Saturday, August 27, 2011

சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம்

மிஷல் தனினோ ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகக் கோயம்புத்தூரில் வசித்துவருபவர்.

இவர் ஆங்கிலத்தில் எழுதி, பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்: The Lost River: On the Trail of the Sarasvati.

சரஸ்வதி என்ற நதி உண்மையான நதியா அல்லது இந்துக்கள் மனத்தளவில் மட்டுமே இருந்துவரும் ஒரு நதியா என்ற கேள்விக்கு விடை காண தனினோ முற்படுகையில் தொடங்குகிறது அவரது தேடல். கங்கை ஆறும் யமுனை ஆறும் சங்கமம் ஆகும் இடத்தில் அடி ஆழத்தில் சரஸ்வதி என்ற நதியும் ஓடுவதாகவும், இந்த மூன்று நதிகள் கூடும் இடத்தில் முழுக்குப் போட்டால் பாவம் போய் புண்ணியம் பெருகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

ஆனால் தனினோ சொல்லும் கதை வேறுமாதிரியானது. எக்கச்சக்க சான்றுகளுடன், சரஸ்வதி என்ற நதி உண்மையாகவே இருந்தது என்றும் அந்த நதி இமயத்தின் ஷிவாலிக் மலையில் பிறந்து, இன்றைய ஹரியானா, ராஜஸ்தானம் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்கிறார் தனினோ. இது இவரது தனிப்பட்ட கருத்து கிடையாது. பிற அறிஞர்கள் சொல்லியிருப்பதை அழகாகக் கோர்த்துக் கொண்டுவருகிறார் தனினோ. இந்த ஆற்றுக்கு நீரைத் தரும் ஆறுகள் நிலநடுக்கம் காரணமாக வேறு திசையில் திரும்பியதாலும், இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும் இந்த நதி நாளடைவில் வற்றிக் காய்ந்து சுருங்கிவிட்டதாம்.

ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் சரஸ்வதி என்ற நதியைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. இந்தப் புத்தகத்தின் அளவுக்கு சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி எளிமையாக மக்களுக்குச் சொல்லும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. உண்மையில் சரஸ்வதி நதியின் கரையில்தான் அந்த நாகரிகம் உருவாகியது என்கிறார் தனினோ. சரஸ்வதி சுருங்கச் சுருங்க, மக்கள் சிந்துவை நோக்கி நகர்ந்தனர். கங்கையை நோக்கியும் நகர்ந்தனர். இதனை மேலும் நீட்டிக்கிறார் தனினோ. வேதங்கள் உண்மையில் கங்கைக் கரையில் உருவாக்கப்படவில்லை; அவை சரஸ்வதி நதிக்கரையிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன என்கிறார் தனினோ.

சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்ற ஒரு கோட்பாட்டைப் பல அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். முக்கியமாக எழுத்துரீதியில் பார்க்கும்போது சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் இலச்சினைகள் திராவிட மொழி ஒன்றையே குறிப்பாக உணர்த்துகின்றன என்கிற வாதத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வேறு பலரும் ‘ஆரிய’ நாகரிகமே சிந்து-சரஸ்வதி சமவெளிக் கரையில் உருவானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

செப்டெம்பர் 3-ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்ப் பாரம்பரியக் குழுமத்தின் சார்பில் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மிஷல் தனினோ, சரஸ்வதி ஆற்றைப் பற்றியும் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம் பற்றியும் உரையாடுகிறார். அதுகுறித்த தகவல் இதோ.

மிஷல் தனினோ எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்தப் புத்தகம் செப்டெம்பர் மாதப் பிற்பகுதியில் சென்னையில் வெளியிடப்படும். அதுகுறித்த தகவல்களைப் பின்னர் எழுதுகிறேன்.

10 comments:

  1. BURJOR AVARI எழுதியுள்ள 'India - The Ancient Past’, இந்த புத்தகத்தில் சிந்து சமவெளி பற்றி முக்கிய குறிப்புகள் உள்ளன. சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி சேர்த்து அந்த பகுதி சப்த சிந்து என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முதன்மையான மொழி தமிழாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் இதன் ஆசிரியர். சமஸ்கிருதத்தை கலப்பு மொழி என்கிறார். இந்த புத்தகத்தை தமிழில் சிறு குறிப்புகளாக தொகுக்கலாம் என்றிருக்கிறேன் http://blog.scribblers.in/

    ReplyDelete
  2. Is the programme open for all on 3rd sep.??
    rgds/Surya

    ReplyDelete
  3. On a Similar note : http://www.guardian.co.uk/environment/2011/aug/26/underground-river-amazon

    ReplyDelete
  4. The program is open for all and free. Please also inform your friends who will be interested in this topic.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இதை பற்றி புவியியல் ஆராய்சியாளர் ஏற்கனவே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
    Saraswati: The River That Disappeared. Universities Press, Hyderabad, 116 p., 2002.
    Ek Thi Nadi Saraswati, Aryan Books International, New Delhi, 111 p., 2010

    ReplyDelete
  7. தமிழ்ப் பாரம்பரியக் குழுமத்திற்கு வெளியூர் நேயர்களின் வேண்டுகோள்.

    **
    பேச்சைப் பதிவு செய்யும்போது ஒலியில் கூடுதல் கவனம் செலுத்தி தரத்தை மேம்படுத்தவும்.
    **

    ReplyDelete
  8. ராமதுரை எழுதியது
    செயற்கைக்கோளிலிருந்து -remote sensing satellites -- எடுக்கப்பட்ட படங்களிலிருந்து கடந்த காலத்தில் காவிரி நதியானது எவ்விதமெல்லாம் தடம் மாறிப் பாய்ந்துள்ளது என்பதை கண்டறிய முடிந்துள்ளது.இது பற்றிய ஆதாரபூர்வமான கட்டுரை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவியல் இதழான தினமணி சுடரில் செயற்கைக்கோள் எடுத்த படங்களுடன் வெளியாகியது. சரஸ்வதி நதி ஓடிய பிராந்தியமும் இவ்விதம் செயற்கோள் மூலம் நிச்சயம் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப் படங்களை ஆராய்ந்தால் அது எவ்வித்ம் தடம் மாறி இறுதியில் மறைந்து போனது என்பது தெரிய வரும்.பூமியின் சில்லுகள்- Plates - இடம் பெயரும் போது இவ்விதம் பூமியின் மேற்பரப்பில் பெரும் மாறுதல்க்ள் ஏற்பட்டு நதிகளும் ஏரிகளும் மறைவதும் சகஜமே. சொல்லப் போனால் கடல்களும் இவ்விதம் மறைந்து போயுள்ளன. டெத்திஸ் கடல் இதற்கு ஓர் உதாரணம்.
    ராமதுரை

    ReplyDelete
  9. அமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ. ஆழத்தில் பாயும் இன்னொரு ஆறு கண்டுபிடிப்பு

    http://thatstamil.oneindia.in/news/2011/08/28/secret-river-discovered-under-the-amazon-aid0180.html

    ReplyDelete
  10. சரஸ்வதி நதி பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று வீட்டில் பெரியவர்களிடம் கேட்டால் ஒற்றை வரியில் சொல்லப்படும் பதில், அந்தர்வாகினி (பூமியின் அடியில் ஓடும் நதி )
    சரஸ்வதி வற்றிப் போய் விட்டாலும் அந்த நம்பிக்கை பலர் மனதின் ஆழத்தில்(அந்தர்) பதிந்து வற்றா நதியாகி விட்டது.

    ஆங்கிலப் பதிப்பை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். தமிழில் வருகிறதா? நல்ல முயற்சி.

    ReplyDelete