Tuesday, December 21, 2010

அமரத்துவம் பெற்ற சித்திரக் கதைகள்

  
  


சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் நாங்கள் பெருமையுடன் வழங்க உள்ள புத்தகங்கள் இவை. சென்ற ஆண்டு இவை இருக்கவில்லை. இந்த முயற்சி ஆரம்பித்தது மார்ச் 2010-ல்தான்.

அமர சித்திரக் கதைகள் (அமர் சித்ர கதா), ஆனந்த் பாய் என்பவர் வழிகாட்டுதலில் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட வரலாறு, புராண, இதிகாச, காப்பிய படக்கதைகள் மட்டுமல்ல, நிஜ மனிதர்களைப் பற்றியும் உருவாக்கப்பட்ட படக்கதைகள். பஞ்ச தந்திரம், தெனாலி ராமன், பீர்பால் படக்கதைகளும் உண்டு.

பின்னர் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு பிரைவேட் ஈக்விடி குழுமம், அமர சித்திரக் கதைகளை மட்டும் தனியாக வாங்கிக்கொண்டது. இந்தியாவில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தக பிராண்ட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அமர சித்திரக் கதைகள் என்று சொல்லிவிடலாம்.

பெரும்பாலும் ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் மட்டும் பிற மொழிகளிலுமாக இவை கிடைக்கின்றன. காமிக்ஸ் விரும்பிகள், இரு வண்ணத்தில் தமிழில் சுமார் 70-80 வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கு தேடினால் எங்கேனும் கிடைக்கலாம். முழு வண்ணத்திலேயே 15 புத்தகங்கள் வரை தமிழில் அமர சித்திரக் கதைகள் நிறுவனத்தாலேயே வெளியாகியிருந்தன. அவையும் இப்போது அச்சில் இல்லை. அதில் எழுத்துகள் கையாலேயே எழுதப்பட்டிருக்கும். கணினியுகத்துக்கு முந்தைய காலகட்டம் அது.

மார்ச் 2010 முதல், அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம். அவை அமர சித்திரக் கதைகள் பிராண்டிலேயே வெளியாகும்.

இதுவரையில் 24 புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அனைத்தும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மேலும் சில புத்தகங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ன்போது நிச்சயம் 100 புத்தகங்களாவது இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

இந்தப் புத்தகங்களில் நாங்கள் வெளியிட்ட முதல் எட்டை நான்தான் தமிழாக்கம் செய்தேன்! அதில் எனக்கு மிகுந்த திருப்தி. அடுத்தவற்றை எல்லாம் ப்ராடிஜி எடிட்டர் சுஜாதா மொழியாக்கம் செய்ய, அவற்றை நான்தான் எடிட் செய்கிறேன். என் பிற அனைத்து வேலைகளையும்விட எனக்கு மிகுந்த சந்தோஷம் தருபது இந்த வேலைதான்.

நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று தொடங்கி, பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா வந்து, பெரிய எழுத்து மந்திரவாதக் கதைகளைப் படித்து அங்கிருந்து விகடன், குமுதம் படிக்க ஆரம்பித்தேன் நான். அதேபோல இன்று என் மகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்கிவைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, ஆங்கில அமர சித்திரக் கதைகளிடம் தஞ்சம் புகுந்தேன். இப்போது அவள் அமர சித்திரக் கதைகள் தாண்டி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது என்று குறைப்படுவோர் பலர். தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் எங்கும் என்று முறையிடுவோர் பலர். வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துவைத்துள்ள பலரும் எப்படித் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பின் சுவையை ஊட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் பதற்றமும் அடைகிறார்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இதற்கான ஒரு விடை: அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

விலையும் மலிவுதான். 32 பக்கங்கள் கொண்ட (கிரவுன் 1/4) ஒவ்வொரு முழுவண்ணப் புத்தகமும் வெறும் ரூ. 35 மட்டுமே!

இதுவரை வந்துள்ள அனைத்து அமர சித்திரக் கதைகள் (தமிழ்) புத்தகங்களை வாங்க

இதற்குமுன் நான் அமர சித்திரக் கதைகள் பற்றி எழுதிய பதிவுகள் ஒன்று | இரண்டு

சாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஒரு வாரம் முன்புதான் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.

நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது.

அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?)

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும்.

நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds

நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சூடிய பூ சூடற்க - சாகித்ய அகாதெமி 2010 விருது பெற்ற நாஞ்சில் நாடன் புத்தகத்தை வாங்க

நாஞ்சில் நாடனின் பிற புத்தகங்களை வாங்க

பா.ராகவனின் பதிவு
தி ஹிந்து செய்தி
தினமணி செய்தி

Monday, December 20, 2010

காந்திக்குப் பிறகான இந்தியா

ஒருமாதிரியாக இன்றோடு முடிந்தது. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் ஆரம்பித்தது கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு முன்பு. இது முடிவதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. முதலில் புத்தகத்தை இரண்டு பாகங்களாக உடைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம்.

முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பு கைக்கு வந்துசேர்ந்து அதில் நிறைய வேலை செய்யவேண்டியிருந்தது. ஆகஸ்ட் 2009-ல் புத்தகத்தை வெளியிட நாள் குறித்தாயிற்று. ராமச்சந்திர குஹா சென்னைக்கு வரும் தேதி நிச்சயம் ஆயிற்று. லாண்ட்மார்க்கில் நேரத்தை நிச்சயம் செய்தாயிற்று. அதனால் கடைசி சில நாள்களில் கடுமையான வேலைப்பளுவில் புத்தகத்தை முடிக்க வேண்டியதாயிற்று. புத்தகத்தில் சில குறைபாடுகள் நிச்சயம் உள்ளன. சரிசெய்யவேண்டும்.

இரண்டாம் பாகத்தை விரைவில் கொண்டுவந்துவிடலாம் என்றுதான் அப்போதைய கற்பனை இருந்தது. முடிந்தால் 2010 சென்னை புத்தகக் கண்காட்சியின்போதே என்றுதான் நினைத்தோம். சான்ஸே இல்லை என்று தோன்றியதும், சரி விட்டுவிட்டு அடுத்த ஆகஸ்டில் - ஆகஸ்ட் 2010-ல் வெளியிடலாம் என்று நினைத்தோம். மொழிபெயர்ப்பு கைக்கு அதற்குள்ளாக வந்துவிட்டது. ஆனால் அதில் செய்யவேண்டிய வேலைகள் மலைப்பைத் தந்தன. அப்படியே காலம் நழுவி நழுவி, ஆகஸ்டும் வந்தது, போனது.

சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று மீண்டும் வேலைகளை ஆரம்பித்தோம். இன்று புத்தகம் அச்சுக்குப் போகத் தயார். அடுத்த சில நாள்களில் அச்சாகி, சுடச்சுட புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது. நிச்சயம் இந்தத் தொகுதி திருப்திகரமாகவே வந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் கொண்டுவருவோம் - இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக.

***

இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து.

சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஏழைமை, சுகாதார வசதிகள் போதாமை, கல்வியின்மை, பிரிவினைவாதம், ஊழல், மதவாதம், விரைவான உலகமயமாதலால் பாதிக்கப்படும் பழங்குடியினர் என்று எண்ணற்ற பிரச்னைகள். ஆனால் இவற்றுக்கு ஏதோ ஒரு வழியில் விடைகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது.

இதனைச் சாதிக்க இந்தியா என்ன விலை கொடுக்கவேண்டியிருந்தது என்பதைக் கதையாக விளக்குகிறார் குஹா.

அடுத்த சில தினங்களில் குஹா புத்தகத்திலிருந்து சில சில (சிறு) பகுதிகளைக் கொடுக்க உள்ளேன். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய இரு தொகுதிகள் இவை.

புத்தகத்தை மொழிபெயர்த்த ஆர்.பி.சாரதி பாராட்டுக்குரியவர். நிறையப் பொறுமை அவருக்கு. முதல் பாகம் மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் விருது பெற்றுள்ளார்.

இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு: பாகம் 1, பாகம் 2

பாகம் 2, சென்னை 2011 புத்தகக் கண்காட்சியில் வெளியாகும்.

Monday, December 13, 2010

மாடு வளர்ப்பு

ஒரு பசு மாட்டின் சராசரி வயது எவ்வளவு? 15 ஆண்டுகள்தானாம். அதாவது நம்மூரில் இருக்கும் கலப்பினப் பசுக்கள்.

மாடு வளர்ப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

மாடு கன்றுக்குட்டி ஈனும்போது கூடவே சீம்பால் என்ற ஊட்டச்சத்து மிகுந்த பாலைச் சுரக்கும். இந்தப் பால் முழுவதையும் கன்றுக்குட்டி குடிக்கக் கொடுக்கவேண்டுமாம். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. சிலர் அதைத் தாங்கள் உண்டிட எடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் ஏதோ மூட நம்பிக்கைகளை மனத்தில்கொண்டு குளத்தில் கொட்டிவிடுகின்றனராம். இதன் விளைவாக, அந்தக் கன்றுக்குட்டி ஆரம்பத்திலேயே வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது.

எனவே சீம்பாலை முழுமையாகக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கவேண்டும்.

அடுத்து அதன் தொப்புள்கொடியை வெட்டுவது; மருந்துபோட்டுக் காப்பது. எப்படி மனிதக் குழந்தைகளுக்கு கவனமாக தொப்புள்கொடியை அரிந்துவிட்டு பிளாஸ்திரி போட்டுக் கட்டிவைக்கிறோமோ, அப்படிப் பெரும்பாலும் மாடுகளுக்குச் செய்வதில்லை. கன்று மண்ணில் புரண்டு அங்கு இன்ஃபெக்‌ஷன் வர நேரிடுகிறது.

எட்டு நாள் தாண்டிய உடனேயே கன்று வயிற்றில் (ஜீரண மண்டலத்தில்) பூச்சி வராமல் இருக்க மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டுமாம். அதன்பின் 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை முறையாகச் செய்துவரவேண்டும்.

சுமார் 2.5 ஆண்டுகளில் ஒரு கன்று வயதுக்கு வந்து, சினை பிடிக்கத் தயாராக உள்ளது. உடனடியாகவே அதற்குச் சினையூட்டலாம். கன்றை ஈன்றதும், கவனமாக முன் சொன்னதுபோல, அதன் குட்டிக்கு சீம்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த சுமார் 10 மாதங்களுக்கு மாடு பால் தரும். அதன் பால் வற்றிப்போகும் காலத்தைக் கணித்து அதற்கு ஏற்றவாறு அதனை மறுபடியும் சினையூட்ட வைக்கவேண்டும். அதன் வாழ்நாளில் அதனை 10 முறை சினையூட்டி, கன்றுகளை ஈன வைத்து, அதன் பால் தரும் காலத்தை அதிகப் படுத்தமுடியும்.

மாடுகளுக்கு உணவு அளிப்பதை அக்கறையுடன் செய்யவேண்டும். பசுந்தழை (புல்), காய்ந்த தழை (வைக்கோல் முதலியன) ஆகியவற்றுடன் சரியான அளவு probiotic நுண்ணுயிரிகள் கலந்த கலவையைக் கொடுக்கவேண்டும். (மனிதர்கள் சாப்பிடும் தயிர் probiotic வகையைச் சேர்ந்தது.) அப்போதுதான் மாடுகள் உட்கொள்ளும் உணவை முழுமையாக உள்வாங்கி, செரித்து, அதன் சத்து முழுவதும் பாலாக ஆகும் நிலை ஏற்படும். எந்த மாதிரியான உணவைத் தரவேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அதனைப் பின்பற்றவேண்டும்.

கன்றுகள் பால் சாப்பிடும் காலம் வரையிலும், கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் அளவுக்கு அதற்குப் பால் தரவேண்டும். பலரும் இதனைச் செய்வதில்லை. இதெல்லாம் கன்றின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால் அந்தக் கன்று பின்னர் வளர்ந்ததும் அதன் பால் தரும் அளவு நிச்சயமாக பாதிக்கப்படும்.

மாடுகள் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பது, மாடுகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வது, அவற்றின் உடலில் ஈக்கள், உண்ணிகள், பிற மொய்க்காமல், தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது, இவை அனைத்தும் முக்கியம். அவற்றுக்கும் நோய்கள் வரும்போது உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பதும் முக்கியம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் மனிதனுக்கு எந்த அளவுக்கு தொந்தரவோ, அதே அளவுக்கு மாட்டுக்கும் தொந்தரவுதான். வருமானமும் பாதிக்கப்படும் என்பது முக்கியம்.

இந்தியாவைப் பொருத்தவரை வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பது சரியல்ல. கலப்பினப் பசுக்கள், அதில் சுமார் 62-63% வெளிநாட்டு (ஜெர்ஸி?) பசுவின் மரபணு இருந்தால் போதும்.

***

சென்ற வாரம் சென்னையிலிருந்து காரில் ஊர் சுற்றும் பயணத்தின்போது மாறி மாறி எஃப்.எம் வானொலிகளைக் கேட்டு, பின் கவரேஜ் இல்லாத இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டபோது கிடைத்த தகவல்கள் இவை. இந்த அதிமுக்கியமான விஷயத்தை உடனடியாகப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் தில்லி செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. பிறகு மறக்கவும் ஆரம்பித்துவிட்டது. எனவே ஞாபகம் இருக்கும்வரை இங்கே!

இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்.

Tuesday, December 07, 2010

புகளூர் கல்வெட்டுகள்

நேற்று கரூர்/புகளூர் செல்லவேண்டியிருந்தது. அலுவலக வேலைகளை முடித்ததும் அங்குதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சில கல்வெட்டுகள் உள்ளன என்ற எண்ணம் மனத்தில் தோன்ற அதைத் தேடிச் சென்றேன்.

புகளூரில் முதலில் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவே இல்லை. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரு சிலர் மலைமீதிருக்கும் முருகன் கோயிலைக் காட்டினர். ஏதோ ஓர் எண்ணத்தில், கோயிலில் நான் தேடும் கல்வெட்டு இருக்காது என்று தெனாவெட்டாக வேறு இடங்களைத் தேடிச் சென்றுவிட்டு, கடைசியில், அங்கிருந்து மீண்டும் சென்னை கிளம்ப நினைத்தபோது, வேலாயுதம்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஏற முற்படும்போது ஒரு தட்டி தென்பட்டது. அதில் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. முருகன் இருக்கும் மலையில்தான்.


ஒரு சிறு மலை. அந்த மலையுச்சியில் முருகனுக்குக் கோயில் ஒன்று உள்ளது. வாசலிலேயே தொல்லியல் துறையின் அறிவிப்பு காணப்படுகிறது.


ஆனால் அருகில் கண்ணுக்குத் தெரிந்த யாருக்கும் அந்தக் கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. சந்நிதியில் இருக்கும் ஐயரிடம் கேட்கச் சொன்னார்கள். உச்சிகால பூஜை முடிந்து கோயில் சார்த்தும் நேரம் என்பதால் அவசர அவசரமாக மேலே செல்லச் சொன்னார்கள். செங்குத்தான 315 படிகள். மூச்சு இரைக்க இரைக்க மேலே சென்று முருகன் சந்நிதியில் இருந்த ஐயரிடம் கேட்டேன். அவருக்குத் தெரிந்திருந்தது. மலைக்கு வெளிப்புறத்தில்தான் அந்தக் குறிப்பிட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் ஓராண்டுக்கு முன், அங்கு செல்லும் வழியை மூடி மறைத்து, வேலி எழுப்பி, பூட்டு பூட்டியுள்ளனர் என்றார். அதற்கான சாவி கீழே கீழே இருக்கும் கோயில் காவலர் சந்திரசேகரன் என்பவரிடம் உள்ளது என்றார். அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் புராதனப் பழைமை வாய்ந்த சமணர் படுகைகளை சீட்டாட, மது குடிக்க, பெண்டிரை அழைத்து வந்து, கிடத்தி (யார் அறிவர்! சமணர் படுகைமீதே கூடக் கிடத்தி?) கொண்டாட என்று பயன்படுத்தினராம். இதனால் தில்லியிலிருந்து வந்து பார்த்த உயரதிகாரிகள், உடனடியாக பூட்டு/சாவி போட்டுவிட்டனராம்.

ஆ! மீண்டும் 315 படிகள் கீழே இறங்கி மேலே ஏறவேண்டுமா என்று தயக்கம். ஆனாலும் இந்த வாய்ப்பை விடமுடியுமா? கீழே இறங்கி வந்தால் சந்திரசேகர் இருந்தார். ஐயப்பன் மலைக்கு மாலை போட்டிருந்தார். காலில் செருப்பு இல்லை. மேலே வந்து கல்வெட்டுகளைக் காட்ட முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். அவ்வப்போது ஆராய்ச்சி மாணவர்கள் வருவதாகவும், அவர்களும் அங்கே உள்ள கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன, அவற்றின் பொருள் என்ன என்று கேட்பதாகவும், அதற்கான தகவல் கையேடுகள் ஏதும் இல்லாததால் அவற்றைக் கொடுக்க முடிவதில்லை என்றும் சொன்னார்.

மீண்டும் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினோம். சந்நிதிக் குருக்கள் பூஜையை முடித்துவிட்டு, உணவுடன் கீழே வந்துகொண்டிருந்தார். எனக்கு இடத்தைக் காண்பித்தபின் பூட்டுமாறு சொல்லிவிட்டுச் சென்றார். இடும்பன் சந்நிதி அருகே கதவு பூட்டியிருந்தது. அங்கே ஒரு யுவதியும் இரு இளைஞர்களும் உட்கார்ந்திருந்தனர். அந்தப் பெண் சற்று சத்தமாகவே ‘நீ என்ன லவ் பண்றியா இல்ல வேற யாரையாவது லவ் பண்றியான்னே தெரியலையேடா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் மேலே வரும்போதே ஓர் இளைஞர் சற்றே ஜகா வாங்கி, ‘சாமி கும்புடப் போறேன்’ என்று சந்திரசேகரனிடம் சொன்னார். ‘கோயில் கதவு மூடியாயிற்று, அதனால் கிளம்பிச் செல்லுங்கள்’ என்று அவர்களைத் துரத்திவிட்டு, கதவைத் திறந்துகொண்டு என்னை அழைத்துக்கொண்டு கல்வெட்டுகளைக் காண்பிக்கச் சென்றார்.

கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இவை. அங்கே சமணப் படுகைகள் சில உள்ளன. படுகைகளை ஒட்டி சில தமிழ் பிரமி எழுத்துகள் உள்ளன. மலை முகப்பில் சில இடங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின்மேல் சாக்கட்டியால் அழுத்தி எழுதியுள்ளனர். பார்த்தவுடன் படிக்கமுடியுமாறு.

இதில் ஒரு கல்வெட்டில்தான், ‘ஆதன் செல் இரும்பொறையின் மகனான பெருங்கடுங்கோனின் மகனான கடுங்கோன் இளங்கடுங்கோ வெட்டுவித்த படுகை, யாற்று செங்காயபன் என்ற சமண முனிவருடையது’ என்ற தகவல் வருகிறது. இதில் குறிப்பிடப்படும் அரசர்கள் எல்லோருமே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சேர மன்னர்கள். இவர்களில் இரும்பொறை (கல்வெட்டில் இரும்புறை என்று எழுதப்பட்டுள்ளது) அடித்த காசுகள் கரூர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.


அருகில், வேறு பல படுகைகளை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் அங்கு படுத்திருந்த சமண முனிவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 


அவற்றைப் பார்த்தபின், மறுபக்கம் சென்று அங்கே சித்தர்கள் வாழ்ந்த இடத்தைக் காண்பிக்கிறேன் என்றார் சந்திரசேகரன். மலையில் பின்புறத்தை நோக்கிச் செல்லும்போது சந்திரசேகரன் திடீரென்று நின்றார். பாறைக்கு அடியில் சரசரவென சத்தம். ‘ஏய், போ, போ, சூ’ என்று விரட்டினார். ‘சாரைப்பாம்புங்க, அதான் சரசரன்னு போகுது. நாகம்னா அப்படியே நிக்கும்’ என்றார். எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. கல்வெட்டைத் தேடி வந்து, பாம்பைச் சீண்டி, வம்பெதற்கு என்று ‘வேண்டாங்க, போதும் கிளம்பிடலாம்’ என்றேன். திரும்பி வரும்போது, ‘இங்க எல்லாமே பாம்புங்க இருக்குங்க’ என்று பீதியைக் கிளப்பினார். வழியில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாகப் பார்த்தபடி, அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.


ஒரே ஒரு கல்வெட்டை (மேலே உள்ளது), தமிழ் பிரமி எழுத்துகளைப் பார்த்துப் பார்த்து நானே எழுதிப் பார்த்தேன். முதல் வரி:

ந லி பி ஊ ர அ பி ட ன கு ற ம ம க ள

என்று வந்தது. ஐராவதம் மகாதேவனின் புத்தகத்தில் ‘பி’ என்பதை (3-ம் எழுத்து) ‘ய’ என்பதாகப் படிக்கவேண்டும் என்று குறிப்பு உள்ளது. நான் ‘அ’ என்று படித்ததை (6-வது எழுத்து) அவர் ‘ஆ’ என்கிறார். நான் ‘ற’ என்று படித்ததை (11-வது எழுத்து) அவர் ‘று’ என்று படிக்கிறார். இரு வரிகளையும் சேர்த்தால், வருவது:

‘நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி’.

அதாவது,

‘நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’.

‘ல்லி’ என்பதற்கு ‘லி’ மட்டும், ‘ட்ட’ என்பதற்கு ‘ட’ மட்டும், ‘ற்றி’ என்பதற்கு ‘றி’ மட்டும்தான் உள்ளன. மெய் எழுத்துக்கும் அகர உயிர்மெய்க்கும் வித்தியாசம் இல்லை. ஆனாலும்... 1800 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் எழுதியதை நாமே படிக்கமுடியும், ஒரு மாதிரி பொருளும் புரிந்துகொள்ள முடியும் என்பது கிளர்ச்சி தருவதாக உள்ளதல்லவா!

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2010 அன்று, கிழக்கு மொட்டைமாடியில், மாலை 6.30 மணிக்கு, பேரா. சுவாமிநாதன், ஐராவதம் மகாதேவனின் 'Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century AD' என்ற புத்தகத்தின் பொருள் பற்றிப் பேசுகிறார். (இது உலக எழுத்துகள் என்ற தொடரில் பேரா. சுவாமிநாதன் நிகழ்த்திவரும் பேச்சுகளில் இந்த மாதத்துக்கானது...)

***

நீங்கள் இந்தக் கல்வெட்டுகளைக் காண விரும்பினால், (பாம்புகளைக் கண்டு பயப்படாதவர் என்றால்,) செல்லவேண்டிய இடம்: கரூர்/புகளூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையம், மலைமீதுள்ள முருகன் கோயில். கோயில் காவலர் சந்திரசேகரனின் செல்பேசி எண்: 98650-13050. முன்னதாகவே பேசி, கீழிருந்தே அவரைப் பிடித்து மேலே அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். கரூரிலிருந்து நேராக பஸ் ஸ்டாப் கோயில் அருகிலேயே உள்ளது.