மிகச்சில நாடுகளிடம் மட்டுமே விண்வெளிக்குக் கலங்களை அல்லது செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு, இந்தியா. அவ்வளவுதான்.
அமெரிக்காவின் நாசா தவிர, அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் சிலவும் களத்தில் உள்ளன. போயிங், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள யூ.எல்.ஏ (யுனைடெட் லாஞ்ச் அல்லயன்ஸ்), எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ஜெஃப் பேசோஸின் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் ஆகியவை இவை. இதில் ஸ்பேஸ் எக்ஸ் மிகவும் முக்கியமானது.
விண்வெளிக்குப் பல காரணங்களுக்காக ராக்கெட்டுகளை ஏவலாம்.
- உயரம் அதிகமில்லாத சுற்றுகளுக்குச் செயற்கைக் கோள்களை அனுப்புதல்
- ஜியோஸ்டேஷனரி சுற்றுக்கு (புவியிணைச் சுற்று) செயற்கைக் கோள்களை அனுப்புதல்
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளை அனுப்பி, அங்கிருந்து பூமிக்கு மீண்டு வருதல்
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆட்களை அனுப்புதல், அவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருதல்
- நிலவுக்கு ஆளில்லாக் கலத்தை அனுப்புதல்
- நிலவுக்கு ஆட்களை அனுப்புதல்
- நிலவு தாண்டி செவ்வாய் கிரகத்துக்குக் கலத்தை அனுப்புதல்
- வால் நடசத்திரம் போன்றவற்றில் ஆளில்லாக் கலத்தை இறக்குதல்
- செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புதல், மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்குக் கொண்டுவருதல்
அமெரிக்காவின் நாசாதான் இதில் பெரும் கில்லாடியாக இருந்தது. நிலவுக்கு ஆட்களை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக மீட்டு வருவது, செயற்கைக் கோள்களைச் சர்வ சாதாரணமாக அனுப்புவது, சூரியக் குடும்பத்தின் கோள்களை எல்லாம் தெளிவாக ஆராய விண்கலங்களை அனுப்புவது, மற்றொரு கிரகத்தில் ஒரு வண்டியைக் கீழே இறக்கி அதை இயக்குவது என்று அவர்கள் ஏகப்பட்டதை சாதித்துவிட்டார்கள்.
ஆனால் சமீப காலங்களில் நிதிப் போதாமை காரணமாக அவர்கள் பல முயற்சிகளிலிருந்து பின்வாங்கியுள்ளனர். வணிகரீதியிலான செயற்கைக் கோள்களை நாசா இனியும் அனுப்பவதில்லை. அவர்களுடைய ராணுவ செயற்கைகோள்களைக்கூட அவர்கள் யு.எல்.ஏ மூலமாகத்தான் அனுப்புகிறார்கள். நாசாவுடனான ஒப்பந்தத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ்தான் சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆட்களைக் கொண்டுசெல்ல, அமெரிக்கா, ரஷ்யாவின் உதவியையே நாடுகிறது. இக்காரியங்களைச் செய்துவந்த நாசாவின் கலங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டுவிட்டன.
வணிகரீதியிலான செயற்கைக்கோள்களைப் பொருத்தமட்டில் ஸ்பேஸ் எக்ஸ் மிக வேகமாக முன்னணிக்கு வந்துள்ளது. குறைந்த செலவில் இவர்கள் ராக்கெட்டுகளை அனுப்புவதே காரணம். சீனாவும் இந்தியாவும் இந்தப் போட்டியில் தற்போது இறங்கியுள்ளன. இந்தியாவைவிட சீனா சற்றே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். ஸ்பேஸ் எக்ஸின் எலான் மஸ்க்குடைய வாழ்க்கை வரலாறு ஒன்றைச் சமீபத்தில் படித்து முடித்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தியா என்ற வார்த்தையே இல்லை! அவர்கள் தங்களுடைய போட்டியாளர்களாக சீனாவை மட்டுமே கருதுகிறார்கள்.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வியால் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களையே மேலே கொண்டுசெல்ல முடியும். இந்தியாவின் கிரையோஜெனிக் எஞ்சின் நுட்பம் மேலும் மேம்படவேண்டும். கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்திய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டால்தான் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியிணைச் சுற்றுக்கு அனுப்ப முடியும்.
இம்மாதம் 27-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், ஜிசாட் 6 செயற்கைக்கோளை புவியிணைச் சுற்றுக்கு அனுப்ப உள்ளது.
பல பில்லியன் டாலர் வருமானம் வரக்கூடிய இத்துறையில் இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸுடனும் சீனாவுடனும் போட்டியிட்டு முன்னிலைக்கு வரவேண்டுமானால் இதற்கான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு குறைந்தபட்சம் இரட்டிக்கவேண்டும். கூடவே, அமெரிக்காவைப் போல இந்தியத் தனியார் துறையின் பங்களிப்பையும் அதிகரிக்கச் செய்யவேண்டும்.
ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஒரு தனியார் நிறுவனமே, செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதைத் தன் முக்கிய நோக்கமாகக் கொண்டு அதை நோக்கித் தன் ஆராய்ச்சியைச் செலுத்துகிறது. செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி என்ன சாதிக்கப்போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கும்கூட அதில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அதை முயற்சி செய்யும்போது கிடைக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவையாக அமையும். இந்தத் தொழில்நுட்பங்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. யாரும் விற்க மாட்டார்கள். நாமேதான் இவற்றைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இஸ்ரோவின் ஆகஸ்ட் 27 ஜி.எஸ்.எல்.வி ஏவுதலுக்கு வாழ்த்துகள்!
Yes! This is use or not on today! , But the Technology and Learning will gained as mandatory one . There is no second opinion to double the allocation for இஸ்ரோ .
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி. நாசாவைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்கள் அடைய நினைக்கும் விஷயங்களுக்குப் போதுமான நிதி இல்லை. அதனால், அவர்கள் பில்லியனர்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமைப்பான Breakthrough Initiatives-ஐ சேர்ந்த பீட் வோர்டர் மற்றும் யூரி மில்னர் சில நாட்கள் முன்பு இந்தியா வந்திருந்தார்கள். (யூரி மில்னரைப் பற்றி ஒரு முழுபக்க செய்திக் குறிப்பை TOI வெயிட்டிருந்தது). இந்த அமைப்புடைய நோக்கம் பூமியைத் தவிர வேறு இடங்களில் உயிரினங்கள் எதுவும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பது. அவை மனிதர்களைப் போலவோ, அல்லது அவர்களைவிடவோ புத்திசாலியாக இருக்கலாம். அல்லது மிக அடிப்படை உயிரினங்களான bacteriaக்களாக இருக்கலாம்.
ReplyDeleteநான் இங்கே சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். இன்றைக்கு பல கோள்கள் அனுப்பப்படுகின்றன. அவை அங்கிருந்து பல dataக்களை நமக்கு அனுப்புகின்றன. ஆனால், அவற்றை யார் உட்கார்ந்து பகுத்தாய்வது. அத்தனை நபர்கள் உலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாசாவின் டேட்டா அவர்களுடைய தளத்தில் கிடைக்கும் (உதா. NASA SDO). இவற்றை எந்நாட்டவரும் பகுந்தாய்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால், இந்தியா தன்னுடைய தகவல்களை வெளி உலகிற்கு அளிக்க ஆர்வம்காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை முதலில் அவை ஒரு இந்தியனுக்கு பயன்பட வேண்டும் என்பதே. சமீபத்தில் கூட செவ்வாய் கிரக டேட்டாக்களை பகுத்தாய்வு செய்ய ஆர்வம் கொண்டோரை விண்ணப்பிக்கக் கேட்டிருக்கிறது இஸ்ரோ. இந்தத் தகவல்கள் பகுப்பாயப்படவில்லை என்றால், இத்தனை முயற்சி செய்து கோள்களை ஏவி எந்தப் பிரயோஜனமும் இல்லை. நல்ல desktop wallpaperகள் கிடைக்கலாம். பீட் வோர்டன் ஆற்றிய உரையில் ஒரு கேள்வி “ஒரு சாமானியனாக நான் என்ன செய்ய முடியும்?” அதற்கு அவர் சொன்ன பதில், இந்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்ய முயற்சி செய்வது மூலம் ஒரு சாதாரணர் உதவு செய்ய முடியும்.
மற்ற நாடுகள் இந்தியா மூலம் கோள்களை அனுப்ப நிச்சயமாக முன்வரும். காரணம் செலவு குறைவு. மேலும், செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தேவையில்லை, அதாவது ஒரு மாதிரியான ராக்கெட்களை ஏவிக் கொண்டிருப்பது. ஆனால், இதனால் இந்தியாவிற்கும் பெரிய லாபம் இல்லை. அவர்கள் செய்ய விரும்பாத வேலை ஒன்று இங்கே தள்ளிவிடப்படுகிறது.
இப்போதைக்கு இந்தியா இதைச் செய்யும். ஆனால் சில வருடங்களில் இஸ்ரோ உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கும் வரக்கூடும். வரும் என்றே சொல்வேன். இஸ்ரோவும் தனியாரிடம் முதிர்ந்த தொழில்நுட்பங்களைக் கொடுத்துவிட்டு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தும்.
"செவ்வாய் கிரக டேட்டாக்களை பகுத்தாய்வு செய்ய ஆர்வம் கொண்டோரை விண்ணப்பிக்கக் கேட்டிருக்கிறது இஸ்ரோ"?
DeleteI"m interested in doing that. Could you please give me Link for teh application please!
"அந்தப் புத்தகத்தில் இந்தியா என்ற வார்த்தையே இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்
ReplyDeleteஇதில் வியப்பு ஏதும் இல்லை. நாம் பல வருஷங்களாக் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.எல்வி மார்க் 3 ராக்கெட் நான்கு டன் செயற்கைக்கோளை GTO புவி இணை சுற்றுப்பாதைக்கு ஒரு தடவை அல்ல பல தடவை சுமந்து சென்று நிரூபித்த பிறகே நாம் ஓரளவு அந்தஸைப் பெற முடியும்.
அதிக எடை சுமந்து செல்வதில் நாம் சீன ராக்கெட்டுகளை நெருங்க முடியாது. இவ்வித ராக்கெட் விஷய்த்தில் நாம் சீனாவை விட மிக மிக மிகப் பின் தங்கியிருக்கிறோம்
நம்மை நாமே முதுகில் தட்டிக் கொள்வதில் நமக்கு நிகர் யாரும் இல்லை. நாமாக ஒரு மாய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்கிற ரீதியில் உள்ள பிஎஸ்.எல்வி ராக்கெட் மூலம் முடிந்த சாதனைகளை செய்துள்ளோம்.
ஆனால் ராக்கெட் துறையில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் என்பது உண்மை.நீங்கள் சொல்வது போல நிதி ஒதுக்கிட்டை இரட்டிக்கலாம்.
ராக்கெட்டைச் செலுத்த தனியார் துறையினர் அனுமதிக்கப்படவில்லையே தவிர ராக்கெட்டுகளை உருவாக்குவதில் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே பங்களித்து வருகின்றன.
நான் இதுவரை கூறியவை ராக்கெட் சமாச்சாரம் பற்றித் தான். ஏவுகணை சமாச்சாரம் வேறு. அதின் நாம் பின் தங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது.
சேட்டிலைட் என்னும் ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் பயன்பட்டு வரும் செயற்கைக்கோள் என்ற சொல் தவறு என்பது எனது கருத்து. ஆர்டிஃபீஷியல் பிளேனட் என்பதைத்தான் செயற்கைக்கோள் என முடியும். ஆர்டிஃபீஷியல் சேட்டிலைட் என்பதைத் தமிழில் செயற்கைத் துணைக்கோள் எனக் கூறுவதே அறிவியல் அடிப்படையில் துல்லியமாக இருக்கும்.
ReplyDeleteஇன்று இஸ்ரோ, உள்ளூர் நுட்பத்தில் தயாரான மீக்குளிர் எஞ்சினைப் பயன்படுத்தி ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை இயக்கி ஜிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கிரையோஜெனிக் எஞ்சின் சமாச்சாரம் நம்மை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அலைக்கழித்து வந்துள்ளது. பெரும் பாடுபட்டு நாம் உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சின் 2010 ஆம் ஆண்டில் செயல்படாமல் காலை வாரியது. பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் அந்த எஞ்சின் நன்கு செயல்பட்டு வெற்றியை தேடிக் கொடுத்தது. அது தற்செயலானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது நன்கு செயல்பட்டுள்ளது.
ReplyDeleteஆகவே அடிப்படையில் நமது இந்தத் தொழில் நுட்பம் நம்பகமானது என்றே தோன்றுகிறது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எனப்படும் நமது ராட்சத ராக்கெட்டுக்காக மேலும் திறன் கொண்ட கிரையோஜெனிக் உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் வைத்து சோதித்ததில் நன்கு செயல்பட்டுள்ளது. மார்க் 3 ராக்கெட் வெற்றி பெறுமேயானால் நாம் விண்வெளிக்கு இந்தியர் ஒருவரை அனுப்புவது பற்றி நம்பிக்கையுடன் வேலையை ஆரம்பிக்கலாம்..
.
/// மார்க் 3 ராக்கெட் வெற்றி பெறுமேயானால் நாம் விண்வெளிக்கு இந்தியர் ஒருவரை அனுப்புவது பற்றி நம்பிக்கையுடன் வேலையை ஆரம்பிக்கலாம்.. ///
Deleteஐயோ.. அந்த விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம்! ஆனானப்பட்ட நாசா ராக்கெட்டில் போன கல்பனா சாவ்லாவே இறந்து போனார்.. மனித உயிர் விலை மதிக்க முடியாதது.. அவர்கள் செய்யக்கூடிய ஆராய்ச்சி மனித உயிர்களைப் பணயம் வைக்கும் அளவுக்கு மதிப்பு (வொர்த்) இல்லை என்பதே இன் கருத்து. யாரும் வின்வெளிப் பயணம் செய்ய (இஸ்ரோவை நம்பி) முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறிதான்!
ஆளில்லாத ராக்கெட்டுகளை இஸ்ரோ எங்கு வேண்டுமானாலும், முடிந்தால் ப்ளூட்டோவுக்குக் கூட அனுப்பட்டும்--வரவேற்கிறேன்.
சரவணன்
ஒத்திசைவு ராமசாமியின் பின்னூட்டம் (ஏதோ காரணத்தால் இங்கு வரவில்லை), அவர் பதிவிலிருந்து: ஜொலிக்கும் இஸ்ரோ, ஜிஸேட்6 செயற்கைக்கோள், பத்ரி சேஷாத்ரி பதிவு: சில குறிப்புகள் https://othisaivu.wordpress.com/2015/08/27/post-544/
ReplyDelete*** test detest contest attest protest ***
ReplyDeleteஉங்களுடைய கட்டுரை முக்கியமானதொன்று; ஆனால்...
/*செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி என்ன சாதிக்கப்போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கும்கூட அதில் பெரிய ஆர்வம் இல்லை.*/
அய்யா, பத்ரி.
எனக்கு ஆர்வமிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தற்கால திராவிட இயக்கத்துப் பகுத்தறிவுப் பகலவத் தலைவர்களை - எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று - கூண்டோடு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நம் தமிழகம் நிச்சயம் மிக நேரடியாகவே பயன்பெறும்தானே?
ஒரு சரியான அளவிலான விண்கல் வீழ்ந்து தமிழகத்தை உய்விக்க முடியாவிட்டால், நாம் இம்மாதிரியெல்லாமும் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் அல்லவா? ;-)
ரா
பின்குறிப்பு: இரண்டு இரவுகளாகத் தூங்கவேயில்லை. இன்றாவது...
சோத்துக்கே வழி இல்ல, ராக்கெட் அனுப்ப பணம் இரட்டிப்பாக்கனுமா..
ReplyDeleteSpace Research and Competition. For those who are interested please visit the following websites.
ReplyDelete1. http://www.spaceflorida.gov/iss-research-competition
2. http://www.spaceflorida.gov/iss-research-competition/issrc-teams
3. http://settlement.arc.nasa.gov/Contest/
4. http://floridaspacegrant.org/programs/nasa-spaceport-student-competition/
5. http://www.nss.org/contests/
6. ftp://ftp.stsci.edu/pub/ExInEd/electronic_reports_folder/Space_Science.pdf
a. http://teachers.egfi-k12.org/category/lessons/
b. http://www.mathforamerica.org/teacher-resources/classroom/lessons
This comment has been removed by the author.
ReplyDeleteThanks for sharing this useful article mr badri..
ReplyDeleteJoshva