Friday, September 19, 2008

கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961

HBO, ஸ்டார் மூவீஸ் ஆகியவற்றில் பயங்கர அடாசுப் படங்களாகப் போடும்போது TV5Monde (ஃபிரெஞ்சு டிவி) போவேன். இல்லாமல் இருந்தால்கூடப் போகலாம். இரவு மிக நல்ல படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் போடுவார்கள். அப்படி நேற்று பார்த்த படம்தான் “NUIT NOIRE, 17 OCTOBRE 1961” - அதாவது “கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961”.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்படுத்தி வைத்தாற்போலே, பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா 1830-ல் கைப்பற்றி, தொடர்ந்து காலனியாக வைத்திருந்தனர். அல்ஜீரியர்களுக்கு தேசிய எண்ணம் தோன்றி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலுவடைந்தது. 1950-களில் FLN (Front de Libération Nationale) என்ற அமைப்பின் (ஆங்கிலத்தில் National Liberation Front - NLF என்று வரும்) கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

பெரும்பான்மை தேசியப் போராட்டங்களுக்குள்ளும் உட்-போராட்டங்கள் இருந்தவாறே இருக்கும். இந்திய தேசியப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர். வட கிழக்கு மாநிலப் பழங்குடியினரிடம் யாருமே கருத்தே கேட்கவில்லை. ஒருமித்த தேசியம் என்று எதுவுமே கிடையாது.

அல்ஜீரியாவிலும் அப்படியே. பெரும்பான்மை அல்ஜீரியர்கள் முஸ்லிம்கள். ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஐரோப்பாவிலிருந்து வந்து குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் இருந்தனர். யூதர்கள் பலர் இருந்தனர்.

பிரான்ஸ் படைகள், ஆட்சியாளர்கள், மேற்படி கத்தோலிக்கர்களையும் யூதர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சிறுபான்மையினரும், பிரான்ஸ் கட்டுக்குள் அல்ஜீரியா இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் 1961-62 கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கும் NLF-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அல்ஜீரியாவில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் அல்ஜீரியா விடுதலையாகவேண்டும் என்று முடிவாகி, விரைவில் அல்ஜீரியா விடுதலையும் பெற்றது.

***

இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் - அக்டோபர் 1961-ல் பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறது.

அல்ஜீரியர்கள் பலர் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து அங்கே அடிமட்ட வேலைகளைச் செய்துவந்தனர். இன்றும்கூட அல்ஜீரிய, டூனிசிய, மொராக்கோ, எகிப்திய நாட்டு வெளுத்த-கறுத்த (அதாவது முழுமையாகக் கறுப்பானவர்கள் அல்ல, சற்றே வெளுப்புடன்கூடிய வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள்) அகதிகள் அல்லது பிரான்ஸ் வந்து அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் இருப்பதைப் பார்க்கலாம். சென்ற ஆண்டு பிரான்ஸில் நடந்த தெரு வன்முறை இந்தச் சமூகத்தின் பயங்களாலும் அவலங்களாலுமே நடைபெற்றது.

பிரான்ஸில் இருந்த NLF ஆதரவாளர்கள், பிரெஞ்சு அரசாங்கப் பிரமுகர்களையும் போலீஸையும் அவ்வப்போது குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவந்தது. ஆனால் அதைவிட நூறு, ஆயிரம் மடங்கு வெறியுடன் போலீஸ் வட ஆப்பிரிக்க முஸ்லிம் குடியேறிகளைத் தொல்லை கொடுத்து, ஜெயிலுக்குக் கொண்டுசென்று, கொடுமைப்படுத்தி அழித்தது. இந்தக் கட்டத்தில் 17 அக்டோபர் 1961 அன்று ஆயுதம் ஏந்தாத அமைதிப் போராட்டம் ஒன்றை NLF ஏற்பாடு செய்திருந்தது.

பாரிஸின் பல்வேறு புற நகர்களிலிருந்து ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள், அல்ஜீரிய விடுதலையைக் கேட்டும் அவர்களது தலைவரான பென் பெல்லாவை ஜெயிலிருந்து விடுவிக்கும்படியும் கோஷம் போட்டுக்கொண்டே பாரிஸ் நகரில் கூடவேண்டும். பாரிஸ் நகரில் தெருக்களில் நடக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் நடந்தால், பாரிஸ் மக்களின் ஆதரவு அல்ஜீரியர்களுக்குக் கிடைத்து, அல்ஜிரிய விடுதலை சீக்கிரமாக நடக்க நேரிடலாம் என்பதால் பாரிஸ் போலீஸ் தலைவர் மாரிஸ் பாபோன் என்பவர் இந்த ஊர்வலத்தை உடைக்க முடிவுசெய்கிறார். ஊர்வலத்தைத் தடைசெய்ய ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. ஆனால், தடையையும் மீறி ஊர்வலம் நடத்த அல்ஜீரியர்கள் முடிவுசெய்கிறார்கள்.

அப்படி ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அந்த இரவு கறுப்பு இரவாக ஆகட்டும் என்று முடிவு செய்கிறார் மாரிஸ் பாபோன்.

முதலில் 5,000 அல்ஜீரியர்கள்தான் கூடப்போகிறார்கள் என்ற கருத்தில் குறைவான காவல்படையைத்தான் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஊர்வலத்துக்கு வருவார்கள் என்று தெரிந்ததும் காவல்படையினர் பீதியடைகிறார்கள். வெள்ளைக்காரக் காவல்படையினரின் உள்ளார்ந்த முஸ்லிம்/கறுப்பினத்தவர் மீதான வெறுப்பும், உள்துறையால் வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பொய்த்தகவலும் (ஊர்வலத்தில் அல்ஜீரியர்கள் வன்முறையால் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்) சேர்ந்து, காவல்துறையினர் மிகக் கடுமையாக அல்ஜீரியர்களைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, தடியால் மண்டையை உடைத்து, காயத்துடன் இருக்கும் பலரை செய்ன் ஆற்றில் தூக்கிப்போடுகின்றனர்.

பிரெஞ்ச் வரலாற்றிலேயே மிகக் கொடுமையான இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட அமைதியான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2001 வரை இந்தக் கொலைகள் நிகழ்ந்ததை பிரெஞ்சு அரசு மறுத்துவந்தது. 2001-ல்தான் இந்தக் கொலைகளை ஏற்றுக்கொண்டது.

***

இந்தப் படத்தை நான் ஒரு சினிமாவாகவே பார்க்கவில்லை. 2005-ல் வெளியான, 90 நிமிடப் படம் அலெய்ன் டாஸ்மா என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம் நிஜமான வாழ்வைப் பார்ப்பதாகவே இருந்தது.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் நியாயமான மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை அவ்வளவு தத்ரூபமாக இயக்குனர் காட்டியுள்ளார்.

இந்தியாவில் எத்தனை ஆயிரம் முறை இதுபோன்ற மோதல்கள் நடந்திருக்கக்கூடும்? வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது? போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது? சக மனிதர்களை வெறுப்பது எவ்வளவு எளிதாக நம்மால் முடிகிறது?

***

இந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா? இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

12 comments:

  1. இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

    Mr.Badri is living in another world :). The video films on
    Gujarat riots were used by
    exteremists to raise fund
    and to brainwash Muslims that
    they should seek revenge.
    Such films will incite more
    violence.A movie that shows
    all facets and approaches these
    issues objectively is difficult
    to make.Mani Ratnam's Bombay
    was criticised by both sides.

    ReplyDelete
  2. That was a good movie. Still there is problem in Algeria...

    Something like Hotel Rwanda.

    ReplyDelete
  3. padam eduththu pOttuk kaattinaal veruppu athigam thaan aagum.

    ReplyDelete
  4. பத்ரி,

    நல்ல படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவற்றின் விஸ்தீரனம் குறைவு. நான் வலைப்பதிவு எழுத வந்த புதிதில் உண்மையிலேயே ஒரு தளத்தினை உருவாக்கி அதில் நல்ல படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் பற்றி சேகரிக்கலாம் என்று யோசனை சொல்லியிருந்தேன். ஆனால், 4-5 ஆண்டுகள் கழித்து இப்போது உட்கார்ந்து யோசிக்கும் போது அதன் வணிக காரணங்கள் வேறாக இருக்கின்றன.

    ஞாயிறு காலை 9.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் உலக திரைப்படங்கள் போடுகிறார்கள். மிக நல்ல திரைப்படங்கள் பார்க்க UTV Movies பாருங்கள். இதுதாண்டி, தமிழில் சிற்றிதழ் புத்தகங்களில், பதிவுகளில் என படங்கள் தொடர்ச்சியாக பேசப்படுகின்றன. இந்தியாவிலும் Black Friday, குட்டி மாதிரியான படங்களும், Big Flix போன்ற இணைய டிவிடி கடைகளில் கிடைக்கும் விவரணப்படங்களும் நல்ல படங்களே.

    இரண்டு வாரத்திற்கு முன்பு சாருவின் பதிவு வழியாக, கீற்று தளம் போய் ஒரு ஜப்பானிய இயக்குநரின் (நகிசா ஒசியாமா - In the Realm of Senses) படத்தினை பற்றி படித்து, தேடி கிடைக்காமல், டொரண்டில் தரவிறக்கி முழு படத்தையும் பார்த்தேன். கொஞ்சம் தேடல் முக்கியம். மேலும் இந்த தளத்தினை அவ்வப்போது பார்த்து வந்தால், நல்ல உலக படங்கள் கிடைக்கும். மற்றபடி பிரகாஷின் லிஸ்ட் ஒரு நல்ல பட்டியல்.

    இந்தியா அமெரிக்கா அல்ல. அங்கே மைக்கேல் மூர் மாதிரியான ஆசாமிகள் எடுக்கும் விவரண படங்களும், குறும்படங்களும் தியேட்டர்களில் போடப்படுகின்றன. சென்னை சத்யமில் ஏதேனும் ஒரு அரங்கில் வாராவாரம் நல்ல படம் போடுவார்கள். தொடர்ச்சியாக உலக படங்கள் பார்க்கவேண்டுமெனில், ஜீன்ஸ், குர்தா சகிதம் [உங்களுக்கு ஷார்ட்ஸ் ;) ] பிலிம் சேம்பர் திரையரங்கினை அணுகுங்கள். பிரிட்டிஷ் நூலகத்தில் உறுப்பினரானால், அருமையான விவரணப்படங்கள் கிடைக்கும், நீங்களும் நல்ல படம் பார்த்தது போல் ஆச்சு. குழந்தைக்கும் என்சைக்ளோபீடியா டிவிடிகள், காட்டு மிருகங்கள் என வழவழ புத்தகங்களும் எடுத்தது போலும் ஆகும்.

    ReplyDelete
  5. நீங்கள் குறிப்பிட்ட பட வரிசையில் Black Sunday என்ற படம் 1972- ல் பிரிடிஷ் காவல்துறை ஐயர்லாந்தில் நடத்திய அடக்குமுறையை காட்டுகிறது.

    >>இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

    - நல்ல யோசனை...ஆனால் சாத்தியமில்லை. ஏன் என்று தனிப் பதிவாக போட வேண்டும்.

    ReplyDelete
  6. How was the movie Parzania taken by the people ?

    ReplyDelete
  7. பத்ரி,

    battle of algiers பாருங்கள். அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அப்படியே படம் எடுத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  8. If you collected all the information just from the movie, BRAVO...
    And about Maurice Papon..

    http://news.bbc.co.uk/1/hi/world/europe/71192.stm

    ReplyDelete
  9. இவ்விசயங்கள் இடம்பெற்றுள்ள ஆங்கில நூல்களை பாராவிடம் கொடுத்தால் புதிய நூலே எழுதிவிடுவார்.

    ReplyDelete
  10. @ இந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா? இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.


    குஜராத் படுகொலைகள், ஒரிசா படுகொலைகள், மங்களூர் படுகொலைகள் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே

    ReplyDelete
  11. @ இந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா? இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

    இலங்கையில் நிகழ்த்தப்படும் படுகொலைகள் ??

    ReplyDelete
  12. @ பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர்.



    ஈழம உதயமாகி பின் தமிழ் நாடு சுயாட்சி பெற்றால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என்ற தம்ப்ராஸின் நினைப்பு ?

    ReplyDelete