இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களிலும் மிக சுவாரசியமானது நேற்று பூனாவில் நடந்த ஆட்டம்தான். இங்குதான் இலங்கை அணிக்கும் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
முதலில் டாஸ். நேற்று திராவிட் டாஸில் ஜெயித்ததும் பந்து வீசத் தீர்மானித்தார். தன் அணியின் பேட்டிங் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் கேப்டன் மட்டுமே இதைச் செய்வார். கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார். பூனா, மொஹாலி அல்ல. இங்கு பந்து வீச்சாளர்களுக்கு என்று பிரமாதமான ஆதரவு ஏதும் கிடையாது. காலை நேரம் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகலாம். அவ்வளவே. அதையும் எதிரணியினரால் எதிர்கொள்ளமுடியும். எதிரணி முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் பெற்றால், தொடர்ந்து ஆடும் அணி திண்டாட வேண்டியிருக்கும். ஆனால் திராவிட் தன் அணியின் இளம் மட்டையாளர்கள் மீது பயங்கர நம்பிக்கை வைத்திருந்தார், அதனால் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.
சென்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக் சரியாகப் பந்துவீசாததால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்தை விளையாடக் கொண்டுவந்திருந்தார். சூப்பர் சப்ஸ்டிட்யூட்டாக சுரேஷ் ரெய்னா - இவர் ஓர் ஆல்ரவுண்டர். ஆனாலும் பவுலிங்கை விட, பேட்டிங்தான் இவரது வலுவான அம்சம். திராவிட் இவரை சூப்பர் சப்பாக நியமித்திருந்தது, தான் டாஸ் வென்றால் நிச்சயம் பந்துவீசப் போகிறோம் என்பதை வெகு முன்னதாகவே முடிவு செய்துவிட்டிருந்தார் என்பதைக் காண்பித்தது.
இலங்கையின் மஹிலா ஜெயவர்தனேயின் திருமணம் நேற்று நடந்தது! அதனால் அவரால் விளையாட முடியவில்லை. இது அவரது சொந்த விஷயம்... ஆனாலும் சரியானதில்லை. இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தின் தேதிகள் தெரியும். திருமணத்தை முன்னோ, பின்னோ வைத்துக்கொண்டிருக்கலாம். இது முக்கியமான ஆட்டமும் கூட. இதில் வென்றால், போட்டித்தொடரை ஜெயிக்க வாய்ப்புள்ளது. தோற்றாலோ, இத்துடன் தொடரும் போய்விடும்! எப்படி அணியின் நிர்வாகம் ஜெயவர்தனேயை அனுமதித்தார்கள் என்று புரியவில்லை. ஜெயவர்தனேக்கு பதில் உபுல் தரங்கா அணிக்கு வந்திருந்தார். சந்தனாவுக்கு பதில் நுவான் சோய்ஸா.
திராவிட், பதான் பந்து வீச்சுக்கு மூன்று ஸ்லிப்கள் வைத்திருந்தார். அல்லது இரண்டு ஸ்லிப்கள், ஒரு கல்லி. இதெல்லாம் சும்மா, எதிரணிக்கு பயங்காட்ட. சங்கக்கார, ஜெயசூரியா இருவரும் வழக்கம் போல அதிரடியாகவே ரன்கள் பெற ஆரம்பித்தனர். பதான் தொடக்கத்தில் சிறப்பாக எதையும் செய்யவில்லை, ஆனால் அகர்கர் எடுத்த எடுப்பிலேயே நன்றாக வீச ஆரம்பித்தார். சென்ற ஆட்டத்தில் ஜெயசூரியாவை எப்படி அவுட்டாக்கினாரோ அதே மாதிரி இடது கை ஆட்டக்காரர்களுக்கு வீசுவது என்று முடிவு செய்திருந்தார். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து மிடில் ஸ்டம்பை நோக்கி உள்ளே வளைந்து வருமாறு பந்து. சங்கக்கார, ஜெயசூரியா இருவருமே இதுபோன்ற பந்துகளை புல் செய்து விளையாட ஆசைப்படுபவர்கள். பந்தின் திசையைக் கணிக்கத் தவறினால் எல்.பி.டபிள்யூ நிச்சயம். பந்தை முழுவதுமாக விட்டால் நேராகவோ, உள்விளிம்பில் பட்டோ பவுல்ட் ஆகலாம். அதுதான் நடந்தது.
முதலில் சங்கக்கார, பின் ஜெயசூரியா என்று அணியின் நான்காவது, ஆறாவது ஓவர்களில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதில் ஜெயசூரியா விக்கெட் மிகவும் முக்கியம். ஏனெனில் அவர் அவுட்டாவதற்கு நான்கு பந்துகள் முன்பு திராவிட் ஸ்லிப்பில் கேட்ச் விட்டார். அடுத்த பந்தில் ஜெயசூரியா ஒரு நான்கை அடித்தார். அடுத்து ஒரு இரண்டு. நிலைமை மோசமாகாமல் அடுத்த இரண்டு பந்துகளிலேயே எல்.பி.டபிள்யூ.
இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பதால் தான் விளையாட வரவில்லை. புதியவர் தரங்கா, திலகரத்ன தில்ஷன் இருவரும் அணியை சற்றே தூக்கி நிறுத்த முனைந்தனர். இதைத்தான் சரியான நேரம் என்று கருதி திராவிட் பதானுக்கு பதில் ஸ்ரீசந்தைப் பந்து வீச அழைத்தார். அவரும் முதல் மூன்று ஓவர்கள் மிகவும் நன்றாக வீசினார். தன் இரண்டாவது ஓவரில் ஒரு பவுன்சர் போட, அதை தரங்கா தூக்கி அடித்து ஃபைன் லெக்கில் நின்ற அகர்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து அட்டபட்டு விளையாட வந்தார்.
அட்டபட்டு, தில்ஷன் இருவருமே நன்றாக விளையாடினார்கள். தில்ஷன் முதலில் மிகவும் தடுமாறினார். ஆனால் பின்னர் வேகமாக ரன்களைப் பெறத்தொடங்கினார். 21 ஓவர்கள் வரை திராவிட் ஹர்பஜன் சிங்கைப் பந்து வீச்சுக்குக் கொண்டுவரவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மிதவேகப்பந்து வீச்சாளர் ஜெய் பிரகாஷ் யாதவ் ஆகியோரே பந்து வீசினர். சென்ற ஆட்டங்களில் மிகவும் துல்லியமாகப் பந்துவீசிய யாதவ் நேற்று அவ்வளவு துல்லியமாக வீசவில்லை. இதனால் தில்ஷன் ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. அட்டபட்டுவும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்தார்.
ஹர்பஜன் தொடர்ச்சியாகத் தன் பத்து ஓவர்களையும் வீசினார். தன் தூஸ்ரா மூலம் தில்ஷனை அவுட் செய்தார். தன் 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்தார். 40 ஓவர்கள் முடிந்தபோது இலங்கை 198/4 என்ற கணக்கில் இருந்தது. அட்டபட்டு 68இலும், ஆர்னால்ட் 14இலும் இருந்தனர். அடுத்த பத்து ஓவர்களில் 70-80 ரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் பதானும், மிக முக்கியமாக அகர்கரும் அற்புதமாகப் பந்து வீசினர்.
பதான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (43வது ஓவர்), ஒரு யார்க்கர் வீசி ஆர்னால்டை பவுல்ட் செய்தார். அகர்கர் தான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (46வது ஓவர்) மஹரூஃபை ஒரு ஸ்லோ புல் டாஸ் மூலம் பவுல்ட் செய்தார். அதற்கு அடுத்த ஓவரில் சேவாக் அட்டபட்டுவை அவுட்டாக்கினார். தவறே செய்யாமல் சென்று கொண்டிருந்த அட்டபட்டு ஓங்கி அடித்த ஒரு பந்தை சேவாக் வலது கையை வீசிப் பிடித்தார். இது 'மாட்டும், இல்லாவிட்டால் விரலை உடைக்கும்' போன்ற அடி. பந்து நடுக்கையில் மாட்டியிராவிட்டால் விரலை உடைத்திருக்கும். முழு அதிர்ஷ்டம். இப்படி சடசடவென மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் முரளி ஒரு நான்கைப் பெற்றபின் அகர்கரின் யார்க்கரில் பவுல்ட் ஆனார். ஐம்பதாவது ஓவரில் தன் பவுலிங்கின் ஃபாலோ த்ரூவில் சோய்ஸாவை ரன் அவுட் செய்த அகர்கர், அதற்கடுத்த பந்திலேயே வாஸை விக்கெட் கீப்பர் தோனி வழியாக கேட்ச் பிடிக்கவைத்து அவுட்டாக்கி தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். 9.5-1-44-5. அத்துடன் ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச். இலங்கை 261 ஆல் அவுட், அட்டபட்டு 87, தில்ஷன் 52, ஆர்னால்ட் 32.
-*-
262 எடுப்பது இந்த இந்திய அணிக்குச் சாத்தியமானதுதான் என்று நினைத்தோம். ஆனால் முதல் மூன்று ஓவர்களில் வாஸ், ஃபெர்னாண்டோ இருவருமே மிகவும் நன்றாகப் பந்து வீசினார்கள். முதல் இரண்டு ஓவர்களும் மெய்டன். மூன்றாவது ஓவரில் ஒரு நோ பால், அவ்வளவே. சேவாக், டெண்டுல்கர் இருவருக்குமே டைமிங் சரியாக வரவில்லை.
நான்காவது ஓவரில் டெண்டுல்கர் எப்படியாவது ரன்களைப் பெற வேண்டும் என்று ஆக்ரோஷமாக விளையாடினார். முதல் பந்து சற்றே அளவு குறைவாக வந்தது, அதை கவர் திசையில் அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். ஆனால் அடுத்து இறங்கி வந்து அடிக்கப்போய் ஒரு பந்து விளிம்பில் பட்டு தர்ட்மேன் திசையில் சிக்ஸ் ஆனது! மோசமான ஷாட். அடுத்த ஓவரில் சேவாக் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே நல்ல ஷாட்கள். ஆனால் அதே ஓவரில் மற்றுமொரு வானளாவிய ஷாட் அடித்தார். முதலில் சிக்ஸ் போல இருந்தது, ஆனால் பந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டுக்கு உள்ளேயே விழுந்தது. முரளிதரன் ஓடிவந்து அதைப் பிடித்தார், ஆனால் பந்து விரலில் பட்டு நழுவியது. சேவாகுக்கு அதிர்ஷ்டம்.
அதற்கடுத்த ஓவர் டெண்டுல்கர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஃபெர்னாண்டோவிடம் ரன்களைப் பெற முடியவில்லை. டைமிங் சரியாக வரவில்லை. டெண்டுல்கர் முகத்தில் ஒரு பதற்றம். இறங்கி இறங்கி வந்து அடிக்க வந்தார். ஆனால் மட்டையில் மாட்டவில்லை. தொடர்ந்த அடுத்த ஓவரில் வாஸ் பந்தை இறங்கி அடிக்கப்போய், முடியாமல், பவுல்ட் ஆனார். அந்தப் பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து வீசிய கோணத்தில் வெளியே போகாமல் லேசாக இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்ப் மேல் பாகத்தில் விழுந்து ஸ்டம்பை உருளச் செய்தது.
திராவிட் நான்காவது மேட்சில் நான்காவதாக வேறொருவரை மூன்றாம் இடத்துக்கு அனுப்பினார். கடந்த மூன்று மேட்ச்களிலும் அவ்வளவாக நன்றாக விளையாடாத யுவராஜ் சிங். இவர் வந்தவுடனேயே ஃபெர்னாண்டோவின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே பாயிண்ட் திசையில். ஆனால் அடுத்த நுவான் சோய்ஸா ஓவரில் சற்றே மேலாக பாயிண்ட் திசையில் அடித்து தில்ஷனால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இந்த முறை மூன்றாம் இடத்துக்கான சோதனை வெற்றி பெறவில்லை. திராவிட் உள்ளே வந்தார்.
முன்னெல்லாம் திராவிட் பேட்டிங் செய்ய வந்தால் ஒரு இருபது பந்துகளையாவது வீணாக்குவார். முதல் இருபது பந்துகளில் 3-4 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த முதல் பந்து முதற்கொண்டே ரன்கள் பெறுகிறார். மஹரூஃப் வீசிய முதல் ஓவரில் திராவிட், சேவாக் இருவருமே அடித்து 15 ரன்களைப் பெற்றனர். அடுத்த ஓவரில் சோய்ஸாவின் பந்தில் சேவாக் விக்கெட் கீப்பர் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். இதுவும் நழுவ விடப்பட்டது. ஆக சேவாகுக்கு இரண்டு "எக்ஸ்ட்ரா" கிச்சான்கள். அடுத்த பந்திலேயே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நான்கு. இதற்குப் பிறகு திராவிட், சேவாக் இருவருமே மிக நன்றாக விளையாடி பந்துக்கு ஒரு ரன் விதம் ரன்கள் பெற்றனர். இந்திய அணியின் ரன்ரேட் வேகமாக ஏறத்தொடங்கியது.
அட்டபட்டு அடுத்தடுத்து பவர்பிளே-2, பவர்பிளே-3 இரண்டையும் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா 110/2 என்ற கணக்கில் இருந்தது. திராவிட் உள்ளே வந்தபோது அணியின் எண்ணிக்கை 34/2, 8.1 ஓவர்களில். அடுத்த 11 ஓவர்களில் 76 ரன்கள் = 6.9 ரன்கள், ஓவருக்கு.
முரளிக்கு பவர்பிளே நடக்கும்போது பந்துவீச விருப்பமில்லையாம். இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தால் இதையெல்லாம் செய்யலாம். ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை. 20 ஓவர்கள் விட்டுவிட்டால் இந்தியா நல்ல நிலையில் இருக்கும். மேலும் சேவாக், திராவிட் இருவருமே முரளியை அவ்வளவு சரியாக விளையாடுவதில்லை. எனவே முரளி வந்து கொஞ்சம் ரன்கள் கொடுத்தாலும் இருவரையும் அவுட்டாக்கியிருந்தால் இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். இருபதாவது ஓவரில்தான் முரளியை அழைத்தார் அட்டபட்டு. தன் முதல் ஓவரிலேயே ஒரு தூஸ்ரா மூலம் சேவாகை அவுட்டாக்கினார் முரளி. சேவாக், இரண்டு வாய்ப்புகளுடன், 48 ரன்கள் பெற்றிருந்தார்.
அடுத்து தோனி வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வேணுகோபால ராவ் வந்தார். இவர் முரளியை நன்றாக விளையாடுவார் என்பதால் இருக்கலாம். தோனியைத் தக்க வைத்துக்கொண்டதும் பின்னால் உபயோகமாக இருந்தது. வேணுகோபால ராவ் நன்றாகவே விளையாடினார். ஜெய்ப்பூர் ஆட்டத்தில் விளையாடியதை விட, இங்கு திராவிடின் அரவணைப்பில் அருமையாக விளையாடினார். முரளியை முற்றிலுமாக மழுங்கடித்தார். மஹரூஃபின் ஓர் ஓவரில் ஒரு ஆறும், அடுத்த அவரது ஓவரில் மூன்று நான்குகளும் அடித்தார்.
திராவிட் வேகப்பந்து வீச்சாளர்களையும் சரி, முரளியையும் சரி, கால் திசையிலேயே அடித்து ரன்கள் பெற்றார். மிட்விக்கெட் திசையில் அவர் அடித்த மூன்று பவுண்டரிகளும் அற்புதமானவை. ஒரு பிரமாதமான ஸ்டிரெயிட் டிரைவ். தனது 51வது பந்தில் தன் அரை சதத்தைக் கடந்தார்.
அடுத்து சில ஓவர்களில் நிலைமை முழுவதுமாக மாறியது. முதலில் வேணுகோபால ராவ் ஒரு தூஸ்ராவை ஸ்டியர் செய்யப்போய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். மூன்று ஓவர்கள் கழித்து திராவிட் ஃபெர்னாண்டோவ புல் செய்யப்போய் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே பதான் ரன்கள் ஏதும் பெறாமல் முரளியின் ஆஃப் பிரேக்கில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். திடீரென இந்தியா 35வது ஓவரில் 180/6.
ஜெய்ப்பூர் நாயகன் மஹேந்திர சிங் தோனியும், இதுவரை இந்தத் தொடரில் பேட்டிங் செய்திராத சுரேஷ் ரெய்னாவும் விளையாடுகிறார்கள். இன்னமும் 82 ரன்கள் வேண்டும். 92 பந்துகள் உள்ளன.
தோனி ஜெய்ப்பூரில் விளையாடியது மாதிரி இங்கு விளையாடவில்லை. மிகவும் நிதானமாக ஒவ்வொரு ரன்களாக சேர்த்தார். ரிஸ்க் எதையும் எடுக்கவில்லை. ரெய்னா தோனியை விட வேகமாக ரன்களை சேர்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தேவையான ரன்ரேட் அதிகரித்தது. ஆனால் இரண்டு இளைஞர்களும் சிறிதும் பயப்படவில்லை. பழைய இந்தியாவாக இருந்தால் பதற்றத்தாலேயே அனைவரும் அவுட்டாகி ஆட்டத்தை 40 ஓவர்களில் தோற்றிருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியர்களைப் போல விளையாடினார்கள் இருவரும். 40 ஓவர்கள் முடியும்போது இந்தியா 207/6. 42வது ஓவர் முடியும்போது 215/6. அடுத்த 48 பந்துகளில் 47 ரன்கள் தேவை.
43வது ஓவரில் இங்கும் அங்கும் தட்டிவிட்டு வேக வேகமாக ரன்களைப் பெற்றனர் இருவரும். முதல் ஐந்து பந்துகளில் 1, 1, 3, 2, 1. கடைசி பந்தில் தோனி தன் முதல் பவுண்டரியைப் பெற்றார். 43வது ஓவர் முடியும்போது இந்தியா 227/6. 44வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தன, ரெய்னாவுக்கு 10 ரன்கள் அதில். இந்தியா 238/6. அட்டபட்டுவுக்கு இலங்கை தோற்பது உறுதியாகி விட்டது. முரளிதரனைக் கொண்டுவந்தார். ஆனால் சிறிதும் ரிஸ்க் எடுக்காமல் ரெய்னாவும் தோனியும் அந்த ஓவரில் 8 ரன்களைப் பெற்றனர். (2,1,1,1,2,1). இப்பொழுது வெற்றி பெற வெறும் 16 ரன்களே பாக்கி.
இப்பொழுதுதான் தோனி தனது கவனமான ஆட்டத்தை மாற்றி அதிரடி ஆட்டத்துக்குத் தாவினார். ஆர்னால்ட் வீசிய ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2, 2 ரன்கள். அடுத்த பந்தில் முதன்முறையாக தோனி லாங் ஆன் மேலாக அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். இப்பொழுது ஆறு ரன்கள்தான் பாக்கி. அதே மாதிரியான பந்து, அதே மாதிரியான ஷாட், லாங் ஆன் மேல் இதுவும் சிக்ஸ். நான்கே பந்துகளில் 16 ரன்கள், இந்தியாவுக்கு வெற்றி.
அகர்கர் ஆட்ட நாயகன்.
இந்த இன்னிங்ஸில் திராவிட், வேணுகோபால ராவ், தோனி, ரெய்னா நால்வருமே நன்றாக பேட்டிங் செய்தனர். 48 ரன்கள் பெற்றிருந்தாலும் சேவாகின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது தோனியின் பயமின்மை, ஆட்டத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல தன் பேட்டிங்கை மாற்றிக்கொண்டது. ரெய்னா - நிச்சயமாக இவருக்கு வாய்ப்புகள் தரவேண்டும். இது நல்லதொரு நியூக்ளியஸ். இதை இப்படியே வலுவாக்கி உலகக்கோப்பை வரை கொண்டுசெல்லவேண்டும்.
இந்தத் தொடரில் இதுவரை திருப்திகரமாக விளையாடாதவர்கள் என்றால் சேவாக், யுவராஜ் சிங். ஜெய் பிரகாஷ் யாதவ் - ஆல் ரவுண்டர் என்றாலும் இதுவரையில் மனதைக் கவரும் வண்ணம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை உள்ளே கொண்டுவரலாம். ஜெய் பிரகாஷ் யாதவை சூப்பர் சப் என்று நியமிக்கலாம். அடுத்த ஆட்டத்தில் வேணுகோபால ராவை 3-ம் எண் உள்ள இடத்தில் கொண்டுவரலாம்.
ஸ்கோர்கார்ட்