Friday, March 07, 2008

தூரதர்ஷன் என்னும் தொல்லைக்காட்சி

எப்போதோ பார்த்த படம். பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'Being There'. ஒரு வயதானவர் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் குறைந்த ஐக்யூ உள்ள ஒரு மனிதர். எழுதப் படிக்கத் தெரியாதவர். வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் போனதில்லை. ஆனால் நல்ல உடையணிந்து பார்க்க பெரிய மனிதரைப் போலத் தோன்றுவார். தோட்டவேலை செய்ததுபோக, அவரது ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது. அந்தத் தொலைக்காட்சியின் ரிமோட்தான் அவரது உற்ற நண்பன். தொலைக்காட்சி வழியாக மட்டுமே அவர் கற்றதும் பெற்றதும்.

வயதானவர் செத்துப்போக, நடுத்தெருவுக்கு அனுப்பப்படும் சான்ஸ் கார்டெனர் வாழ்வின் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை.

கதை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மனிதன் தொலைக்காட்சிமூலமாக மட்டுமே உலகை உணரமுடியுமா, அறியமுடியுமா? தனது புறவுலகை தொலைக்காட்சியின் அசையும் படங்களாலும் ஒலிக்கும் குரல்களாலும் மட்டுமே கட்டமைக்கமுடியுமா? அப்படி நடந்தால் என்ன ஆகும்?

அற்புதமான கற்பனை.

ஆனால் அந்தத் தொலைக்காட்சியில் தூரதர்ஷன் மட்டும்தான் தெரியும் என்றால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பகீர் என்கிறது.

நல்லவேளையாக எந்தத் தொலைக்காட்சி சானலும் என் புறவுலகைத் தீர்மானிக்கவில்லை. 'டிவி பார்த்தா கெட்டுப்போயிடுவான்' என்று என் வாத்தியார் அப்பா, நான் 12-வது தாண்டும்வரை டிவியே வாங்கவில்லை. அதற்குப்பின் நான் என் பெற்றோர் வீட்டில் வசிக்கவுமில்லை.

அடுத்த நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் கழித்த தினங்களில் தூரதர்ஷனைப் பார்த்துள்ளேன். மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு காலையும் வந்த ராமனந்த் சாகரின் ராமாயணம், வாராவாரம் புதன்கிழமை இரவு வரும் சித்ரஹார் - ஹிந்தி சினிமாப் படங்களின் ஒலியும் ஒளியும், வெள்ளிக்கிழமை தமிழ்ப் படங்களில் ஒலியும் ஒளியும், கடைசி இரண்டு வருடங்கள் பார்த்த என்.டி.டி.வியின் The World This Week-ம், அதில் பார்த்த ஈராக்-குவைத் போரும், தினம் பார்த்த தூரதர்ஷன் செய்திகளும்.

அதைத்தவிர என் நினைவில் இருப்பவை எல்லாம் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்', அதையே ஹிந்தி மொழியில் 'ருகாவட் கே லியே கேத் ஹை', ஙொய் என்ற சத்தத்துடன் பல வண்ண நெடுக்குப் பட்டைகளுடன் காட்சியளிக்கும் திரை, சமயோசிதமே இல்லாமல் மிக முக்கியமான கிரிக்கெட் மேட்சில், மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது செய்திகளுக்குக் கட் செய்வது...

அய்யோ! அப்புறம் அந்த கிரிக்கெட் மேட்ச்களை என்னவென்று சொல்வது. ஹாஸ்டலில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது சுகமான அனுபவம். ஆனால் அதற்கு முன்னரே பள்ளிக்கூடச் சிறுவனாக இருக்கும்போதே எப்போதாவது தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துள்ளேன். நான் வசித்த நகரம் ராஜீவ் காந்தியால் அப்போது ஆசீர்வதிக்கப்படவில்லை. எனவே வானம் நிர்மலமாக இருக்கும் பொழுதுகளில்மட்டுமே தொலைக்காட்சியில் பலவித டிசைன்களுக்கு இடையில் வெள்ளையுடை வீரர்கள் ஓடுவதும் நடப்பதும் தெரியும். அதுவும்கூட சாஸ்வதம் கிடையாது. எப்போதுவேண்டுமானாலும் திரை புள்ளிகளாக மாறலாம். யார் எப்படி அவுட்டானார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டியிருக்கும். பின் கொடைக்கானலிலோ கும்பகோணத்திலோ ஒரு டிரான்ஸ்மிட்டர் வைக்கப்பட்டதால் படம் கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது என்றார்கள். ஆனால் நான் கிறிஸ்டல் கிளியர் தொலைக்காட்சியை சென்னை வந்துதான் பார்த்தேன்.

தெருவோர சாயா கடையில் சிங்கிள் டீ அடிப்பவனை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டுபோய் டீ கொடுத்தால் எப்படியிருக்கும்? அங்கே பால், டீத்தூள் பொட்டலம், சர்க்கரை, சுகர் ஃப்ரீ என்று என்னென்னவோ வைத்திருப்பார்கள். இதை நாமே கலக்கி சாப்பிடுவதற்கு இவனுக்கு எதற்குப் பணம் என்று நாம் யோசிப்போம். எதையாவது தப்பாகச் செய்கிறோமோ என்று பயம் இருக்கும். நம்மை ஆங்காங்கே பயங்கர ஸ்டார்ச் போட்டு உடையணிந்த பேரர்கள் உளவு பார்ப்பதாகத் தோன்றும். கடைசியில் டீயே வேண்டாம் என்று ஓடிவிடுவோம்.

அதேபோல வெறும் தூரதர்ஷன் உலகத்திலிருந்து பல சானல்கள் இருக்கும் அமெரிக்க கேபிள் டிவி உலகத்துக்குச் சென்றது பயங்கர கல்ச்சர் ஷாக்காக இருந்தது. பொருள்களை விற்பதற்கு என்றே தனி சானல். சதா 24 மணி நேரமும் செய்திகளுக்கு என்று சில சானல்கள். அல்லேலுயா சானல்கள். ஒரே காதலனுக்காக 'நீ முண்டை, நான் முண்டை' என்று அசிங்க அசிங்கமாகத் திட்டிக்கொண்டே ஒருவர்மீது ஒருவர் பாய்ந்து அடித்துக்கொள்ளும் பெண்கள், ஆங்காங்கே பீப் பீப் என்று கெட்டவார்த்தைகளை சென்சார் செய்தவண்ணம் இருக்கும் ரியாலிட்டி தொலைக்காட்சி சானல்கள். (அந்தக் காதலன் ஒய்யாரமாக ஒருபக்கம் சாய்ந்தவாறு, விவஸ்தையே இல்லாமல் உட்கார்ந்திருப்பான்.) சினிமாப் படங்களுக்கு என்றே 24 மணிநேரமும் இயங்கும் சானல்கள்.

எல்லாம் இருந்தும் நான் அமெரிக்காவைவிட்டு மீண்டும் இந்தியா வரும்வரையில் கிரிக்கெட் மட்டும் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாய்க்கவில்லை.

மீண்டும் இந்தியா வந்து பார்த்தால், தெருவோரக் கடையில் டீ ருசித்தது. ஆனால் தூரதர்ஷனைப் பார்க்கும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. சொஃபிஸ்டிகேஷன் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள். அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத, யோசனை துளிக்கூட இல்லாத, போரடிக்கும் சானல்கள். மற்றொரு பக்கம், போட்டிபோட்டுக்கொண்டு கிளம்பியிருந்த கேபிள் சானல்கள், படுபயங்கர வேகத்தில் முன்னேறினார்கள். தூரதர்ஷன் மட்டும் கடந்த காலத்திலேயே இருந்தது.

இத்தனைக்கும் அரசு நடத்தினால் அது மோசமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அரசே நேரடியாக நடத்தாவிட்டாலும் பொதுமக்கள் காசில் நடக்கும் பிபிசியைப் பாருங்களேன்? பொறாமைப்பட வைக்கிறார்கள். அட, இப்போது சீன அரசு நடத்தும் ஆங்கில மொழிச் சானலான CCTV-9 எவ்வளவு ஒய்யாரமாக சீனாவை உலகுக்குக் காட்டுகிறது? இதே வேலையை நம் மானம் கப்பலேறிப் போகும் அளவுக்கு தூரதர்ஷனும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டுதானே இருக்கிறது தினம்தினம்?

தூரதர்ஷன் நாளைக்கே நிறுத்தப்பட்டால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடமாட்டேன். கடவுள் புண்ணியத்தில் நாளைக்கு தூரதர்ஷனை தனியார்வசம் ஒப்படைத்தால்தான் அதை இனி மனிதன் உட்கார்ந்து பார்க்கமுடியும்.

8 comments:

  1. கடைசியாக நான் தூர்தர்ஷன் பார்த்தது எப்பொழுது என்று யோசித்து பார்த்தேன். ஞாபகம் வரவில்லை

    //இத்தனைக்கும் அரசு நடத்தினால் அது மோசமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. //

    நமது நாட்டில் பல அரசு துறை நிறுவனங்கள் / பொது துறை நிறுவனங்கள் Monopoly இல்லாத துறைகளில் கூட தனியார் நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன.
    உதாரணம் எல்காட், ஸ்டான்லி மருத்துவமனையின் சில துறைகள்

    அரசு துறைகளில் சில குறைபாடுகள் இருக்கலாம் (அலுவலகத்திற்கு ஒரு சாதாரண தண்ணீர் குடம் வாங்க கூட) நீண்ட கோப்பு, அதில் 10 கையெழுத்து தேவை. என்வே நேரம் அதிகம் ஆகும்.

    தாமததிற்கு வேண்டுமானல் இது ஒரு சால்ஜாப்பு

    ஆனால தரம் குறைவதற்கு, அல்லது போதிய தரம் இல்லாததற்கு காரணமாக அரசு நடத்தவது மட்டும் அல்ல. அதற்கு காரணம் அங்குள்ள work Culture. பல காலம் ஊறிப்போன வேலை கலாச்சாரம்.

    //நாளைக்கு தூரதர்ஷனை தனியார்வசம் ஒப்படைத்தால்தான் அதை இனி மனிதன் உட்கார்ந்து பார்க்கமுடியும்.//

    தனியார்வசம் ஒப்படைத்தால் மட்டும் போதாது. revamp செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  2. பத்ரி

    உங்கள் கட்டுரை ஆச்சர்யமாக இருந்தது. தனியார் தொலைக்காட்சி சானல்கள் போல் தூர்தர்ஷன் மாறவேண்டும் என சொல்கிறீர்களா? நீங்கள் குறிப்பிடுவது தெளிவாக இல்லை, தனியார் தொலைக்காட்சி சானல்களின் நிகழ்ச்சிகள் உங்களுக்கு அதிகம் பிடித்திருந்தால் நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகராக மட்டுமே உணரப்படுவீர்கள்.

    ஏனனில் அவைகள் 99% சினிமாவை மட்டுமே நம்பி அதையே மக்களின் ரசனையாகவும் மாற்றி வைத்துவிட்டன நல்ல அறிவை வளர்க்கும் இலக்கியத்தை மக்கள் மறந்து போக காரணம் இந்த சினிமாகள்தான் உங்களின் கட்டுரை ஆக்கப்பூர்வமான தேவையை சரியாக விளக்கவில்லை என்றே நினைக்கிறேன்

    செல்வி

    ReplyDelete
  3. செல்வி: தூரதர்ஷன் தன்னுடைய நிகழ்ச்சிகளை சினிமா சார்பான நிகழ்ச்சிகளாக மாற்றவேண்டாம். அதுவல்ல என் கோரிக்கை. பொதுவாக நமது ரசனை மாற மாற, நமது எதிர்பார்ப்புகள் மாறத்தொடங்கும். தூரதர்ஷன், பிபிசிபோல மாறவேண்டும் என்கிறேன்.

    தமிழ் கேபிள் டிவி தொலைக்காட்சிகள்தாம் சினிமா சினிமா என்று அலைந்துகொண்டிருக்கின்றன. அதிலும்கூட மக்கள் தொ.கா சினிமா இல்லாமலேயே சுவையான பல விஷயங்களைக் காண்பிக்கிறது.

    துளிக்கூட சினிமா இல்லாது மிகவும் சுவையான 24 மணி நேரத் தொலைக்ஆட்சி சேவையை தூரதர்ஷனால் தரமுடியும். இப்போது நிலைமை அப்படியில்லை.

    ReplyDelete
  4. பத்ரி

    தங்கள் பதிலுக்கு நன்றி, தாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளது

    //ஆனால் தூரதர்ஷனைப் பார்க்கும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. சொஃபிஸ்டிகேஷன் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள்.//

    ஒலி ஒளி அமைப்பை என்று நான் பொருள் கொள்கிறேன் மற்ற தொலைக்காட்சிகளில் அப்படி இல்லை என்பது உண்மைதான் ஆனால் அறிவியல் ரீதியாக கண்ணுக்கு கெடுதல் செய்யாத ஒலி,ஒளி அளவாக அது இருக்கும் என்பதை நீங்கள் அறிய முடியும், தொலைக்காட்சி ஹாலில் எல்லா விளக்குகளையும் அனைத்து விட்டு தூர்தர்ஷனை பாருங்கள் மற்ற தொலைக்காட்சியையும் பாருங்கள் அப்போது உபத்திரவம் புரியும்.

    ஆனாலும் நிகழ்சிகளைப்பொருத்தவரை மாற்றம் தேவைதான் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு சவால்தான் அது மெல்ல பிரபலம் அடைவதும் பாரட்டுக்குரியதுதான். தங்கள் விமர்சனம் ஒரு உணர்சிவசப்பட்டநிலையில் இருந்தது அதனால்தான் எழுதினேன் தங்கள் பதிவு இப்படி பதறியது புதிதாக இருந்தது. செல்வி

    ReplyDelete
  5. தூர்தர்ஷன் குறித்த உங்களது நினைவுகளும், கருத்துக்களும் முற்றிலும் எங்களைப் போன்ற தூர்தர்ஷனே சரணம் என்றிருந்த சென்னைவாசிகளுக்கு மாறுபாடானது.

    அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒலியும், ஒளியும் பார்த்த காலம் திரும்பவருமா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.

    பாராவின் தூர்தர்ஷன் நினைவுகள் படித்து பாருங்கள். தூர்தர்ஷனை நாங்கள் வேறு ஒரு பரிணாமத்தில் பார்த்திருப்பது தெரியும்.


    //தூரதர்ஷன் நாளைக்கே நிறுத்தப்பட்டால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடமாட்டேன். கடவுள் புண்ணியத்தில் நாளைக்கு தூரதர்ஷனை தனியார்வசம் ஒப்படைத்தால்தான் அதை இனி மனிதன் உட்கார்ந்து பார்க்கமுடியும்.//

    இது ரொம்ப ஷாக்கிங்காக இருக்கிறது. ஆனாலும் யதார்த்தம் இது தான் :-(

    ReplyDelete
  6. Badri

    I live in outside of India for past 12 years, so I don’t know the current status of DD. I watched DD (through Kodaikanal broadcast) 1987till the cable TV arrival (I guess up to 1993). If you compare the Serials (13 weeks) of DD to today’s SUN TV mega serials, I would say the quality of DD serials are way above these mega serials. I am talking about the content (Story not the fancy budget or technology), of course people like Revathi, Suhasini, Balachander etc, produced content wise and technically very good DD serials.
    I regularly watched Vayalum Valvum (I am not a son of Farmer; I have no background in farming). The making of it may not be fancy but it is more informative, I believe it helped farmers.
    As a Government body DD definitely had problems and produced below par products. You pointed only the negative aspects of DD, I just want to bring some positives of DD to your attention.

    Mohan

    ReplyDelete
  7. From: Krishnamoorthy, K.S.
    Native of Kumbakonam, Tamil Nadu, now in Riyadh/KSA.

    I have watched DD Tamil Channels since 1978 in whatever forms or names they changed later, DD Metro, DD Podhigai, et al. I have no complaints against their majority of the programs. Infact, I like most of them. They cater to all sections of the society. Constructive criticism is welcome.
    Of all the Tamil latest TV channels we have around the globe, I like DD Podhigai & Makkal TV, to name a few.

    ReplyDelete
  8. I agree with you badri. Most of the programmes are really boring. I am not sure about the year but i switched onto a DD channel accidently on a diwali day. They showed a documentary on Indian Railways for an hour and half. And it was fabulous. From that day on, i tried seeing DD once a while and they do show some good programs but they tend to be retelecasts.

    with regards
    manikandan

    ReplyDelete