Tuesday, January 23, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை

நேற்றுடன் 30வது சென்னை புத்தகக் கண்காட்சி முடிவுற்றது. இந்த முறை புதிய இடம். இதுநாள்வரையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்துவந்த கண்காட்சி இம்முறை செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சில பதிப்பாளர்கள் இதனால் கூட்டம் வருமா என்று பயந்தனர். ஆனால் நல்ல கூட்டம் வந்தது. எப்பொழுதும் கண்காட்சிக்கு வரும் சிலர் வராமல் போயிருக்கலாம். ஆனால் அதனை ஈடுசெய்யும் வகையில் புதிய பலர் வந்திருந்தனர்.

புதிய இடம் பெரியது. அதனால் நிறைய கடைகள். அரங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நன்றாக எழுப்பப்பட்டிருந்தது. பலகைகள் போடப்பட்டு சமதளமான தரையாக இருந்தது. மேல்பகுதி முற்றிலும் மூடப்பட்டிருந்ததால் புழுதி குறைவு. ஆனால் காற்றோட்ட வசதி குறைவு. போட்டிருந்த மின்விசிறிகள் போதவில்லை. மார்கழி மாதத்தில்கூட மதியம் வெய்யில் கடுமையாக இருந்தது. வயதானவர்களும் சிறு குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர். சிலர் மூச்சுவிடக் கஷ்டப்பட்டனர். ஒரிருவர் தலைசுற்றி உட்கார இடம் தேடினர். அடுத்தமுறை பல இடங்களில் எக்ஸ்ஹாஸ்ட் விசிறிகள் வைக்க வேண்டியிருக்கும்.

இம்முறை நிறைய கடைகள். எப்பொழுதும் இருக்கும் 275க்கு பதில் கிட்டத்தட்ட 400. ஆனால் முழுவதும் சுற்றிப்பார்க்க முடியாமல் பலர் களைப்படைந்தனர். இரு வாயில்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வாயில் வழியாக கூட்டம் உள்ளே விடப்பட்டது. அதனால் அந்தந்த நாள்களில் முதல் வரிசையில் இருக்கும் கடைகளில் நல்ல விற்பனை. இவ்வாறு முதல் வரிசையில் இல்லாமல் நடுவில் இருந்த கடைகள் நல்ல விற்பனை இல்லாமல் திண்டாடினர். நடுநடுவே இருந்த எமெர்ஜென்சி வழிகள் வழியாக மக்கள் வெளியே செல்ல முற்பட்டனர்.

கழிப்பிட வசதி, உணவு வசதி ஆகியவை அரங்குக்கு வெளியே. ஒருமுறை நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே வந்தால், வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளேவர மற்றொரு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நிற்கவேண்டும். இது சரியானதல்ல. அடுத்தமுறை அரங்கம் அமைக்கும்போது உணவு மற்றும் கழிப்பிட வசதிகளும் அடங்கிய வளாகத்தை அமைக்கவேண்டும். முக்கியமாக, கழிப்பிட வசதிகளை மேம்படுத்தவேண்டும்.

கடைசி நான்கு நாள்கள், பால் தினகரன், தினகரன் சுவிசேஷக் கூட்டத்துக்காக பார்க்கிங் வசதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் பலருக்கும் பிரச்னைகள்.

-*-

புத்தகங்களைப் பொறுத்தமட்டில், ஒப்பீட்டு அளவில், தமிழ் பல வருடங்கள் பின்தங்கியுள்ளது. இந்த நிலை மாற இன்னமும் பல ஆண்டுகள் ஆகலாம். பல துறைகளில் அடிப்படையான புத்தகங்களே இல்லை. புத்தகத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு இதுவரை தமிழுக்கு வந்ததில்லை. குடிசைத் தொழிலாகவும் குடும்பத் தொழிலாகவும் மட்டுமே இருந்துவந்ததிலிருந்து கடந்த சில வருடங்களிதான் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களில் ஆனந்த விகடன் மட்டும்தான் புத்தகங்களைப் பதிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. விற்பனையைப் பொறுத்தமட்டில், இன்று தமிழின் முன்னணி புத்தகப் பதிப்பாளராகவும் உள்ளது. குமுதம், குங்குமம் போன்ற முதலீடு செய்யக்கூடிய, உள்கட்டமைப்புகள் கொண்ட வார இதழ் நிறுவனங்களும் தினத்தந்தி, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் போன்ற செய்தித்தாள் நிறுவனங்களும் தமிழ் புத்தகப் பதிப்பில் ஈடுபடவேண்டும். அது நிச்சயம் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தும்.

இவைதவிர தமிழின் முன்னணி பதிப்பாளர்கள் பலரும் அதிக அளவு முதலீட்டினைப் பெறும் வழிகளில் ஈடுபடவேண்டும். வீட்டின் முன்னறையில் நடத்தும் தொழிலாக நினைக்காமல் நிறுவனமயப்படுத்த வேண்டும். தொழில்முறை எடிட்டர்கள், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வல்லுனர்களைக் கொண்டு புத்தகங்களை உருவாக்கி விற்கவேண்டும்.

சிறு பதிப்பாளர்கள் இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பெரும் பதிப்பாளர்கள் சிலராவது, மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்வதன்மூலம் மட்டுமே புத்தகச் சந்தை விரிவடையும். அதன் பலனை சிறு பதிப்பாளர்களும் அடைவார்கள். ஆயிரம் பிரதிகள்தான் சந்தை என்பது போய் ஒரு நல்ல புத்தகம் (யார் பதிப்பித்திருந்தாலும் சரி), குறைந்தது பத்தாயிரம் படிகள் விற்கும் என்ற நிலை வரவேண்டும்.

-*-

தமிழில் புத்தகங்கள் அதிகமாக வரவேண்டிய சில துறைகள்:

* அனைவருக்கும் அறிவியல் (Popular Science). எளிமையாக, சாதாரண பொதுமக்களும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவியல் புத்தகங்கள் நிறைய வேண்டும். அறிவியல் என்றால் கணிதமும் சேர்த்து...

* குழந்தைகள் புத்தகங்கள். கடந்து செல்லவேண்டிய தூரம் வெகு அதிகம். சாகசக் கதைகள், வண்ணப்படக் கதைகள் (காமிக்ஸ்), படமில்லாத கதைகள், அறிவுப் புத்தகங்கள் என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

* உலக நடப்பு (Current Affairs), பொருளாதாரம், அரசியல்

* தொழில்நுட்பம்

* உலக இலக்கியம் (மொழிபெயர்ப்பாக)

-*-

கணினி மென்பொருள்களுக்கான அரங்குகள் குறைவுதான். அங்கு கிடைத்த பொருள்களும் குறைவுதான். Chennai Computer Club என்னும் அமைப்பு CCC Digital Library என்ற குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல காப்புரிமை இல்லாத நூல்கள் கிடைக்கின்றன. விலை ரூ. 250 என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் ரூ. 100க்குக் கிடைக்கிறது.

இதேபோல தமிழில் பல முயற்சிகள் இருந்திருக்கலாம். தமிழில் ஒரே ஒரு அகராதிதான் (பால்ஸ்) குறுந்தட்டு வடிவில் கிடைக்கிறது. அதுவும் அவ்வளவு திருப்தியாக இல்லை. தமிழில் டைப் செய்ய மென்பொருள்கள் இன்னமும் ரூ. 500க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. இ-கலப்பை முதல் எண்ணற்றவை இலவசமாகக் கிடைக்கும்போதே! தயாநிதி மாறன் கோடி கோடியாகச் செலவழித்து பல நூறு எழுத்துருக்களை இலவசமாகக் கொடுத்தபின்னும், எழுத்துருக்கள் விற்பனைக்குக் கிடைப்பதுபோல...

மற்றபடி கணினி உலகில் புதுமையாக எதுவும் என் கண்ணில் படவில்லை. புத்தக உலகில் சில ஆண்டுகள் பின்னடைவில் தமிழ் இருப்பதுபோல, கணினி உலகில் பல ஆண்டுகள் பின்னணியில் இருக்கிறோம் போல...

அனிமேஷன் கேளிக்கை குறுந்தட்டுகள் சுமார் ரகம்தான். அனிமேஷன் செய்ய செலவு அதிகம் என்பதும் சந்தை சிறியது என்பதும் முக்கியமான காரணங்கள். இங்கும் பெருமளவுக்கு பண முதலீடு உள்ளே வரவேண்டும்.

-*-

பல ஆன்மிக மடங்கள் (சாமியார்கள்) புத்தகக் கண்காட்சி அரங்கில் இடம்பெற வேண்டுமா என்ற கேள்வி உண்டு. அவர்களும் புத்தகங்கள்தானே விற்கிறார்கள் என்று பதில் வரலாம்.

வேண்டுமானால் ஆன்மிக வரிசை, கணினி வரிசை என்று தனித்தனியாக வழி பிரித்து அவர்களுக்கு அங்கு இடம் ஒதுக்கலாமோ என்று தோன்றுகிறது. இதனால் தேடிச் செல்பவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும்.

வாசலில் பெங்களூரு கண்காட்சியில் வைப்பதுபோல இண்டெக்ஸ் - எந்தக் கடை எண்ணில் யார் யார் உள்ளனர் என்பதைக் கொடுத்திருக்கலாம். பலரும் குறிப்பிட்ட புத்தகங்களையோ, குறிப்பிட்ட பதிப்பகங்களையோ தேடி வந்தனர். சரியாக இடம் சொல்ல முடியவில்லை.

பல இடங்களில் தொடுதிரை கணினி வசதியைச் செய்துகொடுக்க முடியும் என்று தோன்றுகிறது. யார் யார் எங்கே இருக்கிறார்கள், எந்தெந்தப் புத்தகம் எந்தக் கடைகளில் கிடைக்கும் என்பதை கண்காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே கொடுத்துவைக்கலாம்.

-*-

மணிமேகலை ஸ்டாலில் தினமும் பல பிரபலங்கள் வந்தனர். எனி இந்தியன் புத்தக வெளியீடுகளை நடத்தியது. காலச்சுவடு எழுத்தாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தது. உயிர்மை சில நாள்கள் எழுத்தாளர்களை வரவழைத்து வாசகர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தது. பல எழுத்தாளர்களும் சினிமாத்துறையினரும் வந்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டு கடக்கும்போதும் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையின் முக்கியமான கலாசார நிகழ்வாக வலுப்பெறுவது சந்தோஷமே.

-*-

முதல்வர் கருணாநிதி இரண்டு முறை வந்தபோதும் குழப்பங்கள் ஏற்பட்டன. இப்போது பாதுகாப்பு கெடுபிடி அதிகமாகியுள்ளது. மோப்ப நாய் வந்து ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான பொருள் உள்ளதா என்று கண்காணிக்கிறது. நிறைய காவலர்கள் தேவைப்படுகிறார்கள். முதல்முறை போட்டோகிராபர்கள் செய்த களேபரத்தால் முதல்வர் உடனடியாக வெளியேறவேண்டி இருந்தது. இரண்டாம் முறை, பார்வையாளர்களை உள்ளேவிடாமல் ஒரு மணிநேரம் வெளியே நிறுத்தவேண்டி வந்தது.

பிற அமைச்சர்கள் வந்தபோது இதுபோன்ற கெடுபிடிகள் ஏதுமில்லை. பக்கத்தில் ஒரு காவலர்கூட இல்லாமல் துரைமுருகன், ராஜா போன்றோர் வந்துவிட்டுச் சென்றனர்.

-*-

ஆங்கிலப் பதிப்பகங்கள் பல இந்தக் கண்காட்சிக்கு வரவேயில்லை. ரூபா அண்ட் கோ இருந்தனர். ஆனால் பெங்குவின் தனி அரங்கு அமைக்கவில்லை. தில்லியைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வரவேயில்லை. கணினி புத்தக விற்பனையாளர்கள் மிகக்குறைவாகவே வந்திருந்தனர். இதற்கு ஆங்கில ஸ்டால்களுக்கு மிக அதிகமாக வாடகை வசூலிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். (தமிழைப் போல் இரண்டு மடங்கு.) இது வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை. எனவே பபாஸி இந்த முறையை மாற்றவேண்டும்.

இரண்டு தெலுங்கு, ஒரு கன்னடம், ஒரு மலையாளம் ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. மேலும் சிலவற்றை வரவழைக்க முயற்சிகள் எடுத்திருக்கலாம்.

-*-

சுபம்!

2 comments:

  1. "தமிழில் புத்தகங்கள் அதிகமாக வரவேண்டிய சில துறைகள்:"
    "மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்வதன்மூலம்"
    "அனைவருக்கும் அறிவியல்"
    "குழந்தைகள் புத்தகங்கள்"
    "உலக இலக்கியம் (மொழிபெயர்ப்பாக)"

    உங்களுடைய இந்த வரிகளைக் காணும்போது
    சோவியத் வெளியீடுகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்ப்புத்தகங்களும் மொழிபெயர்ப்பும் பெருமளவு முன்னேற்றமடைந்தது இக்காலத்தில்தான் என்று அடித்துச்சொல்லமுடியும்.

    70களிலேயே அற்புதமான வண்ணப்படங்களை உடைய சிறுவர் புத்தகங்களும் அறிவியல் கணிதம் போன்ற துறை சார்ந்த நூல்களும் கிடக்கச்செய்தது முக்கியமான நிகழ்வு ஆகும்.

    ReplyDelete
  2. பத்ரி,
    விளக்கமான பதிவிற்கு நன்றி! புத்தகக் கண்காட்சியில் குறும்படங்களைப் போட்டுக் காண்பிப்பதற்கென ஓர் அரங்கு இருந்தது மிகச் சிறப்பான ஒன்று. எல்லா குறும்படங்களையும் ஒரே இடத்தில் வாங்க ஒரு ஸ்டால் ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 'ஆயிஷா' குறும்படத்தை வாங்க நிறைய இடங்களில் முயற்சி செய்து கிடைக்கவில்லை. ஒரு சில புத்தக ஸ்டால்களிலேயே குறிப்பிட்ட குறும்படங்களும் கிடைத்தன. இதற்கென்றே ஸ்டால் இல்லையென்றால் என்னென்ன குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன என எல்லோருக்கும் தெரிந்து கொள்ளக் கூட வாய்ப்பு ஏற்படாது. அடுத்தமுறை குறும்படங்களுக்கென்றே ஒரு ஸ்டால் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete