Wednesday, October 24, 2007

பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கி விற்பவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது PAN எண்ணை - அதாவது வருமான வரி எண் - உங்களது பங்குத்தரகருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் அந்த எண்ணை பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பார். ஆக, எந்த நேரத்திலும் எந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள் என்ர தகவலை அரசு நிறுவனங்கள், வருமான வரி அலுவலகம், காவல்துறை ஆகியவற்றால் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஓர் ஆண்டில், வருமான வரி எண் இல்லாமல் யாருமே பங்குச்சந்தையில் முதலிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வெளி நாடுகளிலிருந்து இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்.ஆர்.ஐகளுக்கும் அந்நிய நாட்டுக் குடிமக்களுக்கும் தடை உள்ளது. விதிவிலக்கு: வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய, பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்யமுடியாது. இவர்கள் அனைவருமே பரஸ்பர நிதி - மியூச்சுவல் ஃபண்ட் - மூலம் மறைமுகமாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

தனிமனிதர்களுக்குத்தான் கட்டுப்பாடே ஒழிய, அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors - FIIs) இந்தியப் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குள் முதலீடு செய்யமுடியும். இந்த FIIக்கள் முதலில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) இடம் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஆனால் இந்த இடத்தில் இந்த FIIக்கள் ஓர் ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு அந்நிய நாட்டவர் அல்லது அனுமதிக்கப்படாத என்.ஆர்.ஐக்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வழிசெய்துகொடுக்கின்றன.

அதற்குப் பெயர்தான் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ். இதைப் பார்ப்பதற்கு முன், இதைப்போன்றே உள்ள ஒரு நிதிக்கருவியைப் பார்ப்போம். அதற்குப் பெயர் டெபாசிட்டரி ரிசீப்ட்ஸ். ADR, GDR என்ற பெயர்களில் இவை பிரபலமாக உள்ளன.

இப்பொழுது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய நிறுவனப் பங்குகள் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இன்ஃபோசிஸ், ரீடிஃப், சிஃபி போன்றவை. உண்மையில் இவற்றின் பங்குகள் ஏதும் நாஸ்டாக்கில் வர்த்தகமாவதில்லை. இரண்டு கட்டங்களில் இது நடக்கிறது. முதலில் ஒரு நிதி நிறுவனம் (வங்கி), இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகக்கூடிய பங்குகளை நேரடியாக அந்த நிறுவனத்திடமிருந்தோ (public offer), அல்லது sponsored முறையிலோ பெறுகிறது. இந்த நிதிநிறுவனத்தின் பெயர் டெபாசிட்டரி.

அந்தப் பங்குகளுக்கு இணையான வேறு கருவியை (டெபாசிட்டரி ரிசீப்ட்) இந்த டெபாசிட்டரி நிறுவனம் உருவாக்கி அவற்றை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஓடவிடுகிறது. ஒரு பங்குக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். அல்லது இரண்டு, மூன்று, நான்கு பங்குகளுக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். இந்த டெபாசிட்டரி ரிசீப்டை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஈடுபடும் எவரும் வாங்கி, விற்கலாம். இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்; ஆனால் பல நேரங்களில் ஒரு சந்தையில் மற்றொரு சந்தையைவிட விலை அதிகமாகவோ குறைந்தோ இருக்கலாம். இடையிலான ஆர்பிட்ராஜை வைத்துப் பணம் சம்பாதிப்பது முடியாமல் போகும்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டிருக்கும்போது இந்த முறையைக் கொண்டு அவர்கள் இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.

இந்திய நிறுவனம் டிவிடெண்ட், போனஸ் ஆகியவற்றை அளிக்கும்போது, டெபாசிட்டரி நிறுவனம் அவற்றைப் பெற்று, அவற்றை பத்திரமாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மாற்றிக்கொடுக்கும்.

இதுபோன்ற சமயத்தில் செபி, இந்த அமெரிக்கத் தனி முதலீட்டாளர்களைப் பற்றி கவலைப்படாது. அவர்களது குலம், கோத்திரம் என்ன என்றெல்லாம் விசாரிக்காது. ஆனால் அந்த வேற்று நாட்டு (அமெரிக்கா) பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இந்த முதலீட்டாளர்கள் யார் என்பதைக் கட்டுப்படுத்தும்; அவர்களிடம் ஒழுங்காக வரி வசூலிக்கும்.

இப்பொழுது பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். இது டெபாசிட்டரி ரிசீப்ட்ஸுக்கு நேர் எதிர்.

இந்தியப் பங்குச்சந்தை பிற நாட்டுக் குடிமகன்களுக்குத்தான் தடை என்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்துகொண்டால் அனுமதிக்கப்படும் என்றும் பார்த்தோம் அல்லவா? இப்படிப் பதிவுசெய்துகொண்ட FIIக்கள், தனி ஆசாமிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் சார்பில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் பங்குகள் என்னவோ இந்த FIIக்கள் பேரில் இருக்கும். தனி ஆசாமிகள் கணக்குக்கு, அவர்களுக்கு பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனப்படும் PN ரசீதுகளைக் கொடுத்துவிடுவார்கள். அதாவது இது ஒரு பினாமி வழி.

யார் முதலீடு செய்கிறார்கள் என்பதை FIIக்கள் செபியிடம் இதுவரை சொன்னதில்லை. செபியும் கேட்டதில்லை. அப்படி செபி கேட்கப்போகிறது என்று விஷயம் கசிந்தால் உடனே பங்குச்சந்தை ஆட்டம் காணும். நிதியமைச்சரும் பயந்துபோய், இன்னும் கொஞ்சம் நாள் விட்டுவிடுவோம் என்பார். அதுதான் சென்ற வாரம் நடந்தது.

இப்பொழுது நமக்குத் தோன்றவேண்டிய கேள்விகள் இவை:

1. செபி ஏன் PN வழியாக வர்த்தகம் செய்வோரது தகவலைக் கேட்கவேண்டும்?
2. அப்படிக் கேட்டால் ஏன் இந்த ஃபாரின் வஸ்தாதுகள் பயப்படவேண்டும்? கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?
3. PN/FII-க்களுக்கு ஏன் இந்தியப் பங்குச்சந்தை/செபி/நிதியமைச்சர் பயப்படவேண்டும்?
4. இந்தியாவில் இருக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நாம் என்ன நிலையை எடுக்கவேண்டும்?

பதில்களைப் பார்ப்போம்.

PN வழியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்வோரில் உருப்படியான, நியாயமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது தகவலைச் சொல்ல பயப்பட மாட்டார்கள். ஆனால் பல கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் முதலாவது இந்தியாவில் கறுப்புப் பணத்தைத் தேக்கி, ஹவாலா வழியாக அதை வெளிநாடுகளுக்குக் கொண்டுசென்றுள்ளவர்கள். இரண்டாவது சர்வதேச தீவிரவாதிகள்.

இந்த இரண்டு ஆசாமிகளும் இந்தியப் பங்குச்சந்தைக்குள் பணத்தைப் போட விரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் இப்பொழுது இந்தியா ‘வளர்ச்சி' கதையால், இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல லாபம் புரளுகிறது. நல்லவர்கள் போல, கெட்டவர்களும் இந்த ‘வளர்ச்சி'யின் பயனை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். PN வழியாக இதைச் செய்தால் கேள்வி கேட்க யாருமே இல்லை.

PN வழியாக இந்தியச் சந்தையில் புரளும் பணம் சுமார் 90 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் கெட்ட பணமாக இருக்கலாம்.

கடந்த சில வாரங்களில் தேவையில்லாமல் இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டுள்ளதற்கு வெளிநாட்டுப் பணம் முக்கியமான காரணம். திடீரென PN-ல் கையை வைப்பதாக செபி அறிவித்ததுமே இவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால் பங்குச்சந்தை கீழே விழும் என்றெல்லாம் பயப்படாமல் செபி, இந்த விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளவேண்டும். PN வழியாக இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களுக்கும் PAN எண் போல ஒரு எண்ணை வழங்கவேண்டும். அட்ரஸ் ப்ரூஃப் இருக்கவேண்டும். தவறான ஆசாமிகள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வர்த்தகம் செய்துகொடுத்த FII-க்களை ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யவேண்டும்.

அதாவது யாரிடமிருந்து பணம் பெற்று பங்குச்சந்தை வர்த்தகம் செய்யவேண்டும் என்ற விதியை FII-க்கள் மீது புகுத்தவேண்டும்.

இதை ஏற்காத FII-க்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவில் முதலீடு செய்யும் மொபியஸ் என்னும் FII செபியின் விதிமுறைகளை ஏற்பதாகவும் PN முறையில் செய்யப்படும் முதலீடும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இன்று தகவல் வந்துள்ளது. பிற FII-க்கள் ஒத்துவந்தால் அனுமதிப்போம். இல்லாவிட்டால் துரத்திவிடுவோம்.

7 comments:

  1. Hi Badri,
    extremely important ISSUE now for our counntry.
    Your incisive analysis is very clear.
    An open discussion on these lines must begin in our media.
    The climb of INDEX is unsustainable and really dangerous in many fronts.
    Thanks for your thoughts and efforts on this topic.
    good wishes,
    regards, srinivasan. v.

    ReplyDelete
  2. Dear Badri,

    I've been following your Blog quite keenly for the last 2 weeks & i do feel that you are doing a commendable job on various issues. Your blog is not only informative, but urges the reader to be participative on the topic as well.

    Keep the Good Work Going.

    Viswa Nathan.D
    Chennai, Tamil Nadu, India

    ReplyDelete
  3. wonderful information it has !!, which was searched for a long

    ReplyDelete
  4. Dear Badri
    I am an avid reader of your blog for the past 2 years. Your article regarding the Participatory Notes was very informative. I've been running around for the last few days without knowing what a PN means. Your article throws a lot a light and explains it very well. Thanks and keep writing such good articles.

    Regards,
    Ram

    ReplyDelete
  5. மொபியஸ் ? நீங்கள் ப்ராங்களின் டெம்பள்டனின் மார்க் மொபியஸினை பற்றி சொல்கிறீர்களா ? பார்டிசிபேட்டரி நோட்ஸின் மிக முக்கியமான பலவீனம் anonymity. அதை தெளிவாக செபியின் தாமோதரன் நிராகரித்து இருப்பது நல்ல விஷயம். பி.என் வழியாக வரும் பிரச்சனைகளை செபி சொல்லியிருக்கும் வழிமுறைகளில் களைந்து விடலாம். ஆனால், பி.என்னை விட மோசமான விஷயம் stock rigging. போன முறை பங்குச்சந்தை ஊழலில் கைதாகி, இப்போது விடுதலையாகி இருக்கும் கேதன் பரேக், மீண்டும் தன் கைவரிசையினை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. இப்போது அவரின் செல்லப் பெயர் Mr.India. தெஹல்காவில் இதைப் பற்றிய விரிவான விவாதமொன்று இருக்கிறது. நேரமிருப்பின் பாருங்கள்.

    ReplyDelete
  6. I am an avide reader of your block. Appreciate your timely articles like - articles on PN & LA SA RA Although both are different issues altogether

    Keep the good work

    ReplyDelete
  7. இதுவரை இதைப் பற்றி நான் கேள்விப் பட்டதில்லை பகிர்ந்தமைக்கு நன்றி பல நல்ல தகவல்களை தமிழில் தருகிறீர்கள் மீண்டும் நன்றி

    ReplyDelete