Friday, December 24, 2010

எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1

சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில்.

புத்தகக் கண்காட்சியின்போதுதான் இந்தப் புத்தகங்களில் சில பிரதிகள் அச்சாகி வந்திருந்தன. அவை அடுக்கப்படும் முன்னரேயே விற்பனையும் ஆகிக்கொண்டிருந்தன. நில்லுங்கள் ராஜாவே, மீண்டும் ஜீனோ தவிர மற்றவை அதிகம் கேள்விப்படாத புத்தகங்கள். அதன்பின் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டோம். இவை அனைத்தும் பிரம்மாண்டமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண, வாங்கக் கிடைக்கும்.

கடந்த சில மாதங்களிலேயே சுஜாதாவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது என்பதை அறிந்துகொண்டுள்ளோம். சுஜாதா இன்னும் தமிழக மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரவே இல்லை. புத்தகக் கடைகள் தாண்டி தெருவோரக் கடைகளில், டிபார்ட்மெண்டல் கடைகளில் எல்லாம் வைக்கப்படும்போது அங்கு வரும் மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.

இந்த ஆண்டில் நான் வேலை செய்த பல புத்தகங்களுக்கிடையே சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் திருப்தி தரக்கூடியவை. கடுமையான மொழி கொண்ட மொழிமாற்றல் புத்தகம் ஒன்றுடன்தான் என் காலை வேளை தினமும் ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரத்துக்குப்பின் மண்டைக் குடைச்சல். அப்போது சுஜாதா புத்தகத்தைக் கையில் எடுத்து மெய்ப்பு பார்க்கத் தொடங்கினால், வேலைக்கு வேலையும் ஆயிற்று, ரிலாக்சேஷனும் ஆயிற்று.

அப்படித்தான் நான் படித்தே இராத பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பலமே உரையாடல்கள் மூலம் படு வேகமாகக் கதையைக் கொண்டு செல்வது. எப்போதே படித்திருந்தாலும் இப்போது கையில் எடுக்கும்போதும் மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் கதைகள். முடிவுகள் பெரும்பாலுமே திருப்தியற்றவையே. ஆனால் தொடர்கதைகளை எழுதும்போது வேறு வழி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கதைகள் தொடர்கதைகள் என்றால், சில மாத நாவல்களும் உண்டு. சுஜாதா என்றாலே கணேஷ் - வஸந்த் என்றுதான் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி பல மர்மக் கதைகள் முதல் மனித மனங்கள் பற்றிய கதைகள் உண்டு.

மீண்டும் ஜீனோ கொண்டுவந்தபோது ‘என் இனிய இயந்திரா’ இல்லையா என்றார்கள் (திருமகள் நிலையம் வெளியீடு). விரைவில் வந்துவிடும் என்றோம். இப்போது அதுவும் வந்துவிட்டது. என் கணக்கின்படி, சுஜாதா புத்தகங்கள் மொத்தம் 76 இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு வெளியீடாகக் கிடைக்கவேண்டும். சில அச்சாகி வருமா என்பதில் சந்தேகம் உண்டு. கண்காட்சியில் கிடைக்கக்கூடிய முக்கியமான சில:

நில்லுங்கள் ராஜாவே
நைலான் கயிறு
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நில், கவனி, தாக்கு!
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும் சேர்த்து ஒன்றாக)
கனவுத் தொழிற்சாலை
கரையெல்லாம் செண்பகப்பூ
காயத்ரி
ப்ரியா
திசை கண்டேன் வான் கண்டேன்
சொர்கத்தீவு
வைரங்கள்
இருள் வரும் நேரம்
உள்ளம் துறந்தவன்
ஆ...!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

பின்வரும் நாள்களில் ஒரு பதிவில் 76 நூல்களையும் பட்டியலிடுகிறேன்.

Thursday, December 23, 2010

பியர்சனுடன் சில புத்தகங்கள்

சுமார் 18 மாதங்களுக்குமுன் ஆரம்பித்த உறவு இது. பியர்சன் என்ற உலகின் நம்பர் ஒன் பதிப்பக நிறுவனம், கல்வித்துறைப் புத்தகங்களில் முன்னணியில் உள்ளது. தி எகானமிஸ்ட், ஃபினான்ஷியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் இந்தக் குழுமத்துடையதே. பெங்குவின் என்ற பதிப்பக நிறுவனமும் இவர்களுடையதே.

பியர்சனிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொடர் புத்தகங்களைத்தான் முதலில் மொழிமாற்றத் தொடங்கினோம். The Rules of Work (வேலை விதிகள்), The Rules of Management (நிர்வாக விதிகள்), The Rules of Wealth (செல்வம் சேர்க்கும் விதிகள்), The Rules of Life (வாழ்க்கை விதிகள்) என்ற நான்கு புத்தகங்கள் அவை. ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவை பார்க்க சுவாரசியமான சுய முன்னேற்ற வகைப் புத்தகங்கள். சுருக்கமான சூத்திரங்கள், ஒவ்வொன்றும் இரண்டு பக்கம் வரக்கூடிய அளவில் விவரித்து எழுதப்பட்டிருக்கும். ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் பல இருக்கும். ஆசிரியர் வென்ற இடங்கள் மட்டுமல்ல, தோற்ற இடங்களும் இருக்கும். உங்களுக்கு அருகில் நெருங்கி வரக்கூடிய புத்தகங்கள் இவை. இதை எழுதியவர் தன் சொந்தப் பெயரில் எழுதவில்லை. கணவன், மனைவி ஜோடி சேர்ந்து எழுதிய புத்தகங்கள் இவை. பின்னர் கணவர் இறந்தபின்னும் மனைவியின் எழுத்தில் ஆனால் ரிச்சர்ட் டெம்ப்ளர் என்ற பெயரில் மேலும் நான்கு புத்தகங்கள் வந்துள்ளன: The Rules of Parenting (பெற்றோருக்கான விதிகள்), The Rules of Love (காதல் விதிகள்), How to Spend Less without Being Miserable (செலவைக் குறைப்பது எப்படி), How to Get Things Done without Trying Too Hard (நினைப்பதை செய்துமுடிப்பது எப்படி). இவற்றையும் தமிழில் கொண்டுவந்துள்ளோம்.

ஆரம்பத்தில் இவை எப்படி விற்கும் என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் ரூல்ஸ் புத்தகங்கள் முதலில் அச்சான 2,000 விற்று, அடுத்து அச்சான 3,000 விற்று, அடுத்து அச்சான 5,000 கிட்டத்தட்ட விற்று முடிந்துவிட்டது. அடுத்த அச்சுக்கும் போய்விட்டது என்றுதான் ஞாபகம். ஆங்கிலத்தில்கூட இந்தப் புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் இவ்வளவு விற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஹிந்தியில் ஒரு பதிப்பில் 5,000 போட்டது அவ்வளவுதான். அதற்குமேல் அச்சிடப்படவில்லை என்பது எனக்குத் தெரியும்.

தொடர்ந்து, பியர்சனின் இதேபோன்ற சில புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தோம். பொதுவான சுய முன்னேற்றப் புத்தகங்களிலிருந்து சற்றே விலகி, கொஞ்சமாவது நவீன மேனேஜ்மெண்ட் கருத்துகள் இருக்கக்கூடிய புத்தகங்களாக மொழிபெயர்த்துக் கொண்டுவர ஆரம்பித்தோம். அப்படிக் கொண்டுவந்துள்ள சில புத்தகங்கள் இவை:

The Truth about Managing your Career (வேலையில் முன்னேற சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Being a Leader (தலைமை தாங்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Managing People (மனிதர்களை நிர்வகிக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Making Smart Decisions (சரியாக முடிவெடுக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Confident Presenting (சிறந்த பேச்சாளராக சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Getting your Point across (எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Hiring the Best (சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Getting the Best from People (பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்சஸ் ஃபார்முலா)
The Truth about Negotiations (பேச்சு வார்த்தைகளில் வெற்றிபெற சக்சஸ் ஃபார்முலா)

இந்தப் புத்தகங்கள் எல்லாமே co-publishing என்ற முறையில் கொண்டுவரப்படுபவை. பியர்சன், கிழக்கு என இரு பிராண்ட்களும் இணைந்து பதிப்பிக்கும் புத்தகங்கள் இவை. இந்தியாவின் எந்த மொழியுடன் ஒப்பிட்டாலும், தமிழில் மட்டும்தான் இந்த அளவுக்கு பியர்சனால் புத்தகங்களைக் கொண்டுவர முடிந்துள்ளது. இதே உறவின் அடிப்படையில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அதில் மிக முக்கியமானது டோனி பூஸானின் புத்தகங்கள். மன வரைபடம் (Mindmap) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த பூஸான், ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனாக இருக்கட்டும், வேலையில் ஈடுபடும் பெரியவராக இருக்கட்டும், ஞாபக சக்தியைக் கட்டவிழ்த்துவிட, பலதரப்பட்ட விஷயங்களுக்கு இடையேயான தொடர்புகளை வேகமாகப் புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமித்துவைக்க மன வரைபடம் என்ற உத்தியைக் கையாளலாம் என்கிறார் இவர். அதன் அடிப்படையில் அவர் எழுதியுள்ள இரு புத்தகங்களைத் தமிழாக்கம் செய்துள்ளோம்: Use Your Head (மூளையை முழுதாகப் பயன்படுத்து), The Mind Map Book (மன வரைபடம்). இவை இரண்டுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்பேன் நான்.

ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயாராகுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு புத்தகம் பியர்சன் வெளியிட்டுள்ள Concise GK. இதனைத் தமிழாக்கி ‘பொது அறிவு தகவல் களஞ்சியம்’ என்று வெளியிட்டுள்ளோம். UPSC மட்டுமின்றி, TNPSC முதலான பல நுழைவுத் தேர்வுகளுக்கு இந்தப் புத்தகத்தை பயன்படுத்தலாம்.

பியர்சன் இன்னபிற புத்தகங்கள் இதுவரை அச்சுக்குப் போயிருப்பவை:

Winning at Interviews (நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற)
Winners Never Cheat (வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை)
Body Language (உடல் மொழி)
Smart Retail - Turn Your Store into Sales Phenomenon (வெற்றிகரமான சில்லறை வியாபாரம்)
Change your Life with NLP (வெற்றிக்கு ஒரு வரைபடம் - NLP)
Brilliant Start-up (ஈஸியாத் தொடங்கலாம் பிசினஸ்)

மேலும் சில புத்தகங்கள் மொழிமாற்றத்தில் உள்ளன. கடந்த ஓராண்டில் இத்தனை புத்தகங்கள் இந்தத் துறையில் வரிசையாகக் கொண்டுவந்ததே ஒரு பெரும் சாதனை என நினைக்கிறேன். இவற்றுக்கு உங்கள் ஆதரவு பெரிதும் தேவை.

இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள்

இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.

ஊழல்? இந்து மதவாதம்? இஸ்லாமிய தீவிரவாதம்? மாவோயிச பயங்கரவாதம்? உலகமயத்தாலும் தாராளமயத்தாலும் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை, அதன் விளைவாக ஏற்படும் இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயம்? அஸ்ஸாம், பிற வட கிழக்கு இந்தியப் பிரச்னைகள்?

இன்னும் பலவற்றையும் பலர் சொல்வீர்கள். அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம்.

காஷ்மீர் பிரச்னையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. காஷ்மீர் (அல்லது ஜம்மு காஷ்மீர்) என்பது இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி, இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்பது ஒரு தரப்பு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் தரப்பும் இதுதான். ஆனால் இது நியாயமான ஒரு வாதமா? மறுபக்கம் அருந்ததி ராய் போன்றோரின் தரப்பு. எந்தப் பகுதி மக்களுக்கும் நியாயமான சுய நிர்ணய உரிமை இருக்கவேண்டும்; அப்படி அவர்களுக்கு அந்த உரிமையைத் தராமல் ராணுவத்தை அனுப்பி அவர்களை நசுக்குவது மனித உரிமை மீறல் என்னும் வாதம். உலகின் எந்த ‘ஆக்ரமிப்பு’ ராணுவமுமே கற்களுக்கு பதில் புல்லட்டையும் நியாயமான எதிர்ப்புக்கு பதில் சித்திரவதையையுமே கொடுத்துள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு விதிவிலக்கல்ல. மணிப்பூர் முதல் காஷ்மீர் வரை நாம் இதைத்தான் பார்த்துள்ளோம்.

காஷ்மீரிகள் நியாயமாக எதனை விரும்பினர்? ஹரிசிங் யார்? அவரது ‘லெகசி’ என்ன? 1947-ல் காஷ்மீருக்குள் ஊடுருவிய பதான்கள் ஏன் அங்கு வந்தனர், என்ன செய்தனர்? அதன் பின்விளைவுகள் என்ன? நேரு, சாஸ்திரி, இந்திரா முத;ல் இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் பற்றி எந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர்? நேருவுக்குப் பின் அது எப்படி மாற்றம் அடைந்தது? காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத அலைக்குள் எப்படிச் சிக்கிக்கொண்டது? ஜம்மு பகுதியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்னையில் எடுத்துள்ள நிலை என்ன? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் யார்? அவருக்கு காஷ்மீரில் என்ன ஆனது?

இதற்கெல்லாம் முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பகுதியின் புவியியல் அமைப்பு என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், வடக்குப் பகுதிகள், பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அல்லது ஆஸாத் காஷ்மீர், சீனாவிடம் போன துண்டு துணுக்குப் பகுதிகள், இவை பற்றிய புரிதல்.

ஷேக் அப்துல்லா, காஷ்மீரின் சிங்கம் எனப்படுபவர். அவர் நேரு காலத்திலிருந்து ஏன் சிறையில் அடைக்கப்பட்டபடி இருந்தார்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பது தெரியுமா? அவரிலிருந்து தொடங்கி இன்று அவர் பேரன்வரை காஷ்மீர் பிரச்னையில் என்ன சொல்கிறார்கள்?

போராட்டம் அல்ல நாங்கள் செய்வது, விடுதலை அல்ல எங்கள் இலக்கு, எங்கள் இலக்கெல்லாம் ஜிஹாத் ஜிஹாத் ஜிஹாத் என்று காஷ்மீர் போராட்டத்தின் திசையையே மாற்றிய ஆஃப்கனிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமிய கூலிப்படை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

சரி, இனி அடுத்து என்ன ஆகப்போகிறது? தீர்வுதான் என்ன?

பா.ராகவனின் காஷ்மீர் பற்றிய புத்தகம் உங்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய நல்ல ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.

---

சமீபத்தில் ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் பேசியதை அவர் ஓர் அறிக்கையாக அமெரிக்கா அனுப்ப, அங்கிருந்து அது ஜூலியன் அஸாஞ்ச் மார்க்கமாக இணையவெளியில் பரவ, இந்தியப் பத்திரிகைகள் அதைக் கைமா செய்துவிட்டன. ராகுல் காந்தி என்னவோ இந்துக்கள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயலைச் செய்கின்றனர், லஷ்கர்-ஈ-தோய்பாவை விட மோசமானவர்கள் அவர்கள்தான் என்று சொன்னதுபோலச் செய்திகள் பரவின. ராகுல் காந்தி சொன்னது இவ்வளவுதான்:
Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community.
லஷ்கர்-ஈ-தோய்பா, இந்தியாவுக்குப் பிரச்னைதான். அதனால் உந்தப்பட்டு சில இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது பிரச்னைதான். ஆனால்... அதையெல்லாம் விடப் பெரிய பிரச்னை தீவிரவாதச் சிந்தனை கொண்ட இந்துக் குழுக்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்துடன் அவை அரசியல்ரீதியாக மோதி, அதன் விளைவாக மதக் கலவரங்கள் ஏற்படுவதுதான்.

இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும். மதரீதியாக இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு, இந்தியாவின் இதயத்தைக் கிழித்து ரத்தம் சிந்தவைத்துள்ளன. தேசப் பிரிவினைக்கு முன்பிருந்து தொடங்கி, பின் பிரிவினையில் அதன் உச்சத்தைத் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய ரணம், அயோத்திப் பிரச்னையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து தொடங்கி, மும்பையில் ஏற்பட்ட தாவூத் கோஷ்டி குண்டுவெடிப்புகள், மும்பைக் கலவரங்கள், பின் கோத்ரா ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத்தில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள், இந்தியாவின் பல பெரு நகரங்களில் வைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்... என்று இது இன்றும் தொடர்கிறது.

இந்த போலரைசேஷனுக்கு யார் காரணம்? தீவிரச் சிந்தனைகள்தான் தீவிரச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இந்தியா என்பது இந்து தேசமா? இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் இடமா? தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள் என்று முஸ்லிம்களை இன்றும் தொடர்ந்து ஊசிபோலக் குத்துவது யார்? முஸ்லிம்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டது? அதன் குறிக்கோள் என்ன? தேசம் என்பதற்கான அதன் வரையறைகள் என்ன? அதன் குறிக்கோளுக்கும் காந்தியின் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு அல்லது விலகல்? நவீன இந்திய தேசத்தின் வலுமிக்க அமைப்புகளை (அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றக் குடியாட்சி முறை) உருவாக்கிய அம்பேத்கர், நேரு கருத்துகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறது?

இன்று ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கம் இந்தியாவில் அசைக்கமுடியாத ஓர் அமைப்பு. அதன் கருத்துகள் பழமைவாதம் பேசுபவையா? அல்லது வலுவான இந்திய தேசத்தை அமைக்க உதவுபவையா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸா? ஆர்.எஸ்.எஸ் இருக்கும்வரை இந்த நாட்டில் அனைவரும் அமைதியாக இருக்கமுடியுமா?

கேள்விகள் என்னுடையவை. பா.ராகவனின் புத்தகத்தில் பதில்கள் இருக்கும். கட்டாயமாக வாங்கிப் படித்துவிடுங்கள்.

*

இரு புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும். ஜனவரி 4 முதல் ஜனவரி 17 வரை.

Wednesday, December 22, 2010

ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது?

ஒரு புத்தகப் பதிப்பாளனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இது. எந்த அறிவியலுக்கும் கட்டுப்படாத விஷயம் இது. பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். அந்தச் செயல் நடந்துமுடிந்ததும் பிறகுதான் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. இந்த சூட்சுமம் ஒருசிலருக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடுகிறது.

ரஜினி படம் என்றால் ஊரில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா? அதைப் பற்றி ஊரில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும். இணையத்தில் விமரிசனம் தூள் பறக்கும். தொலைக்காட்சியில் பேட்டிகள்.

புத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும்? அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது?

ஆனால் அபூர்வமாக அப்படி ஒரு புத்தகம் வந்துவிடுகிறது. சில மாதங்களுக்குமுன் பாலசுப்ரமணியம் என்ற சிரியஸ் ரஜினி ரசிகர், ரஜினி பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக சில பக்கங்களை அனுப்பினார். ரஜினி சினிமாக்களின் பஞ்ச் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு மேனேஜ்மெண்ட் வாசனை கொண்ட புத்தகம். ஆங்கிலத்தில் இருந்தது. தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்திருகும் கிட்டு என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து புத்தகத்தை எழுதியிருந்தார். அதை நாங்கள் பதிப்பிக்க முடிவு செய்தோம். அப்படியே தமிழிலும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன் விற்பனை எப்படியிருக்கும் என்பது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. சினிமா வாசனை கொண்ட புத்தகங்கள் பலவற்றை நாங்கள் பதிப்பித்துள்ளோம். ஆனால் அவை அதிகம் விற்றதில்லை. அதிகம் என்றால் பல ஆயிரங்கள். இவை அதிகபட்சம் 2,000 - 3,000-க்குள் முடிந்துவிடும்.

ரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை.

இதற்கிடையில் ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு புத்தகம் ஒரு பிரதியும் ஒரு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தோம். ரேடியோ ஒன் எஃப்.எம் சானல் ஒரே சந்தோஷத்தில் ஏகப்பட்ட புரமோஷன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (எல்லாம் ஃப்ரீ!). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி! அத்தோடு விட்டார்களா! இந்த வாரக் குங்குமம் வாங்கிவிட்டீர்களா என்று சன் குழும சானல்கள் அனைத்திலும் செய்யும் விளம்பரத்தில் ‘ரஜினியின் பன்ச் வசனங்கள் நிர்வாக வழிகாட்டி’ (அல்லது இப்படி ஏதோ) என்று நொடிக்கு நூறு தரம் வரத்தொடங்கியது.

லாண்ட்மார்க் அவர்களது கஸ்டமர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இந்தப் புத்தகத்தை முதலில் வைத்து, ஸ்பெஷல் ஆஃபர் அனுப்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் தானே பல புத்தகங்கள் வாங்கி சினி இண்டஸ்ட்ரியில் பலருக்குக் கொடுத்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமாத்துறையினர் 50, 100 என்று புத்தகங்களை வாங்கி மேலும் பலருக்குக் கொடுக்கின்றனர்.

ஜப்பானிலிருந்து எங்கள் இணையத்தளத்துக்கு இந்தப் புத்தகத்துக்கு சில ஆர்டர்கள் வந்துள்ளன. (நிஜமாவேங்க!)

அப்படி என்ன இந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இதனை வாங்கலாமா, கூடாதா என்பது பற்றி நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நீங்களே வாங்கி முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை.

நானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை.

உலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?


கடந்த ஆறு மாதங்களின் உலகின் முக்கிய தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள், வீட்டோ அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் இந்தியா வந்தனர். அப்போது அவர்கள் சொன்னவை, செய்தவை.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், 27-29 ஜூலை 2010

இந்திய-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தங்கள்: $1.1 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.”

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 6-9 நவம்பர் 2010

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்: $10 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாத வலைப்பின்னல்கள், முக்கியமாக லஷ்கர்-ஈ-தோய்பா, தோற்கடிக்கப்படவேண்டும். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும்.”

பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி, 4-7 டிசம்பர் 2010

இந்திய-பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள்: யூரோ 7 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“அண்டை நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனுமதிக்கமுடியாதது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் தன் முயற்சிகளை அதிகப்படுத்தவேண்டும்.”

சீனப் பிரதமர் வென் ஜியாபோ, 15-17 டிசம்பர் 2010

இந்திய-சீன வர்த்தக ஒப்பந்தங்கள்: $16 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பேச்சு ஏதுமில்லை
பாகிஸ்தான் பற்றி: பேச்சு ஏதுமில்லை. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன என்று கூட்டு அறிக்கை மட்டுமே.

ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவ், 21-22 டிசம்பர் 2010

இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்கள்: $30 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாதத்துக்கு உதவும், தூண்டிவிடும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகள், பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் அளவுக்கே குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பாகிஸ்தான் தண்டனை அளிக்கவேண்டும்.”