கோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. அதற்கு பெரும் எதிர்ப்பலைகள் எழுந்தன. புழுத்த கோதுமையை, அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று எதிர்ப்பணியினர் சொல்லினர்.
அதே காலகட்டத்தில் இந்தியாவில் அரிசி உற்பத்தியில் குறைபாடு பெரிதாக ஏற்படவில்லை. கொள்முதலிலும் பிரச்னைகள் இல்லை.
இப்போது, உலக அளவில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. உணவுப் பழக்கம் என்பது திடீரென மாற்றமுடியாதது என்பதால், அரிசி உண்ணும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படப் போகிறார்கள். உலகின் பெரும் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகியவை. தாய்லாந்து சமீபத்தில் தனது அரிசி ஏற்றுமதியைத் தடுத்துள்ளது. இந்தியாவும், உள்நாட்டு விலை குறைப்புக்காக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது, முற்றிலுமாகத் தடை செய்யவில்லை. பாசுமதி அரிசியை இப்போதும் ஏற்றுமதி செய்யலாம். பாசுமதியல்லாத உணவு அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் பிரச்னைகள் ஏற்பட உள்ளன. சீனா, தனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களான மக்கா, ஹாங் காங் போன்ற இடங்களுக்குத் தேவையான அரிசியைத் தருவதாகச் சொல்லியுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
ஆனால் அமெரிக்கா, இந்த ஆண்டு அவர்களது கோதுமை விளைச்சல் அதிகமாகும் என்று சொல்லியுள்ளனர். அது ஓரளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க உதவலாம்.
இதற்கிடையே, மாற்று எரிபொருள் என்று மக்காச்சோளம்மூலம் பயோடீசல் தயாரிப்பது உலகின் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கலாம் என்ற சங்கடமான உண்மையும் வெளியே தெரியவந்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய அரிசி உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கமுடியும். அதற்கு விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும். Subsistence farming எனப்படும் முதுகை உடைக்கும், கடனில் மூழ்கவைக்கும் ஏழைமை விவசாயத்தை மாற்றவேண்டும். அதற்கு என்ன தேவை?
* தொழில்முனைவர்கள் விவசாயத்தில், அரிசி, கோதுமை உற்பத்தியில் நுழையவேண்டும்.
* ரசாயன உரங்கள் இல்லாமலேயே பெரிய பரப்பளவில், அதிக விளைச்சலைத் தரவைக்கும் ஒட்டு ரக தானியப் பயிர்களை நடவேண்டும்.
* தண்ணீரைக் கவனமாகக் கையாண்டு, வீணாதலைத் தடுக்கவேண்டும்.
* எலி, பூச்சிகள் தொல்லையில்லாமலும், இயற்கை சீற்றத்தால் உணவுப்பொருள் வீணாகாமலும் இருக்க நிறையப் பேரையும் தொழில்நுட்பத்தையும் வேலைக்குக் கொண்டுவரவேண்டும். சுகுணா சிக்கன் போன்ற ஒரு நிறுவனம் கோழிப்பண்ணைகளில் கொண்டுவந்துள்ள முன்னேற்றங்களை அரிசி, கோதுமை உற்பத்தியில் நாம் உடனடியாகப் புகுத்த வேண்டும்.
* விவசாயத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்கவேண்டும். (தெரியும், எனக்கு கம்யூனிஸ்டுகளிடமிருந்து தர்ம அடி காத்திருக்கிறது!)
இவையெல்லாம் நடந்தால் இந்தியா, தன் நாட்டு மக்களுக்கும் உலக மக்கள் பெரும்பாலானோருக்கும் உணவளிக்க முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை இதனை இன்று செய்கின்றன!
[எனது அரிசி, கோதுமை, விவசாயம் தொடர்பான பதிவுகள் இங்கே.]
Pac-Man வீடியோ கேம்
3 hours ago
Food insecurity: a form of violence
ReplyDeletehttp://www.hindu.com/2008/03/19/stories/2008031953011000.htm
மேலே உள்ள சுட்டியை முழுவதும் படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.
முன்னரே படித்துவிட்டேன். முக்கியமான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
ReplyDelete1. இந்திய விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். கடன், விளைச்சல் குறைவு. பலர் விவசாயத்தைவிட்டு ஓட விரும்புகிறார்கள்.
2. விளைச்சல் குறைந்துகொண்டே வருகிறது. உணவு தானிய விளைச்சலுக்கு பதில், பணப் பயிர்கள் விளைவிப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறது, அரசாலும் ஊக்குவிக்கப்படுகிறது.
அடுத்து விவசாயக் கொள்கையைக் குறைசொல்கிறார். பின்னர் நேராக வறுமைக்கோடு பற்றிப் பேசச் சென்றுவிடுகிறார்.
***
என்னைப் பொருத்தமட்டில், பிரச்னையே இப்போதுள்ள விவசாய முறைமைதான். துக்கினியூண்டு நிலம் வைத்திருக்கும் எழை விவசாயியாக இருக்கட்டும், ஏகப்பட்ட ஏக்கர் வைத்திருக்கும் பணக்காரனாக இருக்கட்டும்... விவசாயம் ஒரு தொழிலாகச் செய்யப்படவில்லை.
ஒரு தொழில் என்றால் ஒவ்வோர் ஆண்டுக்கான இலக்கு, அந்த இலக்கை அடையத் தேவையான திறன், வேலையாள்கள், அதற்காகும் மூலதனம் எல்லாம் தயாராக இருக்கும். அல்லது நிதி திரட்டப்படும். அப்படி ஏதும் இப்பொது நடப்பதில்லை. அங்குதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.
இதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. இரண்டையும் சம அளவில் செயல்படுத்துவதே சிறந்தது. நிலத்தைத் துண்டுதுண்டாகப் பிரிக்காமல், கம்யூனாக, கூட்டுறவாகப் பயிர் செய்வது. இங்கு அரசு தலையிட்டு, திறன் மேம்பாடு, விவசாயக் கல்வியறிவு, கொள்முதல் விலை நிர்ணயம் ஆகிய பலவற்றைச் செய்யவேண்டும். மற்றொரு பக்கம், பெரும் முதலீடுகளைச் செய்யும் திறன் படைத்த நிறுவனங்களை விவசாயத் துறைக்குள் வரச் செய்யவேண்டும்.
இந்த நிறுவனங்கள் நிலங்களை வாங்கும்போது சந்தை விலையில் வாங்கவேண்டும். அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி, அவற்றைத் தனியாருக்கு விற்கக்கூடாது. இந்தத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் ஆற்று/குளத்து நீருக்கும் அரசுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். மின்சாரத்துக்கு மானியம் கொடுக்கக்கூடாது. அத்துடன் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவுப் பண்ணைகளும் என்ன பயிரிடுகிறார்கள் என்பதைக் கட்டாயப்படுத்தவேண்டும். நிலத்தை எடுத்துக்கொண்டு, அங்கு நெல் பயிரிடாமல், கரும்பு பயிரிடுவதை அனுமதிக்கக்கூடாது. எந்த அளவுக்கு குறைந்தபட்சம் உணவுப் பயிர்களைப் பயிரிடவேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவின் பாடு விரைவில் திண்டாட்டம்தான். இப்போது இருக்கும் விவசாயிகளால் மேற்கொண்டு எந்த வகையிலும் விவசாயத் துறையில் முதலீட்டைக் கொண்டுவரமுடியாது. கடன், கடன் என்று கொடுத்தாலும், அது கடைசியில் வாராக்கடனாகவே முடிகிறது. இதனால் விவசாயிகள் வாழ்விலும் மறுமலர்ச்சி இல்லை.
எனவே விவசாயம் செய்யமுடியாதவர்கள், அந்தத் துறையை விட்டுவிட்டு, வேறு எங்கு வாழ்க்கை நடத்தமுடியுமோ அதற்குப் போகவேண்டித்தான் ஆகவேண்டும்.
கிராமப்புறங்களில் பிற வேலைவாய்ப்புகள் வருவதற்கு அரசு பலவற்றைச் செய்யவேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகையை, 25%-க்குக் கீழாகக் கொண்டுவரவேண்டும். பின்னர் அதனை 15% என்று ஆக்கவேண்டும். இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு வேறு வேலை, கல்வி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். மாதச் சம்பளம் கிடைத்தால் அவர்களுக்கும் பெரும் நிம்மதி ஏற்படும். இப்போதிருக்கும் வாழ்வா, சாவா போராட்டம் கொடுமையானது.
இதெல்லாம் நடந்தால்தான் உணவில் தன்னிறைவை நம்மால் அடையமுடியும்.
இந்தியாவில் தற்சமயம் பனவீக்க விகிதம் 7 % ஐ தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது (உண்மையில் அதை விட அதகம் என பொருளாதார வல்லுனர்களின் கருத்து) உணவுப் பொருள்களின் அதீத விலை ஏற்றம் எங்கே கொண்டுபோய் விடும் என தெரியவில்லை.
ReplyDelete1.உலகயமயமாக்கலில் நம்மை இழக்கிறோமா?(our fundamentals)
2.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நம் உணவை முழுங்குகிறதா?
3.கண்ணை விற்று சித்திரம் வாங்க முயலுகிறோமா?
உங்கள் பதிவு(அரிசிப் பற்றாக்குறை) அனவரது கண்களைத் திறந்தால் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு.
http://www.deeshaa.org/2008/04/03/the-dot-corn-bubble/ - regarding the Bio-fuel and corn based issues and global pressures. I have outlined the concerns during my "India Inequality" series in my blog.
ReplyDeleteஎனது இரண்டு பைசா,(சுருக்கமாக)
ReplyDeleteஎன்னைப் பொருத்த வரை நம் விவசாயக் கொள்கையும், விவசாயம் செய்யும் முறையுமே பிரச்சனைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
1. 1991க்குப் பிறகு நம்முடைய விவசாயக்கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாகவே இருந்துவந்துள்ளது. 1991ல் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கான உரமானியத்தைக் குறைப்பதில் ஆரம்பித்து, 1994ல் விவசாயத்துறையை "“priority sector”ல் இருந்து நீக்கி அதன்மூலம் அவர்கள் பெற்றுவந்த குறைந்த வட்டிக் கடனை நீக்கினார்..இது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களை(Money lenders) நோக்கித்திருப்பிவிட்டது(இது போன்று நிறைய சொல்லலாம்). கடந்த 15 வருடங்களாக அரசின் விவசாயக் கொள்கைகள் அனைத்தும் அவர்களை விவசாயத்திலிருந்தே விரட்ட நடக்கும் முயற்சியோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
2. 30 பணக்காரநாடுகள் OECD கூட்டமைப்பு நாடுகள் (http://en.wikipedia.org/wiki/OECD) அந்நாட்டு விவசாயிகளுக்கு $350 பில்லியன் டாலர் அளவு நேரடி மானியத்தை கொடுக்கிறார்கள்.இது நாள்வரை இந்த நாடுகள் தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியத்தில் ஒரு டாலரைக் கூட குறைத்தது இல்லை.அவர்களின் விளைபொருட்கள் நம் சந்தையில் தாராளமாக எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிக்குவிகிறது.இது இந்திய விவசாயிகளின் பசித்த வயிற்றில் அடிக்கும் பச்சை அயோக்கியத்தனம்.
From the Hindu link
36 industrialised countries retain the right to block agricultural imports lest these ‘distort’ their domestic markets. Indian farming, however, has been damaged by the importation of subsidised United States cotton, price-fixing by Indian corporates has been documented, and phytosanitary regulations have restricted Indian agricultural exports.
3.//விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகையை, 25%-க்குக் கீழாகக் கொண்டுவரவேண்டும். பின்னர் அதனை 15% என்று ஆக்கவேண்டும். இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு வேறு வேலை, கல்வி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும்.//
நம் நாட்டில் 600 மில்லியன் விவசாயிகள் உள்ளனர். விவசாயம் மட்டுமே இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கமுடியும்..உலகில் உள்ள எந்த அரசாங்கமும் இவ்வளவு எண்ணிக்கை உள்ள மக்களை அவர்களின் தொழிலைவிட்டுத் துரத்திவிட்டு மறுவேலைவாய்ப்பை அளிக்கமுடியாது.
4.//கிராமப்புறங்களில் பிற வேலைவாய்ப்புகள் வருவதற்கு அரசு பலவற்றைச் செய்யவேண்டும்.//
அதற்கு கிராமப்புற வளர்ச்சிநிதியை (Rural development expenditures) அதிகரிக்க வேண்டும்.ஆனால் 1996ல் மன்மோகன் சிங் இந்த நிதியைக் குறைத்தார்.
கோபாலன்: இந்தியா போன்ற வளரும் நாடுகளால் தொடர்ச்சியாக மானியம் கொடுத்துக் கட்டுப்படியாகும் என்று தோன்றவில்லை. மானியத்தால் மட்டுமே விவசாயத்தைக் காப்பாற்றமுடியும் என்று நான் நம்பவில்லை. நான் எதிர்பார்ப்பது முதலீட்டை.
ReplyDeleteOECD நாடுகள் மானியம் தரக்கூடிய நிலையில் உள்ளனர். அங்கு விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் குறைவு. ஏழை விவசாயி என்று யாரும் OECD நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு தினசரி கடன் தொல்லை, மின்வெட்டு பற்றிய கவலை, இயற்கைச் சீற்றம் போன்றவை பற்றி அவ்வளவாகக் கவலை இல்லை. அவர்களது அதீதமான விளைச்சல் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக, அந்தந்த நாடுகள் ஏற்றுமதி கிரெடிட் தருகின்றன. அவற்றை நேரடி மானியத்தோடு நான் ஒப்பிட மாட்டேன். அதேபோல சில நாடுகளில் நிலங்களில் அதிகம் விளைவிக்காமல் இருக்க மானியம் கொடுக்கப்படுகிறது.
நம் நாட்டில் தொடர்ச்சியாக மானியம் கொடுத்து, சகாயக் கடன், கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் ஆகியவை மூலமாக மட்டுமே விவசாயத்தை உயிர்ப்பிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.
600 மில்லியன் மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதும் அதனைமட்டுமே நம்பி இருப்பதும்தான் பிரச்னை. அதனை மாற்றுவது ஓர் இரவுக்குள் நடக்கக்கூடியதல்ல. ஆனால் ஒரு பத்தாண்டுக்குள்ளாகவாவது அதில் பாதிப்பேரை வேறு துறைகளுக்குச் செல்லவைக்க, நல்லபடியாகப் பல செயல்களை அரசு செய்யவேண்டும். கிராமப்புறக் கல்வி, கிராமப்புறக் கைவினைத் தொழில்களுக்கான சந்தை வளர்ச்சி போன்றவற்றைச் செய்யவேண்டும்.
விவசாயக் கூலிவேலை செய்வோர் நகரங்களுக்குக் குடிபெயரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது நடக்கமுடியாத ஒரு காரியம். நகரங்கள் உதிர்ந்துபோகும்; வருபவர்களது வாழ்க்கையும் வளமாக இருக்காது. எனவே பல புது நகரங்கள் விரிவாக்கப்படவேண்டும். ஐரோப்பாவில் எந்த ஒரு நாட்டிலும் பல நகரங்கள் தலைநகருக்கு ஒப்பான தரத்தில் இருக்கும். அதைப்போன்றே தமிழகத்தில் பல நகரங்கள் சென்னைக்கு ஒப்பானதாக உருவாக்கப்படவேண்டும்.
சேவைத்துறை, உற்பத்தித் துறை ஆகியவைதான் விரிவாக்கம் பெற்று, விவசாயத்துறையில் இழக்கவேண்டிய வேலைவாய்ப்புகளுக்கு மாற்றாக இருக்கவேண்டும்.
கிராமப்புற வளர்ச்சி நிதியை வெகுவாக அதிகரிக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.