Saturday, September 20, 2008

மின்சார ஸ்கூட்டர்

இன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.

Front view of the electric bike - Ultra Motor Velociti

சாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக வெட்டி, எழுத்தாளர் சுஜாதா வீடு வழியாக, சாயிபாபா கோவிலை நெருங்கி, அலர்மேல்மங்காபுரம் பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலை வந்து, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி எல்டாம்ஸ் சாலை அலுவலகம். அல்லது லஸ் சர்ச் சாலை வராமல் சி.பி.ராமசாமி சாலை வந்து, அங்கிருந்து டி.டி.கே சாலை வந்து, அங்கிருந்து இடதுபுறம் எல்டாம்ஸ் சாலையின் திரும்பலாம். அலுவலகத்திலிருந்து டி.டி.கே சாலை, லாயிட்ஸ் சாலை, வீடு.

இங்கு எங்குமே மணிக்கு 40 கி.மீ. வேகத்தைத் தாண்டமுடியாது. இதற்கு மின்சார வண்டி போதும். அல்ட்ரா மோட்டார் நிறுவனத்தின் 500 வாட் மோட்டார் சக்தி கொண்ட வண்டி. இதற்கு ரெஜிஸ்டிரேஷன் தேவை. வண்டியை ஓட்ட லைசன்ஸ் தேவை. இதைவிடக் குறைந்த சக்தி கொண்ட மோட்டார் உள்ள மின் வண்டிகளும் உண்டு. அவற்றை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை; ரெஜிஸ்டிரேஷனும் தேவையில்லை. ஆனால் மணிக்கு 30 கி.மீ.ஐத் தாண்ட கொஞ்சம் கஷ்டப்படும்.

Side view of the electric bike - Ultra Motor Velociti

இந்த வண்டி 40-ஐத் தொடுகிறது. சத்தமே இல்லை. அதிக பளு இருந்தால் இழுக்க சற்றே கஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தேவை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். 80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.

இந்த வண்டியின் விலை ரூ. 32,000 + 12.5% வாட் (சுமார் 4,000) + சுமார் 6,000 (ரெஜிஸ்டிரேஷன், ரோட் டாக்ஸ், இன்ஷூரன்ஸ்). இந்த வண்டிகள் சுற்றுப்புறச் சுழலுக்கு நன்மை செய்வதால் வாட் வரியை 4% அல்லது 0% என்றாக்கலாம் என்று நினைக்கிறேன். அதேபோல எக்சைஸ் வரிகள் இருந்தால் குறைக்கலாம். ஆனால் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அரசுக்குத் தோன்றாது.

ஒரு யூனிட் மின்சாரத்தில் முழுதாக சார்ஜ் ஆகிறது என்கிறார்கள். சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும். அதில் 50 கிலோமீட்டர் ஓடும் என்கிறார்கள். ஓட்டிப் பார்த்தால்தான் சொல்லமுடியும். அது உண்மை என்றால், வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு யூனிட் சுமார் ரூ. 2.50 என்று ஆகிறது. அப்படியென்றால் ஒரு கிலோமீட்டர் ஓட்ட வெறும் 5 பைசாதான் செலவு. மாற்றாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 50-55 கிலோமீட்டர் தரும் மோட்டார் பைக்கில், கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஆகிறது. எனது பழைய (2000-வது ஆண்டு) கைனெடிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 25-30 கி.மீ. கொடுத்தாலே பெரிசு. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 2க்கும் மேலே!

நான் வாங்கியது, சூடி மோட்டார், பிளாட் எண் 3, KPTJ Nest, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை 600 041, தொலைபேசி எண் 2451-2752.

ஒரு மாதத்துக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் என்ன என்று சொல்லமுடியும். ஆனாலும் சூழலுக்குக் கேடில்லை; பெட்ரோல் தேவையில்லை என்ற ஜிலுஜிலுப்பே இப்போதைக்குப் போதும்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

இன்று சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2008, மாலை 5.30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடக்க உள்ள கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கலந்துகொண்டு பேசுகிறார்.

வெவ்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்துவரும் பலரையும் அழைத்து, தங்களுக்குப் பிடித்தமான எதைப்பற்றியும் பேசவைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது. இவற்றுள் சில கலந்துரையாடல்களை சனிக்கிழமை மாலை வைத்து, அதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பொதுவான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது இன்று (இரண்டாம் சனிக்கிழமை இல்லை என்றாலும்) நடக்கும் கூட்டம்.

அடுத்த மாதங்களில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை விரைவில் வெளியிடுவோம்.

இது தவிர வார நாள்களிலேயே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சென்ற வாரம் ப்ராடிஜி தமிழ் எடிட்டர் சுஜாதா, “விலங்கினங்களில் காணக்கிடைக்கும் சில ருசிகரமான தன்மைகள்” என்பது பற்றிப் பேசினார். நான் “லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடரால் உலகம் அழியப் போகிறதா?” என்பது பற்றிப் பேசினேன். இனி வரும் வாரங்களிலும் இப்படித் தொடர்ந்து சில பேச்சுகள் நடக்கும். அவை பற்றி அவ்வப்போது தகவல் தருகிறேன்.

===

கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, September 19, 2008

கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961

HBO, ஸ்டார் மூவீஸ் ஆகியவற்றில் பயங்கர அடாசுப் படங்களாகப் போடும்போது TV5Monde (ஃபிரெஞ்சு டிவி) போவேன். இல்லாமல் இருந்தால்கூடப் போகலாம். இரவு மிக நல்ல படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் போடுவார்கள். அப்படி நேற்று பார்த்த படம்தான் “NUIT NOIRE, 17 OCTOBRE 1961” - அதாவது “கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961”.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்படுத்தி வைத்தாற்போலே, பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா 1830-ல் கைப்பற்றி, தொடர்ந்து காலனியாக வைத்திருந்தனர். அல்ஜீரியர்களுக்கு தேசிய எண்ணம் தோன்றி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலுவடைந்தது. 1950-களில் FLN (Front de Libération Nationale) என்ற அமைப்பின் (ஆங்கிலத்தில் National Liberation Front - NLF என்று வரும்) கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

பெரும்பான்மை தேசியப் போராட்டங்களுக்குள்ளும் உட்-போராட்டங்கள் இருந்தவாறே இருக்கும். இந்திய தேசியப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர். வட கிழக்கு மாநிலப் பழங்குடியினரிடம் யாருமே கருத்தே கேட்கவில்லை. ஒருமித்த தேசியம் என்று எதுவுமே கிடையாது.

அல்ஜீரியாவிலும் அப்படியே. பெரும்பான்மை அல்ஜீரியர்கள் முஸ்லிம்கள். ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஐரோப்பாவிலிருந்து வந்து குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் இருந்தனர். யூதர்கள் பலர் இருந்தனர்.

பிரான்ஸ் படைகள், ஆட்சியாளர்கள், மேற்படி கத்தோலிக்கர்களையும் யூதர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சிறுபான்மையினரும், பிரான்ஸ் கட்டுக்குள் அல்ஜீரியா இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் 1961-62 கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கும் NLF-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அல்ஜீரியாவில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் அல்ஜீரியா விடுதலையாகவேண்டும் என்று முடிவாகி, விரைவில் அல்ஜீரியா விடுதலையும் பெற்றது.

***

இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் - அக்டோபர் 1961-ல் பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறது.

அல்ஜீரியர்கள் பலர் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து அங்கே அடிமட்ட வேலைகளைச் செய்துவந்தனர். இன்றும்கூட அல்ஜீரிய, டூனிசிய, மொராக்கோ, எகிப்திய நாட்டு வெளுத்த-கறுத்த (அதாவது முழுமையாகக் கறுப்பானவர்கள் அல்ல, சற்றே வெளுப்புடன்கூடிய வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள்) அகதிகள் அல்லது பிரான்ஸ் வந்து அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் இருப்பதைப் பார்க்கலாம். சென்ற ஆண்டு பிரான்ஸில் நடந்த தெரு வன்முறை இந்தச் சமூகத்தின் பயங்களாலும் அவலங்களாலுமே நடைபெற்றது.

பிரான்ஸில் இருந்த NLF ஆதரவாளர்கள், பிரெஞ்சு அரசாங்கப் பிரமுகர்களையும் போலீஸையும் அவ்வப்போது குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவந்தது. ஆனால் அதைவிட நூறு, ஆயிரம் மடங்கு வெறியுடன் போலீஸ் வட ஆப்பிரிக்க முஸ்லிம் குடியேறிகளைத் தொல்லை கொடுத்து, ஜெயிலுக்குக் கொண்டுசென்று, கொடுமைப்படுத்தி அழித்தது. இந்தக் கட்டத்தில் 17 அக்டோபர் 1961 அன்று ஆயுதம் ஏந்தாத அமைதிப் போராட்டம் ஒன்றை NLF ஏற்பாடு செய்திருந்தது.

பாரிஸின் பல்வேறு புற நகர்களிலிருந்து ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள், அல்ஜீரிய விடுதலையைக் கேட்டும் அவர்களது தலைவரான பென் பெல்லாவை ஜெயிலிருந்து விடுவிக்கும்படியும் கோஷம் போட்டுக்கொண்டே பாரிஸ் நகரில் கூடவேண்டும். பாரிஸ் நகரில் தெருக்களில் நடக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் நடந்தால், பாரிஸ் மக்களின் ஆதரவு அல்ஜீரியர்களுக்குக் கிடைத்து, அல்ஜிரிய விடுதலை சீக்கிரமாக நடக்க நேரிடலாம் என்பதால் பாரிஸ் போலீஸ் தலைவர் மாரிஸ் பாபோன் என்பவர் இந்த ஊர்வலத்தை உடைக்க முடிவுசெய்கிறார். ஊர்வலத்தைத் தடைசெய்ய ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. ஆனால், தடையையும் மீறி ஊர்வலம் நடத்த அல்ஜீரியர்கள் முடிவுசெய்கிறார்கள்.

அப்படி ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அந்த இரவு கறுப்பு இரவாக ஆகட்டும் என்று முடிவு செய்கிறார் மாரிஸ் பாபோன்.

முதலில் 5,000 அல்ஜீரியர்கள்தான் கூடப்போகிறார்கள் என்ற கருத்தில் குறைவான காவல்படையைத்தான் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஊர்வலத்துக்கு வருவார்கள் என்று தெரிந்ததும் காவல்படையினர் பீதியடைகிறார்கள். வெள்ளைக்காரக் காவல்படையினரின் உள்ளார்ந்த முஸ்லிம்/கறுப்பினத்தவர் மீதான வெறுப்பும், உள்துறையால் வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பொய்த்தகவலும் (ஊர்வலத்தில் அல்ஜீரியர்கள் வன்முறையால் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்) சேர்ந்து, காவல்துறையினர் மிகக் கடுமையாக அல்ஜீரியர்களைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, தடியால் மண்டையை உடைத்து, காயத்துடன் இருக்கும் பலரை செய்ன் ஆற்றில் தூக்கிப்போடுகின்றனர்.

பிரெஞ்ச் வரலாற்றிலேயே மிகக் கொடுமையான இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட அமைதியான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2001 வரை இந்தக் கொலைகள் நிகழ்ந்ததை பிரெஞ்சு அரசு மறுத்துவந்தது. 2001-ல்தான் இந்தக் கொலைகளை ஏற்றுக்கொண்டது.

***

இந்தப் படத்தை நான் ஒரு சினிமாவாகவே பார்க்கவில்லை. 2005-ல் வெளியான, 90 நிமிடப் படம் அலெய்ன் டாஸ்மா என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம் நிஜமான வாழ்வைப் பார்ப்பதாகவே இருந்தது.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் நியாயமான மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை அவ்வளவு தத்ரூபமாக இயக்குனர் காட்டியுள்ளார்.

இந்தியாவில் எத்தனை ஆயிரம் முறை இதுபோன்ற மோதல்கள் நடந்திருக்கக்கூடும்? வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது? போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது? சக மனிதர்களை வெறுப்பது எவ்வளவு எளிதாக நம்மால் முடிகிறது?

***

இந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா? இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

Wednesday, September 17, 2008

பட்டியல்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு
பெங்களூரு குண்டுவெடிப்பு
அஹமதாபாத் குண்டுவெடிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு

அமர்நாத் பிரச்னை
கந்தமால் வன்முறை
மங்களூர் வன்முறை

உத்தப்புரம்

முஷரஃப் பதவி விலகல்
ஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்பு

123 ஒப்பந்தம்
ரஷ்யா-ஜார்ஜியா போர்
ஒபாமா
அமெரிக்க நிதி நிலவரம், இந்தியா எந்தவகையில் பாதிக்கப்படும்?

ஐஐடி, ஐஐஎம் இட ஒதுக்கீடு வழக்கு, தீர்ப்பு

லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர்

Tuesday, September 16, 2008

புது டிசைன்

பா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்.