Friday, October 28, 2005

செம்மொழி பஜனை

தமிழை செம்மொழி என்று அறிவித்து ஒரு வருடத்துக்குப் பிறகு நேற்று நடந்த கேபினெட் கூட்டத்தில் சமஸ்கிருதத்தையும் செம்மொழி என்று 'அதிகாரபூர்வமாக' அறிவித்துள்ளனர் - என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தேன்.

இனிமேல் சமஸ்கிருதத்துக்கும் அதிகமான அளவு பணம் ஒதுக்கப்படுமாம்!

ஆனால் சென்ற வருடம் தமிழ் செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படும்போது சமஸ்கிருதம் அளவுக்குப் பணம் தமிழுக்கும் ஒதுக்கப்படவேண்டும் என்றுதானே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது? ஆனால் இப்பொழுது சமஸ்கிருதத்துக்கு இன்னமும் அதிகப்பணம் என்றால் என்ன அர்த்தம்?

மணவை முஸ்தபா, தமிழ் செம்மொழிப் பட்டியலில் எங்கேயோ தவறான இடத்தில் இடம் பெற்றுள்ளது என்பது போல தினமணியில் தொடர்ந்து கட்டுரை எழுதினார். அதற்கு பதில் சொல்லும் விதத்தில் திமுக அமைச்சர் ராஜா ஒரு கட்டுரை எழுதினார்.

முஸ்தபாவின் கருத்து என்னவென்றால் ஏற்கெனவே மத்திய அரசிடம் செம்மொழிப் பட்டியல் ஒன்று உள்ளது, அதில் சமஸ்கிருதம், பாரசீகம், அரபி என்னும் மூன்று மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற வருடம் தமிழைச் செம்மொழியாக்கியபோது தனியாக ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் தமிழ் மட்டும் இருந்தது. அத்துடன் செம்மொழிக்கான தகுதிகளுள் ஒன்றாக அந்த நிலையில் ஏற்கப்பட்டது - ஒரு மொழி 1,000 வருடங்கள் புராதனமானது என்றாலே போதும் என்பது.

இதற்கு பதில் அளித்த ராஜா, 'இதுவரையில் மத்திய அரசு எந்தப் பட்டியலையும் வைத்திருக்கவில்லை. இப்பொழுதுதான் புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கி முதலில் தமிழை அங்கு வைத்தது. இனிதான் சமஸ்கிருதம் முதல் பிற மொழிகளும் இந்தச் செம்மொழிப் பட்டியலில் வரமுடியும்' என்றார்.

நேற்றைய செய்தியைப் பார்த்தால் அரசு அளவில் ராஜா சொன்னது சரிதான் என்று ஆகிறது. ஆனால் முஸ்தபா சொல்வதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அத்துடன் முஸ்தபா கேட்டுக்கொண்டதைப் போலவே கருணாநிதி தலையீட்டால் 1,000 வருடம் என்பது 1,500-2,000 வருடம் என்ற கணக்காக மாறியுள்ளது.

இதெல்லாம் கிடக்கட்டும். தமிழ் செம்மொழியானதும் அதன் வளர்ச்சிக்காக மைய அரசு எத்தனை ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது, அந்தப் பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

செம்மொழி பற்றிய என் முந்தைய பதிவுகள் (காலவரிசைப்படுத்தப்பட்டது)

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்
தமிழ் செம்மொழியானால்?
செம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்,
மணவை முஸ்தஃபா நேர்காணல்

7 comments:

  1. telugu,kannadam veeRa team kkuLLa enter aamee?

    ReplyDelete
  2. இரண்டாயிரம் வருட பழமையுள்ள மொழிகள் தான் செம்மொழி அந்தஸ்தினை பெறும். அப்படிப்பார்த்தால், லத்தீன், கிரேக்கம், அரபி, தமிழ், ஸ்பானிஷ், சமஸ்கிருதம் (?!! - நவீன ஸ்பானிஷ் வருமா?) போன்ற மொழிகள் வரும்.

    ஹிந்தியினை புகுத்தவே இந்த 1000 வருட ஜிகினா கணக்கு. ஹிந்தி மொழி மொகலாயர்களின் வருகைக்கு வந்த மொழி. ஒரு விஷயம் புரியவில்லை. பா.ஜ.க ஆட்சியில் ஏதோ ஒரு வருடத்தினை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து நிதி ஒதுக்கி கூத்தடித்தார்கள். அப்போது சமஸ்கிருதம் இப்போது சொல்வதுப் போல பார்த்தால் செம்மொழி இல்லையா?

    மணவை முஸ்தபா தன் கருத்தினை ஆழமாக சொல்லியிருப்பார். செம்மொழி அந்தஸ்து ஒரு புறம் கிடக்கட்டும். எத்தனை பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை சமீப காலங்களில் மூடப்பட்டது என்பது பற்றிய ஒரு குறிப்பினை "கனவு"-சிற்றிதழில் படித்ததாக நினைவு. முதலில் இந்தியாவில் செம்மொழிகளுக்கான அங்கீகாரமும், அதற்கான பலனையும் தெளிவாக வரையறை செய்யாமல் சும்மா செம்மொழி என்று சொல்லுவதால் ஒரு பலனும் இல்லை.

    ReplyDelete
  3. இதில் எனக்கு ஒரு டெக்னிக்கல் சந்தேகம் வேற: '1000 ஆண்டுகளுக்குமேல் பழமையாக இருக்கவேண்டும்' என்பதை '1500-2000 க்கு' என்று மாற்றினால், 2000 வருடங்களுக்கு மேல் (உ.ம். ஒரு மொழி 2010 வருடப் பழைமையானது என்று நிறுவப்பட்டால்) என்றால் என்ன செய்வார்கள்? கொடுமையடா சாமீ!

    ReplyDelete
  4. 2010 என்றால் அது செம்மொழி இல்லை. 2000 வருடத்துக்குள்தான் அதன் வரலாறு இருக்க வேண்டும்.
    அதற்கும் முந்தியது என்றால் அது 'காட்டுமிராண்டி' மொழி.

    ReplyDelete
  5. நண்பர்களே!

    சற்று முன்புவரை மணவை முஸ்தபா அவர்களிடம் செம்மொழி விஷயமாகத்தான் உரையாடிவிட்டு வந்தபோது இந்த பதிவை படிக்க நேர்ந்தது.

    தமிழ் மொழி செம்மொழியாக அறிவித்து, கல்வித்துறையிலன் கிழ் ஒதுக்கப்படாமல் பண்பாட்டுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு செய்ததன் மூலம் தமிழுக்காக ஒதுக்கப்படும் தொகை சமஸ்கிருதத்தைவிட மிகமிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு வெறும் மூன்றரை கோடி மட்டும் கொடுத்துவிட்டு சமஸ்கிருதத்திற்கு ஏறக்குறைய 20 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    தமிழின் பெயர் சொல்லி அரசியல் நடத்துபவர்கள் உண்மையிலேயெ தமிழுக்காக ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  6. எல்லாம் இருக்கட்டும். செம்மொழி பஜனை(!) என்று தலைப்பு கொடுத்ததின் நோக்கம்?

    ReplyDelete
  7. Narain எழுதியது:
    //ஹிந்தியினை புகுத்தவே இந்த 1000 வருட ஜிகினா கணக்கு.//

    அன்புடையீர்,

    அது கன்னடத்தை செம்மொழியாக்குவதற்கான வீட்டுப்பாடமாம். ஹிந்திக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

    அக்பர் பாட்சா எழுதியது:
    //தமிழுக்கு வெறும் மூன்றரை கோடி மட்டும் கொடுத்துவிட்டு..//

    தகவலை மணவை முஸ்தபா சொல்லும்போது 'இது கண் துடைப்பு' என்று குறிப்பிட்டார். இது வரையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தொகை மூன்றரை கோடியாம். இது எங்கே யாருக்கு வரும், எப்படி செலவழிக்கப்படும் என்பதை அறிக்கையாக வெளியிடும் வேலையை நமது அரசியல் தலைவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறிய விஷயமே.

    காசி எழுதியது:
    //இதில் எனக்கு ஒரு டெக்னிக்கல் சந்தேகம் வேற: '1000 ஆண்டுகளுக்குமேல் பழமையாக இருக்கவேண்டும்' என்பதை '1500-2000 க்கு' என்று மாற்றினால், 2000 வருடங்களுக்கு மேல் (உ.ம். ஒரு மொழி 2010 வருடப் பழைமையானது என்று நிறுவப்பட்டால்) என்றால் என்ன செய்வார்கள்?//

    விவரம் அப்படி அன்று. பழைமையான மொழியாக இருப்பது செம்மொழியாக அங்கீகாரம் கிடைப்பதற்கான தகுதிகளுள் ஒன்று.

    'ஆயிரம் வருடப் பழைமை' தேவை என்பதை தகுதிகளுள் ஒன்றாக அரசு வரையறுத்துக்கொள்ளலாமே தவிர, தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்த கோப்பின் முகப்பில், 'ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழைமையானது' எனக் குறிப்பிட்டது தமிழின் பழைமையைக் குறைப்பதாகவே படுகிறது.

    மாற்றம் பெற்றது கோப்பின் முகப்பிலிருக்கும் 'இந்த'க் குறிப்புதான்.

    ReplyDelete