Tuesday, May 22, 2018

நான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை

என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான்.

அவருடைய பெயர் சீனிவாசன். நான் பத்தாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையின்போது அவர் என் தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அவர் அப்போதுதான் கிண்டி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங்கில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தார் என்று ஞாபகம். அவருடையது வறுமையான பின்னணி என்றும் ஞாபகம் இருக்கிறது. ரயில்வே ஸ்டோர்ஸ் என்று சொல்லப்படும் ரயில்வே ஸ்டேஷன் கடையில் அவருடைய தந்தை வேலை செய்தார் என்றும் ஞாபகம். அக்காலகட்டத்தில் நாகையில் படித்து தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிக்குச் சென்றிருந்த மிகச் சொற்பமானோரில் இவர் ஒருவர் என்று நினைக்கிறேன்.

அவரும் நான் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். என் தந்தை அப்பள்ளியில் ஆசிரியர் என்பதால் பார்த்துவிட்டுப் போக வந்திருந்தார். எனக்கு இன்றும் அக்காட்சி ஞாபகத்தில் உள்ளது. நான் பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்து ஏதோ கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். சீனிவாசன் என்னிடம் நான் எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறார். நான் பத்தாம் வகுப்பு முடித்ததைச் சொல்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கிறார். எஞ்சினியரிங்தான் என்று பதில் சொல்கிறேன். அப்போது அவர் என் தந்தையிடம், ஐஐடி ஜேஇஇ என்று ஒரு தேர்வு உள்ளது என்றும் அதனை எழுத பத்தாம் வகுப்பு விடுமுறையிலிருந்தே பயிற்சி எடுக்கவேண்டும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றால், தான் படித்த கல்லூரியைவிடச் சிறந்த பொறியியல் கல்லூரியான ஐஐடிக்குப் படிக்கச் செல்லலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

அப்போது என் தந்தை ஐஐடி குறித்து எதையும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவர் அடுத்த சில நாட்களில் சென்னைக்கு தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிக்காகச் செல்லவேண்டியிருந்தது. சென்னையில் ஓர் உறவினர் மூலம் ஐஐடி பற்றித் தெரிந்திருந்த மற்றோர் உறவினரைக் கண்டுபிடித்தார். அவர், ஐஐடியெல்லாம் வேண்டாத வேலை என்றும் +2வில் ஒழுங்காகக் கவனம் செலுத்துவதே சிறந்தது என்றும் அறிவுரை கூறினார். ஆனால் என் தந்தை விடாமுயற்சியில் பிரில்லியண்ட் டுடோரியல் என்ற ஓர் நிறுவனம் ஐஐடி ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி நடத்துகிறது என்பதைக் கண்டறிந்து அந்த நிறுவனம் இருந்த தி.நகர் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது அவர்கள் தபால் மூலமான பயிற்சிக்கு (ஒய்.ஜி ஃபைல்) ரூ. 5,000 ஆகும் என்று சொல்லியிருக்கின்றனர். அது மிக அதிகம், வீண் செலவு என்று முடிவு செய்து ஊர் திரும்பிவிட்டார்.

நாகை திரும்பியதும் ஊரிலேயே வேறு யாரேனும் ஜேஇஇ தேர்வுக்கு படித்த பழைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் என் தந்தைதான் செய்தார். நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது உப்பாற்றங்கரையில் கார்க் பால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். நாகையிலேயே நான்கைந்து பேர் முந்தைய ஆண்டுகளில் பிரில்லியண்ட் மற்றும் அகர்வால் பயிலகங்களின் தொலைதூரக் கல்விமூலம் ஜேஇஇ எழுத முனைந்தது தெரியவந்தது. நாகை அப்படியொன்றும் பின்தங்கியிருக்கவில்லை!

பிரில்லியண்டின் இரண்டு ஆண்டு மெட்டீரியலும் அதன் சொரசொரப்பான சைக்ளோஸ்டைல் தாள்களில், இரண்டு சீனியர் மாணவர்களிடமிருந்து கிடைத்தன. ஓரிரு மாதங்களுக்குள் எங்கள் பள்ளித் தலைமையாசிரியரும் எங்கள் கணித ஆசிரியருமான சீனிவாசனின் மகன் ராமகிருஷ்ணனிடமிருந்து அகர்வால் பாடங்கள் வழுவழுத் தாளில் கிடைத்தன. 

என் தந்தை ஐஐடி சென்னைக்கு ஒரு போஸ்ட்கார்டில், அங்கே சேர என்ன செய்யவேண்டுமென்று கேட்டு எழுதினார். அவர்கள் சில நாட்களிலேயே ஓர் இன்லாண்ட் லெட்டரில் விவரம் அனுப்பினர். அதாவது ஜேஇஇ நடத்துவது மட்டும்தான் அவர்கள் வேலை. சிலபஸ் வருடாவருடம் மாறலாம். சின்னச்சின்ன மாற்றங்கள்தான் இருக்கும். இருந்தாலும் எழுதவேண்டிய ஆண்டுக்கான சிலபஸைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டியது மாணவர் கடமை. ஓர் ஆண்டுக்கு ரூ. 2 (இரண்டு) என்று மணி ஆர்டர் அனுப்பினால், கடந்த நான்கு வருட வினாத்தாள்களை அனுப்பிவைப்பார்கள். எட்டு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியது கடந்த நான்கு ஆண்டு வினாத்தாள்கள் கிடைத்தன.

அடுத்து, மிக முக்கியமான ஒரு புத்தகம் கிடைத்தது. எப்படி என்று இப்போது நினைவில் இல்லை. சென்னையில் திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு கடையில் என் தந்தை வாங்கிவந்தார் என்று லேசாக ஞாபகம். கடந்த 25 ஆண்டு ஜேஇஇ வினாத்தாள்கள், அவற்றில் சிலவற்றுக்கு விரிவான வழிமுறைகளுடன் கூடிய விடை, மீதத்துக்கு இறுதி விடை மட்டும்.

ஜேஇஇ என்னை எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படுத்தவில்லை. ஏனெனில் அதன் மதிப்பு என்னவென்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை, என் தந்தைக்கும் தெரிந்திருக்கவில்லை. என் கையில் கிடைத்திருந்த பாடங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. தொடக்கத்தில் அதன் உள்ளே நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கணிதம், இயற்பியல் இரண்டும் ஓரளவுக்குக் கைவரத் தொடங்கின. வேதியியல் ஆரம்பத்திலிருந்தே எளிதாகத்தான் இருந்தது.

பள்ளிக்கூடமும் பெரிதாக அழுத்தம் தரவில்லை. பள்ளித் தேர்வுகள் எனக்குப் பெரிய சுமையாகவே இல்லை. எனவே பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் நான் ஜேஇஇ பாடங்களிலேயே செலவிட்டேன். கணிதம், இயற்பியல் இரண்டிலுமே வரும் டிரிக் கேள்விகளை எனக்கே உரிய வகையில் உடைக்கக் கற்றுக்கொண்டேன். திரும்பத் திரும்ப 25 ஆண்டுக் கேள்வித்தாள்களிலும் உள்ள சிக்கலான கேள்விகளை எதிர்கொள்வேன். பதில் கிடைக்கும்வரை சோர்வே இல்லாமல் தொடர்வேன். இந்தப் பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடமும் பேச முடியாது, சக மாணவர்களுடனும் உரையாட முடியாது. எனவே நானேதான் விடைகளைக் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தபின்னர் ஜேஇஇ எழுத திருச்சி வரவேண்டியிருந்தது. திருச்சி ஈ.ஆர் பள்ளிதான் தேர்வு மையம். சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கு இதுதான் மையம். அப்போது தேர்வு இரண்டு நாட்கள், நான்கு பரீட்சைகள். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்.

கணிதத் தேர்வு மரண அடி. மொத்தம் 15 மதிப்பெண்களுக்குத்தான் என்னால் பதிலே எழுத முடிந்தது என்று ஞாபகம். என் வாழ்க்கையிலேயே அவ்வளவு மோசமான கணிதத் தேர்வை நான் எழுதியதில்லை. இயற்பியல் அவ்வளவு மோசமில்லை. சுமார் 60 மதிப்பெண்களுக்குத் தொடவாவது முடிந்தது. அதில் எத்தனைக் கேள்விகளுக்குச் சரியான விடை கொடுத்திருப்பேன் என்பது தெரியாது. வேதியியல்தான் மனத்துக்கு இதம் தருவதாக இருந்தது.

ஐஐடி காலி என்று முடிவுசெய்துவிட்டேன். ஆனால் என் தந்தையிடம் எதையும் சொல்லவில்லை. அவர் தன் மகன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தேன். மாவட்டத்திலும் முதல் மாணவனாகத்தான் இருந்திருப்பேன். பத்தாம் வகுப்பிலும் அப்படியே. ஜேஇஇ தேர்வு முடிவுகள் வரவில்லை. பிற மாணவர்கள் தமிழ்நாட்டின் பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் பொறியியல் நுழைவுத்தேர்வு மட்டும்தான் எழுதுவதாகத் தீர்மானம். ஆனால் என் தந்தை அதற்குப் பணம் கட்டி விண்ணப்பிக்கவில்லை. ஜேஇஇ தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். அவருடைய திட்டம் இதுதான். ஜேஇஇ தேர்வு முடிவு வெளியாகி இரண்டு நாள்கள் கழித்துத்தான் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கடைசி நாள். ஜேஇஇ கிடைக்கவில்லை என்றால், நேராகச் சென்னை வந்து அண்ணா பல்கலையிலேயே நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை நேரடியாகக் கொடுத்துவிடுவது. இது என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமல்ல. பணத்தை ஏன் வீணடிப்பானேன் என்ற அவருடைய சிக்கன உணர்வும்கூட.

ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதியும் எனக்கு ஆல் இந்தியா ரேங்க் 469 கிடைத்திருந்தது. அடுத்த பிரச்சினை, இந்த ரேங்குக்கு ஐஐடியில் இடம் கிடைக்குமா என்பது. துறை பற்றியெல்லாம் பெரிய கனவு இருக்கவில்லை. எது கிடைத்திருந்தாலும் எடுத்துப் படித்திருந்திருப்பேன். யார் எம்மாதிரியான ஆலோசனை கொடுத்தார்கள் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவாயிற்று.

ஐஐடி கவுன்செலிங்குக்காகச் சென்னை வரவேண்டியிருந்தது. அப்போது சென்னை கடும் வறட்சியில் இருந்தது. ஐஐடி சென்னை கேம்பஸே கொஞ்சம் காய்ந்துதான் இருந்தது. ஏதோ ஒரு ஹாஸ்டலில் நானும் என் தந்தையும் தங்கினோம். பக்கத்து அறைகளில் ஆந்திரா மாணவர்கள் பலர் தத்தம் தந்தையருடன் வந்திருந்தனர்.

இன்றும் பல மாணவர்கள் செய்யும் மடத்தனத்தில் நான் ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் படிப்பை என் முதல் தேர்வாக முடிவெடுத்திருந்தேன். என் நல்லூழ், கவுன்செலிங்கில் உட்கார்ந்திருந்த பேரா. ஶ்ரீனிவாச ராவ் என்பார், ‘சொல்வதைக் கேள், மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள்’ என்றார். அதை ஒழுங்காகக் கேட்டு நடந்துகொண்டேன். சென்னை ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் இடம் கிடைத்தது.

Sunday, May 13, 2018

என் ஆசிரியர்கள்

இன்று ட்விட்டரில் ஓர் இழையைப்பார்த்தேன். ஒரு கொரியச் சிறுவன் பள்ளிப் படிப்பின்போது அமெரிக்காவுக்குக் குடியேறுகிறான். ஆங்கிலம் தெரியாது. அதற்கான தனிப்பயிற்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் அறிவியல் வகுப்பில் ஆசிரியர் ஒளிச்சேர்க்கை குறித்த கேள்வித்தாளைக் கொடுக்கிறார். இந்தக் கொரியச் சிறுவனிடம், “நீ இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், விட்டுவிடு” என்கிறார். படம் பார்த்து, எது எது என்ன என்ன என்று எழுதவேண்டும். கேள்வித்தாளைப் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரியும். ஆனால் ஆங்கிலம் தெரியாது. அவனுக்கு அந்த டெஸ்ட் கிடையாது என்றாலும் மனம் பதறுகிறது. விடுவிடுவென தனக்குத் தெரிந்தவற்றைக் கொரிய மொழியில் எழுதி டீச்சரிடம் கொடுத்துவிடுகிறான். டீச்சர் அடுத்து வகுப்புக்கு வந்து அந்தக் கொரியச் சிறுவன்தான் வகுப்பிலேயே அதிக மதிப்பெண் என்கிறார்.

அவருக்குக் கொரிய மொழி தெரியாது. ஆனால் கொரிய மொழி கொஞ்சமே தெரிந்திருந்த கணித ஆசிரியருடன் உட்கார்ந்து, அவர் அகராதியைப் புரட்டிப் பார்த்துச் சொன்னதை வைத்து அந்த விடைத்தாளைத் திருத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்.

இந்த ஆசிரியரின் செய்கை எப்பேர்ப்பட்டது. இதைப் படிக்கும்போதே கண்கள் நனைகின்றன.

ஓர் ஆசிரியர் சிறப்பாகப் பாடம் நடத்துவதால்தான் நினைவில் கொள்ளப்படுவாரா? நிச்சயமாக இல்லை. நான் என்னுடைய ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் எனக்கு அறிவியல் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் நான்கு பேர். வி.டி எனப்படும் தியாகராஜன் இயற்பியல். எல்.ஆர் எனப்படும் ராமசாமி வேதியியல். வாசன் விலங்கியல். விசுவநாதன் தாவரவியல். இதில் முதல் மூன்று ஆசிரியர்களும் மூத்த ஆசிரியர்கள். பிளஸ் டூ முறை கொண்டுவரப்படுவதற்கு வெகு காலம் முன்பிருந்தே ஆசிரியர்களாக இருப்பவர்கள். அவர்கள் படித்திருந்தது அக்கால பி.எஸ்சி மட்டுமே. விசுவநாதன் அப்போதுதான் புதிதாக ஆசிரியராக வந்திருந்தார். எம்.எஸ்சி படித்து வந்தவர்.

பொதுவாகவே பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்னரேயே அந்த ஆண்டின் பாடப் புத்தகங்களை நான் பெரும்பாலும் படித்து முடித்திருப்பேன். ஆசிரியர்களின் உதவி எனக்கு என்றைக்குமே தேவைப்பட்டிருந்ததில்லை. எனவே வகுப்புகளில் பெரும்பாலும் போரடித்தபடி உட்கார்ந்திருப்பேன்.

இயற்பியல் ஆசிரியர் வி.டி மெலிந்த தேகம் கொண்டவர். மிகவும் கண்டிப்பானவர். ஆனால் யாரையும் அடிக்க மாட்டார். அதிகம் பிரச்னை தரும் மாணவர்களை வகுப்பை விட்டுத் துரத்திவிடுவார். அவ்வளவுதான். இயற்பியல் பாடம் பெரும்பாலான மாணவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே தினம் தினம் அவர் மாணவர்களுடன் நிறையப் போராடவேண்டியிருந்தது. அதே நேரம் நானும் என் வகுப்பு நண்பர்கள் சீனிவாசன், ஶ்ரீராம் போன்றோரும் வகுப்பறையில் வேலையின்றி உட்கார்ந்திருப்பதை அவர் நன்கு புரிந்துகொண்டார். நாங்கள் வகுப்பறையில் உட்காரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி, இயற்பியல் பரிசோதனைச் சாலை சாவியை எங்களிடம் கொடுத்துவிடுவார்.

நாங்கள் மூன்று நான்கு பேர் பெரும்பாலும் இயற்பியல் சோதனைச் சாலையில்தான் நேரம் கழிப்போம். எங்களுக்கு விருப்பமான எதையாவது செய்துகொண்டிருப்போம். ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுக்குக் கொடுத்த சுதந்திரம் முக்கியமானது. இன்று அப்படிச் செய்துவிட முடியுமா? “நீ என் வகுப்பில் உட்காரவேண்டிய தேவையில்லை. நீயாகவே படித்துவிடுவாய். போய் உனக்குப் பிடித்ததைச் செய்” என்று எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அனுமதிக்கிறார்?

வகுப்பறைக்கு வெளியே மாணவர்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார். எப்போதுமே இவருடைய பரிசோதனைச் சாலையில் ஒரு மாணவர் கூட்டம் இருக்கும். மாணவர்களின் நலனில் மிகப்பெரிய அக்கறை காட்டியவர் இவர்.

எல்.ஆர் பெரிய மீசை வைத்திருப்பார். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஓங்கி அறைந்துவிடுவார். ஏன் அவ்வளவு கடுமையாக அவர் மாணவர்களிடம் நடந்துகொள்வார் என்று எங்கள் யாருக்குமே புரிந்ததில்லை. அவர் வந்தால் வரும் வழியில் யாருமே நிற்க மாட்டோம். அவரிடம் பேசவே பயப்படுவோம். இப்படி அப்படி அவர் கண்ணில் படாமல் ஓடிவிடுவோம். இவரும் வகுப்பில் பாடம் நடத்துவதற்குப் போராடுவார். நாங்கள் பெயருக்கு ஆங்கில மீடியம் என்ற ஒன்றில் படித்தோம். ஒரு நாலைந்து பேரைத் தவிர மற்றவர்கள் ஆங்கிலம் எழுதத் திணறும் மாணவர்கள்தாம். ஆங்கிலத்தில் படித்து, பொருளைத் தமிழில் சொல்லிக்கொடுப்பது ஆசிரியர்களுக்கு நிஜமாகவே கடினம்தான். ஆனால் உயிரை விட்டுச் சொல்லிக்கொடுத்தார்கள். எப்படியாவது மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்பதில் ஆத்மார்த்தமாக உழைத்தார்கள்.

பள்ளி முடிந்து ஐஐடி மெட்ராஸ் சேர்ந்து ஓராண்டு கழித்து மீண்டும் என் ஆசிரியர்களைப் பார்க்கப் போனேன். எல்.ஆர் என்னிடம் ஐஐடி பற்றி விரிவாகக் கேட்டுக்கொண்டார். சட்டென்று, “ஏன்யா, உண்மையைச் சொல்லுய்யா, நான் பாடம் சொல்லிக்கொடுத்தா நீ ஐஐடில சேர்ந்தே?” என்றார். எனக்குச் சட்டென்று கண்ணீர் வந்துவிட்டது. அவர் பதறிப்போய்விட்டார். நாங்கள் வெகுநேரம் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம். ஓர் ஆசிரியனிடம் மாணவனாக நாம் வெறும் பாடப் புத்தகத்தை மட்டுமா படிக்கிறோம்?

வாசன், ஒரு மேவரிக் ஆசிரியர். வி.டி, எல்.ஆர் போன்றோர் கல்லூரியில் படித்ததிலிருந்து பாடம் சொல்லித்தரவேண்டிய சிலபஸ் நிறைய மாறியிருந்தது. இருவருமே தாங்கள் பாடங்களைச் சொல்லித்தர சிரமப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். விலங்கியல் அப்படியல்ல. சிலபஸ் மாற்றம் என்று ஏதும் இல்லை. வாசன் அநாயாசமாக வகுப்பெடுப்பார். அருமையாகப் படம் வரைவார். அவர் கையில் புத்தகமோ, குறிப்புகளோ இருந்து நான் பார்த்ததில்லை. முதல் நாள் அவர் வகுப்பு எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. நேராக உள்ளே நுழைந்ததும் மூச்சுவிடாமல் கடகடவென்று ஒப்பிக்க ஆரம்பித்தார்.

புரோட்டோசோவா, போரிஃபெரா, சீலண்டெரேட்டா, பிலாட்டிஹெல்மிந்தஸ், ஆஸ்கெல்மிந்தஸ், ஆர்த்ரோபோடா, அன்னலீடா, மொலுஸ்கா, எக்கினோடெர்மேடா, கார்டேடா.

இப்போதுகூட இதை நான் மனப்பாடமாகத்தான் எழுதியிருக்கிறேன். (இப்போது விலங்குகளை வகை பிரிப்பதில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது 1985 புத்தகத்தில் இருந்தது.)

பரிசோதனைச் சாலையிலும் வாசன் ‘சிலபஸ்’ என்ற வரையறையைத் தாண்டி நடந்துகொள்வார். சிறுநீரில் சர்க்கரை உள்ளதா என்ற சோதனையைச் செய்ய அனைவரையும் அவரவர் சிறுநீரைப் பிடித்துவரச் செய்து ஒவ்வொரு மாணவரையும் தானாகவே இந்த சோதனையைச் செய்யவைத்தது எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. இத்தனைக்கும் அது சிலபஸில் இல்லை என்று நினைக்கிறேன். வகுப்பறை தாண்டி, தன் வீட்டுக்கு அனைத்து மாணவர்களையும் வரவழைத்து விலங்கியலுக்குத் தேவையான படங்கள் வரைந்து பழகுவதற்கு உதவி செய்வார்.

என் பள்ளிக்கூடத்தில் நான் சந்தித்த ஆசிரியர்கள் யாருமே உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் என்று சொல்ல முடியாதவர்கள். அவர்களில் பலர் மிக மிகச் சாதாரண ஆசிரியர்களாகக்கூட இருந்திருக்கலாம். நான் படித்த ஐஐடி மெட்ராஸ், கார்னல் பல்கலைக்கழகம் போன்ற இடங்களுடன் நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியை எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. ஆனால் நான் அங்கே படித்த ஏழு ஆண்டுகளும் எனக்கு மிக முக்கியமானவை. அங்கே எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும் என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானவர்கள். என் ஆரம்பப் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்களைத்தான் எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. மிகச் சில சம்பவங்கள்தான் நினைவில் உள்ளன. ஆனால் ஆறிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வோர் ஆசிரியரையும் பெயருடன் நினைவுகூர முடிகிறது. அவர்கள் எப்படி என் திறமைகளைக் கண்டுகொண்டு அதனைத் தூண்டிவிட முயற்சி செய்தார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர முடிகிறது.