Friday, May 11, 2018

நான் கற்றுக்கொண்ட இந்தி

நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில், 1970களிலும் 1980களிலும். அந்தச் சிறு நகரத்தில் அப்போது பள்ளிக்கூடப் படிப்பு தவிர பிரத்யேகமான திறன்கள் என்றால் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் மட்டும்தான். மற்றபடி, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கராத்தே, குங்ஃபூ என்றெல்லாம் ஏதும் இருந்ததுபோல எனக்கு ஞாபகம் இல்லை. ஒருசிலர் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்க ஊரிலேயே ஆட்கள் யாரும் இருந்ததாக நினைவு இல்லை. படிப்பு வராத பெண்கள் தையல் கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான். கணினி வருவதற்கு முந்தைய காலகட்டம்.

இந்நிலையில் நான் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்று என் அம்மா முடிவெடுத்தார். ஏன் என்று எனக்குத் தெரியாது. எங்கள் தெருவில் என் வயதொத்தவர்கள் யாருமே இந்தி படிக்கவில்லை. சொல்லப்போனால், இந்தி என்ற மொழியைக் கற்றுக்கொள்ள ஃபார்மலாக ஒரு வழி இருக்கிறது என்றுகூட அக்கம்பக்கத்தில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

அங்கே இங்கே விசாரித்து, பணிக்கர் என்ற ஓர் ஆசிரியரைக் கண்டுபிடித்தார் என் அம்மா. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்திருந்தேன். ஆறாம் வகுப்புக்கு வேறொரு பள்ளிக்கு மாறவேண்டும். அந்த இடைப்பட்ட கோடை விடுமுறையின்போதுதான் இந்தி பண்டிட் பணிக்கரிடம் நான் அனுப்பப்பட்டேன்.

நாகப்பட்டினத்தில் ஏன் பணிக்கர் என்ற பெயர் கொண்ட ஒரு கேரளாக்காரர் இருக்கிறார் என்று என்னிடம் ஒரு கேள்வி இருந்தது. ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. பணிக்கர் பெருமாள் தெற்கு வீதியில் வசித்துவந்தார். நாங்கள் பெருமாள் வடக்கு மடவிளாகத்தில் குடியிருந்தோம். தூரம் அதிகமில்லை. ஆனால் தெற்கு வீதி வழியாக டவுன் பஸ் போகும். அந்தத் தெருவை நான் கவனமாகத் தாண்டிப் போகவேண்டுமே என்று அம்மாவுக்குக் கவலை இருந்தது. எனவே முதல் சில நாள்கள் அவரும் கூட வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

பணிக்கர் வீட்டில் மாணவர்கள் கூட்டத்தைப் பார்க்கவே முடியவில்லை. அதுவே என் அம்மாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அவருக்குச் சந்தேகம் ஏதும் வரவில்லை. நான் மட்டும்தான் அந்தக் குறிப்பிட்ட நேரத்தின்போது அவர் வீட்டுக்கு இந்தி கற்றுக்கொள்ளப் போனேன். அவர் தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி எனக்குப் பாடம் கற்றுத்தர முயற்சி செய்தார். ஆனால் பயனில்லை. அவர் என் அம்மாவை அழைத்து, இந்த வயதில் இந்தி கற்றுக்கொள்வது கடினம், எனவே இன்னும் சில ஆண்டுகள் கழித்து அழைத்துக்கொண்டுவாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

என் அம்மா விடவில்லை. தன் நெட்வொர்க் வழியாகத் தேடிப்பார்த்து ஒரு இந்தி வாத்தியாரைக் கண்டுபிடித்தார். அவர் பெயர் நடராஜன். அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். சின்னப் பையன்களுக்கு பிராதமிக், மத்யமா எல்லாம் அவர் சொல்லித்தர மாட்டார். அதற்கு வேறு ஓர் இந்தி டீச்சரை அவர் கை காட்டிவிட்டார்.

அவர் கணவரை இழந்த ஒரு பிராமண மாமி. பாக்கியம் என்று பெயர் என்று நினைக்கிறேன். சட்டையப்பர் மேலவீதியில் அவருடைய வீடு. அது பல குடித்தனங்கள் ஒன்றாக வசித்த ஒரு பெரும் வீடு. நடுவில் முற்றம், சுற்றி கூடம், தாழ்வாரம், மூலைக்கு ஒன்றாக அறைகள், கொல்லையில் கிணறு, வாயிலில் திண்ணை மாதிரியான பெரிய வீட்டில் அப்படியும் இப்படியும் அடைத்து அறைகளை ஏற்படுத்தி கிட்டத்தட்ட ஐந்தாறு குடும்பங்கள் வாடகைக்கு இருப்பார்கள். அதில் ஒரு கோடியில் இருந்த ஒற்றை அறையில் இந்த இந்தி டீச்சரம்மா இருந்தார்.

பணிக்கரால் முடியாதது பாக்கியத்தம்மாவால் முடிந்தது. சிறுவனான எனக்கு இந்தச் சூழல் பிடித்திருந்தது. பாக்கியத்தம்மா வீட்டில் சுற்றிலும் ஒரேயடியாக பக்கத்து போர்ஷன் குழந்தைகள் இருந்தனர். இரண்டு மூன்று பேராவது இந்தி கற்றுக்கொள்ள வருவார்கள் என்று ஞாபகம். மாலையே பள்ளிக்கூடம் விட்டதும் இந்தி கற்றுக்கொள்ள வந்துவிடுவேன். சூரிய வெளிச்சம் மறைவதற்குள்ளாகவே பாடங்கள் நடந்து முடிந்துவிடும்.

தென்னிந்திய இந்தி பிரசார சபை, பிராதமிக் தொடங்கி பிரவீன் வரையில் ஆறு தேர்வுகளை நடத்திவந்தது. அதில் நேரடியாகவே மத்யமா தேர்வை எழுதலாம் என்று இந்தி டீச்சர் சொன்னார். பிராதமிக் தேர்வுக்கான அடிப்படைகளைப் படித்துவிட்டு தேர்வு எதுவும் எழுதாமல் மத்யமா தேர்வுக்கான பயிற்சியில் இறங்கினேன். அப்போது பிராதமிக், மத்யமா இரண்டு தேர்வுகளைத்தான் நாகப்பட்டினத்தில் எழுதலாம். ராஷ்டிரபாஷா அல்லது அதற்குமேல் எழுதவேண்டும் என்றால் திருவாரூர் போகவேண்டும்.

அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிதான் தேர்வு மையம் என்று ஞாபகம். காலையும் மதியமுமாக இரண்டு தாள்கள் எழுதவேண்டும். எனவே மதிய உணவு வேறு எடுத்துச் செல்லவேண்டும். பாக்கியம் டீச்சர் தானே உணவு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டார். பையனை என் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள், நானே அழைத்துக்கொண்டுபோய் எழுதவைத்து, மீண்டும் அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். வெங்காயம் போட்ட ரவா உப்புமா (அப்போதுதான் முதல் முறையாக வெங்காயம் சாப்பிடுகிறேன்!) செய்து கையோடு கொண்டுவந்திருந்தார்.

இத்தனைக்கும் இந்தி கற்றுக்கொள்ள என்று அவருக்கு மாதம் பத்து ரூபாயோ என்னவோதான் கட்டணம் கொடுத்திருப்பேன் என்று நினைக்கிறேன். எதற்காக இவ்வளவு ஆர்வத்துடன் அவர் கற்றுக்கொடுத்தார் என்பது புரியவில்லை.

மத்யமா தேர்வானதும், நடராஜனிடம் கற்றுக்கொள்ளச் சென்றேன். அவர் ரவா உப்புமா எதுவும் செய்துகொடுக்கவில்லை. ஆனால் அவர் திருவாரூருக்குத் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்துக்கொண்டுவருவார். அடுத்தடுத்தத் தேர்வுகளெல்லாம் இரண்டு நாட்கள், நான்கு தாள்கள். அதில் தமிழும் ஒரு தாள். என் வயதுக்கு மீறிய விஷயங்களை அப்போது படிக்கவேண்டியிருந்தது. ஏழாவது படிக்கும்போது ராஷ்டிரபாஷா, பிரவேஷிகா, எட்டாவதில் விஷாரத் பூர்வாரத் மற்றும் உத்திராரத், ஒன்பதாவது படிக்கும்போது பிரவீன் பூர்வாரத், உத்திராரத் என்று பத்தாவது வருவதற்குள் இந்தியை முடித்து ஏறக்கட்டிவிட்டேன்.

இந்தியைச் சரளமாகப் படிக்கவும் எழுதவும் முடிந்தது. ஆனால் இந்தி உருப்படியாகப் பேச வரவில்லை. அதற்கான பயிற்சி முற்றிலும் வேறு. அப்போது இந்தியில் நான் படித்த பல நாவல்களையும் கவிதைகளையும் புரிந்துகொள்வதற்கான வயது முதிர்ச்சி எனக்கு இருக்கவில்லை. உண்மையில் இந்திக் கவிதைகள் எவையும் அப்போது என்னைக் கவரவே இல்லை. இப்போது எந்தக் கவிதையுமே கவர்வதில்லை என்பது வேறு விஷயம். பிரேம்சந்த் முதற்கொண்டு நான் படித்த பல நாவல்களும் மிகச் சுமாராகவே எனக்குத் தோன்றின. இந்தக் காலகட்டத்தில் நான் தமிழில் கிடைக்கக்கூடிய அனைத்து பல்ப் நாவல்களையும் படித்துக்கொண்டிருந்தேன். தீவிர இலக்கியம் பக்கம் இன்னமும் வரவில்லை. தமிழில் வெளியான அனைத்து வெகுஜனப் பத்திரிகைகளையும் - பெண்கள் இதழ்கள், பக்தி இதழ்கள் உட்பட - படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் புத்தகங்கள், கொத்துக் கொத்தாகப் படித்திருந்தேன். ஆங்கிலக் கதைப் புத்தகம் எதையும் படிக்க ஆரம்பித்திருக்கவில்லை. தமிழில் நான் படித்துக்கொண்டிருந்தவற்றுடன் ஒப்பிடும்போது இந்தி வெகுவாகப் போரடித்தது.

ஆனால் ஒரு நன்மை நிகழ்ந்தது. ஒவ்வொரு தேர்விலும் தமிழ் ஒரு தாள். அந்தப் பாடத்திட்டம் மிகவும் ஆழமானது. கல்லூரித் தரத்திலானது. இந்தி டீச்சர் நடராஜன் அதைச் சொல்லிக்கொடுக்க மாட்டார். அதைத் தனியாக, என் உயர்நிலைப் பள்ளிப் பின்னணியில் படிக்க முடியாது. என் தந்தை நான் படித்துக்கொண்டிருக்கும் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அதே பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மூத்த தமிழாசிரியரான சோமசுந்தரம் (பி.சோ) என்ற தமிழ்ப் பண்டிதரிடம் என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.

பி.சோ, பழைய மாதிரி தமிழ்ப் பண்டிதர். பி.ஏ, எம்.ஏ, பி.எட் படித்தவர் அல்லர். இப்போது அந்த முறை காலாவதி ஆக்கப்பட்டுவிட்டது. அவர் குருகுல முறைப்படி தமிழ் பயின்றவர். தமிழ் இலக்கியங்களை மனப்பாடமாக ஒப்புவிப்பார். சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை கையில் புத்தகம் இல்லாமல் பாடம் நடத்துவார், பொருள் கூறுவார், இலக்கிய நுணுக்கத்தை விளக்குவார். நல்ல ராகத்தில் பாடுவார். ஓதுவார் வழிவந்தவர் என்று நினைக்கிறேன். இப்போது சரியாக நினைவில் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் அவரிடம் தமிழ்ப் பாடம் பயில்வது என்று ஏற்பாடானது. அவர் கட்டணம் ஏதும் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

இப்போது தெளிவாக இல்லை. ஆனால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கொஞ்சமாக சங்க இலக்கியம், நிறைய சிற்றிலக்கியங்கள், கொஞ்சம் பக்தி இலக்கியம், பாரதி என்றெல்லாம் கலவையாகப் படித்த ஞாபகம். நான்தான் புத்தகத்தைக் கையில் வைத்திருப்பேன். பாடலை ஆரம்பித்துவிட்டால் போதும். அவர் தொடர்ந்து நடத்த ஆரம்பித்துவிடுவார். உரைநடை படிப்பதில் பெரிய சிக்கல் ஏதும் எனக்கு இருக்கவில்லை. இலக்கணத்தையும் செய்யுள்களையும் சோமசுந்தரனார் உதவியில் நன்றாகவே படித்தேன். தமிழ்மீதான மதிப்பு வெகுவாகக் கூடியது அப்போதுதான்.

பி.சோ பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவதும் அப்படியேதான். அப்போது எங்களுக்கு இரண்டு தமிழாசிரியர்கள் இருந்தனர். பி.சோ ஒருவர், கவிஞர் மீனவன் இன்னொருவர். மீனவன், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தமிழ் பி.ஏ படித்தவர். அவர் அப்போது ஒரு புத்தகத்தைச் சொந்தக் காசில் வெளியிட்டிருந்தார். அப்படி புத்தகம் வெளியிட்டவர் எங்கள் பள்ளியில் அவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். அப்புத்தகத்தில் அவர் சந்த நயத்துடன் எழுதிய பாடல்கள் அனைத்தும் இருந்தன. கடவுள் வணக்கம் என்று எல்லாக் கடவுள்களுக்கும் ஆளுக்கு ஒரு பாட்டு, பிறகு சிறுவர்களுக்கான அழ.வள்ளியப்பா பாணிப் பாடல்கள், பிறகு அறிவுரை சொல்லும் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள் என்று பலவும் இருந்ததாக ஞாபகம். அவருக்கு எதுகை மோனை அபாரமாக வரும். சட்டென்று ஒரு பாடலைப் பாடிவிடுவார். நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். கெட்ட வார்த்தைகளுக்கான தமிழ் வேர்ச்சொல் ஆராய்ச்சியும் தருவார். அவருக்கு சினிமாவுக்குப் பாட்டெழுதவேண்டும் என்று பெரும் விருப்பம் இருந்தது. அந்தக் கனவும் பிற்காலத்தில் நிறைவேறியது. ஏதோ ஒரு உருப்படாத, நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓடிய ஒரு படத்துக்குப் அவர் ஒரு பாடல் அல்லது சில பாடல்களை எழுதினார் என்று கேள்விப்பட்டேன்.

இந்தி பிரவீன் வரை படித்தது உருப்படியாகப் பயன்பட்டது கிரிக்கெட் வர்ணனை கேட்பதற்குத்தான். ஆல் இந்தியா ரேடியோ கமெண்டரி, ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது. அது எனக்கு மிக நன்றாகப் புரிய ஆரம்பித்தது. எண்கள் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் பல நுணுக்கங்களும் ஆங்கிலம், இந்தி இரண்டிலும் மிக நன்றாகப் புரிபட்டது. அத்துடன், தேவநாகரி எழுத்துகள் மிக நன்றாக மனத்தில் பதிந்துபோயின. இந்திப் படங்கள் பார்ப்பது, இந்தி செய்தித் தொலைக்காட்சி பார்ப்பது இரண்டிலும் சிக்கல் ஏதுமில்லை.


ஆனால் இந்திப் புத்தகங்களையும் செய்தித்தாளையும் படிக்கும் பழக்கம் ஏற்படவேயில்லை. சமீபத்தில் கிண்டிலில் சில புத்தகங்களை கிண்டில் அன்லிமிடெடில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவற்றுக்குள் நுழையவே முடியவில்லை. விட்டுவிட்டேன். இப்போது இந்தியில் எழுதவும் சிரமப்படவேண்டியுள்ளது. இப்போதைக்கு மீந்திருக்கும் ஒரே திறன் தேவநாகரி எழுத்துகளைப் படிப்பதும், யாராவது இந்தி பேசினால் பெரும்பாலும் புரிந்துகொள்வதும், கொஞ்சம் கொஞ்சம் இந்தியில் பேசி வழி கேட்பதும்தான்.

10 comments:

  1. Lively experience. Amazing, you still remember the Onion Upma :-). I don't have a colourful experience like yours, but studying in a CBSE school in Chennai, I had Hindi as third language till 8th Std - I can read and write, but can't understand or speak in Hindi. When traveling outside Tamil Nadu, I feel bad every time that I am missing a lot by not knowing Hindi.

    ReplyDelete
    Replies
    1. It's a misconception that has become the order of the day for many CBSE school students that Learning Hindi @CBSE school will help them to learn speak the language. To speak Hindi, all it requires to watch Hindi News, Serials more importantly Good Bollywood movies to learn the knack of managing conversing in Hindi.

      Delete
  2. The first appreciable thing is the frankness with which the experiences are recollected..very interesting...my experience with Hindi started with finding meaning of Popular Hindi Film songs and later stage, courses conducted by Min of Home affairs for Central Employees

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை, பத்ரி. என்னை 1980-களில் நான் வேலை செய்த வங்கி, புதுதில்லிக்கு இட மாற்றம் செய்திருக்காவிட்டால் எனக்கும் இந்தி தெரிந்திருக்காது. கொல்கத்தாவுக்கு மாற்றியிருந்தால், புரிகிற அளவாவது வங்காளி தெரிந்திருக்கும்!

    ReplyDelete
  4. Interesting account which reflects us that there were times when learning was so natural. LUCID WRITE UP.

    ReplyDelete
  5. I stayed in Perumal Vadakku madavalagam - Nagapatinam during the same time. Perumal koil, sattayappar koil, St. Antony's school, National high school, Nostalgic indeed. Thank you.

    ReplyDelete
  6. You are 100% correct sir. I studied Hindi and later Sanskrit in my school... I can read and write well but couldn't speak the language which is totally a different thing. Still my broken Hindi and reading devanagari script is very helpful while travelling in North India

    ReplyDelete
  7. நானும் உங்களைப் போலவே, 6ம் வகுப்பு பிராத்மிக் தொடங்கி, 10ம் வகுப்பு முடிவுக்குள் பிரவீண் படித்து முடித்தேன். அப்போதே, என்னுடைய இந்தி வாத்தியார், அவர் ஒரு குஜராத்தி, இந்தி தொலைக்காட்சி சானல்கள் ATN பாருப்பா. இந்தியை விட்டுவிடாதே என்றார். ஆனால், நான் அதற்கான முயற்சி செய்யாததால், மேலும், தமிழ் நாட்டில் படித்து, தமிழ் நாட்டில் வேலை செய்வதால், இந்தியை பயன்படுத்த, புதுப்பிக்கும் அவசியம் ஏற்படவில்லை. ஆனால், மறுபடி மறுபடி நான் சுயமுயற்சி செய்தாலும், பழைய நிலைக்கே மறுபடி வந்துவிடுகிறேன். இப்போதும், ஒரு Spoken Hindi வகுப்பு சென்று, புதிப்பிக்கலாம் என எண்ணி வருகிறேன்.

    ReplyDelete