழா அமைதியாக, ஒழுங்காக நடைபெறுவதற்கு நாகை நகராட்சிக்கு முக்கியமான பங்கு உண்டு.

Saturday, May 07, 2005

சென்னை வேலை வாய்ப்புகள்

இன்றைய தி ஹிந்து செய்தியில் இந்தியாவிலேயே சென்னையில்தான் பிற நகரங்களை விட அதிகமாக 'புது' வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்று மா ஃபுவா நிறுவனப் புள்ளிவிவரங்கள் கூறுவதாக வந்துள்ளது. அதேபோல பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மிக அதிகமாக வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் இந்தச் செய்தி கூறுகிறது. (விழுக்காடுகளாக... மொத்த எண்ணிக்கையில் அல்ல.)

அதிலும் முக்கியமாக
In Chennai, small private limited companies with less than 100 employees are forecasted to demonstrate the highest growth rate of 9.1 per cent on the Ma Foi Employment Index.
என்று சொல்கிறார்கள். இந்த மாத அமுதசுரபியில் என் கட்டுரையிலும் சிறு நிறுவனங்கள் மூலம்தான் வேலை வாய்ப்புகளைப் பெருமளவில் அதிகரிக்க முடியும் என்று எழுதியிருந்தேன். ஒரு பெரிய நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தால் (நோக்கியா), அதனால் சுமார் 5,000 நேரடி வேலைகளும், 10,000 சார்ந்த வேலைகளும் உருவாகலாம். ஆனால் இந்த அளவுக்கான முதலீடு 10,000 சிறு நிறுவனங்களிடமிருந்து (சராசரி ரூ. 50 லட்சம் முதலீடு) வந்தால் இதனால் கிட்டத்தட்ட 2,00,000 புது வேலைகள் உருவாகும். வேலைகளும் சென்னை போன்று ஓரிடத்தில் குவியாமல், மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும்.

இதனால் நோக்கியா சென்னை வருவது கூடாது என்று நான் சொல்லவில்லை. அதற்கு நாம் படும் சந்தோஷத்தைவிட, மேற்படி தி ஹிந்து செய்தியிலிருந்து அதிக சந்தோஷம் அடையவேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலை என்று யாராவது புதுப் போராட்டத்தை ஆரம்பிக்காத வரையில்...

Friday, May 06, 2005

தேவன் நினைவுப் பதக்கம்

நேற்று (வியாழன், 5 மே 2005) மாலை 6.00 மணிக்கு ஆழ்வார்பேட்டை எம்சிடிஎம் பள்ளி வளாகத்தில், சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தேவன் அறக்கட்டளை சார்பில், மறைந்த எழுத்தாளர் தேவன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தேவன் நினைவாக நகைச்சுவையைக் கையாள்பவர்களுக்கு நினைவுப் பதக்கம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேவன் நினைவுப் பதக்கத்தைப் பெற்றவர்கள் ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன்.

சாருகேசிஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை எழுத்தாளர். தற்பொழுது மாம்பலம் டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எனப்படும் உள்ளூர் வார இதழ்களில் 'தமாஷா வரிகள்' என்ற பத்தியை எழுது வருகிறார். இவரது கடந்த பத்திகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம் வரி வரியாகச் சிரி என்றதொரு புத்தகத்தை மார்ச் 2005-ல் வெளியிட்டுள்ளது.

'கிரேசி' மோகன் நகைச்சுவை நாடகங்களில் தொடங்கி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர். இவர் சிரிக்கச் சிரிக்க வைக்கும் புத்தகங்களையும் எழுதுபவர். நடு நடுவே சந்தக் கவிதைகளையும் எழுதுபவர். (பார்க்க: இந்த வார 'கற்றதும் பெற்றதும்', ஆனந்த விகடன்). கூடிய விரைவில் (இந்த மாதத்தில்) 'கிரேசி' மோகன் எழுதிய இரண்டு புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவர இருக்கின்றன: K.P.T.சிரிப்புராஜ சோழன், Mr.கிச்சா ஆகியவை.

விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று சாருகேசி பேசினார். தேவன் அறக்கட்டளை பற்றியும், இந்த அறக்கட்டளை மூலம் தாங்கள் செய்துவரும் செயல்களைப் பற்றியும் பேசினார்.

விழாவுக்கு அசோகமித்திரன் தலைமை தாங்கினார். தேவன் படைப்புகள் பற்றிப் பேசினார். தேவன் தனது கடைசிச் சில வருடங்களில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்றார். தேவன் - ஜெமினி வாசன் உறவு பற்றிப் பூடகமாகக் குறிப்பிட்டார். எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்களேன்? தேவன் மறைந்த அன்று அவரது இறுதி அஞ்சலிக்கு ஒரு பத்து பேராவது இருக்க வேண்டுமென்று அப்பொழுது ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டிருந்த அசோகமித்திரன் ஒரு வேனில் ஆள்களைத் திரட்டிக்கொண்டு போனதாகச் சொன்னார்.

அசோகமித்திரன், ஜே.எஸ்.ராகவன்இந்தச் செய்தி ஆச்சரியமாக இருந்தது. தேவன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்? கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனை விட்டுப் பிரிந்ததும் தேவன் ஆனந்த விகடனின் ஆசிரியரானார். விகடனில் எழுதித் தள்ளியிருக்கிறார். தன் பெயரில், பிற பல பெயர்களில் என்று.

நான் முதன்முதலில் தேவன் எழுதிய கதைகளில் படித்தது Mr.வேதாந்தம். அதற்கு முன்னரே சிறுவனாக இருந்தபோது துப்பறியும் சாம்புவை கார்ட்டூனில் படித்த ஞாபகம். ஆனால் அந்தப் பாத்திரத்தைப் படைத்தது தேவன் என்று தெரியாது. பின் துப்பறியும் சாம்புவை முழுதாகக் கதைகளில் படித்திருக்கிறேன். அதன்பின் தேவனின் சில கதைகளைத் தேடிப்பிடித்துப் படித்தேன். இன்னமும் பலவற்றைப் படிக்கவில்லை.

ஆனால் மேடையில் இருந்தவர்கள் - அசோகமித்திரன், ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன் மூவரும் தேவனை முழுமையாகப் படித்திருந்தவர்கள். ராகவன், மோகன் இருவருமே தேவன் எழுத்துகளிலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி அரங்கில் இருந்தவர்களைச் சிரிக்க வைத்தனர். அசோகமித்திரன் பேசும்போது நகைச்சுவை எழுதுபவர்கள் கடைசியில் எங்காவது அசடு வழிய வேண்டியிருக்கும், அல்லது பிறரைக் கேலிசெய்து அதன்மூலம் சிரிக்க வைக்க வேண்டியிருக்கும். ஆனால் தேவனின் நகைச்சுவை வன்முறையே இல்லாத நகைச்சுவை என்றார். உண்மைதான்.

ஜே.எஸ்.ராகவன் தான் பிறந்தது தேவன் மறைந்தற்கு அடுத்த நாள் என்றார். (இன்று பிறந்த நாள் காணும் ஜே.எஸ்.ராகவனுக்கு வாழ்த்துகள்!)

அசோகமித்திரன், கிரேசி மோகன்'கிரேசி' மோகன், தான் இன்று வாழ்க்கையில் உருப்படியாக இருப்பதற்குக் காரணமே தேவன்தான். சிறுவயதில் தேவன் புத்தகமும் கையுமாகவே இருந்தவர். தேவன் எழுத்தின் inspirationதான் தனது நகைச்சுவை கலந்த எழுத்து என்றார். தான் 'தேவன் மகனாக' இருக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மோகன் பேச்சில் அவரது பிராண்ட் பஞ்ச் லைன்கள் நிறைய இருந்தன. (எனக்கு இரண்டு தேவன்களைப் பிடிக்கும் - ஒன்று கல்கியின் வந்தியத்-தேவன், மற்றொன்று விகடனுக்காக வியர்வைகளைச் சிந்தியத்-தேவன் - ஆர்.மாகாதேவன்)

அசோகமித்திரன் தனக்கு தேவன் நினைவுப் பரிசு கிடைத்ததை நினைவுகூர்ந்து, அப்பொழுது தனக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்றதையும் சுட்டிக்காட்டினார். பின் ஜே.எஸ்.ராகவனுக்கும், 'கிரேசி' மோகனுக்கும் பதக்கங்களை அணிவித்தார். ("தங்கமா, அல்லது வேறெந்த உலோகமான்னு தெரியல")

அதன்பின் மற்றுமொரு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தேறியது. தேவன் எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாள்" என்னும் புத்தகத்தை அசோகமித்திரன் வெளியிட்டார். அதுவரையில் அரங்கின் முன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். எந்தத் தகுதி இருக்கிறதென்று என்னைக் கூப்பிட்டனர் என்று தெரியவில்லை. முன்னதாகவே சொல்லியிருந்தால் அரை டிரவுசர் அணிந்து சென்றிருப்பேன். அதைத் தொடர்ந்து என்னைப் பேசவும் அழைத்தனர். அதற்கு முன் பா.ராகவன் எனக்கு crash course ஆக தேவன் பற்றி நான்கு வரிகளைச் சொல்லிக்கொடுத்தார். மேலே ஏறி மைக்கைப் பிடித்து சம்பிரதாயமாக தேவன் பற்றி நான் நாலு வார்த்தைகள் சொல்லி அதற்குமேல் என் மானத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் கீழே இறங்கி, மீண்டும் என் கேமராவைக் கையில் எடுத்தேன்.

ஆனால் என் மானத்தைக் கப்பலேறியே தீருவேன் என்று தினமலர் கடும் முயற்சி செய்துள்ளது. நான் புத்தகத்தைப் பெற்றதை போட்டோ எடுத்தவர் என்னிடம் என்னைப் பற்றிய தகவல்களை எழுதித்தருமாறு கேட்டார். நான் பத்திரமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதித்தந்தேன். (Badri Seshadri/பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்.) இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி.

Thursday, May 05, 2005

மாரியம்மன் செடில்

மாரியம்மன் செடில் என்பது சில நூறு ஆண்டுகளாவாவது நாகையில் நடந்து வருவது என்று தெரிகிறது. இம்முறை சென்றபோது கோயில் எத்தனை பழமை வாய்ந்தது, யாரால் கட்டப்பட்டிருக்கும், செடில் எப்பொழுதிலிருந்து தொடங்கியிருக்கும் என்று கேட்டறிய முடியவில்லை.

கார்த்தவீரியனை கழுமரத்தில் ஏற்றியது பற்றிய கதை ஒன்று உண்டு. இது பார்ப்பன புராணங்களில் இல்லாத, தமிழ் சமூகத்தின் பழங்கதையாடல்களுள் ஒன்று. தவறாகக் கழுவில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்ட கார்த்தவீரியனை மாரியம்மன் காப்பாற்றுவதாகக் கதை செல்லும் என நினைக்கிறேன். (சின்ன வயதில் கேட்டதனால் மறந்து விட்டது.) அது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சடங்கு இந்த செடில் ஏற்றுவது என்று நினைக்கிறேன். (மாரியம்மன் தல வரலாறு பற்றிய புத்தகம் அறுசுவை பாபுவிடம் வாங்கி அனுப்புமாறு கேட்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அதை மேலும் அறிந்துகொண்டு எழுதுகிறேன்.)

கார்த்தவீரியன் தன் மனைவியருடன் செடில் நடப்பதைப் பார்வையிடுகிறார்.

செடில் மரம்

செடில் மரம் என்பது ஆங்கில எழுத்தான "T" போன்று உள்ளது. நீல வண்ண பெயிண்டால் பூசப்பட்ட மரம். இதன் செங்குத்து மரம் தரையில் ஆழமான குழியில் நடப்பட்டுள்ளது. குறுக்குவெட்டில் உள்ள மரம், செங்குத்து மரத்தைச் சுற்றிச் சுழலும் வண்ணம் இரும்பால் ஆன சக்கரம் போன்ற அமைப்பின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. குறுக்குவெட்டு மரத்தின் ஒருபக்கத்தில் மரச்சட்டகம் ஒன்று உள்ளது. இதை முன்பக்கம் என்று வைத்துக்கொள்வோம். இதில் காப்பு கட்டிய ஒருவர் ஏறி நிற்கிறார். இவர் பட்டுப் பாவாடை, பிரத்யேகமான அணிகலன்கள், தலைப்பாகை ஆகியவை அணிந்திருப்பார். செடிலுக்கென வேண்டுதல் செய்து செடிலில் ஏறுபவர்களை இவர்தான் பிடித்துக்கொள்வார். இந்தக் குறுக்குமரத்தின் பின்பக்கத்தில்தான் செடிலைச் சுற்றும் ஆள்கள் நிற்பார்கள்.

முந்தைய நாள்களில் - எனது சிறுவயதில், நான் செடிலில் ஏறிய சமயத்தில் கூட - ஒவ்வொருவருக்கும் மூன்று சுற்றுக்கள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே வேண்டிக்கொண்டனர். இரவு தொடங்கும் செடில் அடுத்த நாள் விடிகாலைக்குள் முடிந்திருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டுதல் செய்வோர் எண்ணிக்கை கூடக் கூட, ஒருவருக்கு ஒரு சுற்று என்று குறைத்து விட்டனர். பொதுவாக ஞாயிறு காலையில் தேர் நிலையிலிருந்து தொடங்கி, நான்கு வீதிகளிலும் சுற்றி விட்டு மாலையில் நிலையை வந்தடையும். அதற்குப் பின்னரே செடில் தொடங்கும்.

நாளடைவில் செடில் ஏறுவோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே, காலையிலேயே செடிலை ஆரம்பித்து விடுகின்றனர். அதற்குப் பின்னர்தான் இப்பொழுதெல்லாம் தேர் சுற்றத் தொடங்குகிறது. மாலையில் தேர் நிலைக்கு வந்தபிறகும் கூட செடில் தொடர்ந்து நடக்கிறது. திங்கள் விடிகாலை வரை செல்கிறது. சென்ற வருடம் 5,000க்கும் அதிகமானோர் செடில் வேண்டுதல் செய்திருந்தனர். இம்முறை 3,000 பேருக்கு மட்டும்தான் முன்கூட்டியே பதிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குமேல், நேரம் இருப்பதைப் பொறுத்து அங்கேயே சீட்டுகள் வாங்கி மேலே ஏற்றுவர்.

-*-

கார்த்தவீரியன், மாரியம்மன் இருவரிடமும் அனுமதி பெற்று இருவர் செடில் மரத்தில் ஏறும் தகுதி உடையவராகின்றனர். சுமார் ஆயிரம் சுற்றுகளுக்குப் பிறகு மேலே தொடர்ச்சியாக நின்று கொண்டிருப்பவருக்கு தலை சுற்றும், வாந்தி எடுக்கும். அவர் நாள் முழுதும் விரதமிருப்பார். அதுவும் சேர்ந்து தொல்லை கொடுக்கும். அதனால் ஆயிரம் சுற்றுகளுக்கு ஒருமுறை இருவரும் மாறி மாறி நிற்கின்றனர்.

செடில் மரத்தின் பின்பக்கத்தை மேலே தூக்கிவிடும்போது முன்பக்கம் கீழே இறங்குகிறது - ஒரு Seesawவைப் போல. அந்த நேரத்தில் வரிசை பிரகாரம் செடிலுக்கு நேர்ந்துவிட்ட குழந்தைகள் ஒப்படைக்கப்படுகிறார்கள். ஒருவர் கொடியசைக்க பின்பக்கத்தில் இருக்கும் ஆள்கள் கயிற்றின் மூலம் அதைக் கீழே இறக்க, செடிலின் முன்பக்கம் மேலே ஏறுகிறது.

செடில் மரம்

முன்பக்கம் மேலே சென்றதும், பின்பக்கத்தை நான்கைந்து பேர் சுழற்றிச் சுற்றி வருகிறார்கள்.

செடில் மரம்

அவர்கள் ஒரு முழு சுற்று சுற்றி வரும்போது எதிர்த்திசையில் இன்னமும் சிலர் நின்று ஓடிவருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

செடில் மரம்

அதைத் தொடர்ந்து மீண்டும் இந்த நான்கும் வரிசையாக நடைபெறுகிறது.

நூறு சுற்றுகளுக்கு ஒருமுறை செடில்மரத்தை இழுத்துச் சுற்றுபவர்கள் மாறுகிறார்கள்.

-*-

செடிலில் ஏறுபவர்கள் பெரும்பாலானோரும் சிறு குழந்தைகள்தான். ஆனால் சில வயதானவர்களும் ஏறுவது உண்டு. நாகபட்டினம் பகுதிகளில் சிறுகுழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை, உயிருக்கு ஆபத்து என்றால் அம்மன் உயிரைக் காப்பாற்றட்டும் என்று செடிலுக்கு வேண்டிக்கொள்வது வழக்கம். பொதுவாக மொட்டை அடிக்கிறேன், காவடி தூக்குகிறேன் என்று வெறும் பக்தியால் மட்டும் வேண்டிக்கொள்வதில்லை. மரண பயம் இருக்கும்போதுதான் இந்த வேண்டுதல் வருகிறது. இதைப்போலவே மற்றுமொரு வேண்டுதல் - பாடைக் காவடி.

மாரியம்மனுக்கு பால் காவடி எடுப்பதைப்போல சிலர் பாடைக் காவடியும் எடுப்பர். இங்கு வயது வித்தியாசம் இல்லையென்றாலும் பொதுவாகவே சிறு குழந்தைகள் சார்ந்த வேண்டுதல்தான் இதுவும். பாடை என்பது (பார்ப்பனரல்லாதோர்) இறந்தோரை ஊர்வலம் எடுத்துச் செல்லும் வண்டி.

மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் சிறுவர்களின் பெற்றோர் பிள்ளை பிழைத்தெழுந்தால் பாடைக் காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வர். அதன்படி செடில்/தேர் தினத்தன்று பாடை போல வடிவமைக்கப்பட்ட ஒரு வண்டியில் மஞ்சள் துணி அணிந்தவாறு அந்தக் குழந்தை படுத்துக்கொள்ள, அந்தப் பாடைக் காவடியை நான்கு வீதிகளிலும் இழுத்து வருவர்.

-*-

தேர், காவடி பற்றிய புகைப்படங்களை பின்வரும் பதிவில் எழுதுகிறேன். செடிலை விடியோப் படமாகவும் எடுத்திருக்கிறேன். அதை சற்று தொகுத்து மேலேற்றியதும் இங்கு சுட்டியைக் கொடுக்கிறேன்.

செடில் பற்றிய முந்தைய பதிவு

Tuesday, May 03, 2005

மணவை முஸ்தஃபா நேர்காணல்

இன்று தொலைக்காட்சியில் ஓடைகளைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது பொதிகையில் மணவை முஸ்தஃபாவுடன் ஒரு நேர்காணல் நடந்துகொண்டிருந்தது. நேர்முகம் ஒருங்கிணைப்பாளர் பெயர் சாவித்ரி கண்ணன் என்று நிகழ்ச்சியின் கடைசியில் வந்தது. எனக்கு சாவித்ரி கண்ணன் முகம் ஞாபகம் இல்லை; எனவே மணவை முஸ்தஃபாவுடன் பேசியது சாவித்ரி கண்ணன் என்றே வைத்துக்கொள்வோம். [பின்சேர்க்கை: நேர்முகம் செய்தவர் லேனா தமிழ்வாணன்.]

முஸ்தஃபா தான் உருவாக்கும் தமிழ்ச்சொல் களஞ்சியத்தைப் பற்றிப் பேசினார். பல அறிவியல் துறைகளில் தான் சொற்களை உருவாக்குவதாகவும், கணினித்துறைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் 30,000க்கும் மேற்பட்ட சொற்களை உருவாக்கியுள்ளதாகச் சொன்னார். இன்னமும் உயிரியல் போன்ற சில துறைகள்தான் பாக்கி என்றார். தமிழ் வேர்ச்சொற்களைத் தோண்டித் துருவி எடுத்து இப்பொழுது ஆங்கிலத்தில் உள்ள கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கி, அதன்பின் அந்தத் துறை அறிஞர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களது கருத்தையும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்.

[நான் சில நாள்கள் முன்னர் க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்தபோது சொற்களை உருவாக்குவது அகராதி செய்பவர்கள் வேலை கிடையாது; சொற்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதுதான் அகராதிகளின் வேலை என்றார். மணவை முஸ்தஃபா செய்வது கலைச்சொல் அகராதி வேலை அல்ல, கலைச்சொல் களஞ்சிய முயற்சி என்று வேண்டுமானால் கொள்ளலாம்!]

இந்தக் களஞ்சியங்களை யார் பதிப்பிக்கிறார்கள் என்ற தகவல் நான் பார்த்த பகுதியில் இல்லை அல்லது நான் சரியாகக் கவனிக்கவில்லை. (இந்த நேர்காணல் நேரத்தில் எனக்கு இரண்டு, மூன்று தொலைபேசி அழைப்புகளும் வந்தன, அதனால் நாள் பல நேரங்கள் நிகழ்ச்சியில் முழுவதுமாகக் கவனம் செலுத்த முடியவில்லை.) இதுபோன்ற புது சொல் கண்டுபிடிப்புகளை இணையத்தில் வைப்பதன் மூலம்தான் அவை பரவலாகி, வார்த்தைகள் அங்கீகரிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். இவற்றை தடி, தடிப் புத்தகங்களாக வெளியிடுவதனால் மிகக்குறைந்த நன்மையே ஏற்படும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இணையத்தைப்பற்றி நேர்முகம் கண்டவரும் எதையும் கேட்கவில்லை, முஸ்தஃபாவும் எதையும் சொல்லவில்லை.

பேச்சு ஜெயகாந்தனது சமீபத்தைய மேற்கோள் பக்கம் திரும்பியது. ("தமிழில்தான் படிக்க வேண்டும், தமிழில்தான் எழுத வேண்டும் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்.") மொழிவெறி வேறு, மொழிப்பற்று வேறு என்று விளக்கினார் முஸ்தஃபா. ஜெயகாந்தன் பேச்சை நாகரிகமாகச் சாடினார். தமிழால் அனைத்தையும் செய்யமுடியும், முக்கியமாக அறிவியலை தமிழிலேயே வெளியிடமுடியும் என்று தான் நினைப்பதாகவும், யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராகத் தான் இருந்தபோது அதைச் செய்து காட்டியும் இருப்பதாகச் சொன்னார்.

[ஜெயகாந்தன் பற்றிப் பேசும்போது ராணி சீதை ஹாலில் 29.4.2005 அன்று நடைபெற்ற ஜெயகாந்தன் விழா ஞாபகம் வருகிறது. என்னால் அன்று விழாவுக்குப் போகமுடியவில்லை. ஆனால் ராணி சீதை ஹால் வழியாகச் சென்றேன். முன்னாள் காம்ரேட் ஜெயகாந்தனை, இன்னாள் காம்ரேட் பாண்டியன் உள்ளிருந்து வாழ்த்த, மக்கள் கலை இலக்கியக் கழகத்தவர் வாசலில் வட்ட வட்டத் தட்டிகளில் ஜெயகாந்தனைக் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தார்கள். துண்டுப் பிரசுரம் ஒன்றையும் விநியோகித்தனர். காரில் சென்றுகொண்டிருந்ததாலும், பின்னால் அதிகமான போக்குவரத்து இருந்ததாலும், நான் பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.]

பின் தமிழ் செம்மொழி பற்றிய விவாதம் வந்தது. முஸ்தஃபா பொங்கிக் கொட்டிவிட்டார். மத்திய அரசு கல்வித்துறையில் தமிழை செம்மொழியாகச் சேர்க்காமல் பண்பாட்டுத்துறையில் சேர்த்து, தனியான பட்டியல் ஒன்றைத் தயாரித்து, ஆயிரம் வருடங்கள் இருந்தாலே அது செம்மொழியாகும் என்று சொல்லி குட்டையைக் குழப்பி விட்டார்கள், ஆனால் இங்குவந்து நாங்கள் தமிழைச் செம்மொழியாக்கினோம் என்று குரல் விடுக்கிறார்கள், இவர்கள் ஓட்டுக்கு மாரடிப்பவர்கள் என்று சாடு சாடென்று சாடினார்.

[மணவை முஸ்தஃபா தமிழ் செம்மொழியானது பற்றி தினமணியில் எழுதியதும், அதற்கான திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் பதில் கடிதமும்.]

பின் திடீரென்று பாதையை மாற்றி கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். கருணாநிதி ஒருவரால்தான் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் தமிழைச் செம்ம்மொழியாக்குவோம் என்றதைச் சேர்க்க முடிந்தது, அவரால் மட்டும்தான் தமிழ் செம்மொழியைச் சிறைமீட்டு பண்பாட்டிலிருந்து கல்வித்துறைக்குக் கொண்டுவரமுடியும், அவரால் மட்டும்தான் செம்மொழிக்கான தகுதியை 1000த்திலிருந்து 2000 வருடமாக்க முடியும், ஏனெனில் அவரிடம்தான் 40 எம்.பிக்கள் உள்ளனர் என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.

பின், தமிழ் ஒழுங்கான செம்மொழியாக (சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி போன்றவையோடு) ஆக்கப்பட்டால் தமிழை எப்படிப் பரப்புவது என்பது பற்றி தன்னிடம் 15 அம்சத் திட்டம் ஒன்று இருப்பதாகவும், அதைச் சம்பந்தப்பட்டவரிடம் தருவேன் என்றும் சொன்னார்.

நேர்காண்பவர் நன்றி சொல்ல, நேர்காணல் முடிவடைந்தது.

மேரியும் மாரியும்

ஞாயிறு (1 மே 2005) அன்று நாகபட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தேர் + செடில் திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். அதற்கு முதல்நாள் வேளாங்கண்ணி கிறித்துவத் தேவாலயம் சென்றோம்.

தேவாலயத்தைச் சுற்றி ட்சுனாமியின் தாக்கம் எங்கும் கண்ணுக்குத் தென்படவில்லை. ஆலயம் தூய்மையாக, வெண்மையாக, அழுக்கு எதையும் காணமுடியாததாக உள்ளது.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம்

ஆலயத்தினுள் ஒளிப்படங்கள் எடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கையை சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். உடனடியாகக் கையில் இருந்த விடியோ கேமராவை மூடிவைத்தேன். செல்பேசிகள் ஒலிக்காமலும், கூட்டமாக வருபவர்கள் சத்தமாகப் பேசாமலும் இருக்க பணியாளர்கள் சுற்றி வந்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

தேவாலயங்களில் செருப்பு அணிந்து செல்வதற்குத் தடையில்லை. ஆனாலும் இந்தியப் பாரம்பர்யத்தில் வரும் பலரும் செருப்புகளை வாசலிலேயே கழற்றிவிட்டுத்தான் செல்கிறார்கள். இந்தியா முழுதிலிருந்தும் மக்கள் கூட்டம் வேளாங்கண்ணிக்கு வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேளங்கண்ணிக்கு வருபவர்கள் அங்கு வசிக்கும் மக்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

நாகையை ஒட்டியுள்ள கடற்கரைக் கிராமமான வேளாங்கண்ணியில் சுமார் 5,000 பேர்தான் வசிப்பார்கள். அதில் எத்தனை பேர் ட்சுனாமியின்போது மாண்டனர் என்று தெரியவில்லை. இறந்தவர்களில் பெருமளவு வெளியார்தான்.

இந்து ஆலயங்கள் பலவுக்கும் இருப்பது போல இந்தக் கிறித்துவத் தேவாலயம் தோன்றியதற்கென சில கதைகள் உள்ளன. மேரி பால்காரனுக்குக் காட்சியளித்ததும், மோர் விற்கும் முடவனிடமிருந்து மோர் வாங்கிக் குடித்ததும், போர்ச்சுகீசியக் கப்பல் ஒன்றினைக் கடும் மழை, புயலிலிருந்து காத்ததும் ஐதீகங்கள். முன்னிரண்டும் "இங்குதான் நடந்தது" என்று போர்டு அடித்து மாட்டி, குட்டிக் கட்டடங்கள் காணப்படுகின்றன.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா (Our Lady of Health) ஆலயம் 1700களில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இப்பொழுதுள்ள ஆலயக் கட்டடம் 1800களிலும், அதன் விரிவாக்கங்கள் 1900களிலும்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

கத்தோலிக்க நம்பிக்கையில் வேரூன்றிய, இந்திய மதங்களிலிருந்து பெரிதும் வேறுபடாத, அற்புதங்கள் சார்ந்த ஆலயம் இது. இங்கு வருபவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமல்லாது தம் நிகழ்கால வாழ்க்கையின் உடனடித் தேவைகளை ஆரோக்கியமாதா பூர்த்தி செய்வாள் என்று பரிபூரணமாக நம்புகிறார்கள். இறக்கும் தருவாயில் உள்ளவர்களைப் பிழைக்க வைப்பது, உடல் உபாதைகளை நிவர்த்தி செய்வது, பேய்/கெட்ட ஆவிகளைப் போக்கடிப்பது என்று பல விருப்பங்கள். மந்திரித்த எண்ணெய் புட்டிகளில் விற்கப்படுகிறது. மந்திரித்த சிறு/பெரு தாய்+குழவுச் சிலைகள் விற்கப்படுகின்றன. பூமாலைகள், அர்ச்சனைத் தட்டுகள், மெழுகுவர்த்திகள் என்று காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பூமாலைகளை வாங்கி மேரியின் மீது சார்த்தி, மீண்டும் பக்தர்களிடம் கொடுக்கிறார் பாதிரியார்! இந்துக் கோயில்களில் எண்ணெய் விளக்கேற்றி வைப்பது போல் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவென்று ஓரிடம். புனித நீர் கையில் வழங்கப்படுவதும் உண்டு.

தங்கத்தாலும் வெள்ளியாலும் காணிக்கைகள் செலுத்தவென்று தனி இடம் உள்ளது. பக்தர்கள் தங்கள் உடலின் உபாதைகள் உள்ள இடத்தினை வெள்ளியாலோ, தங்கத்தாலோ தகடாகச் செய்து (கண், காது, கை, கால்) காணிக்கையாகக் கொடுக்கலாம்.

மொட்டை அடிப்பதற்கும் காது குத்துவதற்கும் என்று அதிகாரபூர்வமாக ஓரிடம் தேவாலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டைத்தலையுடன் கடலில் மூழ்கி எழுந்து தலைமுழுதும் தடவிய சந்தனத்துடன் பல சிறுவர் சிறுமிகளை இங்கு காணமுடியும்.

தேவாலயத்திலிருந்து கடலுக்குச் செல்லும் பாதையில் இருமருங்கிலும் கடைகள். சினிமா பாடல்களின் ட்யூனில் இயேசு, மாதா பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் முதல் மாதா (கையில் குழந்தை இயேசுவுடன்) இலச்சினையுள்ள சாவிக்கொத்து, ஸ்டிக்கர் பொட்டுகள், பலூன்கள், ஊதுகுழல்கள், குட்டிக்குட்டி பொம்மைகள், மெழுகுவர்த்திகள் என அனைத்தையும் விற்கும் கடைகள். நடுநடுவே மொட்டை அடிக்கவென சில கடைகள். ஆங்காங்கே சைக்கிளில் நின்று இளநீர் விற்கும் ஆள்கள். ட்சுனாமி அழிவினைக் காண்பிக்கும் சிடி ஒன்றும் விற்பனைக்கு உள்ளது.

தேவாலயமே நடத்தும் ஓர் உணவுவிடுதி உள்ளது (குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.) தேவாலயம் யாத்ரீகர்களுக்கென தங்கும் விடுதி ஒன்றும் நடத்துகிறது. தனியார் விடுதிகள் பலவும் உண்டு. ஒரு மூன்று நட்சத்திரத் தங்கும் விடுதியும் கண்ணில் பட்டது. தேவாலயத்தை ஒட்டி பேருந்து நிறுத்துமிடம். நாகபட்டினத்திலிருந்து ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் பயணச்சீட்டைப் பதிவு செய்யுமிடம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆரோக்கியமாதாவுக்குக் காணிக்கையாக வந்திருப்பனவற்றைக் காட்சிச்சாலையில் வைத்துள்ளார்கள். பலவகையான தாலிகள் (தாலி பாக்கியம் வேண்டி, காணிக்கையாகக் கொடுக்கப்பட்டிருப்பவை), தங்கம், வெள்ளியில் உடலுறுப்புகள், ஆடுகள், மாடுகள், பக்தர்கள் எழுதிய கடிதங்கள் என்று பலவும் காட்சிப்பொருளாக உள்ளது. நான் அங்கு நின்றுகொண்டிருக்கும்போது வெளியே வருபவர்கள் சிலருக்கு துண்டுக்காகிதம் ஒன்றைக் கொடுத்தார் ஓர் ஊழியர். அவர்கள் அதை வாங்கமறுத்து "நாங்கள் இந்துக்கள்!" என்றனர். "அதனால் என்ன, எல்லா ஆறுகளும் கடலை நோக்கிப் போவதுபோல எல்லா மதங்களும் அந்தப் பரம்பொருளைக் கண்டறியத்தானே உதவி செய்கின்றன" என்று பதில் சொன்னார் அந்த ஊழியர். வேளாங்கண்ணிக்கு வருபவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கிறித்தவர்கள் அல்லாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஜெபமாலை அணிந்துகொண்டு தோளில் காணிக்கையைச் சுமந்துகொண்டு கால்நடையாகவே ஆலயத்துக்கு வருபவர்கள் அதிகமாகி விட்டனராம். இந்தப் பழக்கம் எப்பொழுது தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி வருபவர்கள் நேர்ந்துகொண்டு அணிந்திருக்கும் ஜெபமாலையைக் கழற்றவென்று தனியாக ஓரிடம் உள்ளது.

ஆலயத்தின் உள்ளே வருபவர்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை. வெளியே சிலர் ஜெபமாலை, ஸ்டிக்கர் ஆகியவற்றை வாங்கச் சொல்லியும், அர்ச்சனைப் பொருள்களை வாங்கச் சொல்லியும் பின்தொடர்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் மாபெரும் விழா ஒன்று வேளாங்கண்ணியில் நடக்கும். அப்பொழுது லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கென தனியாக பேருந்துகளையும், ரயில்களையும் ஓட்டும்.

வேளாங்கண்ணி ஆலயத்துக்கென ஓர் இணையத்தளம் உள்ளது: http://www.vailankannichurch.org/

-*-

இந்தப்பகுதியில் நெல்லுக்கடை மாரியம்மனும் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம். புராதனத் தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வங்களான மாரியம்மன், எல்லையம்மன், கார்த்தவீரியன் ஆகியோர்கள் அடங்கிய கோயில் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். கார்த்தவீரியன் வெளியே வருவது ஏப்ரல்/மே மாத செடில் விழாவுக்காகத்தான்.

மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழா பற்றி எழுதும்போது, செடில் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் ஒருவருக்கும் அதுபற்றித் தெரியவில்லை, இந்த விழாவைப் பற்றிக் கேட்டிருக்கவில்லை, இது தமிழ்நாட்டின் பிறவிடங்களில் இருப்பதில்லை என்று தோன்றியது. இந்த விழாவைப் ஆவணப்படுத்த எண்ணி கையில் சாதா கேமரா, விடியோ கேமரா சகிதம் போய்ச்சேர்ந்தேன்.

இந்தப் பதிவு மிகவும் பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவுகளில் மாரியம்மன் திருவிழா பற்றி எழுதுகிறேன்.