Monday, December 23, 2013

பல்ப்பிலக்கியம்

பல்ப் என்றால் மரக்கூழ். மரத்துண்டுகள், கரும்புச்சக்கை, வீணாகப்போகும் பருத்தி நூல் அல்லது யானை லத்தி என்று செல்லுலோஸ் அதிகமாக உள்ள எதையும்கொண்டு தாள் செய்யலாம். ஏன், ஏற்கெனவே அச்சான தாளை மறுசுழற்சி செய்வதன்மூலம் மீண்டும் தாள் செய்யத் தேவையான கூழை உருவாக்கிக்கொள்ளலாம்.

பல்ப் ஃபிக்‌ஷன் என்னும் பெயர், இலக்கியத் தரம் குறைவான, ஆழமற்ற, சாரமற்ற, சட்டென்று படித்துத் தூக்கிப் போட்டுவிட்டுச் செல்லக்கூடிய கதைப் புத்தகங்களுக்கு இன்று புழங்கும் பெயர். எல்லாப் புத்தகங்களுமே “தாளால்” எனவே “பல்ப்பால்” ஆனவை என்றாலும் பல்ப் என்ற பெயர் இம்மாதிரிப் புத்தகங்களுக்கு மட்டுமே ஏன் வழங்கப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் உலகம் முழுவதிலும் படிப்பறிவு அதிகமாகப் பரவத்தொடங்கியது. இங்கிலாந்தில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடம் சென்று படிக்கக்கூடிய நிலை அப்போதுதான் ஏற்பட்டது. அதற்கு லேபர் கட்சி உழைக்கும் மக்களின் ஆதரவுடன் முதன்முறையாக அரசு அமைத்ததுதான் முக்கியக் காரணம். இப்படிப் புதிதாகப் படிக்க வந்தவர்கள் எளிதில் படிக்கக்கூடியவண்ணம் புத்தகங்கள் தேவைப்பட்டன. எளிமையான கற்பனாவாதக் காதல் கதைகளும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் படைப்பூக்கத்துடனும் அதிகம் இயந்திரத்தனமாகவும் உருவாக ஆரம்பித்தது இந்த மக்களை மனத்தில்கொண்டுதான்.

இந்தப் புத்தகங்கள் பலரையும் சென்று சேரவேண்டுமானால் விலை மலிவாக இருக்கவேண்டும். அப்படியென்றால் மிகவும் விலை குறைவான தாளில், கட்டுமானச் செலவு மிகக் குறைவாக இருக்குமாறு செய்யவேண்டும். போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷமல்ல; வெறும் மனமகிழ்வுக்கானதுதான் என்பதால் நாள்பட தாங்கவேண்டியதில்லை. அப்படியானால் மறுசுழற்சி செய்யப்பட்ட கொஞ்சம் அழுக்கு வண்ணத் தாளில் இருந்தால் போதும். அப்படிப்பட்ட புத்தகத்தின் மிக்ச் சுமார் கட்டுமானத்தையும் தாளையும் குறிப்பிடும் பெயர்தான் ‘பல்ப்’.

பின்னர் ஆங்கில பல்ப் புத்தகங்களின் அட்டைகள், சிறப்பான ஸ்பாட் லேமினேஷன், கோல்ட், சில்வர் ஃபாயில் என்றெல்லாம் கலக்கின/கலக்குகின்றன.

ஜி.அசோகன் பேசுகிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் அமர்ந்திருக்கிறார்.
தமிழில் பல்ப் புத்தகங்களின் தந்தை ஜி.அசோகன்தான். அவர் இத்துறையில் இறங்குவதற்கு முன்பே, ராணி முத்து, மாலைமதி ஆகியவை முறையே தினத்தந்தி, குமுதம் நிறுவனங்களிலிருந்து வந்துகொண்டிருந்தாலும், இந்தத் துறையில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர் அசோகனே. அப்போது மிகப்பெரும் பிராண்ட் பெயர் பெற்றிருந்த ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், மேலே ஏறிவந்துகொண்டிருந்த பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என்று பலருக்கும் சரியான களம் அமைத்துக்கொடுத்தது அசோகனே. அப்போதைய தொழில்நுட்ப சாத்தியத்துக்குள்ளாக கவர்ச்சிகரமாக புத்தகங்களை உருவாக்கியது, வெறும் ஒரு கதை என்பதிலிருந்து பல சுவாரசியமான அம்சங்களை அந்த இதழ்களில் புகுத்தியது, விற்பனையைப் பரவலாக்க விநியோகத்தை வலுவாக்கியது, வாசகர்களுடன் தொடர்ந்து கடித உறவு வைத்திருந்தது என்று பலவற்றைச் சொல்லலாம்.

1980-களிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 30 வருட காலமாக இந்தத் துறையில் தனியான பாதையைத் தனக்கென அமைத்துக்கொண்டிருக்கிறார் அசோகன். அவர் படித்தது அதிகம் இல்லை என்றே அவரே ஒப்புக்கொள்கிறார்.

தமிழச் சமூகத்துக்கு ஜி.அசோகனுடைய பங்களிப்பு என்ன?

படிப்பு என்பது தனித் திறன். நாம் பள்ளிக்கூடம் சென்று கற்றுக்கொள்ளும் முதல் திறன் அதுவே. பிறந்து சில மாதங்களிலேயே மொழியை ஒலியாகக் கேட்பது, மொழியைப் புரிந்துகொள்வது, சொற்களை உருவாக்குவது, பேசுவது போன்ற பல திறன்களை நாம் கற்றுக்கொண்டுவிடுகிறோம். ஆனால் இதை மட்டுமே நாம் செய்துவந்தால் நம்முடைய சொற்குவியல் (vocabulary) குறைவாகவேதான் இருக்கும். எழுத்துகளைப் புரிந்துகொள்வது, அவற்றைக்கொண்டு ஒரு வார்த்தையை, ஒரு வரியை, ஒரு பத்தியை, ஒரு பக்கத்தைப் படிப்பது என்பது படிப்படியான அடுத்த திறன். இந்தத் திறனைப் பெறாமலேயே பல பேர் வாழ்ந்து மடிந்துள்ளனர். இன்று நாம் படிப்பறிவு (literacy) என்று குறிப்பிடுவது இந்தப் படிக்கும் திறனுடன் எழுதும் திறனும் சேர்ந்த ஒன்றாகும். என்னைப் பொருத்தமட்டில் எழுதும் திறன்கூட இரண்டாம் பட்சம்தான். யோசித்துப் பாருங்கள். நம்மில் பலர் ஒரு பக்கம்கூடச் சேர்த்து எழுதாமலேயே நம்முடைய மொத்த அலுவல் காலத்தை முடித்துவிடுகிறோம்.

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் பெரும்பாலான தனியார் அலுவலகங்களிலும் பணியாற்றும் பலரும் இன்று எழுதுவது என்பதே மிகக் குறைவானது. வங்கிகளில் வேலை செய்வோர்கூட சேர்ந்தாற்போல நான்கைந்து வரிகள் எழுதுவதில்லை. ஆனால் ஓர் அலுவலகத்தில் பணி புரியவேண்டும் என்றால் குறைந்தபட்சம் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

ஆனால் உண்மையில் நான் பல பள்ளிக்கூடங்களிலும் சென்று பார்த்துத் தெரிந்துகொண்டது, பெரும்பாலான குழந்தைகளுக்குப் படிக்கத் தெரிவதே இல்லை என்பதுதான். தட்டுத் தடுமாறி வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நன்கு பேசக்கூடியவர்கள். ஆனால் எழுத்துகூட்டிப் படிக்கத் தெரிவதில்லை. (நான் சொல்வது தமிழை. ஆங்கிலம் நாசமாகப் போகட்டும்.)

எழுத்துகூட்டிப் படிக்கத் தெரியாவிட்டாலும்கூட அவர்கள் பள்ளிப் பாடங்களை எப்படியோ படித்து, ஒழுங்காக எழுதத் தெரியாவிட்டாலும்கூட எப்படியோ எதையோ எழுதி பாஸ் செய்துவிடுகிறார்கள். இப்படி எஞ்சினியரிங், எம்.சி.ஏ வரைகூட இவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள் என்பதுதான் இன்றைய நிதர்சனம். எப்படி என்று என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். இன்று இதுதான் நடக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரியில் சான்றிதழ் வாங்கியவுடன் lapsed readers ஆகிவிடுகிறார்கள். அவர்கள் படிப்பது நின்றுபோய்விடுகிறது. ஒருசிலர் மட்டும் தினசரி அல்லது வார/மாத இதழ்களைப் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்குப் படிக்கும் பழக்கம் தொடர்கிறது. மீதிப் பேர் சினிமா போஸ்டர்களை அல்லது அரசியல் சுவரொட்டிகளைப் படிப்பதற்குமேல் வேறு எதையும் படிப்பதில்லை.

அலுவலகத்தில் அரசாணைகளை அல்லது விண்ணப்பங்களைப் படிக்கும் பலர் உண்மையில் எதைப் படிக்கிறார்கள், எதைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது எனக்கு விளங்குவதில்லை. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும் குழப்பம், செயல்திறனின்மை ஆகியவை ஏற்படுவதற்குக் காரணம், படிக்கும் திறனில்லாமை, புரிந்துகொள்ளும் திறனில்லாமை ஆகியவற்றால் வருவதே.

இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலரையாவது தொடர்ந்து படிக்கவைத்தது பல்ப் மாத இதழ்கள்தாம். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 இதழ்கள் வரை விற்ற பல்ப் மாத இதழ்கள் இன்று 6,000 - 7,000 என்று சுருங்கியுள்ளன. 7.5 கோடி எண்ணிக்கை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் முதன்மைத் தமிழ் நாளிதழ் வெறும் 10 லட்சம்தான் விற்கிறது. தங்களுடைய பள்ளிக்கூடம் அல்லது வேலை என்பதில் வரும் “படிப்பு” தாண்டி, தினசரி ஒரு பக்கமாவது படிப்பவர்கள் என்று பார்த்தால் அது 50 லட்சத்தைத் தாண்டாது என்பது என் கணிப்பு. (ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் மெசேஜ் படிப்பது என்பது இதில் சேராது!)

சாதாரண மக்களை எளிதில் படிக்கவைப்பது எளிய, விறுவிறுப்பான கதைகள்தாம். கொலை, துப்பு துலக்குதல், அதிர்ச்சி, திடுக் சம்பவங்கள், கொஞ்சம் பாலியல் தூண்டுதல், கடைசி கிளைமேக்ஸ் துரத்தல்கள், இறுதியில் சிடுக்குகளைத் தீர்த்து வாசகனுக்கு ஆசுவாசம் தருதல் என்று இவை சாதாரண மக்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. மெல்லிய காதல் கதைகளும் குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து வரும் கதைகளும் இவை போன்றவையே. முந்தையவை அதிகம் ஆண்களுக்காக என்றால் பிந்தையவை பெண்களுக்காக.

உண்மையில் தமிழகம் படிப்பறிவில் சிறந்து விளங்குவதாக இருந்தால் இன்று இதுபோன்ற கதைகளையும் வார/மாத இதழ்களையும், தினசரிகளையும் படிப்போர் எண்ணிக்கை இப்போது இருப்பதுபோல ஏழெட்டு மடங்கு அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை.

ஜி.அசோகன் உருவாக்கிய புரட்சி போன்று இன்றைய நிலையில் வெகுமக்களைப் படிக்கவைக்க சுவாரசியமான கதைகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. படிக்காத மக்களால் அதிக விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்களால் அரசியலிலும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதனால்தான் நாம் இந்த இரு துறைகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.

எளிய படிப்பையாவது மக்களிடம் பரவலாக்கினால்தான், கொஞ்சம் ஆழமான விஷயங்களைப் படிக்க அதிகம் பேர் உருவாவார்கள். அவர்களில் சிலர் தீவிரமான அறிவுஜீவிகளாகப் பரிணமிப்பார்கள். எனவே நம் முதல் கடமை பல்ப் இலக்கியத்தைப் பரவலாக்குவதுதான்.

LIPS அமைப்பு ஜி. அசோகனுக்கு நடத்திய பாராட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்த நிகழ்ச்சியில் ஜி. அசோகனை வாழ்த்திப் பேசினார். அந்த நிகழ்ச்சியின் ஆடியோ என்னிடம் உள்ளது. அதனை விரைவில் இணையத்தில் சேர்ப்பிக்கிறேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிவராமன், யுவகிருஷ்ணா, நாராயணன் ஆகியோருக்கும் இடம் அளித்த பனுவல் புத்தகக்கடைக்கும் நன்றி.

12 comments:

  1. தகவலுக்கு நன்றி பத்ரி...

    ReplyDelete
  2. /// ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 இதழ்கள் வரை விற்ற பல்ப் மாத இதழ்கள் இன்று 6,000 - 7,000 என்று சுருங்கியுள்ளன. ///

    காரணம் டி.வி-யின் வருகை மட்டுமா, வேறு ஏதும் உள்ளதா?

    சரவணன்

    ReplyDelete
  3. The reduction in subscribers for these pulp fiction novels are:
    1) encroachment of TV series..
    2) proliferation of mobile devices such as smartphones, mp3 players etc..
    Thewse books were predominantly used as engage when travelling. Now you have options. Even in busues they have TV-DVD and etc.
    I strongly think the above reasons are the causes for the downfall of readership.

    ReplyDelete
  4. ஆதித்தனார் தான் ராணி வார இதழ் மூலம் பல்ப் இலக்கியத்தைப் புகுத்திய மூலவர் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. ஒரு திருத்தம்--ராணி வார இதழ் மூலம் என்பதைவிட ராணி முத்து மாத இதழ் மூலம் எனலாம்.

      Delete
  5. மாத நாவல்களை கொண்டு வந்து அன்று இருந்த இன்றும் இருக்கும் ஒரு பெரிய வெற்றிடத்தை நிரப்ப முயன்றவருக்கு பாராட்டு..மகிழ்ச்சி..மீண்டும் இன்னொரு அசோகன் தேவை..

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் இன்ணொரு அசோகன் தேவை!
      எவ்வளவு நிதர்சனமான உண்மை.

      Delete
  6. ஜி அசோகன் அவர்களின் பங்கு ஆசிரியர் கூறியது போல மறக்க முடியாதது. மறுக்கவும் முடியாதது.

    அதைப் படித்து இன்புற்ற பலரின் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமைதான்.

    ReplyDelete
  7. குமுதம்,ராணி போன்றவைதான் முதலில் பல்ப் இலக்கியத்திற்கு மேடை அமைத்தன.மாத நாவல் என்கிற ஒன்றை ராணி முத்து முதலில் வெளியிட்டது. மாலைமதி போன்றவை பின்னர் வந்தன.கல்பனா என்ற பெயரில் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்ட வெளியீடும் இந்த வகையில் வெளியானதுதான்.மணியன்,சாண்டில்யன்,சாவி போன்றோரும் பல்ப் இலக்கியத்தை தமிழில் வளர்த்தவர்கள்.

    ReplyDelete
  8. பாலகுமாரன் நாவல்களையும் அசோகன் வெளியிடத் தொடங்கி பின் அவரோடு பிணக்கு ஏற்பட்ட பின் பொன் சந்திரசேகர் அவரின் படைப்புக்களை வெளியடத்தொடங்கினார்.

    ReplyDelete
  9. //50,000 இதழ்கள் வரை விற்ற பல்ப் மாத இதழ்கள் இன்று 6,000 - 7,000 என்று சுருங்கியுள்ளன. 7.5 கோடி எண்ணிக்கை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் முதன்மைத் தமிழ் நாளிதழ் வெறும் 10 லட்சம்தான் விற்கிறது. // Its a shame for us

    ReplyDelete
  10. குமுதம்,ராணி போன்றவைதான் முதலில் பல்ப் இலக்கியத்திற்கு மேடை அமைத்தன.மாத நாவல் என்கிற ஒன்றை ராணி முத்து முதலில் வெளியிட்டது. மாலைமதி போன்றவை பின்னர் வந்தன.கல்பனா என்ற பெயரில் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்ட வெளியீடும் இந்த வகையில் வெளியானதுதான்.// இது தவறான கருத்தாகத் தோன்றுகிறது. கல்பனாவும் இங்கே குறிப்பிட்ட பிற வெளியீடுகளும் நல்ல இலக்கியத்தைக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பரவலாக வாசகர்களை அடையும் முயற்சியே.

    ReplyDelete