Saturday, April 26, 2008

கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்

இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், குரோம்பேட்டை வளாகம், ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர். சிஃபி அண்ணா கண்ணன் வந்திருந்தார்.

இது ஓர் இன்ஃபார்மல் சந்திப்பு. தமிழ்க் கணிமையில் இப்போது என்ன நிலை, யார் யார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இனி என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொதுவான பேச்சாக இருந்தது.

AU-KBC மையத்தின் இயக்குநர் பேரா. சி.என்.கிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உபுண்டு தமிழ் ஆர்வலர் ராமதாஸ், NRCFOSS-ல் வேலை செய்கிறார். அவர் முன்னின்று இந்த அமர்வை கவனித்துக்கொண்டார்.

விளக்கமான செய்திகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து வரும். கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

அடிப்படை நோக்கம்: இணையத்தில் இந்திய மொழிகளில் (தமிழில்) செய்தி/தகவல்/விஷயங்களைக் கொண்டுவர உதவுவது. To enable creating Indian language (Tamil) content on the net. அதற்காக

1. NRCFOSS மூலம் ஓர் இணையத்தளத்தை உருவாக்குதல். அங்கே தமிழ் மென்பொருள் தொடர்பாக கல்வி நிலையங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தல்.
2. மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான ஒரு கூகிள் குழுமத்தை ஏற்படுத்துதல்.
3. இணைய மாத இதழ் ஒன்றை ஏற்படுத்துதல்.
4. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்துதல்.

*

இந்தச் சந்திப்பில் ஏற்கெனவே நான் அறிந்த பலர் என்ன புதுமையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பேரா. கிருஷ்ணமூர்த்தி ஒளிவழி எழுத்துணரி (OCR), பேரா.தெய்வசுந்தரம் (Tamil spellchecker, morphological analyser), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஒருவர் தமிழ்-மலையாளம், மலையாளம்-தமிழ் அகராதி ஆகியவற்றில் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று விளக்கினர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் text-to-speech, voice recognition ஆகியவை தொடர்பாகச் சில காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். Sourceforge-ல் கட்டற்ற மென்பொருளாகச் சிலவற்றைச் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.

NHM Converter-ஐ கட்டற்ற மென்பொருளாக மாற்ற, லினக்ஸில் வேலை செய்யவைக்க என்ன செய்வது என்பது பற்றிப் பேசினோம். விரைவில் அது நடக்கும். கூடவே NHM Converter, இலவச இணையச் சேவையாகவும் வெளியாகும்.

இன்றைய கூட்டத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு, NHM நிறுவனத்தால் பல மென்பொருள் திட்டங்களைச் செய்யமுடியும். அங்கு வந்த பிறராலும் பல புதிய, உபயோகமான மென்பொருள்களை உருவாக்கமுடியும்.

கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி செய்வோருக்கும் தொழில்துறையில் வேலை செய்வோருக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைக்கவேண்டியது அவசியம்.

Wednesday, April 23, 2008

புத்தகங்களை விற்பது - 2

ஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டி

இன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.

இதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை எடுத்துக்கொண்டு புத்தகங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த பைலட் முயற்சியில் இப்போது ஒரு வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் விரிவாக்கப்படலாம்.



தற்போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த வேன் இப்போது அலைந்துகொண்டிருக்கிறது.



பட்டுக்கோட்டையில் தெருவில் கடைபோட்டு விற்றபோது எடுத்த அசைபடம் கீழே.

Tuesday, April 22, 2008

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு

24 ஏப்ரல் 2008 அன்று மியூசிக் அகாடமி அரங்கில் டாக்டர் அப்துல் கலாம், மதியின் பாக்கெட் கார்ட்டூன்கள் ‘அடடே' ஆறு தொகுதிகள் அடங்கிய செட்டை வெளியிடுகிறார். புத்தகங்களைப் பெற்றுக்கொள்கிறவர்கள் சுவாமி ஆத்மகனானந்தா மஹராஜ், ராமகிருஷ்ண மடம், ஜெயகாந்தன், கல்கி ராஜேந்திரன், சாலமன் பாப்பையா, மனோரமா, கிரேஸி மோகன் ஆகியோர்.

நிகழ்ச்சி நிரல்:

1. மதியம் 2.00 - 3.00 : மதி கார்ட்டூன்களில் ஒளிக்காட்சி
2. 3.00 மணிக்கு கடவுள் வாழ்த்து
3. வரவேற்புரை: கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
4. புத்தக வெளியீடு
5. கார்ட்டூனிஸ்ட் மதி பேச்சு
6. 'ஊடகங்களில் கார்ட்டூனின் பங்கு' என்பது பற்றி அப்துல் கலாம் உரை
7. நன்றியுரை - பத்ரி சேஷாத்ரி
8. தேசிய கீதம்

விழா மாலை சுமார் 4.00 மணிக்கு நிறைவுபெறுகிறது.

Saturday, April 19, 2008

புத்தகங்களை விற்பது - 1

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த தினத்துக்கு அடுத்த தினம், கிரிக்கின்ஃபோவிலிருந்து முற்றிலுமாக விலகி, முழுநேர ஊழியனாக நியூ ஹொரைசன் மீடியாவில் சேர்ந்தேன். நேற்றோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

பதிப்பகத் தொழிலைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேவையான அளவு மூலதனம் இந்தத் தொழிலுக்கு இதுவரையில் வரவில்லை. பதிப்புத் தொழில் என்றால் அதில், புத்தக உருவாக்கம், அச்சிடுதல், கட்டுமானம், புத்தக விற்பனைக் கட்டுமானம் என அனைத்தும் அடங்கும். இதில் அச்சிடுதல், கட்டுமானம் (பைண்டிங்) ஆகியவை இயந்திரத் தொழில்நுட்பம் சார்ந்தவை. இங்குதான் ஓரளவுக்கு முதலீடு வந்துள்ளது. இன்று இந்தியாவின் பெருநகரங்கள் சிலவற்றிலும், சிவகாசியிலும் உலகத்தரம் வாய்ந்த அச்சு இயந்திரங்கள், தாள்களை மடிக்கும் இயந்திரங்கள், தானியங்கி பைண்டிங் இயந்திரங்கள் போன்றவை உள்ளன. உலகின் பல முக்கியமான பதிப்பாளர்கள் சிவகாசியிலும் சென்னையிலும் புத்தகங்களை அச்சிட்டு, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்து விற்கிறார்கள்.

அடுத்ததாக, pre-press துறையில், அதுவும் முக்கியமாக ஆங்கிலத்தில், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஐடி போன்றே, இந்த முன்னேற்றங்களும் அந்நிய நாட்டு வேலைகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதற்காகவே தோன்றியுள்ளன என்றாலும் விரைவிலேயே இந்தத் திறன், இந்தியப் புத்தகத் தயாரிப்புக்கும் பயன்படும். இந்தத் துறையிலும் சென்னை இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது. உலகின் பல அறிவியல், பொறியியல், மருத்துவத் துறை ஜர்னல்கள் எடிட் செய்யப்பட்டு, டைப் செய்யப்பட்டு, அச்சாக்க ரெடியாக அனுப்பப்படுவது சென்னையில் இருந்துதான். அமெரிக்காவில் விற்கப்படும் பல கல்லூரிப் பாடத்திட்டப் புத்தகங்கள் டைப்செட் செய்யப்படுவது இப்போது சென்னையில்தான்.

இந்தியாவைச் சேர்ந்த பல pre-press நிறுவனங்களும் இன்று அமெரிக்காவில் இருக்கும் அதே துறை நிறுவனங்களை வாங்க ஆரம்பித்துள்ளன.

***

ஆனாலும் இந்தியப் பதிப்பகங்கள் முதலீடு போதாமை, பதிப்பகத் தொழில் நுணுக்கம் போதாமை ஆகியவற்றால் திசை தெரியாமல் தடுமாறுகின்றன. சின்னஞ்சிறு நிறுவனங்களாக இருப்பதால் சந்தையில் ஏற்படும் மாறுதல்கள் இவர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் நூலக ஆணையை நம்பி இருப்பது இதனால்தான். தமிழ்ப் புத்தகச் சந்தையை விரிவாக்க பதிப்பாளர்கள் பெரும் முயற்சி எதையும் எடுக்கவில்லை. அதற்கு ஏற்ற திறன் வாய்ந்தவர்களை பதிப்புத் தொழிலுக்குள் அவர்கள் கொண்டுவரவில்லை.

இன்றைய தமிழ்ப் புத்தகச் சந்தை என்பது என்ன?

1. தமிழக நகரங்கள் பலவற்றிலும் இருக்கும், தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே வைத்து விற்கும் கடைகள். இவை பெரும்பாலும் 200-300 சதுர அடி கொண்டதாக இருக்கும். சில மட்டுமே 800-1,000 சதுர அடியைத் தொடும். நான்கைந்து கடைகள் மட்டுமே 1,000 சதுர அடிக்குமேல் இருக்கும். இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தால் தமிழகத்தில் சுமார் 600-700 கடைகள் இருக்கலாம்.

2. பொதுவாக ஆங்கிலப் புத்தகங்களையும், கூடவே கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்களையும் வைத்து விற்கும் லேண்ட்மார்க் போன்ற சென்னைக் கடைகள்.

3. இவற்றுடன் தெருவோரப் பெட்டிக் கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், மருந்துக்கடைகள் என்று எங்கெல்லாம் FMCG பொருள்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்களையும் விற்கமுடியும். எங்களது நிறுவனம் அதனைச் செய்துகாட்டியுள்ளது. மக்களுக்கு மத்தியில் புத்தகக் கடை இல்லை என்றால், அதற்கு மாற்றாக, இந்தக் கடைகளால் உபயோகமான காரியத்தைச் செய்யமுடிகிறது.

4. புத்தகக் கண்காட்சிகள்

5. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் சொந்தமான ஷோரூம்கள்

6. மனி ஆர்டர், வி.பி.பி, அஞ்சல்மூலம் காசோலை, வரைவோலை வழியாகப் புத்தகங்கள் வாங்குவது.

7. இணையம் வழியாக, கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிக் கணக்கு வாயிலாகப் புத்தகம் வாங்குவது.

8. பல நேரடி முறைகள் (book club போன்றவை) இப்போதைக்கு அதிகம் செயல்படுத்தப்படவில்லை.

9. Institutional விற்பனை. சில புத்தகங்களை ஒரு நிறுவனம் (கல்வி நிறுவனம், தொழிற்சாலை ...) மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.

10. மேற்கொண்டு பல வழிமுறைகள் இருக்கலாம்.

***

ஆனால் இவற்றில் மிக முக்கியமானது, கடைகளில் நேரடியாக விற்பது. புத்தக சில்லறை விற்பனைக் கடைகள் இப்போது இருக்கும் எண்ணிக்கை போதாது. இந்தத் துறையில் பெரிய அளவு முதலீடு தேவை. ஆனால் எல்லா சில்லறை விற்பனையிலும் இருக்கும் பிரச்னை, இங்கு நேரடி அந்நிய முதலீடு கிடையாது. FIPB-யிடம் அனுமதி பெற்றால்தான் முடியும். கொள்கை அளவில் இதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கையும் மசாலா தூளையும் விற்பதில் அந்நிய முதலீடு என்பது ஒரு விஷயம். அங்கே பெருமளவு கடைகள் ஏற்கெனவே உள்ளன. அதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படலாம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் புத்தகங்கள் போன்ற துறைகளில் இது தேவையும் அவசியமானதும் ஒன்று. ஒரு புத்தகப் பதிப்பாளனாக, புத்தக விற்பனைத் துறையில் அந்நிய முதலீடு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்தது புத்தக விநியோக நிறுவனங்கள். ஆங்கிலத்தில் IBD, IBH போன்றவை பல பதிப்பாளர்களுடைய புத்தகங்களை ஒன்றுதிரட்டி கடைகளுக்கு விற்பனை செய்கின்றன. லேண்ட்மார்க்கின் East-West, ரூபா அண்ட் கோ, ஜெய்கோ, UBS போன்ற பலரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இந்த வேலையைச் செய்துவருகின்றனர். ஆனால் தமிழ்ப் புத்தகங்களை ஒன்றுதிரட்டி, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய வகையில் யாரும் இல்லை. இதனால் ஒவ்வொரு தமிழ் பதிப்பாளரும் ஒவ்வொரு தமிழ்ப் புத்தக விற்பனையாளரிடம் நேரடி அக்கவுண்ட் வைத்திருக்கவேண்டியுள்ளது. இதனை எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

பல தமிழ் பதிப்பாளர்கள், புத்தகம் வேண்டும் என்றால் என் 'அலுவலகத்துக்கு' வந்து வாங்கு என்று சொல்கிறார்கள். வேறு பலரோ, ஒரு அல்லது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதையும் கவர் செய்யவேண்டும். இது முடியாத காரியம். புத்தகத்தைக் கொடுத்துவிட்டாலும், பணத்தை திரும்பப் பெறுவது பெரிய காரியம். பல பதிப்பாளர்களும் இதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்திருப்பார்கள். இதனால் வியாபாரத்தைப் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்ல பலரும் விரும்புவதில்லை. ஓவெர்ஹெட் செலவுகளைக் குறைத்து, ‘ஏதோ கொஞ்சம் லாபம் வந்தால் போதும்' என்ற எண்ணத்தில் தொழிலை நடத்தும் பதிப்பாளர்களே அதிகம்.

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் தமிழகம் முழுவதிலும் கடைகளுக்கு விற்பனை செய்ய 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை வேலைக்கு வைத்துள்ளோம்.


இவர்கள் ஒரு கடைவிடாமல் சென்று, நியூ ஹொரைசன் மீடியா புத்தகப் பட்டியலைக் கொடுத்து, புத்தகங்களுக்கான ஆர்டர்களைப் பிடித்து, புத்தகங்கள் அந்தக் கடைக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு பணம் வசூல் செய்வதிலும் கவனமாக உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தமிழக மாவட்டம் கணக்கு. பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். விற்பனையை புதிய கடைகளுக்கு விஸ்தரிப்பது, புதுப் புது உணவகங்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் புத்தகங்களைக் கொண்டுசேர்ப்பது இவர்களது நோக்கம். இத்துடன் ஒவ்வொரு பெரு நகரத்திலும் சில விநியோகஸ்தர்களை நியமித்துள்ளோம். இவர்கள் உள்ளூர் ஸ்டாக்கிஸ்டுகளாகவும் உள்ளனர்.

இந்த மாதிரியான பெரிய விற்பனைக் குழுவைத் திரட்டுவது அனைத்துப் பதிப்பாளர்களுக்கும் சாத்தியமில்லாது இருக்கலாம். எனவே இங்கே உடனடித் தேவை என்று நான் கருதுவது புத்தக distribution நிறுவனங்களை. அதற்கான முயற்சிகள் புத்தகச் சந்தையை விரிவாக்குவதில் மிகவும் அவசியம்.

(தொடரும்)

Sunday, April 13, 2008

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்

'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.

காந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல லட்சம் பிரதிகள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் புத்தகம் இது. ஆனால் வாங்குவோரில் 100-க்கு 3 பேர்கூட இதனைப் படிப்பார்களா என்று தெரியாது. இந்தப் புத்தகம் காந்தியின் முழு சுயசரிதை கிடையாது என்பதே பலருக்குத் தெரியாது. முக்கியமாக இந்திய விடுதலையில் காந்தியின் பங்கு என்ன என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனெனில் இது 1921 வரையிலான காந்தியின் வாழ்க்கையில் உள்ள செய்திகளை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் நான் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் படித்தபோது அதிக ஏமாற்றத்தை அடைந்தேன். காந்தியின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் லூயி ஃபிஷரின் Gandhi, His Life and Message for the World. இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு (தி.ஜ.ரங்கநாதன்) பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியானது. ஆனால் இப்போது கிடைக்கிறதா என்று தெரியாது.

உண்மையான காந்தியை, அவரது கொள்கைகளை அன்று, அவரது செயல்முறைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம். இதனையும் ஏராவாடா சிறையில் அவர் குஜராத்தியில் சொல்லச் சொல்ல இந்துலால் யாக்னிக் எழுதி, வால்ஜி தேசாயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் தி.சு.அவினாசிலிங்கம், நா.ம.ரா.சுப்பராமன், டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் கொஞ்சம் கரடுமுரடுதான். ஆங்கிலம் படிக்கமுடியும் என்றால் ஆங்கிலத்திலேயே படித்துவிடுங்கள்!

இந்தப் புத்தகத்தை நான் படித்து நெகிழ்ந்துபோயுள்ளேன். இதுவரை இரண்டுமுறை முழுவதுமாகப் படித்துள்ளேன். எந்தப் புத்தகத்தையும் படிக்கும்போது இந்த அளவுக்கு ‘எமோஷனல்' ஆனதில்லை. காந்தியின் ஆகப்பெரிய சாதனை அவர் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான். அதன்பிறகு அவர் இந்தியாவில் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒருமுறை நானும் ஆர்.வெங்கடேஷும் கணையாழி கஸ்தூரி ரங்கனைப் பார்க்கச் சென்றபோது அவர் சொன்னார்: ‘காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு மனிதனாகச் சென்றார், மகாத்மாவாகத் திரும்பி வந்தார்.' இன்று புத்தகத்தை அறிமுகம் செய்த ஆ.கி.வெங்கடசுப்ரமணியனும் அதையே சொன்னார். முற்றிலும் உண்மை.

இந்திய விடுதலை பற்றி இதைப்போன்றதொரு புத்தகத்தை எழுதாமல் காந்தி கொல்லப்பட்டது நம் பேரிழப்பு.

இந்தப் புத்தகத்தில் சத்தியாக்கிரகம் என்ற போராட்ட முறை எப்படி உருவானது என்பதை துளித்துளியாக விளக்குகிறார் காந்தி.

காந்தியின் அகிம்சை முறைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிலர், ஆங்கிலேயனாக இருந்ததால்தான் காந்தியின் போராட்டமுறை வெற்றிபெற்றது; ஹிட்லராக இருந்தால் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பான் என்கிறார்கள். சமீபத்தில்(!) டோண்டு ராகவனும் இப்படியே தன் கேள்வி-பதிலில் எழுதியிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க போ'அர் (Boer) தலைவர்களது நடத்தை பற்றி அறியாதவர்கள்தாம் இப்படிப் பேசுவர். நடத்தையில் பிரித்தானியர்களைப் போலன்றி, ஜெர்மானிய நாஜிக்கள் போலவே இவர்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்துகொண்டனர். காந்தி இந்தியர்களுக்குச் சலுகைகள் பெற்றுக்கொடுத்தபின்னரும், போ'அர்கள் கறுப்பர்களிடம் படுமோசமாகவே நடந்துகொண்டனர். அதனை எதிர்கொள்ள ஒரு நெல்சன் மண்டேலா பிறக்கவேண்டியிருந்தது.

காந்தியையும் சத்தியாக்கிரக அறப்போர் முறையையும் புரிந்துகொள்ள அனைவரும் தவறாது படிக்கவேண்டிய புத்தகம் இது. இப்போது தமிழிலும் மலிவு விலையில் (ரூ. 30) கிடைக்கிறது. கிடைக்கும் இடம்: காந்திய இலக்கியச் சங்கம், தமிழ்நாடு காந்தி நினைவு வீதி, மதுரை 625020. தொலைபேசி எண்: 0452-2533957

முந்தைய பதிவு