Thursday, September 06, 2007

மொழிபெயர்ப்புகள்

கில்லி வழியாக ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற பதிவைப் பார்க்க நேரிட்டது.

ஒரு பதிப்பாளராக மொழிபெயர்ப்பு பற்றி சில விஷயங்களை எழுத நினைத்திருந்தேன்.

இதுவரையில் மூன்று விதமான மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கிறோம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு நாவல்களை மொழிபெயர்க்க விரும்பி ஆரம்பித்த திட்டம் பாதியிலேயே அல்லாடுகிறது. நான்கு புத்தகங்கள் கொண்டுவந்திருப்போம். ஆனால் பல தொல்லைகள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்கள், எடிடிங்கில் உள்ளவர்களுக்கு மூல மொழி தெரியாதிருப்பதனால் ஏற்படும் குழப்பங்கள், மொழியாக்கப் புத்தகங்கள் வெளியிடுவது முதன்மை வேலை கிடையாது என்பதால் அது பின்னுக்குத் தள்ளப்படுதல் போன்றவற்றால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் பேசப்போவதில்லை.

-*-

ஆங்கிலத்திலிருந்து சில அ-புதினங்களைத் தமிழாக்கியுள்ளோம். ஆனால் இவை எதிலும் இதுவரையில் மனத்திருப்தி ஏற்பட்டதில்லை. படிக்கும்போது சரளமாக தமிழில் படிக்கும் ஓர் எண்ணத்தை இவை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அ-புதினங்கள் என்பதால் நிறைய சுதந்தரம் உண்டு, பத்திகளை மாற்றி எழுதுவதில். இனி வரும் நாள்களில் சில முக்கியமான ஆங்கில அ-புதினங்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். ஆங்கிலப் புதினங்களை இப்பொழுதைக்குத் தொட மனம் அஞ்சுகிறது. அதற்குத் தேவையான திறமை, உழைப்பு, எடிடிங் நேர்த்தி ஆகியவற்றைப் பெற இன்னமும் காலம் பிடிக்கும்.

ஆனால் தமிழ் -> ஆங்கிலம் மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். Indian Writing என்ற பதிப்பில் இதுவரை 12 புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றில் 11 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. மொழிமாற்றத்தில் பல இடங்கள் இன்னமும் உறுத்தலாகவே உள்ளன.

ஆங்கில மொழிமாற்றத்தில் சில கலாசாரம் சார்ந்த தமிழ் சொற்களை அப்படியே விடுவதா (உறவு முறைப் பெயர்கள், வேறு சில), அல்லது அவற்றை மாற்றுவதா என்ற கேள்வி உள்ளது.

ஒரு பத்தியை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றுவதா, அல்லது கிட்டத்தட்ட அதே பொருள் பட, அதே கருத்து தொனிக்க, அதே நடை மாறாமல், ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் படிக்குமாறு ஆங்கில இலக்கண வழு ஏதும் இன்றி மாற்றுவதா? இரண்டாவதுதான் எனக்கு ஏற்புடையது. பலர் இதனை ஏற்காமல் இருக்கலாம்.

மூலப்பிரதி எழுத்தாளர், மொழிமாற்றுபவர், எடிட்டர் ஆகியோருக்கிடையேயான உறவு முக்கியம்.

-*-

இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் பல மொழிமாற்றங்களில் குறைகள் நிறைய உள்ளன. இதனை கறாரான விமரிசனம் மூலம் மட்டுமே மாற்ற இயலாது. நல்ல பல மொழிமாற்றங்களைக் கொண்டுவந்து தருவதன்மூலம் மட்டுமே இதனைச் செய்யமுடியும்.

"இதுதான் சிறந்த மொழிமாற்றம். இதனைப் படித்தால், கிட்டத்தட்ட மூலப்பிரதியைப் படிக்கும் அனுபவம் கிடைக்கும். ஆனால் அது மோசமான மொழிமாற்றம். அதனைப் படிப்பதற்கு பதில் வேறு எதையாவது செய்யலாம்" என்று உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினால் படிப்பவர் அதனைப் புரிந்துகொண்டு நல்ல மொழிமாற்றங்களை ஆதரிப்பார். எல்லாமே குறை, எல்லாமே குற்றம் என்றால் மட்டும் போதாது.

அடுத்து மொழிமாற்றுவோர் என்ற இனம்... அழியும் நிலையில் உள்ளது. மொழிமாற்றுவோர் இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை பெற்றிருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் அடிப்படை இலக்கணத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் நிறையப் படிக்கவேண்டும். இலக்கு மொழியில் தொடர்ச்சியாக எழுதவேண்டும். இவை இல்லாவிட்டால் மொழியாக்கம் நன்றாக இருக்காது. அகராதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்பது சாத்தியமே இல்லாத விஷயம்.

இன்று பள்ளிகளில் கற்பிக்கும் தமிழ் மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை உரைநடைத் தமிழை ஒழுங்காகக் கற்பிப்பது இல்லை. தமிழ் உரைநடை இலக்கணத்தை ஒழுங்காகச் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஆங்கிலம் கற்பித்தல் அந்த அளவுக்கு மோசமாக இல்லை. பல பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லாத காரணத்தால் இருமொழி அறிவுடையோர் (bilinguals) காணக் கிடைப்பதில்லை. (தமிழ் vs ஆங்கில வலைப்பதிவுகளைப் பார்த்தாலே தெரியும் - தமிழ் வலைப்பதிவுகளில் எவ்வளவு மோசமாகத் தமிழ் எழுதப்படுகிறது என்று.)

கல்லூரியில் BA/MA தமிழ் இலக்கியம் படிப்போருக்கு ஆங்கில அறிவு கிடையாது. BA/MA ஆங்கில இலக்கியம் படிப்போர் தமிழைக் கண்ணாலேயே காண்பது கிடையாது. ஃபார்மல் பட்டப்படிப்பு இல்லாமல், வீட்டிலேயே உட்கார்ந்து தானாகவே படித்து இரண்டு மொழிகளையும் நன்கு புரிந்துகொண்டு மொழிமாற்றம் செய்பவர்கள் அபூர்வமானவர்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் பல இருந்தாலும், நல்ல மொழிமாற்றத்தை நோக்கி நாம் செல்லவேண்டும். இன்று ஆங்கிலம் -> தமிழ் மொழிமாற்றம் மூலமாகத்தான் அறிவு சார்ந்த நூல்கள் பலவும் தமிழ் மக்களுக்கு வந்துசேரவேண்டிய நிலை உள்ளது.

Wednesday, September 05, 2007

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்


நேற்று ரஷ்ய கலாசார மையத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர்கள் அரசியல் பின்னணி இல்லாதவர்கள். மூவர் இந்திய அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்: பிளேசிட் ரோட்ரிகே, பாலசுப்ரமணியன், எல்.வி.கிருஷ்ணன். நான்காமவர் அறிவியல் கட்டுரைகள் எழுதும் இதழியலாளர் ராமதுரை.

கடைசியில் மக்கள் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு இந்த நால்வரும் கொடுத்த பதில்களையும் சேர்த்தே ஒலிப்பதிவாகத் தொகுத்துள்ளேன்.

கலந்துரையாடல்

கூட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் 'கூட்டத்துக்குச் சேர்க்கப்பட்ட ஆள்கள்' - வண்டியில் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட அப்பாவிகள். கொஞ்சம் பேர் கார்த்தி சிதம்பரத்துக்காக முன் வரிசையில் வந்து அமர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள். எனக்குப் பின்வரிசையில் ஏதோ கல்லூரியிலிருந்து வந்திருந்த 15-20 மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது ஆசிரியர் இந்த விவகாரம் பற்றி கேள்விகள் கேட்பார் என்று தோன்றியது. விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள வந்திருந்த பொதுமக்கள் சுமார் 70 பேர் இருந்திருப்பார்கள். மிச்சம் பத்திரிகையாளர்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செல்கிறது மேற்கண்ட இந்த ஒலிப்பதிவு.

இன்று இடதுசாரிச் சிந்தனையாளர் ஒருவரின் (Dr. T.Jayaraman, BARC) பேச்சு LLB கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. அதிலும் ஆஜர் ஆகி, பேச்சை, கேள்வி-பதில்களை ஒலிப்பதிவு செய்வேன்.

Tuesday, September 04, 2007

சுயநல மரபணு

ரிச்சர்ட் டாக்கின்ஸ் 1976-ல் வெளியிட்ட புத்தகம் The Selfish Gene - சுயநலம் கொண்ட மரபணு, நான் சமீபத்தில் படித்த புத்தகம்.

பரிணாம வளர்ச்சிக் கொள்கையை சார்ல்ஸ் டார்வின், வாலேஸ் ஆகியோர் வெளியிட்டபின்பு, உயிரிகளை ஆராய்ந்து அவை எப்படித் தோன்றியிருக்கும், எப்படி ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்திருக்கக்கூடும் ஆகியவை பற்றி நன்கு தெளிவான சிந்தனைகள் இன்று அறிஞர்களிடையே நிலவுகிறது. இந்தச் சிந்தனைகள் மதங்களின் அடிப்படையை ஆட்டிப்படைக்கின்றன.

உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றின? உயிர்களின் உச்சமான மனிதன் எப்படித் தோன்றினான்? இந்த மனிதனை உருவாக்கிய 'கடவுள்' இந்த மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்கிறான்? இந்த கேள்விகளுக்கு ஆதிகாலம் தொட்டே மனிதர்கள் விடைகாண முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான விடை கடவுளின் இருப்பையே கேள்வி கேட்க வைத்துள்ளது.

[டாக்கின்ஸின் இந்தப் புத்தகம் கடவுளை நேரடியாக வம்புக்கு இழுக்கவில்லை. அவரது மற்றொரு புத்தகம் 'The God Delusion' அதனைச் செய்கிறது.]

பூமிப் பரப்பில் இருந்த வேதித் திரவத்தில் (primeval soup) திடீரென தன்னைத்தானே நகலாக்கும் ஒரு வேதிப்பொருள் உருவானது. அது தன்னைச் சுற்றி இருக்கும் வேதித் திரவத்திலிருந்து தன் நகல்களாகப் பலவற்றை உருவாக்கியது. நாளடைவில் இதேபோன்று தன்னைத்தானே நகலாக்கும் பல வேதிப்பொருள்கள் உருவாயின. இவை ஒன்றோடு ஒன்று போட்டி போட, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து ஒரு செல் உயிரினங்களாகவும், அங்கிருந்து பல செல் உயிரினங்களாக - தாவரங்களாக, விலங்குகளாக - மாற்றமடைந்து, இன்று நாம் உலகில் காணும் பல்வேறு உயிரினங்களும் தோன்றின என்பது தியரி.

பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது டார்வின் Natural Selection - இயற்கைத் தேர்வு என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஏகப்பட்ட உயிரினங்களில் பல முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. இடையிடையே பல புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. பல ஆரம்ப காலம் முதற்கொண்டு இன்றுவரை உயிர்வாழ்ந்து வருகின்றன. எந்தெந்த உயிரினம் வாழும், எது அழியும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? இயற்கை என்கிறார் டார்வின்.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உள்ளாகவே சில இயல்புகளை அதிகமாகக் கொண்ட தனி உயிர்கள் (individuals) உயிர்தப்ப நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த உயிர்கள் உருவாக்கும் குழந்தைகளே அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றன.

டாக்கின்ஸின் அடிப்படைக் கொள்கை இதுதான். ஓர் உயிர் - விலங்கோ, தாவரமோ - வெறும் கருவிதான். அந்த உயிர் பல மரபணுக்கள் (genes) இணைந்த டி.என்.ஏவால் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றும் தங்களது நகல்களை எப்படியாவது தோற்றுவித்து அவை இந்த உலகில் தொடர்வதை விரும்புகின்றன. தன்னை முன்னிறுத்துவது, பிறர் அழிந்தாலும் பரவாயில்லை, தான் நகலாக்கம் பெறவேண்டும் என்று அவை நினைக்கின்றன. ஆனால் அதே சமயம் தமக்கு அதனால் ஆதாயம் என்றால் அவை பிற மரபணுக்களுடன் ஒத்துழைக்கத் தயங்குவதில்லை. சில மரபணுக்களுடன் ஒத்துழைத்து அவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்குவதே ஓர் உடல். தாவர/விலங்கு உடலை டாக்கின்ஸ் survival machine என்கிறார். மரபணுக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்த இயந்திரங்களைத் தயாரிக்கின்றன.

ஆனால் ஒரு மரபணுவின் அடிப்படை நோக்கம் தான் மட்டும் எப்படியாவது காலம் காலமாகத் தொடரவேண்டும் என்பது மட்டும்தான். தொடர்வது என்றால் தன்னை அப்படியே நகலாக்கி அந்த நகலைப் பரப்புவது. பெரும்பாலான உயிர்களில், பால் இனப்பெருக்கம் வாயிலாக மரபணுக்கள் மாறி மாறிக் கூட்டுச்சேரும் நிலை ஏற்படுகிறது.

மரபணுக்கள் சுயநலத்தோடு செயல்படுகின்றன என்றால் அவை சிந்தித்து அவ்வாறு செயலாற்றுகின்றன என்று பொருள் கிடையாது. அப்படியாக நடந்துகொள்வது அவற்றின் குணத்தில் எழுதப்பட்ட ஒன்று.

0

ஆராய்ச்சியாளர்களுக்கென எழுதப்பட்டதல்ல இந்தப் புத்தகம். பாபுலர் சயன்ஸ் என்னும் வகையைச் சார்ந்தது. ஆனாலும் படித்துப் புரிந்துகொள்ள நிறைய நேரம் தேவைப்படுகிறது.

டார்வினின் கொள்கை, கேம் தியரி எனப்படும் கணிதம் ஆகியவற்றைக் கொண்டு இன்று உலகின் நாம் காணும் பல புதிர்களை டாக்கின்ஸ் அழகாக விளக்குகிறார்.

படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டம் என்றாலும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது ஒன்று.

Saturday, September 01, 2007

அணு மின்சாரம் தேவையா?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடக்கும் விவாதத்தில் ஞாநி விகடன் இதழில் இரண்டாம் பாகமாக சிலவற்றை எழுதியுள்ளார். முதல் பாகத்தில் ஒப்பந்தம் பற்றி அவர் எழுதியிருந்ததை விமரிசித்து நான் ஏற்கெனவே எழுதியது இங்கே.

அணு மின்சாரம் தேவையா என்ற கேள்வி நியாயமானது. உலகில் அதிக அளவு (மெகாவாட் அளவில்) அணு மின்சாரம் தயாரிக்கும் நாடு அமெரிக்கா. தனது மொத்தத் தயாரிப்பில் அதிக விழுக்காடு அணு மின்சாரமாகத் தயாரிக்கும் நாடு ஃபிரான்ஸ். இரண்டு நாடுகளிலும் அணு மின்சாரம் தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

அணுப் பிளவு என்பதே அபயாகரமானது என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை. அணுக்கழிவுகளை எவ்வளவு கவனமாகக் கையாள்வது, எங்கு கொண்டுபோய் கொட்டுவது, கதிர்வீச்சு எந்த வகையில் மக்களை, பிற உயிர்களை, பயிர்களைப் பாதிக்காது இருக்கும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது அவசியம்.

இதற்கான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அணு விஞ்ஞானிகளிடமிருந்து வரவேண்டும்.

ஞாநி எழுப்பியிருக்கும் சில கேள்விகளை இங்கு எதிர்கொள்கிறேன்.

1. முறைசாரா மின்சக்தி - சூரிய ஒளி, காற்றாலை - போன்றவை இருக்க, அதுவும் செலவு குறைவாக இருக்க, ஏன் பணத்தை அணு மின்சாரத்திலே போடுகிறீர்கள்?

காற்றாலை மின்சாரம் தயாரித்தல் இன்று இந்தியாவில் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டு நடந்துவருகிறது. காற்றாலைகளை நிர்மாணிக்க இந்திய அரசு மான்யம் கொடுக்கிறது. ஆனாலும் ஒரு காற்றாலை டர்பைனிலிருந்து உருவாகும் மின்சாரம் அதிகபட்சம் 5 மெகாவாட்டைத்தான் நெருங்கமுடியும். பொதுவாக இவை 1.5 மெகாவாட் உற்பத்தி செய்யும் டர்பைன்களாக இருக்கும். பல டர்பைன்களைக் கொண்ட ஒரு மின் நிலையத்தில் 200-300 மெகாவாட் உற்பத்தி செய்தால் அதிகம். அதற்குத் தேவையான நிலப்பரப்பு மிக அதிகம். மேலும் நாள் முழுதும் ஆண்டு முழுதும் இந்த அளவு மின்சாரம் கட்டாயமாகக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. காற்று வீசுவதைப் பொறுத்து நாளுக்கு நாள் மின்சாரம் மாறுபடும்.

சூரிய ஒளி மின்சாரம் இன்னமும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. அதை உருவாக்க ஆகும் செலவு அதிகம். ஆனால் வீடுகள் ஒவ்வொன்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் முதலீடு செய்து தங்களுக்கான மின் செலவைக் குறைக்கலாம். இதுவரையில் உலகில் எங்குமே சூரிய ஒளியைப் பயன்படுத்தி பல நூறு மெகாவாட் அளவில் மின்சாரம் எடுக்கும் உற்பத்திச் சாலைகள் கிடையாது.

நீர் மின்சாரம் எடுக்க வேண்டுமானால் பெரிய அணைகளைக் கட்டவேண்டும். அணைகள் கட்டுவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இடம் பெயர வேண்டியிருக்கும். பெரிய அணை கட்டாமல் சில நூறு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பது சாத்தியமே இல்லை. தடுப்பணை சிலவற்றைக் கட்டுவதன்மூலம் சில பத்து மெகாவாட்கள் பெறுவதே கஷ்டம்.

இன்றைய நிலையில் அனல் மின்சாரம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் சில ஆயிரம் மெகாவாட் தயாரிக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் வேண்டிய அளவு தயாரிக்கக்கூடிய திறனுடன். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது அணு மின்சாரம் மட்டுமே.

அனல் மின்சாரம் தயாரிப்பதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருமளவு அனல் மின்சாரம் தயாரிப்பதால் வருபவையே. எங்கெல்லாம் ஃபாசில் எரிபொருள்களைப் பயன்படுத்தினாலும் அங்கு கார்பன் டயாக்ஸைட் வருவதைத் தடுக்கவே முடியாது.

* மின்சாரம் அதிக அளவு இல்லாவிட்டால் வளர்ச்சி கிடையாது.
* மின்சாரம் அதிக அளவு தயாரிக்கவேண்டும் என்றால் அது காற்றாலை, சூரிய ஒளியால் முடியாது.
* அனல், அணு மின்சாரம் இரண்டால் மட்டுமே முடியும். ஓரளவுக்கு, சில இடங்களில் மட்டும் நீர் மின்சாரத்தால் முடியும்.
* நீர் மின்சாரம் என்றால் அணை, அதனால் மக்கள் இடப்பெயர்வு இருக்கும். (நர்மதா அணை). அனல் மின்சாரம் என்றால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, கிரீன்ஹவுஸ் வாயுக்கள், ஓஸோன் லேயர் பாதிப்பு. அணு மின்சாரம் என்றால் கதிர்வீச்சு அபாயம், அணுக்கழிவை நீக்கும் அபாயம் ஆகியவை உண்டு.

இந்த நிலையில் நாம் எதையாவது செய்தாகவேண்டியுள்ளதே?

அணு மின்சாரத்தின் சில பயன்களைப் பார்ப்போம். இப்பொழுதைய தொழில்நுட்பத்தில் ஓர் அணு உலை 1000 மெகாவாட் மின்சாரத்தைக் கொடுக்கிறது. ஒரு சிறிய நிலப்பரப்பில் நான்கு அணு உலைகளை வைத்து எளிதாக 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அதே அளவு மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் கரியைக் கணக்கில் எடுத்தால் கரி அனல் மின்சார நிலையத்துக்கு மாபெரும் இடம் தேவைப்படும். (சாசன் - மத்தியப் பிரதேசம் - Ultra Mega Power Project.) அணு மின்சாரம் தயாரிப்பில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறாது.

அணு மின்சாரம் தயாரிப்பில் என்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

எதைச் செய்தாலும் பிரச்னைகள் சில இருக்கும் என்ற நிலையில் பிரச்னைகளைக் குறைத்து, பாதிப்புகளை வெகுவாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்றால் அணு மின்சாரம் மிக அவசியம். நமக்குத் தேவையான கரியும் பெட்ரோலியப் பொருள்களும் (நாஃப்தா) வேண்டிய அளவு கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை.

2. செலவு. அணு மின்சாரம் உருவாக்கத் தேவையான செலவு அதிகம்.

இன்றைய நிலையில் இது உண்மையே. ஆனால் சரியான தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிலிருந்து பெறுவதன்மூலம் அணு மின்சாரத்தின் யூனிட் செலவைக் குறைக்கமுடியும். அதே நேரம் பிற வழிகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் விலை அதிகமாகிக்கொண்டே வரும் - முக்கியமாக அனல் மின்சாரம்.

இதற்கான செலவை அரசு முற்றிலுமாகச் செய்யவேண்டியதில்லை. இன்று அணுத் தொழில்நுட்பத்தை அரசே கையகப்படுத்தி வைத்துள்ளது.

தனியாரைக் கொண்டுவருவதன்மூலம் அரசு செய்யும் செலவைக் குறைக்கலாம்.

Nuclear Power Corporation என்பது மத்திய அரசின் நிறுவனம். இதன்மூலமாக மத்திய அரசு சில அணு உலைகளை நிர்மாணிக்கலாம்.

அடுத்து டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி ஆகியவற்றை அணு மின்சாரத் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம்.

மூன்றாவதாக அமெரிக்க, ஃபிரான்ஸ் நிறுவனங்களை நேரடியாக இந்தியாவில் அணு மின்சாரம் தயாரிக்க அனுமதித்து சரியான (கவனிக்க: சரியான) Power Purchase ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். (உடனே என்ரான் என்று யாரும் சொல்லாதீர்கள். அந்தப் பிரச்னையே வேறு.)

நமது இறுதித் தேவை மின்சாரம். அதற்கு அரசே முதலீடு செய்யவேண்டும் என்பதில்லை.

3. இவ்வளவு பெரிய ஒப்பந்தம் போட்டாலும் அணு மின்சாரத்தின் அளவு 3%த்திலிருந்து 6%க்குப் போகும். இது தேவையா?

அடுத்த பத்தாண்டுகளிலேயே அணு மின்சாரத்தில் அளவு இதற்குமேலும் அதிகரிக்கலாம். ஆனால் அதற்குப் பலவிதங்களிலும் இடையூறுகள் இருக்கும் என்று அரசு அனுமாணிக்கிறது. ஆனால் மின்சாரம் என்று வரும்போது அடுத்த பத்தாண்டுகளை மட்டும் பார்த்தால் போதாது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்கவேண்டும்.

2020 - 6%
2030 - 10%
2040 - 15%
2050 - 25%
2060 - 35%

என்ற கணக்கில் செல்லவேண்டியிருக்கலாம். மூன்றிலிருந்து ஆறுக்குப் போகாமல் நாற்பதுக்கு வரமுடியாது. அடுத்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் அணு மின்சாரம் 25-40% இருக்கும் என்றே நினைக்கிறேன்.

4. ஞாநி சொல்கிறார்: "தொழில்நுட்பம், அணு உலைக்கான எரிபொருள், தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சுதந்திரம் இவற்றுக்காக அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் போட்டாக வேண்டியிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டும் நம்மிடமே உள்ளன. அமெரிக்காவிடம் கையேந்தத் தேவை இல்லை என்பதுதான் உண்மை."

இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. தன்னிடம் எரிபொருளும் தொழில்நுட்பமும் இருந்தும் அமெரிக்காவுடன் யாராவது ஒப்பந்தம் செய்வார்களா?

இந்தக் குழப்பத்துக்குக் காரணம் யுரேனியம் என்ற சொல் ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தப்படுவதுதான்.

(அ) யுரேனியம் தாது - யுரேனியம் டயாக்ஸைட் என்ற உருவத்தில் கிடைப்பது.
(ஆ) யுரேனியம் தனிமம் - மேற்கண்ட தாதுவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட யுரேனியம் தனிமம்
(இ) அணு உலையில் பயன்படுத்தக்கூடிய யுரேனியம் ஐசோடோப் - U 235 எனப்படுவது. இது ஒரு கிலோ யுரேனியம் தனிமத்தில் வெறும் 7 கிராம் மட்டுமே. மீதியெல்லாம் யுரேனியம் 238தான். இந்த யுரேனியம் 235ஐப் பிரித்தெடுக்கத்தான் செண்ட்ரிஃப்யூஜ் எனப்படும் கருவி தேவை. இந்தியாகூட இந்தக் கருவியை வெளிநாட்டு டிசைனிலிருந்து திருடியதாகச் சொல்லப்படுகிறது.

யுரேனியம் 235-ஐப் பிரித்தெடுப்பது அவ்வளவு எளிதான செயலல்ல.

உலகில் யுரேனிய தாதுவை அதிக அளவில் வெட்டியெடுக்கும் தலை பத்து நாடுகளில் இந்தியா காணவே காணோம்.

அடுத்து fast breeder reactor - வேக ஈனுலை. யுரேனியம் 238ஐப் போட்டு புளுட்டோனியம் 239ஐப் பெறும் விஷயம். இதில் இந்தியா ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதே தவிர இன்றுவரை தைரியமாக இந்த FBR-களை வைத்துக்கொண்டு இதோ 1000 மெகாவாட் மின்சாரம் என்று சொல்லத்தக்க வகையில் ஒன்றுமே நடைபெறவில்லை. அப்படி நடக்கிறது என்றால் அந்நிய நாட்டிடம் போய் 'எனக்கு ஒரு கிலோ யுரேனியம் தாங்க' என்று நாம் ஏன் நிற்கிறோம்?

அதேபோலத்தான் தோரியமும். தோரியத்தை வைத்து லட்சம் மெகாவாட் மின்சாரம் என்றெல்லாம் இன்று யாராவது சொன்னால் அதைவிடப் பெரிய ஜோக் ஏதும் கிடையாது. இந்த ஆராய்ச்சிகள் முடிவடையப் பல காலம் பிடிக்கும். அதற்கும் ஏகப்பட்ட பணம் தேவை. அந்தப் பணத்தையும் முதலிட அரசைத் தடுக்கும் பல கட்சிகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நமது FBR மற்றும் தோரிய ஆராய்ச்சிகள் இன்றுவரை உருப்படியாக மின்சாரத்தைத் தயாரிக்கும் எந்த உலையையும் நமக்குத் தரவில்லை என்பதை இந்திய அணு விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்வர்.

அதனால் இது நாளை நடக்கவே நடக்காது என்பதில்லை. நடந்தால் நமக்கு நல்லது.

-*-

முதலில் ஞாநி சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.

1. இந்தியா அணுசக்தியில் மின்சாரம் உருவாக்கவேண்டுமா, வேண்டாமா? வேண்டாம் என்றால் FBR, தோரியம், நம்மிடம் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறது என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள்.

என் பதில்: அணு மின்சாரத்தை விட்டால் வேறு கதியில்லை நமக்கு.

2. அணு மின்சாரம் தேவை என்றாகிவிட்டால், அதை நம்மாலேயே தயாரித்துக்கொள்ள முடியாதா?

என் பதில்: இன்றைய நிலையில் - முடியாது. நமக்கு எரிபொருளும் வேண்டும். தொழில்நுட்பமும் வேண்டும். முதலீடும் வேண்டும். நிறைய வெளியிலிருந்து வரவேண்டும்.

3. அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் தேவையா?

என் பதில்: இரண்டு வழிகள் உள்ளன.

(அ) இந்தியா அணுகுண்டு தயாரிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து, தன்னிடம் உள்ள குண்டுகளை எல்லாம் அழித்து, IAEA-வுடன் ஜப்பான், தென் கொரியா போன்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம். (பாகிஸ்தான், சீனா குண்டு வைத்திருக்குமே என்று கவலைப்படக்கூடாது.) அது நடந்தால் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தமெல்லாம் தேவையில்லை. NSG-யுடன் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு, அணு உலைகளை வைத்துக்கொண்டு மின்சாரம் மட்டும்தான் தயாரிப்போம் என்று நியாயமாக நடந்துகொள்ளலாம்.

(ஆ) ஆனால் நாம் ஜப்பான், தென்கொரியா போல நடந்துகொள்ள விரும்பவில்லை. அடிப்படையில் அணுகுண்டை வைத்திருக்க விரும்புகிறோம். சீனாவும் பாகிஸ்தானும் அணுகுண்டை வைத்துக்கொண்டு நமக்குத் தொல்லைதரும் என்று நம்புகிறோம். எனவே NPT-யில் கையெழுத்திட நாம் விரும்பவில்லை. அதே சமயம் நமக்கு யுரேனியம், தொழில்நுட்பம் ஆகியவை வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியமாகிறது.

இந்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் பார்வையில் பார்த்தோமானால் பலருக்கும் அமெரிக்காமீது கோபம்தான். இன்று தி ஹிந்துவில் வில்லியம் பாட்டர், ஜயந்த தர்மபாலா எழுதியுள்ள கட்டுரையைப் பாருங்கள்.

-*-

என் முடிவான கருத்து, இப்பொழுது போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் எந்தவகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிரானதல்ல என்பதே.