Tuesday, January 31, 2012

புதுக்கோட்டை பயணம் - 4

இசையை அழித்து நீதி

லிங்கோத்பவருக்கு அருகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதற்கு வருவதற்குமுன், சிவனின் சந்நிதியின் கிழக்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. பார்க்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய கதை.

சிவன் குடைவரை கட்டப்பட்டது 7-ம் நூற்றாண்டு; விஷ்ணு குடைவரை கட்டப்பட்டது 8-ம் நூற்றாண்டு என்கிறார்கள். இரண்டையுமே பாண்டியர்கள் அல்லது அவர்கள்கீழ் இருந்த சிற்றரசர்கள் தோற்றுவித்தனர். அதன்பின், மேற்கொண்டு கட்டுமானங்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட இரு கோவில்களையும் நிர்வகித்து வந்தவர்கள் இடையே 12-ம் நூற்றாண்டில் சண்டை ஏற்பட்டது. சொத்துத் தகராறு.

இந்தச் சண்டை விரிவாகி ஒரு கட்டத்தில் இரு கோவில்களுமே இழுத்து மூடப்பட்டன. இப்படியே நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்.

13-ம் நூற்றாண்டு. சோழ சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து, பாண்டியர்களும் ஹோய்சாளர்களும் இணைந்து தமிழகத்தை அப்போது ஆண்டுவந்தனர். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னராக இருந்த காலகட்டம். அப்போது ஹோய்சாளத் தளபதிகளான ரவிதேவன், அப்பண்ணன் ஆகியோர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்யப்பட்டது. அதன் விளைவாக எழுந்த ஒப்பந்தத்தைத்தான் இந்த கிழக்குச் சுவரில் விரிவாகக் காணலாம்.

தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) அத்துடன் இரு கோவில்களுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்படும்.

இந்தக் கல்வெட்டு இதனையெல்லாம் விரிவாகப் பேசுகிறது. கல்வெட்டின் இறுதியில், ‘மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தீர்ப்பு எழுதப்பட்டிருப்பது தமிழில். அழிக்கப்பட்டிருப்பது, பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்றை. அதன் எச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். (அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது!)

அப்படி எதைத்தான் அழித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அழிக்கப்பட்டதைப் போல அச்சு அசலான ஒரு கல்வெட்டு குடுமியான்மலையில் உள்ளது. அழிபடாமல் இருக்கும் முதல் எழுத்துகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அது இசை பற்றிய கல்வெட்டு. இதனை குடுமியான்மலை செல்லும்போதுதான் நாங்கள் பார்க்கப்போகிறோம். அப்போது இதைப் பற்றி விரிவாகவே பார்ப்போம்.

மறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.

நாயக்கர் காலத்தில் இந்தக் கோவில்கள் இரண்டும் மேலும் அதிகமாக விரிவாக்கப்பட்டு பல்வேறு முன் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மலையின் மேல் கோட்டை

திருமெய்யம் குன்றின் அடிவாரத்தில் இந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இதே மலையின் தொடர்ச்சியில் சற்றே மேற்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இதனைக் கட்ட பல மாதங்கள்/வருடங்கள் ஆகியிருக்கும். பெரிய மதில் சுவர்கள், அகழிகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. ஏழு சுவர்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால் மூன்று சுவர்களை ஆங்காங்கே காண முடிகிறது. இந்தக் கோட்டையைக் காணச் செல்ல தொல்லியல் துறை 5 ரூபாய் வசூலிக்கிறது. நீங்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால், தொல்லியல் துறைக்கு நீங்கள் இந்தியர்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. வெளிநாட்டவர் என்றால் மேலே செல்லக் கட்டணம் ரூ. 100. அதே நேரம் சுத்தமான தமிழில் பேசினால் நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகம். எனவே தமிழர்களுக்கே உரித்தான அரைகுறைத் தமிழில் பேசுவது நலம்.

இந்தக் கோட்டையில் பார்க்க என்று பெரிதாக ஏதும் இல்லை. இரண்டு விஷயங்களைத் தவிர.

ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சிவனுக்கு ஒரு குடைவரை கட்டப்பட்டுள்ளது. இதுவுமேகூட ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்கவேண்டும். துவாரபாலகர்கள் யாரும் இல்லை. மிகச் சிறிய கருவறையில் ஒரு லிங்கம் தென்படுகிறது. அருகில் சுவரில் நாம் கீழே பார்த்ததுபோல ‘பரிவாதினிதா’ என்று பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டு, சுற்றி இரட்டை ஃபிரேம் போடப்பட்ட எழுத்துகள் தெரிகின்றன.

இந்தச் சந்நிதிக்குப் போவதற்கு தொல்லியல் துறை, தரையிலிருந்து இரும்பு ஏணி ஒன்றை இப்போது வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் என்ன செய்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. வழிபாடே இல்லாத கோவிலோ இது என்றும் எண்ணலாம். அவ்வளவு உயரத்தில் யாருமே நெருங்காதபடிக்கு இப்படி ஒரு கோவிலை வெட்டுவித்தது ஏன்? அதனருகில் இருக்கும், தொடரும் ‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை?

(தொடரும்)

Saturday, January 28, 2012

எக்ஸைல் விமர்சனக் கூட்டம்

4 பிப்ரவரி 2012, சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை, சாரு நிவேதிதா எழுதியுள்ள எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடக்க உள்ளது.

எழுத்தாளர் ஞாநி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

நாவல் பற்றிய தங்கள் கருத்துகளை வாசகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்.

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

Friday, January 27, 2012

புதுக்கோட்டை பயணம் - 3

மெய்நிகர் உலகில் இன்னும் நாம் திருமெய்யத்திலிருந்தே கிளம்பியபாடில்லை. ஆனால் மெய்யுலகிலோ, இன்னும் சில நிமிடங்களில் (காலை 5.30 மணி) நார்த்தாமலைக்குக் கிளம்பவேண்டும். காலை சூரிய உதயத்தின்போது நார்த்தாமலை விஜயாலய சோழீசுவரத்தில் இருக்கவேண்டும் என்பது திட்டம். காலை முழுதும் நார்த்தாமலை, கடம்பர் மலை. மதியம் சித்தன்னவாசல். இன்று இவை மட்டும்தான்.

இப்போது திருமெய்யத்துக்கு வருவோம்.

திருமெய்யம் சிவன் கோவில்

இரு கோவில்களில் சிவனுக்கான கோவில்தான் முதலில் குடையப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பேரா. சுவாமிநாதன். விண்ணவர் கோவில் அடுத்ததுதான். குகை கிழக்கு நோக்கிய வாசலைக் கொண்டிருந்தாலும் அர்தமண்டபத்தில் ஏறினால் சிவனின் கருவறை தெற்கு நோக்கியுள்ளது. வாசலில் இரு துவாரபாலகர்கள்.

பல்லவ வாயிற்காப்போன்கள் போல் முகத்தில் அந்த அளவுக்கு அழகு இல்லை, என்றாலும் சிற்ப நேர்த்தி வெகு நன்றாகவே உள்ளது. வலதுபுறம் உள்ள வாயிற்காப்போன் ஒரு பெரும் தடியின்மீது கையை ஊன்றியபடி இருக்கிறான். சிவ துவாரபாலகர் அடையாளம் இது. அவனுடைய உருவ அளவையும் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அந்தத் தடியில் மூன்று சுற்றுகளில் ஒரு மலைப்பாம்பு காட்டப்படுகிறது என்று விளக்கினார் மதியழகன். தமிழ்ப் பேராசிரியர். புதுக்கோட்டை பற்றி நன்கு அறிந்தவர். சிற்பங்களில் காணப்படும் யாளிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இதுவரையில் 28 வெவ்வேறு யாளிகளைப் பற்றி எழுதி வைத்திருப்பதாகவும் 50 ஆனவுடன் ஒரு புத்தகம் எழுதப்போவதாகவும் சொன்னார்.

பிற்காலத்தில் இந்த மலைப்பாம்பு ஒரு யானையைக் கவ்வுவதுபோலக் காண்பிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம். ஆக, வாயிற்காப்போன் வைத்துள்ள தடி எவ்வளவு பெரியது? மலைப்பாம்பைப் போல பல மடங்கு. மலைப்பாம்பு எவ்வளவு பெரியது? ஒரு யானையையே கவ்வி விழுங்கும் அளவுக்குப் பெரியது. அப்படியானால் அந்த வாயிற்காப்போனின் உருவ அளவு?

இடது வாயிற்காப்போன், கையில் ஆயுதம் ஏதும் இன்றி, விஸ்மய முத்திரையைக் காட்டியபடி உள்ளான். இருவரது தலைக்கவசங்களும் மாறுபட்ட வடிவுடையதாக உள்ளன.

கருவறை உள்ளே உள்ள ஆவுடையுடன் சேர்த்த சிவலிங்கம் அந்த மலையிலிருந்தே குடைந்து உருவாக்கப்பட்டது. ஆவுடையும் வட்ட வடிவானது.

லிங்கத்துக்கு நேர் எதிராக லிங்கோத்பவ மூர்த்தியைப் பார்க்கலாம். நல்ல பெரிய சிற்பம். பொதுவாக நீங்கள் சிவத் தலங்களில் பார்க்கும் லிங்கோத்பவரிலிருந்து மாறுபட்டது.

லிங்கோத்பவர் உருவம், சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற காட்சியை விளக்குவது. யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் விவாதித்துக்கொண்டு சிவனிடம் செல்ல, அவர் யார் முதலில் தன் அடியை அல்லது முடியைக் கண்டறிகிறாரோ அவர்தான் பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றி உருவமாகித் தரையைத் தோண்டிக்கொண்டு செல்ல, பிரமன் அன்ன உருவில் வானில் பறந்துசெல்ல, இறுதியில் இருவருமே தோற்கின்றனர்; சிவனே பெரியவன் என்பதை உணர்கின்றனர் என்பதாகச் செல்லும் கதை. இதில் லிங்க வடிவுக்குள் சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் முடியின் உச்சியும் காலில் அடியும் காட்டப்பட்டிருக்காது. அதே நேரம் மேல் இடது ஒரத்தில் அன்னப் பறவை, கீழ் வலது, இடது அல்லது நடுவில் ஒரு வராக உருவம் காட்டப்பட்டிருக்கும். சில இடங்களில் இதைத் தாண்டி இரு பக்கமும் பிரமனும் விஷ்ணுவும் காட்டப்பட்டிருப்பார்கள்.

ஆனால் இங்கே உள்ள லிங்கோத்பவரில் சிவனின் ஜடாமுடி நன்கு தெரியும். கால்கள் தெரியாது. சிவனின் ஆடையலங்காரம் மிக மிக அழகாக இருப்பதைக் காணலாம். லிங்கோத்பவர்களிலேயே மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பம் இது. ஆனால் ஆகம வரையறைகள் வருவதற்குமுன் (கதைகள் உருவாவதற்குமுன்) செய்யப்பட்டதாக இது இருக்கவேண்டும் என்கிறார் சுவாமிநாதன். அதனால்தான் அன்னமும் வராகமும் காணப்படுவதில்லை. பல்லவர்களின் கலையில் கைலாசநாதர் கோவிலிலிருந்துதான் லிங்கோத்பவரை நீங்கள் காணமுடியும்.

(தொடரும்)

Thursday, January 26, 2012

புதுக்கோட்டை பயணம் - 2

முதல் நாள் பயணம்: திருமெய்யம் (திருமயம்), ஆவுடையார்கோவில், இரும்பாநாடு

(இந்தப் பயணத்தில் நான் படம் ஏதும் எடுக்கப்போவதில்லை. எனவே வெறும் எழுத்து மட்டும்தான்.)

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் காலை புதுக்கோட்டை வந்து சேர்ந்தோம். குளித்து, காலை உணவு முடித்தபின், 8.30-க்குக் கிளம்பி திருமெய்யம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் அது நடக்காது என்பது தெரியும். சுமார் 40 பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராகுவது எளிதல்ல. தங்குமிடத்திலிருந்து அனைவரும் கிளம்பி பப்ளிக் ஆபீஸ் எனப்படும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு வரும்போது மணி 9.30. அங்கே நகரின் சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். இந்தப் பயணத்தின்போது எங்கள் வசதிக்கென ஒரு பேருந்தை அளித்திருக்கும் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வந்திருந்தார்.

முன்னாள் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் (Grand Commander, Indian Empire!) சிலைக்குமுன் நின்று அறிமுக உரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கும்போது புதுக்கோட்டையில் இருக்கும் பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி சானல் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். அனைவரும் படம் எடுக்க, வீடியோ எடுக்க கொஞ்சம் நேரம் செலவானது.

நாங்கள் இந்தப் பயணத்துக்காக என்று உருவாக்கியிருந்த கையேட்டை (ஆங்கிலத்தில் உள்ளது) அனைவருக்கும் அளித்தோம். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே அனைவரும் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் இது வெறும் கையேடுதான். விரைவில் ஒரு புத்தகமே தயாராகும்.

இறுதியாக திருமெய்யம் கிளம்பியபோது மணி 10.30.

திருமெய்யம் விண்ணவர் கோவில்

திருமெய்யம் ஒரு குன்று. அந்தக் குன்றின்மேல் பிற்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. அந்தக் கோட்டையை கெட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஓரிரவில் கட்டிமுடித்ததாக நம்பவே முடியாத ஒரு புனைகதை இந்தப் பகுதிகளில் உண்டாம். அதன் காரணமாக, ஊமையன் கோட்டை என்று இந்தக் கோட்டை அழைக்கப்படுவதுண்டு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இருவான அந்தப் பெயர், பின்னர் புதுக் கதையாகத் திரிந்திருக்கவேண்டும்.

அந்தக் குன்றின் கீழ்ப்புறம்தான் இரண்டு குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யார் கட்டுவித்தது என்று தெரியவில்லை. பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி இது. அவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர்கள் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இரு குடைவரைக் கோவில்களையும் பிற்காலத்தில் விஜயநகர, நாயக்க மன்னர்கள், ஆளுநர்கள் விரிவாக்கிக் கட்டியுள்ளனர்.

திருமெய்யம் விண்ணவர் (விஷ்ணு) கோவிலில் காணப்படும் அனந்தசயன மூர்த்தி மிகப் பிரமாதமானது. ‘அனலால் அலறும் அரக்கர்கள்’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரே எங்களுடன் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு வேலை என்பதால் வரமுடியவில்லை. அனந்தசயனப் பெருமாள் தமிழகத்தில் பல பகுதிகளில் இருப்பதோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறார்.

இந்து சிலையமைப்பைப் பொருத்து, சயனமூர்த்தி, யோக, போக, வீர சயனமூர்த்தி என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறார். யோகமூர்த்தியை வழிபடுவது முக்தியைக் கொடுக்கும்; போகமூர்த்தியை வழிபடுவது செல்வத்தைக் கொடுக்கும். வீரமூர்த்தியை வழிபடுவது வீரத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

திருமயம் சயனமூர்த்தி போக சயனமூர்த்தி. மாபெரும் புடைப்புச் சிற்பம். 70 எம்.எம் சினிமாத் திரை போல ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஒரு வளைந்த வட்டத்தில் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் சிவராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார். மாமல்லபுரம் முதற்கொண்டு பல இடங்களில் காணப்படும் சயனமூர்த்தி இப்படிக் கிடையாது. ஏனெனில் அவை சிறு கட்டத்துக்குள் வருபவை. ஆனால் இங்குள்ள விரிந்து பரந்த சிற்பத்தை இப்படித்தான் செதுக்கவேண்டும்!

நித்திரையில் விண்ணவர் படுத்திருக்கிறார். வலது கரம் நாகத் தலையை ஒட்டி நீண்டுள்ளது. இடது கரம் கடக முத்திரையைக் காட்டியுள்ளது. வலது கால் நீண்டிருக்க, இடது கால் சற்றே மேலெழும்பி உள்ளது. கண்கள் பாதி மூடியுள்ளன. திருமகள், நிலமகள் இருவரும் இருக்கவேண்டும். திருமகள் தோள்புறத்திலும் நிலமகள் கால்புறத்திலும் (போக சயனமூர்த்தி என்றால் இதுதான் ஆகம முறை). ஆனால் திருமகளைக் காண முடிவதில்லை. காலடியில் நிலமகள் அமர்ந்திருக்கிறாள்.

மார்க்கண்டேயர், பிருகு என்ற இரு மகரிஷிகளும் காலடியில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒரு ரிஷி கண்ணுக்குத் தென்படுகிறார். மற்றொருவர் காணவில்லை. உத்சவ மூர்த்தி அவரை மறைத்திருக்கவேண்டும்.

கருடன் தலைமாட்டில் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு நேர்மேலே சூரியன். மறுகோடியில் சந்திரன்.

நாபிக்கமலத்திலிருந்து பிரமன். அவருக்கு இரு புறமும், தும்புரு, நாரதர், சனத்குமாரர்கள் நால்வர், ஆயுதபுருஷர்கள் ஐவர், சப்தரிஷிகள் எழுவர், அஷ்ட திக்பாலர்கள் எண்மர் என நிறைந்திருக்கவேண்டும். அவர்கள் அனைவரையும் மேலே காண்பீர்கள். ஐந்து ஆயுதபுருஷர்கள் பறக்கும் கோலத்தில் இருப்பார்கள். விஷ்ணுவின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், வாள், வில், கதை. (மாமல்லபுரத்தில் இரு ஆயுத புருஷர்களை மட்டுமே காணலாம்.) இந்த ஐந்து ஆயுத புருஷர்களும் யாரை நோக்கிச் செல்கிறார்கள்?

விண்ணவரின் கால்புறத்தில் இரு அரக்கர்கள். மது, கைடபன். இவர்கள் விஷ்ணுவின் காது அழுக்கிலிருந்து உருவானவர்கள் என்கிறது தேவி மகாத்மியம். பூமியை எடுத்துகொண்டு போக வந்தவர்கள். விஷ்ணுவைத் தாக்க வருகிறார்கள். அவர்களை நோக்கித்தான் ஆயுத புருஷர்கள் நகர்வதாக சிற்பி வடித்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு டிராமா. யாரடா இவர்கள், எம் தலைவனைத் தாக்குவதற்கு வந்துள்ளார்கள் என்று கொதித்தெழும் ஆதிசேஷன் தன் வாயிலிருந்து அனல் விஷத்தைக் கக்குகிறான். அது பறந்து சென்று மது, கைடபர்களைத் தாக்க அதில் ஒருவன் தகிப்பைத் தாங்கமுடியாமல் தலையைச் சாய்த்து, முதுகின்மீது கைகொண்டு மறைத்துத் தப்ப முயல்கிறான்.

மாமல்லபுரத்தில் மது கைடபர்களின் கோலத்தைக் காணலாம். ஆனால் அனலைக் காண முடியாது. இங்கே திருமெய்யத்தில் அனல் ஜுவாலைகளையும் சிற்பத்தில் வடித்துள்ளனர். ஆனால் ஜுவாலையில் தீக்கங்குகளின் திசை பின்னோக்கி இருக்கவேண்டும். இங்கோ சிற்பத்தில் முன்னோக்கிச் செல்கிறது. இதற்கு குடவாயில் பாலசுப்ரமணியனின் விளக்கம் வித்தியாசமானது! அனலைக் கக்கியபிறகு கடும் உஷ்ணக் காற்றையும் அனுப்புகிறானாம் ஆதிசேஷன். அந்தக் காற்று முன்னோக்கிச் செல்வதால் தீக்கங்குகளும் முன்னோக்கிப் போகின்றனவாம்.

இந்தப் பெரிய நாடகம் நம் கண்முன் பனோரமிக் காட்சியாக விரிவடைகிறது.

(c) அசோக் கிருஷ்ணசாமி, தனித்தனியாக எடுத்து
போட்டோஷாப்பில் ஒட்டவைக்கப்பட்டது. நேராகப்
பார்க்கும்போது இடையில் இரு தூண்கள் இருக்கும்.
நமக்கு நெருக்கடி தருபவர்கள் ஏதோ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் பட்டரும், உத்சவர் பெயர் என்ன என்று ஆர்வமாகக் கேட்கும் பிற பக்தர்களும். ஆனால் கோவில் ஒன்றும் நம் சொத்து அல்லவே? எனவே நாம் ஓர் ஓரமாக நின்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பட்டர், கீழே குழுமி நிற்பவர்கள் சித்திரகுப்தனும் தர்மராஜாவும் என்கிறார். முப்பது முப்பத்தொன்னு தேவர்கள், நாப்பது நாப்பத்தொன்னு ரிஷிகள் என்று ஏதேதோ சொல்கிறார். எந்த ஆகமம், எந்த சோர்ஸ் என்றெல்லாம் அவரிடம் கேட்க முடியாது. அவர் கோவில், அவர் கதை. துளசி, தீர்த்தம், சடாரி ஆக ஆக, பஸ் கிளம்பிவிடும் என்று பரபரவென்று ஓடுகிறார்கள் மக்கள்.

நாம் மட்டும் இன்னமும் இருக்கிறோம். அடுத்து சிவனைப் பார்க்கவேண்டும். இரு கோவிலும் சேர்ந்து இருந்த வரலாறையும் பிரிந்த கதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இடையில் எழுப்பப்பட்ட சுவர், அழிந்த இசைக் கல்வெட்டு இரண்டையும் பார்க்கவேண்டுமே.

(தொடரும்)

Tuesday, January 24, 2012

மொழிபெயர்ப்புகள்

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் சில குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தது என்பது என் கருத்து. ஆனால் பொதுவாக நம் வாசகர்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அவ்வளவு காதலுடன் பார்ப்பதில்லை. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பொதுவாக இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே 250 பக்கங்களுக்குமேல்தான் இருக்கும். தமிழில் நியாயமாக மொழிபெயர்த்தால் 350 தாண்டிவிடும். அதற்கேற்ப விலை இருக்கும்.

மொழிபெயர்ப்புகள் மிக அரிதாகத்தான் சரளமான நடையில்தான் உள்ளன. எக்கச்சக்கப் பணம் கொடுத்து திராபை மொழிபெயர்ப்புகளை ஏன் வாங்கி உடம்பைக் கெடுத்துக்கொள்வானேன் என்று பலர் இவற்றை வாங்குவதே இல்லை.

சில புத்தகங்கள் தவிர்த்து, ஒரிஜினல் எழுத்தாளர்கள் பற்றி தமிழ் வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பதில்லை. எனவே ‘பிராண்ட் புல்’ (சுஜாதா, சாண்டில்யன், கல்கி...) கிடையாது.

ஆனால், சில பதிப்பகங்கள் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புத் தளத்தில் இயங்கிவருகின்றன. அவற்றை அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. காலச்சுவடு: சமீப காலங்களில் காலச்சுவடு மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பு உரிமங்களை வாங்குவதில் இறங்கியுள்ளது. திருவனந்தபுரம், தில்லி, பிராங்ஃபர்ட் என்று எங்கெல்லாம் மொழிபெயர்ப்பு உரிமங்கள் விற்பனை நடைபெறுகிறதோ அங்கு காலச்சுவடு கண்ணனைக் காணலாம். கார்டன் வெய்ஸின் ‘தி கேஜ்’, அருந்ததி ராய், பஷாரத் பீர் எழுதியவை என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. சந்தியா பதிப்பகம்: சமீப காலப் புத்தகங்கள் இல்லாமல், காப்புரிமம் காலாவதியான பல பழைய புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவருகின்றனர். யுவான் சுவாங் பயணம், முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.

இடதுசாரிச் சிந்தனை கொண்ட பதிப்பகங்கள் பல காலமாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றி வருகின்றன.

3. பாரதி புத்தகாலயம்: நேருவின் கண்டுணர்ந்த இந்தியா, உலக வரலாறு, லாப்பியர்/கால்லின்ஸின் நள்ளிரவில் சுதந்தரம் போன்ற சில முக்கியமான நூல்கள், பல கம்யூனிஸ்ட் நூல்கள், பல குழந்தைப் புத்தகங்கள் என்று மிக முக்கியமான பணி.

4. அலைகள்: நான்கு வேதங்கள், பல்வேறு கம்யூனிசப் புத்தகங்கள்.

5. விடியல்: கம்யூனிசப் புத்தகங்கள்

6. என்.சி.பி.எச்: நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு, டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாறு என்று பல புத்தகங்கள் என்.சி.பி.எச் வாயிலாக வெளியாகியுள்ளன. இந்த ஆண்டும் நிறையப் புத்தகங்களைப் பார்த்தேன்.

7. விகடன் பிரசுரம்: கடந்த மூன்று வருடங்களாக விகடன் பல முக்கியமான புத்தகங்களை தமிழாக்கம் செய்துவருகிறது. மால்கம் கிளாட்வெல்லின் மூன்று புத்தகங்கள், குருசரண் தாஸின் புத்தகங்கள், ரேஷ்மி பன்சாலின் புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பியர்சன், சேஜ் ஆகிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு பல முக்கியமான புத்தகங்களை தமிழுக்கு இவர்கள் கொண்டுவருகிறார்கள்.

8. கண்ணதாசன் பதிப்பகம்: அனைவருக்கும் நன்கு தெரிந்த அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் மட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளாக சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். கோப்மேயர், நெப்போலியன் ஹில் என்று தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை இவர்கள் செய்துள்ளனர். அகதா கிறிஸ்டி, ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் போன்ற கொலைக்கதை புத்தகங்களும் இவர்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. பல ஓஷோ புத்தகங்களும் இவர்களுடைய மொழிபெயர்ப்பின் வழியாக வெளியானவைதாம்.

9. மஞ்சுள்: தமிழுக்குக் கண்ணதாசன் பதிப்பகம்போல ஹிந்திக்கு இவர்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்களை ஹிந்திக்குக் கொண்டுவந்துள்ள இவர்கள், சமீபகாலமாக பல புத்தகங்களை தமிழாக்கம் செய்தும் வருகின்றனர். இவற்றை கிழக்கு பதிப்பகம் விநியோகிக்கிறது.

10. கிழக்கு பதிப்பகம்: கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 புத்தகங்கள்வரை நாங்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளோம். இவை வாழ்க்கை வரலாறு, சுய முன்னேற்றம், வரலாறு, சமகால அரசியல் ஆகிய தளங்களில் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சர் புத்தகங்கள் இரண்டையும் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் கொண்டுவந்துள்ளோம். பியர்சன், சேஜ், பெங்குவின், ஹார்ப்பர் கால்லின்ஸ், ரேண்டம் ஹவுஸ் ஆகியோரின் பல புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு புத்தகம் என்றால் ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்பதைச் சொல்வேன். விரிவாகச் சொல்லவேண்டும் என்றால் பல புத்தகங்கள் உள்ளன. வேறு ஓரிடத்தில் அவற்றைப் பார்ப்போம்.

***

யாருடைய பெயராவது விட்டுப் போயுள்ளது என்றால் அதற்கு உள்காரணம் எதுவும் கிடையாது. என் கண்ணில் பட்ட, என் மனத்தைக் கவர்ந்த பதிப்பகங்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள முக்கியமான பதிப்பகம் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். சேர்த்துக்கொள்கிறேன்.