Thursday, December 11, 2008

மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி

16 டிசம்பர் 2008, செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6.00 மணி அளவில், சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட், கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் பத்திரிகையாளர் ஞாநி, ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதல்’ குறித்துப் பேசுவார்.

அதில் முக்கியமாக, ஊடகங்களின் நடத்தை பற்றியும், உளவு ஏஜென்சிக்களின் தோல்வி பற்றியும் பேசுவார். மேற்கொண்டு, பங்கேற்போரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

கட்டாயம் வாருங்கள்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

நடப்பு நிகழ்ச்சிகள் பற்றி சிறு பிரசுரங்கள் வெளியிடுவது Pamphleteering எனப்படும். முச்சந்தி இலக்கியம் என்று சொல்லப்படுவது. அச்சடித்து, தெரு முனையில் நின்று, கூவி விற்கும் - அல்லது சும்மாவே கொடுக்கும் - பிரசுரங்கள்.

“அல்லேலுயா, இதோ வந்துவிட்டார்” முதற்கொண்டு “அமெரிக்க மாமாவின் அணுக்குடில்” வரையில் மதபோதகர்களும் கம்யூனிச போதகர்களும் மட்டுமே இப்போது தமிழ்நாட்டில் இந்தத் தெருப் பிரசுரங்களைப் பிரசுரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு மாறுபட்ட வடிவமே வலைப்பதிவுகள்.

ஆனால், வலைப்பதிவுகளைத் தாண்டி மக்களைச் சென்றடைய தெருப் பிரசுரங்கள் அவசியம். அவ்வாறு சிலவற்றை எழுத எனக்கு ஆசை. அதில் நான் முதலாவதாக எழுதியிருப்பது

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்

என்னும் குட்டிப் புத்தகம். இதில் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை ஆதரித்து, பின்னணியை விளக்கி, ஏன் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குத் தேவை என்றும், இதற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவினரின் எதிர்ப்புகள் சரியல்ல என்பதையும் என் பார்வையிலிருந்து விளக்கி எழுதியுள்ளேன்.

நேரம் கிடைத்தால் அடுத்து எழுத நான் எண்ணியிருக்கும் சில:

1. ஸ்பெக்ட்ரம். ஏன் இப்போதைய கொள்கை தவறில்லை, ஏன் அமைச்சர் ராசா மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை (இப்போது தயாநிதி மாறன் கூட்டு சேர்ந்த காரணத்தால் சன் டிவி அமுக்கி வாசிக்கும்!)... ஸ்பெக்ட்ரம் ஏலம் தேவையா போன்ற சிலவற்றை விளக்கி எழுதவேண்டும்.

2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: தேவையில்லை - அல்லது இப்போது இருக்கும் மாதிரியில் தேவையில்லை. கொடுக்கப்படும் சலுகைகள் அதீதமானவை. விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படும் நிலங்களுக்கு (சி.பொ.ம மட்டுமல்ல, வேறு எந்தத் தொழிற்சாலைக்காக அல்லது அணைக்காக இருந்தாலும் சரி) எந்த மாதிரியான நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் (இப்போது கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் மிகவும் குறைவானவை. பணமும் உடனடியாக மக்களுக்குக் கிடைப்பதில்லை) போன்ற சிலவற்றை வைத்து, சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு எழுதவேண்டும்.

பார்ப்போம்.

Wednesday, December 10, 2008

மும்பை - 3: Civil society in Pakistan

[பாகம் 1 | பாகம் 2]

ஆசிஃப் அலி சர்தாரி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆப்-எட் எழுதுகிறார். மும்பை தீவிரவாதத் தாக்குதல்கள் அவருக்குக் கண்ணில் ரத்தத்தை வரவழைக்கிறதாம். அவரது மனைவியும் தீவிரவாதத் தாக்குதலில்தான் உயிரை விட்டாராம். உண்மைதான்.

இன்று தன் நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர். தன் மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க என்ன செய்கிறார்? அதிகம் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.

பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாதக் குழுமங்கள் உள்ளன. சர்தாரியும் சரி, பிற பாகிஸ்தானி சிவிலியன்களும் சரி, இதைப் புரிந்துகொள்வதில்லை அல்லது வேண்டுமென்றே தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள்.

ஒரு குழு, தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்காத வடமேற்குப் பிராந்தியத்தினர். இவர்களுடன் முஷரஃப் அரசு ஆரம்பித்த யுத்தம், இன்றும் தொடர்கிறது. பேனசீர் புட்டோ உயிர்விட்டது இவர்கள் கையிலாகத்தான் இருக்கவேண்டும். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணில் நிகழ்த்துவது இவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

மற்றொரு பக்கம், ஜெய்ஷ்-ஏ-முஹம்மத், லஷ்கர்-ஈ-தோய்பா (அல்லது ஜமாஅத்-உத்-தவா) போன்றவை பாகிஸ்தான் உளவு ஏஜென்சி ஐ.எஸ்.ஐ ஆதரவில், காஷ்மீரில் பிரச்னையை வலுக்கச் செய்ய உருவாக்கிய தீவிரவாதிகள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டவை. இவை பாகிஸ்தானில் எந்தப் பிரச்னையையும் செய்வதில்லை.

ஒரு பக்கம் இந்தியாவில் பிரச்னையைத் தூண்டிவிட்டுக்கொண்டே, மறுபக்கம், நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் என்பதுபோல பாகிஸ்தான் பேசினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.

பாகிஸ்தான் பத்திரிகைகள் இதை விளக்குவதில்லை. பொத்தாம்பொதுவாக தீவிரவாதிகள் என்று சொன்னால் போதாது. இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தான்மீது குற்றம் சாட்டுகிறது என்பதுதான் பாகிஸ்தான் பத்திரிகைகள் அனைத்தும் சொல்வது. அதேபோலத்தான் பாகிஸ்தான் அறிவுஜீவிகளும். இதுவரையில் பாகிஸ்தானின் எந்த அரசியல்வாதியோ, சமூகத் தலைவரோ, பாகிஸ்தான் இந்தியாவில் பிரச்னைகளை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்; பாகிஸ்தான் தீவிரவாத வழியிலிருந்து ஒதுங்கி, உள்நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று பேசுவதில்லை.

பாகிஸ்தானின் சிவில் சமூகம், தன்னுடைய கடமையை முற்றிலுமாக விட்டுக்கொடுத்துவிட்டது. தங்களது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் கண்டு அவர்கள் கொதித்து எழுவதில்லை. தெருவில் போராட்டங்கள் ஏதும் இல்லை. நாடு அன்னியச் செலாவணி இல்லாமல் போண்டியாகும் நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் கொந்தளிக்கவில்லை. எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என எல்லாமே டம்மிகளாக உள்ளன.

அரசாங்கத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தவேண்டும், அழிக்கவேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு போராட பொதுநல அமைப்புகள் அதிகம் காணப்படுவதில்லை. ராணுவம் சிவிலியன் அரசுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு அங்கு யாருமே இல்லை.

தமிழ்நாட்டில் சில வருடங்களுக்குமுன் ஜெயலலிதா ஆட்சி இருக்கும்போது, “சத்தமாப் பேசாதே, ஆட்டோ வரும்” என்று மக்கள் பயம் காட்டினார்களே, அதுபோல, “சத்தமாப் பேசாதே, ராணுவ டிரக் வரும்” என்பதே மக்களின் பயமாக உள்ளது.

அத்துடன், “அரசியல்வாதிகள் என்றால் ஊழல். ராணுவம்தான் நாட்டுக்கு சரி” என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியுள்ளது. என்னைக் கேட்டால், ஊழல் மிக்க ராணுவ ஜெனரலைவிட, ஊழல்மிக்க அரசியல்வாதி என்றுமே சிறந்தவன். பின்னவனை, தேர்தலில் தூக்கியாவது எறியலாம். முன்னவன் கேள்வியே கேட்காமல், உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவான்.

ஆனால், பாகிஸ்தான் சிவில் சமூகத்தினரிடம் இன்று காணக்கிடைப்பது ஒருவிதமான இயலாமை மட்டுமே. எங்கள் நாட்டுக்கு யாரும் வந்து கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்கிறார்கள். எங்கள் நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு யாரும் எதிர்ப்பு காட்டமாட்டேன் என்கிறார்கள். இப்படிப் புலம்புவது மட்டும்தான் அங்கே காணக்கிடைக்கிறது.

உங்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகளை நீங்கள்தான் தீர்க்கவேண்டும். இவ்வளவு மோசமாக பாகிஸ்தான் ஆகியுள்ளதற்குக் காரணம் பாகிஸ்தானிகள்தானே? அந்நியர்கள் கிடையாதே?

பாகிஸ்தான் சிவில் சமூகம் உடனடியாக மாறவேண்டும். போராட்டத்தில் இறங்கவேண்டும். அரசியலைச் சுத்தம் செய்ய. ராணுவத்தின் கொட்டத்தை அடக்க. உள்நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவத்தினரும் சூழ்ச்சிசெய்து, தீவிரவாதிகளைப் பிற நாட்டின்மீது ஏவாமல் இருக்க.

மும்பை உயிரிழப்பு அதையாவது அந்த நாட்டில் சாதித்தால் நல்லது.

Sunday, December 07, 2008

மாமல்லபுரத்தில் துர்க்கையின் உருவங்கள்

நேற்று, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில், தமிழ்ப் பாரம்பரியம் என்ற அமைப்பின் சார்பில், உமாபதி ஆசார்யா என்னும் பாரம்பரிய கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை நிபுணர் பேசினார்.

மாதம்தோறும் முதல் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடக்கும் கூட்டம் இது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் காணொளி நிகழ்வில் நான் புரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

***

சிற்பிகளில் நான்கு படிநிலைகள் உண்டு. ஸ்தபதி, சூத்ரகாரி, வர்தஹி, தச்சன். தொடக்க நிலையில் இருப்பவர் தச்சன். படிப்படியாக மேலே சென்று, அனைத்துக்கும் உச்சத்தில் உள்ள நிலையை அடைபவர் ஸ்தபதி.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஸ்தபதி என்ற சொல் தலைமையானவர் என்ற பொருளில் இடம்பெறுகிறது.

ஸ்தபதிக்கு என்ன குணங்கள், தகுதிகள் இருக்கவேண்டும்?

* ஸ்தபதி என்றால் கோவில்களைக் கட்டுபவர் என்று பொருள்.
* இவர் விஸ்வகர்மா குலத்தில் பிறந்தவராக இருக்கவேண்டும்
* உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும்.
* வேதங்களில் விற்பன்னராக இருக்கவேண்டும்.
* சிற்ப சாத்திரங்களைக் கரைகண்டவராக இருக்கவேண்டும்.
* கணிதம், சோதிடம், வானியல், பல்வேறு தத்துவங்கள், பல்வேறு பொறியியல் துறைகள் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
* பரிவு, பாசம், பிறர்மீது கருணை போன்ற குணங்களை உடையவராக இருக்கவேண்டும்.
* உடலில் எந்த ஊனமும் இருக்கக்கூடாது.
* சூதாட்டம், குடி, பெண்ணாசை போன்ற எதுவும் கூடாது.

சிற்ப சாத்திரங்கள் எவை எவை?

* விஸ்வகர்ம பிரகாசா
* விஸ்வகர்ம தர்சனா
* மானசாரா
* மாயாமதா
* சகலாதிகாரா
* சரஸ்வதிய சித்ரகர்ம சாஸ்த்ரா
* சமராங்கன சூத்ரதாரா
* சில்பரத்னகோசா
* சில்ப ப்ரகாசா
* ஸ்ரீ காஷ்யப சில்ப சாஸ்த்ரா
* விஸ்வகர்ம வாஸ்து சாஸ்த்ரா
* கார்கேய ஆகமா
* சில்பவித்யா ரஹஸ்யோபனிஷத்
* மூலஸ்தம்ப நிர்ணயா

இவை பலவும் இன்று சமஸ்கிருத மூல நூல் வடிவில் கிடைக்கின்றன. உமாபதி, பிறருடன் சேர்ந்து ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலே உள்ள பட்டியலில் ஓரிரு நூல்கள் இன்று கிடைக்காமல் இருக்கலாம்.

ஒரு சிற்பி, சிற்பத்தில் எவற்றையெல்லாம் கொண்டுவருவார்?

* ஆச்சர்ய கர்மா = வியப்பு
* சூக்ஷ்ம கர்மா = நுண்மை
* பஹுரூபா = பல வடிவம்
* சித்ரரூபா = ஒளி
* கௌசலா = மென்மை
* கர்ம கௌசலா = இயக்கம்
* யோகா = தியானம்

ஸ்தபதி எப்படி சிற்பத்தை அல்லது கட்டடத்தை வடிவமைப்பார்?

* முதலில் தியானத்தில் அமர்வார்.
* அடுத்து, பிரார்த்தனை மூலம் சமாதி நிலையை அடைவார்.
* சுயத்தை - ஆத்மனை அறியும் நிலை ஏற்படும். அப்போது கட்டட அல்லது சிற்ப வடிவம் அவருக்குப் புலனாகும்.
* புலனான வடிவத்தை அவர் பருப்பொருளில் வடிப்பார்.
* பக்தர் அந்த வடிவைக் காணும்போது, அவர் சமாதி நிலையை அடைந்து ஆத்ம தரிசனத்தைப் பெறுவார்.

தியானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறை உண்டு. விஸ்வகர்மா என்னும் பிரஜாபதி - அவரது மகன் த்வஷ்டா என்னும் விஸ்வரூபா, அவரது மகன்கள் ரிபு, விபவன், வாஜா ஆகியோரை மனத்தில் இருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும்.

இந்த வழிமுறைகளை உமாபதி விளக்கியபிறகு, மாமல்லபுரத்தில் காணப்படும் சில துர்க்கை சிற்பங்களைக் காண்பித்தார். அவற்றில் நேராக நிற்கும் வடிவம், சற்றே வளைந்து நிற்கும் வடிவம் ஆகியவற்றைக் காண்பித்தார். பிறகு, மஹிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் சிற்ப முழுமையைக் காண்பித்து முழு கேன்வாஸையும் விளக்கினார்.

எப்படி திரையில் கிடைமட்டத்திலும், நெடுக்காகவும், மூலைவிட்டத்திலும் பேலன்ஸ் - சம நிலை உள்ளது என்பதை விளக்கினார். சிற்பத்துக்கு மையம் - மர்மஸ்தானம் என்பது எவ்வளவு முக்கியம் (பார்வை அங்குதான் செல்லும்) என்றும் அது திரையின் மையமாக இருக்கவேண்டியது இல்லை என்றும் விளக்கினார். முந்தைய துர்க்கை சிற்பத்தில், துர்க்கையில் தொப்புள்தான் மர்மஸ்தானம். மேலே உள்ள படத்தில் துர்க்கையின் சிங்கம்தான் மர்மஸ்தானம்.

எப்படி சிற்பத்தில், இயக்கம் காண்பிக்கப்படுகிறது - துர்க்கையின் வில் ஏந்திய கையில் கொடுக்கப்படும் அழுத்தம், மஹிஷனின் வளைந்த காலில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவை இதைக் காண்பிக்க உதவுகின்றன. துர்க்கையும் மஹிஷனும் மற்றவர்களைவிட அளவில் பெரியதாகச் செய்யப்பட்டுள்ளனர். காரணம் குவியம் அவர்கள்மேல் இருக்கவேண்டும் என்பதால். பூதகணங்கள் பலவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒரேமாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக உள்ளன.

துர்க்கையிடம் மூன்றுவித ஆயுதங்களும் உள்ளன. அதாவது ஒன்று எய்தபின் மீண்டும் திரும்பி வராது. ஒன்று கையிலேயே இருக்கும். மற்றொன்று, எய்தபின் எதிராளியைக் கொன்று, பின் மீண்டும் திரும்பி எய்தவரிடமே வந்துசேர்வது.

சிற்பத்தில் சில இடங்களில் ஆழத்தை அதிகரிப்பதன்மூலம் emphasis-ஐ அதிகப்படுத்தலாம். அதனால் கவனம் அங்கே அதிகம் குவியும். சிங்கம், மஹிஷனின் கால்களுக்கு அருகில், துர்க்கைக்கு அருகில் - இங்கெல்லாம் ஆழம் அதிகமாக உள்ளது.

சில கோடுகளின் உதவியுடன் சிற்பத்தின் சீரொருமையை (symmetry) நன்கு விளக்கினார். அந்தப் படத்தை வாங்கி, இங்கே சேர்க்கிறேன்.

***

முதல் முறையாக இந்திய பாரம்பரியச் சிற்பத்தை ஒருவர் விளக்கிக் கேட்டதால் புரிந்துகொள்ள சற்றே கடினமாக இருந்தது. மேலும் நேரம் போதாமையால், கடைசியில் அவர் சற்றே வேகமாகச் செல்லவேண்டியிருந்தது.

ஆனால், மீண்டும் அவருடன் சில மணி நேரங்கள் பேச நேரம் கிடைத்தால் மேலும் நிறையப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இந்தத் துறை தொடர்பாக எளிமையான சில புத்தகங்கள் தேவை என்று தோன்றுகிறது.

Saturday, December 06, 2008

மும்பை - 2: Dangers of a Failed State

[பாகம் 1]

அதென்ன failed state? ஆங்கிலத்தில், Country, Nation, State ஆகியவை ஒரே பொருளைத் தரும் சொற்கள் அல்ல. சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சொற்கள்.

Country என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.

அப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன? அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.

பிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.

பாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.

இதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.

ஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.

சரி, இதுமட்டும் போதுமா? மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.

தோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.

அப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.

ராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.

இந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.

ஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.

பாகிஸ்தானின் சிவில் சொசைட்டி என்ன சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.