Tuesday, August 02, 2011

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு

சமச்சீர் கல்வித் திட்டம் என்று சொல்லப்பட்டு கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது வெறும் ஒற்றைப் பாடத்திட்டமே. எப்படி புரட்சி, சமூகநீதி போன்ற சொற்கள் எல்லாம் தமிழகத்தில் பொருள் இழந்துபோயுள்ளனவோ அதேபோலத்தான் இந்த சமச்சீர் என்ற சொல்லும்.

அடிப்படையில் நான் ஒற்றைப் பாடத்திட்டம் என்பதை எதிர்க்கிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமக்கென தனியொரு பாடத்திட்டம் வேண்டினால் அதைக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். அதில் சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதையும் விடுத்து மாநில வாரிய (ஸ்டேட் போர்ட்) பட்டயத்துக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இதை மேலும் விரிவாகப் பேசவேண்டும், வேறோர் இடத்தில்.

இந்தப் பதிவின் நோக்கம் ஜெயலலிதாவின் வீம்பைப் பற்றிப் பேசுவது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதே தன் நோக்கம் என்பதாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் என்பது ஒரு பக்கம். வேறு யார்மீதும் எந்தக் கரிசனையும் இல்லாது நடந்துகொள்ளும் அகங்காரமான மனோபாவம் மற்றொரு பக்கம். பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து இரண்டு முழு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் சரியான புத்தகங்கள் போய்ச் சேராமல் இருப்பதற்கு முழுமையான காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதிமீதான போரில் கொல்லேட்டரல் டேமேஜ் தமிழக மாணவர்கள்தானா?

இதனை வெளிப்படையாகச் சொல்லி அவரைக் கண்டிக்க எந்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்கும் துப்பு இல்லை. தலையங்கங்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தெருவில் ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் யாரோ ஒரு கோவிந்து ‘அம்மா, தாயே, ஏதாச்சும் ஒரு சிலபஸை அப்ரூவ் செய்து எங்க பிள்ளைகள் வாழ வழி செய்யுங்கள், தாயே’ என்று பிச்சை எடுக்கிறார். கல்வி என்பது உரிமை. அதற்காகப் பிச்சையா கேட்கவேண்டும்? அந்த உரிமையில் ஜெயலலிதா வீம்புக்காகத் தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கிறார். முக்கியமாக இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடையும் மன உளைச்சல் பற்றி அவர் கடுகளவும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதில் கருணாநிதியின் தவறே இருந்துவிட்டுப் போகட்டும். மாணவர்களைப் பாதிக்காமல் ஒரு முடிவு எடுத்துவிடமுடியாதா என்ன? எதற்காக விடாமல் இந்த கோர்ட், அந்த கோர்ட் என்று இழுத்தடிக்கவேண்டும்? இது என்ன சொந்த சொத்துக் குவிப்பு வழக்கா? அங்கு வாய்தா மேல் வாய்தா வாங்கினால் அதற்காவது நியாயம் கற்பிக்கலாம். ஆனால் இங்கு?

ஜெயலலிதாவின் ஆட்சிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஒன்றுதானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வோம், பிற விஷயங்கள் எல்லாம் பிரமாதமாகச் செய்கிறார் என்று பாராட்டுவது அபத்தம். நாளை அவருக்குப் பிடிக்காத ஒன்று நடைபெறுகிறது என்றால் அப்போது எந்தமாதிரியான ருத்ர தாண்டவம் ஆடுவார் இவர் என்பதை இந்த முதல் கோணலே காட்டிக்கொடுத்துவிட்டது.

Thursday, July 21, 2011

வர்ச்சுவல் மர்டாக் - ரூப்பர்ட் மர்டாக்கின் வாழ்க்கை அலசல்

[புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான என் புத்தக அறிமுகம். இதை இதற்குமுன் என் வலைப்பதிவில் வெளியிட்ட ஞாபகம் இல்லை என்பதால் இங்கு மீள்பதிவு.]

வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ்பாடும் ரகத்திலேயே அமைகின்றன. சில சமயங்களில் ஒருவரது புகழைக் குலைக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளர் தகவல்கள் அனைத்தையும் அழகாக திரட்டிக் கொடுத்தால், வாசகர்கள் தாங்களே சில முடிவுகளுக்கு வரமுடியும்.

தொழில் முனைவோரின் வாழ்க்கை வரலாற்றி எழுதுபவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல், சரியான தகவல் முழுமையாகத் தெரியாமல் இருப்பதே. நாடுகள், பேரரசுகளாக எப்படி ஆயின என்பதற்கு தெளிவான வரலாறுகள் உள்ளன. ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு நாட்டில் இருந்த ஒருவர் இன்று உலக ஊடக சாம்ராஜ்ஜியத்தை எப்படிக் கட்டி எழுப்பினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிது கிடையாது.

ரூப்பர்ட் மர்டாக் என்ற ஆஸ்திரேலியரது தந்தை கீத் மர்டாக் மாரடைப்பால் இறந்தபோது, ரூப்பர்ட் பிரிட்டனில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவசரமாகத் திரும்பிய ரூப்பர்ட், அதன்பின் தன் கல்லூரிப் படிப்பை முடிக்கவே இல்லை. அவரது தந்தை அவருக்கு விட்டுச் சென்ற சொத்து ஒரு சாதாரண, குறைவான எண்ணிக்கையில் விற்கும் செய்தித்தாள்தான். அதிலிருந்து ரூப்பர்ட் மர்டாக் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு, சினிமா என்று உலகின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் என்பதை புத்தக ஆசிரியர் நீல் செனோவித் பிரமாதமாக எடுத்துக்காட்டுகிறார்.

அவசரப்படாதீர்கள்... இது ஒன்றும் ரூப்பர்ட் மர்டாக் புகழ்பாடும் புத்தகம் அல்ல. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிம் என்ற வகையில் செனோவித், மர்டாக்கின் சாம்ராஜ்ஜியம் எப்படி செங்கல் செங்கல்லாக உருவானது என்று கையில் லென்ஸை எடுத்துக்கொண்டு தேடி அலைகிறார். அப்படி செனோவித் காட்டும் உருவம் மிகவும் பயங்கரமானது. ரூப்பர்ட் மர்டாக்கின் வளர்ச்சியில் பல பயங்கரங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

செய்தித்தாள்கள் தரும் பலத்தை மர்டாக் எப்படி கையில் எடுத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளைத் தன் கைக்குள் வளைத்துப்போடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியரான மர்டாக், பிரிட்டனில் இரண்டு டேப்லாய்ட் செய்தித்தாள்களான சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆகியவற்றுடன் பிரிட்டனில் மதிப்பு மிக்க தி டைம்ஸ் ஆகியவற்றையும் தன்வசப்படுத்துகிறார். அவற்றின் துணைகொண்டு, அதுநாள் வரை பொதுவாக கன்சர்வேடிவ் கட்சியை ஆதரித்துக்கொண்டிருந்தவர், திடீரென லேபர் கட்சியின் டோனி பிளெய்ரை ஆதரிக்கிறார். பிளெய்ர் ஜெயித்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதைத் தொடர்ந்து, பிளெய்ரின் உதவியைப் பெற்று தனக்கு எதிராக வரக்கூடிய சட்டங்கள் நிறைவேறாமல் பார்த்துக்கொள்கிறார். தனக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுமாறு பார்த்துக்கொள்கிறார்.

பிரிட்டனில் ஊடகங்களைக் கையகப்படுத்தும் மர்டாக், தனக்கு எதிராக இருக்கும் தொழிற்சங்கங்களை எதிர்த்துப் போராடி உடைக்கிறார். பின்னர், அரசியல் துணையுடன், செய்தித்தாள்களோடு கூட, செயற்கைக்கோள் வழி ஒளிபரப்புச் சேவை (இன்று நம் நாட்டில் டி.டி.எச் என்கிறோமே) ஒன்றைத் தருகிறார். இவை பணம் கொழிக்கும் தொழிலாக மாற, அவர் கால்பந்து ஆட்டங்களை தன் தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமத்தைப் பெறுகிறார். இங்கெல்லாம் அவருக்குச் சாதகமாக பல இடங்களில் சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. இத்தாலியில் மர்டாக் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு, பிளெய்ரின் அலுவலகத்திலிருந்து போன் மூலம் உதவி கிடைக்கிறது.

அடுத்து அமெரிக்காவில் தன் பார்வையைப் பதிக்கும் மர்டாக், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தன் ஆஸ்திரேலியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுகிறார். அப்படி இருந்தால்தான், அவரால் அந்த நாட்டில் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒன்றை நடத்தமுடியும்.

இன்று மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியம் இல்லாத கண்டங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அனைத்தும் எப்படி உருவானது என்பதில் நிறைய அசிங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. மோசமான, மூன்றாந்தர நாளேடுகள் அம்மண அழகிகளின் படங்களையும் சமூகத்தின் கேவலங்களையும் வெளியே காண்பித்தே பணம் சம்பாதித்தவை. சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு அந்தத் தகவல்களைச் செய்திகளாக ஊடகங்களில் வெளியிடுவது. அறியப்பட்ட கிரிமினல்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் கம்பெனிகளை உருவாக்குவது. பல நிறுவனங்களை உருவாக்கி, எது எந்த நிறுவனத்தை கண்ட்ரோல் செய்கிறது என்பதே வெளியே தெரியாமல், எல்லா நாட்டிலும் ஒட்டுமொத்தமாக வரிகளை ஏய்ப்பது. வங்கிகளிடம் எக்கச்சக்கமாக, பொய்க்கு மேல் பொய் பேசி கடன்கள் வாங்குவது. பிற பங்குதாரர்களை ஏதோ விதத்தில் ஏமாற்றி, நிறுவனத்தில் தன் பங்குகளை அதிக சதவிகிதத்தில் வைத்திருப்பது. இப்படிப் பலப்பல தில்லுமுல்லுகள்.

நீல் செனோவித், ஆஸ்திரேலியாவின் ‘ஆஸ்திரேலியன் ஃபைனான்ஷியல் ரிவ்யூ’ என்ற பத்திரிகையில் இதழாளராகப் பணிபுரியும்போது இந்தப் புத்தகத்தை எழுதினார். அவரது தினசரி வேலையில், மர்டாக்கின் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று கண்காணிப்பதும் ஒன்று. செனோவித் தோண்டித் துருவி பல கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, ஆஸ்திரேலிய அரசு மர்டாக்கின் நிறுவனங்கள்மேல் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. ஆனால் அதனால் மர்டாக்மீது எந்த வழக்கும் நிரூபணமாகவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால், மர்டாக் செய்த அனைத்துமே தில்லுமுல்லும், அவருக்குக் கிடைத்த பணமும் வளர்ச்சியும் முற்றிலும் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிவிட முடியாது. அவரிடம் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த வெறியுடன் கூட, சட்டத்தைத் தன் இஷ்டத்துக்கு வளைத்தால் அதனால் தவறில்லை என்று எண்ணும் மனமும் இருந்தது. அத்துடன் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை உடனுக்குடன் பாய்ந்து கவ்விக்கொள்ளும் வேகமும் இருந்தது. ஒரு காலத்தில் அரசுகளும் விளையாட்டு அமைப்புகளும் மர்டாக்கைக் கண்டு நடுங்கினார்கள். 1990-களின் மத்தியில், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தலைமை நிர்வாகி என்னிடம் நேரடியாகவே, மர்டாக்குக்கு கிரிக்கெட் உரிமம் எதையும் கொடுக்கமாட்டோம்; அவர் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் என்றார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அதே அமைப்பே உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை மர்டாக்கின் நிறுவனத்துக்கு விற்றது.

மர்டாக் தொட்ட அனைத்திலும் ஜெயிக்கவில்லை. மாபெரும் தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். ஆனால் அவற்றைமீறி பல வெற்றிகளையும் அவர் குவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் (2008-09) அவரது குழுமம் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவரது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளும், அவருக்கு அடுத்து யார் அவர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தப்போகிறார் என்ற கேள்வியும்.

அவருடன் பல காலம் வாழ்ந்த அவரது இரண்டாவது மனைவி அன்னா, (முதல் மனைவியுடனான திருமணம், ஆகி சில வருடங்களிலேயே உடைந்துவிட்டது), மர்டாக் 65 வயதைத் தாண்டியதும் அவருடன் விவாகரத்து செய்தார். இது ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் அதற்குக் காரணம் இருந்தது. அந்த வயதில் தன் கணவர் ஓய்வு பெறவேண்டும் என்று மனைவி விரும்பினார். ஆனால் மர்டாக் ஓய்வு பற்றி கவலைப்படவில்லை. அத்துடன், ரூப்பர்ட்-அன்னா தம்பதிகளின் மூன்று குழந்தைகளுக்கும் இடையில் வீட்டிலேயே போட்டியை ஊக்குவித்தார். இன்று அம்பானி குடும்பத்தைப் பார்ப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். அனில் அம்பானி - முகேஷ் அம்பானி இடையேயான மோசமான உறவால், எரிவாயுவின் விலை போல பல விஷயங்களில் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அன்னா, தன் பிள்ளைகள் இடையே தேவையில்லாத உரசல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால் ரூப்பர்ட் இதைப்பற்றிக் கவலைப்படாமல் நடந்துகொண்டார். அதனைப் பொறுத்துக்கொள்ளாத அன்னா, விவாகரத்து கோரி, விலகிக்கொண்டார்.

அதனால் மர்டாக் என்ன செய்தார்? சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது சீன அரசாங்கத்திடம் தொலைக்காட்சி உரிமம் பெற அவர் போராடிக்கொண்டிருந்தார். எனவே மூன்றாவதாக சீனப் பெண் ஒருத்தியை மர்டாக் மணந்துகொண்டார். விரைவில் சீன அரசிடமிருந்து தொலைக்காட்சி உரிமத்தையும் பெற்றார்.

இந்த ஒரு நிகழ்ச்சி பொதும், மர்டாக்கின் குணத்தைப் புரிந்துகொள்ள. ஒரு மனிதன், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; சட்டங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், எத்தனைதான் புத்திசாலியாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானவன். அப்படிப்பட்ட மனிதனுடன் உறவாடும் பிரரும் நாட்டின் அரசுகளும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதரான மர்டாக்கின் தொழில் வாழ்க்கையைப் பற்றி மிக ஆழமாக அலசி விவிரிக்கிறது இந்த நூல். இந்தியாவில் பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தும் மர்டாக்கைப் பற்றி இந்திய மக்களும் இந்திய அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்கவேண்டும்.

Virtual Murdoch: Reality Wars on the Information Highway
Neil Chenoweth
Vintage
Published in 2001

Tuesday, July 19, 2011

நாய்களைத் தின்னும் நாய்கள்

ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் டாப்லாய்ட் பத்திரிகை சென்ற வாரம் இழுத்து மூடப்பட்டது. பிரிட்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மூன்றாம்தர வாரப் பத்திரிகை இது.

பிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.

இணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்!

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து யார்டு லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறை ஆணையர் பதவி விலகியுள்ளார். (இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆலோசகர் வேலை அளித்தார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு.) மர்டாக் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நபருக்கும் நெருங்கிய நண்பரக இருக்கிறார் என்பது இப்போதைய பிரிட்டன் பிரதமர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் புண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.

Wednesday, July 13, 2011

சரவணனுடன் ஒரு நேர்முகம்

சரவணன், ‘மனம் மலரட்டும்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருபவர். பலரிடமிருந்து நன்கொடைகள் பெற்று, திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகளை இலவசமாக நடத்திவருகிறது இந்த அமைப்பு. இதன்மூலம் பல பிள்ளைகள், பொறியியல் படிப்புகளில் சேர வழி செய்துகொடுத்துள்ளார். அதனைப் பாராட்டி சமீபத்தில் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் இவருக்கும் இவரது அமைப்புக்கும் விருது ஒன்றைக் கொடுத்தது.

சரவணன் கையில் ஒரு பைசா இல்லாமல், பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். நிறைய தைரியம்தான்!

இன்று என்னுடன் பேச வந்திருந்தார். அதனை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து உங்கள் அனைவருக்கும் காட்டலாம் என முடிவெடுத்து உடனேயே அவரைப் பிடித்துவிட்டேன். தமிழகத்தில் கல்வி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவைக் கட்டாயம் பார்க்கவும்.



சரவணனைத் தொடர்புகொள்ள: 99528-59239 அல்லது manam.malarattum@gmail.com

கவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்துக்கு, அவருடைய அனைத்துப் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி தரப்படும். இந்தச் சலுகை ஒரு வாரத்துக்கு மட்டுமே. உடனடியாக, உங்களுக்கு விருப்பமான வைரமுத்து புத்தகங்களை இணையம் மூலம் வாங்குங்கள்.

அச்சில் உள்ள அவருடைய புத்தகங்களின் முழுப் பட்டியலைக் காண இங்கு செல்லுங்கள்.