Monday, September 01, 2025

அமெரிக்க இறக்குமதி வரி


அமெரிக்காவில் சென்ற வாரம் முதல் இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரி (tariff) 50% ஆக ஆகிறது. இதில் 25% இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்பதற்கான அபராதம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அபராதம் இல்லை என்றாலுமே 25% இறக்குமதி வரி, இந்திய ஏற்றுமதிகளை வெகுவாகப் பாதித்திருக்கும். ஆனால் தற்போதைய 50% இறக்குமதி வரி, பல இந்திய ஏற்றுமதிகளை முற்றிலுமாக நிறுத்திவிடும். 

முக்கியமாக ஜவுளி, தோல் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்படும். இவை இரண்டுமே தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றதிலிருந்தே இறக்குமதி வரிமீது கவனம் செலுத்தத் தொடங்கினார். அவருடைய பொருளாதார ஆலோசகரான பீட்டர் நவாரோ போன்றோரின் வழிகாட்டுதலில், துரதிர்ஷ்டவசமாக, சரியான புரிதலின்றி அனைத்து நாடுகள்மீதும் சகட்டுமேனிக்கு இறக்குமதி வரிகளை நிர்ணயிக்கத் தொடங்கினார். அப்படிச் செய்வதையுமேகூட ஒரு காட்சி வித்தையாக ஆக்கினார்.


ஏற்றுமதி-இறக்குமதி வரிகளை வர்த்தகம் தாண்டிய காரணங்களுக்காகப் பயன்படுத்துவது அபத்தமானது. இந்த வரிகள் இரு நாட்டு மக்களையும் பாதிக்கும். விற்போருக்கும் பிரச்னை, வாங்குவோருக்கும் பிரச்னை. ஆனால் டிரம்ப் இதைப் பற்றிய புரிதலின்றியே பேசுகிறார். உண்மையில் இறக்குமதி வரியைக் கட்டுபவர்கள் அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க மக்களுமே. இதன் காரணமாக விலை மிக அதிகமாக ஆகிவிட்டால், அமெரிக்கர்கள் இறக்குமதியை நிறுத்திவிடலாம் அல்லது ஏற்றுமதியாளர்களிடம் விலையைக் குறைக்கச் சொல்லலாம். இது ஏற்றுமதி செய்வோரை பாதிக்கும்.


இந்தியாவின் வர்த்தகம் டிரம்பின் அபத்தச் செயல்களால் ஓரளவு பாதிக்கப்படும். இந்திய மொத்த உற்பத்தியில் 0.4-0.5% குறையக்கூடும் என்று கணிக்கிறார்கள்.


அடிப்படையில் அமெரிக்கா வேண்டுவது இந்தியாவின் விவசாயச் சந்தையின் ஓர் இடத்தை. இதை இந்தியா தர மறுக்கிறது. இந்தியாவின் விவசாயத் தொழிலில் பங்கெடுக்கும் பெரும்பாலானோர், பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவர்கள். அவர்களால் அமெரிக்கப் பெரு நிறுவனங்களுடனோ அமெரிக்கப் பெரு விவசாயிகளுடனோ போட்டி போட முடியாது. தவிர அமெரிக்க விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாராளமாகப் புழங்குகின்றன. இந்தியா அவற்றை ஏற்க மறுக்கிறது.


இந்தியா தன் விவசாயச் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டால், ஆட்சியில் இருக்கும் கட்சிக்குப் பெருத்த ஆபத்து ஏற்படும். மோதியோ பாஜகவோ ஏன் காங்கிரஸோ இந்தச் செயலை ஒருபோதும் செய்யா.


இப்போதைக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்பின் இறக்குமதி வரிமீது விசாரணைகள் நடந்துவருகின்றன. விரைவில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு செல்லவிருக்கிறது. அதில் தீர்ப்பு வரும்வரை இந்தியா பொறுத்திருக்கத்தான் வேண்டும்.


இந்திய நிறுவனங்கள், ஒரு மாற்றாக, பிற நாடுகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 100 என்பதைத் தொட்டால் (15% depreciation) அதுவும் இந்திய ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக உதவும்.

Wednesday, August 27, 2025

விநாயக சதுர்த்தி வாழ்த்து

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சமூக, அரசியல் மாற்றங்களில் அடிபடும் முதன்மையான இந்துப் பண்டிகை. கிட்டத்தட்ட எல்லா இந்துப் பண்டிகைகளுமே தமிழக அரசியல் சிக்கி உழன்றாலும், விநாயக சதுர்த்திதான் இதில் அதிகம் மாட்டுவது.


(1) விநாயகர் தமிழ்க்கடவுள் அல்லர்; அவர் வாதாபியிலிருந்து கடத்தி வரப்பட்டவர்


இதுதான் முதல் கரடி. இதை மறுத்து நாம் எவ்வளவு எழுதினாலும் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், கூச்சமே இன்றி ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கரடி வெளியே அவிழ்த்துவிடப்படும்.


தமிழ்நாட்டின் மிகப் பழமையான கற்சிற்பங்கள் விநாயகர் சிற்பங்களே. குன்றைக் குடைவித்து உருவாக்கப்பட்ட குகைக்கோவில்களில் பாண்டியர்கள் விநாயகரைச் செதுக்காமல் இருந்ததே இல்லை. சுமார் 5, 6-ம் நூற்றாண்டு முதற்கொண்டே இந்தச் சிற்பங்கள் கிடைத்துவந்திருக்கின்றன. அதற்கும் முந்தைய காலகட்ட விநாயகர், விழுப்புரம் எமதண்டீசுவரத்தில் தனிக் கற்சிற்பமாகக் கிடைத்துள்ளது. பிற்கால திராவிடக் கற்பனைகளை முன்கூட்டியே முறியடிக்கும் விதமாக இந்தக் கற்சிற்பத்தில் எழுத்தும் அமைந்துபோக, எழுத்தமைதி கொண்டு காலத்தையும் நிர்ணயிக்கமுடிகிறது.


விநாயகர் ஐந்திணைகளில் எத்திணைக்கும் கடவுள் அல்லர்; சிவனும் அப்படித்தான். எனவே தமிழ்க் கடவுளாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கவேண்டுமென்றால் திணைக்குள் திணிக்கப்படவேண்டும் என்றெல்லாம் இல்லை. இவர்களெல்லாம் என்னவோ தினமும் இந்திரனையும் வருணனையும் வணங்கிக்கொண்டிருப்பதுபோல் பேசுவார்கள்.


(2) புத்தர் தலையை வெட்டி அங்கே யானைத் தலையைப் பொருத்தினார்கள்


இது அயோத்திதாச புருடா வகை. வாதாபிக் கரடிக்கு அடுத்து சமீப காலத்தில் அதிகமாகப் பரப்பப்படும் கரடி இதுதான். அரசமரத்தடியில் புத்தர் சிலை இருந்தது; பௌத்தத்தை அழிக்க, புத்தர் தலையை வெட்டி, அப்படியே யானைத் தலையை வைத்து, விநாயகர் ஆக்கிவிட்டார்கள் என்று நவ அறிவுஜீவிக் கொழுந்துகள் பரப்புகிறார்கள். தமிழகம் மட்டுமல்ல, அகண்ட இந்தியா முழுமையிலுமே (ஆப்கனிஸ்தானம் வரை) காலத்தால் மிக முற்பட்ட யானைத் தலை விநாயகர் சிலைகள் கிடைத்துள்ளன.


சொல்லப்போனால் பிற்கால தாந்த்ரீக பௌத்தம்தாம் சகட்டுமேனிக்கு இந்துக் கடவுள்களைக் களவாடியது. கருடன்மீது நிற்கும் விஷ்ணு ஒரு போதிசத்வரை ஏந்திச் செல்லுமாறு உருவாக்கியிருப்பார்கள். குரங்கு வாகனத்தின்மீது நிற்கும் விநாயகர் போன்ற உருவக் கடவுள் உண்டு. சாதனமாலா என்ற பௌத்தப் படிமவியல் நூல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு பினோய்தோஷ் பட்டாசார்யா என்பவர் எழுதிய புத்தகம் (THE INDIAN BUDDHIST ICONOGRAPHY) சுவாரசியமான பலவித பௌத்தக் கடவுள் உருவங்கள் குறித்து விளக்குகிறது. இணையத்தில் கிடைக்கிறது.


(3) இதற்கிடையில் ஆஜிவகத்தைக் கலந்துகட்டி என்ன செய்யலாம் என்று பார்க்கும் கோஷ்டிகளும் உண்டு. பௌத்தத்துக்காவது அடிப்படை நூல்கள், மூல நூல்கள் உள்ளன. ஆனால் ஆஜிவகம் குறித்து முழுமையான நூல்களும் இல்லை, பின்பற்றுவோரும் இல்லை. ஆஜிவகத்தை மறுத்துப் பேசும் பிற மத நூல்களிலிருந்து எடுத்துத்தான் ஆஜிவகம் எப்படி இருந்திருக்கலாம் என்ற ஒரு தோற்றத்தையே உருவாக்கிக்கொள்ள முடிகிறது.


மொத்தத்தில் விநாயகரை தமிழ் அரசியல் எவ்வாறு எதிர்கொண்டுள்ளது?


  • பிள்ளையார் சிலைகளை உடைப்போம்
  • பிள்ளையார் தமிழ் நிலப்பரப்புக்கு அந்நியம் என்போம்
  • பிள்ளையார் பௌத்தம் (அல்லது ஆஜிவகம்), அங்கிருந்து திருடப்பட்டு இந்து மதத்துக்குள் நுழைக்கப்பட்டது என்போம்


இது ஏதும் வொர்க்-அவுட் ஆகவில்லை என்றால், ‘ நானெல்லாம் புள்ளையார் சிலை வாங்குவேன், ஆனால் புள்ளையாருக்கு பூணூல் போட்டுருக்காங்க பாஸ்’ என்று புதிதாக ஒன்றைக் கிளப்புகிறார்கள்.


துங்கக் கரிமுகத்துத் தூமணியை வணங்குவோர் வணங்கிக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள். பிள்ளையார் தமிழகத்தில் பெற்றிருக்கும் வரவேற்புக்காக மராட்டிய பால கங்காதர திலகர் தொடங்கி இந்து முன்னணி இராமகோபாலன்வரை யார் மீதாவது குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். திலகர் சுதந்தரப் போராட்டத்துக்காகப் பிள்ளையாரைக் கையிலெடுத்தார். இந்து முன்னணி, தமிழகத்தில் இந்து ஒற்றுமைக்காகப் பிள்ளையாரைக் கையில் எடுக்கிறது. கூடவே முருகன் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிவன், விஷ்ணு, அம்மன் என அனைவரும் களம் இறங்குவார்கள். 


ஒருபக்கம்அந்நியமாக்கல்அரசியல் தொடர்ந்தால் மறுபக்கம் இன்னும் வலுவாகபரவலாக்கல்தொடரும்.