நேற்று எந்திரன் படம் ஒருவழியாகப் பார்த்தாயிற்று. எல்லோரும் மன்மதன் அம்பைக் குத்திக் கிழிக்கும்போது (நடுவில் ஏதோ நந்தலாலா என்று படம் வந்ததாமே?) விடாது எந்திரனைப் பற்றி எழுதியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
முதலில் ஐஸ்வர்யா ராய்தான் ரோபாட் என்று நினைத்துவிட்டேன். ஆரம்பக் காட்சி முதல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஏதோ தேசத்து பொம்மை மாதிரி வந்தார். அவரைப் பார்த்தால் இந்தியர் மாதிரியே தெரியவில்லை. முகத்தில் என்னென்னவோ செய்திருக்கிறார்கள் போல. ஆடல் பாடல் காட்சிகளில்கூட ரசிக்கமுடியவில்லை. சிட்டி கட்டிய கோட்டைக்குள் வசீகரன் நுழைந்துவிட்டான் என்று தெரிந்துகொள்ளும்போதும், பின்னர் மின்சாரம் இன்றி சிட்டியும் பிற ரோபாட்களும் விழுந்து தடுமாறும்போதும் ஒரு தேர்ந்த நடிகையாயிருந்தால் பின்னியிருப்பார். ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் பார்த்தால் அழுகைதான் வருகிறது. அம்மணி ரிட்டயர் ஆகிவிடலாம்.
திரைக்கதை சொதப்பல்கள் நிறைய. ரோபாட்களைச் செய்ய வசீகரனுக்கு இரண்டே இரண்டு குப்பைப் பசங்கள்தான் உதவியாளர் என்றால் சிரிப்புதான் வருகிறது. அதிலும் ஒருத்தன் வெறும் நட் போல்ட் முடுக்குவானாம், இன்னொருத்தன் உடை மாற்றுவானாம். இதில் எல்லாம் கவனம் வேண்டியதில்லை, நாலு டான்ஸ் போட்டு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்டினால் மக்கள் வழிந்துகொண்டே பார்த்துவிடுவார்கள் என்ற அலட்சியம்தான் தெரிகிறது. கொஞ்சம் ஒரு நடை நடந்துபோய் ஒரு கார் ஃபேக்டரியில் பார்த்தாலே தெரியும் எத்தனை எஞ்சினியர்கள், சயண்டிஸ்டுகள் தேவை என்று. மருந்துக்கு பக்கத்து அறைகளில் நாற்பது, ஐம்பது பேர் எதையாவது செய்துகொண்டிருப்பதாகக் காட்டக்கூடாதா? அதைவிடக் கொடுமை டாக்டர் போராவின் ஆராய்ச்சிச் சாலை. அங்கே அந்த ஆளைத் தவிர வேறு ஒருவர்கூடக் கிடையாது. வெளிநாட்டு (ஜெர்மன் மொழி பேசும்) குண்டர்களுடன் உறவாடும்போது மட்டும் சில டஃப் ஆசாமிகள் தென்படுகிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அவர்களும் மிஸ்ஸிங்.
வசீகரன் - சனா உறவு புரியவேயில்லை. சொல்லப்போனால் அது காதல் மாதிரியே இல்லை. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் இடிக்கிறது. சரி, விட்டுவிடுவோம். வசீகரன் தாடி ஏதோ ஜடாமுனிவர் மாதிரி சகிக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் முடி வளர்த்தால் அந்த அளவுக்கு தாடி வளரவேண்டும்?
மெர்சிடிஸ் பென்ஸ் கார்மீது ஏகப்பட்ட புல்லட்டுகள் அடித்தாலும் காருக்கு ஒன்றுமே ஆகமாட்டேன் என்கிறது. (சிட்டி முதலில் கார் ஓட்டும்போது டிராஃபிக் நெரிசலில் டிவைடரில் மோதி காரின் வலது முன்பக்கம் கொஞ்சம் நசுங்குகிறது - நிச்சயமாக எந்த காரும் நசுங்கும். ஆனால் அதன் தொடர் காட்சியிலேயே காரில் எந்த நசுங்கலும் காண்பதில்லை. இதுபோன்ற பல சொதப்பல்களும் உள்ளன.)
போலீஸ்காரர்கள், மிலிட்டரி என்று எல்லாமே முட்டாளதனமாக நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் என்று யாருமே சினிமாவில் காணக்கிடைப்பதில்லை. நாலு போலீஸ் அதிகாரிகள் மாதிரி இருப்பவர்கள், வசீகரன் சொல்கிறான் பேர்வழி என்று ஏகப்பட்ட ஆயுதங்களுடன் நடு ரோட்டில் குண்டுவெடித்து தூள் கிளப்புகிறார்கள். ஹெலிகாப்டர் வருகிறது. மக்களை எவாகுவேட் செய்வது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குண்டு வீசுகிறது. சொல்லப்போனால், இந்தப் படத்தில், ஒரு நகரம், அதில் மக்கள் வசிக்கின்றனர் என்றெல்லாம் எந்த உணர்வும் வருவதில்லை. ஊர் சென்னை என்று ஒருமாதிரி ஊகிக்கமுடிகிறது ஆனால், சிந்த்தெடிக்காக வேறு என்னவெல்லாமோ காட்டிக் குழப்பி, முகமற்ற ஒரு நகரமாகச் செய்துவிடுகிறார்கள்.
சிட்டியால் தீயிலிருந்து காப்பாற்றப்படும் உடையில்லாத சின்னப் பெண்ணைத் தொலைக்காட்சிகள் அசிங்கமாக லைவ் ரிலே செய்வதாகவும், அதனால் அந்தப் பெண் ஓடிச் சென்று லாரியில் மோதி இறப்பதாகவும் காட்டி தமிழ்க் கற்பு சீன் ஒன்று வைத்து டைரக்டர் புளகாங்கிதம் அடையலாம். தியேட்டரில் என் பெண் உட்பட பல குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எப்படி சென்சார் தாண்டி வருகிறது என்று புரியவில்லை. (இந்தியத் தொலைக்காட்சிகள் அந்த அளவுக்கு மோசமும் அல்ல!)
கடைசி கோர்ட் சீன் நல்ல காமெடி. அதாவது எந்தவித ஆதெண்டிசிடியும் தேவை இல்லை தமிழ் சினிமாப் படம் எடுக்க என்பதை அட்டகாசமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
***
ஆனால் இதையெல்லாம் தாண்டி, அரங்கில் சிறு குழந்தைகள் குதித்துக் குதூகலித்தனர். சிட்டி அந்த இரண்டு அஸிஸ்டெண்டுகளையும் பலான இடங்களில் அடித்துத் தொகைப்பது, பின்னர் நெருப்பால் அடிப்பது, அந்த யூஸ்லெஸ் ஆசாமிகள் பேசும் அருவருப்பான வசனங்கள் போன்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லோருக்கும் பிடிக்கிறது. சில இடங்களில் வசனம் நன்றாக இருந்தது. (சனா பிட் அடிக்க உதவ, பிரெக்னன்சி பற்றி ஆடியோ ரிலே முடித்து, உண்மை சொல்லி மாட்டியபிறகு, வெளியேறும்போது சிட்டி, இன்னும் மென்ஸ்ட்ருவேஷன், ஃபெர்டிலைசேஷன் எல்லாம் முடிக்கலையே எனச் சொல்ல, ‘அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க’ என்று டாக்டர்கள் போகிற போக்கில் சொல்வது.)
படத்தில் காட்சிக்குக் காட்சி ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தாலும் பல விஷயங்கள் மிக நன்றாக இருந்தன. உதாரணமாக, சிட்டி வடிவத்தில் ரஜினியின் கலக்கல் நடிப்பு. சிட்டி சனாவுக்கு உதவியாகச் செய்வதெல்லாம் (சமையல் உட்பட) பார்க்க ஜாலியாக இருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டை கொஞ்சம் ஜவ்வு. மற்றபடி சுவாரசியம். சிட்டி-வசீகரன் சீண்டல்கள், முரண்பாடுகள்-கோபங்கள் நன்றாக வந்துள்ளன.
ஓர் இயந்திரம் மனிதனாக முயலும்போது ஏற்படும் அறச்சிக்கல்களை நிஜமாகவே ஒரு நாவலாகச் செய்தால் உலக இலக்கியங்களில் உன்னதமான இடத்தை அடையமுடியும். (ஒருவேளை அப்படிச் சில முயற்சிகள் இருக்கக்கூடும். நான் படித்ததில்லை.) சினிமாவிலும் இருக்கலாம்; நான் பார்த்ததில்லை. டெர்மினேட்டர் பார்த்துள்ளேன். ஐ, ரோபாட் படம் நான் பார்க்கவில்லை. வால்-ஈ ஓரளவுக்கு இதைத் தொடுகிறது. ஆனால் அனிமேஷன் வடிவில் இருந்ததாலும், மனித-இயந்திர உறவு இல்லை என்பதாலும் உயர்ந்த இடத்துக்குப் போகமுடியவில்லை.
கொஞ்சம் மெனக்கெட்டு உழைத்திருந்தால், மிக நல்ல கதையாக, உலகத் தரமான, அதே நேரம் இந்தியர்களையும் கவரக்கூடிய படமாக இருந்திருக்கலாம். ஆனால் அது தேவையில்லாமலேயே பெருமளவு தமிழர்களைக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.
கீதையை அறிதல்-16
20 hours ago
//(இந்தியத் தொலைக்காட்சிகள் அந்த அளவுக்கு மோசமும் அல்ல!)//
ReplyDeleteஅப்படியா?!!
நித்யானந்தர்-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை சன் டிவி ஒளிபரப்பிய அந்த ஒரு வாரம் முழுக்க உங்கள் வீட்டில் கரண்ட் கட்டா?
// ஓர் இயந்திரம் மனிதனாக முயலும்போது ஏற்படும் அறச்சிக்கல்களை // Don t miss the movie "Bicentennial man" please..... a remarkable effort.
ReplyDeleteஉங்கள் நிதானம் ஆச்சர்யப்பட வைக்கிறது...நல்ல அலசல்..
ReplyDelete//நாலு டான்ஸ் போட்டு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்டினால் மக்கள் வழிந்துகொண்டே பார்த்துவிடுவார்கள் என்ற அலட்சியம்தான் தெரிகிறது
//
அப்பட்ட உண்மை.
எதிர்பார்ப்பு பொய்த்த பெரும் ஏமாற்றம் எனக்கு.உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்தமாதிரியே தெரியவில்லை.முன் ஒரு பதிவில் அடுத்தவாரக் கடைசி வரை சத்யம் அரங்கில் ஓடுமா என்று எழுதி, மாதத்திற்கும் மேலாயிருக்கும் என நினைக்கிறேன்
Sir,
ReplyDeletethe only reason,the story holds atleast some-what good is because of the parts where Sujaatha Sir's lines are used. It provides witty sparks.
பத்ரி,
ReplyDelete//முதலில் ஐஸ்வர்யா ராய்தான் ரோபாட் என்று நினைத்துவிட்டேன். ஆரம்பக் காட்சி முதல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஏதோ தேசத்து பொம்மை மாதிரி வந்தார்//
அல்டிமேட் கமென்ட் இது.
பத்ரி,
ReplyDelete//ஆனால் அது தேவையில்லாமலேயே பெருமளவு தமிழர்களைக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.//ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது? என்கிற பதிவில் நீங்கள் சொன்னது மாதிரி
//சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை.
நானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை.// என்கிற ரீதியில்தான் இந்த படத்தின் வெற்றிக்கான காரணமும் இருக்கும்.
ரஜினி படத்தில் ஏன் இவ்வளவு லாஜிக் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை எனக்கு:)
ReplyDelete'அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துக்கு விமரிசனம் எப்போது?!
ReplyDeleteNeutral criticism and correct also.
ReplyDelete//நடுவில் ஏதோ நந்தலாலா என்று படம் வந்ததாமே?// இல்லை. அது நந்தனார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteRajini's Endhiran and Muthu part of IIM Curriculum
ReplyDelete//
Buzz is that IIM (Indian Institute of Management) in Ahmedabad is all set to introduce Endhiran into their new syllabus. The nerds will now be studying Rajnikanth as an elective study in business analysis titled as ‘Contemporary Film Industry: A Business Perspective’.
//
Kamal was awared Doctorate but his movies are not studied in University but Rajini whose movies are said to be no logic are studied in University.
பத்ரி சார்.... அப்போ எந்திரன் "உலோகத்" தரமான படம் இல்லையா??
ReplyDelete//இன்னும் மென்ஸ்ட்ருவேஷன், ஃபெர்டிலைசேஷன் எல்லாம் முடிக்கலையே //
ReplyDeleteஇல்லையே பத்ரி
என் காதில் விழுந்தது 3rd stage labor, placenta என்று ஏதோ விழுந்ததே !!!
//Kamal was awared Doctorate but his movies are not studied in University but Rajini whose // கமல் அடிக்கற ஜால்ராவுக்கு உஸ்மானியா யுனிவர்சிடியிலயோ இல்லை அலிகார் பல்கலைக்கழகத்திலயோ தான் அவரு படத்தை சிலபஸா வெப்பாங்க
ReplyDeleteyou too badri? never expected that you will write a review for this crap. anyway i enjoyed your review i agree with the points you made.
ReplyDeleteஎப்படியோ நல்ல வருமானத்தை பார்த்திருபார்கள், பின்னர் என்ன. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது, யாராவது தொடர்புடையவர்கள் படித்தால் நல்லதுதான்
ReplyDeletebadri sir......
ReplyDeleteஉங்க விமர்சனம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் .......இந்த இடத்துல எனக்கு ஒரு சந்தேகம் .....
ரஜினி ஒரு இடத்துல paradox அப்படின்னு சொல்வாரே......ஆமை முயல் ஓட்டப்பந்தயம் அப்படின்னு.....
இந்த paradox அப்படின்னா என்ன?........கொஞ்சம் விளக்கமா ஒரு பதிவு போட முடியுமா? ....(மதன் சார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வின்னு ஒதுக்கிராதீங்க)
ப்ளாக் பேரு பிரபல வெப்சைட்டோட காப்பி, எழுத்துநடை சுஜாதாவிடமிருந்து இரவல் வாங்கியது... ரஜினி படத்துக்குப் போய்விட்டு, சந்தானத்தையும் கருணாஸையும் இன்னும் ஏன் அதிகமா காட்டலைங்கிற கேனத்தன ரசனை... நீயெல்லாம் எந்திரன் பத்தி பேச வந்துட்டே.
ReplyDeleteகண்ணா பத்ரி... முடிஞ்சா அந்த போல்ட் நட்டை முறையா முடுக்கக் கத்துக்க.. காலர்ல அழுக்குப் படாம காலாட்டிக்கிட்டே கமெண்ட் அடிக்கிற அய்யர் கம்னாட்டி!
-எந்திரன்