ஒருமாதிரியாக இன்றோடு முடிந்தது. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் ஆரம்பித்தது கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு முன்பு. இது முடிவதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. முதலில் புத்தகத்தை இரண்டு பாகங்களாக உடைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம்.
முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பு கைக்கு வந்துசேர்ந்து அதில் நிறைய வேலை செய்யவேண்டியிருந்தது. ஆகஸ்ட் 2009-ல் புத்தகத்தை வெளியிட நாள் குறித்தாயிற்று. ராமச்சந்திர குஹா சென்னைக்கு வரும் தேதி நிச்சயம் ஆயிற்று. லாண்ட்மார்க்கில் நேரத்தை நிச்சயம் செய்தாயிற்று. அதனால் கடைசி சில நாள்களில் கடுமையான வேலைப்பளுவில் புத்தகத்தை முடிக்க வேண்டியதாயிற்று. புத்தகத்தில் சில குறைபாடுகள் நிச்சயம் உள்ளன. சரிசெய்யவேண்டும்.
இரண்டாம் பாகத்தை விரைவில் கொண்டுவந்துவிடலாம் என்றுதான் அப்போதைய கற்பனை இருந்தது. முடிந்தால் 2010 சென்னை புத்தகக் கண்காட்சியின்போதே என்றுதான் நினைத்தோம். சான்ஸே இல்லை என்று தோன்றியதும், சரி விட்டுவிட்டு அடுத்த ஆகஸ்டில் - ஆகஸ்ட் 2010-ல் வெளியிடலாம் என்று நினைத்தோம். மொழிபெயர்ப்பு கைக்கு அதற்குள்ளாக வந்துவிட்டது. ஆனால் அதில் செய்யவேண்டிய வேலைகள் மலைப்பைத் தந்தன. அப்படியே காலம் நழுவி நழுவி, ஆகஸ்டும் வந்தது, போனது.
சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று மீண்டும் வேலைகளை ஆரம்பித்தோம். இன்று புத்தகம் அச்சுக்குப் போகத் தயார். அடுத்த சில நாள்களில் அச்சாகி, சுடச்சுட புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது. நிச்சயம் இந்தத் தொகுதி திருப்திகரமாகவே வந்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் கொண்டுவருவோம் - இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக.
***
இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து.
சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஏழைமை, சுகாதார வசதிகள் போதாமை, கல்வியின்மை, பிரிவினைவாதம், ஊழல், மதவாதம், விரைவான உலகமயமாதலால் பாதிக்கப்படும் பழங்குடியினர் என்று எண்ணற்ற பிரச்னைகள். ஆனால் இவற்றுக்கு ஏதோ ஒரு வழியில் விடைகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது.
இதனைச் சாதிக்க இந்தியா என்ன விலை கொடுக்கவேண்டியிருந்தது என்பதைக் கதையாக விளக்குகிறார் குஹா.
அடுத்த சில தினங்களில் குஹா புத்தகத்திலிருந்து சில சில (சிறு) பகுதிகளைக் கொடுக்க உள்ளேன். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய இரு தொகுதிகள் இவை.
புத்தகத்தை மொழிபெயர்த்த ஆர்.பி.சாரதி பாராட்டுக்குரியவர். நிறையப் பொறுமை அவருக்கு. முதல் பாகம் மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் விருது பெற்றுள்ளார்.
இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு: பாகம் 1, பாகம் 2
பாகம் 2, சென்னை 2011 புத்தகக் கண்காட்சியில் வெளியாகும்.
ராமச்சந்திர குஹாவை நான் விமானத்தில் ஒரு முறை சந்தித்தேன். அப்போது நான் இந்தப் புத்தகம் வாங்கி இருக்கவில்லை. சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் வலைப்பூவைப் பற்றியும் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ReplyDeleteஅண்மையில் நடந்து முடிந்த பெங்களூர் புத்தகத் திருவிழாவில் இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் வாங்கினேன். இனிமேல்தான் படிக்க வேண்டும்.
This is one of the best book I have read about india. Most importantly there is no hidden agenda in this book. Must read and must own.
ReplyDeleteI wish we had school history books like this :-)
முதல் பாகத்தை வாங்கி பல மாதங்கள் கழித்தே படித்தேன். மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது. சிரமமே இல்லாமல் படிக்ககூடிய மொழிபெயர்ப்புகள் தமிழில் மிகவும் குறைவானதே. இந்த புத்தகம் அப்படிப்பட்ட ஒன்று. அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். கண்காட்சியில்தான் கிடைக்குமா? முன்பே கிடைக்க வழி இல்லையா?
ReplyDeleteஇந்துமதி: புத்தகம் இன்றுதான் அச்சுக்குப் போகிறது. எனவே ஜனவரி 1-2 வாக்கில்தான் கைக்குக் கிடைக்கும். ஜனவரி 4 அன்று புத்தகக் கண்காட்சி ஆரம்பம். அங்கேயே வந்து வாங்கிவிடுங்களேன்? இம்முறை நல்ல, விரிவான, வசதியான இடமாக கிழக்கு பதிப்பகத்துக்குக் கொடுத்துள்ளனர். F-13, F-14, F-15 என்ற மூன்று ஸ்டால்கள் இணைந்த இடம்.
ReplyDeleteகோபி: உங்கள் வலைப்பதிவை முன்னரே படித்திருந்தேன். குஹாவின் Makers of Modern India புத்தகம் அடுத்த மொழிபெயர்ப்பை ஆரம்பித்துள்ளோம். அது, சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ல் வெளியாகும்.
ReplyDeleteபாகம் 1 படித்து முடித்து ஓராண்டு முடிந்து விட்டது. பாகம் 2 உங்கள் கடைகளில் கிடைக்குமா?
ReplyDeleteபத்ரி, மிக்க நன்றி. நானே கேட்க வேண்டும் என்றிருந்தேன்.
ReplyDeleteமிகவும் சரியாய் குறிப்பிட்டுள்ளீர்கள்
ReplyDeleteமுதலில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் இதை முக்கிய பங்காக செய்ய வேண்டும்
எவளவோ குப்பைகள் எல்லாம் சென்று சேருகின்றன
இந்திய பற்றி வாயை தொறக்கும் எல்லா அதி மேதாவி பதிவர்களும் ஒரு முறை அவசியம் படிக்கவேண்டும்,
நன்றி
சஹ்ரிதயன்