Saturday, April 07, 2018

எதற்கும் போராடுவோம், எதையும் எதிர்ப்போம்

தமிழர்களுக்குப் போராட்ட குணம் அதிகம். நியாயமான காரணங்களுக்காகப் போராடுவோம். அப்படிப்பட்ட காரணங்கள் கிடைக்காவிட்டால், புதிதாகக் காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, அவற்றுக்காகவும் போராடுவோம். அப்படிப் போராடும்போது, வெகு ஆவேசமாக, இந்த உலகமே நமக்கு எதிராகக் களம் அமைத்து நம்மை வஞ்சிப்பதாக நினைத்துக்கொண்டு, துக்கம் தொண்டையை அடைக்கப் போராடுவோம்.

உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்துத் தன் இறுதித் தீர்ப்பை அறிவித்தபின்பும், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்படாமல் இருப்பதற்கு எதிராகப் போராடுவது உண்மையிலேயே நியாயமான போராட்டம். அந்தப் போராட்டத்தையும் ஆளுக்கு ஒரு திசையில் இழுத்துச் செல்வது என்பது தமிழகத்தின் உள்ளார்ந்த சிக்கல் சார்ந்தது. ஆனால் குறைந்தபட்சம் இந்தப் போராட்டத்தின் நியாயத்தை யாரும் குறை சொல்ல முடியாது.

ஜல்லிக்கட்டு மிகப்பெரிய போராட்டமாக மாறியது. மாநிலமே கொந்தளித்தது. அதற்கான தேவை உண்மையிலேயே இல்லை என்றாலும், என்னவோ அது ஒன்றுதான் தமிழனின் தனிப்பெரும் அடையாளம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டு சினிமாக்காரர்கள் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை மெரீனாவில் கூடினார்கள். பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி, மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் பீட்டா என்ற விலங்குநல அமைப்பையும் குற்றம் சாட்டினார்கள். கடைசியில் நிலைமை கைமீறிப்போய் மாநில அரசு காவல்துறை உதவியுடன் போராடிய அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. மக்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள். மாடுகள் முட்டி ஆண்டுக்குச் சிலர் இறப்பது தொடர்கிறது.

நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் ஓஎன்ஜிசி அல்லது சில தனியார்கள் ஹைட்ரோகார்பன் வளம் இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் இறங்குவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காவிரிப் படுகை மண்டலத்தில் எண்ணெய் தேடுவதோ அல்லது தோண்டி எடுப்பதோ அப்பகுதியை சுடுகாடாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான விஷயம் இது. ஒரு பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் அங்கு எண்ணெய் அல்லது கனிம வளங்களைத் தோண்டுவது சரியல்ல. இந்தப் பிரச்னையும் தமிழர்களின் வாழ்வைப் பாழ் செய்ய மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது என்று மாற்றப்பட்டு, தமிழ்நாடு vs இந்தியா என்று ஆக்கப்படுகிறது. உண்மையில் இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே கனிம வளம் தோண்டுதல் தொடர்பான பிரச்னைகள் உள்ளூர் மக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் இடையே இருந்தபடித்தான் இருக்கிறது. ஆனால் என்னவோ தமிழ்நாட்டில் மட்டும் உலகமே திரண்டுவந்து தமிழக மக்களை வஞ்சிப்பதுபோன்ற பெருங்கதையாடல் புகுத்தப்படுகிறது.

இந்தப் பிரச்னை போராடுவதற்கு உகந்ததா என்றால் நிச்சயமாக என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்தப் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் திருகல்தான் இங்கு கண்டிக்கப்படவேண்டியது.

இதற்கு இணையான இன்னொரு லோக்கல் பிரச்னைதான் ஸ்டெர்லைட் செப்பாலை. தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே செப்பு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துவந்துள்ளது. தமிழகம் தொழில்வளர்ச்சியில் முன்னேறிய ஒரு மாநிலம். இங்கு ரசாயனம், மருந்து, பெயிண்ட், சிமெண்ட், சர்க்கரை, சாராயம், துணிமணி, இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள், கனரக டிராக்டர்கள் என்று எக்கச்சக்க உற்பத்தி ஆலைகள் உள்ளன. கரியைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தி ஆலைகள் பல உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளால் காற்று, நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவை நிச்சயம் பாதிப்படைந்துள்ளன. இதற்காகத்தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அரசு அமைப்பே உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி இந்தத் தொழிற்சாலைகள் மாசுகளை வெளியேற்றக்கூடாது என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இவர்களுடையது. தவறு செய்யும் ஆலைகளைத் தண்டிப்பது, கடுமையான அபராதங்களை விதிப்பது, மாற்றங்களைச் செய்யுமாறு வற்புறுத்துவது ஆகியவை இவர்களுடைய வேலை.

ஆனால் கடந்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் நீங்கள் வசித்துவந்தால், மாநிலத்தின் அனைத்து ஆலைகளையும்விட மிக மிக மோசமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் செப்பாலை மட்டும்தான் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

அணு மின் நிலையம் என்றாலே கூடங்குளம் மட்டும்தான் நமக்கு ஞாபகத்தில் வரும் என்ற அளவுக்கு அந்த அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை. அணு உலைகளே ஆபத்தானவை என்பதில் தொடங்கி, கூடங்குளம் ரஷ்ய உலைகள் தரமற்றவை என்று மாறி, உண்மையில் அங்கு அணு உலை இயங்குவதே இல்லை, அங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் உண்மையில் டீசலில் இயங்குவது என்றவரை பல கதைகள் சொல்லப்பட்டாயிற்று. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அப்பகுதி மீனவர்களும் செய்யும் போராட்டங்களுக்குப் பல அரசியல் கட்சிகள் துணையாக உள்ளனர். ஆனால் ஆளும் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. எனவே இப்போதைக்கு தமிழின் தனிப்பெரும் எதிரி கூடங்குளம்தான் என்ற நிலை இப்போதைக்கு இல்லை.

ஆனால் அந்தப் பட்டம் தேனி பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ கண்காணிப்பு மையத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி. உலகின் பல நாடுகளில் லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர் போன்ற மாபெரும் நுண்துகள் முடுக்கக் கட்டுமானங்களை அமைத்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்கிறார்கள். ஆளரவம் அற்ற தேனிக் காட்டுப்பகுதியில் நியூட்ரினோ என்ற மீச்சிறு அணு நுண்துகளை ஆராய விரும்பும் இந்திய அறிவியலாளர்களைக் கொலைகாரக் கொடூரர்களாகச் சித்திரிப்பதில் தமிழகம் வெற்றிகண்டுள்ளது. அந்த இடத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டப்போகிறார்கள் என்பதில் தொடங்கி, வெடிவைத்துத் தகர்ப்பார்கள் எனவே அருகில் உள்ள முல்லைப்பெரியார் அணை உடைந்து மக்களை வெள்ளத்தில் ஆழ்த்திவிடும் என்று நகர்ந்து, இது ஒரு ரகசிய அமெரிக்க-இந்திய அணு ஆயுத கூட்டுச் சதி என்று விரிவாகி, ஹாலிவுட் படங்களைத் தோற்கடிக்கக்கூடிய அளவில் சதிக் கோட்பாடுகள் பரப்பிவிடப்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்க்கும் ஒரு போராட்டமாக இது மாற்றிவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம், இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து இன்னமும் பெரிய சதித்திட்டமாகக் காண்பிப்பது. ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசல், கெயில் குழாய், கூடங்குளம், தேனி நியூட்ரினோ போன்ற நச்சுத் திட்டங்களையெல்லாம் மத்திய அரசு கொண்டுவந்து தமிழர்களைத் தாக்குகிறது. காவிரி நீர் தருவதில்லை. இனி தமிழன் தனி நாடு கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான். டோல்கேட்டை உடைப்போம். மத்திய அரசுக்கு வரி தருவதை நிறுத்துவோம். ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்க மாட்டோம். தினமும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கையில் எடுத்துப் போராடுவோம். அதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டோம். அடிப்படையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யமாட்டோம். ‘வார்டன்னா அடிப்போம்’. இந்த சீரிய முயற்சி மிகவும் வெற்றி அடைந்துள்ளது என்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.

-->
தமிழகம் ஒருவிதத்தில் தனித்துவமான மாநிலம்தான்.

17 comments:

  1. ஏற்புடைய வகையில் உங்கள் கட்டுரை அமைந்துள்ளது. இதை சொன்னா தமிழின துரோகி என்பார்கள்.இங்கு மிகவும் அச்சுறுத்தலான விஷயமாக தமிழ் உணர்வு மாறி வருகிறது

    ReplyDelete
  2. உங்களைப்போன்றார் உதவி செய்யலன்னாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete
  3. Well written. மிகத் தீவிரமான மனநோய் தமிழர்களைப் பீடித்துள்ளது. தமிழன் என்ற அரிய உயிரினத்தை உலகமே அழிக்கத் தாயாராவதுபோன்ற மனப் பிரமையில் தமிழன் உழல்கிறான்.

    ReplyDelete
  4. Reality explained very well!! வருடா வருடம் சிலர் இறப்பார்கள் என அறிந்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவோம்..வருடா வருடம் சிலர் இறக்கிறார்கள் என அறிந்தும் காவேரிக்கு அந்த அளவிற்க்கு உன்னதமாய் நடக்கவில்லை என்பதே உண்மை

    ReplyDelete
  5. தினமும் எங்குபார்த்தாலும் ஏதாவது போராட்டங்கள். தமிழனுக்கு பொழுது போகவில்லை. என்ன செய்வான்? ஒருவேளை இதுதான் - வைப்ரன்ட் ஜனநாயகமோ?

    ReplyDelete
  6. நியூட்ரினோ திட்ட்த்தை எதிர்ப்பதுப் போன்ற அசட்டுத்தனம் வேறு இருக்க முடியாது.நியூட்ரினோ என்பது தடுத்து நிறுத்த முடியாத நுண்ணிய துகள். கோடிக்கணக்கில் நம் உடலையும் பூமியையும் துளைத்துச் செல்கின்ற துகள். போகிற போக்கில் அது ஏற்படுத்திச் செல்லக்கூடிய விளைவுகளைப் பதிவு செய்வது தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம்.தேனியில் நாம் நியூட்ரினோவை உற்பத்தி செய்யப் போவதில்லை. எந்த விஷயமும் புரியாமல் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியற்றது. பொறுப்புள்ள கட்சிகள் விஷயம் தெரிந்தவரகளைக் கேட்டறிந்து ஒதுங்கி நிற்க வேண்டும்.

    ReplyDelete
  7. பொன்.முத்துக்குமார்Sat Apr 07, 11:10:00 PM GMT+5:30

    அது ஏன் இப்படிப்பட்ட போராட்டங்கள் யாவும் தென் தமிழகத்திலேயே குவிமையம் கொள்கின்றன ? (அல்லது ஆரம்பிக்கின்றன அல்லது அதிதீவிரமாக இருக்கின்றன ?) சதி என்று சொல்ல இயலவில்லையெனினும், I see a pattern here.

    ReplyDelete
  8. அய்யா பத்ரி, அங்கலாய்ப்புக்கு நன்றி.

    காவிரி நீர்ப்பங்கீடு குறித்து வாரியம் அமைக்க மத்திய அரசு முனைந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்று மாநிலங்கள் + ஒரு யூனியன் பிரதேசம் இதில் தொடர்புள்ளவை என்பதால், ஒருங்கிணைப்பு தொடர்பாக காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. (இதனை நான் நேரடியாக அறிவேன்)

    இந்த இசுடாலிர் போன்ற தூயதிராவிடர்கள் சும்மனாச்சிக்கும் கொடிதூக்கிக் குசு விட்டுக்கொண்டிருக்காமல் - தங்கள் தலைமைப் பண்பைக் காண்பிக்கும் வகையில் - ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தீராவிடக்குழுவை அனுப்பி செயல்பாடுகளை ஒருங்கிணைத்தால் பிரச்சினை சீக்கிரம் தீரும்! ஆனால் இதைச் செய்யமாட்டார்கள், ஏனெனில் தமிழ் மடையர்களுக்குப் போராளித்தனத்தில் கிடைக்கும் அற்ப குஷி என்பது முக்கியமானது.

    அதைவிட, கூறுகெட்ட திராவிடர்களுக்கு, இந்த கேனத்தனமான போராட்டங்களை முன்னெடுத்து தமிழகத்தை ஒழிப்பதில் இருக்கும் முனைப்பு, இன்னமும் மேலானது.

    தொடர்ந்து கூவுவோம். ஏனெனில் நாம் கூவான்கள்.

    நன்றி!

    ReplyDelete
  9. Ambi setha saathu.. edhukum porada varamatinga.. mandhiram matum vodhuvinga

    ReplyDelete
  10. This article is also kind of WhatsApp vathanthi template, rubbish

    ReplyDelete
  11. This is the kind of arguments the elites had when Tamilnadu was protesting against Hindi imposition. It took a few decades to understand why we had to fight against it. There is always a distance between Elite's view and a common sense.

    ReplyDelete
  12. 1. I miss Jaya, nobody can open up like this
    2. I miss congress who did everything thru blackmailing DMK and ADMK
    3. I miss neutral technical experts who command respect

    ReplyDelete
  13. Very nice article, seeing the news daily I thought that BJP is targeting Tamil Nadu. But your article makes lot of sense. Have to analyze each issue and act accordingly.

    Venu

    ReplyDelete
  14. We are really missing JJ and KK now. The so called fringe elements are hijacking the main purpose of all the issues. I am especially scarred of people like Thirumurugan Gandhi. His divisive words are not good for the Tamil society. Where were these thugs when KK and JJ were around? This Big leadership vacuum unfortunately creating a deep divide in a peace loving tamil society. BTW, BJP' Tamilisai and H Raja are not helping either.

    ReplyDelete
  15. Bjp TN leaderto be changed by a veteran leader.

    ReplyDelete