Tuesday, November 11, 2008

ராக்கெட் எப்படி இயங்குகிறது?

PSLV ராக்கெட் ஒரு செயற்கைக்கோளையோ அல்லது சந்திரயானையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக்கொண்டு செல்கிறது? ஒரு சுற்றுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கைக்கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?

இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். நாம் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஒன்று பலூனை எடுத்து அதில் காற்றை நிரப்பி, வாயைக் கட்டாமல் சட்டென்று விட்டுவிடுவது. பலூனின் வாய் வழியாக காற்று வெளியேறும்போது பலூன் முன்னோக்கி (சற்றே கன்னா பின்னாவென்று சுருண்டபடி) பாயும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு.

படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. அதேபோல படகில் மண்ணெண்ணெய் அல்லது டீசலால் இயங்கும் சிறு புரொபெல்லரை (உந்துகருவி) பொருத்துகிறீர்கள். புரொபெல்லர் சுழன்று தண்ணீரைப் பின்னோக்கித் தள்ளுகிறது. இதனால் விசைப்படகு முன்னோக்கி முன்னேறுகிறது.

இதேபோலத்தான் ஜெட் விமானத்திலும் நடக்கிறது. ஜெட் எஞ்சினில் நிறைய எரிபொருள் இருக்கும். எஞ்சினின் முன்புறத்தில் ஒரு சுழலி இருக்கும். சுழலி சுற்றும்போது வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும். அந்தக் காற்று அழுத்தப்படும். அதில் எரிபொருள் கலக்கப்படும். பற்றவைக்கப்படும். எரிபொருள் எரிந்து, எக்கச்சக்கமாக கரியமில வாயுவை உருவாக்கும். இந்தக் கரியமில வாயு வெளியேறுவதற்கு பல நுண்துளைகள் ஜெட் எஞ்சினின் பின்பக்கம் இருக்கும். இந்த நுண்துளைகள் வழியே வெகு வேகமாக வெளியேறும் வாயுக்கள், ஜெட் எஞ்சினைக் கடுமையான வேகத்தில் முன் நோக்கிச் செலுத்தும். இதனால் ஜெட் எஞ்சினும் அதோடு இணைந்த விமானமும் முன்னோக்கிப் பாயும். இந்தப் பாய்ச்சலை வான் நோக்கிய பாய்ச்சலாக மாற்றுவது (உயரத்தில் செலுத்துவது) எப்படி என்பதை பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கும்போது குறிப்பிட்டுள்ளேன்.

சரி, ராக்கெட் வடிவமைப்பில் என்ன வித்தியாசம்? ஜெட் விமானங்கள் பற்றகு உயரம் காற்று மண்டலத்துக்குள்ளாகவேதான் உள்ளது. சுற்றிலும் உள்ள காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் இருந்தால்தான் எரிபொருள் எரியும். ஆனால், ராக்கெட்டோ, காற்று மண்டலத்தை விட்டு அப்பால் செல்கிறது. அந்த உயரத்தில் சுற்றிலும் ஆக்சிஜன் என்பது மருந்துக்கும் கிடையாது. அப்படியென்றால் எரிபொருள் எரிய என்ன செய்வது?

கூடவே எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனையும் எடுத்துச் செல்லவேண்டும். இது மேற்கொண்டு சுமையை அதிகரிக்கும்! ஆனால் வேறு வழியில்லை. கீழே அமெரிக்க ராக்கெட் ஒன்றின் படம் உள்ளது.

பி.எஸ்.எல்.வி மட்டுமல்ல, சந்திரயானில் உள்ள எஞ்சினும் இப்படித்தான். அதில் எரிபொருளும் உண்டு. கூடவே ஆக்சிஜனும் உண்டு.

இந்த எரிபொருள் எப்படி இருக்கும்? இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.

சந்திரயானில் இருப்பது கிரையோஜீனிக் எஞ்சின் கிடையாது. திரவ எரிபொருள் ஒன்றையும் ஆக்சிஜன் வழங்கி திரவம் ஒன்றையும் எடுத்துச் செல்கிறது.

***

சரி. சந்திரயான் எப்படி போகும் வழியில் வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்?

ஒரு குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லும் எந்தப் பொருளுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட வேகம் இருக்கும். இதைக் கொடுக்கக்கூடிய சமன்பாடு இந்தப் பதிவில் உள்ளது. ஒரே அண்மை நிலை உள்ள, ஆனால் இருவேறு தொலைவு நிலைகள் உள்ள இரண்டு பாதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கே சிறிய பாதையிலிருந்து பெரிய பாதைக்குச் செல்ல, அண்மை நிலை வரும்போது, அதன் வேகத்தை அதிகரிக்கவேண்டும். அப்படிச் செய்தால் அது சுற்றும் பாதையின் தொலைவு நிலை அதிகமாகும். இதை, கீழ்க்கண்ட சமன்பாட்டை வைத்தே பார்க்கலாம்.
இங்கே G என்பது மாறாத ஓர் எண். m என்பது நடுவில் இருக்கும் கனமான பொருளின் எடை. பூமியைச் சுற்றிவரும்போது பூமியின் எடை. சந்திரனைச் சுற்றி வந்தால் சந்திரனின் எடை. a என்பது நீள்வட்டப்பாதையின் semi major axis. அதாவது அண்மை நிலை, தொலைவு நிலை ஆகியவற்றுடன் பூமியோ சந்திரனோ எதைச் சுற்றுகிறதோ அதன் விட்டத்தையும் கூட்டி, அதை இரண்டால் வகுத்தால் வரும் தொகை. சிறிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது அண்மை நிலையில் இருக்கும் வேகம், பெரிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது இருப்பதைவிடக் குறைவாக இருக்கும். இந்த வேகங்களைத் துல்லியமாகக் கணக்கிடலாம். இதிலிருந்து வேக மாறுதலையும் துல்லியமாகக் கணக்கிடலாம்.

உதாரணத்துக்கு சந்திரனை, சந்திரயான் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் நிறை 7.36 x 1022 kg. ஈர்ப்பு மாறிலி G என்பது 6.67 x 10-11 m3 kg-1 s-2. சந்திரயான் 200 - 7,502 கி.மீ பாதையில் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் விட்டம் 3475 கி.மீ. அப்படியானால் இந்தப் பாதையில் a = (200+7502+3475)/2 = 5588.5 கி.மீ. இந்தப் பாதையில் சுற்றும்போது, அண்மை நிலையில் (200 கி.மீ) இருந்தால் அப்போது r = 3475/2 + 200 = 1937.5 கி.மீ.

இவை அனைத்தையும் மேலே உள்ள சமன்பாட்டில் போட்டால் கிடைப்பது: அண்மை நிலை வேகம் = விநாடிக்கு 2.05 கி.மீ.

இப்பொது தொலைவு நிலையை சுமார் 250 கி.மீ என்று குறைக்கவேண்டும். அப்படியானால், 200-250 கி.மீ பாதைக்கான a என்ன? = (200+250+3475)/2 = 1962.5 கி.மீ. r என்பது முன்போலவே 1937.5 கி.மீ. இதை சமன்பாட்டில் நிரவினால் கிடைப்பது, வேகம் = விநாடிக்கு 1.6 கி.மீ.

அதாவது அண்மை நிலை (200 கி.மீ) வரும்போது, அதற்கு இருக்கும் வேகம் விநாடிக்கு 2.05 கி.மீ. இதனை விநாடிக்கு 1.6 கி.மீ என்று குறைக்கவேண்டும். பிரேக் எதுவும் கிடையாது, பிடிப்பதற்கு. எனவே எரிபொருள் எஞ்சினை இயக்கி, போகும் வழி எதுவோ அந்தத் திசையில் எரிந்த வாயுக்களை வெளியேற்றுவார்கள்.

எவ்வளவு நேரம் இந்த மோட்டாரை இயக்குவது? எவ்வளவு எரிபொருளை எரிப்பது? இது சற்றே கடினமான கணக்கு. இதற்கு சந்திரயானின் நிறை என்ன என்று தெரியவேண்டும். அந்த மோட்டாரின் உந்துசக்தி என்ன என்று தெரியவேண்டும். அதைக்கொண்டு, எவ்வளவு நேரம் எரிபொருளை எரிக்கவேண்டும் என்று கணக்கிடவேண்டும். அதை நாம் இங்கே பார்க்கவேண்டாம்.

மற்றொன்று: இவ்வாறு மோட்டாரை இயக்கி வேகத்தைக் குறைப்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடாது. உதாரணமாக, தொலைவு நிலையை 7502 கி.மீலிருந்து 250 கி.மீக்கு மாற்ற மோட்டாரை 866 விநாடிகள் இயக்கவேண்டியிருந்தது. இதற்குள் சந்திரயான் தனது சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 1400 கி.மீ தூரம் நகர்ந்திருக்கும் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! இதனால் என்ன ஆகும் என்றால் அதன் பாதையில் அண்மை நிலையிலும் சற்றே மாற்றம் நிகழ்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பாதையில் அண்மை நிலை 200 கி.மீ என்பதிலிருந்து 187 கி.மீ என்று ஆகிவிட்டது.

Monday, November 10, 2008

சந்திரயான் - பாதை மாற்றம்

நேற்று இரவு (ஞாயிறு, 9 நவம்பர் 2008) சுமார் 8.00 மணி அளவில், சந்திரனைச் சுற்றி வரும் சந்திரயானின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது சந்திரனைச் சுற்றிவரும் அதன் பாதையின் அண்மை நிலை 200 கி.மீ என்றும் தொலைவு நிலை 7,502 கி.மீ என்றும் இருக்கும். அடுத்து தொலைவு நிலை குறைக்கப்படும். பின் அண்மை நிலை, பின் மீண்டும் தொலைவு நிலை குறைக்கப்பட்டு, 100 கி.மீ முழு வட்டப்பாதையாக மாற்றப்படும்.

அப்டேட்: திங்கள் இரவு சுமார் 10.00 மணிக்கு, சந்திரயானின் பாதையில் மற்றுமொரு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அதன் தொலைவு நிலை 255 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அண்மை நிலை 187 கி.மீ. இனி மேலும் இரண்டு பாதை மாற்றங்கள் நிகழும். ஒன்று இன்று இரவு நடக்கும். அப்போது அது 100-187 கி.மீ பாதைக்கும், அடுத்த மாற்றத்தில் 100 கி.மீ வட்டப்பாதைக்குமாக மாறும்.

Sunday, November 09, 2008

Good Will Hunting

இரண்டு நாள்கள் முன்னால், அகஸ்மாத்தாக சானல்களைத் திருப்பும்போது, கண்ணில் பட்டது இந்தப் படம். கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. முதல் சில நிமிடங்கள் தவிர்த்து முழுதாகப் பார்த்தேன்.

திரைக்கதைக்கும் துணை நடிகருக்குமான ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம். பத்து மில்லியன் டாலர் செலவு செய்து, 225 மில்லியன் டாலர் வசூல் செய்த படம்.

மிக நல்ல ஞாபக சக்தியும் கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் சக்தியும் பெற்ற (ஆனால் அதிகம் படிக்காத) ஓர் இளைஞன் (வில் ஹண்டிங்க்), பாஸ்டன் எம்.ஐ.டி-யில் குப்பை கூட்டும் வேலை செய்கிறான். அங்கே ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற ஒரு கணிதப் பேராசிரியர் (ஜெரால்ட் லாம்போ) பார்வையில் படுகிறான். பேராசிரியர், அவனை எப்படியாவது வழி செலுத்தி, பெரிய கணித மேதை ஆக்குவது என்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்.

வில் ஹண்டிங்கின் பின்னணி சோகமானது. சிறுவயதில் அவனது ‘மாற்றுத் தந்தை’ அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார். இப்போது அநாதையாக வளருகிறான். கட்டுமானத் தொழிலில் கூலி வேலை செய்கிறான். எம்.ஐ.டியில் குப்பை கூட்டும் வேலையும் செய்கிறான். பாஸ்டனின் ஏழைக் குடியிருப்பில் வசிக்கிறான்.

ஹண்டிங்க், ஓர் அடிதடியில் ஈடுபட்டிருக்கும்போது, காவலர் ஒருவரையும் அடித்துவிட, சிறை செல்ல நேருகிறது. சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க, ஜெரால்ட் லாம்போ, அவனைத் தன் இருப்பில் வைத்து, உளவியல் நிபுணரிடம் சிகிச்சை எடுக்க வைப்பதாக நீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறார். அனுமதி கிடைக்கிறது.

ஹண்டிங்க் வாழ்க்கையில் காதல் வருகிறது. காதலியை அடைகிறானா? உளச் சிக்கல் சரியாகிறதா? பேரா. லாம்போ காட்டிய வழியில் பெரும் பதவிகளைப் பெறுகிறானா? இந்தக் கேள்விகளுக்கான விடை படத்தில்.

***

படத்தில் என்னைக் கவர்ந்தது சர்வசாதாரணமாக அறிவியல், கணிதப் பெயர்களை வசனங்களில் சேர்த்திருப்பது. ஃபீல்ட்ஸ் மெடல் என்றால் என்ன என்று பொதுவாக சராசரி இந்தியர்கள் யாருக்கும் தெரியாதோ, அதைப்போன்றே சராசரி அமெரிக்கர்களுக்கும் தெரியாது. ஆனால், திரைக்கதை/வசனம் எழுதுபவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் இந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என்றால் அதைச் சேர்க்கவேண்டும், மக்கள் சற்றே யோசித்து, ஒருவழியாகப் புரிந்துகொள்வார்கள் என்பது அவர்கள் கருத்து. தமிழ்ப் படத்தில் இதைக் காணவே முடியாது.

ஸ்ரீனிவாச ராமானுஜன், எவரிஸ்ட் கலுவா ஆகியோரின் பெயர்கள் சர்வசாதாரணமாக வருகின்றன. (ராமானுஜன் பற்றிச் சொல்லும்போது அவர் ஒரு குடிசையில் வாழ்ந்தார் என்கிறார் பேரா. லாம்போ. ஆனால் ராமானுஜன் வாழ்ந்தது காரைக் கட்டடங்களிலும் ஓட்டு வீடுகளிலும்தான். விட்டுவிடுவோம்!) ‘தியடோர் கசின்ஸ்கி’ பெயர் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ஆனால் உனாபாம்பரின் பெயர் அமெரிக்கர்களுக்கு சற்றே அதிகம் ஞாபகத்தில் இருக்கும்.

பொதுவாகவே மிக ஷார்ப்பான வசனங்கள். ஓரிடத்தில் National Security Agency-யிலிருந்து வில் ஹண்டிங்கை வேலைக்கு எடுக்க வருகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடல்:

என்.எஸ்.ஏ: நீ ஏன் எங்களிடம் வேலைக்குச் சேரக்கூடாது?

ஹண்டிங்: ஏன் கூடாது என்று சொல்லட்டுமா? ஒரு நாள் என் மேசையில் உடைக்கமுடியாத ஒரு கிரிப்டாலஜி துப்பைக் கொடுப்பீர்கள். நானும் ஐந்து நிமிடத்தில் அதை உடைத்துவிடுவேன். அது எங்கோ ஓர் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள எதிரிகளின் இடத்தைப் பற்றிய தகவலாக இருக்கும். உடனே அந்தத் தகவல் நமது படைகளுக்கு அனுப்பப்படும். ராணுவத்தில், தெற்கு பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன்தான் வீரனாக இருப்பான். வீரர்கள் அந்த கிராமத்தில் போய் சரமாரியாகக் குண்டுகளை வீசி அழிப்பார்கள். எதிரிகளோடு சேர்ந்து அப்பாவி கிராம மக்களும் கொல்லப்படுவார்கள். ஏன், கவனமாக பொதுமக்களைத் தவிர்த்து, எதிரிகளை மட்டும் கொல்லக்கூடாதா என்று கேட்பீர்கள். ஆனால் அப்படிச் செய்வதால் தங்களது உயிருக்கு அபாயம் வரும் என்பதால் பயந்து, தாறுமாறாகச் சுடுவார்கள் வீரர்கள். போர் முடிந்து வீட்டுக்கு வரும்போது, இங்கிருக்கும் தொழிற்சாலைகள், அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது. ...

இப்படிச் செல்லும் அந்த வசனம் (குத்துமதிப்பாக).

மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா?

Saturday, November 08, 2008

சந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது

இன்று மாலை சுமார் 5.00 மணி அளவில், சந்திரயான் விண்கலம் சந்திரனைச் சுற்றுமாறு நமது விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

இந்த சந்திரயான் பயணத்திலேயே மிக முக்கியமான நிகழ்வு இதுதான். இப்போது இந்த மிஷன், வெற்றியடைந்துள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். இனியும் சில நிகழ்வுகள் பாக்கியுள்ளன என்றாலும், அவற்றை இந்திய விஞ்ஞானிகள் சாதிப்பதில் பெரும் பிரச்னை ஏதும் இருக்கமுடியாது. இப்போது சந்திரயான், சந்திரனைச் சுற்றி, 504 - 7,502 கி.மீ நீள்வட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.

இங்கிருந்து அடுத்த சில நாள்களுக்குள் இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 100 கி.மீ வட்டப் பாதைக்கு மாற்றப்படும்.

இன்றுதான் சந்திரயான் இதுவரை இல்லாத ஆளவுக்கு சந்திரனுக்கு மிக அருகில் வந்தது. இதுவரையில் பூமி ஒன்றின் ஈர்ப்பு மட்டும்தான் சந்திரயானைச் சுற்றவைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்று சந்திரனும் அருகில் வந்ததால், சந்திரனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்துகொண்டது. இதன் விளைவாக, இந்திய விஞ்ஞானிகள் இன்று செய்த சிலவற்றைச் செய்திருக்கவில்லை என்றால், சந்திரயானின் வேகம் அதிகரித்து, அது எங்கோ பூமியின் பரப்பை விட்டுச் சென்று காணாமல் போயிருக்கும்.

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இங்கே பாதை 1 தான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதை. இதில்தான் சந்திரயான் 4 நவம்பர் 2008 அன்று சுற்றத்தொடங்கியது. சந்திரன் பாதை 2-ல் எப்போதும் பூமியைச் சுற்றிவருவது. அப்படியே விட்டிருந்தால், கவண் கல்லைப் போல, சந்திரனைத் தாண்டும்போது, சந்திரயானின் வேகம் அதிகரிக்கும். விநாடிக்கு 2 கி.மீ என்ற வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சந்திரயான், சந்திரனின் ஈர்ப்பும் சேர்த்து வேகத்தை அதிகரித்து, பாதை 3-ல் பயணித்திருக்கும். பிறகு மீளவே முடியாத வெளியில் எங்கோ, எங்கோ காணாமல் போயிருக்கும்.

இதைத் தடுக்க, சந்திரயானின் உள்ளே இருக்கும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, வேகத்தைக் கணிசமாகக் குறைத்தனர். விநாடிக்கு 1.5 கி.மீ என்று வேகம் குறைந்ததும், சந்திரயான், சமர்த்தாக பாதை 4-க்கு வந்துவிட்டது. இனி இது சந்திரன் பூமியைச் சுற்றிவர, சந்திரனைச் சுற்றியபடியே செல்ல ஆரம்பிக்கும். ஒரு ஜாங்கிரியின் வடிவத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் சந்திரயானின் பாதை என்பது ஒரு ஜாங்கிரி.

நடுவில் இருப்பது பூமி. அதைச் சுற்றி இருக்கும் வட்டப்பாதை சந்திரனின் பாதை. சுற்றி இருக்கும் சற்றே அசிங்கமாக வரையப்பட்ட ஜாங்கிரிதான் சந்திரயான் சுற்றும் பாதை - பூமியுடன் ஒப்பிட்டால். (சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரனின் பாதையே ஜாங்கிரி. அப்படியென்றால் சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரயானின் பாதை ஜாங்கிரிக்குள் ஜாங்கிரி! சுழலும் பால்வீதி அண்டத்துடன் ஒப்பிட்டால்? ஒரே ஃப்ராக்டல் ஜாங்கிரிதான்.)

இப்போடு முதற்கொண்டே சந்திரயான், சந்திரனைப் படம் பிடித்து அனுப்ப ஆரம்பிக்கும். ஆனால் 100 கி.மீ பாதைக்குள் வந்துவிட்டால், இன்னும் அழகாக, துல்லியமாகப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.

அது இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நேரு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.

Wednesday, November 05, 2008

செய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி

அமெரிக்க எலெக்ஷன் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், பராக் ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று கிட்டத்தட்ட மெக்கெய்ன் தவிர அனைவருமே ஒப்புக்கொண்டாகிவிட்டது.

ஜார்ஜ் புஷ் + பொருளாதார வீழ்ச்சி + கடன் நெருக்கடி என்று எல்லாமாகச் சேர்ந்து மெக்கெய்னை வீழ்த்தியுள்ளது என்று ரிபப்ளிகன் கட்சி ஆசாமிகளே தொலைக்காட்சியில் வந்து சொல்ல ஆரம்பித்தாயிற்று. அத்துடன் செனேடர் தேர்தல், உறுப்பினர் சபை தேர்தல் என்று அனைத்திலும் ரிபப்ளிகன் கட்சிக்கு அடி, உதை.

சன்னாசி, ஆலிவர் ஸ்டோனின் 'W' என்ற படத்துக்கு எழுதியுள்ள விமரிசனத்தில் ஜார்ஜ் புஷ்ஷை, “செய்யும் தொழிலையெல்லாம் சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி” என்று வர்ணிக்கிறார்.

ஈராக் முதற்கொண்டு அமெரிக்கப் பொருளாதாரம்வரை சப்பட்டை பஞ்சர்பாண்டி உருவாக்கியிருக்கும் உலக மகா சொதப்பல்களை, பராக் ஒபாமா என்ற அதிக அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது அடுத்த நான்கு வருடங்களுக்கான ஹாலிவுட் திரைக்கதை.

ஒபாமாவின் அமைச்சரவை அணி எப்படிப்பட்டதாக இருக்கும்? ஒபாமாவின் பொருளாதாரத் திட்டங்கள் எவ்வளவு வேகமாக அடிபட்ட அமெரிக்காவுக்கு ஆயிண்ட்மெண்ட் தடவிவிடும்? வெளியுறவுக் கொள்கையில் முரட்டுத்தனம் காட்டாமல் எந்த அளவுக்கு அமெரிக்கா பண்புடன் நடந்துகொள்ளும்? ஈராக்கிலிருந்து எவ்வளவு வேகத்தில் படைகளைச் சுருட்டிக்கொண்டு வெளியேறும்? அமெரிக்கர்களின் ஊதாரித்தனத்தைக் குறைப்பதில்; வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதில் எந்த அளவுக்கு முயற்சிகளை எடுக்கும்? பிரச்னை பூமிகளில் எண்ணெயை ஊற்றுவதற்கு பதில் தண்ணீரை ஊற்றி அணைக்க எந்த அளவுக்கு ஆயத்தங்களை மேற்கொள்ளும்?