Friday, December 15, 2006

பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர்

என் முந்தைய பதிவு: காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம், பிப்ரவரி 05, 2006

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

முஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.

மீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.

இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.

இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.

இரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது?

* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.

தி ஹிந்து கட்டுரை

* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.

* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.

* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

----

கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.

6 comments:

  1. இந்திய இறையாண்மையை பாதிக்காத வண்ணம் காஷ்மீருக்கு அதிக அதிகாரம் தர முடிந்தால் தரலாம். இரு காஷ்மீர்களுக்கும் இடையே மக்கள் போக்குவரத்துக்கும், வணிக தொடர்புக்கும் அதிக பட்ச முன்னுரிமை தரலாம்.

    ஜம்முவை தனி மானிலமாக்குவது ஏற்கப்படக் கூடியதே.

    //ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.//

    இது தான் சந்தேகத்தை கிளப்புகிறது.எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் காஷ்மிரின் ஒரு பிடி மண் கூட இந்தியாவை விட்டு பிரிய கூடாது.

    ReplyDelete
  2. சென்ற சில நாட்களில் செய்திகளில் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்திவிட்டு "வழக்கமான முஷாரஃப் தனக்குத்தானே டார்ச் அடிக்கும் உத்தி" என்று நகர்ந்துவிட்டேன்.

    உண்மையாகவே முஷாரஃப் கார்கில் சொதப்பலுக்கு பிரயாசித்தம் தேடிக்கொள்ள முற்பட்டால் சந்தோஷமே.

    "சார் இவன் என்னெ கிள்ளுறான்" என்று ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு நாடுகளுமே வெட்டியாக அரை நூற்றாண்டுகள் வீணடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு பேச்சை முற்றிலும் நம்பியது மிக முக்கிய முன்னேற்றம்.

    ஐ.நா கண்காணிப்பில் கருத்துக்கணிப்பு(referendum) நடத்துவதற்கு ஏன் இந்தியா முன்வர மறுக்கிறது என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த முஷாரஃப் மனம் மாறியது வரவேற்க வேண்டியது.

    இந்தியாவும் வெச்சா குடுமி செறச்சா மொட்டை என்ற நிலையைத் தளர்த்திப் பேசினால் வேகமான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் நிலையான நல்லுறவை கொண்டிருப்பதே பாகிஸ்தானுக்கு நன்மை.

    ReplyDelete
  3. இது நடக்க கூடிய சாத்தியம் குறைவு பத்ரி. இரு நாட்டு ராஜாக்களும் ஜாலி இது மாதிரி டெய்லி பேட்டி கொடுப்பார்கள், அப்புறம் வழக்கமா மீண்டும் துவங்கும் எச்சரிக்கை படலங்கள் இரு புறத்திலிருந்தும். வெட்டிக்கு பேசறாங்க!!! நீங்க ரொம்ப சீரியஸா எடுத்திட்டதா எனக்கு தோணுது!!!

    ReplyDelete
  4. //
    இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
    //

    ரொம்ப நல்லது பத்ரி சார்,


    //
    இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.
    //

    கஷ்மீர் தன் நாட்டின் பகுதி என்று என்றுமே சொன்னதில்லை என்றால் அக்ஸாய் சின்னை சீனாவுக்கு எழுதிக் கொடுத்து யார் வீட்டு சொத்தை யார் பங்கு போட்டுக் கொண்டார்கள் ? என்றும் உடனடியாகக் கேட்கவேண்டும்.

    முஷரஃப் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எவனோ ஒரு முல்லா கையில் பாகிஸ்தான் சிக்கி, பேச்சு வார்த்தைகூட நடத்த முடியாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த ஆள் இருக்கும் போதே பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வை நோக்கி நகர்த்தவேண்டும் என்பது நல்ல கருத்து என்றாலும், இவர் தான் கார்கில் போரை orchestrate செய்த மகான் என்பதால் இந்தியாவின் நலம் இவர் திட்டத்தில் இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

    இதில் தேசியம், இந்தியம், இந்துத்வா, சங் எல்லாம் ஒன்றும் இல்லை.

    ஒரே ஒரு கடைசி கேள்வி,

    கஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி இல்லை என்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துவிட்டதனால் இனி பிரச்சனை கஷ்மீர் மக்கள் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் தானே தவிர இதில் பாகிஸ்தான் அரசின் (அல்லது சர்வாதிகாரியின்) plan of action ஐ ஏன் இந்தியா அங்கீகரித்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும் ?

    //
    கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.
    //

    மிக்க நன்றி ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    மொழிபெயர்ப்பாளர் யார் ? பா. ரா வா ?

    ReplyDelete
  5. முஷாரப்பின் பேட்டிக்குப் பின்னர் பாக்கிஸ்தானிலிருந்து வரும் செய்திகள்...மக்களிடையே இதுவரை ஏற்ப்படுத்தியுள்ள கருத்தாக்கத்தை உடைத்து, சமரசத்திற்கு அவர்களை தயார்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.

    இந்தியாவும், நமது மக்களையும் சமரசத்திற்கு தயார்ப்படுத்த பாக்கிஸ்தானைப் போல முன் வர வேண்டும்

    ஒரு சாமான்யனாக என்னுடைய தீர்வு
    http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_10.html

    ReplyDelete
  6. This is indeed good and welcome news. The uncertainity is how this will be enforced by Gen. Musharaf in Pak. If the division is more or less along the lines of control, i think it is realistic. This is the time to enforce operation "Stop loss" India has been spending tons of money into Kashmir with so many casualties in our army.(read Sujatha's piece in vikatan this week.)PM needs to talk to hearts of BJP and Communists that it should not politicalized. if we miss the boat it will never be resolved.

    ReplyDelete