
கிழக்கு பதிப்பக எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஆபீசர், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர், குடியாட்சிமீது அக்கறை கொண்டவர், ஒரு நல்ல மனிதர்,
வேங்கட சுப்ரமணியன், தனது 69-வது வயதில், நேற்று (1 செப்டம்பர் 2009) மாரடைப்பால் இறந்தார்.எல்லா சாவுகளுமே அதிர்ச்சி தரக்கூடியவை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் இது தாங்கமுடியாத இழப்பு. அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் குடியாட்சி முறை சீர்மையுடன் நடக்கவேண்டும், லஞ்சம் அழியவேண்டும், மக்கள் வளத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த இழப்பு ஈடுசெய்யவே முடியாதது.
இந்திய ஆட்சிப் பணியில் இருந்த வெகு சிலரே, ஓய்வுபெற்றபின், வேங்கட சுப்ரமணியன் அளவுக்கு பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் வேங்கட சுப்ரமணியன் grassroots அளவில் அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலத்துக்கு பதிலாக தமிழில் எழுதுவது, தமிழ் மூலம் பெருவாரியான கிராம மக்களைச் சென்றடைவது, கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘குடிமக்கள் முரசு’ என்ற மாதப் பத்திரிகையை அவர் நடத்திவந்தார்.
திருக்குறளில் நல்ல பரிச்சயம் கொண்டிருந்த இவர், அற்புதமான தமிழில் எழுதக்கூடியவர், பேசக்கூடியவர். தினமணியில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார். அவ்வாறு தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத்தான் கிழக்கு பதிப்பகம் இரு தொகுதிகளாக [
கட்சி ஆட்சி மீட்சி |
மக்களாகிய நாம்] கொண்டுவந்தது. அவர் தானாகவே வெளியிட்ட இரு புத்தகங்களை அடுத்து மறு வெளியீடு செய்யவேண்டும் என்று பேசி, முதலில் ‘தட்டிக்கேட்க தகவல்கள்’ என்ற புத்தகத்தையும் அடுத்து, ‘மன்னரா, மனுதாரரா’ என்ற புத்தகத்தையும் கொண்டுவருவது என்று சொல்லியிருந்தேன்.
குடிமக்கள் முரசு பத்திரிகையுடன் இலவச இணைப்பாக வந்த சில நெடுங்கட்டுரைகளைப் புத்தகமாகத் திரட்டிக் கொண்டுவரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். முனைவர் வா.செ.குழந்தைசாமி இட ஒதுக்கீடு பற்றி எழுதியதை ஆங்கிலத்தில் மொழிமாற்றி சிறு வெளியிடாகக் கொண்டுவருவது பற்றி வேங்கட சுப்ரமணியன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆங்கில மேனுஸ்க்ரிப்டை இரு வாரங்களுக்கு முன்னர்தான் அனுப்பியிருந்தார். அந்த வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேங்கட் சுப்ரமணியன் அற்புதமாகப் பேசினார். (அதன் ஒலிப்பதிவைத் தேடி எடுத்து, வலையில் ஏற்றுகிறேன்.)
வேங்கட சுப்ரமணியனிடம் பேசி பல பாட்காஸ்ட்கள் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.
அவர் குடிமக்கள் மையம் (Citizens' Centre) என்று பல கிராமங்களில் தொடங்கி, கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தலைமைப் பண்புகளைப் பயிற்சியின்மூலம் அளிக்க ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அந்தப் பணி, அவரது நினைவாக விடாது தொடரும் என்று நம்புகிறேன்.
தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி நிறைய வருத்தம் கொண்டிருந்த அவர், அவற்றை எப்படிக் களையலாம் என்பது தொடர்பாகப் பல கருத்துகளைக் கொண்டிருந்தார். அந்தக் கருத்துகளை பயமின்றி எழுதியும் வந்தார். தமிழர்கள் தேவையின்றி அச்சப்படுகிறார்கள் என்றும் அவர் நினைத்தார். பயமில்லாத மனிதர்களே ஒரு குடியாட்சியில் நல்ல குடிமகன்களாக இருக்கமுடியும் என்பது அவரது கருத்து. நான் எந்தக் காரணத்துக்காகவும் அச்சப்பட மாட்டேன்; பயமின்றி என் கருத்துக்களை வெளியிடுவேன் என்று இந்த நாளில் மனத்துக்குள்ளாக உறுதி கூறிக்கொள்கிறேன்.
ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்று யோசிக்கிறேன். அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.