அண்ணா திமுக அல்ல; அண்ணாவும் திமுகவும்.
சமீபத்தில் வெளியான இரண்டு புத்தகங்களை கடந்த சில நாள்களில் படித்து முடித்தேன். இரண்டையும் எழுதியது அருணன், வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக.
1. திமுக பிறந்தது எப்படி? (பக். 136, விலை 60)
2. அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? (பக். 174, ரூ. 80)
அண்ணாதுரை மற்றும் பிறர் ஏன் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கின்றனர்? பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா? வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும்? திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார்? அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார்? திமுக எந்த வெற்றிடத்தை நிரப்பியது?
திமுக தொடங்கியபின்னர் பெரியார் - அண்ணாதுரை உறவு எப்படி இருந்தது? காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது? அகில இந்திய காங்கிரஸ் எங்கெல்லாம் தவறுகள் செய்தது?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள், மொழிப்போராட்டம் பற்றிய விளக்கங்கள், திராவிட நாடு தொடர்பான அண்ணாதுரையின் கருத்துகள் எவ்வாறு மாற்றம் பெற்றன, திமுக எவ்வாறு திரையுலகக் கலைஞர்களுடன் நட்பாக இருப்பதன்மூலம் மக்களிடையே கருத்துக்களைக் கொண்டுசென்றது, எளிமையான முறையில் பல விஷயங்களை அண்ணாதுரையால் எவ்வாறு மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் காணக்கிடைக்கின்றன.
ஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி தேவையின்றி எழுதுகிறார். கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட்டுமான தனிப்புத்தகம் என்றால் பரவாயில்லை.
காங்கிரஸுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல இடத்தை விட்டுக்கொடுக்க திமுக அந்த இடத்தைப் பறித்துக்கொண்டதைப் பற்றி எழுதும்போது ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது.
ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திமுகவுடன் ஒரே கூட்டணியில் இருந்ததைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி திமுகவுடன் மட்டும்தான், பிற்போக்கு சக்தியான சுதந்திரா கட்சியுடன் அல்ல என்கிறார். இதுபோன்ற கம்யூனிஸ்ட் 'சப்பைக்கட்டு'களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல ஆவணம். புத்தகம் முழுவதிலும் மேற்கோள்களையும் புத்தகத்தின் கடைசியில் மேற்கோள்களுக்கான ஆதாரங்களையும் தருவதன்மூலம் மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கிறார். ஆனால் பின்குறிப்புகளில் மேற்கோள்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை வெறும் புத்தகம்/அறிக்கை பெயர்களுடன் நிறுத்திவிடுகிறாரே தவிர பக்க எண் போன்றவற்றைத் தருவதில்லை. மேலும் மேற்கோள்களுக்கு அடிக்குறிப்பு எண்கள் கிடையாது.
புத்தகங்கள் படிப்பதற்கு எளிதான மொழியில் நன்றாக, விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புத்தகங்கள் முழுவதிலும் நிறைய இலக்கணப் பிழைகள்.
இதுபோன்ற குறைகளை அடுத்துவரும் பதிப்பில் சரிசெய்தால் உபயோகமாக இருக்கும்.
தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை.
பி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்?
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
ஆரியமாயை
ReplyDeleteபத்ரி
ReplyDeleteநல்ல தகவலுக்கு நன்றிகள் பல.
நிச்சயம் வாங்கி படிக்கிறேன்.
நீங்கள் சொல்லும் அண்ணா புத்தகம்
"ஆர்ய மாயை" என்று நினைக்கிறேன்.
அல்லது "தீ பரவட்டுமா" முதலாவது என்று தான் நான் படித்தேன்.
அந்த இரண்டு புத்தகத்தையும் இந்த ஆண்டு உங்களை புத்தக விழாவில் பார்த்த பொழுதுதான் வாங்கினேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
பத்ரி,
ReplyDeleteபுத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி. இப் புத்தகங்களை பெறக்கூடிய விற்பனை முகவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தந்து உதவ முடியுமா?
//பி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்?//
ஆரிய மாயை என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாவின் கைதி எண் 6... எனும் புத்தகத்தை பல வருடங்களுக்கு முன் வாசித்த போது இத் தகவலையும் வாசித்த ஞாபகம். சரியாகத் தெரியாது.
'ஆரியமாயை' சரியான விடை. நான் அந்தப் புத்தகத்தை எப்பொழுதோ வாங்கிவைத்து இப்பொழுதுதான் படிக்கிறேன். இந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய எந்த முகாந்திரமும் கிடையாது. இதில் சில இடங்களில் திராவிடநாடு என்று தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அண்ணாதுரை முன்வைக்கிறார். அதுவும் இந்திய சுதந்தரத்துக்கு முன்னால் தொடர் கட்டுரைகளாக 'திராவிட நாடு' எனும் அண்ணாவின் பத்திரிகையில் வெளிவந்தது இது. பின்னர் சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.
ReplyDeleteஅண்ணாவின் மேடை நாடகங்களையும் திரைக்கதை வசனங்களையும் முழுப் பதிப்பாக யாராவது வெளியிட்டிருக்கிறார்களா? தகவல் தெரியுமா?
வெற்றி: புத்தகங்கள் கிடைக்கும் முகவரியை வீட்டுக்குச் சென்று மாலை எழுதுகிறேன்
//வெற்றி: புத்தகங்கள் கிடைக்கும் முகவரியை வீட்டுக்குச் சென்று மாலை எழுதுகிறேன்//
ReplyDeleteபத்ரி, மிக்க நன்றி.