Friday, June 07, 2013

என் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி

இது சுருக்கமான பதிவு மட்டுமே. விரிவான பதிவு(கள்) தயாராகிக்கொண்டிருக்கின்றன. பின்னர் வெளியாகும்.

சில மாதங்களுக்குமுன், என் வீட்டுக் கூரைமேல் சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகளைப் பதித்து மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து என் வீட்டுத் தேவைகளை ஓரளவுக்காவது பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். இறுதியில் S & S Flow Engineering என்ற அம்பத்தூர் நிறுவனம் ஒன்றின்மூலம் இதனைச் செய்வது என்று தீர்மானித்தேன். அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி சதீஷுடன் பேசியபின், என் வீட்டிலும் அலுவலகத்திலும் மின் இணைப்புகளைப் பராமரிக்கும் பாஷாவுடனும் கலந்து ஆலோசித்து, எம்மாதிரியான மின் இணைப்பு மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும் என்று குறித்துக்கொண்டேன்.

விரிவான ஆய்வுகளைப் பின்னர் தருகிறேன். ஆனால் சுருக்கமாக, சென்னை போன்ற இடத்தில், சூரிய மின் உற்பத்தியினால், போட்ட காசு அளவுக்குச் சேமிப்பு ஏற்படும் என்று நினைப்பது இப்போதைக்குத் தவறு. நீங்கள் அதிகம் செலவழிக்கிறீர்கள். இதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்த நிலை வரும் ஐந்தாண்டுகளில் மாறலாம் என்பது என் கருத்து. எனவே சென்னை போன்ற நகரங்களில் சமூக உணர்வு இருந்தால் மட்டுமே நீங்கள் இதில் இறங்கப்போகிறீர்கள். ஆனால் மிக அதிக மின்வெட்டு இருக்கும் சிறு நகரங்களில் அல்லது கிராமங்களில் நிலைமை வேறு. அங்கெல்லாம் தரமான மின்சாரம் வேண்டும் என்ற காரணத்தால் நீங்கள் இந்த முதலீட்டில் இறங்கலாம். என் கணிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நீங்கள் யூனிட் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 20 வரை செலவழிக்கிறீர்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக கம்பெனியிடமிருந்து கிடைக்கும் மிக விலையதிக மின்சாரம், வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75/- ஆகிறது. ஆனால் நீங்கள் டீசல் ஜெனரேட்டர்போலப் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 30/-க்கு மேல் ஆகிவிடும்.

என் வீட்டில் ஒரு இன்வெர்ட்டர் இருந்தது. இரண்டு மணி நேர மின்வெட்டை அதனால் சமாளிக்க முடிந்தது. ஒரு சில விளக்குகள், சில மின்விசிறிகள், சில பிளக் பாயிண்டுகளை மட்டும் இந்த இன்வெர்ட்டரில் இணைத்திருந்தேன். மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டைச் சமாளிக்க இந்த இன்வெர்ட்டரால் முடியாது. பெரும்பாலும் அந்த தினத்தன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் அலுவலகம்/பள்ளி சென்றுவிட்டால் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் சிக்கல்தான். எனவே இன்வெர்ட்டரை வலுப்படுத்தி, மேலும் சில பேட்டரிகளைச் சேர்க்கலாமா என்று எண்ணியபோதுதான், வேண்டாம், பேசாமல் சூரிய மின் சக்திக்குத் தாவிவிடலாம் என்ற யோசனையை முன்னெடுத்தேன்.

எம்மாதிரியான வடிவமைப்பு?
  • 5 x 230 W சூரிய மின்தகடுகள் (Manufactured by EMMVEE)
  • 4 x 12V உயரவாக்கு பேட்டரிகள் (Manufactured by Southern Batteries)
  • இன்வெர்ட்டர்/கண்ட்ரோலர் (Manufactured by S & S Flow Engineering)
நான் இருப்பது பல வீடுகளைக் கொண்ட அடுக்ககம். ஆனால் அடுக்குமாடி என்றெல்லாம் இல்லாமல் நீள வாக்கில் பல வீடுகளைத் தன்னகத்தே கொண்டது. ஒவ்வொரு அமைப்பிலும் மொத்தம் மூன்று வீடுகள். தரைத்தளத்தில் ஒரு வீடு; டியூப்ளே முறையிலான இரு வீடுகள் அதன்மேல் அமைந்தவை. மேலே அமைந்துள்ள இரு வீடுகளுக்கும் சற்றே பெரிய (400 சதுர அடி) திறந்தவெளி மாடி உண்டு; அதற்குமேல் மொட்டைமாடியும் உண்டு. ஒரு பகுதியில் சரிவான கூரையும் உண்டு. எனவே சூரிய மின்தகடுகளை வைப்பதற்குச் சிக்கல் இருக்கவில்லை. யாருடைய முன் அனுமதியையும் வாங்கவேண்டி இருக்கவில்லை. மேலும் என் வீட்டின் மாடியில் உள்ள கூரை மிக வாட்டமாக அமைந்துபோனது.

கூரையின்மீது சூரிய மின்தகடுகள்
சூரிய மின்தகடுகளை நாம் இருக்கும் வெப்பமண்டலப் பகுதியில், வடக்கு தெற்காக சுமார் 20 டிகிரி கோணத்தில் சாய்ந்தவாறு அமைக்கவேண்டும். எங்கள் மாடியின் ஒரு பகுதியின் கூரை கிட்டத்தட்ட இதே சாய்மானமாக, வடக்கு தெற்காக அமைந்திருப்பது தற்செயலானது. எனவே அதையே பயன்படுத்தி அதன்மேலேயே அமைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பொறியாளர் சார்லஸ். இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. அந்தச் சாய்மானம் இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கூரை என்றாலும் அதன்மேல் மின்தகடுகளை அப்படியே சும்மா வைத்துவிட முடியாது. காங்க்ரீட்டால் ஓரடி உயரத்துக்கு ஆறு தூண்களை எழுப்பி, அவற்றின்மீது இரு நீண்ட இரும்பு பிராக்கெட்டுகளை வைத்து அவற்றின்மீது ஐந்து மின்தகடுகளையும் போல்ட் கொண்டு முறுக்கி அமைக்கவேண்டும். முதலில் காங்க்ரீட் தூண்களை எழுப்பி, அதன்மீது சிமெண்ட் பூசி, அது க்யூர் ஆக இரண்டு நாள்கள் ஆனது. அதற்கு அடுத்த நாள் வெகு வேகமாக, இரும்புக் கம்பிகளை அமைத்து, அவற்றின்மீது மின்தகடுகளைப் பொருத்திவிட்டார்கள்.

நான்கு மின்கலங்களும் இன்வெர்ட்டரும்
அடுத்து வீட்டினுள் மின் இணைப்புகள். ஏற்கெனவே இன்வெர்ட்டரில் இயங்க என்று சில விளக்குகள், மின்விசிறிகள் தனிச் சுற்றில் இருந்தன அல்லவா? அவற்றையும் மேலும் பல கருவிகளையும் இப்போது ஒன்றுசேர்த்து, புதிய சூரிய இன்வெர்ட்டருடன் இணைக்கவேண்டியிருந்தது. ஏனெனில் இப்போது நிறுவப்பட்டிருக்கும் நான்கு மின்கலங்களைக் கொண்டு மேலும் பல மின்கருவிகளை இயக்க முடியும். இன்வெர்ட்டர் 1.5 KVA திறன் கொண்டது. 1,100 வாட் அளவுக்கான மின் கருவிகள் ஒரே நேரத்தில் இயங்கலாம். சில கருவிகள் நீங்கலாக கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைத்து மின்கருவிகளையும் இந்த இன்வெர்ட்டர் இணைப்பின்கீழ் கொண்டுவந்தோம்.

எந்தக் கருவிகளை இணைக்கவில்லை? ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், இண்டக்‌ஷன் ஸ்டவ் ஆகியவற்றை இணைக்கவில்லை. இவை அதிக மின்சக்தியை உறிஞ்சக்கூடியவை. ஆனால் வாஷிங் மெஷின், ரைஸ் குக்கர், மிக்ஸி போன்ற குறைந்த சக்தி கொண்ட கருவிகளுக்கான இணைப்பை இன்வெர்ட்டரில் கொடுத்தாயிற்று. மற்றபடி, டிவி முதற்கொண்டு அனைத்தும் இன்வெர்ட்டரில்.

இடமிருந்து வலம்:
பொறியாளர் சாலமன், உதவியாளர்கள் காந்தி, யோகேஸ்வரன்,
மின்னாளர் பாஷா, விற்பனையாளர் சதீஷ்
மின் பொருள்கள் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு உதவியாகக் கீழ்க்கண்ட பட்டியல்:

1. சி.எஃப்.எல் விளக்கு: 10-20 வாட் மின்சக்தி
2. டியூப் லைட்: 40 வாட்
3. மின்விசிறி: 80-100 வாட்
4. டிவி: 150 வாட் (சிறியதாக இருந்தால் குறையலாம். மிகப் பெரியதாக இருந்தால் அதிகமாகலாம்.)
5. வாஷிங் மெஷின், மிக்ஸி, ரைஸ் குக்கர்: சுமார் 500 வாட்

லாப்டாப், மொபைல் போன் போன்றவற்றுக்கெல்லாம் மிகக் குறைவான மின்சக்தியே தேவைப்படும். டெஸ்க்டாப் கணினிக்கு அதிகம் தேவை. என் வீட்டில் அப்படிப்பட்ட ஒரு ஜந்து இருக்கிறது. அதற்கு ஒரு குட்டி யு.பி.எஸ்ஸும் இருக்கிறது. பிரிண்டர் ஒன்று இருக்கிறது. அதனை இன்வெர்ட்டரில் சேர்க்கவில்லை. அதுவும் அதிக கரண்டை இழுக்கக்கூடியதே. விரைவில் வீட்டில் உள்ள டெஸ்க்டாப்பை ஒழித்துவிடுவேன்.

மின் இணைப்புகளை வேண்டியபடி மாற்றிவிட்டதும், அனைத்தையும் இன்வெர்ட்டர்/கண்ட்ரோலரில் இணைத்தனர். அவ்வளவுதான், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது. இது தொடங்கியதும் வீட்டில் ஏற்கெனவே இருந்த இன்வெர்ட்டரைக் கழற்றி வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.

மொத்தமாக மூன்று நாள்கள் வேலை நடந்தது. அவ்வளவுதான்.

இந்த கண்ட்ரோலர் பற்றிச் சிறிய குறிப்பு. இது கீழ்க்கண்ட வேலைகளைச் செய்கிறது:

1. சூரிய மின்தகடுகள் உற்பத்தி செய்யும் டிசி (DC - Direct Current) மின்சாரத்தைப் பெற்று, அதைக் கொண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது.
2. பேட்டரியிலிருந்து டிசி மின்சாரத்தை எடுத்து ஏசி (AC - Alternating Current) மின்சாரமாக ஆக்கி அதன் இணைப்பில் உள்ள அனைத்து மின் கருவிகளையும் இயக்குகிறது.
3. பேட்டரியில் உள்ள சார்ஜ் மிகவும் குறைவாகப் போனால், உடனே மெயின்ஸிலிருந்து (வீட்டுக்கு உள்ளே வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக நிறுவனத்தில் இணைப்பு) மின்சாரத்தை எடுத்து மேலே சொன்ன கருவிகளை இயக்குகிறது.
4. ஒரு குட்டித் திரையில் பல்வேறு எண்ணிக்கைகளைக் காண்பித்துக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக:
    (அ) தற்போது உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரம் என்ன பவர் (வாட்), எத்தனை ஆம்பியர் கரண்ட்?
    (ஆ) தற்போது மெயின்ஸிலிருந்து வரும் மின்சாரத்தின் வோல்டேஜ், பேட்டரியின் வோல்டேஜ், மின்கருவிகளுக்குச் செல்லும் மின்சாரத்தின் வோல்டேஜ்.
    (இ) இதுவரையில் (அதாவது கருவி இயங்க ஆரம்பித்ததுமுதல் இந்தக்கணம் வரை) உருவாக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தின் அளவு (யூனிட்டுகளில் அதாவது கிலோவாட் ஹவர்களில்)
    (ஈ) இதுவரையில் பேட்டரிமூலம் வீட்டின் மின்கருவிகள் இழுத்திருக்கும் பவர் (யூனிட்டுகளில்). இந்த எண்ணிக்கையும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியான அளவும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். இதுதான் நீங்கள் சேமித்திருக்கும் பணமும்.
5.தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு சூரியன் மங்கலாக இருக்கும் (கடும் மழை, புயல்), கூடவே மின்சாரமும் வெட்டுப்படலாம் என்று முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்தால், இன்வெர்ட்டரின் ஒரு பட்டனைத் தட்டி, மெயின்சிலிருந்து மின்சாரத்தை எடுத்து பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளலாம். மற்றபடி இதனைப் பயன்படுத்தாமல் இருத்தலே சிறந்தது. ஏனெனில் சூரியனால் மட்டுமே சார்ஜ் ஆகும் பேட்டரி அதிக காலம் வரும் என்கிறார் பொறியாளர்.

கடந்த பத்து நாள்களாக என் வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. விந்தை என்னவென்றால் ஆரம்பித்த நாள் முதலாக இன்றுவரை சென்னையில் வானம் மேகமூட்டமாக அல்லது மழையாக உள்ளது. இதனால் ஒரு நாள்கூட அதன் உச்சபட்சத் தயாரிப்பு அளவை இது எட்டவில்லை. என் கணிப்பில் சென்னை வெயில் ஒழுங்காக அடித்தால் ஒரு நாளைக்கு 5 முதல் 6 யூனிட்டுகள் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யவேண்டும். ஆனால் இதுவரையில் அதிகபட்சமாக சுமார் 4 யூனிட்டுகளை மட்டுமே ஒரு நாள் உற்பத்தி செய்தது. மற்ற நாள்கள் பெரும்பாலும் 3.3 முதல் 3.7 யூனிட்டுகள்தான். (ஆனால் ஆண்டுக்கு 330 நாட்கள் சென்னை வெயில் சுள்ளென்றுதான் அடிக்கும் என்பது என் கணிப்பு. நான் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதற்காகவென்று சூரியன் தன் இயல்பையா மாற்றிக்கொள்ளப்போகிறது?)

6.00 மணி முதல் சூரிய உதயத்திலிருந்தே மின் உற்பத்தி ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகமாகி, மதிய வெயிலில்தான் மிக அதிகமான உற்பத்தி, பிறகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, மாலை 6.00 மணிக்கு முற்றிலும் நின்றுவிடும். இந்தக் காலகட்டத்தில் உற்பத்தியான மின்சாரத்தை இரவு முழுதும், பிறகு அடுத்தநாள் காலைக்கும் பயன்படுத்துகிறோம். மீண்டும் அடுத்தநாள் காலை மின்சாரம் உற்பத்தி ஆரம்பித்துவிடும். வானம் மேகமூட்டமாக இருக்கும்போதும்கூடக் கொஞ்சம் உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து இந்த எண்ணிக்கைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் வெயிலின் தன்மையை வைத்தே இப்போது 200 வாட், இந்த வெயிலில் 700 வாட் என்று மாறும் வெயிலின் அளவைக்கொண்டே உற்பத்தியைக் கணித்துவிடலாம்.

***

இதனை நிர்மாணிக்க எனக்கு எவ்வளவு செலவானது? மொத்தச் செலவு, வரியையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சம். உங்களுக்கு இதைவிடக் கூட அல்லது குறையலாம். நீங்கள் எந்த நிறுவனத்திடம் போகிறீர்கள் என்பதைப் பொருத்து.

அடுத்து மானியம். மத்திய, மாநில அரசுகள் சூரிய மின் ஒளியை நிறுவுவதற்கு உங்களுக்கு மானியம் தருகிறார்கள். நான் இந்த மானியத்தைப் பெறப்போவதில்லை.

1. மானியம் பெற நீங்கள் விழைந்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இதற்கு ஒரு நடைமுறை உள்ளது. பிற மாநிலங்களில் வேறுபடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனமேகூட இதனை உங்களுக்குப் பெற்றுத்தரும், அல்லது விலையைக் குறைத்துக்கொண்டு மானியத்தைத் தாங்கள் பெற்றுக்கொள்வார்கள். நீங்களும்கூட மானியத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

2. உங்களுக்காக வேலை செய்யும் நிறுவனம் தாங்கள் மானியத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிவிட்டால் நீங்கள் மேற்கொண்டு கவலைப்படவேண்டாம். இல்லாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.

3. தமிழ்நாட்டில் TEDA (TamilNadu Energy Development Agency) என்ற அமைப்புதான் இதற்குப் பொறுப்பு. www.teda.in என்ற தளத்தில் சென்று நீங்கள் வீட்டுக்கூரை சூரிய மின் அமைப்பைப் பொருத்துவதாக விண்ணப்பிக்கவேண்டும். 1 கிலோவாட் அமைப்புக்கு மட்டும்தான் மானியம் என்று நினைக்கிறேன். அதற்குமேலான அமைப்புகளுக்கு மானியம் கிடையாது. நீங்கள் இணையம்மூலம் விண்ணப்பித்தபின் 15 நாள்களுக்குள் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் (என்று சொல்கிறார்கள்).

4. அனுமதி கிடைத்தபின், மத்திய அரசின் Ministry of New and Renewable Energy (MNRE) என்ற அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டு உங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நிறுவினால் மட்டுமே உங்களுக்கு மானியம் தரப்படும். நான் பயன்படுத்திய S & S Flow Engineering நிறுவனம் இப்போதைக்கு இந்த அங்கீகாரம் இல்லாத நிறுவனம். விரைவில் அதற்கு விண்ணப்பார்களாம்.

5. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மின் நிர்மாண வேலைகளை முடித்துவிட்டால், அடுத்து இந்த வேலைகள் முடிந்துவிட்டன என்று TEDA-வுக்கு நீங்கள் எழுதவேண்டும். தொடர்ந்து அவர்கள் உங்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, பரிசீலிப்பார்கள்.

6. அதன்பின் ஆன செலவை நிரூபணங்களுடன் அவர்களுக்கு வழங்கினால், அவர்கள் மத்திய அரசுக்கு உங்கள் சார்பில் எழுதி, சில மாதங்களுக்குள் உங்களுக்கான மானியத் தொகையைப் பெற்றுத் தருவார்கள். இந்த மானியத் தொகை ஆன செலவில், 30% ஆகும்.

7. மாநில அரசு ரூ. 20,000 என்ற தொகையை மேற்கொண்டு தரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான் TEDA-வில் கேட்டபோது (பதினைந்து நாட்களுக்குமுன்) இது அரசு ஆணையாக இன்னும் வரவில்லை என்றார்கள். எனவே இது எப்போது ஆணையாக ஆகும், இதற்கான eligibility என்ன என்பதுபற்றி மேற்கொண்டு ஒன்றும் சொல்ல இயலாது. (இந்த மான்யம் ஒவ்வோர் ஆண்டும் முதல் 10,000 நிர்மாணங்களுக்கு மட்டுமே என்பதாற்போலச் செய்தியில் படித்தமாதிரி ஞாபகம்.)

எல்லா மானியங்களும் கிடைத்து, நீங்களும் நன்றாக நெகோஷியேட் செய்தால் உங்களுக்கு மொத்தச் செலவு ஒரு லட்சத்துக்குள் முடியலாம். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. மேலும் நான் விசாரித்தவரையில் (அ) மானியம் பெற்றுத் தருபவர்கள் செலவையும் சற்றுக் கூட்டிச் சொல்கிறார்கள் (ஆ) மானியம் பெறுவதற்குக் கையூட்டு தேவைப்படுகிறது (இ) மானியம் கைக்கு வந்துசேரப் பல மாதங்கள் ஆகின்றன (ஈ) மானியம் வராமலேயே போவதும் நடக்கிறது. இவையெல்லாம் நேரடித் தகவல்கள், சொந்த அனுபவம் ஆகியவை அல்ல என்ற காரணத்தால் ஒரு துளி உப்புடன் சேர்த்தே எடுத்துக்கொள்க.

மிக நீண்டுவிட்டது, எனவே இப்போதைக்கு இது போதும். கேள்விகள் ஏதும் இருந்தால் பதில் சொல்கிறேன். S & S Flow Engineering நிறுவனத்தின் சதீஷைத் தொடர்புகொள்ள செல்பேசி எண் 87544-06127.

43 comments:

  1. ஏன் ஐயா, உமக்கு எப்படி இவ்வளவு செய்திகளையும் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்கிறது?
    உங்களது தினப்படி டிபிகல் நாளின் நேர அட்டவனையையும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது..

    ஆனால் தொழில் முனைவோராக இருப்பதில் ஒரு நல்ல விடயம்,உங்கள் நேரத்தை மற்றவர்கள் கட்டுப் படுத்துவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்..

    மற்றபடி மிக விரிவான, தேவையான விடயங்களுடான பதிவு.

    நன்றி.

    ReplyDelete
  2. It is a good article. I hope more people in metro should do this. I have been reading about the new material 'graphene' and its potential applications in various domains. People in US are betting that it would revolutionize the solar panel industry once its ultra capacitance capability could be harnessed. I am in alignment with your article that in next five years the new technology would come to fruition. I hope people in IITs are researching this new field. Hope you would write in your blog about this graphene.

    http://www.graphene-info.com/ucla-enhances-their-laser-scribed-graphene-supercapacitor-technology-ready-commercialization

    ReplyDelete
  3. பராமரிப்பு செலவு தோராயமாக(ஆண்டுக்கு) எவ்வளவு வரும்?
    மின்தகடுகள். பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்/கண்ட்ரோலர் ஆகியவற்றின் ஆயுட்காலம் பற்றிய கணிப்பு ஏதும் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. பராமரிப்புச் செலவுகள், ஏதேனும் பாகங்கள் மாற்றப்படவேண்டுமா போன்றவை குறித்து உண்மையிலேயே எனக்கு அதிகம் தெரியாது. நடப்பது நடக்க நடக்கத்தான் என்று பார்த்துக்கொள்வதாக உள்ளேன். பேட்டரிகள் ஐந்தாண்டுகள் வரை வரும் என்கிறார்கள். ஆனால் மூன்றாண்டுகள் full replacement கேரண்டி உள்ளது. அதற்குமேல் என்றால் partial cash back கிடைக்கும். பேட்டரிகளை 4/5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்றவேண்டியிருக்கும். ஆனால் அனுபவத்தின்வாயிலாகத்தான் இதைக் குறித்து மேலே சொல்ல முடியும். தகடுகள் பல ஆண்டுகளுக்கு வரும். எங்கள் பகுதியில் நிறையக் குரங்குகள் உள்ளன. அவை இந்தத் தகடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்யும், ஏறிக் குதிக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. அதேபோல கடும் புயல் அடித்தால் தகடுகள் பறந்துவிடுமா என்று தெரியவில்லை. என் பதிவில் லீனஸ் என்பவர், இந்தத் தகடுகள் திருடுபோனால் என்ன ஆகும் என்று கேட்டிருந்தார். அது குறித்து எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பேசிவிட்டுச் சொல்கிறேன். கண்ட்ரோலர்/இன்வெர்ட்டர் நிறுவனம் அக்தன் பராமரிப்புகளை ஏற்றுக்கொள்கிறது. அது எப்படி வேலை செய்யும் என்பதைப் போகப் போகத்தான் சொல்ல முடியும்.

      Delete
    2. # partial cash back # போல் ஒரு டிராமா இந்த உலகத்தில் இல்லை. இதை உங்களையும் நம்பவைத்துள்ளார்கள் என்னும் போது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் எப்போதும் Dealer Price-ல் வாங்குங்கள் அதுதான் சரி.
      # partial cash back # - ல் வாங்கிபாருங்கள் MRP-ல் இருந்து உங்கள் Dealer கணக்கிடுவார். நீங்கள் அப்போது தெளிவாகிவிடலாம்.

      Delete
  4. Thats the way to go Badri!!!

    I am expecting few things in your future posts

    1) Payback period in your case
    2) Annual maintenance charges
    3) Safety factors
    4) How frequently we need to reinstall/change the components used in this entire setup; how much would it cost

    ReplyDelete
    Replies
    1. I will address all these issues in my long posts. I need to learn more as well.

      Delete
  5. Goodluck and looking forward to see more.
    rgds-Surya

    ReplyDelete
  6. ஆஹா! மிக நல்லது. சுமார் ஒரு வருடம் முன் என் கம்ப்யூட்டர் ரூமுக்கும், பின் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டுக்கு சோலார் மின் சக்தி அமைத்தேன்.
    சில பரிந்துரைகள்:
    1.பானல்களை அவ்வப்போது கொஞ்சம் தூசி தட்டி வையுங்கள்.
    2.பானல்களுக்கு பெரிய மெய்டனஸ் இல்லையே தவிர பேட்டரிகளை கவனித்து அவ்வப்போது தேவையானால் டிஸ்டில்ட் நீர் ஊற்ற வேண்டும். இந்த பேட்டரி டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்.10-12 மணி நேரத்தில் முழுக்க ரீசார்ஜ் ஆகக்கூடிய பேட்டரிகளாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.ட்யூபுலர் பேட்டரி சரிவராது.
    3. கடும் வெயில் காலத்தில் முழு சார்ஜ் ஆகி கட் ஆஃப் உம் ஆகும். தப்பு ஏதோ நடந்துவிட்டது என்று பதட்டப்பட வேண்டாம்.
    4. சார்ஜிங் யூனிட் பல வகைப்பட்டவை. உங்களுடையது அட்வான்ஸ்ட் மாடல் - இவை நீங்கள் சொன்னது போல பல தகவல்களை தரும். இப்படி இல்லாத சிம்பிள் மாடலும் உண்டு.
    5. நான் நிறுவிய போது மான்யத்துடன் கொடுத்த கோட் க்கும் மான்யம் இல்லாத கோட் க்கும் பெருத்த வித்தியாசம். மான்யம் இல்லாமலே சீப் ஆக முடிந்தது. இதில் நிறைய 'ஊழல்'. ரேட் பிக்ஸ் செய்த பிறகு விலைகள் நிறைய மாறிவிட்டதால்...

    ReplyDelete
    Replies
    1. பேனல்களையும் பேட்டரிகளையும் பராமரிக்க நிறுவனத்தார் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வருவதாகச் சொல்லியுள்ளனர். பேனல் மீதுள்ள தூசியைத் துடைத்தல், பேட்டரியில் நீர் ஊற்றுதல், பிற டெஸ்டிங் ஆகியவற்றைச் செய்வார்கள்.

      மானியம் என்பது பொதுவாக எனக்கு ஒவ்வக்கூடிய ஒன்றல்ல. இந்தியாவில் மானியம் என்றாலே ஊழல் என்ற அளவுக்கு நாம் அதனை உயரக் கொண்டுசென்றுள்ளோம். இதில் யாருமே விதிவிலக்கல்ல. மானியம் இல்லாமல், நமக்கு இதனால் உபயோகம் அல்லது இதனால் சுற்றுப்புறத்துக்கு உபயோகம் என்பதால் நாம் செய்தோமானால் நல்லதாக இருக்கும்.

      Delete
  7. சொல்ல மறந்துவிட்டென். அடிக்கடி புயல் தாக்கும் ஊர் என்பதால் எனக்கும் இது குறித்த அச்சம் இருக்கிறது. ஒன்றும் ஆகாது என்று விற்பனையாளர் சொன்னார். தானே புயலில் ஷெட்டே பறந்துவிட்டது, இது எம்மாத்திரம்! புயல் வந்தால் கழட்டி வைக்க உத்தேசம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுபோல் மேலே ஏறி, பேனல்களையெல்லாம் கழற்றிக் கீழே வைப்பது, பிறகு மீண்டும் பொருத்துவது எல்லாம் எளிதல்ல. புயல் காற்றில் பறந்துபோகும் என்பதுகூடப் பயமில்லை; தூரத்திலிருந்து மரக்கிளைகள் அடித்துத் தூக்கி எறியப்பட்டு இதன்மீது விழுந்து சேதம் உருவாக்குமோ என்பதுதான் நிஜமான பயம். பார்க்கலாம், அப்படி ஏதும் நடந்தால்.

      Delete
  8. excellent article Mr.Badri.nice informations

    ReplyDelete
  9. லீனஸ். லீFri Jun 07, 06:54:00 PM GMT+5:30

    பத்ரி சார் வணக்கம்,

    சோலர் பேனல் அமைத்ததை பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    பேட்டரின் சார்ஜிங் அளவை தொரிந்து கொள்ள ஒரு ரூ.100க்கு கிடைக்கும் ஒரு Hydrometer கொண்டு ஒவ்வொரு செல்லின் Gravity-யை அளந்தால், முற்றிலுமாக சார்ஜ் செய்திருக்கும்போது அதன் அளவு 1250க்கு மேல் இருக்கவேண்டும். அந்த Hydrometer-ல் சிகப்பு மஞ்சள் மற்றும் பச்சை என்ற நிறத்தில் பேட்டரி செல்களின் சார்ஜ் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்டு இருப்பார்கள். பேட்டரியின் சார்ஜின் அளவை அறிவதற்கு இதுதான் முற்றிலும் நம்பகத் தன்மையான பரிசோதனை ஆகும்.

    பேட்டரியின் மொத்த உபயோக கொள்ளளவை சரியாக தெரிந்து கொள்ள நான்கு நாட்கள் அவைகளை முற்றிலுமாக சார்ஜ் செய்ய வேண்டும். அதிலிருந்து மின்சாரத்தை கன்வர்ட் பண்ணி வீட்டு உபயோகத்திற்கு எடுக்கும் அளவினை குறைத்து கொள்ள வேண்டும். நான்கு நாட்கள் பேட்டரி முற்றிலும் full charge-க்கு வந்துவிடும். பின்னர் காலையில் inverter mode-ல் வைத்து வீட்டில் உள்ள பேன் மற்றும் ட்யுப்லைட்களை அனைத்தையும் ஒடவிட்டு எத்தனை மணிநேரம் suport பண்ணுகிறது என்று பாருங்கள். உதாரணமாக 3 பேன் 4 ட்யுப் லைட்டுகள் உபயோகப்படுத்தினால் 150AH பேட்டரி 3.5 மணி நேரம் support செய்யவேண்டும். நான்கு பேட்டரி இருப்பதால் 14 மணிநேரம் support செய்யவேண்டும். 14 மணிநேரம் தொடர்ந்து ஒட்டி பார்ப்பது கடினம் என்பதால் வீட்டில் உள்ள அனைத்து பேன்களையும் ட்யுப்லைட்களையும் போட்டு எத்தனை மணிநேரம் வருகின்றது என கணக்கிட்டால் பேட்டரியின் சாரியான உபயோக கொள்ளளவு தெரியவரும். இந்த பாரிசோதனையை ஆரம்பத்தில் செய்து கொண்டால், பேட்டரியின் ஆரம்ப கொள்ளளவு தெரிய வருவதால், 6 மாதத்திற்கு ஒரு முறை திரும்ப செயது பேட்டரியின் அப்போதைய கொள்ளளவை முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  10. லீனஸ். லீFri Jun 07, 06:57:00 PM GMT+5:30

    பத்ரி சார் வணக்கம்,

    பேனல்கள் திருட்டு போவதை தடுக்க, தற்போது நான் யோசித்த ஒரு சிறிய வழி.

    ரூ.100க்கு மார்க்கெட்டில் கிடைக்கும் ஒரு சுவிட்சை பேனல்கள் அமைக்கும் முன்னர் பேனல்களுக்கு அடியில் வரும் வகையில் வைத்து, பேனலின் அழுத்தத்தில் அந்த சுவிட்ச் அழுத்தம் பெற்று அதனால் அந்த சுவிட்சின் மின்சுற்று ஓபன் ஆகி இருக்குமாறு செய்து, அந்த சுவிட்சில் இருந்து மின்சுற்று எடுத்து அதனை வீட்டில் உள்ளே ஒரு மின்சார பெல்லுடன் இணைக்கும் வகையில் வடிவமைத்தால், யாராவது பேனலை அகற்றினால், சுவிட்ச்சின் மின்சுற்று பூர்த்தி ஆவதால், வீட்டின் உள்ள மின்சார பெல் ஒரு எச்சரிக்கையை தரும். மேலும் இப்படி மின்சுற்று பூர்த்தி ஆகும் போது, அந்த சுவிட்சில் இருந்து பேஸ் எடுத்து சோலர் பேனல் அருகில் ஒரு மின் விளக்கு அமைத்து விட்டால், பேனலை அகற்றும்போது உடனே அங்கு வெளிச்சம் வரும். அதனால் திருடர்கள் ஏதே செக்யுரிட்டி சிஸ்டம் இருக்கிறது என பயப்பட்டு ஒடிவிட வாய்ப்புண்டு. ஒவ்வொரு பேனலுக்கும் அடியில் இவ்வாறு சுவிட்ச் அமைத்து அனைத்து சுவிட்சுகளையும் பேரலில் இணைத்து கொண்டால் எந்த ஒரு பேனலை நகட்டினாலும் எச்சரி க்கை மணி அடிக்கும் வகையில் செய்திடலாம்.

    ReplyDelete
  11. பத்ரி. நல்ல பதிவு. அமெரிக்காவில் வீட்டில் சூரியத் தகடுகளால் அதிகப்படியாக உற்பத்தியாகும் மின்சாரத்தை திரும்ப Grid-க்கே செலுத்தி மீட்டரையும் பின்னோக்கி ஓடவைத்து அதனால் மின்சாரம் தரும் நிறுவனத்திற்குக் கொடுக்கக்கூடிய செலவையும் குறைக்கிறார்கள். பகலில் சூரிய சக்தி. அதிகப்படியான மின்சாரத்தை நிறுவனத்திற்கு அனுப்பி அதற்குக் Credit. இரவில் நிறுவனத்திலிருந்து வரும் மின்சாரத்தைபெற்று அதில் Credit -ஐக் கழித்துக்கொண்டு பாக்கித் தொகையை மட்டும் செலுத்துவது - இந்த முறை பேட்டரிகள் இல்லாத சூரியத் தகடுகள் அமைப்பிற்கு. பேட்டரிகள் பராமரிப்பும் Disposal-ம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல - குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவை ஆபத்தானவையும் கூட. இதுதவிர அரசு மானியம் என்பது மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே. ஊழல் நிறைந்திருக்கிறது என்பதால் அதைப் பயன்டுத்தாமலிருப்பது சரியல்ல. மானியம் வாங்காததால் ஊழல் ஒழியப் போவதில்லை.

    ReplyDelete
  12. திரு பத்ரி அவர்களுக்கு-

    மிக நல்ல விரிவான இன்றைய கால சூழலுக்கு ஏற்ற பதிவு. நாம் பல தகவல்கள் பற்றி தெரியாமல் இருப்போம், தெரிகிற போது நமக்கு தேவையென்றால் அதற்கான முயற்சியை மேற்கொள்வதை விட்டு, மிக முன் ஜாக்கிரதையாக இருப்பதாக கருதிக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டே பல செயல்படுத்துதல்களை தவறவிட்டு விடுகிறோம். அது போல்தான் இங்கு சிலர் மறுமொழிகளை காண முடிகிறது.
    ஒரு எழுத்தாளர் தனது அனுபவங்களை நேர்த்தியாக யதார்த்தமாக மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது. அதுவும் சில தொழில்நுட்பம் சார்ந்தவற்றை தெரியாது என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  13. வணக்கம். திரு பத்ரி. மிகத் தெளிவாக நெளிவு சுழிவுகளுடன் விளக்கி உள்ளீர்கள். ஒரு பொறியாளர் எழுத்தாளராக மாறியதன் பரிமாணம் நன்றாகத் தெரிகிறது. குறிப்பாக, இதில் இறங்கலாமா? என்று காத்திருக்கும் பலருக்கு ஓர் அருமையான பாடக் கட்டுரையாக உள்ளது, பயணக் கட்டுரையாகவும் உள்ளது. அதாவது சூரிய மின் சக்தியை நோக்கிய பயணம்.
    மிக்க நன்றி.
    அன்புடன்
    பெ.சந்திர போஸ்
    சென்னை

    ReplyDelete
  14. லீனஸ்.லிSat Jun 08, 09:54:00 AM GMT+5:30

    பத்ரி சார் வணக்கம்.

    திரு.சுந்தராஜன் பத்மநாபன் அவர்கள் கூறியவாறு “ பேட்டரி இல்லாமல் பகல் நேரத்தில் சோலார் பேனலில் இருந்து மின்சாரத்தை வீட்டுக்கு உபயோகப்படுத்தியது போக மற்றவற்றை கிரிட்டில் போட்டு அந்த மின்சாரத்திற்கான கிரடெடிட்டை பெற்றுக்கொள்ளலாம்” என்பதுதான் சாரியான சோலார் பவர் உற்பத்தி முறையாகும். இதனால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் செலவு மிச்சமாகும். மேலும் பேட்டரி யை அதிக அளவு உபயோகபடுத்துவது சுற்றுச்சூலலுக்கு சிறந்தது அல்ல.

    பேட்டரியை வீட்டில் வைக்கும்போது அவைகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும். பல நேரங்களில் சிறு குழந்தைகள் கையில் கரண்டி போன்ற பொருட்களுடன் சென்று பேட்டரி டெர்மமினல்களை சார்ட் சர்க்யுட் பண்ணிணால் பேட்டரி வெடித்துவிட வாய்ப்பு உண்டு. குழந்தைகள் உள்ள வீட்டில் கவனமாக இருக்கவேண்டும். பேட்டரியை காற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும். பேட்டரி சார்ஜ் ஆகும் போது வெளியேறும் வாயுக்கள் வெடி விபத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளவை மேலும் அது irritant gas. பேட்டரி செல்லுக்கு தண்ணீர் ஊற்றும்போது கவனம் தேவை. அந்த செல் நிரம்பி வழிந்து அந்த ஆசிட் நிறைந்த தண்ணீர் மார்பிள் தரைமீது பட்டால் மார்பிள் தரை பொறி பொறியாக பூத்துவிடும்.

    நமது தேவைக்கு அதிகமான மின்சாரத்தை கிரிட்டில் போடுவதை பற்றி:
    நமது வீட்டிற்கு மின்சாரம் வரும் கம்பிகளில் நேரடியாக நமது சோலாரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஏ.சி. மின்சாரத்தை போடமுடியாது. ஏனெனில் இந்த இரண்டு மின்சாரத்தின் ப்ரிகியுன்ஸி ஒரே மாதிரி இருக்கவேண்டும். அதற்கு தனியாக உபகரணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். தொடர் மின்சாரம் இருக்கும் இடத்தில்தான் இது சரியாக வரும். பல இலட்சங்கள் செலவழித்து நமக்கே சோலார் மின்சாரம் உபயோகம் இல்லாமல் போவது என்பது சரியானது அல்ல. ஆகவே நமது நாட்டில் கிரிட்ல் திரும்ப போடுவதைவிட மின்கலத்தில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் உபயோகப் படுத்துவதுதான் தற்சமயம் சரியானது.

    ReplyDelete
  15. You can also try a box type solar cooker. I have calculated that it saves about 25% of LPG use when rice, dal (paruppu), imli (Puli) some vegetables like potatoes, brinjal get cooked. The dal can be kept in the fridge after cooling it. Samhar will be ready in minutes as against the long boil on the lpg stove required to cook puli and sambhar powders. Tadka (Talitthal) can be done on the lpg stove to finish the cooking.Strong winds in Delhi broke the fiber glass lid and this is a common problem all over the world.I also bake leavened bread with yeast application. This has a better food value as compared to white bread or even so called brown bread available commercially in the market. http://www.facebook.com/santhanam.ramasubramanyam

    www.manaksolarsolutions.com msell Deep Cycle US make Trojan batteries. They cost more but are supposed to last up to 10 years.

    I agree with the discussion comments on corruption in government.

    ReplyDelete
  16. I agree with the comments on corruption.Solar thermal energy can also be used with good effect. I could record about 25% reduction in LPG use when rice,paruppu,puli and vegetables were cooked and lpg stove was used for finishing the cooking with thalithal only. The boiled paruppu can be cooled and even kept in the fridge along with cooked puli. Sambhar will be ready in minutes whenever you want as against the long boiling to cook puli sambhar powder etc.Banana appamas can be baked with a pinch of baking soda instead of frying in oil.It is necessary to clean the solar cooker thoroughly witha damp cloth and a dry cloth (old banians are best)since earlier use would have deposited food particles.

    www.manaksolarsolutions.com market USA make Trojan batteries which feature Deep Cycle discharge capabilities and are supposed to last a decade.They cost more.

    ReplyDelete
  17. Use full Article Well done !
    visit this link you can calculate your daily consumption
    clarify with your local technician....
    ww.freesunpower.com/solarhome.

    ReplyDelete
  18. Congrats! for your initiative to go for solar energy, now you have gone green.
    When I see the photo of the panels, I find some shadow of the trees besides falling on it, obviously your energy production will be less than as assured, more over the efficiency of the those panels (where the shadow is falling) also will decrease over a period of time than the rest of the panels. Even the best panel in the market will give your 80% efficiency only.
    As far as maintenance is concerned, my observation in the solar power systems, cleaning of the panels is a must, at least once in 2 weeks, you can better see it by monitoring in the production(LCD display) on the day you clean them.

    Some of the comments said about tubular batteries not to be used, it is not correct, as far as solar power system, c10 rating tubular batteries are the best suitable for charging from solar as the charging/discharging cycle is taken into account. Normal ups/ inverter batteries uses C 20 rated batteries.
    By the way, it is good,timely post and an eye opener for others

    ReplyDelete
    Replies
    1. There is no shadow on the panels. It is very clear and the nearest shadow source is very far away. Thanks for your comment on batteries. Can you elaborate more on what these ratings mean and how these ratings are linked to the charging / discharging cycles? If you point me to a relevant URL, that will be sufficient.

      Also, I intend to clean the panels as often as possible. To start with, once a month is the best I can organize. Let me see how it works out.

      Delete
  19. அன்பு நண்பர்களே... திரு. பத்ரி அவர்கள் தெரிவித்துள்ளது ஒருவிதம். நான் வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் பேக்அப்-ஐ மதுரையில் எனது வீட்டில் அமைத்துள்ளேன். ஒரேஒரு 125 வாட்ஸ் பேனல். ஏற்கனவே இருந்த அதே சைன் வேவ் இன்வர்ட்டர். அதே பழைய 100ஏஎச் பேட்டரி. கூடுதலாக இணைக்கப்பட்டது ஒரு சார்ஜ் கண்ட்ரோலரும் ஒரு பேனலும் தான். கரண்ட் இருக்கும் போது அதில் வீட்டின் அனைத்து லோடுகளும் இயங்கும். கரண்ட் இல்லாதபோது சோலார் பேனல் மூலம் பேட்டரி சார்ஜ் ஏறி இருப்பதை பயன்படுத்தி வீட்டின் லைட்டிங் லோடுகளை பயன்படுத்தலாம். இதில் என்ன லாபம் என்ற கேள்வி எழலாம். உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் பயன்படுத்தும் முன்பு இருந்த மின் கட்டணத்தையும் அதன் பின் வந்த மின் கட்டணத்தையும் சற்று ஒப்பிட்டு பாருங்கள். குறிப்பாக அதிக நேரம் மின் வெட்டு இருந்த காலத்தில். ஏனெனில் பேட்டரி சார்ஜ் ஏற அதிக மின்சாரத்தை முழுங்கும். அதாவது 1.5யுனிட் சார்ஜ் ஏற்ற எடுத்து 1 யுனிட் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யும். சுருக்கமாக சொல்வதென்றால். மின் வெட்டு நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு யுனிட் கரண்டிற்கும் 1.5 யுனிட்டிற்கான செலவாகிறது. மின்வெட்டு நேர பேக்-அப் சோலார் மூலம் கிடைப்பதால் உங்கள் மின்கட்டணம் குறையத்தான் செய்யும். மேலும் பெரிய அளவில் முதலீடும் கிடையாது. நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன். குறிப்பு-நான் சோலார் பேனல் உள்ளிட்ட எதையுமே விற்கும் வியாபாரி கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எலக்ட்ரானிக்ஸ் எனது பொழுதுபோக்கு. எனவே தைரியமாக என்னிடம் பேசலாம். என் போன் எண் 9994319956

    ReplyDelete
  20. வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலவில் என் வீட்டில் சோலார் மின்சகதி அமைப்பை அமைத்துள்ளேன். மின்சாரம் கட்ஆகும் போது பேக்-அப் சோலார் மூலம். உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் அமைக்கும் முன்பு உள்ள மின் கட்டணத்தையும் அதற்குப்பின் உள்ள மின்கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா, பொதுவாக பேட்டரி ஒன்றரை யுனிட் மின்சாரத்தை சாப்பிட்டு ஒரு யுனிட் தான் டிஸ்சார்ஜ் செய்யும். இதுதவிர இன்வர்ட்டரை ஆன் பொசிசனில் வைத்திருந்தீர்கள் என்றால். அது ஒரு நாளைக்கு குறைந்தது 2 யுனிட் வரை சும்மா சாப்பிடும். இதை எளிமையான முறையில் ஒரு 2வே சுவிச் அமைத்து மாற்றிவிடலாம். என்ன கரண்ட் போனால் அந்த 2வே சுவிச்சை மாற்றி விட வேண்டும். அவ்வளவுதான். நான் என் வீட்டில் பழைய பேட்டரி, இன்வர்ட்டர் எதையும் மாற்ற வில்லை. அதை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். பேட்டரியின் டெர்மினலில் சோலார் பேனலில் இருந்து வரும் இணைப்பை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் இணைத்துள்ளேன். இடையில் ஓவர் சார்ஜ் ஆகாமல் தடுக்க ஒரு சின்ன சர்க்யு்ட். இதை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக என்னை அணுகலாம். என் எண் 99943 19956, 94432 19956. குறிப்பு- நான் இந்த எந்த பொருளையும் விற்கும் வியாபாரி கிடையாது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியன். முழுக்கமுழுக்க எலக்ட்ரானிக்ஸ் ஹாபியிஸட் தான்.

    ReplyDelete
  21. Dear All friends,
    Is there any company which offers the full package? I am in Bangalore and would like to go for this Solar power solution for my home. In Bangalore the solar water heaters are doing well. The difference between electric geyser and solar water heater in a normal family is around Rs.1000 PM. If the solar power solution gives the benefit of same order, it would be nice. I request everyone to share the information in this regard.
    Selvaraj, 9448847773, selvaraj61@gmail.com

    ReplyDelete
  22. Dear all Friends,
    Please share information about a company which offers the complete home solar power solution.
    Selvaraj 9448847773 selvaraj61@gmail.com

    ReplyDelete
  23. Just to enlighten you about the battery rating, capacity and the charge/discharge cycles. The capacity of the battery is given as AH (Ampere Hour), it is the produce of current and the number of hours it can discharge, ie, if it is discharged at 15 amps for 10 hrs it is 150 AH battery.
    C10 – 150 AH
    15 amps times 10 Houurs = 150 AH
    C20 – 150 AH
    7.5 amps times 20 hours = 150 AH
    The time taken to drain the battery from the completely charged condition to the cut off voltage is the rating, in above case it is 10 hours. Ie C10. As far as the solar energy production is concerned the charging is done only in the day time for nearly 8 to 10 hours (including the minimum charging) and the same is discharged in the night for about 10 to 12 hrs . Here the time to discharge the battery to its cut off value is nearly 10 hours.. If you see data sheet of battery the charge and discharge cycle for c10 batt it is 1500 to 1800 cycles, and for the c20 batt, the same is 600 to 800 cycles only. That’s why they give 5 years warranty for the batt of c10 rating and the same is 3 years for c20.
    Some major points to be taken in to account when selecting and using the battery
    1. All batteries to be discharged to max 70 % of its capacity, ie the depth of discharge (DOD) is 70%
    2. For better battery performance, 50 %DOD is recommended.
    3. If you use c20 batteries for solar applications, the battery manufacturer may not give warranty
    4. If you can manage to get a C5, even better.
    5. Top up of distill water once in three months for better battery life
    6. Keep the batteries in a well-ventilated place

    Hope this gives you a better picture about the battery for solar applications

    ReplyDelete
  24. C10 and C20 rating battery usage is well explained by Harith Energy solutions.

    A battery "cycle" is one complete discharge and recharge cycle. It is usually considered to be discharging from 100% to 20%, and then back to 100%. Battery life is directly related to how deep the battery is cycled each time. If a battery is discharged to 50% every day, it will last about twice as long as if it is cycled to 80% DOD. If cycled only 10% DOD, it will last about 5 times as long as one cycled to 50%.

    A battery can either be discharged at a low current over a long time or at a high current for only a short duration. The relationship between the discharge time (in amperes drawn) is reasonably linear on low loads. As the load increases, the discharge time suffers because some battery energy is lost due to internal losses. This results in the battery heating up.

    Exide Batteries for Solar PV applications - under 80% DOD it gives 1500 Duty Cycles, 50% DOD it gives 3000 Duty Cycles and 20% DOD it gives 5000 Duty Cycles.

    ReplyDelete
  25. இப்போது தேவையான தகவலுக்கு நன்றி பத்ரி.

    என் கணிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நீங்கள் யூனிட் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 20 வரை செலவழிக்கிறீர்கள் - எவ்வாறு இந்த கணக்கு வந்தது - ஒவ்வரு மாதமும் வேறு செலவுகள் உண்டா?

    சூரிய மின்சாரத்தால் கடந்த சில மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எதுவும் பகிர்ந்து கொள்ளும்படியாக இருக்கிறதா? - நானும் இதை அமைக்க போகிறேன்

    நன்றி பூவேந்திரன்

    ReplyDelete
  26. தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கிறது

    ReplyDelete
  27. ஒரு எழுத்தாளர் தனது அனுபவங்களை நேர்த்தியாக யதார்த்தமாக மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது. பிரயோசனமான பதிவு. நன்றி

    ReplyDelete
  28. 5 வருடம் கழிந்த நிலையில் ஏதாவது அப்டேட் இருக்கா திரு பத்ரி?

    ReplyDelete