Monday, October 05, 2009

வி.பி.தனஞ்செயன்: பாரதமும் பரதமும்

மாதா மாதம் முதல் சனிக்கிழமை தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் நடத்தும் கூட்டத்தில் இந்த மாதம் (3 அக்டோபர் 2009) அன்று நாட்டிய மேதை வி.பி. தனஞ்செயன் கலந்துகொண்டு பேசினார்.

அதன் ஒளிப்பதிவு கீழே. வீடியோவை முழுதாகப் பார்க்க plug-in ஒன்று தேவை. ஒளி ஓகே. ஒலிப்பதிவின் தரம் சுமார்தான்.


Watch V.P. Dhananjayan on the art of Bharatam (Indian Classical Dance) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

சென்ற மாதம் (5 செப்டெம்பர் 2009) அன்று நடந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இங்கே உள்ளது.

Sunday, October 04, 2009

மாமல்லபுரம்: கலையின் பேராச்சரியம்

பேராசிரியர் சுவாமிநாதன் பலமுறை மாமல்லபுரத்தைப் பற்றி விளக்கிப் பேசும்போது நான் கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் காணப்போகும் பவர்பாயிண்ட் பிரெசெண்டேஷனை பலமுறை பார்த்துள்ளேன். அவருடன் மாமல்லபுரம் சென்று அவர் ஒவ்வோர் இடமாக விளக்கிச் சொல்லும்போது கேட்டிருக்கிறேன். ஒருமுறை ‘மகேந்திரவர்மன் பாதையில்’ என்று மகேந்திரவர்மன் எங்கெல்லாம் குகைக் கோயில்களை உருவாக்கினான் என்று பின்பற்றிச் சென்றோம்.

இனியும் பலமுறை அவருடன் மாமல்லபுரம் செல்வேன்.

காந்தி ஜெயந்தி அன்று நடந்த ஒரு பிரெசெண்டேஷனை விடியோ படமாக எடுத்தேன். சுமார் 2 மணி நேரம். என் கையில் இருந்த வீடியோ பிடிக்கும் கருவியால் இவ்வளவுதான் செய்யமுடிந்தது. திரையில் காணப்படும் பல அவ்வளவு தெளிவுடன் இருக்காது. இருந்தாலும் ஓரளவுக்கு மாமல்லபுரத்தின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

பேச்சு பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். முழுமையாகப் பார்க்கவேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு plug-in தேவை.


Watch Prof Swaminathan on the Uniqueness of Mamallapuram Sculptures (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Swaminathan on the Uniqueness of Mamallapuram Sculptures (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி அன்று, கீழ்க்கட்டளை ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு விழாவில் கலந்துகொண்டேன்.

கிண்டி வரை சென்னை நகராட்சியின் கையில் உள்ளது என்று தெரிகிறது. அதற்கு அப்பால் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை எல்லாம் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த ஏதோ ஓர் அமைப்பால் பராமரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அந்த கிரகத்தின் லேண்ட்ஸ்கேப் போலவே சாலைகளை அமைத்துள்ளனர்.

நான் ஸ்கூட்டரில்தான் சென்றேன். மடிப்பாக்கம் சாலையில் ஆதம்பாக்கம் முதல் கீழ்க்கட்டளை வரை நான்கைந்து முறை சென்று வருதல் முதுகெலும்பு உள்ள மிருகங்கள் (நம்மையும் சேர்த்து) அனைத்துக்கும் மிகுந்த ஆபத்து என்று புரிந்துகொண்டேன். அந்தச் சாலையில் செல்ல ஏற்ற ஒரே வாகனம், அப்துல் கலாம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் ஹோவர்கிராஃப்ட் மட்டுமே.

திடீரென்று வழியில் ஓரிடத்தில் புழுதிவாக்கம் என்று பெயர் போட்டிருந்தனர். அதற்கு முந்தைய பகுதியும் புழுதி வழிந்தபடியேதான் இருந்தது. இந்த இடத்துக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்புப் பெயர்? அடுத்து மேடவாக்கம். மேடும்(பள்ளமும்)வாக்கம் என்ற பெயர் அப்படித் திரிந்துபோனதா தெரியவில்லை. தமிழறிஞர்கள்தான் சொல்லவேண்டும்.

ஒருவழியாக அந்தப் பள்ளியைக் கண்டுபிடித்து (மெயின் ரோடில்தான் உள்ளது. ஆனால் மெயினில் ரோடுதான் இல்லை) உள்ளே நுழைந்தேன். நிறைய என்.எஸ்.எஸ் மாணவர்கள் பசியோடு இருந்தனர். ஒரு பெரிய அலுமினியப் பாத்திரத்தில் இருந்து தட்டுகளில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. பிரிஞ்சி?

தூரத்தில் ஒரு மேடையில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அரிமா சங்கத்தினர். அவர்களுக்கே உரித்தான ஒரு கண்டாமணி மேஜையில் இருந்தது. நான் உள்ளே நுழையவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பிரசன்னா கையில் கேமராவுடன் இருந்தார். பாதி நிகழ்ச்சி ஆரம்பித்ததும் திடீரென நான் வந்துவிட்டேனா என்பதை உறுதிசெய்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் என்னையும் மேடைக்கு அழைத்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 70 பள்ளிக்கூடங்களின் மானவர்களுக்கு கட்டுரைப் போட்டி நிகழ்த்தியிருந்தனர் அந்த அரிமா சங்கத்தினர். அதற்கான பரிசுகளை (புத்தகங்கள்) அளிக்க நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தோம். அரிமா சங்கத்தினர் பலரும் பேசினர். நானும் காந்தியைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினேன். முக்கியமாக காந்தி எழுதிய ‘தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ நூலை அனைவரையும் படிக்கச் சொன்னேன். (இந்த நூல் விரைவில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக, நல்ல, எளிமையான தமிழாக்கமாக வர உள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக இப்போதே கிடைக்கிறது. ஆனால் தமிழ் கொஞ்சம் கஷ்டம்தான்! இணையத்தில் ஆங்கில வடிவம் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளமுடியும்.)

அந்தப் பள்ளியில் ஒரு புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம். இன்றுவரையில் நடைபெறும்.

===

பேராசிரியர் சுவாமிநாதனை காந்தி ஜெயந்தி அன்று ஒரு பள்ளிக்கூடத்தினர் பேசுவதற்காக அழைத்திருந்தனராம். அந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஒரு ‘சர்வதேச’ பள்ளி. அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனராம். ‘எங்கள் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி அக்கறை இல்லை. தேவையும் இல்லை. அதனால் நீங்கள் காந்தியைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. வேறு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.’

இதுபோன்ற தெளிவுதான் நமக்கு மிகவும் அவசியம்!

===

காந்தி ஜெயந்தி அன்று பேராசிரியர் சுவாமிநாதன் மாமல்லபுரச் சிற்பங்கள் பற்றி நீண்ட பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் உரை நிகழ்த்தினார். அந்த வீடியோவை வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதைப் படிக்கும்போது veoh.com வழியாக அந்த உரை உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

Saturday, October 03, 2009

கிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை

எழுத்தாளர் சா.கந்தசாமி ஓர் ஆவணப்படம் எடுத்துவருகிறார். 18-ம் நூற்றாண்டில், பாண்டிச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர்மீதான ஆவணப்படம் அது. மதுரை புத்தகக் கண்காட்சியின்போது அங்கே அவரைச் சந்தித்தேன். அப்போது ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி உரையாடினோம். அதன் தொடர்ச்சியாக இன்று காலை அவரை அவரது வீட்டில் சந்தித்து ஒலிப்பதிவு செய்த பாட்காஸ்டிங் இது.

கிழக்கு பாட்காஸ்ட்

எனது முந்தைய பதிவு ஒன்று: ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்
.

Thursday, October 01, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்

கிழக்கு பாட்காஸ்டில் சென்ற ஞாயிறு அன்று ஸ்ரீநிவாச ராகவனும் உமா சம்பத்தும் சித்ராவுடன் உரையாடினார்கள். சித்தர்கள் பற்றிய நம்பிக்கைகள், சதுரகிரி மலை என பல விஷயங்கள் உரையாடலில் வெளியானது.

கிழக்கு பாட்காஸ்ட்




தொடர்புள்ள புத்தகங்கள்: