Wednesday, March 16, 2011

குறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்

கடன் பற்றி பல்வேறு கலாசாரங்களிலும் மதங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இஸ்லாம், வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிப்பதில்லை. யூதர்களும் ஆரம்பத்தில் வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிக்கவில்லை. ஆனால் நாளடைவில், யூதர் அல்லாதோருக்கு யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பகாலக் கிறிஸ்தவமும் வட்டிக்குக் கடன் கொடுத்தலைக் கடுமையாக எதிர்த்தது. எனவே இயல்பாகவே ஐரோப்பா முழுமையிலும் கிறிஸ்தவர்கள் கடன் வாங்குபவர்களாகவும் யூதர்கள் அவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் ஆனார்கள்! பின்னர் வங்கித் தொழில் என்ற ஒன்று ஐரோப்பாவில் ஆரம்பித்ததும், யூதக் குடும்பங்களே அதில் முதன்மையாக இருந்தன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் நடந்தபின்னும் இதுவே தொடர்ந்தது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் பற்றியும் அதற்கான விதிகள் பற்றியும் நாரத தர்மசாஸ்திரம் விரிவாகவே பேசுகிறது. பாஸ்கராசார்யா போன்றோரின் கணிதப் புத்தகங்களில் வட்டியைக் கணக்கிடுவது எப்படி என்றெல்லாம் கணக்குகள் வருகின்றன. தமிழ்க் காப்பியங்களில் வருவோர், வட்டிக்குக் கடன் வாங்கி, பொருள் வாங்கி, வாணிபம் செய்து பொருள் ஈட்டுதல் அல்லது பொருள் இழத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம். கம்ப ராமாயணம், கடன் பெற்றார் நெஞ்சம் போல ராவணன் கலங்கியதைச் சொல்வதிலிருந்து கடன் வாங்கினவர் கடனைத் திருப்பச் செலுத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதை அறியலாம். இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் கடன் தருதலில் ஈடுபடுவதைப் பார்த்துள்ளோம்.

நெதர்லாந்தில் தொடங்கிய நவீன வங்கிச் சேவை இங்கிலாந்தை அடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவில் பரவி, பிரிட்டிஷார் மூலமாக இந்தியாவுக்கும் வந்தது. சென்னையில் ஆர்பத்நாட் வங்கி மூழ்கியதை அடுத்து இந்தியர்கள் தங்களுக்கென சுதேசி வங்கி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டே இந்தியன் வங்கி, சில செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா சுதந்தரம் பெறுவதற்குமுன்னரேயே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தன. சுதந்தரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி காலத்தில் பல பெரிய வங்கிகள் கட்டாயமாக தேசியமயமாக்கப்பட்டன. இந்தியன் வங்கியும்கூட அப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1990-களின் தாராளமயமாக்கலின்போது தனியாரும் வங்கிகள் தொடங்கலாம் என்று உரிமம் தரப்பட்டு சில தனியார் வங்கிகள் உருவாகின. முற்றிலும் அந்நிய நாட்டின் வங்கிகளும் இந்தியாவில் சேவையைத் தர முடியும். இந்திய வங்கிகளில் அந்நிய நாட்டு அமைப்புகள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்கமுடியும்.

பெருமளவு வங்கிச் சேவைகள் வளர்ந்தாலும் இவை ஏழைகளைச் சென்றடைவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காரணம், இந்த வங்கிகள் அனைத்துமே, கடன் பெறத் தகுதியானோர் என்போருக்கே கடன் தரலாம். யாருக்குக் கடன் பெறத் தகுதி உண்டு என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில விதிமுறைகள் (norms) உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் விலக்கப்பட்டுவிடுவார்கள்.

வீட்டுக்கு எதிராகக் கடன், தங்கம் அல்லது பிற மதிப்புள்ள சொத்துகளுக்கு எதிராகக் கடன் என்பது கால காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன் ஆகியவை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்தன. கிரெடிட் கார்டுகள், என்ன ஏது என்று கேள்வி கேட்காமல், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கக்கூடிய அளவுக்குத் தனிநபர் கடன்களை அளித்தன. இதற்கான வட்டி அதிகம். பின்னர் வங்கிகள் நேரடியாகவே பெர்சனல் லோன் என்ற தனிநபர் கடன்களை எந்தவித பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாமல் தர ஆரம்பித்தன. ஒரு முறை கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்டியிருந்தால் தானாகவே அடுத்தமுறை அதிகக் கடன் தர வங்கிகள் தயாராக இருந்தன.

அரசு வேலையில் இருப்போருக்கு பொதுத்துறை வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தன. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கௌரவத்துக்குப் பொருந்தினாற்போல கடன் கிடைத்தது. சுயதொழில் புரிவோருக்குக் கடன் பெறுதலில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்டாண்டுக்குச் சரியாக வருமான வரி கட்டுவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு கிளினிக்கில் கருவிகள் வாங்கக் கடன் கிடைக்கிறது. சுயதொழில் புரிவோர் சில பல லட்சங்களுக்கு அல்லது கோடிகளுக்கு ஆலைக்கான கருவிகளை வாங்கக் கடன் கிடைக்கிறது.

ஆனால் தெருவோர ஏழைக்கு கையேந்தி பவன் வைக்கத் தேவையான 10,000 ரூபாய் அல்லது இஸ்திரி வண்டி அமைக்கத் தேவையான 5,000 ரூபாய்தான் கடனாகக் கிடைப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் வட்டிக் கடைகளை நம்பி, வாழ்க்கையை அழிக்கவேண்டியுள்ளது.

***

பங்களாதேசத்துக்காரர் முகமது யூனுஸ். அது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்துவந்தார் அவர். முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் துருப்புகள் கிழக்கு பாகிஸ்தானில் அட்டகாசம் செய்து, அதன் விளைவாக அகதிகள் இந்தியாவுக்கு வந்ததும் இந்தியா தன் படைகளை அனுப்பி பங்களாதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தந்தது. உடனேயே தாய்நாட்டை முன்னுக்குக் கொண்டுவர என்று யூனுஸ் தன் வேலையை விட்டுவிட்டு பங்களாதேசத்துக்குத் திரும்ப வந்தார்.

அங்கே பல்கலைக்கழக வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பொருளாதாரப் பாடத்தை நடத்தினார். ஆனால் வகுப்பறை பொருளாதாரமும் தெருவின் பொருளாதாரமும் ஒத்துப்போகாததைக் கண்டார். தன் மாணவர்களுடன் அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் தினசரி வேலை என்ன, எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்று பார்வையிட்டார். அந்த கிராமத்துப் பெண்கள் பிரம்பு பிளாச்சால் கூடை முடைபவர்கள். கையில் காசு இல்லாத காரணத்தால் தரகர்களிடமிருந்தே மூலப்பொருளை வாங்கி, கூடை முடைந்ததும் அவற்றை தரகர்களிடமே அவர்கள் சொன்ன காசுக்கே விற்றுவந்தார்கள். நாள் முழுதும் வேலை செய்தாலும் கையில் கிடைப்பதோ சில டாக்காக்கள் மட்டுமே. சொந்தமாகக் கொஞ்சம் பணம் இருந்தால் தாங்களே மூலப்பொருள்களை வாங்கி, கூடைகளை முடைந்து நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தங்கள் அதே உழைப்பை அதிக வருமானமாக மாற்றமுடியும் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

உடனேயே யூனுஸ் தன் கையிலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்தார். அடுத்த சில நாள்களில் அந்தப் பெண்கள் பெறும் வருமானம் அதிகமானது. இதே செயலை நாடு முழுவதும் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது.

அப்போதுதான் இது எளிதான செயல் அல்ல என்பதை அவர் உணர்ந்தார். முதலில் வங்கிகள் இந்த மக்களுக்குக் கடன் தர விரும்பவில்லை. தானே சொந்தமாக அவர்களுக்கு ஜவாப்தாரியாக இருப்பதாக யூனுஸ் சொன்னதும் ஒரு வங்கி கடன் தர முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் யூனுஸ் கையெழுத்திடவேண்டியிருந்தது. வங்கிகளுக்கு அதிக விருப்பம் இல்லாத காரணத்தால் தானே ஒரு வங்கியை உருவாக்கிவிட யூனுஸ் நினைத்தார்.

அப்போது ஜெனரல் எர்ஷாத், ராணுவப் புரட்சி மூலம் பங்களாதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார். அவரது நிதியமைச்சராக இருந்தவர் யூனுஸின் நண்பர். அவர்மூலமாக எர்ஷாதின் அனுமதியுடன் கிராமின் வங்கி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு 60% பங்கும் கடன் பெறும் மக்கள் மீதம் 40% பங்கும் கொண்டதாகத் தொடங்கப்பட்ட வங்கியில் பின்னர் அரசின் பங்கு 40%-கக் குறைக்கப்பட்டது.

கிராமின் வங்கி குறுங்கடன் என்ற முறையைக் கொண்டுவந்தது. கொடுக்கப்படும் கடன் தொகை மிகக் குறைவானது. 2,000 டாக்கா அல்லது அதைப்போலத் தொடங்கி, பின்னர் 5,000 டாக்கா என்றுதான் ஆரம்பக் கடன் இருந்தது. இந்தத் தொகைக்கு வட்டி உண்டு. Equated Weekly Instalments எனப்படும் வாரா வாரத் தொகை மூலம் முதல், வட்டி இரண்டும் சேர்த்து அடைக்கப்படும். கிராமின் வங்கி தொடங்குவதற்கு முன்னமேயே யூனுஸ் நேரடி அனுபவமாக சிலவற்றைக் கண்டுகொண்டார்.

1. பெண்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆண்கள் பணத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். அவர்களை நம்பிக் கடன் கொடுப்பது உருப்படாது.
2. விவசாயத்துக்குக் கடன் கொடுப்பது உபயோகமானதல்ல. ஏனெனில் எப்படியும் அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டே இருக்கும். எனவே தனியாரிடம் வாங்கும் கடனையும் திருப்பிச் செலுத்த விவசாயிகள் விரும்புவதில்லை.

எனவே பெண்களுக்குக் கடன் கொடுத்து, அவர்கள் ஏதேனும் சிறு தொழில் செய்வதுமூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று யூனுஸ் முடிவுசெய்தார்.

பெண்கள் கடனைத் திருப்பிக்கொடுப்பார்கள் என்றாலும் அவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்க என்ன செய்வது என்று யோசித்ததில் உருவானதுதான் குழுக்கடன். மொத்தம் ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களை கிராமின் வங்கி உருவாக்கும். இந்தக் குழுவில் ஒவ்வொருவர் வாங்கும் கடனுக்கும் மற்றவர்களும் சேர்ந்து பொறுப்பு. ஒருவர் கடனைக் கட்டாவிட்டாலும் மற்றவர்கள் கட்டவேண்டும். ஆனால் எந்தவித ஆவணமும் கிடையாது. அப்படி இருக்கும்போது மக்கள் ஏன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்?

ஒரு குழுவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கடன் கிடைக்காது. இருவருக்கு மட்டும்தான். அவர்கள் ஒழுங்காகக் கட்டினால்தான் மற்ற இருவருக்குக் கொடுக்கப்படும். நால்வரும் கட்டி முடித்தால்தான் குழுத் தலைவருக்குக் கடன் கிடைக்கும். அவர் ஒழுங்காகக் கட்டினால்தான் மீண்டும் அடுத்த கடன் குழுவின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். கடன்மூலம்தான் வாழ்க்கை உயருகிறது என்னும்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டியாகவேண்டிய கட்டாயமாகிறது.

இந்த முறையில் பிரச்னையே இல்லையா? மக்கள் எல்லாம் வளம் பெற்று பங்களாதேசம் உலகிலேயே முதன்மை நாடானதா? கடனுக்கு எதிரான இஸ்லாமிய முல்லாக்கள் நிறைந்த பங்களேதேசம் யூனுஸை எப்படி எதிர்கொண்டது? அரசியல் உலகில் அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் எழுந்தன?

அடுத்த பாகத்தில் இவற்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

Tuesday, March 15, 2011

குறுங்கடன் - 1

பொதுவாக வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத ஒரு செய்தி குறுங்கடன் (microfinance).

பின்தங்கியுள்ள ஒரு நாட்டில் நவீன பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும்போது, அந்த வளர்ச்சி சீராக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராது.

நிலத்தையும் கைவினைப் பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த, இயந்திரமயமாதலுக்கு முந்தைய, சமுதாயத்தில் தனி ஒருவர் தன் வருமானத்தைத் தடாலடியாகப் பெருக்கச் சாத்தியங்கள் குறைவாக இருந்தது. அவர் முரட்டுத்தனமாகப் பிறரது நிலங்களைக் கையகப்படுத்தினாலோ அல்லது பல அடிமைகளைக் கொண்டு அவர்களது உழைப்பில் தன் செல்வத்தைப் பெருக்கினாலோதான் சாத்தியம். இயந்திரமயமானதும், மூலதனம்தான் முக்கியமான செல்வம் என்றானது. பொருள்களுக்கான பெரும் தேவை இருந்தது. பொருள்களும் எளிதானவை. எனவே மூலதனம் இருந்தால், அதனைக் கொண்டு ஆலை ஒன்றை ஏற்படுத்தி, அதில் பலரை வேலைக்கு வைத்து, அவர்கள் உருவாக்கும் உற்பத்தியைக் கொண்டு லாபம் ஈட்டலாம்.

ஆனால் இன்றைய நவீன பொருளாதாரம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வெறும் மூலதனம் மட்டும் போதாது. மூளை நிறைய வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை கம்யூனிஸ்டு சித்தாந்திகள் புரிந்துகொள்வதே இல்லை. சொல்லப்போனால், இன்று மூளை மட்டும் இருந்தாலே போதும். மூலதனத்தைக் கொடுக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் தனிப்பட்ட பணக்காரர்களும் உள்ளனர். மூளை என்றால் என்ன? ஒரு நல்ல ஐடியா. இந்தக் குறிப்பிட்ட சந்தையில், இந்தவிதமான பொருளை, இந்தத் தரத்தில் உற்பத்தி செய்து, இந்த விலைக்கு விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா. மூலதனத்தைவிட இதுபோன்ற ஐடியாக்களே முக்கியமானவை என்பதை நிதியுடையோர் புரிந்துகொண்ட காரணத்தால் உருவானவையே வென்ச்சர் கேபிடல் அமைப்புகள். இந்தத் தொழில்கள் பொருள் உற்பத்தியாக இருக்கலாம், சேவை வழங்குதலாக இருக்கலாம்.

நவீன பொருளாதாரத்தில் இப்படி எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்களால் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது; இந்த நிறுவனங்களில் வேலை செய்வோரும் நிறையச் சம்பளம் பெற முடிகிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை அனைவரையும் சென்றடைவதில்லை.

முதலில் வேலை வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம். பெரும்பாலான அதிக சம்பளம் தரக்கூடிய நவீன வேலைகளை எடுத்துச் செய்ய ஒருவர் அதி புத்திசாலியாக எல்லாம் இருக்கவேண்டியதே இல்லை. அடிப்படையான சில திறன்கள் பெற்றவராக இருந்தாலேயே போதும். நுகர்வோர் சேவையை வழங்க, நன்கு பேசத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நன்கு உரையாடத் தெரிந்தவராக இருக்கவேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால் நைச்சியமாகப் பேசி, எதிராளியை நிறையப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குமாறு செய்யவேண்டும். நன்கு பேச்சுவார்த்தை நடத்தத் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதிராளி பேசுவதைச் சட்டென்று புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். கணினிப் பயன்பாட்டுத் திறன் அவசியம். இன்னும் பலப் பல திறன்கள் உள்ளன. இந்தத் திறன்களுக்கும் பள்ளி, கல்லூரி பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பெரும்பாலும் நகர்வாழ் மாணவர்கள், மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் வேகமாக முன்னேறவும் செய்கின்றன.

இந்த வாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளத்திலேயே வேலைகள் கிடைக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் எவை என்பதை அறிந்துகொள்ளாமல், தவறாக, ஆங்கிலப் படிப்பு மட்டுமே போதும் அல்லது எஞ்சினியரிங் படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டு நிறையப் பணம் செலவுசெய்து தரமற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, எதையும் கற்றுக்கொள்ளாமல் வேலை தேட வந்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தீர்வுதான் என்ன? அடிப்படையில் நம் கல்வி முறையைப் பெரிதும் மாற்றவேண்டும். என் கணிப்பில் பாடத்திட்டம் என்பது முக்கியமே அல்ல. சிலபஸ் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தி, அதைச் சரியாகச் சொல்லித்தரத் தெரியாத ஆசிரியர்கள் கையில் மாட்டிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் நாசமாகப் போகிறார்கள். கல்விமீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், 90% மாணவர்களின் தேவை, படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேசக் கற்றுத்தருவதே. ஆங்கிலமும் தாய்மொழியும் அவசியம். முடியாவிட்டால் தாய் மொழியிலாவது மேலே சொன்ன நான்கையும் நன்றாகச் செய்யத் தெரியவேண்டும். அவை தாண்டி, ஏதேனும் ஒரு துறையை அவரவர் விருப்பம் சார்ந்து படித்துக்கொள்ளலாம். கணக்கு, அறிவியல், கணினி புரோகிராமிங், வரலாறு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான திறன் வருமாறு செய்தல் வேண்டும். இதைப்பற்றி இங்கே மேலும் எழுதுவது இந்தக் கட்டுரைத் தொடரை வேறு திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்.

***

வேலைகளுக்கு வெளியே, சுயதொழில் புரிவதில் வேறொரு பிரச்னை உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. வங்கிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். வளரும் நாட்டில் எண்ணற்ற சிறுதொழில் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவது: ஓரளவுக்கான படிப்பு அல்லது சுய சிந்தனை. இரண்டாவது: கொஞ்சம் சொந்த மூலதனம், மீதம் கடன்.

நீங்கள் தெருவோரத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்க விரும்பலாம். அல்லது சில கோழிகளை வாங்கி முட்டை போடச் செய்து அவற்றை விற்க விரும்பலாம். இறால் வளர்க்க விரும்பலாம். தையல் தைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். கையேந்தி பவன் திறந்து சுடச்சுட சோறு விற்க விரும்பலாம். பரோட்டாக் கடை திறக்கலாம். சாண்ட்விச் விற்கலாம். பூ விற்கலாம். மொபைல் சிம் கார்டு விற்கும் பிசினஸ் செய்யலாம். ஒரு கார் வாங்கி, கால் டாக்ஸி நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை மேலே சொன்ன இரண்டும். அடிப்படை வரவு செலவுக் கணக்கு தெரிந்திருக்கவேண்டும். லாபம் எது, நஷ்டம் எது என்று தெரிந்திருக்கவேண்டும். பணத்தை இழந்துவிடக்கூடாது. மற்றொரு பக்கம், மூலதனம் தேவை.

இந்த மூலதனம் எங்கிருந்து வரும்? தேவையான மூலதனம் அனைத்தையும் சொந்தமாகவே சேர்த்துவிட முடியுமா? பெரும்பாலானோருக்கு இது முடியாது. சொந்தக்காரர்களிடம் பெறமுடியுமா? அவர்களுக்கே சோற்றுக்கு வழி இல்லை. அப்போது ஓர் ஏழைக்கு வழிதான் என்ன?

அதுதான் தெருவுக்குத் தெரு வங்கிகள் உள்ளனவே?

ஆனால் இந்த வங்கிகளுக்குத் தினம் செல்வோர் யார் என்று பாருங்கள். நகரின் மக்கள் தொகையில் கீழே இருக்கும் 80% பேர் வங்கிக்குச் செல்லவே மாட்டார்கள். அவர்கள் சீட்டு கட்டிப் பணம் சேர்த்து, ஏலம் எடுப்பார்கள். பயங்கர வட்டிக்குக் கடன் வாங்கி அதில் மூழ்குவார்கள். மொத்தத்தில் அவர்களது தேவைக்கு ஏற்ப பணம் அவர்களுக்குக் கிடைக்காது. மறுபக்கம், பிசினஸ் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு 15,000 கோடி ரூபாய் கடன் பணம் திரட்டியது என்று செய்தி வரும். இங்கே இவர்களுக்கோ 15,000 ரூபாயைப் புரட்டுவது கடினம்.

இவர்கள் வளம் பெற வழியே இல்லையா?

(தொடரும்)

Sunday, March 13, 2011

திருப்பாண்மலை

திருமலைசென்ற அதே நாளில் திருப்பாண்மலை என்ற மற்றோர் இடத்துக்கும் சென்றிருந்தோம். இதுவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள இடம். இதுவும் ASI பராமரிப்பில் உள்ளது. இங்கு சிறு குன்றின்மேல் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இந்தக் குன்றின்மேல் உள்ள பாறையில் சிறப்பாகச் சொல்லவேண்டியவை இரண்டு கல்வெட்டுகள். ஒன்று பல்லவ அரசன் நந்திவர்மன் காலத்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது; பல்லவ கிரந்தத்தில் இல்லை. நந்தி போத்தரசன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் பல்லவ அரசர்கள் ‘போத்ராதிராஜன்’ என்று அழைக்கப்படுவார்கள்.

நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு - பொன் இயக்கியைச் செதுக்கியுள்ளதைக் குறிக்கிறது.
அந்தக் கல்வெட்டு தென்படும் இடத்துக்கு அடியில் ஒரு சுனை உள்ளது. சுனையை ஒட்டிய கல்லில் ஒரு யக்ஷியின் சுமாரான புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த யக்ஷியின் பெயர் அம்பிகை. தமிழ்க் கல்வெட்டு இவளை ‘பொன்னியக்கி’ என்று குறிப்பிடுகிறது (யக்ஷி = யக்கி = இயக்கி).

பொன்னியக்கி - யக்ஷி அம்பிகா
இதே பாறையின் மறுபக்கம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டு அடிப்பவர் ராஜராஜனுக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ என்று எழுத விட்டுவிட்டார். பின் அவசர அவசரமாக சற்று தள்ளி கீழே அதனை எழுதியிருக்கிறார். நன்றாக அடிக்கோடிட்டு அழகாக எழுதப்பட்ட கல்வெட்டு. கீழே சோழர்களின் புலி பொறிக்கப்பட்டுள்ளது. (பார்த்தால் கொஞ்சம் நாய் மாதிரி இருக்கும்!)

ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு
சோழர்களின் புலி இலச்சினை
குன்றின் நடு மையத்தில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பத்தை ஆரம்பித்துள்ளனர்.


குன்றைச் சற்றே சுற்றிவந்தால், ஒரு குகைக் கோவிலைக் காணலாம். ஏழு கருவறைகள் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதியில் கைவிட்டுவிட்டு, கருவறைகளை முழுவதும் செதுக்காமலேயே சென்றுவிட்டனர். ஸ்டைலைப் பார்த்தால் நிச்சயமாக பல்லவர் காலக் குகைக் கோவில் என்றுதான் சொல்லவேண்டும். மகேந்திரன் காலமாக இருக்கலாம். ஆனால் அருகில் ஏ.எஸ்.ஐ பலகைகள் ஏதும் இல்லை.

மகேந்திரன் காலக் குகைக் கோவில்?
மேலே ஒரு தர்கா இருப்பதால் இந்த இடத்துக்கு நிறைய முஸ்லிம்கள் வருகின்றனர். ஆனால் அந்த தர்காவில் வழிபாடு எல்லாம் கிடையாது.

Saturday, March 12, 2011

கலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை

சிபிஐ கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும், சரத்குமார் என்பவரிடமும் சில கேள்விகளைக் கேட்டுள்ளது பற்றி செய்திகளைப் படித்திருப்பீர்கள்.

தினகரன் பத்திரிகையில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகளின் விளைவாக கோபம் கொண்டு வெகுண்டெழுந்த அழகிரியின் அடியாட்கள் மதுரையின் தினகரன் அலுவலகத்தை எரித்து அதில் மூன்று ஊழியர்கள் இறந்துபோனார்கள். அதையடுத்து நடந்த அதிரடி மாற்றங்களில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். (ஆ. இராசா அந்த இடத்துக்குச் சென்று பிற்காலத்தில் 2ஜி சர்ச்சை எழக் காரணமாக இருந்தார்!)

கலாநிதி, தயாநிதி மாறன்களின் பலமே சன் தொலைக்காட்சிதான் என்பதையும் அதனால் தம் அவசரத் தேவை ஒரு தொலைக்காட்சி சானல் என்பதையும் புரிந்துகொண்ட கருணாநிதி, அவசர அவசரமாக கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்.

ரியல் எஸ்டேட் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்றால் உடன்பிறப்புகளைக் கொண்டு காரியத்தைச் சாதித்துவிடலாம். ஆனால் தொலைக்காட்சி ஆரம்பித்து நடத்துவது எளிதான விஷயமல்ல. ஜெயா டிவியைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும். தொழில்நுட்பம், புரோகிராம் உருவாக்கும் திறன், டிஆர்பி ரேட்டிங் போட்டிகளில் விளையாடும் திறன் ஆகியவை இருந்தால்தான், தொலைக்காட்சியை நஷ்டம் இல்லாது நடத்தமுடியும். கூட்டம் நம் டிவியைப் பார்த்தால்தான் அதன் வழியாகக் கொள்கை பரப்பு செய்யமுடியும். அதனால்தான் கலைஞர் தொலைக்காட்சியை நடத்த சரத்குமாரைக் கூப்பிட்டு வந்தார்கள். இவர் கலாநிதி மாறனின் கூட்டாளியாக இருந்து வஞ்சிக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பழிவாங்கக் கிடைத்த நல்ல வாய்ப்பாக அவர் கருதியிருக்கலாம். (அது எவ்வளவு தவறு என்பதை அவர் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்!)

இப்போது கிடைக்கும் தகவல்களின்படி, சரத்குமார் 20% (ஸ்வெட் ஈக்விடி?), தயாளு அம்மாள் 60%, கனிமொழி 20% என்ற அடிப்படையில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் என்ன தொகை கொண்டுவந்தனர் போன்ற தகவல்கள் இல்லை. இதில்தான் ஸ்வான் டெலிகாம் புகழ் ஷாஹித் பால்வாவின் ஒரு நிறுவனம் வழியாகப் பங்குகளை வாங்க என்று பணம் தரப்பட்டு, பின் கடனாகவே வைக்கப்பட்டு, அசலும் வட்டியுமாகத் திரும்பத் தரப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. எந்த ஒரு நிறுவனமும் எந்த நிறுவனத்துக்கும் convertible loan note (பங்காக மாற்றக்கூடிய கடன் பத்திரம்) என்ற முறையில் கடன் அளிக்கலாம். அந்தக் கடனை பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பங்காக மாற்றாமல் வட்டியையும் அசலையும் பெற்றுக்கொண்டு கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

எனவே சிபிஐ ஆராய்ந்து என்ன கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கலைஞர் டிவியில் முதலீடாகக் கொண்டுவந்த தொகை எவ்வளவு? அந்தத் தொகையை தயாளு அம்மாளும் கனிமொழியும் எப்படிக் கொண்டுவந்தார்கள்? அவர்கள் முதலீடு செய்த தொகையை அவர்கள் எப்படிச் சம்பாதித்தார்கள்? அதற்குச் சரியான வருமான வரியை அவர்கள் கட்டியிருக்கிறார்களா?

இதையெல்லாம் தோண்டித் துருவ ஆரம்பித்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியுமே தப்பிக்க முடியாது. எனவே அடிப்படை நோக்கம் இந்த மாபெரும் அரசியல் ஊழலைக் கண்டுபிடித்துத் தடுப்பது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பரவியிருக்கும் இந்த ஊழலில் யார்தான் இல்லை?

தேர்தல் பேரம்தான் காரணம், சிபிஐ விசாரணை எல்லாம் பூச்சாண்டி என்றால், இது ஒருவகையில் மகா அசிங்கம். ஏனெனில் இந்த விசாரணையில் யாரையும் மாட்டவைக்க எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக டிபி ரியால்டி ஏன் பணம் கொடுத்தது என்று கேள்விக்கு, ஏன் பணம் கொடுக்கக்கூடாது என்ற மறு கேள்வியைக் கேட்கலாம். யார்தான் இன்னொரு கம்பெனியில் கன்வெர்டிபிள் லோன் நோட்ஸ் வாங்கிக்கொள்ளலாம் என்ற வரைமுறை கிடையாது. இவர் தெரிந்தவரா, தெரியாதவரா என்பதெல்லாம் கேள்வியே இல்லை. நடந்ததெல்லாம் சட்டப்படி நடந்ததாகவே தெரிகிறது. மாறாக, கலைஞர் தொலைக்காட்சி என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தேவையான பணம் தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் எப்படி வந்தது என்று விசாரணை போகுமானால், அதில் 2ஜி சம்பந்தமே இல்லை. இதுபோன்ற விசாரணையை நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் நடத்தவேண்டும். எனவே விரைவில் இந்த சிபிஐ நாடகம் மூடப்பட்டுவிடும். தேர்தல் பேரம்தான் படிந்துவிட்டதே...

இதில் பாவம் சரத்குமார்தான். ஏற்கெனவே தாத்தாவிடம் உடன்பாடு செய்துகொண்ட பேரன்கள் வீடு புகுந்து அவரை அடித்ததாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. இப்போது சிபிஐ விசாரணை வேறு. அவர் இந்தக் கழக உள்பிரச்னைகளுக்குள் ஈடுபடவே கூடாது. பேசாமல் துஷ்டர்களைக் கண்டு தூர விலகி, பஞ்சாபி, குஜராத்தி டெலிவிஷன் சானல்களை நடத்தி நன்கு சம்பாதிக்கலாம். அவருக்கு வேண்டாம் இந்தக் கேடு கெட்ட தமிழ்நாடு!

Monday, March 07, 2011

யக்ஷி அம்பிகாவின் கதை

இந்தக் கதை பேராசிரியர் ஜோப் தாமஸ் எழுதி நாங்கள் வெளியிட்டுள்ள Paintings in Tamil Nadu - A History என்னும் புத்தகத்திலிருந்து... கீழே காணப்படும் ஓவியம் ஒன்று அவர் எடுத்தது. இப்போது நான் திருமலை சென்றபோது இவையெல்லாம் காணப்படவில்லை. அழிந்துபோயிருக்கவேண்டும். யக்ஷி அம்பிகா வடிவிலான ஓவியம் மட்டும்தான் எஞ்சியுள்ளது.

***

சோமசர்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அக்னிலா. அவன் ஒரு நாள் தன் மனைவியை சமையல் செய்யச் சொல்லிவிட்டு, சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான்.

விருந்துண்போர் வருவதற்கு முன்பாக, இரு சமண முனிவர்கள் அந்தப் பக்கம் வந்தனர். அக்னிலா, அந்த இருவருக்கும் உணவு பரிமாற விரும்பினாள். வேண்டிய அளவு உணவு இருந்த காரணத்தால் சமணர்களை அழைத்து, வணங்கி, அவர்களுக்கு உணவையும் பரிமாறினாள்.

அவர்கள் சென்றபிறகு விருந்துண்ண வந்த பிராமணர்கள் எப்படியோ இந்த விஷயத்தை அறிந்துகொண்டனர். சமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தைத் தாங்கள் சாப்பிடமாட்டோம் என்று மறுத்துவிட்டு, கோபமாக வெளியேறினர்.

தனது விருந்தினர்கள் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை எண்ணிக் கடுங்கோபம் அடைந்த சோமசர்மன், தன் மனைவி அக்னிலாவையும் அவளது மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.

இதனால் காட்டுக்குப் போன அக்னிலாவை, கடவுள்கள் காப்பாற்றினர். அவளது பெயரும் புகழும் எங்கும் பரவியது.

சில நாள்கள் சென்றவுடன் சோமசர்மனுக்குத் தான் செய்த தவறு புலப்பட்டது. காட்டுக்குச் சென்று தன் மனைவி அக்னிலாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான்.

காட்டில் இருந்த அக்னிலா தூரத்தில் தன் கணவன் சோமசர்மன் வருவதைப் பார்த்தாள். அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணிய அக்னிலா, பயந்துபோய், மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். அவளது நல்வினைகளால் அவள் ஒரு யக்ஷியாகப் பிறந்தாள். அந்த யக்ஷிதான் அம்பிகா.

மனைவி தன்னை தவறாகப் புரிந்துகொண்டு தன்னையே மாய்த்துக்கொண்ட காரணத்தால் வருத்தமுற்ற சோமசர்மன், சில காலம் கழித்து இறந்துபோனான். இறந்தபின் அவன் ஒரு சிங்கமாகப் பிறந்தான். யக்ஷி அம்பிகா அந்த சிங்கத்தைத் தன் வாகனமாகக் கொண்டாள்.

*

இந்தக் கதையைத்தான் விஜயநகரக் காலத்து ஓவியர்கள் தீட்ட முற்பட்டுள்ளனர். அக்னிலா சமண முனிவர்களை வரவேற்று வணங்கும் ஓவியத்தைக் கீழே காணலாம்.

திருமலை - அக்னிலா சமணர்களை வரவேற்பது (படம்: ஜோப் தாமஸ்)

இப்போது நான் சென்றிருந்தபோது இந்த ஓவியத்தைக் காணோம். முற்றிலுமாக அழிந்துவிட்டதா என்று தெரியவில்லை. அக்னிலா யக்ஷி அம்பிகாவாக ஆனபின் இருக்கும் தோற்றம் இப்போதும் இருக்கிறது. பெரும்பாலும் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

திருமலை - யக்ஷி அம்பிகா

பெரிதாக்கிப் பார்த்தால் அம்பிகாவுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். அவளது தலையைச் சுற்றி அக்னிப் பிழம்புகள் தெரியும். சிங்க வாகனம், மூன்று கண்கள், தலையில் அக்னியுடன் இவள் ஹிந்து காளியைப் போன்றவள்.

சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் என்று யக்ஷிகள் உண்டு. அம்பிகா, நேமிநாதருக்குப் பணிவிடை செய்பவள். இந்தத் தலம் நேமிநாதருக்கானது என்பதால் யக்ஷி அம்பிகாவின் கதையைப் படமாக்கியுள்ளனர்!

விஜயநகர சாயலில் சமண முனிவர்களும்கூட தொந்தியும் தொப்பையுமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். நீண்டு தொங்கும் காதுகள் மற்றுமொரு அடையாளம்.

ஓவியச் சிறப்பில், அஜந்தா வாகாடக ஓவியங்கள், சித்தன்னவாசல் பாண்டிய ஓவியங்கள், கைலாசநாதர்/பனமலை பல்லவ ஓவியங்கள் அளவுக்குத் திறம்படைத்தவையாக இல்லாவிட்டாலும், 700 ஆண்டுக்கும் மேற்பட்ட இந்த ஓவியங்களையும் நாம் ரசிக்கத்தான் வேண்டும்.