Thursday, September 06, 2007

மொழிபெயர்ப்புகள்

கில்லி வழியாக ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற பதிவைப் பார்க்க நேரிட்டது.

ஒரு பதிப்பாளராக மொழிபெயர்ப்பு பற்றி சில விஷயங்களை எழுத நினைத்திருந்தேன்.

இதுவரையில் மூன்று விதமான மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கிறோம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு நாவல்களை மொழிபெயர்க்க விரும்பி ஆரம்பித்த திட்டம் பாதியிலேயே அல்லாடுகிறது. நான்கு புத்தகங்கள் கொண்டுவந்திருப்போம். ஆனால் பல தொல்லைகள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்கள், எடிடிங்கில் உள்ளவர்களுக்கு மூல மொழி தெரியாதிருப்பதனால் ஏற்படும் குழப்பங்கள், மொழியாக்கப் புத்தகங்கள் வெளியிடுவது முதன்மை வேலை கிடையாது என்பதால் அது பின்னுக்குத் தள்ளப்படுதல் போன்றவற்றால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் பேசப்போவதில்லை.

-*-

ஆங்கிலத்திலிருந்து சில அ-புதினங்களைத் தமிழாக்கியுள்ளோம். ஆனால் இவை எதிலும் இதுவரையில் மனத்திருப்தி ஏற்பட்டதில்லை. படிக்கும்போது சரளமாக தமிழில் படிக்கும் ஓர் எண்ணத்தை இவை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அ-புதினங்கள் என்பதால் நிறைய சுதந்தரம் உண்டு, பத்திகளை மாற்றி எழுதுவதில். இனி வரும் நாள்களில் சில முக்கியமான ஆங்கில அ-புதினங்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். ஆங்கிலப் புதினங்களை இப்பொழுதைக்குத் தொட மனம் அஞ்சுகிறது. அதற்குத் தேவையான திறமை, உழைப்பு, எடிடிங் நேர்த்தி ஆகியவற்றைப் பெற இன்னமும் காலம் பிடிக்கும்.

ஆனால் தமிழ் -> ஆங்கிலம் மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். Indian Writing என்ற பதிப்பில் இதுவரை 12 புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றில் 11 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. மொழிமாற்றத்தில் பல இடங்கள் இன்னமும் உறுத்தலாகவே உள்ளன.

ஆங்கில மொழிமாற்றத்தில் சில கலாசாரம் சார்ந்த தமிழ் சொற்களை அப்படியே விடுவதா (உறவு முறைப் பெயர்கள், வேறு சில), அல்லது அவற்றை மாற்றுவதா என்ற கேள்வி உள்ளது.

ஒரு பத்தியை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றுவதா, அல்லது கிட்டத்தட்ட அதே பொருள் பட, அதே கருத்து தொனிக்க, அதே நடை மாறாமல், ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் படிக்குமாறு ஆங்கில இலக்கண வழு ஏதும் இன்றி மாற்றுவதா? இரண்டாவதுதான் எனக்கு ஏற்புடையது. பலர் இதனை ஏற்காமல் இருக்கலாம்.

மூலப்பிரதி எழுத்தாளர், மொழிமாற்றுபவர், எடிட்டர் ஆகியோருக்கிடையேயான உறவு முக்கியம்.

-*-

இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் பல மொழிமாற்றங்களில் குறைகள் நிறைய உள்ளன. இதனை கறாரான விமரிசனம் மூலம் மட்டுமே மாற்ற இயலாது. நல்ல பல மொழிமாற்றங்களைக் கொண்டுவந்து தருவதன்மூலம் மட்டுமே இதனைச் செய்யமுடியும்.

"இதுதான் சிறந்த மொழிமாற்றம். இதனைப் படித்தால், கிட்டத்தட்ட மூலப்பிரதியைப் படிக்கும் அனுபவம் கிடைக்கும். ஆனால் அது மோசமான மொழிமாற்றம். அதனைப் படிப்பதற்கு பதில் வேறு எதையாவது செய்யலாம்" என்று உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினால் படிப்பவர் அதனைப் புரிந்துகொண்டு நல்ல மொழிமாற்றங்களை ஆதரிப்பார். எல்லாமே குறை, எல்லாமே குற்றம் என்றால் மட்டும் போதாது.

அடுத்து மொழிமாற்றுவோர் என்ற இனம்... அழியும் நிலையில் உள்ளது. மொழிமாற்றுவோர் இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை பெற்றிருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் அடிப்படை இலக்கணத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் நிறையப் படிக்கவேண்டும். இலக்கு மொழியில் தொடர்ச்சியாக எழுதவேண்டும். இவை இல்லாவிட்டால் மொழியாக்கம் நன்றாக இருக்காது. அகராதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்பது சாத்தியமே இல்லாத விஷயம்.

இன்று பள்ளிகளில் கற்பிக்கும் தமிழ் மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை உரைநடைத் தமிழை ஒழுங்காகக் கற்பிப்பது இல்லை. தமிழ் உரைநடை இலக்கணத்தை ஒழுங்காகச் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஆங்கிலம் கற்பித்தல் அந்த அளவுக்கு மோசமாக இல்லை. பல பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லாத காரணத்தால் இருமொழி அறிவுடையோர் (bilinguals) காணக் கிடைப்பதில்லை. (தமிழ் vs ஆங்கில வலைப்பதிவுகளைப் பார்த்தாலே தெரியும் - தமிழ் வலைப்பதிவுகளில் எவ்வளவு மோசமாகத் தமிழ் எழுதப்படுகிறது என்று.)

கல்லூரியில் BA/MA தமிழ் இலக்கியம் படிப்போருக்கு ஆங்கில அறிவு கிடையாது. BA/MA ஆங்கில இலக்கியம் படிப்போர் தமிழைக் கண்ணாலேயே காண்பது கிடையாது. ஃபார்மல் பட்டப்படிப்பு இல்லாமல், வீட்டிலேயே உட்கார்ந்து தானாகவே படித்து இரண்டு மொழிகளையும் நன்கு புரிந்துகொண்டு மொழிமாற்றம் செய்பவர்கள் அபூர்வமானவர்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் பல இருந்தாலும், நல்ல மொழிமாற்றத்தை நோக்கி நாம் செல்லவேண்டும். இன்று ஆங்கிலம் -> தமிழ் மொழிமாற்றம் மூலமாகத்தான் அறிவு சார்ந்த நூல்கள் பலவும் தமிழ் மக்களுக்கு வந்துசேரவேண்டிய நிலை உள்ளது.

7 comments:

  1. மிகச்சரியான கருத்துக்கள்..

    வாழ்த்துக்கள்..

    சூர்யா
    சென்னை

    ReplyDelete
  2. கதா (Katha) ஆண்டுதோறும் சிறந்த இந்தியமொழிக்கதைகளை (சிறுகதைகள்)மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டிருந்தது. முதலில் அந்த ஆண்டுக்கான கதைகள் தேர்வு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு போட்டிகள் அறிவிக்கப் பட்டன. இவற்றுள் சிறந்த மொழிபெயர்ப்புக்குப் பரிசளிக்கப்பட்டு, இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் Katha prize series களாக ஆண்டுதோறும் பதிப்பிக்கப் பட்டன.

    தமிழ் (சில) தவிர இதர மொழிகளின் மூலப்பிரதிகளை வாசித்திராவிட்டாலும், மொழிபெயர்ப்பில் நெருடலின்றி, ஆங்கிலமானாலும் ஒன்றிவிட முடிந்தது. (மராட்டி, மலையாளக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது). ஒன்பது volume கள் வருடந்தவறாமல் வாங்கிப்படித்தேன். ஒரு முறை மொழிபெயர்ப்பு போட்டிக்கும் விண்ணப்பம் செய்திருந்தேன் - இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் என்று இரண்டு பிரிவுகளில். ஆர். சூடாமணியின் ஒரு கதை, இலங்கைத் தமிழ்க் கதை யாருடையதென்று நினைவில்லை. கதைகளை இரண்டு-மூன்று முறைகள் படித்ததோடு சரி. (இவர்களின் வைக்கம் முகமது பஷீர் கதைகள் சிறப்புப் பதிப்பு மிகவும் அருமை. மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் கதைகளும் வெளியிட்டுள்ளார்கள்)

    தமிழிலே நல்ல பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் வரவேண்டும், என்பது என் ஆசை. உலக அளவில் எந்தளவு இவை வரவேற்பைப் பெரும் என்று தெரியாது. ஆனால், கதா சிறுகதைகளில் 'இந்திய'த் தன்மை பொதுவான ஒரு இழையாக இருந்தது. இந்த இழையைக் கொண்டு இந்தியாவின் பிற மொழிக் காரர்கள் தமிழர்களின் (தமிழ்நாடு வாழ் மக்கள்) தினசரி வாழ்க்கையை அறிந்து கொள்ளவும், தம் சுக-துக்கங்களுடன் நம்முடையதைப் பொருத்திப் பார்க்கவும், பொதுவான உணர்வுகளை, பிரச்சனைகளை இனங்கண்டுகொள்ளவும் முடியும். என்னால் அப்படி உறவாட முடிந்தது. இது தேவையானவொன்றாகவே படுகிறது.

    ReplyDelete
  3. இன்று ஆங்கிலம் -> தமிழ் மொழிமாற்றம் மூலமாகத்தான் அறிவு சார்ந்த நூல்கள் பலவும் தமிழ் மக்களுக்கு வந்துசேரவேண்டிய நிலை உள்ளது.
    >>>>>>>
    இதற்கு விடை இங்கே உள்ளது :-)

    அடிப்படை உரைநடைத் தமிழை ஒழுங்காகக் கற்பிப்பது இல்லை. தமிழ் உரைநடை இலக்கணத்தை ஒழுங்காகச் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஆங்கிலம் கற்பித்தல் அந்த அளவுக்கு மோசமாக இல்லை.
    >>>>>>

    அதெல்லாம் கிடக்கட்டும். நான் ஒரு காலத்தில்(2003ல் வலைப்பதிவு தொடங்கிய புதிதில்) John Updike-ன் ஒரு சிறுகதையை தமிழாக்கம் செய்யலாம் என்று இரண்டு பத்திகள் செய்து முடிக்கும்போதே விழி பிதுங்கிவிட்டது.
    முதலில் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே தமிழில் எழுதத்தான் முடிந்தது. படித்துப் பார்த்தால் சிரிப்புத் தாங்கவில்லை. பிறகு கொஞ்சம் மாற்றிப் பார்த்தாலும் எனக்கு திருப்தி இல்லை. கவுண்டமணி ஸ்டைலில் "இது ஆவுறதில்ல" என்று அப்படியே விட்டேன்.
    தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு முயற்சி செய்ததில்லை.
    இரண்டு மொழியின் இலக்கணம் தெரிந்து, இரண்டு மொழியிலும் எழுதிப் பழகவில்லையென்றால் சொதப்பலாகத்தான் அமையும்.
    நீங்கள் சொன்னமாதிரி அகராதி வைத்துக் கொண்டு மொழி பெயர்த்தால் நேரே குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம்.
    -பரி

    ReplyDelete
  4. I remember one translation done in Tamil (text book) for economics..story appeared in thuglak long long back.

    Orig: Government had a role to play...

    Trans:
    அரசு விளயாடுவதற்கு ஒரு உருளை தயாரித்து உள்ளது.

    this is the translation quality we get.. some time it is better for the children to learn in english at least the school subjects.

    ReplyDelete
  5. To me, Tintin (english) is the epitome of translation. No one would feel its an translated work.

    ReplyDelete
  6. மொழி பெயர்க்க நாங்க ரெடி
    போட்டி வைக்க நீங்க ரெடியா ?

    ReplyDelete
  7. ஏன், நீங்க எல்லாரும் தோத்துப் போகவா?

    ReplyDelete