அமெரிக்காவில் சென்ற வாரம் முதல் இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரி (tariff) 50% ஆக ஆகிறது. இதில் 25% இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்பதற்கான அபராதம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அபராதம் இல்லை என்றாலுமே 25% இறக்குமதி வரி, இந்திய ஏற்றுமதிகளை வெகுவாகப் பாதித்திருக்கும். ஆனால் தற்போதைய 50% இறக்குமதி வரி, பல இந்திய ஏற்றுமதிகளை முற்றிலுமாக நிறுத்திவிடும்.
முக்கியமாக ஜவுளி, தோல் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்படும். இவை இரண்டுமே தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றதிலிருந்தே இறக்குமதி வரிமீது கவனம் செலுத்தத் தொடங்கினார். அவருடைய பொருளாதார ஆலோசகரான பீட்டர் நவாரோ போன்றோரின் வழிகாட்டுதலில், துரதிர்ஷ்டவசமாக, சரியான புரிதலின்றி அனைத்து நாடுகள்மீதும் சகட்டுமேனிக்கு இறக்குமதி வரிகளை நிர்ணயிக்கத் தொடங்கினார். அப்படிச் செய்வதையுமேகூட ஒரு காட்சி வித்தையாக ஆக்கினார்.
ஏற்றுமதி-இறக்குமதி வரிகளை வர்த்தகம் தாண்டிய காரணங்களுக்காகப் பயன்படுத்துவது அபத்தமானது. இந்த வரிகள் இரு நாட்டு மக்களையும் பாதிக்கும். விற்போருக்கும் பிரச்னை, வாங்குவோருக்கும் பிரச்னை. ஆனால் டிரம்ப் இதைப் பற்றிய புரிதலின்றியே பேசுகிறார். உண்மையில் இறக்குமதி வரியைக் கட்டுபவர்கள் அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க மக்களுமே. இதன் காரணமாக விலை மிக அதிகமாக ஆகிவிட்டால், அமெரிக்கர்கள் இறக்குமதியை நிறுத்திவிடலாம் அல்லது ஏற்றுமதியாளர்களிடம் விலையைக் குறைக்கச் சொல்லலாம். இது ஏற்றுமதி செய்வோரை பாதிக்கும்.
இந்தியாவின் வர்த்தகம் டிரம்பின் அபத்தச் செயல்களால் ஓரளவு பாதிக்கப்படும். இந்திய மொத்த உற்பத்தியில் 0.4-0.5% குறையக்கூடும் என்று கணிக்கிறார்கள்.
அடிப்படையில் அமெரிக்கா வேண்டுவது இந்தியாவின் விவசாயச் சந்தையின் ஓர் இடத்தை. இதை இந்தியா தர மறுக்கிறது. இந்தியாவின் விவசாயத் தொழிலில் பங்கெடுக்கும் பெரும்பாலானோர், பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவர்கள். அவர்களால் அமெரிக்கப் பெரு நிறுவனங்களுடனோ அமெரிக்கப் பெரு விவசாயிகளுடனோ போட்டி போட முடியாது. தவிர அமெரிக்க விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாராளமாகப் புழங்குகின்றன. இந்தியா அவற்றை ஏற்க மறுக்கிறது.
இந்தியா தன் விவசாயச் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டால், ஆட்சியில் இருக்கும் கட்சிக்குப் பெருத்த ஆபத்து ஏற்படும். மோதியோ பாஜகவோ ஏன் காங்கிரஸோ இந்தச் செயலை ஒருபோதும் செய்யா.
இப்போதைக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்பின் இறக்குமதி வரிமீது விசாரணைகள் நடந்துவருகின்றன. விரைவில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு செல்லவிருக்கிறது. அதில் தீர்ப்பு வரும்வரை இந்தியா பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
இந்திய நிறுவனங்கள், ஒரு மாற்றாக, பிற நாடுகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 100 என்பதைத் தொட்டால் (15% depreciation) அதுவும் இந்திய ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக உதவும்.