Friday, October 03, 2014

அமேசான் - நெட்ஃப்லிக்ஸ்


சமீபத்தில் படித்து முடித்த இரண்டு புத்தகங்கள், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் இரண்டு நிறுவனங்களும் உருவான கதையை விளக்குவன.

கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிய நிறுவனங்கள் சிலவற்றில் இவ்விரண்டையும் சொல்லலாம்.

நாம் பொருள்களை வாங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது அமேசான். அதன் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைவு என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில் இணையம் வழி வர்த்தகம்தான் கோலோச்சப்போகிறது என்பது தெளிவு. திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் என்று கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் இப்போதும் இனியும் நாம் எப்படி நுகரப்போகிறோம் என்பதை முற்றிலுமாக மாற்றியமைத்த நிறுவனம் நெட்ஃப்லிக்ஸ். இந்தியாவில் அமேசானைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட நெட்ஃப்லிக்ஸ் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ்தான் இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என்றால் அந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல. அவைபோன்ற, அவற்றின் வழிமுறையில் தொழிலில் இறங்கியிருக்கும் பிற நிறுவனங்களும்தான். ஆனால், இந்த இரண்டும் அவரவர் துறையில் முன்னோடிகள் என்பதால் அவர்கள்தான் தம் துறையின் பாதையைக் கட்டியமைக்கிறார்கள்.

மக்கள் வாங்கும் அனைத்துப் பொருள்களையும், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு க்ளிக்கில் வாங்க, பொருள்கள் அவரவர் வீடுகளுக்குக் போய்ச் சேரும் இணைய வணிக முறையை அமேசான்தான் உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசென்றது. இன்று நானும்கூடத்தான் இணையம் வழியாகத் தமிழ்ப் புத்தகங்களை விற்கிறேன். ஆனால் அமேசானும் நானும் ஒன்றாக முடியுமா? இது நிகர விற்பனை பற்றியதல்ல. அதன் அடிப்படையில் இருக்கும் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் தகவல்களிலிருந்து அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போலப் பொருள்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது, பிற போட்டியாளர்களைவிட வாடிக்கையாளரின் தேவையை மிகச் சரியாக நிறைவேற்றுவது என்று பலவற்றைச் சொல்லலாம்.

அமேசான் புத்தகங்களை விற்பதிலிருந்து தொடங்கினாலும் இன்று பலவிதப் பொருள்வகைகளையும் விற்பனை செய்கிறார்கள். சோனி போன்றோர் மின்புத்தகங்களை அறிமுகப்படுத்தினாலும் அமேசானுக்கு மட்டும்தான் அதனை எப்படி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பது தெரிந்திருந்தது. இன்று கிண்டில் மின்புத்தகப் படிப்பான் கருவிக்குப் போட்டியாக சந்தையில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றுமே இல்லை. இது வெறும் கருவி வடிவமைப்பு பற்றியது மட்டுமல்ல. புத்தகம் படிப்பவர்களின் மனத்தைப் புரிந்து அவர்களுடைய தேவையை மிகச் சரியாக வடிவமைப்பது, அவர்கள் விரும்பும் அனைத்துப் புத்தகங்களையும் அவர்களிடம் கொண்டுசேர்ப்பது என அனைத்தையும் உள்ளடக்கியது.

கிண்டில் படிப்பான் இல்லாவிட்டால் இன்று நான் படிக்கும் புத்தகங்களின் ஒரு சிறு விழுக்காட்டுக்குமேல் நான் படித்திருக்க மாட்டேன். அச்சாகிக் காணாமல் போன பல புத்தகங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறது கிண்டில்.

அமேசான் எவ்வாறு உருவானது, அதனை உருவாக்கிய ஜெஃப் பேய்சோஸ் எப்படிப்பட்ட நபர், அமேசான் தன் நிலையை அடைந்தது எப்படி, அதன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன போன்ற பலவற்றையும் பிராட் ஸ்டோன் ஆராய்ந்து மிக அற்புதமாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 

இந்தியாவின் ஃப்லிப்கார்ட், அமேசானின் தரத்திலானதா? அதன் அடிப்படைத் தொழில்நுட்பத்தால் அமேசானுடன் போட்டி போட முடியுமா? அமெரிக்காவில் சிறப்பாக ஒரு தொழிலைச் செய்வதாலேயே இந்தியாவிலும் அமேசானால் வெல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இனி வரும் காலத்தில்தான் நமக்குக் கிடைக்கும்.
அமேசான், லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடக்கும் கம்பெனி. அது தன் பணத்தையெல்லாம் மேற்கொண்டு தொழிலில் முதலீடு செய்துகொண்டே வருகிறது. ஜெஃப் பேய்சோஸால் அவரது பங்குதாரர்களைச் சமாளிக்க முடிகிறது. குறைந்தபட்சம் இப்போதைக்காவது. ஃப்லிப்கார்ட்டால் அது சாத்தியமா, இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

இணைய வர்த்தகத்தின் ஆர்வம் கொண்டவர் என்றால் நீங்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும்.


இணைய வர்த்தகத்துக்கு அமேசான் எப்படியோ, திரைப்படங்களுக்கு நெட்ஃப்லிக்ஸ் அப்படிப்பட்டது. பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் என்ற புத்தகக் கடைச் சங்கிலியை இணைய வர்த்தகத் திறனால் அழித்து வளர்ந்தது அமேசான். பிளாக்பஸ்டர் என்ற வீடியோ வாடகைக் கடைச் சங்கிலியை அழித்து வளர்ந்தது நெட்ஃப்லிக்ஸ்.

இந்தியாவில் ஒரு கட்டத்தில் தெருவுக்குத் தெரு ஒரு வீடியோ வாடகைக் கடை இருந்தது. A2 சசிகலாகூட அப்படியொரு கடை வைத்திருந்தவர்தான். வி.எச்.எஸ் கேசட்டுகளை வாடகைக்கு எடுத்துவந்து வீடியோ பிளேயர்மூலம் படம் பார்த்துவந்தோம். அமெரிக்காவில் இப்படிப்பட்ட பல சிறு சிறு கடைகள் இருந்தன. இவற்றுக்கிடையே, பிளாக்பஸ்டர் என்ற சங்கிலி நாடு முழுதும் பரந்துவிரிந்த ஒரு வீடியோ வாடகைக் கடையாக இருந்தது.

வீட்டில் இருந்துகொண்டே படம் பார்க்க விரும்புவோருக்கான சேவையை நெட்ஃப்லிக்ஸ் கொடுக்க விரும்பியது. ஆனால் வி.எச்.எஸ் கேசட்டை அவ்வாறு அனுப்பவது சிரமமானதாகவும் செலவு அதிகம் பிடிப்பதாகவும் இருந்தது. அவர்களுடைய அதிர்ஷ்டம், டிவிடி தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகமானது. திரைப்பட நிறுவனங்கள் தம் படங்களை டிவிடியில் வெளியிட, நெட்ஃப்லிக்ஸ் டிவிடியை வாடகைக்குத் தர ஆரம்பித்தது. அமெரிக்க அஞ்சல் துறை நம்மூர் உருப்படாத அஞ்சல் துறை போல் கிடையாது. நெட்ஃப்லிக்ஸிலிருந்து உங்கள் வீட்டுக்கு டிவிடியை எடுத்து வந்து தெருவார்கள்; கூடவே நீங்கள் பார்த்து முடித்த டிவிடியை உங்கள் வீட்டிலிருந்து எடுத்து, நெட்ஃப்லிக்ஸ் அலுவலகத்துக்கு அனுப்புவதையும் செய்வார்கள். ஒரு கட்டத்தில் அமெரிக்க அஞ்சல் துறையின் நம்பர் ஒன் கஸ்டமராக நெட்ஃப்லிக்ஸ் இருந்தது.

சாதாரண டிவிடி வாடகைத் தொழிலை வேறு யாரேனும் நெட்ஃப்லிக்ஸைவிடச் சிறப்பாகச் செய்திருக்க முடியாதா? ஏன் அமேசானே செய்திருக்க முடியாதா? அமேசான் முயற்சி செய்தது. ஆனால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் நெட்ஃப்லிக்ஸ் இரண்டு, மூன்று அருமையான திட்டங்களைக் கொண்டுவந்திருந்தார்கள்.

அதற்குமுன்புவரை ஒவ்வொரு டிவிடியை வாடகைக்கு எடுக்கும்போது அதற்குப் பணம் செலுத்தவேண்டும். பின்னர் குறிப்பிட்ட தினத்தில் அதனைத் திருப்பித் தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நெட்ஃப்லிக்ஸ் இவற்றை ஒழித்தது. அபராதமே கிடையாது. மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டால் போதும். வேண்டிய டிவிடிக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் அல்ல. இரண்டு அல்லது நான்கு டிவிடிக்களை எடுத்து, பார்த்துவிட்டு, திரும்ப அனுப்பினால் அடுத்து உங்கள் தேர்வு உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். நீங்கள் பார்த்துவிட்டு அனுப்ப அனுப்ப, உங்கள் வீட்டுக்கு அடுத்த டிவிடிக்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த கியூ வரிசை முறை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.

அடுத்தது சினிமேட்ச் என்னும் மிகச் சிக்கலான ஒரு கணக்குமுறை. நீங்கள் எம்மாதிரியான படத்தைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டு,. அதேபோன்ற படத்தைப் பார்க்கும் பலர் வேறு எந்தெந்தப் படங்களையும் பார்க்கிறார்கள் என்பதை வைத்து, நீங்கள் அடுத்து இந்த இந்தப் படங்களையெல்லாம் பார்க்கலாம் என்ற பரிந்துரையை முன்வைக்கும் ஒரு அல்காரிதம். இதுவும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.
டிவிடி வாடகை என்று தொழிலை ஆரம்பித்தாலும், இணையம் வழியாக ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்று கணித்தவுடனேயே தன் தொழிலை மாற்றிக்கொண்டு முன்னேறியது நெட்ஃப்லிக்ஸ். மாறாக, பழைய தொழிலையே கட்டிக்கொண்டு அழுத ப்ளாக்பஸ்டர், அல்லது அதுபோன்ற வீடியோ வாடகைக் கம்பெனிகளெல்லாம் அழிந்துபோயின.

இந்தியாவில் திருட்டி விசிடி பரவலாகக் கிடைக்க ஆரம்பித்ததும் வீடியோ வாடகை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. சேரனின் சி2எச் அவ்வப்போது சத்தம் போடுகிறது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிடி அடித்துத் தருவோம் என்கிறது. எனக்கென்னவோ இது வேலைக்கு ஆகாதது என்றுதான் தோன்றுகிறது. பிராட்பாண்ட் இணைப்பு வெகு சீக்கிரமே ஒவ்வொரு வீட்டுக்கும் வந்துவிடும். தற்போதைய நெட்ஃப்லிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ சேவைதான் ஒரே வழி.

அதனைச் செயல்படுத்த மிகச் சிறப்பான அடிப்படைத் தொழில்நுட்பம் வேண்டும். கிரெடிட் கார்ட் இல்லாவிட்டாலும் மக்கள் அருகில் ஓரிடத்தில் மாதக் கட்டணத்தைச் செலுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். மாதம் 100 அல்லது 200 ரூபாய்க்கு, வேண்டிய படத்தை வேண்டியபோது பார்த்துக்கொள்ளலாம். புதுப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும். இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்தத் தொழில் ஜெயிக்கும். கவனியுங்கள், இந்தப் படங்களுக்கு நடுவே விளம்பரக் குப்பைகள் எவையும் இருக்காது. விட்ட இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்த்துக்கொள்ளலாம். எச்.டி தரத்தில் படங்களைத் தர முடியும். முதலில் பெரு நகரங்கள், பிறகு சிறு நகரங்கள், அடுத்து சின்னச் சின்ன கிராமங்களுக்குக்கூட 4ஜி சேவை பரவப் பரவ நல்ல பேண்ட்விட்த் கிடைத்துவிடும்.

இதனால்தான் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்று நான் நம்புகிறேன். நாம் படிக்கும் நாடு கிடையாது. பார்க்கும் நாடுதான்.


8 comments:

  1. I used to read about Netflix in few of the Analytics. Books. Similarly. Kodak is one company gone.bankrupt.despite a.pioneer in digital. Photography. Never be a Dinosaur.Good that you brought this in Tamil.

    ReplyDelete
  2. Some people are trying the netflix model for tamil cinema.. Tentkotta.com is a good example, its $8/month movie streaming service for tamil movies. Currently its available in north america only but i think their long term vision would be to conquer India

    ReplyDelete
  3. நெட்ளிக்ஸ் போல நம் நாட்டில் பிக்ஃப்ளிக்ஸ், டென்ட்கொட்டா, ஹீரோ டாக்கீஸ் போன்றவை இருக்கின்றன. கூடவே திருட்டுவிசிடி டாட் காம் போன்ற தளங்கள் இருக்கின்றவே! அவற்றில் வீடியோ தரம் குறைவு என்றாலும் நம் மக்கள் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இதுபோக பெரும்பாலான படங்கள் சில மாதங்களிலேயே யூ-டியூபிலேயே வந்துவிடுகின்றன. எனக்குத் தெரிந்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படம் வெளியான ஒரே வாரத்தில் யூ-டியூபில் வந்தது. யூ-டியூபின் போட்டியை காசு கொடுத்துப் பார்க்கும் தளங்கள் தாக்குப் பிடிக்க முடியாது.

    பார்ன்ஸ் அன்ட் நோபிளின் நூக் ரீடரில் கொள்ளளவு அதிகம், இ-பப் கோப்புகளை நேரடியாகப் படிக்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
  4. காபி ரைட் என்பது வார்த்தையாகக் கூட இல்லாத நம் நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் படங்கள் தருவதற்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்...

    ReplyDelete
  5. Thanks Badri for introducing two interesting books.

    ReplyDelete
  6. //// மாதம்
    குறிப்பிட்ட தொகையைச்
    செலுத்திவிட்டால் போதும்.
    வேண்டிய டிவிடிக்களை நீங்கள்
    எடுத்துக்கொள்ளலாம். ஆனால்
    ஒரே நேரத்தில் அல்ல.
    இரண்டு அல்லது நான்கு
    டிவிடிக்களை எடுத்து,
    பார்த்துவிட்டு, திரும்ப
    அனுப்பினால் அடுத்து உங்கள்
    தேர்வு உங்கள்
    வீட்டுக்கு வந்துவிடும். நீங்கள்
    பார்த்துவிட்டு அனுப்ப அனுப்ப,
    உங்கள் வீட்டுக்கு அடுத்த
    டிவிடிக்கள்
    வந்துகொண்டே இருக்கும்.////

    same approach being followed by JustBooks CLC to provide books on rental

    - அலெக்ஸ் பாண்டியன்

    ReplyDelete
  7. Hello Badri, can you please share the name of the book about Netflix?

    ReplyDelete