Friday, August 23, 2013

தமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1

பன்னிரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இது தவிர பல உலக நாடுகளில் தமிழ் மொழி பேசுவோர் வாழ்ந்துவருகின்றனர்.

தமிழ் சந்திக்கும் நுட்பியல் பிரச்னைகள் அனைத்தையும் பிற இந்திய மொழிகளும் சந்திக்கின்றன. அது தவிர்த்து, தமிழுக்கு சில பிரத்யேக அரசியல் பிரச்னைகளும் உள்ளன. தமிழ் மொழியின் எழுத்துகள், பிற இந்திய மொழிகளின் எழுத்துகளைவிடக் குறைவாக இருக்கும் காரணத்தால், சில தமிழ் அறிஞர்கள் தமிழைப் பிற இந்திய மொழிகள்போலக் கருதாமல் தனியாகக் கருதும்படிக் கோருகிறார்கள். தமிழில் சில வடமொழி எழுத்துகள் (கிரந்த எழுத்துகள் என இவற்றை வழக்குமொழியில் அழைப்பர்) புகுந்துள்ளதைக் காரணம் காட்டி அவற்றை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். எழுத்து சீர்திருத்தம் தேவை என்பதைச் சிலர் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழைக் கணினியில் கொண்டுவருவதில், தெரியவைப்பதில் புதுப்புது சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

தமிழ் எழுத்து என்பதற்கு இனியும் தமிழர்கள் மட்டும் சொந்தக்காரர்கள் இல்லை. தமிழக அரசு, இந்திய அரசு, பன்னாட்டு கணினித் தர அமைப்புகள் (ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை), கணினி/கைப்பேசி தயாரிப்பாளர்கள், இயக்குதளம் உருவாக்குபவர்கள், நிரல் எழுதுபவர்கள் என்று பலரும் இன்று உலக மொழிகள் அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். ‘என் மொழி, நான் இப்படித்தான் செய்வேன்’ என்று இனியும் யாரும் தனியாக எதையும் செய்துவிட முடியாது. எது செய்தாலும் அதனை முறைப்படிச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இத்துறையில் அரசியல் கலக்கும்போது, தமிழ் இன உணர்வு என்பது முன்வைக்கப்படும்போது பிரச்னை பெரிதாகிறது. வேண்டியபோது வடமொழி, இந்தி, நடுவண் அரசு, பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பிடித்து இழுத்து சிக்கலை வேண்டிய அளவு விரிவாக்கிக்கொள்ளலாம்.

தமிழ்க் கணிமையின் ஆரம்ப சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துக் குறியீடு ஒன்றை உருவாக்குவதே. பன்னாட்டு அளவில் ஒருங்குறி (யூனிகோடு) சேர்த்தியம் உருவாவதற்கு முன்பிருந்தே டெஸ்க்டாப் பப்ளிஷிங் என்ற துறையின் வளர்ச்சி காரணமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களும் அவை ஒவ்வொன்றுக்குமான பிரத்யேக எழுத்துக் குறியீடுகளும் உருவாகத் தொடங்கியிருந்தன. 1997 முதல் தமிழ் இணைய மாநாடு (அப்போது அதற்கு அந்தப் பெயரில்லை. உத்தமம் அமைப்பே அப்போது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 2000-ல் உத்தமம் உருவாகி இணைய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டபோது 1997 சிங்கப்பூர் மாநாட்டை முதல் தமிழ் இணைய மாநாடு என்று குறிப்பது வழக்கமாகியது) நடந்தபோதிலிருந்தே இந்தச் சிக்கல் உணர்த்தப்பட்டது. விரைவாக உத்தமம் உருவாகி, தமிழக அரசின் ஈடுபாட்டுடன் எழுத்துக் குறியீடு தரப்படுத்தல் முயற்சி தொடங்கியது. தமிழக அரசு TAB, TAM என்ற எழுத்துக் குறியீடுகளை முன்வைக்க, உத்தமம் தரப்பு TSCII என்ற குறியீட்டை முன்வைக்க, இந்த மூன்று குறியீடுகளும் சேர்ந்து அரசுத் தரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. (ஆனால் கடைசிவரை அரசு அலுவலகங்களில் வானவில் என்ற எழுத்துரு/குறியீடு/தட்டச்சுப் பலகை முறையே பயன்பாட்டில் இருந்தது, இன்றும் பெரும்பாலும் இருக்கிறது என்பது பெரும் முரண்.)

இதையடுத்து தமிழில் தட்டச்சு செய்ய விசைப்பலகை தரப்படுத்துதல் என்பதும் உத்தமம், தமிழக அரசு இரண்டும் இணைந்து செயல்பட்டதால்தான் அமலுக்கு வந்தது. அதுதான் TamilNet99 அல்லது Tamil99 என்ற பலகைமுறை. இன்று தமிழக அரசின் தரமாக இது இருந்தாலும் நான் மேலே சொன்னபடி தமிழக அரசு அலுவலகங்கள் பல இடங்களிலும் வானவில்தான் கோலோச்சுகிறது. ஆனால் சிங்கப்பூரில் Tamil99 தட்டச்சுப் பலகைதான் அங்கீகரிக்கப்பட்ட முறை.

இவையெல்லாம் உள்ளூர் மென்பொருள் தயாரிப்பாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. அவர்கள், தத்தம் சொந்தக் குறியீடுகள், விசைப்பலகைகள் ஆகியவற்றுடன், TAM/TAB/TSCII/Tamil99 ஆகியவற்றுக்கான ஆதரவையும் தரவேண்டியிருந்தது. மைக்ரோசாஃப்ட் போன்றோர் இதுகுறித்துக் கவலை கொள்ளவில்லை. பெரும்பாலான பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் ஒருங்குறியை நோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். விரைவில் மைக்ரோசாஃப்ட் இயக்குதளம் ஒருங்குறி ஆதரவைக் கொண்டுவந்தது. அத்துடன் அசிங்கமாகத்தெரியும் (நீங்கள் பெரும்பாலும் இப்போது படித்துக்கொண்டிருக்கும்) லதா எழுத்துருவையும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட். அடுத்தடுத்து வரும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்கள் தமிழுக்கான ஆதரவை இயல்பிலேயே உள்ளே கொண்டிருந்தன. மேகிண்டாஷ் இயக்குதளமும் பின்னர் லினக்ஸ் இயக்குதளமும் தமிழ் யூனிகோட் ஆதரவை உருவாக்கிக்கொண்டன.

எனவே தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் தம் தர நிர்ணயத்தை மாற்றவேண்டியிருந்தது. TAM/TAB/TSCII ஆகியவை மறக்கப்பட்டு யூனிகோடு ஒன்றே தரம் என்ற நிலையை ஏற்கவேண்டும் என்று உத்தமம் கருத்தை முன்வைத்தது. அனைத்து தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கிய Complex Unicode rendering தேவைப்படாத TACE என்ற குறியீட்டுத் தரத்தை சிலர் அறிமுகப்படுத்த விரும்பினார்கள். இது தொடர்பாக பல கட்டுரைகள் தமிழ் இணைய மாநாடுகளில் முன்வைக்கப்பட்டன. யூனிகோடு எழுத்துக் குறியீட்டுக்கு இன்றுவரை பல மென்பொருள்களில் ஆதரவு கிடையாது. அடோபி பிடிஎஃப் ரீடர் தமிழ் யூனிகோடைக் காண்பிக்கும், ஆனால் தேடுதல் முடியாது; டெஸ்க்டாப் பப்ளிஷிங் மென்பொருள்கள் பலவும் தமிழ் யூனிகோடைக் கடித்துத் துப்பும். TACE குறியீட்டில் இந்தப் பிரச்னைகளையெல்லாம் சமாளிக்கலாம். ஆனால் இணையச் சேவைகள் என்று வந்தால் யூனிகோடு போதும். ஒரு சமரச முயற்சியாக உத்தமம் பணிக்குழு ஒன்று இந்த இரண்டு குறியீடுகளையும் தரமாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய, அது குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை TACE என்ற குறியீடு Private Use Area என்ற இடத்தில்தான் உள்ளது., இந்த எழுத்துருக்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்துதான் நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் வாங்கும் கணினியில் தொடக்கம் முதலே இந்த எழுத்துருக்கள் இருக்கா.

இது பெரிய பிரச்னை இல்லை. தொழில்முறை நிபுணர்களைத் தவிரப் பிறருக்கு TACE தேவையில்லை. (பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கும். இது என் கருத்து.) இன்று கணினியைப் பொருத்தமட்டில் உங்கள் கணினியில் தமிழ் வேலை செய்யும். படிக்கலாம். கொஞ்சம் முயற்சி செய்தால் எழுதலாம்.

இந்த மாற்றம் சுளுவாக, வேகமாக, அரசின் ஆதரவுடன், அரசாணை அடிப்படையில் செயல்படுவதற்கு உத்தமம் என்ற அமைப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. எண்ணற்ற சண்டைகள் நிகழ்ந்துள்ளன. பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கணினி வல்லுனர்கள் பல்லாயிரக்கணக்கான நேரம் செலவு செய்து, முடிவுகள் எடுக்க உதவியுள்ளனர். இதுபோல் எதுவும் பிற மொழிகளுக்கு நடைபெறவில்லை.

ஏனெனில் உத்தமம் என்ற அமைப்புபோன்ற எதுவும் பிற மொழிகளுக்கு இல்லை. பல மாநில அரசுகளுக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. மத்திய அரசு அமைப்புகள் அனைத்து இந்திய மொழிகளுக்குமாக சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும். Inscript என்ற முறையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு விசைப்பலகை முறை உருவாக்கப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு விசைப்பலகை உள்ளது. ஆனால் தமிழர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. தங்களுக்கென சிறப்பான Tamil99 முறையை உருவாக்கிக்கொண்டனர். சில மாநில அரசுகளின் மொழிகள் இன்றும் கணினியில் சரியாகத் தெரிவதில்லை. அம்மாநிலங்கள் அவைபற்றிக் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.

கன்னட எழுத்தாளரும் ஞானபீடப் பரிசு பெற்றவரும் ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவருமான முனைவர் சந்திரசேகர கம்பார, சென்ற ஆண்டு இவ்வாறு சொன்னார்:
"They say that in this Internet age, every three years amount to a 'yuga', so we are at least five yugas behind Tamil. Leave alone email, it's a pity we are not able to send even an SMS in Kannada," the Jnanpith awardee lamented, while speaking at a book release function.
கம்பார இதை வேறு இடங்களிலும் சொல்லியிருக்கிறார். கம்பாரவின் ஒப்பீட்டில் கொஞ்சம் பிழை இருக்கிறது. அவர் பேசிய காலகட்டத்தில் கன்னடத்தில் தமிழைப் போலவே மின்னஞ்சல் செய்ய முடிந்தது; சில கைப்பேசிகளில் கன்னடத்திலும் தமிழைப் போலவே குறுஞ்செய்திகளை அனுப்ப முடிந்தது. தமிழில் செய்யும் பலவற்றையும் கன்னடத்திலும் செய்ய முடிந்தது. ஆனால் தமிழில் நடைபெறும் அளவுக்கு ஆராய்ச்சிகளும் அடிதடிச் சண்டைகளும் கன்னட கணினி உலகில் நடந்திருக்கவில்லை. அரசிடமிருந்து ஆணைகள் ஏதும் வந்திருக்கவில்லை. அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ கன்னடக் கணிமை பற்றிக் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. ஆக, கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ்க் கணிமையிலும் கணினி மொழியியலிலும் ஆராய்ச்சி செய்யும் சிலரை அறிந்தவராகவும் இருக்கும் கம்பார கவலைப்பட்டதில் நியாயம் இருக்கிறது.

இதனால் தமிழ் என்னவோ உலகிலேயே கணிமையில் மிகச் சிறந்த இடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. தட்டிக் கொட்டி ஏதோ கொஞ்சம் வேலைகள் தமிழில் முன்னெடுக்கப்படுகின்றன என்றே இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பலருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் உத்தமம் என்ற அமைப்புடன் தொடர்புகொண்டவர்கள். இதில் சிலர் உத்தமத்துடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியிலிருந்து கடுமையாக எதிர்த்து, பின்னர் உத்தமம் அமைப்பை வழிநடத்துபவர்களாக ஆனவர்கள். வேறு சிலர் உத்தமத்தில் இயங்கியபின் கடும் மனவெறுப்படைந்து உத்தமம் அமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள். பிறகு ஒரு நியூட்ரல் நிலையில் தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருப்பவர்கள்.

மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு குழுமியிருந்த சில முக்கியமான உத்தமம் முன்னாள்/இந்நாள் நிர்வாகிகள்/ஆலோசகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன் ஆகியோருடன் இந்நாள் உத்தமம் செயற்குழுவினர்களான இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் ஒரு ஓரத்தில் குறிப்பெழுதுபவனாக நானும் இருந்தேன். இந்தக் குழுவில் விடுபட்ட முக்கியமான ஒரு நபர் கல்யாணசுந்தரம். அவரால் மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை. மாநாடுகளை நடத்தியுள்ளனர். அரசுகளுடன் உறவாடியுள்ளனர். பணத்தைத் திரட்டியுள்ளனர். ஒருங்குறி சேர்த்தியம் போன்ற பன்னாட்டுக் கணினி அமைப்புகளுடன் போராடி, தமிழின் நிலையை எடுத்துச் சொல்லியுள்ளனர். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற கணினி நிறுவனங்களோடு தொடர்ந்து உறவாடி அவர்களை வற்புறுத்தி தமிழுக்கான ஆதரவைக் கூட்டியுள்ளனர். இவர்கள் தனியாக இத்தனையையும் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை; இவர்கள் தலைமை வகித்த கடந்த பதினாறு ஆண்டுகளில் மேலும் பலர் செயற்குழுவிலும் பணிக்குழுவிலும் பணியாற்றியுள்ளனர்; தன்னார்வலர்களாகத் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகள் பிறவற்றில் எதற்கும் இல்லை என்பதை இங்கே குறிப்பிடுதல் அவசியம்.

(தொடர்வேன்)

13 comments:

  1. கணினித் துறையில் தமிழில் செய்ய வேண்டிய முயற்சிகள் பற்றி விரிவாக எழுதிய கட்டுரை அண்மைக் காலத்தில் இதுவே. கணினி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பல தமிழர்கள் இருப்பினும் தாய் மொழிக்காக அவர்கள் சிறு துரும்பும் எடுத்துப் போட முயற்சி செய்வது இல்லை என்றே தெரிகிறது. மேற்கில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களையே நாம் எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வளர்ச்சிக்கு புலம் பெயர் உறவுகள் செய்யும் சேவை மிகப்பெரியது. பத்ரி Sir அவர்கள் “தமிழாவது பரவாயில்லை மற்ற இந்திய மொழிகளின் நிலை இன்னும் கணினியில் பெரிய மாற்றத்தை சந்திக்கவும் இல்லை, முன்னெடுத்து செல்ல ஆட்களும் தமிழை விட குறைவாக உள்ளார்கள்” என்று சொன்னதில் கொஞ்சம் மனசு தமிழை நினைத்து ஆறுதல் அடைகிறது செல்லப்பா.

      Delete
  2. தமிழனுக்கும், தமிழ் கற்றோருக்கும் வேண்டுமானால் தமிழ் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கலாம். ஆனால், கணினியில் தமிழ் மொழியில் ஆராய்ச்சி செய்பவர்களும், மென்பொருள் உருவாக்குபவர்களும் பல இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்பதை, ஒரு தமிழ் PDF-கோப்பில் தமிழில் தேடுவதில் இருக்கும் சிக்கலை வைத்தே எளிமையாக புரியும்படி விளக்கியமை Supper Sir.
    அதே போல் தமிழ்மொழியில் ஒ - எழுத்துக்கு பின்னால் ஒரு ள - வை சேர்த்தால் ஒள (அவ்) என்று ஆகிறது. இது போன்ற எழுத்துக்கள் நிரல்களில் sorting-ல் இன்னும் சிக்கலாகவே உள்ளது.
    உங்களின் பதிவு தமிழ் ஆய்வாளர்களுக்கு, ஒரு ஆராய்ச்சி கட்டுரை. விரைவில் தமிழ் முழுகணினி மொழியாகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் MGR காலத்தில் கொண்டு
      வந்தபோது பெரியாரின் சீர்திருத்தம் மொத்தமாக ஏற்றுக்
      கொள்ளப்பட்டிருந்தால் இந்த 'ஒள' பிரச்னை வந்திருக்காது.
      அப்போது தமிழ் அறிஞர்கள் உயிரெழுத்து குறைவதைத்
      தவிர்த்து (ஐ,ஒள - அய்,அவ்) ஏற்றுக்கொள்ளலாம் என்றனர்.
      அப்படியே பெரியாரின் சீர்திருத்தத்தை ஏற்றிருந்தால் இன்று
      கணினிக்கும் வசதியாய் இருந்திருக்குமே

      Delete
  3. ஒ போட்டுவிட்டு ள் போட்டு ஔ என்று படிப்பதற்குப் பதில் அவ் என்று எழுதுவதே தக்க வழி.வேறு விதமாகச் சொல்வதானால் ஔ என்பதை ஒழித்து விட வேண்டியது தான்.
    அதே நேரத்தில் ஜ ஹ ஷ என்று கூற்க்கூடாது. தமிழில் இதற்கான தனி குறியீடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஒலிப்பு உண்டு. வஞ்சம் என்பது வட மொழிச் சொல் அல்ல. அச் சொல்லில் ஞ் மற்றும் ச சேர்ந்து ஜ என்று உசசரிப்பாகத் தான் உச்சரிக்கிறோம். அதே போல அகம் என்னும் சொல்லில் க என்பதை ஹ என்பதாகவே உச்சரிக்கிறோம். akam என்று உச்சரிப்பதில்லை.எந்த இடத்தில் எப்படி உச்சரிப்பது என்பது இயல்பாக வருகிறது.தமிழின் சிறப்பே அது தான்.மற்ற இந்திய மொழிகளில் எழுத்துகள் அதிகம். கூட்டெழுத்துக்களைச் சேர்த்தால் இன்னும் அதிகம்.கம்ப்யூட்ட்ருக்கு மிக ஏற்ற மொழியாக தமிழ் விளங்குகிறது.

    ReplyDelete
  4. பத்ரி,
    மேலும் என்ன என்ன பணிகள் செய்யலாம் என்றும் கொஞ்சம் விவரிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. ஐயா தயவு செய்து எனக்கு என்னுடைய tab-ல் தமிழ் எழுத்துருக்கள் படிக்க முடியவில்லை, அனைத்திலும் கொம்பு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் வருகின்றன. மேலும் wordocument-ல் கணினியில் சேமித்து வைத்துள்ள தமிழ் டாக்குமென்ட்களை படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. Hello தமிழ் வாசகன்,
      உங்கள் Device-ன் மாடல் அல்லது OS version, மற்றும் சாப்ட்வேர்களின் name, version, டாக்குமெண்டில் உள்ள font போன்ற தகவல்களை தந்தால், படிக்கும் பயனாளர்கள் உங்களுடைய சந்தேகத்திற்கு விரைந்து பதில் தந்து உங்களுக்கு உதவுமுடியும்

      Delete
  6. CDAC (Formerly NCST) has contributed towards Tamil font development. Kindly acknowledge it.

    http://www.ildc.in/Tamil/GIST/htm/fonts.htm

    ReplyDelete
  7. \\ மலேசியாவில் நடந்த 12-வது மாநாட்டின்போது அங்கு குழுமியிருந்த சில முக்கியமான உத்தமம் முன்னாள்/இந்நாள் நிர்வாகிகள்/ஆலோசகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன் ஆகியோருடன் இந்நாள் உத்தமம் செயற்குழுவினர்களான இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். \\

    இதில் குறிப்பிடப்படும் பேரா. ஆனந்தகிருஷ்ணன், பேரா. பொன்னவைக்கோ, அருண் மகிழ்நன், மணி மணிவண்ணன், வெங்கட்ரங்கன், இளந்தமிழ், இளங்கோவன், மணியம், வாசு அரங்கநாதன் ஆகியோரின் தமிழ்க்கணிமைப் பங்களிப்பு விபரங்களைத் தரமுடியுமா ? இவர்கள் தயாரித்துத் தந்த தமிழ்ச் செயலி / மென்பொருள் அல்லது இவர்களின் எந்தெந்த நுட்ப ஆய்வுக் கட்டுரைகளை ஆதராமாகக் கொண்டு ஏதாவது மென்பொருள் அல்லது செயலி தயாரிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களையும் - அவ்வாறு உருவாக்கப்பட்ட செயலி / மென்பொருள் தமிழ்க் கணிமைப் பயனாளர்களுக்கு எந்த வகையில் / எத்தனை ஆண்டுகளுக்குப் பயன்தந்துள்ளது போன்ற தகவல்களையும் அதற்கான உரிய இணைய முகவரிகளையும் இணைப்பீர்களெனில் உங்கள் பதிவு சிறப்பாகப் பலருக்கும் உண்மையில் உதவிடும்.

    ReplyDelete
  8. One of the pioneer in Tamil computing

    http://adirainirubar.blogspot.in/2010/06/blog-post_22.html
    http://adirainirubar.blogspot.in/2010/06/blog-post_8105.html

    by
    Ahamed Aslam

    ReplyDelete
  9. nhm Tamil99 வசதியாக உள்ளது. உள்ளது போதும். பயன்படுத்துவோரும், பயன் தரும் செய்திகளைத் தருவோரும் பெருகவேண்டும். உத்தம் ஆற்றியுள்ள தொண்டு பாராட்டுக்கு உரியது.

    ReplyDelete
  10. nhm Tamil99 போதும். எளிமையாகவும் வசதியாகவும் உள்ளது. உத்தம் தொண்டு அளப்பரிது. பாராட்டுக்குரியது. இணையத் தமிழில் புலம்பெயர்ந்த தமிழர் ஆற்றியுள்ள தொண்டு ஈடு-இணை அற்றது. உள்ளது போதும். பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் பெருகவேண்டும். பலருக்கும் பயன் தரும் செய்திகள் தமிழில் வெளிவர வேண்டும்.

    ReplyDelete