Tuesday, December 12, 2017

பாபர் மசூதி இடிப்பும் இந்திய அரசியல் மாற்றமும்!

நான் எழுதிய கட்டுரை, மின்னம்பலம் இணைய இதழில் வெளியானது.

===

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது தீர்க்க முடியாத வழக்கு இன்றுவரை தீர்க்க முடியாததாகவே இருக்கிறது.

1886இல் ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் சேமியர் என்பவர், “இந்துக்களுக்குப் புனிதமான ஓர் இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், நிகழ்வு 356 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதால் காலம் கடந்துவிட்டது. இன்று கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது கடினம்” என்று தீர்ப்பு எழுதினார். 2010இல் அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் மீதிப் பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் தருவதாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அது இந்துக்களையும் திருப்திப்படுத்தப் போவதில்லை, முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

இதற்குக் காரணம், விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா அமைப்பினர் ஒரு பெரும் இயக்கமாக மசூதி அமைந்திருந்த இடத்துக்குச் சென்று, 1992 டிசம்பர் 6 அன்று அதைச் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளியதே. வெறும் சட்டப் போராட்டமாக இருந்த சிக்கல், நாடு தழுவிய மதப் போராட்டமாக மாறியது இந்தப் புள்ளியில்தான்.

வழிபாட்டுத் தலங்களும் வரலாறும்

எட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாமீது இஸ்லாமியப் படையெடுப்புகள் பல நிகழ்ந்திருக்கின்றன. அந்தப் படையெடுப்புகளின்போதும், தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சிகளின் கீழும் எண்ணற்ற இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்துக் கோயில்களின் இடிமானங்களைக் கொண்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை டெல்லி முதற்கொண்டு இந்தியா முழுமையிலும் காணலாம். காசி, மதுரா போன்ற இந்துக்களின் முக்கியமான சில வழிபாட்டிடங்களில் கோயிலின் பகுதிகளிலேயே மசூதிகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக அமைத்தனர். இவை வடஇந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பல்லாவரம் குடைவரைக்கோயில் இன்றும் ஓர் இஸ்லாமிய வழிபாட்டிடமாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்குமுன், நியாயமான சட்டத்தின் ஆட்சி என்ற கருதுகோள் நம்மிடம் இல்லை. வலுவான அரசன் முடிவு செய்வதுதான் சட்டம். அதன் விளைவாகத்தான் பிறருடைய வழிபாட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் சட்டத்தின் ஆட்சி என்பதை முன்வைத்த பின்னர்கூட அயோத்தி ராமர் கோயில் பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்தது. 

பேச்சுவார்த்தைகள்மூலம் இரு மதத்தாரும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளுதல் மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், விஸ்வ இந்து பரிஷத்தும் பாரதிய ஜனதாவும் அயோத்தி விஷயத்தில் இது நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இது நிச்சயமாக பாரதிய ஜனதாவுக்கு நன்மை அளித்தது. இன்று தனிப் பெரும்பான்மையில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்குமான அடித்தளம் ‘இந்துப் புத்தெழுச்சி’ என்பதாகும். இந்துப் புத்தெழுச்சி, அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தின்மீது கட்டமைக்கப்பட்டது. அதற்கு பாபர் மசூதியை இடிப்பது அவசியமானது.

மசூதி முதல் மாட்டிறைச்சி வரை

பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை அளித்த இந்த நிகழ்வு இந்திய நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். சாதிப் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு கிராமம் என்பதிலிருந்து அதிகபட்சம் ஒரு மாவட்டம் என்ற அளவைத் தாண்டாது அடங்கிவிடும். ஆனால் இந்து -முஸ்லிம் பிரச்னை என்பது நாடு தழுவிய அளவில் பரவக்கூடியது.

அயோத்தி மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பாபர் மசூதி என்பது குறிப்பிடத்தகுந்த புனிதத் தலம் ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு வன்முறைக் கும்பல், சட்டத்தைப் பற்றியோ நீதிமன்றங்களைப் பற்றியோ கவலைப்படாது ஒரு கட்டடத்தை அடித்து நொறுக்கும் என்றால் முஸ்லிம்களாகிய தங்களுக்கு இந்த நாட்டில் சட்டத்தால் எந்தப் பாதுகாப்பும் கிடையாது என்பதை முஸ்லிம்கள் அன்று உணர்ந்தார்கள். அது அவர்களைப் பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
பல நகரங்களில் அவர்கள் தன்னிச்சையாகத் தெருவில் குழுமினார்கள். அவ்வாறு குழுமியவர்களுக்கு எதிராக இந்துப் புத்தெழுச்சிக்காரர்களும் குழுமினார்கள். விளைவு, கடுமையான எதிரெதிர் தாக்குதல்கள், வணிக நிறுவனங்கள் எரிக்கப்படுதல், கல்வீச்சு, காவல்துறைத் தாக்குதல், கொலை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்.

தேசப் பிரிவினைக்குப்பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய இந்து - முஸ்லிம் வன்முறை இதுதான். இதன் அடுத்த கட்ட நிகழ்வுகள் யாராலுமே தடுக்க முடியாதவையாக அமைந்தன. மும்பை குண்டுவெடிப்புகள், தொடர்ந்து மும்பையில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறைகள், சிமி போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் உருவாகி நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, குஜராத்தில் கரசேவகர்கள் ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறை என்று தொடர்ச் சங்கிலிப் பிரச்னைகளாக நிகழ்ந்தன. இன்று வடமாநிலங்களில் நடக்கும் பசு இறைச்சி தொடர்பான தாக்குதல்கள், லவ் ஜிகாத் என்ற பெயரிலான இந்து - முஸ்லிம் காதல் திருமணங்கள்மீதான தாக்குதல்கள் போன்றவற்றையும் பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

இந்தியச் சுதந்திரம்தொட்டே காஷ்மீர் பிரச்னை கனன்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பகுதி எரிமலையாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தானும் செய்துகொண்டிருக்கிறது. காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் மக்களை மதிக்காமல் தேர்தலில் ஊழல்களைச் செய்ததன்மூலம் அந்நியப்பட்டுப் போனார்கள். ஆஃப்கனிஸ்தானத்தின் ஜிஹாதி போராளிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ இவை அனைத்தும் காரணமாக இருந்தன. கூடவே பாபர் மசூதி இடிப்பும் சேர்ந்துகொண்டது. இந்தியாவுடன் இருந்தால் முஸ்லிம்களாகிய நமக்கு நியாயம் கிடைக்காது என்பதற்கான பல காரணங்களில் பாபர் மசூதி இடிப்பும் ஒன்றாகியது.

மதம் அரசியலின் மையமாகும் அபாயம்

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இந்திய அரசியலில் மதம் ஒரு பெரிய இடத்தை வகிக்கவில்லை. பெரும் அரசியல் கட்சிகள் எவையுமே இந்துக்களைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும், உள்ளூரப் பல கருத்துகளைக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக மேடையில் எதையும் பேச மாட்டார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பினால் மிகப் பெரும் அரசியல் லாபங்களைப் பெற்ற பாரதிய ஜனதா, தொடர்ந்து இந்துக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரிகள் என்பதைக் கட்டமைப்பதன் மூலமும் தம்முடைய செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளலாம் என்றே இயங்குகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பிற பெரிய கட்சிகளும் இந்துமைய அரசியலை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக மதச்சார்பற்ற இந்திய அரசியல், மதமைய அரசியலாகும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பாபர் மசூதி இடிப்பு நினைவில் இருக்காது அல்லது மிகவும் மங்கலாக இருக்கும். நாளடைவில் இது வெறும் ஒரு வரலாற்றுச் செய்தியாக மட்டுமே இருக்கும். ஆனால், என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்மீது இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அப்போது அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். பாபர் மசூதி இடிப்பு சரியானதே என்பதே என் உடனடி எண்ணமாக இருந்தது. சட்டம் இந்துக்களுக்கு நியாயம் வழங்காதபோது, வலுக்கட்டாயமாக நியாயத்தை எடுத்துக்கொள்வது தவறல்ல என்று நினைத்தேன். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்து வழிபாட்டிடங்கள் அனைத்தும் சட்டபூர்வமாகவோ, அப்படி முடியாவிட்டால் முரட்டுத்தனமாகவோ திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கருதினேன்.

இன்று என் கருத்து மாறியுள்ளது. வலுக்கட்டாயமோ, வன்முறையோ எந்த விதத்திலும் தீர்வாகாது என்றே கருதுகிறேன். இவை தொடர் சங்கிலி வன்முறையாகச் சுழன்றபடி, சூறாவளிபோலத் தன் சக்தியை அதிகரித்தபடி, தன் பாதையில் தென்படும் எண்ணற்ற அப்பாவிகளைச் சூறையாடிவிடும். இதற்கான சான்று பாபர் மசூதி இடிப்பும் தொடர்ந்த, இன்றும் தொடரும், வன்முறைகளும். குறுங்குழு மனப்பான்மையிலிருந்து விசாலமானதொரு பார்வையை நோக்கிச் செல்வதற்கு நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், மதப் பிளவுகளோ மிக விரைவில் நம்மை வன்முறை நிறைந்த, அமைதியற்ற பழைய குறுங்குழு வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு நமக்குப் பெரும் பாடமாக அமைகிறது.

3 comments:

  1. பொதுவாக ஹிந்துக்கள் கீதையை நம்புவது உண்மையென்றால் பின்வரும் கீதையின் வாசகத்தையும் நம்பியே ஆக வேண்டும். இல்லையா?! இல்லையேல் தங்களது புனித நூலை அவர்களே மதிக்கவில்லை, நம்பவில்லை என்று தான் பொருள். அந்த வகையில் இன்று நாடு முழுவதும் பி.ஜே.பி ஆட்சியில் நாடு மதவாத அரசியலை நோக்கித் திரும்புவதற்குக் காரணம், வரலாற்றில் தீராத களங்கமாய் இஸ்லாமியக் கிறித்துவப் படையெடுப்புகளையும், அதன் காரணமாக இந்தத் துணைக்கண்டம் 1300 ஆண்டுகள் அடிமைப்பட நேர்ந்ததையும் ஒரு பெரும் அவமானச் சின்னமாகக் கருதுவதாலேயே!

    அதற்குப் பழி தீர்க்க வேண்டும் என்று மீண்டும் புறப்படும் முன், ஏன் அத்தகைய ஒரு அவலம் இந்தியாவில் இந்துக்களுக்கு ஏற்பட்டது என்பதையும் ஒரு கணம், ஒரே ஒரு கணம் யோசிப்பார்களேயானால் நாடு மீண்டும் மதவாத அரசியலை நோக்கித் திரும்பாது என்றே தோன்றுகிறது. இந்துக்கள் தங்களது சொந்த தலித்து சகோதரர்களுக்கு, இந்தியாவின் பூர்வ குடிகளுக்கு மில்லினியம் மில்லினியம் ஆண்டுகளாய் செய்த கர்ம வினை காரணமாக

    (எப்படியும் சற்றேறக்குறைய ஒரு 6,7 மில்லினியம் ஆண்டுகளாவது நடந்த ஆரிய திராவிட பூசல் காரணமாக)

    ஏற்பட்ட கர்ம வினை என்று கூட இதை ஒரு டேக் இட் ஈஸி பாலிஸியில் ஈஸியாகக் கடந்து விட முடியும். அதெப்படி 1300 ஆண்டு அவமானங்களை எப்படி ஒரு நொடியில் ஒரே வீச்சில் துடைத்துக் கொண்டு போக முடியும்?!, பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் எனப் புறப்பட்டால், 6,7 மில்லினியம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு, இந்தியாவின் சிந்து கங்கைச் சமவெளியிலிருந்து காவிரி தீரத்துக்கு, இப்போது காவிரி தீரத்திலிருந்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் இந்தப் பூமிப் பந்திலிருந்தே துடைத்தழிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கெல்லாம் என்ன விதமான எதிர் வினையாற்றுவது?!

    ஒரு இனம், மதம்
    1300 ஆண்டுகளுக்கும் மேலே அடி, உதை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது, அது குறித்து அவர்களின் கடவுளர்களும் பாராமுகமாய் கண்ணை மூடிக் கொண்டு கைவிட்டு விட்டு வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால், எந்தவிதமான ஒரு தப்பும், தப்பே செய்யாமல் இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்குமா?! தண்டனையே இவ்வளவு கொடுமையாய், கொடூரமாய் தெரிகிறது என்றால், அப்போது இவர்கள் செய்த குற்றங்கள் (மில்லினியம் மில்லினியம் ஆண்டுகளாய்) எவ்வளவு பெரிய குற்றமாய், குற்றங்களாய் இருந்திருக்கும்?! ஹிந்துக்களும் ஹிந்துக்களில் உள்ள அடிப்படைவாதிகளும் ஏன் இப்படி எல்லாம் யோசிப்பதேயில்லை.?! நானும் அடிப்படையில் ஒரு இந்துவே. ஈழத்தில் இதோ இப்போது நம் கண்ணெதிரே அழித்தார்களே நம் ஈழத் தமிழர்கள் அவர்கள் இந்துக்களில்லையா?! அப்போதெல்லாம் அந்த ஹிந்துத்துவம் எங்கே போய் கண்ணை மூடிக் கொண்டு ஒளிந்து கொண்டிருந்தது.?!

    "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடந்து கொண்டுள்ளதோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டுள்ளது. எது நடக்க உள்ளதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்" எனக் கீதையை இந்து முஸ்லீம் பிரச்னைகளுக்கும் பொருத்திப் பார்த்து நடந்து கொள்ளலாமே?! தலித்துகளை, சாதியப்படிநிலையில் தங்களை விட கீழே உள்ள சாதிகளைப் பார்த்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, ஏற்றதாழ்வான, பாரபட்சமான, சமத்துவ வாய்ப்புகளற்ற சமூக அமைப்பையேப் பேண விரும்பும் ஒவ்வொரு உயர் ஜாதி இந்துவும், அதை வழி மொழியும் மற்ற இந்துக்களும் கீதையின் இந்தப் புகழ் பெற்ற வாசகங்களை, தங்களது கடந்த கால, அடிமை இந்தியாவுக்குக் காரண கர்த்தாக்களாய் கருதும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் விஷயத்திலேயும் கடைபிடிக்கலாமே?!

    செய்த தவறுகளுக்கெல்லாம் பிராயச் சித்தம் தேடாது போனாலும், தவறுகளைத் "தவறு தான்" என ஒத்து, ஏற்றுக்கொள்வதிலேயே கூட ஒரு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாத இனம், அப்புறம் மீண்டும் மீண்டும் அப்படி ஒரு அடி, அத்தகைய பலமான அடி வாங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் தர முடியும்?! "பழைய குருடி கதவைத் திறடி கதையாவதில் தான் போய் முடியும். பழிக்குப் பழி எனப் பழி வாங்கப் புறப்படும் முன், ஏன், எதற்கு, எப்படி?! என ஒரு கணம், ஒரே ஒரு கணம் சிந்தித்தால் கூடப் போதும் இந்தியாவில் மத வாத மையம் கொண்ட அரசியல் துளிர் விடுவதற்கு வாய்ப்பெழாது. இல்லையேல்
    அப்புறம் இந்தப் பூமியில் அமைதி என்பதற்கு என்றென்றும் ஒரு வாய்ப்பே இல்லாமல் சென்று ஒரு நாள் ஒரு முழு அழிவில் தான் போய் முடியும்.

    ..........வளர் பிறை!

    ReplyDelete
  2. உங்களுடையை நிலைப்பாடு நியாயமானதாகவே இருக்கிறது.(என் நிலைப்பாடோடு ஒத்துப்போவதால்)

    ReplyDelete
  3. அரசியலுக்கு அப்பால் ராமர் கோயில்-அயோத்யா பிரச்சனை குறித்து ஆர்வமுள்ளோர் படிக்க வேண்டிய புத்தகம் https://www.amazon.in/Ayodhya-War-Peace-Sri-Ravishankar/dp/9380592191

    ReplyDelete