Monday, December 25, 2017

பாஜக எவ்வாறு ஜெயிக்கிறது?

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்து, இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவு நாட்டில் 16 மாநிலங்களில் பாஜக நேரடியாக அல்லது கூட்டணியாக ஆட்சி நடத்துகிறது. 3 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014-ல் ஆட்சியைப் பிடித்தது. இவை அனைத்தும் வெறும் மூன்றே ஆண்டுகளில் சாத்தியம் ஆகியிருக்கிறது.

இதோ, பாஜக காலி, இந்தத் தேர்தலோடு கதை முடிந்தது என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எக்காளமிட்டுக்கொண்டிருக்க, பாஜகவோ மேலும் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுகிறது. சில இடங்களில் பாஜகவால் ஜெயிக்க முடிவதில்லைதான். ஆனால் வெகு சில இடங்களில் மட்டுமே.

எனில், இந்த வெற்றிகள் எப்படிச் சாத்தியமாகின்றன? 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி, மஹாராஷ்டிரம், ஹரியானா, ஜம்மு & காஷ்மிர், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேஷ், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி எப்படிச் சாத்தியமானது? அதே நேரம் தில்லி, பிகார், பஞ்சாப் ஆகிய இடங்களில் தோல்வியையும் கண்டுள்ளது பாஜக. (பிகாரில் பின்னர் கூட்டணி மாறி இன்று பாஜக கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது.) இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இவற்றை ஆராயும் இரண்டு புத்தகங்களைக் கடந்த வாரம் படித்து முடித்தேன். ஒன்று: How the BJP wins: Inside India’s Greatest Election Machine. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் பிரஷாந்த் ஜா எழுதி ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். இரண்டாவது: The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-East. பாஜக அனுதாபிகளும் தேர்தல் களத்தில் பாஜகவின் செயல்திட்டங்களை வடிவமைப்போருமான ரஜத் சேத்தி, ஷுப்ரஸ்தா ஆகியோர் எழுதிய புத்தகம். பெங்குவின் வெளியீடு.

முதலாவது புத்தகம், எளிமையாகப் படிக்கக்கூடியது. நல்ல எடிட்டிங். இரண்டாவது மிகச் சுமாராக எழுதப்பட்டது. வளவளவென்று செல்கிறது. மோசமான எடிட்டிங். ஆனால் சில உள்விஷயங்களை நுணுக்கமாக அளிப்பதால், முக்கியமானதாகிறது.

முக்கியமான கருத்துகளை இப்படிச் சொல்லிவிடலாம்:

1.     அமித் ஷா தலைமையில் பாஜக வலுவான தேர்தல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத மாநிலங்களிலும்கூட பாஜகவால் வெகு விரைவில் இந்த இயந்திரத்தைக் கொண்டு வேலை செய்ய முடிந்திருக்கிறது.
2.     ஆர்.எஸ்.எஸ்ஸின் உழைப்பும் ஆள் பலமும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.
3.     ஒவ்வொரு மாநிலத்திலும், விரிவானதொரு சாதிக் கூட்டமைப்பை பாஜகவால் உருவாக்க முடிந்திருக்கிறது. இதுநாள்வரையில் தேர்தல் அரசியலால் பலன் அடையாத பிற்படுத்தப்பட்ட, தலித் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்குச் சரியான இடங்களைக் கொடுப்பதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதோடு, உயர் சாதியினரின் வாக்குகளையும் தக்கவைத்துக்கொள்வதில் பாஜக பெரும் வெற்றி அடைந்திருக்கிறது.
4.     முஸ்லிம்களுக்கு எதிரான  (நிஜ மற்றும் பொய்) பிரசாரங்களின்மூலம் போலரைசேஷனை ஏற்படுத்தி, இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
5.     ஜம்மு காஷ்மிர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் பொருத்தமட்டில் ராம் மாதவின் தலைமையில் பெரும் வெற்றிகள் குவிந்துள்ளன. (நரேந்திர மோதி, அமித் ஷா பெயர்களுக்கு அடுத்து இரு புத்தகங்களும் முக்கியமாகக் குறிப்பிடும் பெயர் ராம் மாதவ்.)
6.     பணம் திரட்டுவதிலிருந்து, சரியாகச் செலவழிப்பதிலிருந்து, மையப்படுத்தப்பட்ட முறையில் தேர்தலை நடத்துவதுவரை, அமித் ஷாவின் தலைமையில் பாஜக, தேர்தல் நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளனர்.
7.     ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட குழுக்களை ஓரணியில் திரட்டுவது, எளிமையான கோஷங்களை மக்கள்முன் கொண்டுசெல்வது, எதிர்க்கட்சிகளை உடைப்பது அல்லது அவர்கள் ஓரணியில் திரளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று சகலவிதமான செயல்திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது. வெற்றி ஒன்றுமட்டுமே நோக்கம்.
8.     எல்லாவற்றுக்கும் மேலாக, நரேந்திர மோதி என்ற ஒற்றை நபரின் செல்வாக்கு, அவருடைய பிரசார பலம், மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் மாபெரும் நம்பிக்கை. இதற்கு இணையாக தற்போதைக்கு இந்தியாவில் யாருமே கிடையாது.

இப்படி இருந்தும் தில்லி, பிகார் தோல்விகள் எப்படி நிகழ்ந்தன. பிரஷாந்த் ஜா அவற்றை ஓரளவுக்கு ஆய்வு செய்கிறார். லாலு யாதவ், நிதீஷ் குமார் ஜோடி எவ்வாறு பாஜகவை அதன் ஆட்டத்தை வைத்தே தோற்கடித்தது என்ற அத்தியாயம் மிக முக்கியமானது. இந்த இரு புத்தகங்களும் எழுதப்பட்டபிறகுதான் குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்கள் நடைபெற்றன.

***

கட்சிகள் தேர்தல்களை அணுகும் முறையில் பாஜக பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் பாஜகவை வீழ்த்துவது கடினம். ‘என்னதான் இருந்தாலும் ஆர்.கே.நகரில் 1500+ வாக்குகள்தானே பாஜக பெற்றது’ என்று பேசுவோர் தவறிழைக்கின்றனர்.

என் கணிப்பில் நான்கு மாநிலங்களில்தான் பாஜக அடுத்து வரும் பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க மிகவும் கஷ்டப்படும். அவை கேரளம், தமிழகம், வங்கம் மற்றும் தெலங்கானா. இந்த மாநிலங்களிலும்கூட சிறிது சிறிதாக பாஜக வளர்ந்துகொண்டுதான் இருக்கும். மற்ற மாநிலங்களில், ஒன்று பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் அல்லது அதன் தோழமைக் கட்சி ஆட்சியில் இருக்கும்.

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் பாஜக பின்பற்றும் உத்திகள் சில ஏற்க முடியாதவையாக இருக்கும். மிக முக்கியமாகச் சொல்வதானால் மதத்தின் பெயராலான போலரைசேஷன். ஆனால் அவர்கள் பார்வையில் இது ஒன்றுதான் அசாம் போன்ற 30% முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற 20%+ முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ வெற்றி தரக்கூடிய ஒரே வழிமுறை. இவற்றைச் செய்யும் அதே நேரம், பாஜகவால் ஜம்மு காஷ்மிரில் பிடிபி போன்ற கட்சியுடன் கூட்டணி ஆட்சியை நடத்த முடிகிறது. வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் சிறு மாநிலங்களில் ‘பாரதிய ஜீசஸ் பார்ட்டி’ என்றுகூட பாஜக அறிமுகப்படுத்தப்பட்டு இடங்களைப் பிடிக்கிறது!

ஒவ்வொரு முறை ஒரு மாநிலத்துக்குத் தேர்தல் நடக்கும்போதும் ஊடகங்கள் பாஜகவின் தோல்வியை எதிர்பார்த்துத் தீர்ப்புகளை முன்னதாகவே எழுதுகின்றன. அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அப்படிச் செய்துவிடும், இப்படிச் செய்துவிடும், மோதி இத்தோடு காலி என்றும் ஆரூடம் எழுதுகின்றன. கேட்டால் வாஜ்பாயின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். அப்போதைய பாஜகவுக்கும் இப்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம், களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒருசில ஊடகவியலாளர்களாவது புரிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகமாக எழுதவும் செய்கிறார்கள். இத்தனைக்கும் பிரஷாந்த் ஜா, பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்பது புத்தகத்தைப் படிக்கும்போதே தெரிகிறது.

-->
பாஜக நிச்சயமாக அடுத்துவரும் பல தேர்தல்களில் தோற்கத்தான் செய்யும். குஜராத்போலத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆனால் மிகவும் நெகிழ்வுடன் தன்னை மாற்றியமைத்து, புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, பிரசாரத் தொனியை மாற்றிக்கொண்டு, கடுமையான களப்பணியின்மூலம் பாஜக தோல்விகளைவிட அதிக விகிதத்தில் வெற்றிகளைப் பெறும் என்பது புலனாகிறது. குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளில்.

9 comments:

  1. Nice presentation and it has been mandatory for the survival of Hinduism

    ReplyDelete
  2. As you have pointed out, they need to have a different strategy in TN and Kerala. Polarization based on religion will not work in the southern states. While 6th consecutive term is very impressive in Gujarat, they were also very close to losing majority. Cong should consider this as a lost opportunity as NOTA polled significant votes in many constituencies. Let's see what's in store for 2019.

    ReplyDelete
  3. நன்றி சார், சிறந்த பதிவு

    ReplyDelete
  4. அவர்களின் வெற்றிக்கான வழிமுறைகளின் மீது உங்களுக்கு விமர்சனமே இருப்பது போல் தெரியவில்லை(இருக்க வேண்டும் எனப்து அவசியமில்லை), குஜராத் தேர்தலின் போது அவர்களது பிரச்சாரம் மிகவும் தரம் தாழ்ந்து போனதாக கூறப்படுகிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து இதில் பிரதிபலிக்க வில்லை. வெற்றி எவ்வாராயினும் பெற வேண்டியதா, அறம் என்பதே தேவையில்லையா

    ReplyDelete
  5. தங்களது மதிப்பீடு மிக்ச் சரியானதே. தங்களது கட்டுரையில் கடைசி பாராவில் தான் சாராம்சம் அடங்கியுள்ளது. பாஜக ” மிகவும் நெகிழ்வுடன் தன்னை மாற்றியமைத்து” கொண்டு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைய பாஜக 15 வருடங்களுக்கு முன்பிருந்த பாஜக அல்ல.அத்வானி காலத்து பாஜக வேறு. மோடியின் பாஜக வேறு.
    பழம் பெரும் க்ட்சியான காங்கிரஸ் அதை கொஞமும் உணர்ந்து கொள்ள வில்லை.காங்கிசும் தன்னை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.காங்கிரஸ் தனது உபதேசங்கள் மூலம் பாஜகவை வளரச் செய்தது.
    எங்களுக்குத் தான் அதுவும் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்களுக்குத் தான் இந்த நாட்டை ஆளத் தகுதி உள்ளது ஏன்பது தான் ஆரம்பத்திலிருந்து காங்கிரசின் கோஷமாக இருந்து வந்துள்ளது.
    ஆரம்பத்தில் பிராமணர்கள் உட்பட முற்பட்ட ஜாதிகள், முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள், தலித்துகள் (அப்போது ஹரிஜனங்கள்) ஆகியோரின் வாக்குகள் காங்கிரஸைக் காப்பாற்ற் வந்தன. என்றென்றும் அவர்களது ஆதரவு இருக்கும் என்று காங்கிரஸ் நம்பியது.தங்களை விட்டால் வேறு யாராலும் இவர்களைக் காப்பாற்ற முடியாது என்றும் கூறி வந்தது. அதையே நம்பியும் வந்தது.அந்த நம்பிக்கை அடிப்படையில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய பிரசாரமே பாஜவை வலுவடையச் செய்தது. காங்கிரஸின் முற்போக்குக் கொள்கைகளில் ஒரு தயக்கம் இருந்து வந்தது.
    பாஜக வாக்க்குச் சாவடிகளில் தொடங்கி கீழிருந்து மேலாகத் திட்டமிடுகிறது. காங்கிரஸில் எல்லாமே மேலிருந்து கீழ்நோக்கி வருகிறது.
    காங்கிரஸே இல்லாத இந்தியா என்ற பாஜகவின் கோஷம் பாஜகவுக்கு இனிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் மாநிலக் கட்சிகள் படிப்படியாக இடமிழந்து பாஜக- காங்கிரஸ் என்ற இரு வலுவான கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகத்துக்கு நல்லது. அந்த வகையில் காங்கிரசுக்கு உள்ள பெரும் பொறுப்பை அக்கட்சி உணர்ந்து அதன் கொள்கைகள் காலத்துக்கு ஏறப மாற வேண்டும்.கட்சிகளை விட ஜனநாயகம் தான் முக்கியம்.

    ReplyDelete
  6. Vajapayee was following "Ramar" Route. Modi and Shah are following Krishna's Route. - Sankaranarayanan

    ReplyDelete
  7. பஞ்சாப் தோல்வி குறித்து ஒன்றும் இல்லையா?

    ReplyDelete
  8. BJP has already started to build up their party in Tamilnadu. They are focusing on Pallar caste. DMK has been silently getting that community votes all these years. If BJP succeeds in getting their votes then DMK will struggle to get their vote bank in Delta districts and southern districts.

    ReplyDelete