பா.ராகவனின் முன்னுரை
கதைப் பயணி 6
1 day ago
இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம்.
ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை.
வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன்.
கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி.
சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.