Wednesday, August 31, 2005

விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)

[18-06-2014 அன்று எடிட் செய்யப்பட்டது]

காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழகத்தில் சில வருடங்கள் பள்ளிக் கல்வி படித்து, மும்பையில் கல்லூரிக் கல்வி வரை படித்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்று, கல்வித்துறையில் பல வருடங்கள் ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி, Delhi School of Economics-ஐத் தோற்றுவித்து, பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்து, திட்டக்குழு உறுப்பினராக இருந்து, பின் காங்கிரஸ் சார்பாக பெல்லாரி (கர்நாடகா) தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகி, இந்திரா காந்தி அமைச்சரவையில் தரைப் போக்குவரத்து/ கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய VKRV ராவ் பற்றி நான் இதுவரையில் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அவரது முடிவுபெறாத சுயசரிதை நூல் சென்ற வாரம் கையில் கிடைத்தது.

பொதுவாக அறிவுஜீவிகள், தங்கள் கடைசிக்காலத்தில் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. சில விதிவிலக்குகள் உண்டு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர். மன்மோகன் சிங் ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன்பின் தேர்தலிலேயே நிற்காமல், மாநிலங்கள் அவை உறுப்பினராக - அதுவும் அசாம் வழியாக - வரவேண்டிய நிலைதான் அவருக்கு இருந்தது.

VKVR ராவ், மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு முன்னோடி. ராவ், தன் இளமைப் பருவத்தில் மிகக்கொடிய வறுமையைச் சந்தித்திருக்கிறார். அவரது தந்தையார் ஒரு ஜோதிடர். ஊர் சுற்றி. சரியான வருமானம் இல்லாதவர். ஆனால் தனது பல மகன்கள்/மகள்களில் இவர்தான் மிகப் பிரகாசமாக ஜொலிப்பார் என்று கணித்தாராம் (ஜோதிடத்தின் மூலமா, அல்லது வேறு உள்ளுணர்வின் வழியிலா என்று தெரியவில்லை). ராவ் கேட்டதும் விரும்பியதும் அவருக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. சில காலம் தமிழகத்தில் கழித்தபின்னர் மும்பை சென்று அங்கு உயர்நிலைக் கல்வி கற்றார். சில கல்வி அறக்கட்டளைகள் அளித்த நன்கொடைதான் முழுக்க முழுக்க அவருடைய கல்விக் கட்டணத்துக்கும் உடைகளுக்கும் உதவியது. பள்ளிக் கல்வியை முடித்ததும் மும்பையிலேயே பொருளாதாரத் துறையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். “பிரிட்டிஷ் இந்தியாவில் வரிவிதித்தல்” என்ற தலைப்பில் ஒரு மிக முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர விரும்பினார். ஆனால் முனைவர் படிப்புக்காக இல்லாமல் மீண்டும் இளநிலைப் படிப்பில் சேர்ந்தார். அதற்குக் காரணம், தான் பொருளாதாரத் துறையில் இன்னமும் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் நினைத்ததே. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இந்தியா வந்ததும் முதலில் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், பின்னர் அகமதாபாத்தில் ஒரு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அந்த நேரத்தில் கொல்கொத்தாவில் கடும் பஞ்சம் காரணமாக ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனால் ராவ் தன் பல்கலைக்கழக வேலையிலிருந்து அனுமதி பெற்று, தேசிய உணவுப் பொருள் விநியோக வாரியத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தார்.

பின் மீண்டும் தில்லி பல்கலைக்கழகம் வந்து London School of Economics போன்றே Delhi School of Economics என்ற, தனித்து இயங்கும் பொருளாதாரக் கல்விக்கழகத்தை நிர்மாணித்தார். இந்தியாவில் பொருளாதார உயர்கல்விக்கு வித்திட்டவரே ராவ்தான். இந்தியாவிலேயே முதலாவதாக இவரிடம்தான் பொருளாதார முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து படித்தனர். பல முக்கியமான பொருளாதார ஆசிரியர்களைத் தேடிப் பிடித்துவந்து தில்லி பொருளாதாரக் கழகத்தை இவர் பலப்படுத்தினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். துணைவேந்தர் பதவியை விட்டு விலகுவதற்கு முன்னால் Institute of Economic Growth (IEG) எனப்படும் கல்விக்கூடத்தை நிர்மாணித்தார்.

நேரு காலத்தில் திட்டக்குழுவில் உறுப்பினர் ஆனார்.

காங்கிரஸ் சற்றே ஆட்டம் கண்டிருந்த நிலையில், கட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டுமானால் அறிவுஜீவிகள் கட்சியில் சேரவேண்டும் என்று காமராஜ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதைய கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவின் வேண்டுகோளின்படி கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் நின்றார். அங்கு போட்டியிட்ட சுதந்தரா கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். முதலில் இந்திரா காந்தி இவரை கேபினெட்டில் சேர்த்துக்கொண்டு வர்த்தக அமைச்சரகத்தைத் தருவதாகச் சொன்னார். ஆனால் பல குழப்பங்களுக்குப் பிறகு இரும்பு/எஃகு என்றாகி பின் கடைசியாகத் தரைப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தான் இவருக்குக் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கேபினெட் மாற்றம் ஏற்பட்டபோது இவருக்குக் கல்வி அமைச்சகம் கிடைத்தது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பது. இப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின்கீழ் வந்துவிட்டது. ஆனால் அப்போது கல்வி, தனி அமைச்சரகமாக இருந்தது. சிறந்த கல்வியாளரான ராவால் கல்வி அமைச்சராக இருந்தும் கல்வித் துறைக்கு உருப்படியாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அடுத்த தேர்தல், வங்கதேசப் போரைத் தொடர்ந்து நடந்தது. அதிலும் ராவ் தன் தொகுதியில் வென்றார். ஆனால் இம்முறை இந்திரா காந்தி அவருக்கு அமைச்சர் பதவி எதையும் தரவில்லை.

ராவ் இதனைத் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொண்டார். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1972-ல் Institute of Social and Economic Change (ISEC) என்னும் கல்விக்கூடத்தை பெங்களூரில் தொடங்கினார்.

அத்துடன் தேர்தல் எதிலும் பங்குகொள்ளாமல் அரசியலை விட்டு விலகினார்.

இந்தியாவின் தேசிய வருமானத்தை சரியாகக் கணிக்க, ராவ் 1930-களிலேயே ஒரு முறையை உருவாக்கினார். பின்வரும் வருடங்களில் அவரது முறைதான் பின்பற்றப்பட்டது. வரி விதித்தல் குறித்து தொடக்கம் முதலாகவே ஆராய்ச்சி செய்த ராவ், சோசியலிசத்தால் ஈர்க்கப்பட்டு நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வண்ணம், அதிகம் சம்பாதிப்பவர்கள்மீது மிக அதிகமாக வரி விதிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதன் விளைவாக 1950-1980களில் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு பெருகியது.

ஆனால் ராவ் விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராக இருந்தார். அரசியல்வாதிகளோ அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ராவும்கூட, தேர்தலில் நிற்கும்போது தனது கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.

ஒரு நிலைக்குமேல் ராவ் பொருளாதார ஆராய்ச்சிகளில் அதிகமாக ஈடுபடவில்லை. கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கேபினெட் அமைச்சர், கல்விக்கூடங்களை நிர்மாணிப்பவர் என்று அவருடைய வாழ்க்கை செல்லத் தொடங்கியதால், ஆராய்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இல்லாவிட்டால் பின்னால் வந்த அமர்த்யா சென் போல ராவும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கக்கூடும்.

இந்தியாவில், இந்தியர்களுக்குப் பயன்படுமாறு இருக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச நிதியம், ஐ.நா சபை ஆகியவற்றிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகளைத் தூக்கி எறிந்தவர் இவர்.

இன்று இவர் பேர் சொல்லும் வகையில் பொருளாதாரத் துறையில் மூன்று கல்விக்கூடங்களும் ஆராய்ச்சிச் சாலைகளும் உள்ளன.

The partial memoirs of VKRV Rao, Edited by SL Rao, Oxford University Press, 2002, Pages: 288, Hardbound, Price: Rs. 1,300

Tuesday, August 30, 2005

9/11 தாக்குதல் சந்தேகங்கள்

9/11 முடிந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இதைக் காரணம் காட்டியே ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த ஜார்ஜ் புஷ், நியோகான்கள், இன்னமும் அடுத்து யாருடன் சண்டை போடலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் 9/11 அல்-கெய்தாவினால் மட்டும்தான் நிகழ்த்தப்பட்டதா அல்லது அதிலும் நியோகான்கள் கைவரிசை உண்டா என்னும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர். இதற்கென ஓர் இணையத்தளத்தை உருவாக்கி தங்களுக்குள்ள சந்தேகங்களை அங்கு எழுப்புகின்றனர். இந்தச் சந்தேகங்களை முன்வைக்கும் Confronting the Evidence என்னும் டிவிடியைத் தயாரித்து இலவசமாக அளிக்கின்றனர்.

பிரான்ஸில் இருக்கும் வலைப்பதிவு வாசகர் ரவியா இந்த டிவிடியை வாங்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தார் (ஃப்ரெஞ்சு சப்டைட்டில்களுடன் கூடியது!). டிவிடி வந்த சில நாள்கள் கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டேன். பின் பொழுதுபோகாத ஒரு வார இறுதியில் இந்த டிவிடியைப் போட்டுப் பார்த்ததில் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பல உலக நிகழ்வுகளில் உள்ளதாகச் சொல்லப்படும் Conspiracy theoryகள் பலவற்றையும் கேட்டு, புறந்தள்ளியிருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட டிவிடி நிஜமாகவே அதிர வைத்தது. கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் ஓடும் இந்த விடியோவை நடுவில் நிறுத்த யாருக்கும் மனது வராது.

இதை நான் பா.ராகவனுக்கும் போட்டுக் காண்பித்தேன். அதன் தொடர்ச்சியாக ராகவன் இந்த வார விகடனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். படித்த வாசகர்கள் பலரும் டிவிடியின் பிரதி கிடைக்குமா என்று விகடன் அலுவலகத்தை முற்றுகை இடுவார்கள் என நினைக்கிறேன்.

இந்த டிவிடியில் என்ன உள்ளது என்பதை மேற்படி இணையத்தளத்திலேயே பார்க்கலாம். சுருக்கமாக:

1. பெண்டகனில் மோதியதாகச் சொல்லப்படும் விமானம் (போயிங் 757) நிஜமாகவே மோதியிருந்தால் அது ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் துளையைவிடப் பெரிதான ஒரு துளையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எனவே இந்தத் துளை/சேதம் வேறுவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது? அதில் இருந்தவர்கள் என்னவானார்கள்? பெண்டகன் அருகில் போயிங் விமானத்தின் எந்த பாகங்களுமே கிடைக்கவில்லையாமே? விமானம் மோதினால் அதில் உள்ள எரிபொருள் பற்றி எரியும்போது அருகில் இருக்கும் எதுவுமே பிழைக்காது. ஆனால் விடியோ படங்களைக் கூர்ந்து கவனித்தால் அருகில் ஒரு மேஜை, நாற்காலி, அதன்மேல் திறந்தபடி இருக்கும் புத்தகம் என்று பலவும் எரியாமல் உள்ளன. விமானத்தின் கறுப்புப்பெட்டி கூட எரிந்து காற்றோடு காற்றாகிப் போனதாகச் சொல்லும் நிர்வாகம், உடல்கள் அனைத்தும் கிடைத்தன என்றும் அவற்றின் அடையாளங்கள் காணப்பட்டு ஒவ்வொருவரும் யார் யார் என்று கண்டறியப்பட்டனர் என்றும் சொல்கிறார்களே, அது எப்படி?

2. உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்கள் மோதியதால் சிதறி விழுந்ததா அல்லது வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதா? இதுபற்றி நிறைய உரையாடல், சாட்சியங்கள் டிவிடியில் உள்ளன.

3. உ.வ.மை விழுந்தபின்னர் அங்குள்ள தடயங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதற்குக் காரணமென்ன?

4. சம்பவம் நடக்கப்போகும் நாள் முன்கூட்டியே புஷ் அரசுக்குத் தெரியுமா? அன்று ஏதோ காரணங்களால் அமெரிக்கப் போர் விமானங்கள் பலவும் அலாஸ்கா, கனடா வான்வெளியில் போர்ப்பயிற்சிக்கென அகற்றப்பட்டதாகவும், இருக்கும் விமானங்களும் கடத்தப்பட்ட விமானங்களைத் தாக்காவண்ணம் குழப்பமளிக்கும் தகவல்கள் தரப்பட்டதாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன. FAA சரியாக நடந்துகொள்ளவில்லை என்று அதன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்படுகிறது.

5. 9/11 கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவரில் நான்கு பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனராம்! (இதுபற்றிய பிபிசி செய்தி இதோ!) அப்படியானால் யார்தான் இந்தக் கடத்தலைச் செய்தது?

6. நியோகான்கள் 'புது பேர்ல் ஹார்பர்' ஒன்று நடந்தால்தான் அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை தாங்கள் விரும்பியவாறு மாற்றம் அடையும் என்றும் சொல்லியுள்ளனர். (Rebuilding America's Defenses, Strategy, Forces and Resources for a new century (PDF), Page 51) உ.வ.மை தான் அந்தப் 'புது பேர்ல் ஹார்பரா'?

அமெரிக்காவில் பெரும்பான்மை மீடியாக்களில் இந்த விவகாரம் பற்றி அவ்வளவாகத் தகவல்கள் ஏதும் இல்லையாமே?

(சென்னையில் இருப்பவர்களுக்கு - வேண்டுமென்றால் இந்த டிவிடியைச் சில படிகள் எடுத்து வைக்கிறேன். விரும்புபவர்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு பார்க்கலாம். புது டிவிடி பிளேயர்களில் பார்க்கலாம். கணினியில் விண்டோஸ் மீடியா பிளேயரில் divx என்னும் pluginஐ நிறுவிப் பார்க்கலாம். டிவிடி வேண்டுபவர்கள் தனியஞ்சல் அனுப்புங்கள். பின்னூட்டம் இட வேண்டாம்.)

Sunday, August 28, 2005

புத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்

தில்லி, பிரகதி மைதானில் 11வது புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை: Celebrate the Book, the Author and the Reader

ஒரு புத்தகப் பதிப்பாளராக, குடியரசுத் தலைவர் சொல்லிய பலவும் சந்தோஷத்தைத் தருகிறது. ஒரு விஷயம் - முழுவதுமாகத் தெரியாததால் - சற்றே யோசிக்க வைக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் நூலகத்தில், இந்நாட்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் பல நூல்களும் சுதந்தரத்துக்கு முந்தைய ஆட்சியாளர்கள் விரும்பிச் சேர்த்த நூல்களும் உள்ளன. இதுவரையில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களும் பல நூல்களை இந்த நூலகத்தில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நூல்களை உலகில் உள்ள அனைவரும் அடையுமாறு செய்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூல்களை முழுவதுமாக டிஜிடைஸ் செய்யத் தொடங்கியுள்ளோம். இதுவரையில் கிட்டத்தட்ட 7,000 புத்தகங்கள், 50 லட்சம் பக்கங்களை டிஜிடைஸ் செய்துள்ளோம். கூடிய விரைவில் இவற்றை இணையத்தில் சேர்ப்பிக்க உள்ளோம்.
ஒரு வாசகனாக சந்தோஷம் அடைய வைக்கும் செய்தி இது. அதே நேரம் இந்த கணினிமயமாக்கல் நடக்கும்போது காப்புரிமைகள் மீறப்படாமல் இருக்கும் என்று நம்புவோம்.

நம் நாட்டில் புத்தகங்கள் பலவும் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கவேண்டும். அதே நேரம் ஏதாவது வழியில் நியாயமான அளவு பணம் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் சென்று சேரவேண்டும். மத்திய/மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து புதிதாகப் பதிப்பாகும் அத்தனை புத்தகங்களும் இணையம் வழியாகக் கிடைக்கப்பெறும் ஒரு டிஜிட்டல் நூலகத்தில் சென்று சேருமாறு செய்யலாம். இந்த நூலகத்திலிருந்து பக்கங்களைப் படிக்க அனைத்து "குடிமக்களுக்கும்"* உரிமை உண்டு. ஆனால் எந்தப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் படிக்கப் பெறுகின்றன என்பதை வைத்து பதிப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சென்று சேருமாறு செய்யலாம். அதிலிருந்து ராயல்டி தொகை எழுத்தாளருக்குப் போய்ச் சேரவேண்டும். சில நேரங்களில் சில எழுத்தாளர்கள் பதிப்புரிமை தரும்போது அச்சுப் புத்தகங்களுக்கான பதிப்புரிமையை மட்டும்தான் தருவார்கள். (கிழக்கு பதிப்பகத்தின் ஓர் எழுத்தாளர் அச்சு உரிமையை மட்டும்தான் எங்களுக்குக் கொடுத்துள்ளார். பிறர் அனைவரும் கணினி/இணையம் வழியாக எழுத்துக்களை விற்பனையாக்கும் உரிமையையும் கொடுத்துள்ளனர்.) அப்படியாயின், அரசு நேரடியாக எழுத்தாளரிடமிருந்தே கணினியாக்கும் உரிமையைப் பெற வேண்டியிருக்கும்.

அதே நேரம் காப்புரிமை விட்டுப்போன பல நூல்கள் இருக்கின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் அச்சிலோ, இணையத்திலோ படி எடுக்கலாம்.

---

அரசு வரி வருமானத்தில் உருவாகும் இந்தத் திட்டம் உலக மக்கள் அனைவருக்கும் போய்ச்சேரவேண்டுமா அல்லது நாட்டு மக்களுக்கு மட்டும்தானா என்ற கேள்விகள் எழலாம். உலகத்துக்கு எனப் பொதுவாகப் போவதே சரியானது. இந்தியாவில் தயாராகும் எழுத்துகள் பலவும் இந்திய மொழிகளிலேயே இருக்கும்போது அதைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர் பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து சென்றவராகத்தான் இருப்பார். ஆங்கிலப் புத்தகங்களை அனைவருமே உபயோகிக்க முடியும்.

Wednesday, August 24, 2005

பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...

சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.

தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:

* தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டியதில்லை.
* அரசு தன்னுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் கல்லூரிகள் மீது திணிக்க முடியாது.
* அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்கள் இவ்வளவுதான் என்று விதிக்க முடியாது. (ஆனால் தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்த என்று கமிட்டி/வாரியம் ஒன்றைக் கொண்டுவரலாம்.)
* அரசினால் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையைத் தீர்மானிக்க முடியாது. தனியார் கல்லூரிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம். இந்த நுழைவுத் தேர்வு/சேர்க்கை முறையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசுகள் கமிட்டி/வாரியங்களை ஏற்படுத்தலாம்.

இந்தத் தீர்ப்பை ஒருமனதாக வழங்கும்போது நீதிபதிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தையும் TM பாய் தீர்ப்பில் 11-நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பையும் விட்டு விலகாத வண்ணம் தீர்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. நீதிபதிகள் சில இடங்களில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் சட்டங்களை இயற்றாத காரணத்தால் நீதிமன்றம் இருக்கும் சட்டங்களை வைத்து தீர்ப்புகளை வழங்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் தீர்ப்பு வந்த நாள் முதலாக அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் குறை சொல்லியும், இந்தத் தீர்ப்பை மாற்றும் வண்ணம் சட்டம் இயற்றுவோம் என்று சூளுரைத்தும் வருகின்றனர். இதன் விளைவாக அரசியல்வாதிகள் தங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் ஒரு பெரிய போராட்டம் நடப்பதைப் போலக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். இது உச்ச நீதிமன்ற நீதிபதி லாஹோதியினை வருந்த வைத்துள்ளது. "வேண்டுமானால் நீதிமன்றங்களையே இழுத்து மூடிவிடுங்கள்" என்று அவர் சொல்லும் அளவுக்கு "confrontation", "precipitation" போன்ற வார்த்தைகளை கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களது வக்கீல்களும் பிரயோகித்து வருகின்றனர்.

இப்படியான நிலைமையில் சரியான விவாதங்கள் நிகழ முடியாது.

தனியார் கல்லூரிகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பற்றி சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே சட்டங்கள் தேவை. இதைத்தான் நீதிமன்றமும் சொல்லியுள்ளது. ஆனால் அப்படி இயற்றப்படவேண்டிய சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும்?

1. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு நியாயமானது. அதில் கிட்டத்தட்ட அனைவருமே ஒற்றுமையான எண்ணத்தை வைத்துள்ளனர். நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்திரிக்கப்படுவது நியாயமல்ல. நீதிபதிகள் எதற்கும் சார்பானவர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை. சரியான சட்டம் இல்லாதவரை தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டினைத் திணிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றுதான் அவர்களது தீர்ப்பு சொல்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனைச் சரி செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது கவனமாகச் செய்தால் அந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாரும் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் செய்யமுடியும். அவசரகதியாகச் செய்தால் அதனால் யாருக்கும் நன்மையில்லை.

2. தனியார் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகள், சேர்க்கை முறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்: அரசு இயற்றும் சட்டங்கள் மூலமாக இதைக் கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி ஏதேனும் கட்டுப்பாடு வந்தால் அது உச்ச நீதிமன்றம் சென்று தோல்வியைத்தான் தழுவும்! அவ்வாறு செய்யாமல் தனியார் கல்லூரிகளிடமே சேர்க்கை முறையை விட்டுவிடலாம். ஆனால் அந்தச் சேர்க்கை முறை நியாயமான வகையில் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தால் போதுமானது என்று தோன்றுகிறது.

3. கல்விக் கட்டணத்தைத் தீர்மானித்தல்: இதுவரையில் கல்விக் கட்டணங்களை அரசே தீர்மானித்து வந்தது. இதைத் தனியார் கல்லூரிகள் கடுமையாக எதிர்த்தன. இவ்வாறு கட்டணத்தைத் தீர்மாணிக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பொழுது கொண்டுவரும் சட்டத்திருத்தத்தில் அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைத் தீர்மானிக்காமல், TRAI போன்ற கட்டுப்பாட்டு வாரியம் ஒன்றின் மூலமாக கட்டணத்தைக் கட்டுப்படுத்தினால் போதும்.

அதாவது ஒரு செமஸ்டருக்கு ரூ. 13,000 தான் (ஒரு பேச்சுக்கு) கட்டணம் வைக்கலாம் என்று சொல்லாமல், ஒவ்வொரு கல்லூரியையுமே கட்டணத்தைத் தீர்மானிக்கச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு கல்லூரியும் அந்தக் கட்டணத்தை முன்கூட்டியே கட்டுப்பாடு வாரியத்திடம் அளிக்க வேண்டும். எதனால் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதாவது ஒரு கல்லூரி தான் உலகத் தரத்தில் நூலக வசதி கொடுக்கப்போவதாகவும் அதற்கென வருடம் ரூ. 2,500 அதிகமாக வசூலிக்கப்போகிறேன் என்றும் சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதற்கான அனுமதி தரப்படவேண்டும். அதேபோல முழுவதுமாக ஏர்கண்டிஷன் செய்யப்பட்டதாகக் கல்லூரி அறைகள் இருக்கும் என்றும் அதற்காக வருடத்துக்கு ரூ. 10,000 அதிகம் வசூலிக்கப்போகிறோம் என்றும் ஒரு கல்லூரி சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது அந்தக் கல்லூரியின் கட்டணம் தமக்குக் கட்டுப்படியாகுமா என்பதையும் முடிவுசெய்துகொள்ளலாம். அமெரிக்காவில் தனியார் கல்லூரிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அதை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. நாளடைவில் இந்தியாவிலும் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த என்று யாரும் இருக்கக்கூடாது. ஆனால் இன்று அப்படிச் சொன்னால் என்னை அடிக்கவருவார்கள்.

இட ஒதுக்கீட்டிலோ அல்லது அல்லாமலோ வரும் மாணவர்களால் கல்விக் கட்டணத்தைக் கொடுக்கமுடியாது என்ற நிலை வருமானால் அரசு மான்யமாகவோ கடனாகவோ மாணவர்களுக்கு உதவி செய்யலாம். அதை விடுத்து தனியார் கல்லூரிகளில் இவ்வளவுதான் கட்டணம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் பல கல்லூரிகள் (1) இழுத்து மூடுவார்கள் அல்லது (2) சட்டத்துக்குப் புறம்பாக, அடாவடித்தனம் மூலம் ரசீது கொடுக்காமல் பணம் வசூலிப்பார்கள். இரண்டுமே நாட்டுக்குக் கெடுதல்.

சத்யா கல்விக்கட்டணம் பற்றி Financial Express-ல் எழுதியுள்ள கட்டுரை இங்கே: State control over fee cap is simply untenable

Monday, August 22, 2005

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

1. வெற்றிப்படிகள், வானதி திருநாவுக்கரசு, வானதி பதிப்பகம், முதல் பதிப்பு: ஜூலை 1997, இப்பொழுதைய பதிப்பு: மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2000, பக்: 418, விலை ரூ. 75

வானதி பதிப்பகத்தைத் தோற்றுவித்த திருநாவுக்கரசு செட்டியாரின் சுயசரிதை. வாழ்க்கை வரலாறுகள் என்ற வகையில் மோசமாக எழுதப்பட்டது. திடீரென வாழ்க்கைக் கதையிலிருந்து தான் சந்தித்த மனிதர்கள் என்று தாவுகிறது. சொல்லாமல் விடப்பட்டது நிறைய. தமிழின் மிக முக்கியமான பதிப்பகத்தை உருவாக்கியவர் இன்னமும் கவனமாக தனது வாழ்க்கைக் கதையை எழுதியிருக்கலாம். இந்தத் துறையில் ஈடுபட விரும்பும் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும். ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனாலும் நிறைய சுவையான செய்திகள் கிடைக்கின்றன.

ஆங்கில மொழியாக்கத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆங்கில மொழியாக்கம் கேவலமாக இருக்கிறது.

2. சோளகர் தொட்டி, ச.பாலமுருகன், வானம் வெளியீடு, முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2004, இப்பொழுதைய பதிப்பு: மூன்றாம் பதிப்பு, மார்ச் 2005, பக்: 240, விலை ரூ. 100

பவானியை ஒட்டிய காடுகளில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை, இந்தப் பழங்குடிகளை எவ்வாறு 'நாகரிக' மாந்தர்கள் சுரண்டுகின்றனர், சந்தன, தந்தக் கடத்தல் வீரப்பனால் அலைக்கழிக்கப்படும் பழங்குடியினர், பின் தமிழக, கர்நாடக காவல்துறையினரால் சீரழிக்கப்படும் பழங்குடியினர் என்று ஆவணமாக இருக்கும் நாவல். கதை என்னும் வடிவத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் பின்னணியில் இருக்கும் உண்மை உயிரை உலுக்குகிறது. நாம் மனிதர்களாக நடந்துகொள்ளாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க வைக்கிறது.

நண்பர்கள் மூலம் இலவசமாகக் கிடைத்தவை:

3. வானம் வசப்படும், கவிஞர் செல்ல கணபதி, விஜயா பதிப்பகம், முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2000, என்னிடம் இருக்கும் பதிப்பு: இரண்டாம் பதிப்பு, அக்டோபர் 2001, பக்: 112, விலை ரூ. 25

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தை உருவாக்கிய பழனியப்பா செட்டியாரின் வாழ்க்கை வரலாறு. முழுமையான வரலாறு என்று சொல்வதை விட அவசரமாக எழுதப்பட்ட புகழுரை என்று சொல்லலாம். நிறைய விஷயங்கள் விடுபட்டுள்ளன. ஆனால் பல சுவையான விஷயங்கள் இங்கும் கிடைக்கின்றன. ஐயம்பெருமாள் கோனார் - பழனியப்பா செட்டியார் நட்பு, சிறுவர் புத்தகங்களை உருவாக்குவது. அதற்கும் மேல்.

எத்தனை பேருக்குத் தெரியும், பழனியப்பா செட்டியார் Asian Bearing Limited எனும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் என்று? GMC Tiles Limited? சுமாரான படிப்பறிவு இருந்தாலும், புத்தக லாபத்தைப் பிற பொறியியல் துறைகளில் தைரியமாக முதலீடு செய்தவர். இவரைப் பற்றி அதிகமாக, முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டுகிறது!

மேற்குறிப்பிட்ட மூன்றையும் படித்து முடித்துவிட்டேன்.

படிக்க வேண்டியது:

4. Nano, The next revolution, Mohan Sundara Rajan, National Book Trust, 2004, Pages: 192, Price: 75, ISBN 81-237-4305-X