சமீபகாலம்வரை பொதுத்துறையின் பொறுப்புடைமையை மீட்டெடுத்தல் குறித்துப் பேச யாருமே இல்லை. இடதுசாரி அரசியல்வாதிகள், இந்தப் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தமட்டில் அரசு ஊழியர்கள்தாம் அவர்களுடைய பெரும்பான்மைத் தொகுதியினர். அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுக்கின்றன. வலதுசாரி அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டில் பொதுத் துறை என்பதே ஒழித்துக்கட்டப்படவேண்டிய ஒன்று. எனவே கொஞ்சம் திறனின்மை, அதிகம் திறனின்மை என்று பிரித்துப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. வலதுசாரிகளின் நோக்கம் பொதுத்துறையை முன்னேற்றுவது அல்ல; மாறாக அவற்றை ஒழித்துக்கட்டித் தனியார்மயமாக்குவது. இந்தக் காரணங்களால் விநோதமாக, பொதுத்துறையின் பொறுப்புடைமையைக் கண்டுகொள்ளாத வலது-இடது கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.ட்ரீஸ், சென் புத்தகத்தில் பல சுவாரசியமான கருத்துகள் உள்ளன. நிறையப் புலம்பலும் உள்ளது. (பிசினஸ் ஸ்டாண்டர்ட் புத்தக விமரிசனத்தில் இந்தப் புத்தகமே ஒரு வேஸ்ட் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது நியாயமற்ற கருத்து.) நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும். உங்களுக்கு சென்னிடம் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட.
- ழான் ட்ரீஸ், அமர்த்ய சென், An Uncertain Glory.
மேலே சொல்லப்பட்ட கருத்தை எடுத்துக்கொள்வோம். பொதுத்துறை ஊழல் நிரம்பியதாக இருக்கிறது. இங்கு பொதுத்துறை என்று ட்ரீஸ், சென் சொல்வது அரசு அலுவலகங்கள், பொதுத்துறை கம்பெனிகள் என இரண்டையும் சேர்த்து. அதாவது பொருள்கள் வாங்கும் ரேஷன் கடை, ஓட்டுனர் உரிமம் வாங்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ், நிலம் பதிவு செய்யும் ரிஜிஸ்திரார் ஆபீஸ், கரண்ட் பில் கட்டும் மின்சார வாரியம், போஸ்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல், சாதிச் சான்றிதழ் வாங்கும் அலுவலகம், பென்ஷன் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் - இப்படி எல்லாமே.
இங்கு பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட சேவையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நேரத்துக்குள் அது நடப்பதில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் சேவைகளும் பொருள்களும் கிடைப்பதில்லை. ஏச்சு பேச்சுகளைக் கேட்கவேண்டியிருக்கிறது. இன்று போய் நாளை வா என்று துரத்தப்படுகிறார்கள். லஞ்சம் எதிர்பார்க்கப்படுகிறது. கொடுப்பவர்களுக்குக் காரியம் சுளுவாக நடைபெறுகிறது. கொடுக்காதவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் இடதுசாரிகள், அவர்களுடைய முக்கியத் தொகுதியான அரசு ஊழியர்களின் படுமோசமான நடத்தை பற்றி மட்டும் பேசுவதே இல்லை. போராடிப் போராடி ஃபைனான்ஸ் கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு, போனஸ், விடுமுறைச் சலுகை என்று எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் வாங்குகிற காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கிறார்களா என்று பார்ப்பதில்லை; குறைந்தபட்சம் அப்படி உழைக்கவேண்டும் என்று குரல் கொடுப்பதுகூட இல்லை.
பொதுத்துறை ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்குப் போகிறார்கள்? பொதுத்துறை மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் எல்லாம் பணிவுடனும் கனிவுடனும் பண்புடனும் நடந்துகொண்டால் யார் தனியார் மருத்துவமனைக்குப் போகப்போகிறார்கள்? அரசு அலுவலகங்களில் ஏன் எரிந்து விழுகிறார்கள்? ஏன் சில அசிங்க நிழல் ஆசாமிகள், ‘இங்க வாங்க சார், நான் முடிச்சுத் தரேன்’ என்று டீல் போட அனுமதிக்கப்படுகிறார்கள்?
இதைப் பற்றி ஒரு மதிய உணவின்போது பேசிக்கொண்டிருக்கையில் தோழர் மருதன், ‘எல்லாத் தொழிலாளர்/ஊழியர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கங்கள் கிடையாது; பல சங்கங்கள் பிற கட்சிகளுடையவை’ என்றார். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது என்றார். நியாயமான கருத்து. ஆனாலும் தனியார்மயத்தைக் கடுமையாக எதிர்க்கும் தோழர்கள், ஏன் வலதுசாரிகள் தனியார்மயத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அதனைத் தணிக்க அரசு ஊழியத் தோழர்களை ஒழுங்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்வதில்லை? என் இதற்கென ஒரு பிரசாரத்தை ஆரம்பித்துத் தங்கள் செயல்பாட்டை முன்னெடுப்பதில்லை?
வலதுசாரிகளைப் பொருத்தமட்டில், அரசு ஊழியர்கள் எக்காலத்திலும் பணிவான, கனிவான சேவையைத் தர மாட்டார்கள் என்பதே கருத்து. (அதுதான் என் கருத்தும்கூட.) ஏனெனில் நியாயமாக நடந்துகொள்ளவேண்டிய உந்துதல் அவர்களுக்கு இல்லை. அவர்களை ஒழுங்காகக் கண்காணித்து நியாயமாக நடந்துகொள்ளும்படி வலியுறுத்தும் விருப்பம் ஆட்சிப் பதவியில் இருப்போருக்கு இல்லை. தவறுபவர்களைத் தண்டிக்கும் போக்கு கொஞ்சம்கூட இல்லை. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் திராணி அரசிடம் இல்லாததற்குக் காரணம் தொழிற்சங்கங்களின் வலு. அதே நேரம், அரசியல் ஆதாயங்களுக்காக துர்கா சக்தி நாக்பால் போன்ற நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தூக்கிப் பந்தாட இந்த அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.
எனவே முடிந்தவரை மிகக் குறைந்த செயல்பாடுகள் மட்டுமே அரசிடம் இருக்கவேண்டும் என்கிறார்கள் வலதுசாரிகள்.
தனியார் மட்டும் என்ன ஒழுங்கா என்ற கேள்விக்கு என்ன பதில்? சட்டங்கள் வலுவாக இருக்கும்பட்சத்தில், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒழுங்காக இருக்கும்பட்சத்தில் தனியாரைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சந்தைப் போட்டியே நிறுவனம்-வாடிக்கையாளர் உறவில் ஒழுங்கான பண்பைப் பெருமளவு கொண்டுவந்திருக்கிறது. ஆனால் பொதுத்துறை ஊழியர்கள், தாம் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக, நேர்மையாக, பொதுமக்களை ஏமாற்றாமல், விரைவாக, செயலூக்கத்துடன் செயல் புரிவார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.
ட்ரீஸும் சென்னும் பொதுத்துறையினர் சரியான அழுத்தம் கொடுத்தால் நியாயமாகப் பணி புரிவார்கள் என்று நம்புகிறார்கள். அதை நம்புவதற்குத் தேவையான சான்றுகளை அவர்கள் புத்தகத்தில் காட்டுவதில்லை. ஆம் ஆத்மி கட்சி, லோக்பாலுக்கான போராட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சிலவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் நம்பும்படியாக இல்லை.
கம்யூனிஸ்ட் தோழர்கள் கொஞ்சம் இந்தத் துறையில் கவனம் செலுத்தி பொதுத்துறையில் ஊழலை ஒழித்து செயல்திறனை ஊக்கப்படுத்தினால், நான் என் கருத்தைச் சற்றே மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
Even Jayalalitha took action on the govt employees few years ago during her rule in the last decade.
ReplyDeleteBut she couldn't withstand the impact and finally she withdrawn the actions and by the end , all the govt employees changed the govt in the next subsequent election.
sometimes i felt like, trash all the existing employees, and bring in fresh graduates out from college with a disclaimer to serve better.
I understand they are inexperienced, but still its worth trying that option.
its an experiment....but not a bad idea to give it a try.
தனியார்மயம் ஆனால் கட்டுக்குள் இருக்குமா?
ReplyDeleteஇப்பொழுதெல்லாம் ஒரு பெட்டிக்கடையில்கூட சரியான பதில் கிடைப்பதில்லை கவனித்து இருக்கிறீர்களா?
சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த முக்கிய நகரங்களிலும் ஆட்டோ ஓட்டுனரின் பதில்கள் எத்தகையவை?
கோவையில் ஓடும் தனியார் பேருந்துகளின் சாலை அராஜகத்தை அனுபவித்திருகிரீர்களா?
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கத்தட்டிலா கொடுக்கிறார்கள்?
இவை எல்லாம் வெறும் டிரைலர்தான்.
தலைமை சரியாக இருந்தால் மட்டுமே சீராகும், அது பொதுத்துறையாக இருந்தாலும் சரி தனியார் துறையாக இருந்தாலும் சரி....
இதனை நான் ஏற்கமாட்டேன். நுகர்வோர் சேவை சரியாக இருந்தால்தான் வியாபாரம் பெருகும் என்ற நிலை ஏற்படும்போது தானாகவே சேவையின் தரம் உயர்கிறது. இதனை நான் நேரில் பார்த்துவருகிறேன்.
Deleteபொதுத்துறை ஊழலில் திளைக்கிறது. அடி முதல் நுனி வரை ஊழல். பணி இட மாற்றம் முதல் வேலைக்குச் சேருதல் இன்னபிற செயல்களுக்கும் ஊழல் தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் நீண்ட தொடர்புடையவன் அடியேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனம் எப்படி இருந்தது, நிரந்தர ஊழியர்கள் எப்படிப் பணியாற்றினார்கள் என்பதை நான் அறிவேன். தற்போது எப்படி உள்ளது என்பதையும் அறிவேன்.
ReplyDeleteஅப்போதெல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் குறைவு. நிரந்தரப்ப்பணியாளர்கள் அதிகம். வேளையில் ஒரு பொறுப்பு இருந்தது. வேலை சுலபமாக நடக்கும். வேலை நிறுத்தங்கள் போது கூட என் தந்தையும் மற்றும் பல ஊழியர்களும் பணிக்குச் சென்று விடுவர். கேட்டால் ," நாளை ஸ்ட்ரைக் முடிந்துவிடும். ஆனால் இன்று அனுப்ப வேண்டிய தகவல் நாளை போனால் பாராளுமன்றக் கேள்வி பதிலில் பங்கு கொள்ள மத்திய நிலக்கரி அமைச்சரால் முடியுமா ?", என்று கேட்பார் என் தந்தையார்.
கடமை உணரவுக்கு உதாரணமாக அப்படிப் பலர் இருந்துள்ளனர்.
இப்போதோ ஒப்பந்தப் பணியாளர் மட்டுமே அதிக அளவில் உள்ளனர். அவர்களை வேலை வாங்குவதே கடினம். அவர்களுக்குக் கூட ஊழியர் சங்கங்கள் உள்ளன. எதற்கெடுத்தாலும் போராட்டம்.
நெய்வேலியின் முன்னாள் தலைவர் ஒருவர் ரிடையர் ஆனதும் சில ஆண்டுகளில் வாடா இந்தியாவில் ஈமக் கிரியைகளுக்குக் கூட காசில்லாமல் காலமானார். இப்போதோ தலைவரின் மேல் பல நூறு கோடி ருபாய் ஊழல் உள்ளது என்று செய்திகளில் படிக்கும்போது மனது அழுகிறது.
வேலையை தெய்வமாகப் போற்றிய ஒரு தலைமுறை முடிந்து இப்போது பொழுதுபோக்காகப் பார்க்கும் ஒரு தலைமுறை பணி ( பிணி) செய்கிறது.
ஹி ..ஹி ......சதிச் சான்றிதழ் ??? இரட்டுற மொழிதலா ? இல்லை Spelling mistake ஆ ?
ReplyDeletewhat about cartels by private corporates ?
ReplyDeleteThey have to be broken. We have seen institutions like Election Commission, CAG and to a certain extent SEBI emerging strong. If competition commission is of the same nature, cartelisation will not be possible.
DeleteThere are good and bad in both public sector and private sector. But public sector have completely failed barring few navaratna companies.60+ years of independence and they are still a failure.
ReplyDeleteபெரும்பாலான சேவைகளுக்கு கால நிர்ணயம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக, பாஸ்போர்ட் விண்ணப்பம் அனைத்து வகையிலும் சரியாக இருக்கும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும்; ஓட்டுனர் உரிமம் 10 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும்.
ReplyDeleteஇப்படி நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் பயனாளிகளுக்கு சேவை கிடைக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும். வேண்டுமென்றே காலதாமதமானால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, எவ்வளவு நாள் தாமதமாகிறதோ அத்தனை நாள் சம்பளம் வெட்டு விழவேண்டும்.
இன்றைய கணினி யுகத்தில் நிறைய சேவைகளை இணையம் மூலமே பெற ஆவன செய்ய வேண்டும். உதாரணமாக, வரி செலுத்துதல், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் இன்னபிறவற்றை புதுப்பித்தல் போன்றவற்றை இணையம் மூலமே செய்துகொள்ள ஆவன செய்ய இயலும்.
இன்னொன்று, நமது அரசு நடைமுறை / விதிமுறைகள் இன்னமும் சுளுவாக்கப்படவேண்டும்.
// ‘எல்லாத் தொழிலாளர்/ஊழியர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கங்கள் கிடையாது; பல சங்கங்கள் பிற கட்சிகளுடையவை’ //
அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சி சங்கங்கள் சார்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் நேர்மையானவர்களே என்று திரு.மருதன் அவர்களால் கூற இயலுமா ?
கணினிவழிச் சேவைகள் கட்டாயமாக நுகர்வோருக்கு நன்மைகளைக் கொடுத்துள்ளன. முக்கியமாகப் பணம் கட்டும் சேவை - சொத்து வரி, நீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவை. அதேபோலப் பிற அரசு சேவைகள் இணையத்துக்கு வந்தாலே பாதிப் பிரச்னைகள் ஒழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மற்ற விஷயங்கள் எல்லாம் எளிதானவை அல்ல. எப்படி இவற்றைச் செயல்படுத்தப்போகிறோம் என்பதுதான் கேள்வியே.
Delete//பெரும்பாலான சேவைகளுக்கு கால நிர்ணயம் வரையறுக்க வேண்டும்.//கால வரையறைக்குள் முடிக்கவிட்டால் அங்கு இலஞ்சம் கேட்கப்பட்டிருக்குமோ என்பதை ஆய்வு செய்யும் வகையில் இருப்பதுதானே லோக்பால் சட்டம். இன்று வரை அது அமலுக்கு வந்ததா?
Deleteதமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இந்த ஆணையை படித்து பாருங்கள். http://www.tnsic.gov.in/judgements/pdfs/T%2051921_4th%20January%202013.pdf
அதில் மனுதாரரின் மனுவின் அனைத்து இனங்களும் கேள்விகளாக உள்ளதால் மனுதாரரின் மனு ஏற்கத்தக்கதல்ல என ஆணையம் முடிவு செய்து மனுவை தள்ளுபடி செய்கிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்விகள் கேட்கக்கூடாது என சட்டத்தில் எங்காவது எழுதப்பட்டுள்ளதா? கேள்வி கேட்காமல் எப்படி தகவல்களை கேட்கமுடியும்... இன்று வரை எனக்கு புரியவில்லை (கோவா உயர்நீதிமன்றத்தில் ‘ஏன்’ என்ற வினாவை தகவல் அறியும உரிமைச்சட்டத்தில் எழுப்பக்கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது) CCI-ன் ஒரு ஆணையில் material fact பற்றிய கேள்விகள் கேட்கலாம் ஆனால் Hypothetical கேள்விகள் கேட்கக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆயிரம் சட்டங்கள் வரலாம். அதை நடைமுறை படுத்தவதில்தான் நிர்வாகத்தின் தலையாயிய பங்கு இருக்கிறது. இதுதான் இந்தியாவின் பெரிய பிரச்சனை.
பத்ரி,
Deleteஉண்மைதான். நாம் எதிர்பார்க்கும் நிர்வாக சீர்திருத்தங்கள் / மாற்றங்கள் பல மேலிருந்து எடுக்கப்படவேண்டியவை. ஆனால் இதற்கு அதிகார வர்க்கம் ஒத்துழைக்காது என்பதுதான் நிதர்சனம்.
கீழே அனானி சொன்னதுபோல, பொதுமக்களாகிய நமக்கும் குடிமை உணர்வு மிகவும் கம்மி. நமக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கும் வரை நாம் எதற்காகவும் கவலைப்படப்போவதில்லை.
உதாரணமாக லஞ்ச ஒழிப்பை எடுத்துக்கொள்வோம். நம்மில் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் வேலை தாமதம் ஆனாலும் (அல்லது நடக்காமல் போனாலும்) பரவாயில்லை என்று உறுதியாக இருக்க முடியும் ? (மறைந்த என் சித்தப்பா அவர்கள் திருவண்ணாமலை அருகே மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவரது பணி ஓய்வு சம்பந்தமான கிராஜுட்டி பணம் - கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அருகே - கைக்கு கிடைக்க லஞ்சம் தர மறுத்ததால் கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக (என்று நினைக்கிறேன்) கிடைக்கவே இல்லை. (இது நிகழ்ந்தது பத்தாண்டுகளுக்கும் மேலே.) இவரும் 'லஞ்சம் தரமாட்டேன்' என்று உறுதியாக இருந்து, பின்னர் கல்வி அலுவலக ஆடிட்டிங்-போது ஏதோ சில புண்ணியவான்கள் அதை தோண்ட, அப்புறமாக பணம் கைக்கு வந்திருக்கிறது. இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும் ?)
காவல்துறையோ, மற்ற அரசு துறைகளோ, அவர்களுக்கு எப்படி accountability-யை கொண்டு வருவது என்பதை எப்படி யோசிப்பினும் புரியவில்லை. காரணம் அப்படி கொண்டு வருவதற்கும் அவர்கள்தான் தயாராக இருக்கவேண்டும்.
ஒழுங்காக செயல்படும் அதிகாரிகளையும் நாம் விட்டு வைப்பதில்லை. அது அகிலேஷ் யாதவாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி. அப்புறம் அவர்களுக்கும்தான் எப்படி motivation வரும் ?
அரசு ஊழியர்கள் என்று வரும் போது நைசாக ராணுவம்,துணை ராணுவம் ,காவல்துறை போன்றவற்றை விட்டு விடுவது ஏன்.அவர்கள் 20 லட்சத்திற்கும் மேல்.ரயில்வே ஊழியர்களோடு சேர்த்தால் மொத்த ஊழியர்களில் பாதி ஊழியர்கள் அருகே வருவார்கள்
ReplyDeleteஒரு அரசு ஊழியருக்கு ஆகும் செலவை போல பத்து மடங்கு செலவு ஒரு ராணுவ வீரரையோ,துணை ராணுவ வீரரையோ உருவாக்க தேவைப்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் அரசு ஊழியர்களை குறைத்து விட்டு அதனால் பெருகிய தீவிரவாதத்தை குறைக்க அதை போல பல மடங்கு செலவு செய்து சில லட்சம் துணை ராணுவ படைகள் உருவாக்கப்பட்டுள்ளன ,நவீன ஆயுதங்கள் ,சிறிய உள்நாட்டில் தாக்கும் விமானங்கள் என்று தீவிரவாதத்தை அழிக்க பல்லாயிரம் கோடி செலவு.
எந்தந்த பகுதிகளை இருந்து அரசு ஊழியர்கள் அதிகம் பேர் உருவாகி இருக்கிறார்களோ அங்கு தீவிரவாதம் கிடையாது.
நிதானமாக வேலை செய்யலாம் .குறைந்த வேலை என்பதால் தான் குறிப்பிட்ட வேலைகளுக்கு அதிக போட்டி.ராணுவ வீரர் தேர்வுக்கு போட்டி இடுபவர் போல பல மடங்கு அரசு கடைநிலை ஊழியர் வேலைக்கு.இது மனிதர்களின் மனநிலை.இதை மாற்ற முடியாது
குறைந்தபட்ச வேலை நடக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.அவர்களுக்கு வேலை இல்லை என்றால் எளிதாக தனி கோவை நாடு/கோர்காலாந்து ,போடோலாந்து,தனி நாடு ,ஒரே கட்சி ஆட்சிமுறை தான் நமக்கு தீர்வு என்று மக்களை திசை திருப்பி பெரும் குழப்பத்தை உண்டாக்குவார்கள்.
ஆட்சிக்கு வந்த மிசாரம் முன்னாள் தனி நாடு கோரிக்கையாளர்களால் தான் தனி நாடு கோரிக்கை வலுவிழந்தது.ஆட்சிக்கு வராத கழன்கங்கள் தனி தமிழ்நாடு கோரிக்கையை மிக வலுவாக ஆக்கி இருக்கும்.கட்சியோ,தனி மனிதனோ அரசு வேலையின் காரணமாக தான் அவன் இந்தியன். இந்தியர்களுக்கு /தமிழர்களுக்கு பொதுவான ஒன்று,அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவது அரசு வேலை தான்.
பொதுத்துறையோ தனியார் துறையோ ..... இந்திய மக்கள் சரியில்லை ..... ஒரு குடிமகனாக உரிமை பேசுவார்களே ஒழிய யாரும் குடிமகனாக கடமை என்ன என்று யோசிப்பதில்லை. அதில் தான் அனைத்துத் துறையிலும் மெத்தனம் தோன்றுகின்றது .... பல தனியார் பேருந்துகள் அராஜகம் அனைவருக்கும் தெரியும், தனியார் வங்கி மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனியின் கஸ்டமர் சர்வீஸ் எல்லாம் பேருக்குத்தான் ... அமெரிக்கா போன்ற நிலை அடைய இந்த சனநாயகம் இன்னும் மெச்சூர் ஆக வேண்டும் . ஜப்பான் போல சரியான கடமை உணர்ச்சி உள்ள மக்களாய் இருந்தால் நேருவின் சோசியளிசமும் கலப்புப்பொருளாதாரமும்கூட வெற்றி அடைந்திருக்கும். நேரு நல்லவிதமாய் நினைத்து இந்த கடமைமறந்து உரிமை மட்டும் பிறரும் மக்கள் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார். விடுதலை வாங்கியபின் வந்த தலைமுறை சரியான சோம்பேறி தலைமுறையாய்த் தூங்க்கிவிட்டது. சுனாமி போன்ற பேரிடருக்குப் பின்னர் கூட பல்வேறு இழப்புக்கு நடுவே கூட வீடு கடைகளை சூறையாடாமல் கியூவில் நின்று தனக்குண்டான ரொட்டித்துண்டுகளை மட்டும் அமைதியாய் வாங்கிப்போன சமூகம் சப்பானிய சமூகம். இந்திய மக்கள் சரியில்லாததால்தான் இந்திய அரசியலும் நாறுகிறது. நான் மாறினால் நாடும் மாறும். நான் உருப்பட்டால் நாடு உருப்படும். நான் மட்டும் மாறினால் நாடு மாறிவிடுமா ??? உடனே மாறாது ... ஆனால் 2 தலைமுறைகளுக்குப் பின் மாறும். அதற்கான தியாகம் நான் செய்ய வேண்டும். அதற்கு பலர் இன்று தயாராக இல்லை. கையில காசு வாயில தோசை என்று மாற்றத்தை பாஸ்ட்புட் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறார்கள்.
ReplyDeleteதிரு.பத்ரி,
ReplyDeleteஉங்கள் பதிவின் கடைசி வாக்கியம் அச்சமூட்டுகிறது.
"கம்யூனிஸ்ட் தோழர்கள் கொஞ்சம் இந்தத் துறையில் கவனம் செலுத்தி பொதுத்துறையில் ஊழலை ஒழித்து செயல்திறனை ஊக்கப்படுத்தினால், நான் என் கருத்தைச் சற்றே மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்."
1991க்கு முன்னர், இந்திய அரசு, ப்ரெட் (Bread) தயாரித்தது. சுற்றுலாத்துறையில் டாக்ஸி ஓட்டியது. இது போன்ற துறைகள் (ஒரு பேச்சிற்காக) முழு வேலைத்திறனுடன் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு விடுவீர்களா? அதாவது இலாபம் வரும் வரை
இந்நிறுவனங்கள் அரசால் நடத்தப்படலாம் என்று வைத்துக் கொண்டு விட முடியுமா? Government has no business to be in business என்பதுதானே நம் தாரக மந்திரம். இந்த சித்தாந்த விளக்கத்தை நம்மால் நீர்த்துப் போக விட முடியுமா?
லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை அளிக்கும் துறைகள் வேறு, வியாபார நோக்கில் நடத்தப்படும் நிறுவனங்கள் என்பது வேறு. முதல் பட்டியலிலேயே பல, இன்று அவுட்சோர்சிங்க் முறை மூலம் சில வேலைகள் தனியாரிடம் அளிக்கப்படுகின்றன.
இடதுசாரித்துவ பார்வையை யார் வேண்டுமானாலும் முன்வைக்க முடியும். புரிந்தும் புரியாமலும், அளவுக்கதிகமான, நடைமுறை சாத்தியமற்ற கருணையையும் கொண்டு முன்வைக்கப்படும் வாதமது. நம்மைப் போன்றவர்கள் அப்படி அல்ல. பொதுவுடைமை என்ற மையக்கருத்தை முற்றும்
முழுவதுமாக நிராகரித்த பின்தான் நம் வாதத்தையே ஆரம்பிக்க முடியும். என் வீடு, என் கம்பெனி, என் குழந்தைகளுக்கு என் சொத்து என்பதுதான் அடிப்படை மனித இயற்கை. இவற்றையெல்லாம் தேவையான அளவிற்கு வாதம் செய்தாகி விட்டது. இடதுசாரிகள் என்றென்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் இவை.
நீங்கள் Right என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பொருளாதார துறை தவிர பிற துறைகளில் உள்ளவர்கள் மிகவும் அரிதாகவே உங்களைப் போன்று தாராளமய, உலகமய பார்வையை வைக்கக் கூடியவர்கள். ஆனால் உங்கள் பதிவின் கடைசி வாக்கியம், Rightஐ விடுங்கள். Centre-Rightலேயே தங்குமா என்று தெரியவில்லை.
ஒரு விண்ணப்பம்: நான் ஏற்கெனவே எழுதியதைப் போல, மிகவும் அரிதாக சிலர்தான், உங்களைப் போலுள்ளவர்களில் வலதுசாரித்துவ பொருளாதார பார்வையை முன்வைப்பவர்கள். உங்களைப் போன்றவர்களும் மாறிவிட்டால், இங்கு மானியமும், இலவசங்களும் மட்டும்தான் இருக்கும் என்பது
மட்டுமல்ல! அதுதான் சரியான வழி என்றும் ஆகிவிடும்.
R Balaji
அது இடதுசாரிகளுக்கு விடுக்கப்படும் ஒரு சவால். ஆனால் உண்மையிலேயே அது சாத்தியம் என்றால் சித்தாத்தங்களைப் பிடித்துக்கொண்டு நாம் ஏன் தொங்கவேண்டும்? கம்யூனிஸ்ட் ஒற்றைக்கட்சி ஆட்சியில் சாத்தியமில்லாத பல விஷயங்கள் ஸ்டேட்டிஸ்ட் டெமாக்ரசியில் சாத்தியம். ஆனால் முழுமையான வலதுசாரிப் பொருளாதாரப் பார்வையில் உள்ள குறைபாடுகளுக்கும் மாற்றுகள் தேவை. உரையாடல் என்பது இடதுசாரிகளுடன் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
Deleteமக்கள் ஆட்சி என்பதே இடதுசாரிதான்.பல லட்சம் கோடி இராணுவங்களுக்கு செலவு செய்து கொண்டு வலதுசாரி /ப்ரீ மார்கெட் என்று பேசுவது நகைச்சுவை தான். பாகிஸ்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ பாஸ்மதி அரிசி கொடுத்தாலும்,சீனா 100 ரூபாய்க்கு இன்வேர்டோர் தந்தாலும் ,எதிரி நாடுகள் என்பதால் அவைகளை ஏற்க கூடாது,அவற்றுக்கு தடை எனும் போது ப்ரீ மார்கெட் எங்கே வருகிறது.
Deleteஎன்னிடம் அரிசி /கோதுமை/காபி நான் சொல்லும் விலைக்கு தான் வாங்க வேண்டும்/விற்க வேண்டும்,அப்போது தான் உயர் தர போர் விமானங்கள் தரப்படும் என்று அமெரிக்கா சொன்னால் /அல்லது எண்ணெய் பாதி விலைக்கு தருகிறேன் என்று இரான்,வட கொரியா அழைத்தாலும் அமெரிக்கா கூடாது என்றால் கேட்டு தானே ஆக வேண்டும்.இந்த அழகில் ப்ரீ மார்கெட் எங்கே வருகிறது
பிரட் தயாரிப்பதோ,டாக்ஸ்சி ஓட்டுவதோ அரசும் செய்தால் (தனியார் கூடாது அரசு மட்டும் தான் டாக்ஸ்சி ஓட்ட வேண்டும் எனபது வேறு,ஆனால் அரசு அதில் ஈடுபடவே கூடாது எனபது வேறு)தான் அனைவருக்கும் வாய்ப்பு வரும்.பெண்கள் யாரும் டாக்ஸ்சி ஓட்டுனராக இல்லை என்றால் அங்கு அரசு நிறுவனம் இருந்தால் வருவாயை மட்டும் பார்க்காமல் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து பல பெண் டாக்ஸ்சி ஓட்டுனர்களை உருவாக்க முடியும்
தனியாருக்கு வருவாய் ஒன்று தான் குறிக்கோள்.இந்தியா முழுவதும் டாக்ஸ்சி ஓட்ட /ரொட்டி சுட வெறும் ஆண்களை,சர்தார்களை /அல்லது குஜராத்திகளை மட்டும் வைக்கிறோமே எனபது பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
பெங்களுருவில் வட கிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் என்ற புரளியில் பல ஆயிரம் பேர் உடனே ஓடினார்களே ,அதில் ஒரு சிலராவது அரசு ஊழியர்களாக இருப்பார்களா.
பஞ்சாப் தீவிரவாதம் ஒழிக்கப்பட முக்கிய காரணம் அரசு வேலைகளில்,ராணுவத்தில் முக்கிய பங்கு வகித்த சீக்கியர்கள் தான்.அரசு வேலை தான் சாதிகளை கடந்து/மதங்களை கடந்து ஒற்றுமையை உண்டாக்குகிறது.டாடா நிறுவனம் அசாமில் டீ தொழிற்சாலை நடத்த தீவிரவாதிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தர தயங்கியது கிடையாது.
அரசு பொதுத்துறை நிறுவனம் NLC தீவிரவாதத்தின் பக்கம் இருந்த மக்களில் பெரும்பான்மையானோரோய் அரசு வேலை/மக்கள் ஆட்சி பக்கம் திருப்பியது.அதே நேரத்தில் போஸ்கோ நிறுவனம் பெரும்பான்மையானோரோய் தீவிரவாதத்தின் பக்கம் திருப்புகிறது
அதாகப்பட்டது எல்லைதாண்டி வந்து இந்திய மக்களைத் தீர்த்துக்கட்டினால்தான் என்ன? பாகிஸ்தானுடன் உரையாடலைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! இந்த வர்க்கப் போராட்டம், சுரண்டல் இன்ன பிற கவர்ச்சி அம்சங்கள் நிறைந்த மெகா சீரியல் மயக்கத்திலேயே மக்களை வைத்திருப்பதுதான் பிழைக்கும் வழி! Accountability யாவது புண்ணாக்காவது! அதெல்லாம் ஏகாதிபத்திய மனோபாவம். வழியை விடுங்க, ஸ்ட்ரைக் பண்ணிட்டு சீரியல் பாக்கப் போகோணும்!
ReplyDeleteஇந்தியா ,இந்திய அரசு,நான் இந்தியன் என்று பேசும் நிலை வந்ததே அரசு ஊழியர்களால் தான்.
ReplyDeleteஅரசு ஊழியர் சென்றடையாத பழங்குடி மக்களை/பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்று கேளுங்கள் இந்தியா என்றால் என்ன என்று.திரு திரு என்று முழிப்பார்கள்
இந்தோ சீன போரின் போது இந்தியா ,குடியரசு என்று எதுவும் தெரியாமல் பல இடங்களில் மக்கள் இருந்த நிலையை மாற்ற SSB உருவானது.
http://en.wikipedia.org/wiki/Sashastra_Seema_Bal
SSB was set up in early 1963 in the wake of the Sino-Indian War to inculcate feelings of national belonging in the border population and develop their capabilities for resistance through a continuous process of motivation, training, development, welfare programmes and activities in the then NEFA, North Assam (northern areeas of Assam state), North Bengal (northern areas of West Bengal state), hills of Uttar Pradesh, Himachal Pradesh, and Ladakh. The scheme was later extended to Manipur, Tripura, Jammu (1965), Meghalaya (1975), Sikkim (1976), border areas of Rajasthan and Gujarat (1989), Manipur, Mizoram and some more areas of Rajasthan and Gujarat (1988), South Bengal (southern areas of West Bengal state), Nagaland (1989) and Nubra Valley, Rajouri and Poonch district of Jammu and Kashmir (1991).[1] It was specifically created as the brainchild of Indian think tank to counter the Chinese. It was believed that militarily, the Chinese were superior to India and in the event of a war, the Chinese would overwhelm Indian forces. So in 1963 a unique force was created, which would in the event of Chinese occupation merge with the border population, donning civilian attire,working a parallel administration and carry out the war of India with the help of guerrilla tactics.[2] The SSB came out to be successful which was evident by the success it achieved by training Mukti Bahini in Bangladesh and other places, COIN Op's in the north-east, and providing security at high peaks during Indo-Pakistani War of 1971 and Kargil War.
பொதுத்துறை/அரசு எனும் போதே அது அனைவருக்கும் எனபது புலனாகவில்லையா.
அதன் கடமைகளில் /மக்கள் ஆட்சியில் முக்கியமான ஒன்று அனைவருக்கும் பங்கு எனபது.டாக்ஸ்சி ஓட்டும் தொழிலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்த மக்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால்,அதனால் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்களிடம் கிளம்பும் எதிர்ப்பை தடுக்க வேண்டியது அரசின் கடமை.அதற்காக மற்ற பகுதிகளில் இருந்தும் டாக்ஸ்சி ஓட்டுனர்களை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமை.அது டாடா.பிர்லாவின் வேலை அல்ல .அவர்கள் செய்யவும் மாட்டார்கள்
அரசு செய்யாவிட்டால் பாதிப்பு அவர்களுக்கு தான் அதிகம்.மக்கள் அவர்களை சேர்க்காத நிறுவனங்களை வெறியோடு எதிர்ப்பார்கள்.
ஒருவர் தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாரா(பல நிறுவனங்களுக்கு தாவாமல் ) அல்லது அரசு நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாரா என்பதை பார்த்தால் எந்த வேலை loyalty /belongingness உருவாக்குகிறது என்பதும் புரியும்.தனியாரில் வேலையை விட்டு வேறு இடத்திற்கு தாவியவர் வேலை பார்த்து வந்த இடத்தை திட்டாமல் இருந்தால் பெரிய ஆச்சரியம்.ஆனால் அரசு வேலையில் இருந்தவர் ,வேலையை விட்டு விட்டாலும் அவர்கள் துறையை விட்டு கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தபால்காரருக்கு தன் துறையின் மீது இருக்கும் ஒட்டுதல் எந்த courier கம்பெனி பணியாளருக்கும் இருக்காது. தபால்காரரின் குடும்பம் முன்னேற இருக்கும் வாய்ப்புகள்,courier கம்பெனியில் அதே வேலை செய்பவரின் குடும்பத்தை போல பல மடங்கு.
ஒருவர் தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாரா(பல நிறுவனங்களுக்கு தாவாமல் ) அல்லது அரசு நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாரா என்பதை பார்த்தால் எந்த வேலை loyalty /belongingness உருவாக்குகிறது என்பதும் புரியும்.தனியாரில் வேலையை விட்டு வேறு இடத்திற்கு தாவியவர் வேலை பார்த்து வந்த இடத்தை திட்டாமல் இருந்தால் பெரிய ஆச்சரியம்.ஆனால் அரசு வேலையில் இருந்தவர் ,வேலையை விட்டு விட்டாலும் அவர்கள் துறையை விட்டு கொடுக்க மாட்டார்கள். ------------ ---------------------- -------------------------- ------------------------------ --------------------------------- --------------------------------- -------------------- ஆமா ஆமா ///// எந்த வேலையும் செய்யாம, எந்தவித அக்கவுண்டபிலிட்டியும் இல்லாம அடுத்தவன் வாக்கரிசில எச்சில் தின்று கொழுத்து வாழும் வேலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காத வேலையை யாருக்குத்தான் பிடிக்காது ???!!!! அப்படிப்பட்ட வேலையை எந்த மடையன் விட்டுக்கொடுப்பான் ???? வெளக்கெண்னைக்கு இதுல பெருமை வேற (ஒழுங்கா வேலை செய்யுற 10% நல்லவர்கள் மன்னிக்கணும் ) ..... வாங்குற காசுக்கு நேர்மையாய் மக்களுக்கு ஊழியம் செய்யாத பிணம்திண்ணி ஆட்கள் நாசமாய்ப்போக வேண்டும்
ReplyDeleteஅரசு ஊழியர்கள் யார் யார் என்றாவது தெரியுமா அனானி அண்ணே
Deleteநீங்களே ஒத்து கொள்ளும் ஒரு சிலராவது அரசு வேலையில் ஊழல் செய்யாமல் இருக்க கூடும்.ஆனால் தனியார் துறை என்பதே ஊழல் தான்
Its not necessary to obey a unlawful command and its not a defence to escape punishment எனபது அரசு ஊழியர்களுக்கு உண்டு.ஆனால் தனியாரில் அப்படி எதுவும் கிடையாது.முதலாளி சொல்வதை செய்வது தான் தனியார் துறை.இது தவறு என்று சொல்லும் உரிமை அங்கு பணி புரிபவர்களுக்கு கிடையாது.
போட்டி நிறுவனத்தின் ஆட்களை வலைவீசி பிடி.அவர்கள் quotation என்ன என்று அறிந்து கொள்ள பணம் கொடு என்பவையெல்லாம் தனியாரை பொருத்தவரை அடிப்படை வேளைகளில் ஒன்று அது ப்ளேன் விற்கும் கம்பெனியோ பலப்பம் விற்கும் கம்பெனியோ
பணி புரியும் நிறுவனத்தில் இருந்து மறைமுகமாக ஒரு குழுவாக இயங்கி பல காலம் பணி புரிந்த நிறுவனத்தின் வேலைகளை தங்கள் பக்கம் திருப்பி கொண்டு திடீரென்று போட்டி நிறுவனம் துவங்குபவர்களும் குறைவு கிடையாது.அது ஜெட் ஏர்வேசோ ,டையர் கம்பெனியோ
இரண்டு ,மூன்று முதலாளிகள் உள்ள நிறுவனங்களில் ஒருவருக்கு தெரியாமல் மற்றவர்கள் subcontract கொடுக்க பணம் வாங்குவதும் சாதாரண நிகழ்வு.
தனியார் நிறுவனத்தில் ஊழல் என்று எதுவும் கிடையாது.பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அங்கு ஞாயம் தான்
The classic example how government departments functioned in the past is if you take the case of Telephones Department. Prior to Communication/Mobile boom, the telephone department was treating consumers like dirt. Now their presence has gone down and they are unable to cope up with private telecom companies.
ReplyDeleteபதிவும் நன்று, பதில்களும் நன்று. குறிப்பாக பூவண்ணனின் பதிலும் ஆர். பாலஜியின் பதிலும்.
ReplyDeleteமதம், பொருளியல், நிர்வாகம், கல்வித்துறை - இந்நான்குத்துறைகளில் “இடதுசாரி, வலதுசாரி” என்ற சொற்களுக்கு வெவ்வேறு பொருளுண்டு. அரசியலிலும் ஊடகத்திலும் விவாதங்களிலும் வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு எது வசதியோ அதை பயன் செய்வது நிதர்சனம். இதனால் பல குழப்பங்கள்.
போதாக்குறைக்கு இரு புறத்து கொள்கை தீவிரவாதிகளுக்கும் இவை வசைச்சொற்கள். செவிசாய்க்கா வாதம் வேகாத சாதம்.