பக்கத்து வீட்டில் நான்கு பூனைக் குட்டிகள் இருக்கின்றன. பொதுவாக தாய்ப் பூனை இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் போடும். வெகுசில சமயங்களிலேயே இப்படி நான்கு.
காலை எழுந்தவுடன் பல் தேய்த்துக்கொண்டே பால்கனிக்கு வந்துவிட்டால், அடுத்தவீட்டு மொட்டைமாடியில் ஃபிரெஷ்ஷாக அந்த நான்கு குட்டிகளும் ஒன்றோடு ஒன்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கும். ஒரு குட்டி, உதிர்ந்திருக்கும் இலை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்து, அதைக் கீழே எறிந்து, என்னவோ அது தன்மீது எறியப்பட்ட கிரனேட் என்று நினைத்துக்கொண்டு பக்கவாட்டில் சைடு ஜகா வாங்கும். அப்போது அதன் வால் சிலிர்த்துக்கொண்டு தூக்கியபடி நிற்கும். உடனே மற்ற மூன்றும் தங்கள் கவனத்தை இந்தப் பக்கம் திரும்பும்.
சில நிமிடங்களிலேயே இது பொய்யான விளையாட்டு என்று தெரிந்துகொண்டு அந்தக் குற்றவாளிமீது பாய்ந்து அதைக் கீழே தள்ளி, மோசமாகக் கடிப்பதுபோல ஒன்று தாக்கும். மற்ற இரண்டும் வேறு விளையாட்டுகளை விளையாடப் போய்விடும்.
எப்போதாவது தாய் அங்கு படுத்தபடி, வாலை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருக்கும். உடனே குட்டிகளுக்குக் கொண்டாட்டம். தன் பஞ்சு முன்னங்காலால் ஆடும் வாலைத் தட்டும்; சில நேரங்களில் இரு முன்னங்கால்களாலும் அம்மாவின் வாலைப் பிடித்துத் தூக்கி நறுக் என்று கடித்துவிடும். ம்ர்ர்ர்ர் என்று அம்மா ஒரு சத்தம் கொடுக்க, சப்தநாடியும் ஒடுங்கி, அமைதியே வடிவாகக் குட்டிகள் அடங்கிப்போகும்.
தாவித் தாவி ஒன்றை ஒன்று கீழே தள்ளி, அதன்மீது ஏறி, அடிப்பதும் கடிப்பதும் அவர்களது வேட்டைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு விளையாட்டு. ஆனால் பெரும்பாலும் இந்தப் பூனைக் குட்டிகள் யாரையும் வேட்டையாடுவது கிடையாது.
நாகபட்டினத்தில் எங்கள் வீட்டில் ஒரு சாதுப் பெண் பூனை இருந்தது. என் அம்மாவின் தோஸ்த். காலையில் அம்மா சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பித்துவிடும்போது இதுவும் கூடவெ கிளம்பிவிடும். அம்மா அந்தப் பூனையுடன் பேசிக்கொண்டே வேலை செய்வார். இதுவும் அவ்வப்போது ஏதாவது சத்தம் கொடுத்தபடி இருக்கும். ஒரு கட்டத்தில் எலிகளைப் பிடிக்கும் பழக்கம் நின்றுபோய், பல்லிகளைப் பிடிப்பதோடு நிறுத்திக்கொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு பல்லிகளைப் பிடிப்பதையும் நிறுத்திவிட்டது. மோர் சாதம் அல்லது பால் சாதம் மட்டும்தான்.
அவ்வப்போது குட்டிகளைப் போடும். ஆனால் கவனமாக, குட்டிகள் வளர்ந்தபின், அவற்றை எங்காவது கொண்டுபோய் அதுவே விட்டுவிடும். தன் வீட்டில் தன் சோற்றுக்குப் பாதகமாக வேறு போட்டிகள் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. அப்படியும் மீறி ஒருமுறை அது போட்ட இரண்டு குட்டிகளை வேறு எங்கும் விடவில்லை. அந்த இரண்டு குட்டிகளும் எங்களுடன் (நான், என் தங்கை, இரண்டு பூனைக் குட்டிகள்) சேர்ந்து வளர்ந்தன. அந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். ஆண் சற்று குண்டாக, கொழு கொழுவென இருந்தது. பெண் சோனியாக இருந்தது. எனவே அவற்றுக்கு குண்டு, சோனி என்று பெயர்கள்.
ஒல்லி, கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி. பிடித்தால் சரக்கென்று நகத்தால் கீறிக் கிழித்துவிடும். குண்டு பரம சாது. அதற்கு ஆண்களைப் பார்த்தால் பயம். குண்டான பெண்களைப் பார்த்தாலும் பயம். எங்கள் வீட்டில் என்னிடம் மட்டும்தான் கொஞ்சம் பயம் இல்லாமல் வரும். என் அப்பாவைப் பார்த்தால் கதறிக்கொண்டு ஓடிவிடும். அம்மா, தங்கை ஆகியோரிடம் பயம் இல்லை. வெளியிலிருந்து யாராவது வந்தால் தயங்கித் தயங்கித்தான் வந்து பார்க்கும். கொஞ்சம் பயம் என்றாலும் எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும்.
ஒரு கட்டத்தில் குண்டும் சோனியும் பெரியவர்களாக ஆகியும் எங்கள் வீட்டிலேயே தொடர்ந்து வசித்தன. இப்போது மூன்று பூனைகள். இதற்குள் தாய்ப் பூனைக்கு வயதாகி, பேசுவதை (அதாவது சத்தம் போடுவதை) முற்றிலுமாக நிறுத்தியிருந்தது. குட்டிகள் போடுவதையும்தான். அவ்வப்போது வரும், சாப்பிடும். எங்காவது காணாமல் போய்விடும். சோனியின் சேட்டைகள் அதிகமாகின. ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா ஒருவரைக் கீறிவிட்டது. அவர் சாக்குப் பைக்குள் அதை எடுத்துக்கொண்டுபோய் எங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினார். எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து, திரும்ப வந்துவிட்டது. இப்படியே இரண்டு மூன்று முறை அவர் செய்ய, அதுவே கடுப்பாகி, ‘நீயும் வேண்டாம், உன் வீடும் வேண்டாம்’ என்று முடிவுசெய்து வேறு எங்கோ ஓடிவிட்டது.
குண்டைப் பற்றி அந்தக் கவலை இல்லை. யாருக்கும் அதனால் எந்தப் பயமும் இல்லை. வெறும் தயிர் சோறு மட்டுமே தின்று, தன் இனத்துக்கே உரிய எந்த தாமஸ குணமும் இல்லாமல் வளர்ந்துவந்தது. சில நேரங்களில், பல்லி, கரப்பு, தட்டான் போன்றவற்றைப் பிடித்துவிடும். ஆனால் அவற்றைக் கொல்லக்கூடத் தெரியாமல் தட்டித் தட்டித் துரத்தி விட்டுவிடும்.
அது ஆணாகவும் பிறந்து, வீரம் இல்லாமல் இருந்ததே அதற்கு எமனாகப் போயிற்று. அந்தப் பகுதியில் சில முரட்டு ஆண் பூனைகள் இருந்தன. இந்தக் கடுவன் பூனைகள் அவ்வப்போது அந்தப் பகுதியில் இருக்கும் பெண் பூனைகளை சினையேற்றும், தங்களுக்குள் சண்டை போட்டுகொண்டு வீட்டுக் கொல்லைகளில் கர்ர்ர் புர்ர்ர் என்று உறுமும் அல்லது ஒருவித சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும். சில நேரங்களில் சிறு குழந்தைகள் அமானுஷ்யமாக அழுவதுபோன்றும் ஓலமிடும். குண்டுப் பூனை வளர்ந்து பெரிதாகிக் கொழுகொழுவென்று வெளியே செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஒன்றுசேர்ந்து குண்டனைத் தாக்க ஆரம்பித்தனர்.
நன்கு செமத்தியாக டின் கட்டி அடித்துக் கடித்துவிடுவார்கள். இதுவும் கதறிக்கொண்டு வீட்டுக்கு வந்துசேரும். அடுத்த சில நாள்கள் தன் காயங்களை நக்கி ஆற்றும். பின் மீண்டும் வெளியே சென்று உதை வாங்கிக்கொண்டு வரும். பகுத்தறிவற்ற அதற்கு சொன்னால் என்ன புரியப்போகிறது? ஒருமுறை நாங்கள் ஊருக்குப் போய்விட்டு சில நாள்கள் கழித்துத் திரும்பினோம். பிற ஆண் பூனைகள் எல்லாம் சேர்ந்து கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது என்றார்கள் அக்கம்பக்கத்தினர். கிணறில் விழுந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். காணவில்லை.
அந்தப் பூனையை வைத்து நான் சில சோதனைகளைச் செய்துள்ளேன். ஒரு உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. அதன் கால் நகங்களை அழுத்திப் பார்த்திருக்கிறேன். பாதத்தில் மெத்தென்று இருக்கும் இடத்தை அழுத்தும்போது அதன் நகப்பையிலிருந்து கூரான நகம் வெளியே எட்டிப் பார்க்கும். அந்த நகங்களை ஒருக்காலும் தன்னைக் காப்பதற்காகக்கூட குண்டுப் பூனை பயன்படுத்தியதில்லை. அதேபோல அதன் பல் வரிசைகளை வாயைத் திறந்து, வாய்க்குள் விரலைவிட்டு எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் கொஞ்சமும் பதறாமல் காட்டிக்கொண்டு கம் என்று இருக்கும் அந்தப் பூனை. சீரான பற்கள். கடைக் கோடியில் மட்டும், நீண்ட ஊசிபோன்ற பற்கள். அவற்றையும் அது தன் வாழ்நாளில் ஒழுங்காகப் பயன்படுத்தியதில்லை. தயிர் சாதம் சாப்பிட இந்தப் பற்கள் எதற்கு?
அந்தப் பூனையை மாதிரியாக வைத்து தரையில் சாக்பீஸால் படம் வரைந்து பழகியிருக்கிறேன். (இப்போது மறந்துவிட்டது.) கிட்டத்தட்ட பக்கத்தில் உள்ள படத்தைப்போல கொஞ்சம் கறுப்பாக, உடலெங்கும் வரி வரியாக இருக்கும் அந்தப் பூனை. அதன் பல்வேறு விளையாட்டுகளை அருகே இருந்து ரசித்திருக்கிறேன். பெரியாழ்வார் போல கவித்திறன் இருந்திருந்தால் பல பாடல்களை எழுதியிருந்திருப்பேன்.
இப்போது மீண்டும் அதே விளையாட்டுகளை (இண்டூ ஃபோர்) பார்க்க முடிகிறது. ஆனால் இப்போதும் கவித்திறன் கைகூடவில்லை.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
7 hours ago
ரசித்தேன் பத்ரி. ஆனால் குண்டனின் முடிவுதான் மனசைக் கஷ்டப்படுத்திருச்சு:(
ReplyDeleteபழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள், பத்ரி. சிறு வயதிலிருந்து எங்கள் வீட்டில் வளர்ந்த பூனைகளுக்கு கணக்கே இல்லை. இதில் பல கிணற்றில் விழுந்து, பல பிற பூனை, நாய்களிடம் கடிப்பட்டு இறந்தன. இன்னும் சில பூனையைப் பிடித்து சாப்பிடுபவர்களால் :( இப்பொழுது அந்த தொல்லைகள் இல்லை. அவைகளின் ஆயுள் அதிகரித்து விட்டது.
ReplyDeleteவெள்ளை நிறத்தொரு பூனை.. எண்கள் வீட்டில் வளருது கண்டீர்'என்ற பாரதியின் வரிகள் போல உங்கள் பூனைப் பதிவு கணீரென எழுதியிருக்கிறீர்கள்.ரசித்தேன்.
ReplyDeleteபத்ரி, அட்டகாசம் ....பூனை அல்ல .உங்க நடை.அப்பறம் பேல இருந்து பூனையை போட்டது மேனாக காந்திக்கு தெரியுமா?
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteபூனை சமாச்சாரம் மிகச் சுவையாக இருந்தது.சிறு வயதில் எங்கள் வீட்டில் அருமையாக வளர்த்த மைனாவை ஒரு பூனை சுவாஹா செய்ததிலிருந்து எனக்குப் பூனையைக் கண்டால் ஆகாது.
பூனை உய்ரே இருந்து கீழே விழுவது பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். இது பற்றி விரிவாகவே ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
பூனை மேலே இருந்து விழும் போது தனது உடலை எப்படியெல்லாமோ வளைத்து நெளித்து பாரசூட் போல உடலை அகற்றிக் கடைசியில் தரை இறங்கும் போது நான்கு கால்களை ஊன்றிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் நியூ சயிண்டிஸ்ட் இதழில் இதை தொடர் படங்களாக வெளியிட்டிருந்தார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க்கில் ஒரு பூனை 26 வது மாடி ஜன்னல் வழியே கிழே விழுந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை அதன் பெயர் லக்கி
ராமதுரை
அருமையான நடை... ஒரு சிறுகதை போல ஆரம்பித்து அழகாக முடித்திருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன் பத்ரி.
ReplyDeleteஅருமை பத்ரி, கிட்டதட்ட எல்லோருக்கும் ஒரு பூனை flashback உண்டு. ஆனால் '90-'00 பிறகு பிறந்த குழந்தைகளுக்கு இது கிடைக்காமல் போய்விட்டது.
ReplyDelete-கிரி
ஆஹா! வர வர
ReplyDelete”உண்மைத் தமிழன்” ஐ மிஞ்சும் அளவிற்கு மிகப் பெரிய இடுகைகள் வருகிறதே!?
நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.
அன்பு பத்ரி,
ReplyDeleteநானும் பூனை ரசிகன். இன்னும் எங்கள் வீட்டில் பூனை இருக்கிறது. முறுக்கு, மிச்சர், போன்றவற்றை விரும்பி சாப்பிடும், என் அம்மாவின் சிறந்த நண்பர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் நாயும் பூனையும் தான். எங்கள் பூனை நான் உட்கார்ந்தால் என் மடிமீது வந்து உரிமையோடு அமர்ந்து கொள்ளும். இன்றும் இரவு என் போர்வைக்குள் அவ்வபோது வந்து தூங்கும்.
http://en.wikipedia.org/wiki/File:IndusValleySeals.JPG
ReplyDeleteare they realy jodis ? both are seals ?
pls explain if u have details.
Excellent write up
ReplyDeleteஎங்கள் வீட்டில் வெள்ளைப்பூனை.
ReplyDelete//அந்தப் பூனையை வைத்து நான் சில சோதனைகளைச் செய்துள்ளேன். ஒரு உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. அதன் கால் நகங்களை அழுத்திப் பார்த்திருக்கிறேன். பாதத்தில் மெத்தென்று இருக்கும் இடத்தை அழ்த்தும்போது அதன் நகப்பையிலிருந்து கூரான நகம் வெளியே எட்டிப் பார்க்கும். அந்த நகங்களை ஒருக்காலும் தன்னைக் காப்பதற்காகக் கூட குண்டுப் பூனை பயன்படுத்தியதில்லை. அதேபோல அதன் பல் வரிசைகளை வாயைத் திறந்து, வாய்க்குள் விரலைவிட்டு எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் கொஞ்சமும் பதறாமல் காட்டிக்கொண்டு கம் என்று இருக்கும் அந்தப் பூனை. //
நானும் இதைச் செய்திருக்கேன் :-)
>>உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. <<
ReplyDeleteஇது அறிவியலில் ஓரளவு ஆராயப்பட்ட விஷயம். (ஒரு விபரீதமான பழமொழி ஞாபகம் வருகிறது. வேண்டாம் ;-) இத்துறைக்கு feline pesematology என்று பெயர்.
இதைப்பற்றிய ஆங்கில தகவல் தள சுட்டி.
காற்றில் விழுகையில் பாராசூட் போல உடலை ஆக்கிக்கொண்டு விழுவது பூனையின் இயல்பு. சோதனையில், எட்டாவது மாடியில் இருந்து கீழேபோட்டாலும் பூனை தப்பித்துள்ளதாம்.
பூனையின் இக்குணத்தினால்தான் cats have nine lives பழமொழி தோன்றியுமிருக்கலாம். நம்ம ஊர் பூனை முகம் போட்ட எவரெடி பாட்டரி விளம்பரம் ஞாபகம் உள்ளதா? ;-)
'பறக்கும்' அணிலாலும் (dubbed, flying squirrels) இதை செய்ய முடியும். ஆனால் ஓரளவு (மரம்) உயரம்தான்...
உங்கள் அழகான இயல்பான பதிவில், அறிவியல் கவனக்கலைப்பை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
அருண்
I had an expereince recently and it was nice to watch CAT's family
ReplyDelete