ஹஸாரே மரியாதைக்குரியவர். மஹாராஷ்டிரத்தில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் தவித்த வாய்க்குகூடத் தண்ணீர் தர நீர் இல்லாத காலம் இருந்தது. அந்த இடத்தை முற்றிலுமாக மாற்றி, மழைநீர் சேமிப்பை முன்னெடுத்து, வேண்டிய அளவுக்கு நீர் கிடைக்கச் செய்தார். ஊழலை எதிர்த்துப் பல போராட்டங்கள், பல உண்ணாவிரதங்கள். அரசுகளை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் பாடு பட்டவர்.
இப்போது ஊழலை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். லோக்பால் என்ற Ombudsman பதவியை உருவாக்கி, அதன்மூலம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் - அரசியல்வாதிகள், அதிகாரிகள் - செய்யும் ஊழலைத் தடுத்து நிறுத்த பல ஆண்டுகளாகவே முயர்சிகள் நடந்துவந்துள்ளன. ஆனால் தேர்தல் சீர்திருத்தம்போலவே ஆட்சியாளர்கள் இந்தச் சீர்திருத்தம் வரவிடாமல் எத்தனையோ எத்து வேலைகளைச் செய்தனர். இன்றுவரை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அதைவிட மோசம், அந்த மசோதாவே வெறும் சோதா. லோக்பால் ஒரு டம்மி பீஸாக மட்டுமே இருப்பார்.
லோக்பால் என்ற ஓர் அமைப்பின்மூலம் ஊழலைப் பெரிதும் குறைக்கலாம் என்று நினைத்துவந்த ஆர்வலர்கள் - அண்ணா ஹஸாரே போன்றவர்கள் - விரக்தி அடைந்தது நியாயமே. எனவே இவர்களாகவே ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற சட்ட முன்வரைவை உருவாக்கினர். நிச்சயமாக இதனை அரசு ஏற்காது என்பது தெரிந்ததே. அதேதான் நடந்தது. அதற்குமேல் அரசும் சரி, ஹஸாரே அண்ட் கோவும் சரி, சந்திக்கக்கூட முடியவில்லை. தாளமுடியாத விரக்தியில்தான் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்தில் இறங்கினார். இன்று ஊடகங்கள் அனைத்தும் அவர் பக்கம். இளைஞர்கள் பலரும் அவர் பக்கம். பொதுமக்கள் பலரும் அவர் பக்கம். சென்னையிலும்கூட மெரீனாவில் மக்கள் அமைதியாக ஹஸாரேவுக்கு ஆதரவு தந்து கூடுகிறார்கள். தக்கர் பாபா பள்ளியில் திரள்கிறார்கள். அங்கு சென்று எட்டிப்பார்த்துவிட்டு வந்துதான் இதனை எழுதுகிறேன். பிரச்னை முடியும்வரை மக்கள் போராட்டமும் அமைதியான வழியில் தொடரும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
*
இப்போது விஷயத்துக்கு வருவோம். அரசின் சட்ட முன்வரைவு படுமோசமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹஸாரே அண்ட் கோ சட்ட முன்வரைவிலும் ஏற்கமுடியாத பல அம்சங்கள் உள்ளன. ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடும்போது சிக்கலே இல்லாத முன்வரைவைத்தான் நாம் முன்வைக்கவேண்டும். மேலும் அரசில் உள்ளவர்களையும் நம் பக்கம் இழுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் கொஞ்சம் வளைந்துகொடுத்துத்தான் ஆகவேண்டும்.
அரசில் உள்ளவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்களையே நாம் விரும்பும் சட்ட மசோதாவை எப்படி ஏற்கவைப்பது? அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள்தான். ஆனாலும் நம் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறிச் செல்லவேண்டும்.
இப்போது ஜன் லோக்பால் மசோதா வரைவில் உள்ள குறைகளாக நான் கருதுவதைப் பார்ப்போம்:
1. லோக்பாலுக்கு போலீஸ் அந்தஸ்து வேண்டும் என்று ஹஸாரே வரைவு கேட்கிறது. அதாவது ஒருவர்மீது குற்றம் சாட்டி, கைது செய்து, அவர்கள்மீது வழக்கு தொடுப்பது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் இந்த அதிகாரம் உள்ளது. ஒன்று: மாநில காவல்துறைகள். இரண்டாவது: மத்திய சிபிஐ. (தீவிரவாதக் குற்றங்களைத் தடுக்க தேசிய போலீஸ் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கருத்து உள்ளது; அது வந்தால் அதற்கும் போலீஸ் அந்தஸ்து இருக்கும்.) லோக்பால் மூன்றாவது அமைப்பாக ஆகும். இது சிக்கல் மிகுந்தது என்று நான் கருதுகிறேன்.
அடுத்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அங்கிருந்து நகர்த்தப்பட்டு லோக்பால் அடியில் வரவேண்டும் என்பது. இப்படிச் செய்தால்தான் ஊழலைத் தடுக்கமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் பணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீதிமன்றம் சிபிஐ அமைப்பை வேண்டிய நேரத்தில் அழைத்து, அவர்களைக் கொண்டு வழக்குகளைப் பதிவு செய்கிறது. வழக்கைக் கண்காணிக்கும் உரிமையைத் தானே கையில் எடுத்துக்கொள்கிறது. இதுபோன்ற ஊழல் வழக்குகள் என்றால் அரசுகள் அதில் இயங்காதபோது உச்ச நீதிமன்றத்திடம் செல்வதற்கு பதிலாக லோக்பால் அமைப்பிடம் செல்லலாம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது லோக்பால் அமைப்புக்கு போலீஸ் அதிகாரம் என்பது தேவையில்லை. அது சிபிஐ-ஐ அழைத்து வழக்கு பதிவு செய்யச் சொல்லி, வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்கலாம். லோக்பால் அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு மேற்பட்ட நீதி அமைப்பு இருக்கக்கூடாது.
2. லோக்பால் எதனைக் கண்காணிக்கவேண்டும்? ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால், பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றால், போலீஸ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது என்றால், லோக் ஆயுக்தா (மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு) அல்லது லோக்பாலிடம் முறையிடலாம் என்று என்டிடிவி தளத்தில் போட்டிருக்கிறார்கள். இது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. நாட்டில் எல்லா அமைப்புகளுமே உடைந்துபோய்விட்டதாகவும் தனி மனிதனுக்கு ரேஷன் கார்டு வாங்கித்தரத்தான் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதாகவும் இந்தக் கதை போகிறது. சாதாரண ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள Prevention of Corruption Act உள்ளது. இதனைச் செய்ய, லோக்பால் தேவை இல்லை. நமக்குத் தேவை உள்ளூர் அளவில் வலுவான என்.ஜி.ஓ அமைப்புகள். ஒவ்வொருவரும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்று லோக்பாலிடமோ லோக் ஆயுக்தாவிடமோ சென்றால், அத்தோடு அவர்களது பணி முடிவுற்றது என்று வைத்துக்கொள்ளலாம். வேலைப் பளு தாங்கமுடியாமல் அவர்கள் ஓடிவிடுவார்கள்.
அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், எம்.எல்.ஏ/எம்/எல்.சி, எம்.பி ஆகியோர், ஐ.ஏ.எஸ் அலுவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் (ஐ.பி.எஸ்) ஆகியோர்மீதான ஊழல் வழக்குகளை மட்டும்தான் லோக்பால் / லோக் ஆயுக்தா எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த வழக்குகளை நடத்த இவர்கள் யாரிடமும் மேற்கொண்டு அனுமதி பெறவேண்டியதில்லை. பொய் வழக்குகளாக இருப்பின் வழக்கு போட்டவர்மீது கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படவேண்டும். லோக்பால், தானாகவே (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையில் ஈடுபட அனுமதி வேண்டும். ஆனால் இந்த வழக்கு நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படக்கூடாது. வழக்கின் முடிவின்படிதான் தண்டனை தரப்படுதல் ஆகியவை நடைபெறவேண்டும். மேலும் லோக்பால் வழக்கு நடத்துகிறது என்பதாலேயே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் கேட்கக்கூடாது. (அதெல்லாம் தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் சட்டபூர்வமாக அப்படிக் கேட்பது நியாயமாக இருக்காது.)
3. நீதித்துறை மீதான லோக்பால் அதிகாரம். இதனை நான் ஏற்கமாட்டேன். நீதித்துறை தன்னைத் தானேதான் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு, அதற்குக் கீழுள்ள நீதிமன்றங்களை முழுமையாகச் சரிபடுத்தும் அதிகாரம் ஏற்கெனவே உள்ளது. வேண்டுமென்றால் அதனை மேலும் வலுப்படுத்தலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரித்து நீக்கும் உரிமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு சிறு குழுவுக்கு இருக்கவேண்டும். (இங்கும் சட்ட மாற்றங்கள் தேவை.). உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.
4. லோக்பாலை யார் தேர்ந்தெடுப்பது என்பதில் ஜன் லோக்பால் மசோதா சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதில் சீஃப் எலெக்ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது அபத்தம். அப்படி இருந்தால்தான் லோக்பால் நியாயமாக இருப்பார் என்று சொல்வது பேத்தல். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் ஒருமனதாக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் லோக்பால் ஆவார். இவரை நியமிப்பது ஜனாதிபதி. நீக்குவது இம்பீச்மெண்ட் வாயிலாக. இவரது தகுதியைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் (சிவிசி மாதிரி!). உச்ச நீதிமன்றம் இவரது நியமனத்தைச் செல்லாது என்று சொன்னால் இவர் போகவேண்டும். ஆக, இவர் எந்தவிதத்தில் பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்தின்கீழ் இருக்கவேண்டுமே தவிர இவர்கீழ் உச்ச நீதிமன்றம் இருக்கக்கூடாது.
5. யார் லோக்பாலாக இருக்கலாம்? ஜன லோக்பால் மசோதா, 10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். எவிடென்ஸ் ஆக்ட் பற்றியும் பிரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் பற்றியும் ரெப்ரசெண்டேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் ஆக்ட் பற்றியும், பல்வேறு ஊழல் வழக்குகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். சும்மா ஆலமரத்தின்கீழ் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து வேலை அல்ல இது. நல்ல, தரமான, நியாயமான நீதிபதிகள்தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும்.
நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், அதை எப்படிச் சுத்தம் செய்வது என்ற வேலையில் இறங்கவேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதில் அரசியல்வாதிகள் எப்படி ஈடுபடவேண்டும் என்ற மசோதாவைச் சரிசெய்யவேண்டுமே தவிர, லோக்பால் எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடுவார் என்று அவர் கையில் துடைப்பக் கட்டையைத் தரும் வேலையைத் தவிர்க்கவேண்டும்.
***
இன்னும் தனித்தனி பாயிண்டுகளை எடுத்து அலசலாம். ஆனால் அடிப்படையில் ஹஸாரேவின் போராட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. வரைவுதான் மாற்றப்படவேண்டும். அப்படி ஒரு வரைவை உருவாக்க அமைக்கப்படும் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டும், குழுவின் தலைமைப் பொறுப்பு ஹஸாரேவுக்குத் தரப்படவேண்டும் என்றெல்லாம் அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் கேட்பது தவறு. சட்டம் இயற்றும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. அது நமக்கு விரும்பிய சட்டமாக இருக்கவேண்டும் என்று கேட்கும் உரிமை நமக்கு உண்டு. நமக்கு ஏற்புடையதல்லாத சட்டத்தை அரசு தேர்வடையச் செய்வதை எதிர்க்கும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பிய ஷரத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவைக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தச் சட்டத்தை நானே தயாரித்துத் தருவேன், நீ சும்மா ஒப்புக்கு ரப்பர் ஸ்டாம்ப் போடு என்று சொல்ல உரிமை இல்லை. அப்படியென்றால், தேர்தலில் நில், ஜெயித்து வந்து அதனைச் செய் என்றுதான் நாம் தன்னார்வலர்களிடம் சொல்லவேண்டும்.
முதலில் சட்ட முன்வரைவை அனைத்து மக்களையும் (என்னையும் சேர்த்து) ஏற்றுக்கொள்ள ஜனநாயக முறையில் ஹஸாரே அண்ட் கோ முயற்சி செய்யவேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.
புரூக்லின் இலக்கிய விழாவில்…
10 hours ago