Sunday, June 04, 2006

இலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை

சசி, தன் பதிவில் சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" என்று ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் பாகம் இங்கே.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் புலிகள்மீது கொண்டுவந்த தடை, அதற்குமுன் கனடா அரசு கொண்டுவந்த தடை, அது தொடர்பாக சர்வதேச அரங்கில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர தோல்வி ஆகியவற்றை முன்வைத்து சசி பேசுகிறார்.

இந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும். நிச்சயமாக இப்பொழுதிருக்கும் சூழல் இருந்திருக்காது. இன்று புலிகள் பெருத்த பின்னடைவில் இருக்கின்றனர். அடுத்து கடுமையான போர், அதில் ஏற்படும் வெற்றிதோல்வி, யார்பக்கம் அதிக இழப்பு ஆகியவை பொருத்தே மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்னையில் இந்த நிலை கிட்டத்தட்ட 10 வருடங்கள் பின்னடைவு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ரணிலின் வெற்றிவாய்ப்பை விரும்பிக் குலைத்தது புலிகள்தாம். ரணிலென்ன, மஹிந்தாவென்ன, இருவருமே சிங்கள வெறியர்கள்தாம் என்று பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றனர்.

எனது பதிவில் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் நான் எழுதியவை, அவற்றுக்கான ஈழத்தமிழர்களின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் படித்தால் நான் சொல்வது புரியவரும்.

ரணில் விக்ரமசிங்கே தோல்விக்கு புலிகள்தாம் முதல் + முழுக்காரணம். அதனை அவர்கள் விரும்பி வரவேற்றதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷே குடியரசுத் தலைவராக வந்தால் அதனால் தங்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும் என்று நினத்ததே. என்ன பலன்? மஹிந்த ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்றவர்களின் கூட்டுடன் வந்ததாலும் அவருடைய சொந்தக் கொள்கையே unitary state என்பதை நோக்கி இருப்பதாலும் அவரால் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாது. புலிகளின் பல விருப்பங்களை நிறைவு செய்யமுடியாது. இதனால் மஹிந்தவைக் காரணம்காட்டி புலிகள் போரில் ஈடுபடலாம். இலங்கை அரசின் போக்குதான் தங்களை இந்த நிலைக்கு இழுத்துவந்துவிட்டது என்று பழியை அவர்கள்மீது போடலாம். நார்வே புலிகளின் நிலையை ஏற்றுக்கொண்டு புலிகளுக்கு அனுசரணையான போக்கை எடுக்க ஐரோப்பிய யூனியனை வற்புறுத்தலாம். ஏராளமான அகதிகள் புலம்பெயர்வதைக் காரணம் காட்டி உலக நாடுகளின் ஆதரவை அல்லது குறைந்த பட்சம் அவர்கள் புலிகளை எதிர்க்காத நிலையைப் பெறலாம்.

ஆனால் இந்தக் கணக்குகள் பல இடங்களில் தவறிவிட்டன. கதிர்காமர் இல்லாத நிலையிலும் SLFP-யின் உட்கட்சிப் பூசல்களுக்கிடையேயும் இலங்கை அரசின் ராஜதந்திரிகள், Human Rights Watch போன்ற சில குழுக்களின் "உதவியோடு" கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகளின் ரகசிய அடிப்படைக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். இப்பொழுது இலங்கையில் நடக்கும் low intensity conflict-இல் இரண்டு பக்கங்களுமே தவறிழைப்பதாக நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் நினைக்கின்றன. எனவே புலிகள் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தமிழகத்துக்கு கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 3,000 அகதிகள் வந்துள்ளனர். வந்துள்ள பலரும் புலிகள்தாம் தங்களைத் தமிழகத்துக்குப் போகுமாறு சொன்னதாகச் சொல்கின்றனர். [உடனே என்னைத் தமிழ் எதிரியாகச் சித்திரிக்கவேண்டாம். நான் கலந்துகொண்ட சில பேச்சுகளில் ஈழத்தமிழ் அகதிகளிடையே உழைக்கும் சில தொண்டு அமைப்புகளின் தன்னார்வலர்கள் சொன்ன செய்தி இது.] ஆனால் இந்த அகதிகள் தமிழகத்துக்கு வந்தது இங்குள்ள அரசியல் நிலைமையை எந்த அளவும் மாற்றவில்லை. தொடர்ந்து இந்திய அரசு புலிகளைத் தடைசெய்த வண்ணம் உள்ளது. தமிழக ஆட்சிமாற்றம் எந்த விதத்திலும் புலிகளுக்கு ஆதரவானதாக இல்லை. இன்னமும் சொல்லப்போனால் கேலிக்கூத்தாக வைகோ தன் புலிகள் ஆதரவை வைத்து தயாநிதி மாறனை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் என்று திமுக எம்.பிக்கள் பிரச்னை எழுப்பி அதன்மூலம் வைகோ, விடுதலைப் புலிகள் இருவருக்கும் பழி தேடித்தரப் பார்க்கிறார்கள்.

இலங்கைப் பிரச்னையில் விடுதலைப் புலிகள் கடந்த வருடம் எடுத்த நிலைப்பாடு தவறானதாகவே இதுவரை சென்றுள்ளது. இன்று விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழர்களின் நியாயமான பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தத் தவறான முடிவுகள் அனைத்தும் நேரடியாக ஈழத்தமிழர்களை பாதிக்கிறது.

[பி.கு: நான் கடைசியாகச் சென்றிருந்த ஒரு பேச்சு: Geneva Peace Talks: Political and Peace Developments in Sri Lanka"- தரிணி ராஜசிங்கம், 11 ஏப்ரல் 2006. அந்தப் பேச்சின்போது நான் எடுத்துவைத்த குறிப்புகளைக் கொண்டு பதிவெழுத நினைத்து, பின்னர் ஒட்டுமொத்தமாக விட்டுத்தள்ளிவிட்டேன். இந்தப் பேச்சின்போதுதான் தமிழகத்தில் உள்ள சில தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் அகதிகள் பற்றி சொல்வதைக் கேட்டேன்.]

Friday, June 02, 2006

ரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்

நான் எழுதிய இந்தக் கட்டுரையை முன்னதாகப் படித்துவிடவும். கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

இந்தக் கட்டுரை 10 நாள்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது. இன்று 'தி ஹிந்து'வில் வெளியான செய்தி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கும் என்று சொல்கிறது.

கோதுமை கொள்முதலில் ஏற்பட்ட பயங்கரமான வீழ்ச்சியினால் அரசு வேறு வழியின்றி மாநில அரசுகளுக்குத் தரும் கோதுமையின் விலையை ஏற்றவேண்டியுள்ளது. அத்துடன் மாநிலங்களுக்குக் கொடுக்கும் கோதுமையின் அளவையும் குறைக்கவேண்டியுள்ளது. அது போதாது என்று அரிசியின் விலையையும் ஏற்றப்போகிறார்கள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன நஷ்டம்? முதல்வர் கருணாநிதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அரிசி கிலோ ரூ. 2/-க்குக் கொடுக்கப்போகிறார். நாளை அவரது பிறந்த நாள் முதல்! அரிசி ரூ. 2 என்று வைத்து விற்றால் ரேஷன் கடைகளில் விற்பனை அதிகமாகும். இதனால் மட்டுமே மான்யத் தொகை அதிகமாகும் என்று நான் முன்னம் சொல்லியிருந்தேன். இப்பொழுது மத்திய அரசு விற்கும் அரிசியின் விலையை ஏற்றினால் தமிழகத்துக்கு ஆகும் மான்யச் செலவு நிச்சயமாக அதிகமாகும்.

கருணாநிதியால் மத்திய அரசை வற்புறுத்தி மாநில அரசுக்கு விற்கும் விலையைக் குறைக்க வைக்க முடியும் என்று சிலர் சொன்னார்கள். சிதம்பரம் "it is feasible" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் நாளை அரிசி விலையை சத்தமில்லாமல் ஏற்றப்போகிறார். அப்பொழுது தமிழக அரசால் புலம்ப மட்டும்தான் முடியும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் பட்ஜெட்டின்போதோ அல்லது Policy Note எழுதும்போதோ அரிசிக்கான மான்யம் என்று ரூ. 2,500 கோடி அல்லது அதற்கு அதிகமாக, செலவாகக் காட்டுவார்கள்.

இதிலிருந்து மீள ஒரே வழிதான் உள்ளது.

அரிசி ரூ. 2/- என்பதை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ. 10/- என்றும் வைக்க வேண்டும்.

அரிசி மான்யம் பற்றிய என் முந்தைய பதிவுகள்:

அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்
அரிசி மான்யம் redux
அரிசி மான்யம் (Rice subsidy)

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

முன்னெச்சரிக்கை: இந்தக் கட்டுரை 'சுதேசி செய்திகள்' என்ற பத்திரிகைக்காக (ஜூன் 2006) எழுதப்பட்டது. சுதேசி செய்திகள், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்) என்னும் இயக்கத்தால் நடத்தப்படுவது. இந்த அமைப்பு RSS இயக்கத்தின் குடைக்குள் வருவது.

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

கடந்த ஆறு வருடங்களில் நடக்காத ஒன்று இந்த வருடம் நடந்துள்ளது; மேலும் நடக்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து 3.5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. மேற்கொண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது.

திடீரென நம் நாடு குறைவான அளவு உணவை உற்பத்தி செய்கிறதா? ஏன் கோதுமையை வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்?

இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது, கோதுமை பயிரான அளவு கடந்த வருடத்தில் குறைந்துள்ளது என்பது. அதிக வெப்பத்தாலும் சரியான மழையின்மையாலும் ராபி பயிர் கிட்டத்தட்ட 10-15% குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இரண்டாவது மத்திய அரசின் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது. பொதுவாக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கடந்த வருடத்தில் கோதுமையை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அரசு விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தது. மத்திய அரசு கொள்முதல் விலையாக முதலில் நிர்ணயித்திருந்தது கிலோவுக்கு ரூ. 6.50. பின்னர் இந்த விலையை அதிகரித்து கிலோவுக்கு ரூ. 7.00 கொடுக்க முன்வந்தனர். விவசாயிகளுக்கோ வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ. 8.70 முதல் ரூ. 10.00-ம் அதற்குமேலும் கிடைத்தது. கார்கில், ஐ.டி.சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய விலை கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியுள்ளனர். ஒருவிதத்தில் இதனால் விவசாயிகளுக்கு லாபம் என்றாலும்கூட இந்தக் காரணத்தால் அரசு எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்யமுடியவில்லை.

ஜனவரி 2002-ல் மத்திய அரசின் கையில் இருந்த கோதுமையின் அளவு 324.15 லட்சம் டன் கோதுமை. இது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஜனவரி 2003-ல் 288.30 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2004-ல் 126.87 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2005-ல் 89.31 லட்சம் டன்னாகவும் இருந்து இப்பொழுது ஜனவரி 2006-ல் 62.00 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

எப்படி இந்த அளவுக்கு கையிருப்பு குறைவதற்கு நம் அரசு அனுமதித்தது? உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா? உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது? இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா? இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே? இப்படி நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.

மூன்றாவது - உணவு அமைச்சர் சரத் பவாரின் கூற்றுப்படி தென்னிந்தியாவில் கோதுமை முன்னில்லாத அளவுக்கு உட்கொள்ளப்படுகிறதாம். இப்பொழுது இறக்குமதி செய்யப்படும் கோதுமை முழுவதும் தென்னிந்தியாவுக்காகத்தான் என்கிறார் உணவு அமைச்சர். அத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை நேரடியாக தென்னிந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் கொள்முதல் விலை குறைகிறது என்றும் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக கோதுமையைக் கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு - அதாவது நூறு கிலோவுக்கு - ஆகும் செலவு ரூ. 997. ஆனால் வட இந்தியாவிலிருந்து கோதுமையை தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அதற்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,100க்கும் மேல் ஆகலாமாம். ஆக இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு சற்று அதிகம் பணம் கிடைப்பதைவிட ஆஸ்திரேலியாவுக்குப் பணம் போனால் போகட்டும் என்கிறார் நம் உணவு அமைச்சர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

இந்திய விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். குவிண்டாலுக்கு ரூ. 700 கொடுத்து வட இந்தியாவில் வாங்கும் கோதுமையை தென்னிந்தியாவுக்கு அனுப்ப ரூ. 400க்கும் மேலாகவா ஆகிறது? மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன? தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா? உண்மையில் என்ன நடக்கிறது?

மற்றொருபக்கம் மத்திய அரசின் அரிசி கொள்முதல் அதிகமாகியுள்ளதாக பிசினஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

Conspiracy theory என்று சொல்வார்கள். சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லலாமா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம். இவை தேவைக்கும் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கின்றன. சொல்லப்போனால் அமெரிக்கா தனது விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்கச் சொல்லி - அதாவது பயிரிடும் பரப்பளவைக் குறைப்பது, உற்பத்தி செய்த தானியங்களை அழிப்பது ஆகியவற்றின்மூலம் - அவ்வாறு குறைப்பதற்காக இவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது. ஏனெனில் இவர்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்வது அனைத்தும் பொதுச்சந்தைக்கு வந்தால் அதனால் உணவுப்பொருள் விலை வெகுவாகக் குறையும். இது அந்த நாட்டின் சிறு விவசாயிகளை ஒரேயடியாக அழித்துவிடும்.

சரி, அதையும் மீறி உருவாக்கிய மலைபோன்ற தானியங்களை என்ன செய்வது? எந்த விலை கிடைத்தாலும் அந்த விலையை வாங்கிக்கொண்டு உணவுப்பொருளை வேறு நாடுகளுக்கு விற்றுவிடவேண்டியதுதான்!

பின் என்ன ஆகும்? முதலில் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று இந்தியா வெளிநாட்டு உணவுப்பொருளை வாங்கும். இதே நேரம் சரியான விலை கிடைக்காமல் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்; சிறிதுசிறிதாக விவசாயத்தை விட்டு வெளியேறி பிற வேலைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்தியா பெருமளவுக்கு அல்லது முழுதாக வெளிநாட்டில் விளையும் உணவுப்பொருளை நம்பி வாழவேண்டி இருக்கும். அப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோதுமை விலையை அதிகரித்துக்கொண்டேபோனால் உயிர்வாழ்வதற்காக என்ன விலை கொடுத்து தானியங்களை வாங்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும். இப்பொழுது பெட்ரோலியத்துக்கு முழுவதுமாக வெளிநாட்டை நம்பியிருப்பதுபோல நாளை கோதுமைக்கும் வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டியிருக்கலாம்.

இதை மனத்தில்கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோவதும் மற்றொரு பக்கம் குறைந்த விலையில் கோதுமையை இந்திய அரசுக்கு விற்பனை செய்வதுமாக இருக்கலாம். இப்படியும்கூட ஒரு conspiracy theory இருக்கலாம்.

நமது கற்பனை பொய்யாக இருந்தால் நல்லது. உண்மையாக இருந்தால்?

வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது என்று பேசப்பட்டது. பின அரசு அவசர அவசரமாக எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கோதுமையில் இந்தியாவில் இல்லாத சில களைகளும் (weeds) பூச்சிகளும் (pests) உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பூச்சிகளும் களைகளும் இந்தியாவில் பரவினால் வரும் வருடங்களில் பயிராகும் கோதுமைக்குப் பெருமளவு பாதிக்கப்படும்!

இந்தப் பிரச்னையிலிருந்து மீள அரசு என்ன செய்யலாம்?

1. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை இந்தியாவில் கோதுமை, அரிசி போன்ற பொருள்களை வாங்குவதில் இருந்து முழுமையாகத் தடை செய்யலாம். இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம்.

2. வெளிநாட்டுக்குப் பணம் போவதற்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கே போய்ச்சேருமாறு அதிக விலை கொடுத்து அரசே அவர்களிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் கோதுமைக் கையிருப்பை அதிகமாக்கலாம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகமாகும், அவர்களது வாழ்வும் வளம்பெறும்.

3. நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழே இருப்பவர்கள்தவிர பிறருக்கான கோதுமை விற்பனை விலையை அதிகரிக்கலாம். இன்றைய தேதியில் உணவுப்பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இன்று நாம் போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிறவற்றுக்கும் செலவு செய்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மேலே போய்க்கொண்டே இருக்கிறது!

4. கோதுமை, அரிசி இரண்டின் கொள்முதலையும் பொருத்து மக்களை இரண்டு தானியங்களையும் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.

மொத்தத்தில் பிற நாட்டிலிருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்வதன்மூலம் நம் நாடு அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் உடனடியாகச் செய்யவேண்டும். இப்பொழுது உள்ளே வந்திருக்கும் 3.5 லட்சம் டன் கோதுமைக்கு மேலாக 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யாமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்.

தடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும். அதுவும் staple food என்று சொல்லப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் இறக்குமதி செய்வது நம்மை மொத்தமாக அழிவை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்

குமார், நாகப்பட்டினத்தில் நான் வசித்த அதே தெருவில் - பெருமாள் வடக்கு மடவிளாகம் - வசித்தவர். எங்களுக்கெல்லாம் பெரிய அண்ணா. இவர் தினமும் கையில் T-Square எடுத்துக்கொண்டு பாலிடெக்னிக் போகும்போது நான் மூன்றாவதோ என்னவோ படித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறார். நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பற்றி எழுதியிருக்கிறார்: ஒன்று | இரண்டு | மூன்று

Thursday, June 01, 2006

தமிழ் கட்டாயப்பாடம்

தமிழகக் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இந்த ஆண்டு முதல் ஆக்கப்படுகிறது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக, வரும் பத்து வருடங்களில் எல்லா வகுப்புகளுக்குமாக அமையும்.

இன்று பள்ளிக்கூடங்களில் தமிழ் படுமோசமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. வலைப்பதிவுகளை மேலோட்டமாக மேய்ந்தால் நான் சொல்வது தெரியவரும். பிழையின்றி நல்ல தமிழில், அதே சமயம் புரிந்துகொள்ளக்கூடியவகையில், எழுதுபவர்கள் மிகச்சிலரே. 'தமிழே என் உயிர்' என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.

பத்திரிக்கைகளில் நாம் காணும் பிழைகள் நம்மைக் கூசவைக்கின்றன. தேர்தல் அறிக்கைகள் முதற்கொண்டு தெரு போஸ்டர் வரை பிழையான தமிழ்தான்.

இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.

கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் தமிழை ஒருபொருட்டாக யாரும் மதிக்காத காரணம் தமிழ் மதிப்பெண்கள் தொழில் கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படாததுதான். அதற்காக உடனடியாக தமிழ் மதிப்பெண்களை நுழைவுத்தேர்வில் எப்படியாவது நுழைத்துவிடலாம் என்று சிலர் சொல்வதை நான் ஏற்கவில்லை.

தமிழ் அல்லது ஆங்கிலம் - எதுவாக இருந்தாலும் மொழியின் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உணர்வதில்லை. நம் சிந்தனைகளைச் சரியாக வெளிப்படுத்த மொழி ஆளுமை அவசியம் என்பதைப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளாமையே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். சிந்தித்து எழுதுவது என்பதே தேவையில்லாதது; படித்து மனப்பாடம் செய்து அதை மீண்டும் வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலையில் சிந்தனை எதற்கு, மொழி எதற்கு என்று மாணவர்களும் ஆசிரியர்களும் நினைக்கிறார்கள்.

இன்று எங்கள் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். எங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கற்பிக்க. எங்களது புத்தகங்களில் உள்ள பிழைகளை முற்றிலுமாகக் களைய நாங்கள் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன சில விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. 10வது, 12வது தமிழ்ப்பாடத் தேர்வில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளவேண்டாம், கருத்துப்பிழை இருந்தால்மட்டும் அதற்கு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற நிலையாம் இப்பொழுது. அப்படி இருந்தால் எப்படி ஒருவர் பிழையின்றி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்?

ஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா? அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்கான தமிழ், பிழையில்லாத தமிழ் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதை அரசாணைகளால் திணிக்க முடியாது. ஆனால் சரியான மொழி ஆளுமை இல்லாத மாணவர்களால் பிற்காலத்தில் உருப்படமுடியாது என்ற எண்ணத்தைப் புகட்டவேண்டும்.

தமிழைக் கட்டாயப்பாடமாக்குவது, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது போன்றவற்றை வெறும் அரசியல் பிரச்னைகளாக மட்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டின் மிக முக்கியமான அங்கங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதே சமயம் ஆங்கிலமோ, இந்தி முதற்கொண்ட பிற இந்திய மொழிகளோ எதுவாயினும் தேவைக்கேற்றவாறு அதனையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள மாணவர்கள் முற்பட வேண்டும்.