11 மே 2009 அன்று நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க்கில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகத்தைப் பற்றிப் பேச வந்திருந்தார். கூட்டமான கூட்டம். 700 பேருக்கு மேல் அந்தப் புத்தகக் கடையில் அனைத்து மூலைகளிலும் உட்கார்ந்திருந்தனர். ஏசி திண்டாடிப் போய்விட்டது. காற்றாடிகள் போதவில்லை. மக்கள் வியர்வையில் புழுங்கினர்.
ஆர்ச்சரைப் பார்க்க வந்த கூட்டத்தில் பெரும்பாலானவை இளைஞர்கள்தான். கல்லூரியில் படிக்கும் ஆண்களும் பெண்களும். 20 வயதைத் தொடாத இளைஞர்கள் 50% மேல் இருந்தனர். தமிழ்ப் பதிப்பாளராக இதையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது.
தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பார்க்க இப்படி நூற்றுக்கணக்கில் கூட்டம் வரும் நாள் எந்நாளோ என்று நினைத்துக்கொண்டேன்.
ஆர்ச்சர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக சில காலம் இருந்திருக்கிறார். (மூன்று ஆண்டுகள் ஜெயிலிலும் இருந்திருக்கிறார் என்பது வேறு விஷயம்! அவர் ஜெயிலுக்குப் போன கதையே சுவாரசியமானது! ஆனால் மனிதர் கில்லாடி. ஜெயிலுக்கு போன அனுபவத்தை வைத்து மூன்று தொகுதி non-fiction புத்தகம் ஒன்றும் ஒரு நாவல் ஒன்றும் எழுதிவிட்டார்!) ஒரு தேர்ந்த அரசியல்வாதியான ஆர்ச்சருக்கு சென்னை மக்களை பேச்சால் வசியப்படுத்துவது எப்படி என்று நன்கு தெரிந்திருந்தது.
தனது பல புத்தகங்களையும் பற்றிப் பேசியவர், எதிர்பார்த்ததுபோல, Paths of Glory புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். அதை எழுதக் காரணம் என்ன என்பதில் தொடங்கி, கதையின் முக்கியமான சில பகுதிகளைப் பற்றிப் பேசினார். பிறகு தான் அடுத்து எழுத இருக்கும் சிறுகதைத் தொகுதியின் 12 கதைகளில் இருந்து ஒரு கதையை மட்டும் சொன்னார். (அதை முன் வரிசையில் இருந்த
யாரோ செல்பேசியில் பிடித்து யூட்யூபில் போட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டார் மறுநாள்.)
ஆர்ச்சரின் பலமே அவரது கதை சொல்லல். அவரது எழுத்தில்கூட அவர் நம் அருகே நின்று நமக்குக் கதை சொல்வது போலவே இருக்கும். அவருக்குக் கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது என்று யாரோ கேட்ட கேள்விக்கு, Twelve Red Herrings தொகுப்பிலிருந்து ஒரு கதையைச் சொன்னார். அந்தக் கதை எப்படிக் கிடைத்தது என்ற கதையையும் சொன்னார்.
சுமார் 7.30-க்கு ஆரம்பித்த நிகழ்ச்சி, இரவு 11.00 மணி வரை சென்றதாம். பல கேள்விகளுக்கும் பதில் சொன்ன ஆர்ச்சர், வரிசையில் இருந்த அனைவருக்கும் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.
அடுத்த நாள் (12 மே 2009), சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் ஆர்ச்சருடன் இரவு உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் இரவு பேசியதிலிருந்து மிகக் குறைவான மாற்றங்களே இருந்தன. ஆனாலும் மிக சுவாரசியமான புதுத் தகவல்கள் கிடைத்தன.
Not a penny more, not a penny less - புத்தகம் அவர் எழுதிய முதல் நாவல். அது ஹார்ட்பவுண்ட் 3,000 பிரதிகள் அடிக்கப்பட்டது. அதில் 117 பிரதிகள் இந்தியாவில் விற்றதாம்! அடுத்து பேப்பர்பேக்கில் 25,000 பிரதிகள் அடித்தார்களாம். முதல் மாதத்திலேயே விற்றுவிட்டது. உடனே தன் பதிப்பாளரிடம் சென்று கேட்டதில் அவர்கள் இந்தப் புத்தகத்தை மேற்க்ண்டு அச்சிடப்போவதில்லை என்றார்களாம். இவர் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதற்காக அடுத்து 25,000 பிரதிகள் அடித்தார்கள். மீண்டும் ஒரே மாதத்தில் தீர்ந்துவிட்டது. மீண்டும் கெஞ்சல், மீண்டும் 25,000 பிரதிகள். இப்படி ஒவ்வொரு மாதமும் கெஞ்சிக் கெஞ்சியே அவர்களை புதிதாகப் பிரதிகள் அடிக்கச் சொன்னாராம். இன்றுவரை 2.5 கோடி பிரதிகளுக்கு மேல் இந்தப் புத்தகம் விற்றுள்ளதாம்!
அடுத்து, இவர் எழுதிய கேன் அண்ட் ஏபல் புத்தகம் பற்றிச் சொன்னார். இவர் யார் என்றே தெரியாமல், அமெரிக்காவில் சைமன் அண்ட் ஷுஸ்டர் 3 மில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்க உரிமையை வாங்கினார்கள். புத்தகம் விலை $30. பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதல் 15-க்குள் வந்தால், புத்தகத்தின் விலை பாதியாகக் குறைக்கப்படும் - $15 என்று ஆகும். அப்பொது விற்பனை மேலும் அதிகரிக்குமாம். (இது என்ன கணக்கு என்று தெரியவில்லை!)
அங்குள்ள தொலைக்காட்சிகளில் இவர் முகம் காண்பித்து, கேன் அண்ட் ஏபல் என்ற பெயரைச் சொன்னால், புத்தகம் 15-க்குள் வர வாய்ப்பு உண்டு. இவரை கன்கார்ட் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நியூ யார்க்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உட்கார வைக்கிறார்கள். ஆறு நிமிட ஸ்லாட். அதில் முதல் இரண்டு நிமிடங்களில் ஜிம்மி கார்ட்டரின் சகோதரர் பில்லி கார்ட்டர் தான் உருவாக்கும் ஒரு பியர் பானத்தை அறிமுகம் செய்கிறார். அடுத்த இரண்டு நிமிடங்கள் மிக்கி மவுஸ் என்றார்... ஒருவேளை டிஸ்னி ஆசாமிகள் மிக்கி மவுஸ் பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்களா என்ன என்று எனக்குப் புரியவில்லை. கடைசி இரண்டு நிமிடம் ஆர்ச்சர் வரவேண்டும்.
சைமன் அண்ட் ஷுஸ்டர் ஆசாமிகள், ஆர்ச்சரிடம் கெஞ்சிக் கூத்தாடி, இரண்டு நிமிடத்துக்குள் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ‘கேன் அண்ட் ஏபல்’ என்பதைச் சொல்லிவிடுமாறு கேட்டுகொள்கிறார்கள். ஆனால் ஆர்ச்சருக்கு முன் இருக்கும் இருவரும் மொத்தமாக 5 நிமிடங்களை எடுத்துக்கொள்ள, ஆர்ச்சர் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நிமிடத்தில் கன்கார்ட் விமானத்தைப் பற்றிப் புகழ, நேரம் போய்விடுகிறது. புத்தகப் பெயரைச் சொல்லமுடியவில்லை.
அடுத்து சிகாகோ தொலைக்காட்சி. அங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தைப் பார்க்கிறார். உடனே உதவியாளர் ஒருவரிடம், “ஏன் இப்படி மதம் தொடர்பான புத்தகங்களைக் கொண்டுவந்து என்னைக் கழுத்தறுக்கிறீர்கள்” என்று கடுப்படுக்கிறார். அவர் புத்தகத்தைப் படிக்கவேயில்லை என்பது ஆச்சரியம் அல்ல. ஆனால் அவருக்கு இது ஒரு நாவல் என்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட மோசம், அதே நிகழ்ச்சியில் எவரெஸ்ட்மீது ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் பேட்டியும் நடக்க, ஆர்ச்சருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை.
அடுத்து கடைசி வாய்ப்பு. சான் ஃபிரான்சிஸ்கோவில் தொலைக்காட்சியில். சைமன் அண்ட் ஷுஸ்டர் பதிப்பாளர்களுக்கு அழுகையே வந்துவிடும் போல் உள்ளது. “அய்யா, இங்காவது கேன் அண்ட் ஏபல் என்பதை உச்சரித்துவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். நிகழ்ச்சி நடத்துபவர் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே சொல்கிறார்: “நான் கடந்த இரு தினங்களாக ஒரு புத்தகத்தைப் படித்து வருகிறேன். கேன் அண்ட் ஏபல். என்னால் தூங்க முடியவில்லை. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வைக்கவே முடியவில்லை.”
அந்த வாரத்துக்குள் புத்தகம் பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதலாவது இடம். அதன்பின் ஆர்ச்சர் திரும்பிப் பார்க்கவேயில்லை!
அந்த மூன்றாவது நிகழ்ச்சியிலும் ஆர்ச்சர் வாயிலிருந்து புத்தகத்தின் பெயர் வரவில்லை. ஆனால் லாண்ட்மார்க்கிலும் சரி, தாஜ் கோரமாண்டலிலும் சரி, ஆர்ச்சரின் வாயில் Paths of Glory நொடிக்கு ஒருதரம் வராமல் இல்லை.
நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவு ஆரம்பிக்கிறது. நான் சூப்பை எடுத்துக்கொண்டு வந்து எஸ்.முத்தையாவின் அருகில் உட்காரும்போது ஆர்ச்சரின் உதவியாளரும் வெஸ்ட்லாண்டின் தலைமை நிர்வாகியும் என்னையும் பவித்ரா ஸ்ரீனிவாசனையும் அழைக்கிறார்கள். ஆர்ச்சர் அன்புடன் கைகொடுத்து, தமிழ் மொழிமாற்றம் பற்றிப் பேசுகிறார். அடுத்து எந்தப் புத்தகம் என்று விசாரிக்கிறார். தனது அனைத்துப் புத்தகங்களும் தமிழில் வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. அவருடன் சிறிது பேசிவிட்டு நகரும்போது, அவர் தன் பக்கத்தில் இருக்கும் சிடிபேங்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியிடம் சொல்கிறார்: “அவர்கள் என் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள். என் பதிப்பாளர் இந்திய மொழிகள் பலவற்றிலும் என் புத்தகங்களைக் கொண்டுவரப்போகிறார்.”
நான் மீண்டும் சாப்பாட்டு வரிசையில் சேர்ந்துகொள்கிறேன்.