Thursday, September 25, 2014

இட ஒதுக்கீடு - விவாதம்

நேற்று இரவு இமயம் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டேன். பிராமின்ஸ் டுடே பத்திரிகை ஆசிரியர் வாசன், பேரா. சுப. வீரபாண்டியன், மதிமுக வழக்கறிஞர் அந்தரி தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜீவ சகாப்தன் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

என் கருத்துகளாக நான் முன்வைத்தவை: (அங்கே சொல்லமல் விட்ட சிலவற்றை இங்கே சேர்த்துள்ளேன்)

1. இட ஒதுக்கீடு என்பது உரிமையல்ல. சலுகைதான். அதற்கு அவசியம் இருக்கிறது. ஆனால் அதனை உரிமை என்று சொல்வதில் சிக்கல் இருக்கிறது.
2. இட ஒதுக்கீட்டுக்குக் குறிப்பிட்ட கால அளவு இருக்கவேண்டும். எத்தனை காலம் என்பதை இன்று நிர்ணயிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அது கால அளவு கொண்டது என்பதை ஏற்கவேண்டும். சில குறியீட்டு எண்களை உருவாக்குவதன்மூலம் இட ஒதுக்கீடு அது எதிர்பார்த்த நன்மைகளைத் தருகிறதா என்பதை அளவிட்டு இட ஒதுக்கீட்டின் அளவையும் காலத்தையும் மறு பரிசீலனை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
3. சாதிவாரி விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பது பயன் தராது. சில சாதிகளின் விழுக்காடு மிகக் குறைவாக இருக்கும்போது, இடங்களும் குறைவாக இருக்கும்போது, ஒரு சாதிக்கு அரை நபர் என்று வந்துசேரும். எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து சில சாதிக் குழுக்களை ஒரு தொகுப்பாக உருவாக்கி, அந்தத் தொகுப்புக்கு இத்தனை விழுக்காடு என்று இட ஒதுக்கீடு தருவதுதான் சரியான வழி. ஆனால் இந்தத் தொகுப்புகள் இறுக்கமானதாக இருக்கக்கூடாது. ஒரு தொகுப்பிலிருந்து இன்னொரு தொகுப்புக்கு சாதிகள் நகர்த்தப்படவேண்டும். அதற்கும் குறியீட்டு எண் உபயோகமாக இருக்கும்.
4. சாதிகள் ஒழியவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சாதிகள் இருக்கும்வரை சாதித் தொகுப்புக்கான இட ஒதுக்கீடு இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒரு சமூகத்தில் தொடர் இட ஒதுக்கீடு என்பது ஆதர்ச நிலையாக இருக்க முடியாது.

===

சுப.வீ, நான் சலுகை என்று குறிப்பிட்டது இட ஒதுக்கீடு பெறும் மக்களை இழிவுபடுத்துவதாகும் என்றார். நான் அதிலிருந்து வேறுபடுகிறேன். சாதியிலிருந்து நகர்ந்து பாலினத்துக்கு வருவோம். பெண்கள் படிப்பது மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகள் தரப்படவில்லை. மறுப்பு சமூக மனமாற்றத்தால் விலக்கப்பட்டதுமே பெண்களுக்குச் சம உரிமை கிடைத்துவிட்டது. ஆனால் இந்த உரிமையினால் பலன் இல்லை, பல துறைகளிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதனால் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லும்போது நாம் தருவது சலுகைதான். உரிமைக்கு அடுத்த கட்டம்தான் சலுகை. உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. சலுகை என்பது அடுத்தவரின் உரிமைக்கு மேலாக இன்னொருவருக்கு வாய்ப்பு தருவது. இதில் தவறு ஒன்றும் இல்லை. இதனை இழிவாகப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. இதனை justify செய்யமுடியும் என்னும்போது இதனைத் தவறாகப் பார்த்து, இதனை உரிமை என்னும் பெயரால் இறுக்கம் அடையச் செய்வதுதான் ஆபத்தானது.

உணவுக்கான உரிமை, கல்விக்கான உரிமை, வேலைக்கான உரிமை, மானியத்துக்கான உரிமை போன்றவற்றையும் நான் இதனுடன் சேர்த்துப் பார்க்கிறேன். இவை எவையுமே ஒரு மானிடன் தன் அரசிடம் உரிமையாகக் கேட்டுப் பெற முடியாது, ஓர் அரசும் இவற்றையெல்லாம் உரிமையாகத் தரவும் கூடாது என்று நான் நினைக்கிறேன். இவையெல்லாம் ஒரு சமூகம் தன் அமைப்பில் உள்ள ஒரு கிளைக் குழுவை உயரத் தூக்கிவிடுவதற்குத் தர சேர்ந்து ஒப்புக்கொள்ளும் ஓர் ஒப்பந்தம் மட்டுமே. Discrimination என்பது புகுந்துவிட்ட ஒரு சமூகத்தில் அதனை நீக்கும் காலம் வரை தொடரவேண்டிய நிலைப்பாடுகள். சம நிலைச் சமூகம்தான் ஐடியல் என்னும்போது அந்த ஐடியலை அடையும் காலம் வரை மட்டுமே இருக்கவேண்டிய ஒன்றை உரிமை என்று சொல்ல முடியாது. சமநிலை அடைந்தபின்னும் தொடரவேண்டியவைதான் உரிமைகள். எழுத்துரிமை, பேச்சுரிமை, விருப்பட்ட தொழிலைச் செய்யும் உரிமை போன்றவை. ஐடியல் சமநிலைச் சமுதாயத்திலும் அவ்வப்போது சிலர் கீழே வீழ்ந்தபடி இருப்பார்கள். அவர்களைக் கைதூக்கிவிட சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

===

சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வதற்கு எதிர்ப்பு ஏதும் வராது என்ற நிலையில் இன்று இது ஏன் செய்யப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. மத்திய அரசு முன்வராதபோது மாநில அரசு நேரடியாக இதில் ஈடுபடலாம். இட ஒதுக்கீடு தாண்டி, ஒரு குறிப்பிட்ட சாதிச் சமூகம் தன் சமூகம் எந்நிலையில் உள்ளது, எம்மாதிரியான மாற்றங்கள் தேவை என்பதை அறிந்துகொள்ளவும் இந்தக் கணக்கெடுப்பு உதவும். இதிலிருந்து கிடைக்கும் குறியீட்டு எண்கள் மிகவும் உபயோகமானவை என்று கருதுகிறேன். இன்று தரவுகள் இல்லாமலேயே விவாதங்களும் பண ஒதுக்கீடும் நடைபெறுகின்றன. அவற்றை மேற்படித் தரவுகள் மாற்றும்.

===

தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் சுப.வீ. அதுகுறித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை. அதனை நான் மறுத்திருப்பேன். தனி விவாதம் என்பதால் வேறொரு பதிவாக அதனை எழுதுகிறேன்.

6 comments:

  1. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கூடாது சமநிலை வேண்டும் என்பதில் பெரும்பான்மை கருத்தொற்றுமை இருப்பதே இந்தியாவின் சிறப்பு. அதை எப்படி அடைய வேண்டும், எவ்வளவு காலத்திற்குள் அடைய வேண்டும் என்பதிலேயே வேற்று அணுகுமுறைகள்.

    இட ஒதுக்கீடு இதை நோக்கி முன்னேற வழி வகுக்கும் என்பதே அடிப்படை Premise.

    ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டம் கொடுத்த SC ,ST ஒதுக்கீடு தவிர மிகப்பின் தங்கியவர்க்கு என்று மொண்டல் கமிஷன் ஒதுக்கீடுகளும் வந்துள்ளன. பலமுறை இவை நீதிமன்றத்திற்கு செல்லப்பட்ட பொழுது எந்த கணிப்பின் அடிப்படையில் ஒரு ஜாதி பின்தங்கியதாகக் கருதப்பட்டுகிறது என்று வினா எழுப்பியபோது இது தற்காலிகமே, கணிப்பு செய்யப்படும் என்று அரசுகள் உறுதி அளித்தே வந்துள்ளன. ஆனால் 2011 தொகைக் கணக்கெடுப்பிலும் அரை மனத்துடன் துவங்கி சரியாக முடிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

    Course correction: இதுவரை செய்த முறை சரிதானா, எதிர் பார்த்த விளைவுகள் ஏற்பட்டுள்ளனவா, மாற்றங்கள் வேண்டுமா என முடிவுகள் எடுக்க வழி செய்யும். இதைச் செய்யாத வரை, இது தொடரக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். எதாவது ஒரு நீதி மன்றம் இதை உறுதி செய்யவேண்டும். அரசுக்கு escape clause இல்லாமல் செய்ய வேண்டும்.

    இரண்டாவது: மொண்டல் கமிஷன் அறிக்கையில் Creamy Layer என்ற புது சொல்லாடல் சரியாக வந்தது. SCST க்களுக்கும் இந்த CREAMY LAYER அணுகுமுறை வரவேண்டும். (முன்னாள் துணை பிரதமர் ஜகஜீவன் ராம் அவர்களின் புதல்வி, IAS அல்லது IFS பதவியில் இருந்தவர், முன்னாள் மக்கள் அவை சபாநாயகி மீரா குமார் மகனோ, பேரனோ SC சலுகை /ஒதுக்கீடு பெறுவது சரியா?

    ReplyDelete

  2. ===
    தனியார் துறையிலும்
    வேலை வாய்ப்பில் இட
    ஒதுக்கீடு வேண்டும் என்றார்
    சுப.வீ.///

    செட்டியாருங்க தங்கள் அடகு கடைகளில் சொந்த பந்தங்களை தவிர வேறு யாரையும் வேலைக்கு வைக்க மாட்டாங்க. அப்படி இருக்க s.p.வீரபாண்டியன் தனியார் துறையில் இட ஒதுக்கீடட்டை வலியூறுத்துகிறாரா.

    ReplyDelete
  3. // உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. சலுகை என்பது அடுத்தவரின் உரிமைக்கு மேலாக இன்னொருவருக்கு வாய்ப்பு தருவது. இதில் தவறு ஒன்றும் இல்லை // WRONG. சலுகைகள் தருவது தவறில்லைதான், ஆனால் ஒருவருடைய உரிமையைப் பறித்து அதை அடுத்தவருக்குத் தருவது கண்டிப்பாகத் தவறு. இடஒதுக்கீட்டுக் கொள்கை அதைத்தான் செய்கிறது. குறைந்த தகுதி உடையவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உண்டெண்றால், அவரைவிட அதிக தகுதி உடையவருக்கு கல்வி/வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அப்போதுதான் இதை சலுகை என்று கூறமுடியும், அதுவரை இது ஒரு பிரிவினைக் கொள்கையே. India is a racist country built on top of a racist constitution. Indian constitution says that it will afford equal protection to all its citizens, and then it goes on to state exceptions to this article. As soon as you state exceptions, the word "equal" loses its meanings. The founding fathers of India let the country down by creating such a racist policy. You don't have to be such a bleeding heart. Just because the supporters of the reservation policy hugely outnumber the opposers, you don't have to sugarcoat the truth. // சில குறியீட்டு எண்களை உருவாக்குவதன்மூலம் // I have always enjoyed your translation, great translation of "key performance indicators".

    ReplyDelete
  4. இட ஒதுக்கீடு என்றால் வெறும் சாதிவாரி இடஒதுக்கீடு மட்டும் தான் எனபது போல பேசுவது வியப்பு தான்.

    தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு/படித்தவர்களுக்கு தான் தமிழக அரசில் வேலைவாய்ப்பு,தமிழக கல்லூரிகளில் இடங்கள்.டேலேங்கானவில் பிறந்தவர்கள்/படித்தவர்களுக்கு தான் அங்கு மிக பெரும்பான்மையான இடங்கள் என்பதை என்ன என்று அழைப்பது.

    இந்த மாநில அடிப்படை இட ஒதுக்கீடு உரிமையா/சலுகையா

    மிகவும் ஏழை நாடுகளான வங்காளதேசம்,நேபாளம்,பூடான் போன்ற நாடுகளை சேர்ந்த அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மற்றும் இங்கிலாந்து,டென்மார்க் போன்ற நாட்டில் பிறந்தவர்களை தேர்வு எழுத கூட அனுமதிக்காமல் இந்தியாவின் குடிமகன் என்ற ஒரே அடிப்படையில் வேலைவாய்ப்பு/கல்வி போன்றவற்றை தருவதற்கு பெயர் இட ஒதுக்கீடு கிடையாதா.இந்த இட ஒதுக்கீடு சலுகையா/உரிமையா

    நாடு/மாநிலம் கடந்து யாரும் எந்த வேலை வேண்டுமானாலும் சேரலாம்,எந்த பரீட்சை வேண்டுமானாலும் எழுதி மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரியில் சேரலாம் என்ற நிலை வரும் போது குறைந்த இட்டங்களை பிடிப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள் சலுகை என்றால் சரி.

    நடைமுறையில் இருக்கும் பல இட ஒதுக்கீடுகளில் சாதிவாரி இட ஒதுக்கீட்டை மட்டும் சலுகை உரிமை அல்ல எனபது நியாயமா

    ReplyDelete
  5. FOR PAAPPAANS, THERE SHOULD NOT BE ANY RESERVATION AT ALL WHATEVER BE HIS CONDITION OF LIVING. FOR OTHERS, ONLY POOR PEOPLE SHOULD BE BENEFITTED FROM RESERVATION. .

    ReplyDelete
  6. இடஒதுக்கீடு என்பது உரிமை அல்ல, சலுகை என்கிறீர்கள். தாழ்த்தப்பட்டோர் பள்ளிகளுக்குக்குள்ளேயே நுழையக் கூடாது எனத் தடை போடும் போது, அத்தடையை உடைத்து அவர்களும் பள்ளிக்கூடத்துக்குள் கல்வி கற்க நுழையத் தடையில்லை எனச் சட்டம் கொண்டு வந்து விட்டால் அது அவர்களுக்கான உரிமையை மீட்டதாகப் பொருள். ஆனால் அங்கு அவர்களுக்கு நுழைய வாய்ப்புக் கிடைத்து விட்ட பின்னர், அவர்கள் அதற்குள் நுழைவதற்குத் தேவையான மதிப்பெண் பெற்றிருக்கா விட்டாலும், அவர்களை நுழைய அனுமதிப்பது அவர்களின் உரிமை ஆகாது, அவர்களுக்குத் தரப்படும் சலுகை என நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. இது பிழைப் பார்வை எனக் கருதுகிறேன்.
    கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லத் தடை இருந்த காலத்தில், அவர்கள் உள்ளே செல்வதற்குள்ள அனுமதியைப் போராடிப் பெற்றுக் கொண்டு விட்ட உடனேயே அவர்களுக்குள்ள உரிமையும் கிடைத்து விடுகிறது.
    ஆனால் கல்வியகங்களை இவ்வகையில் பார்க்க இயலாது. அவர்கள் பல காலமாகக் கல்வியகங்களில் உடலளவில் மட்டுமே நுழைய அனுமதிக்க மறுக்கப்பட்டிருந்ததாகப் புரிந்து கொள்கிறீர்கள், அல்லது புரிய வைக்க முயல்கிறீர்கள். பார்ப்பனக் கூட்டம் பெரும் உழைக்கும் மக்கள் திரளை, நீ சூத்திரன்! நீ தலைகீழாய் நின்றாலும் உனக்குப் படிப்பு ஏறாது எனச் சொல்லியும், சாத்திரங்களைக் காட்டி மிரட்டியும் வந்துள்ளது. வேதத்தைக் காதால் கேட்டால் அச்செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் எனப் பெரும் உளவியல் அச்சத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் உளவியல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ள இன்றைய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உடலளவில் கல்வியகங்களில் நுழைய உரிமை பெற்றுள்ளனரே தவிர, மூளையளவில் அல்ல. அவர்கள் பார்ப்பனர்களைக் காட்டிலும் மதிப்பெண் குறைவாகப் பெறுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் மூளைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத் தடை மட்டுமே. இந்தத் தடையை உடைத்து உள்ளே நுழைய தனக்குள்ள பங்கைக் கேட்பது உரிமை அரசியலே! சலுகை அரசியலல்ல! காலங்காலமாகத் தங்களால் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் இன்று உரிமை கேட்டுப் போராடி முன்னேறி வருவது பார்ப்பனக் கண்களை உறுத்தத்தான் செய்யும். எனவேதான் பார்ப்பனர்கள் வயிற்றெரிச்சலில் அந்த மக்களின் உரிமைக் குரலை சலுகை எனக் கூறி இழிவுபடுத்த நினைக்கிறார்கள். நீங்கள் அவர்கள் குரலில் பேசுவது வேதனையளிக்கிறது.
    இடஒதுக்கீட்டைச் சலுகை எனக் கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் செயல் என சுபவீ கூறியது மிகச் சரியான கருத்தே.
    அடுத்து வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பற்றி. கல்வியகங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைந்து விட்டனர், அவர்களை அரசு அலுவலகங்களில் நுழைய விடாமல் தடுப்பதெப்படி என யோசித்த பார்ப்பனர்களின் சிந்தையில் உதித்ததுதான் தனியார்மயக் கருத்து. இன்றும் சர்வ சாதாரணமாகப் பார்ப்பனர்கள் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் பேசிக் கொள்வதைக் காணலாம்: "இப்போ எல்லா கவர்ன்மென்ட் வேலையும் பிரைவேட் ஆயின்டிருக்கு. இனிமே ஒரு சூத்திரப் பயலும் ரிசர்வேஷன் அது இதுன்னு சொல்லின்டு உள்ள வந்துட முடியாது. பிரைவேட்டுல முட்டாப் பசங்களுக்கு வேலை கொடுப்பானா? மெரிட்டுக்குத்தான் கொடுப்பான். நாடு இனிமே இவாள்டேந்து தப்பிச்சுது."
    திரு பத்ரி அவர்கள் ஒரு பக்கம் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகக் கூறுகிறார். மறுபக்கம் தனியார் துறையிலான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் கூறுகிறார். அரசுத்துறையைத் தனியார்மயமாக்குவதை பத்ரி தீவிரமாக ஆதரிப்பதையும் சேர்த்துப் பார்த்தால் அவரின் உளக்கிடக்கையை நாம் புரிந்து கொள்ளலாம். அரசுத்துறையை ஒழித்துக் கட்டி விட்டு, தனியார்துறையினரை வளர்த்து விட்டால், வேலைவாய்ப்பிலான இடஒதுக்கீட்டுக்கே வேட்டு வைத்து விடலாமல்லவா? அதற்குத் திரு பத்ரி இடஒதுக்கீட்டுக் கொள்கையே தவறு எனச் சொல்லியிருக்கலாம். இதில் ஆதரவென்ன? எதிர்ப்பென்ன?
    ஒருவர் மனத்தில் சாதியம் மிச்சப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த உரைகல்: இடஒதுக்கீடு.

    ReplyDelete