சனிக்கிழமை அன்று பெங்களூரிலிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து அதிர்ச்சியில் இருந்தார் அவர்.
“அதெப்படி சார், பிரபாகரன் இறந்துட்டார்னு நீங்க அட்டைல போடலாம்?” என்றார். “உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கு? உங்களுக்கு அந்தத் தகவலை யார் கொடுத்தா? நிதர்சனம்.நெட் பாத்தீங்களா, தலைவர் நவம்பர் 27-ம் தேதி வெளில வருவேன்னு அதுல சொல்லியிருக்காரே பாத்தீங்களா?” என்று கேட்டார்.
“ஈழத்துல தமிழன் செத்துகிட்டிருக்கான். நீங்க மரணம்னு போட்டதால தங்களுக்கு இருக்கற ஒரே ஆதரவும் போயிடுச்சேன்னு ஈழத் தமிழர்கள் அதிர்ந்துபோயிடுவாங்களே” என்றார்.
தமிழகத்திலும் உலக அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி. ஆனாலும் அதை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கக்கூடாது என்றார் அந்த வாசகர்.
உரையாடல், விவாதமாகி, பிரச்னை வலுப்பதற்கு முன்னதாக முற்றுப்புள்ளி வைத்தேன். “ஐயா, உங்களோட உணர்வுகளைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.
***
பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா, இல்லையா? நீ நேரில் பார்த்தாயா என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இதுவரை தி ஹிந்து பலமுறை பிரபாகரன் மரணம் பற்றி செய்திகளை வெளியிட்டது. ஆனால் இம்முறையும் அப்படியே என்று சொல்லிவிடலாமா? இப்போது சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட செய்திகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்தே வந்த தகவல்களையும் பார்த்தால் ஒன்றை மட்டும்தான் சொல்லமுடியும்.
பிரபாகரன் உயிருடன் இல்லை.
இதனால் ஈழப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த விதத்திலும் உதவிகள் சரியாகச் செல்லப்போவதில்லை என்பதே என் கருத்தாக இருந்தது. அது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தியா 500 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லியும் இலங்கை அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக இயங்குகிறது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். போர் என்று வரும்போது இந்தியாவின் பணத்தை மிக நன்றாகவும் ஆர்வத்துடனும் செலவழித்த இலங்கை, நிவாரணம் என்று வரும்போது மெத்தனம் காட்டுவது இயற்கையே.
விடுதலைப் புலிகள் அழிந்துபோனால், அடுத்த நாளே இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து, தமிழர்களுக்கு நன்மைகள் வாரி வழங்கப்படும் என்று இந்தியாவைச் சேர்ந்த புலி எதிர்ப்பு அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் உள்ள ஒரு மூத்த, புலி எதிர்ப்பு அரசியல்வாதியை (முன்னாள் மத்திய அமைச்சர்) சில வாரங்களுக்கு முன் சந்தித்தேன். பிரபாகரன் இல்லை என்றானபிறகு தமிழர்களுக்கு எந்த விதத்தில் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று கேட்டேன். ராஜபக்ஷே தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும், கட்டாயமாக தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்று தான் நம்புவதாகவும் சொன்னார். இலங்கையின் ஹார்ட்லைன் அரசியல்வாதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டேன். அவர்களைச் சரிக்கட்டுவது ராஜபக்ஷேயின் பிரச்னை என்றார்.
அதுதான் பிரச்னை. எந்த சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களின் நலன் பற்றி சிந்திப்பதே இல்லை. புலிகளை ஒழிக்கவேண்டும் என்பது ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருந்தது. ஒழித்தாகிவிட்டது. அடுத்த சில நாள்கள் விடுமுறை. சில மாதங்களுக்குப் பின், வேண்டுமென்றால் ஏதாவது கமிட்டி அமைத்து, சில பல வட்டமேஜை மாநாடுகளை நடத்தி, பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம்.
இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலை ஆயாசத்தைத் தருகிறது. எந்த விதத்திலும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை மாற்றமுடியாத நிலையில் வாக்காளர்கள் இருப்பது வருத்தத்துக்கு உரியது.
நிவாரணப் பொருள்களை ஏந்திவந்த வணங்காமண் கப்பல் இலங்கையிலிருந்து துரத்தப்படுகிறது. அது சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, அங்கிருந்தும் துரத்தப்படுகிறது. கப்பல்துறை அமைச்சர் வாசன், இலங்கையை எப்படியாவது அந்தப் பொருள்களை ஏற்றுக்கொள்ளவைப்போம் என்கிறார். ஆனால் இலங்கை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. இந்த எளிதான விஷயத்தில்கூட இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும்போது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற இந்தியாவால் என்ன செய்துவிட முடியும்?
முடியலாம். அதற்கு இந்தியத் தலைமையிடம் ஒரு சீரிய மாற்றம் வரவேண்டும். அது குற்ற உணர்ச்சியினால் விளைந்ததாகவும் இருக்கலாம். இலங்கைத் தமிழர்களின் ரத்தம் தம் கையில் என்ற குற்ற உணர்ச்சி.
அது ஒன்றால் மட்டும்தான் இந்தியத் தரப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தங்களது போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. திமுக தொண்டர்களும் தமது கட்சியின் தலைமைக்கு நெருக்கடி தந்து இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும்.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
12 hours ago