நாளை, சனிக்கிழமை, தொல்காப்பியம் பற்றி, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் ஒன்றில் பேசுகிறேன். தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரம்: மாலை 5.30 மணி.
நான் தமிழ் அறிஞன் அல்லன். தமிழ் இலக்கணம் என் துறை அல்ல. தொல்காப்பியத்தில் எனக்கு நாட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் களைவதற்கு ஒரு மென்பொருள் உருவாக்குவது குறித்தே.
ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட மென்பொருள்கள் நன்றாக இயங்குவதை நீங்கள் அறிவீர்கள். இத்தனைக்கும் ஆங்கில மொழிக்கான இலக்கணம் கட்டுக்கோப்பானதல்ல. புறனடைகள் ஏராளம். அப்படி இருந்தும்கூட அம்மொழிக்கான இலக்கணத்தைக் கணினி அறியும்படிச் சொல்லித்தருவதில் மென்பொருளாளர்கள் வெற்றிகண்டிருக்கிறார்கள்.
ஆனால் அற்புதமான ஓர் இலக்கணம் கொண்ட மொழியான தமிழுக்கு இது இன்றும் சரியாகச் சாத்தியப்படாமல் உள்ளது. இன்றைய தமிழ், தொல்காப்பிய விதிகளிலிருந்து சற்றே நகர்ந்து வந்துள்ளது என்றாலும் அந்த நகர்வு குறைவானதே. உரைநடை பெரிதாக வளர்ந்த 19-ம் நூற்றாண்டிலும் ஆங்கிலத் தாக்கம் மிக அதிகமாக உள்ள இன்றைய 21-ம் நூற்றாண்டிலும்கூட தமிழின் விதிகள் தொல்காப்பியத்திலிருந்து மிக அதிகமாக நகர்ந்துவிடவில்லை. இது தமிழ் மொழியின் வலுவைத்தான் காட்டுகிறது.
தொல்காப்பியத்துக்குப் பிறகு பவணந்தி முனிவரின் நன்னூல் அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இலக்கண நூல். பின்னர் வீரமாமுனிவர் (ஜோசஃப் பெஸ்கி) தமிழிலக்கணத்தை லத்தீன் மொழியில் உரைநடையில் எழுதினார். அதன் ஆங்கில வடிவம் இன்று கிடைக்கிறது. இன்றைய தேதியில் தமிழ் உரைநடைக்கு அழகான இலக்கணம் வேண்டுமென்றால் ஒருவர் தாமஸ் லெஹ்மான் எழுதிய புத்தகத்துக்குச் செல்லவேண்டும்! மேலும் சில நல்ல புத்தகங்கள் இருக்கலாம்.
தொல்காப்பியத்தில் உள்ளவற்றை என் வசதிக்காக நான் இப்படி எடுத்துக்கொள்கிறேன்:
(1) மொழியின் அடிப்படை இலக்கணம்: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய பகுதிகளில் சொல்லப்பட்டவை
(2) பாவகைகள், எழுத்து, அசை, சீர், அடி தொடை, அணி முதலியன: பொருளதிகாரத்தின் சில பகுதிகள்
(3) தமிழர் வாழ்க்கைமுறை பற்றியது: பொருளதிகாரத்தின் பிற பகுதிகள் - பாடுபொருள் பற்றிக் குறிப்பிடும்போது திணை, துறை தொடங்கி களவு, கற்பு, வாழ்க்கை என்று பலவற்றைக் கூறுகிறார் ஆசிரியர். இதுதான் விவாதத்துக்குரிய பகுதியும்கூட. திராவிட/தமிழுணர்வாளர்கள் எழுதும் உரைகள் பாரம்பரிய உரையாசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் பகுதியும் இதுதான். தொல்காப்பியர் பார்ப்பனரா, ஆரியத்தை உள்ளே புகுத்தினவரா, அல்லது ‘அவை’யெல்லாம் இடைச் செருகல்களா, அல்லது அவற்றை வேறு மாதிரிப் பொருள்கொள்ளவேண்டுமா போன்ற பிற
நாளைய பேச்சின்போது மேற்குறிப்பிட்ட மூன்றைப் பற்றியும் சொல்வேன் என்றாலும், எனக்கு ஆர்வத்தை அதிகம் அளிப்பது பகுதி (1). அதிலிருந்துதான் தமிழ் ஸ்பெல்செக்கர் போன்ற மென்பொருள்களை உருவாக்கமுடியும். இன்று தமிழ்ப் பா இறந்துவிட்டது. விளையாட்டாக யாராவது வெண்பா எழுதலாம். விருத்தம் வடிக்கலாம். (விருத்தம் தொல்காப்பிய காலத்துக்குப் பிற்பட்டது.) எனவே பகுதி (2) வெறும் விளையாட்டுக்கு மட்டுமே பயன்படும். பகுதி (3) ஓரளவுக்கு வரலாற்றுப் பார்வையைத் தரலாமே ஒழிய, இன்றைய வாழ்க்கை முறைக்கு உகந்தது என்று சொல்லமுடியாது. மணமகன், மணமகளுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தம் என்று தொல்காப்பியர் சொல்வது பாரத்மேட்ரிமனி தளத்துக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கலாம்:-)
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடக்க உள்ள பேச்சில், கணினியில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை திருத்திகளை எழுதும்போது எம்மாதிரியான விதிகளை உள்ளிடவேண்டும், தொல்காப்பியம் தமிழுக்கு எப்படிப்பட்ட சேவையைச் செய்துள்ளது போன்றவற்றைப் பற்றிப் பேச உள்ளேன். இந்தி சேர்த்த பிற இந்திய மொழிகளில் இதைச் செய்ய எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவுக்குத் தொட உள்ளேன்.
இந்தக் காரணத்துக்காகவே தொல்காப்பியத்தைத் தமிழுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான கொடையாகத் தமிழர்கள் கருதவேண்டும்.
Friday, July 01, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Thanks for conducting the session. I'm participating in this.... Do we need to book the seat for it ?
ReplyDeleteNo. Admission is free. Just drop by.
ReplyDeleteஉங்கள் பேச்சை காணொளியாக தரமுடியுமா?
ReplyDeleteநம் இலக்கணத்தை கணினிக்கு புரியும்படி நிரலாக்கம் செய்தால் ஒப்பற்ற பிழை திருத்திகளை நம்மால் உருவாக்க முடியும். இப்பணியில் தங்களது பங்களிப்புக்கு மிக்க நன்றி. NHM Writer நான் விரும்பி பயன்படுத்தும் மென்பொருள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோல் மற்றுமொரு சிறந்த மென்பொருளையும் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஉங்கள் ஆர்வம் வியக்கவைக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete-ஜெகன்
பத்ரி,
ReplyDeleteஇதைப் பற்றி மிக முற்பட்டு-சுமார் இரண்டாண்டுகள் இருக்கலாம்-உங்கள் பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
எழுத்துப் பிழைகளைக் களைவதோடு தமிழில் பேச்சைப் புரிந்து கொண்டு எழுத்து வடிவில் ஆக்கம் தரத்தக்க மென்பொருள் இயலுமானால் முயற்சி செய்ய உங்களை வேண்டினேன்.
ஸ்பெல் செக்கர் எனும் பிழை திருத்தி சாத்தியப் படும் போது அதன் அடுத்த கட்டம்தான் பேச்சை உணரும் மென்பெருள் என்பது எனது புரிதல்...
வரிவடிவத்திலிருந்து ஒலி வடிவம் ஏற்கனவே சிலர் முயற்சித்திருக்கிறார்கள்;மாறுபட்ட வடிவம்-வைசி வெர்சா-இல்லையென நினைக்கிறேன்.
சாத்தியப்பட்டால் என்போன்றவர்களுக்கு மிக வசதியாக இருக்கும்..
பதிப்புத் துறை தொழிலாக இருப்பினும்,இதுபோன்ற முயற்சிகளுக்கு வணிகம் மீறிய ஒரு ஆர்வம் இருக்கவேண்டும்;அது உங்களிடம் இருப்பதைப் பார்க்க மெத்த மகிழ்ச்சி..
என்.எச்.எம் எழுதிக்காக ஏற்கனவே தமிழ் வலையர்கள் பலரின் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு..
எல்லைகள் விரிய வாழ்த்துக்கள் !
ஏற்கனவே ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல இந்தப் பேச்சின் நகர் படக் காட்சியை பதிவில் அளியுங்கள்.நன்றி.
தொடர்புடைய தமிழ்முரசு செய்தி:
ReplyDeleteபிழை திருத்தும் ‘மென்தமிழ்’
Sunday, September 4th, 2011
- சத்தியா ஜெயபாண்டியன் - தமிழில் தட்டச்சு செய்வதோடு மட்டும் அல்லாமல் சொற்பிழைகளைத் திருத்துவதற்கும் புதிய மென்பொருள் ஒன்று உருவாகியுள்ளது. உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மென்தமிழ் எனப்படும் இந்தப் புதிய தமிழ் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலியை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்மொழி துறை தலைவர், பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவின் இயக்குநர், திரு ஆர். இராசாராம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்புரை யாற்றிய கல்வி அமைச்சின் தமிழ்மொழி பிரிவின் தலைவர், திரு த. வேணுகோபால், “இந்த மென்தமிழ் செயலி வெறும் தொழில்நுட்பத்தின் அடிப் படையில் மட்டுமே உருவாக்கப் படவில்லை. தமிழியல், மொழியியல், கணினியியல் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சி,” எனக் கூறினார். மேலும் தற்போது பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருட்களில் எந்தவொரு மாற்றமும் இப்போதைக்கு இடம் பெறாது என அவர் தெளிவு படுத்தினார். தமிழில் தட்டச்சு செய்வதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால், தட்டச்சு செய்யும் போது, தவறுதலாக இடம்பெறுகிற சொற்பிழைகளைத் தானே இனங்கண்டு, திருத்தி தரும் சொற்பிழை திருத்தி, கணினி தமிழ் வரலாற்றிலேயே முதல் முயற்சி என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அடிச்சொற்களில் ஏற்படுகிற பிழைகள் மட்டுமல்லாமல், விகுதி கள் இணைந்து வரும்போதும் ஏற்படுகிற பிழைகள் திருத்தித் தரப்படுவது மென்தமிழின் தனிச் சிறப்பாகும். மேலும் மென்தமிழில் எண்களைத் தமிழ் சொற்களில் மாற்றித் தரும் வசதியும், சொற்களை எண்களாக மாற்றி தரும் வசதியும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தமிழ் ஆவணங்களில் இடம்பெறுகிற சொற்களை அகர வரிசைப்படுத்தவும் இந்த செயலியால் முடியும். நிகழ்ச்சியில், பேராசிரியர். ந. தெய்வசுந்தரம், காட்சி விளக்கவுரை நடத்தி பார்வை யாளர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார். பல தமிழ் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். “மென்தமிழ் மூலம் மாணவர் களால் தாங்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். “அது மட்டுமல்லாது அவர்களால் சொந்தமாகத் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் முடியும். “ஆகையால் இது மாணவர் களுக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன்,” என மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுமதி கூறினார். கணினி வட்டில் கிடைக்கும் இந்த மென்தமிழ் தமிழ் செயலி செப்டம்பர் 10 வரை அறிமுக விலையாக $120க்கு விற்கப் படுகிறது. மென்தமிழை வாங்குவோருக்கு இரண்டு உரிமங்கள் வழங்கப்படும். மென்தமிழைப் பற்றி மேல் விவரங்களுக்கு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இயக்குநர், திரு எஸ். மணியத்தை 97805920 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது, smaniam@pacific.net.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
http://www.youtube.com/watch?v=B589hh00bEU
ReplyDeleteஓரளவிற்குச் சந்திப் பிழைகள் திருத்தும் ஒரு இணையச் செயலி இங்குள்ளது
ReplyDeleteநாவி
மிகவும் அருமையான முயற்சி, வாழ்துக்கள்! தங்களின் அப்பேச்சு விழியம் விடிவில் பதிவு செய்யப்பட்டு இருந்தால், தயை செய்து இங்கு அதன் தொடுப்பினை பகிரவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDelete