தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி
சற்றே தீவிரமான ஒரு எண்ணம். ஆனால், ஒருவகையில் பார்க்கிற போது, அதில் தவறு இல்லையோ எனத் தோன்றும். பட்டினியுடன் இருப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு சமூகமும் மகிழ்ச்சியாய் இருந்து விட முடியாது. உணவு மட்டுமில்லை - ஒருவனுக்கு (ஒருத்திக்கு) அத்தியாவசியத் தேவைகள் தீர்வு அடைந்தால் மட்டும் போதாது - அதற்கு மேலும் போக முடியும் என்றதொரு நம்பிக்கை வரக்கூடிய நாடாக நமது இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வராத பட்சத்தில், ஒருவனுக்கு தனது உயிரில் பிடிப்பு இருக்காது. தன் உயிரில் ஆசை இல்லாத ஒருவனுக்கு, பிறரது உயிரின் மேல் மதிப்பு இருக்காது. பிறனுயிர் மதிக்காதவன், கொலையும் செய்வான்.
தன் வீடு குப்பைமேட்டில் தான் என்ற எண்ணம் தெருவெல்லாம் குப்பை போட வைக்கும். தன் உயிர் செல்லாக் காசு என்பவன் ஓட்டிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா தெருவில் போகும் மக்கள் மீதுதான் ஏறும்.
அந்த நம்பிக்கை - தன்னால் மேலே போக முடியும் என்ற நம்பிக்கை - ஒருவனுக்கு எப்பொழுது வரும்? இதைத்தான் "American Dream" (அமெரிக்கக் கனவு) என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள்.
தன் முன்னேற்றத்துக்கு தான் மட்டுமே காரணம். தனது சக்திக்கு உட்பட்டு தன்னால் படிப்படியாகத் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது, அப்படி இல்லாவிட்டாலும், முயற்சியின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இந்தியக் கனவாக இருக்க வேண்டும்.
இந்தக் கனவு காண விரும்புபவர்கள் மற்ற யாரையும் முழுதாக நம்பி வீணாய்ப் போகக் கூடாது. அரசாங்கம்/NGO இயக்கங்கள் என்று பிறரை மிகவும் சார்ந்து இருக்கக் கூடாது.
படிப்பு அவசியம் - சான்றிதழ்கள் அல்ல - ஆனால், தனக்குத் தேவையானவற்றை இணையதளங்கள் (websites) மூலம் அறிந்து கொள்ளும் அளவிற்குத் தேவையான படிப்பு அவசியம். இணைய இணைப்பு (internet connection) அவசியம். ஆனால், இணையத்தின் மொழி ஆங்கிலமாக உள்ளது, அம்மொழி தெரியா இந்தியரின் கனவை ஆரம்பத்திலேயே அழித்துவிடும். அதைத் தடுக்க வழி அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பது அல்ல. தமிழிலே தளங்கள் அமைப்பது. இதைச் செய்வது இனியும் கடினம் அல்ல.
(இந்தக் கட்டுரை எழுதும் முயற்சியே, தமிழில் மிகவும் இயல்பாக, சுலபமாக எண்ணங்களை வெளிப்படுத்தவும் முடியும், பிறருக்குப் போய்ச் சேர்க்கவும் முடியும் என்பதை காண்பிப்பதற்குத்தான்.)
சென்றிடுவோம் எட்டுத் திக்கும் (இணைய தளங்களுக்கு). அங்கு காண்பதையெல்லாம் இங்கு (தமிழுக்கு) கொண்டு வந்து சேர்ப்போம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
No comments:
Post a Comment